
ஒரு சொல்லின் முடிவெழுத்து ஒரு சொல்லின் தொடக்கமாக வருவது ‘அந்தாதி. அந்தம் + ஆதி என்பதன் கூட்டெழுத்தே இந்த அந்தாதி. அந்தம் என்பது ‘முடிவு’ என்றும் ஆதி என்பது ‘முதல்’ என்றும் பொருள் கொள்ளலாம்
அந்தாதி என்ற வகையானது ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசை, சொல், அடி இவற்றுள் ஒன்றோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாவதாக வரும்படி அமைத்துப் பாடுவது. இது எளிமையான வடிவம் அல்ல. கவியாற்றலும் மிகுந்த சொல்லாற்றலும் கொண்டவர்களால் மட்டுமே இத்தகைய கவித்துவமான பாடல்களை புனைய முடியும்.
சிற்றிலக்கியங்களுள் அந்தாதி வகைகளாக ஒலியந்தாதி, பதிற்றுப் பத்தந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி முதலிய அந்தாதிகள் உள்ளன. இவையன்றி கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி இப்படி ஏராளம்.
தான் பயின்ற இலக்கியக் கருத்துக்களை தன்னுள் மாத்திரம் அசைபோட்டு சுவைக்காமல், அதனை பிறரும் அனுபவிக்க வேண்டுமென திரைப்படங்களிலும் எளிமையாக்கித் தந்த கவியரசர் கண்ணதாசனை எல்லோரும் அறிவார்கள். ஜனரஞ்சக சினிமாவில் இத்தகைய இலக்கண யுக்தியை கையாண்ட அவரைப் புகழாத மாந்தர்களே கிடையாது.
பழந்தமிழ் இலக்கியத்தில் காணும் இலக்கண வடிவங்களை இஸ்லாமியப் பாடல்களிலும் புகுத்தி புதுமை கண்ட ‘கலைமாமணி’ நாகூர் கவிஞர் சலீமை இதுபோன்ற திறமைக்காக யாரும் இதுவரை அவரை கண்டுக் கொள்ளாதது வருத்தம் தருகிறது.
இஸ்லாமியப் பாடல்களில் இலக்கியச் சுவையா? இது என்ன புது உருட்டாக இருக்கிறது என்று யாரும் எண்ணக்கூடும், என்னை சாடக் கூடும்.
தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி.
‘செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே’ என்று தண்டியலங்காரமும்,
‘அந்தம் முதலாத் தொகுப்பது அந்தாதி’ என்று யாப்பருங்காலக்காரிகையும் இலக்கண சாத்திரம் வரையறுக்கின்றது..
‘முப்பது உடனெடுத்து மூங்கில் இலைமேலே
மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரை
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’
என்ற நாட்டுப்புறப்பாடல் அத்தகைய அந்தாதிப் பாடலுக்கு உட்பட்டது.
சைவம், வைணவம், சமணம், இஸ்லாம் ஆகிய எல்லா சமயத்து புலவர்களும் அந்தாதிப் பாடல்களை இயற்றியுள்ளனர். அவர்களை இலக்கிய கர்த்தாக்களாக போற்றுகின்றனர்.
1976-ஆம் ஆண்டு கமல் ஹாஸன் & ரஜினிகாந்த் இணைந்து நடித்த மூன்று முடிச்சு படத்திற்கு கண்ணதாசனிடம் கே.பாலச்சந்தர் பாட்டெழுத கேட்டபோது மனுஷர் செம இலக்கிய மூடில் இருந்தார் போலிருக்கு. அதில் இடம் பெற்ற இரண்டு பாடல்களையும் அந்தாதியிலேயே எழுதி கொடுத்துவிட்டார்.
வரியின் முடிவில் எந்த வார்த்தையோடு முடித்தாரோ, அதே வார்த்தை அடுத்த வரியின் தொடக்கமாக அமைவதுபோல் எழுதி கொடுத்து விட்டார்.
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
புதுக் கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
மனுஷனுக்கு மண்டையெல்லாம் மூளையிருக்கும் போலிருக்கு. இந்த ஒரு பாட்டு மட்டுமல்ல. எழுதிக் கொடுத்த இன்னொரு பாடலும் அந்தாதிதான்.
ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்
பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்
ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்
பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!
பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் – கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்
என்ன ஒரு அபாரமான திறமை இந்த கண்ணதாசனுக்கு. திரையிசைப் பாடல்களில் இலக்கியத்தை கொண்டு வந்ததற்கு கண்ணதாசன் வெகுவாக பாராட்டப் பட்டார். அவருடைய இலக்கிய ஆர்வத்தை எல்லொரும் போற்றிப் புகழ்ந்தனர்.
இப்போது நாகூர் சலீமுக்கு வருவோம்.
‘நாகூர் ஹனிபா பாடும் ஜனரஞ்சக ஆன்மீக பாடலில் இலக்கியச் சுவை என்ன வேண்டிக் கிடக்கு?’ என்று யாராவது கேள்வி கேட்கக் கூடும், ஜனரஞ்சகத்திலும் ஆன்மீகத்திலும் இலக்கியத்தைப் புகுத்துவதுதான் திறன் வாய்ந்த கவிஞனுக்கு அழகு,
1976-ஆம் ஆண்டு ‘மூன்று முடிச்சு’ படம் வருவதற்கு முன்னரே நாகூர் சலீம் நாகூர் ஹனிபாவுக்கு எழுதிக் கொடுத்த பாடலில் இந்த இலக்கியச் சுவை அனுபவிக்க வேண்டி அந்தாதி இலக்கணத்தை கடைப்பிடித்து பாடல் எழுதி இருக்கிறார். இதுவும் ஒரு இலக்கியப் புரட்சிதானே? இதோ அந்த அந்தாதி பாடல் :
திருமறையின் அருள்மொழியில் விளைந்திருப்பது என்ன? – அறிவு.
இறை தூதர் நபி பொன் மொழியில் பொதிந்திருப்பது என்ன? – அன்பு.
அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன? -ஞானம்
அந்த ஞானத்தை வழங்கிடும் மூலப் பொருள் என்ன?
மௌனம் அது மௌனம்.
உருவமற்ற இறைவன் வாழும் இடம் எதுவோ? – உள்ளம்.
அந்த உள்ளத்தினில் சுடர் போல் விளங்குவது எதுவோ? – உண்மை
உண்மையினை ஈன்ற அன்னையவள் யாரோ? – பொறுமை
அந்த பொறுமை நபிகள் நாதர் போதித்தது என்ன?
கடமை ஐந்து கடமை
ஏக இறையோனை ஏற்றுக் கொள்வதென்ன? – கலிமா
அந்த கலிமா பொருள் உணர்ந்து கடைப்பிடிப்பதென்ன? – தொழுகை
தொழுகையினை மேலும் தூய்மை செய்வதென்ன? – நோன்பு
நோன்பிருந்த பின்பு மாண்பளிப்பதென்ன? – ஜக்காத்து
அந்த ஈகை வழியில் செல்லும் இறுதிக் கடன் என்ன?
ஹஜ்ஜூ புனித ஹஜ்ஜூ
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த ஒரு நெய்ச்சோறு போதுமென நினைக்கிறேன்