RSS

Category Archives: நாகூர் சின்னத்தம்பி

நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி


நாகூரில் வாழ்ந்த நன்மக்களுள் நம் நெஞ்சில் நிலையாக குடியிருக்கும் நல்லொதொரு நாயகன் இந்த நாத்திகன் சின்னத்தம்பி,

துணிச்சலுக்குப் பெயர் போனவன். தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவன். எல்லோரும் போற்றும் அந்த ஈரோட்டுக் கிழவனின் முரட்டு பக்தன். தான் சார்ந்திருந்த கொள்கையிலிருந்து சற்றும் தடம் மாறாதிருந்தவன். சாதாரண ஒரு சலவைத் தொழிலாளி சமூகத்தில் மதிக்கப்படும் ஒரு சாதனை மனிதனாக உருவாக முடியும் என்பதற்கு நாகூர் சின்னத்தம்பி நல்லதோர் எடுத்துக்காட்டு.

இந்த சின்னத்தம்பி வேறு யாருமல்ல. திராவிட கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் அவர்களுடைய மாமனார்.  நாகூரைச் சேர்ந்த சின்னத்தம்பி – ருக்மணி தம்பதியருக்கு மொத்தம் ஏழு குழந்தைகள். மகன்கள் சித்தார்த்தன், பெரியார் செல்வன் மற்றும் காமராஜ். மகள்கள் வெற்றிச்செல்வி, அழகுமணி, கவுதமி, வளர்மதி ஆகியோர். பெரும்பாலான அந்தக் குழந்தையின் பெயர்கள் “தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்” எனப்படும் அந்த பகுத்தறிவு பகலவன் ஈ.வெ.ரா.பெரியார் ஆசி தந்து அவரே நேரில் சூட்டிய  செந்தமிழ்ப் பெயர்கள்.

மருமகன்கள் கலி.பூங்குன்றன், முருகையன், பாலகிருஷ்ணன்  அனைவரும் திராவிட இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள்.  சின்னத்தம்பியின் மகள் வெற்றிச்செல்வியின் அன்புக்கணவர்தான் கலி. பூங்குன்றன்.

கலி பூங்குன்றன் நாடறிந்தவர்.  கவிஞர், எழுத்தாளர், செயற்பாட்டாளர் என பன்முக ஆற்றல் கொண்ட பகுத்தறிவாளர். ‘விடுதலை’ நாளிதழின் பொறுப்பாசிரியராகவும் பணி புரிந்தவர்.

2007-ஆம் ஆண்டு மே மாதம் 25, 26,27 தேதிகளில் அப்போது தமிழக முதலமைச்சராக பதவியிலிருந்த டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் தலைமையில் சென்னையில் இஸ்லாமிய தமிழிலக்கிய ஏழாம் மாநாடு நடைபெற்றது. அவ்விழாவில் நானெழுதிய “அந்த நாள் ஞாபகம்” என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. முழுக்க முழுக்க நாகூரின் சிறப்பைப் பாடும் நூலிது.

%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%ae%e0%af%8d

அந்த நூலில் எனது முகவுரையில் :

“துணியை வெளுக்க வந்து என் மனதை வெளுத்துச் சென்ற சுயமரியாதைச் சிந்தனைவாதி சின்னத்தம்பி”

என்று அவரை சிலாகித்து எழுதியிருந்தேன். அந்த உயர்ந்த  மனிதனை உளமார   பாராட்ட வேண்டும் என்று என் உள்ளத்தில் தோன்றிய உண்மையான  உணர்ச்சிமிக்க  வரிகள் அவை.

ஒவ்வொரு முறை சலவைத் துணியை மூட்டையாகக் கட்டி எங்கள் வீட்டுக்கு அவர் சுமந்து வரும்போதெல்லாம் என் தந்தையார் அவரின் வாயைக் கிளறுவதற்காக அவரைச் சீண்டி விடுவார். அது தந்தை பெரியார் அல்லது அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தைப் பற்றிய கிண்டலாக இருக்கும். மானமிகு அந்த மனிதனின் மரியாதையைக் குறைக்கவேண்டும் என்ற நோக்கில் அல்ல அந்த கிண்டல்.  உணர்ச்சி பொங்க தன் உள்ளக்கிடக்கையை, ஒடுக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் வேதனையை, அந்த மனிதன் விவரிக்கையில் உளமிரங்கி கேட்டுக் கொண்டிருப்பார் என் தந்தை. சிறுவனாக இருந்த நானும் அந்த உரையாடலை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருப்பேன்.

சின்னத்தம்பி, பேச்சுவாக்கில் அவ்வப்போது உதிர்க்கும் வெடிச்சிரிப்பு நமக்கும் தொடர் சிரிப்பை உண்டாக்கிவிடும்.

அச்சமயம் எனக்கு சுமார் ஒன்பது அல்லது பத்து வயதுதானிருக்கும். திராவிட கழகத்தைப் பற்றி எவராவது கேலியோ அல்லது கிண்டலோ செய்தால் சின்னத்தம்பிக்கு வருகிற கோபம் இருக்கிறதே…? அப்பப்பா….. வருணிக்க இயலாது. சின்னத்தம்பியின் கனத்த குரல் நான்கு வீட்டுக்கப்பால் எதிரொலிக்கும். அவருடைய ஒவ்வொரு பேச்சிலும் ஒரு ஆதங்கம் இருப்பதை நம்மால் உணர முடியும்

மனுஷன் வானத்திற்கும் பூமிக்குமாய் குதிப்பார். அவருடைய கண்களில் கோபக்கனல் கொந்தளிக்கும்.. “முதலாளி” என்று என் தந்தையாரை அவர் பாசத்தால் அழைத்தாலும்கூட வார்த்தைக்கு வார்த்தை, கருத்துக்கு கருத்து, சூடாக பதிலுக்கு பதில் தர ஒருபோதும் தயங்க மாட்டார்.

தியாகப் பெருநாளின் போது (பக்ரீத்) எங்கள் வீட்டில் ஆடு குர்பானி கொடுக்கையில் தோலை எதிரிலுள்ள பள்ளிக்கு நன்கொடையாக (அதன் கிரயம் அவர்களுக்கு பயன்படும் வகையில்) கொடுத்து விடுவோம். ஆனால் தலைக்கறியும். ஆட்டுக்காலும் சின்னத்தம்பிக்கு என “ரிசர்வு” செய்யப்பட்டு விடும். காலையிலேயே மறக்காமல் அவரும் வீட்டுக்கு வந்து வாங்கிச் செல்வார்.

சின்னத்தம்பி என்ற பாத்திரம் எங்கள் குடும்பத்தில் ஒரு இணைபிரியா அங்கம். ஊராரும் அவரை நாத்திகன் சின்னத்தம்பி என்றே அழைப்பார்கள். அப்படி அழைப்பதைத்தான் அவரும் விரும்புவார்.

நான் ஐந்தாம் வகுப்பு தஞ்சாவூர் Sacred Heart Convent-ல் படித்துக் கொண்டிருந்த காலம். ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன்.  பள்ளி விடுமுறை விடும்போது என்னை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சின்னத்தம்பியைத்தான் என் தந்தையார் அனுப்பி வைப்பார்.

விடுமுறை விட்டதும் அழைத்துச் செல்வதற்காக மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் பள்ளிக்கூட வாசலில் வந்து காத்திருப்பார்கள். எங்களுக்குச் செய்தி சொல்லி அனுப்புவார்கள். நான் என் உடமைகளை எடுத்துக்கொண்டு ஹாஸ்டலிலிருந்து வெளியே வரும்போது தூரத்தில் சின்னத் தம்பி நின்றுக் கொண்டிருப்பார். “தம்பி….நல்லா இருக்கீங்களா….?.” என்று தாய்ப்பாசத்தோடு தன் இருகைகளையும் அகல விரித்துக் கொண்டு குரல் கொடுப்பார். என்னையறியாத ஒரு பாசப்பிணைப்போடு நானும் ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொள்வேன்.

தஞ்சை புகைவண்டி நிலையத்திற்கு எதிரில் இருக்கும் ஒரு சிற்றுண்டி விடுதியில்தான் உணவு அருந்துவார். முனியாண்டி விலாஸ் என்று நினைக்கிறேன். பெயர் ஞாபகத்தில் இல்லை. அந்தக் கடையில் பெரியாருடைய ஏராளமான  புகைப்படங்கள்   வரிசையாக சுவற்றில் நிறைய மாட்டி வைத்திருப்பார்கள். அது எனக்கு பசுமையான நினைவாக இருக்கிறது.

பஸ்ஸில் தஞ்சையிலிருந்து என் சொந்த ஊர் நாகூர் செல்லும் வழி நெடுகிலும் பெரியாரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை சொல்ல ஆரம்பிப்பார். அவர் அதைச் சொல்ல மறந்தாலும் “பெரியார் கதை சொல்லுங்க” என்று அவருக்கு நான் நினைவு படுத்துவேன். அவர் சொல்லும் அத்தனை விடயங்களும் மாறுபட்ட சிந்தனையாக இருந்த காரணத்தினால் நானும் உன்னிப்பாக மிகுந்த ஆர்வத்துடன் காதுகொடுத்து கேட்பேன்.

சாதி ஒழிப்பு, பெண்ணின விடுதலை, சமூக சீர்த்திருத்தக் கருத்துக்கள், மூடநம்பிக்கை, தீண்டாமை, பகுத்தறிவு வாதம் இவைகளைப் பற்றியெல்லாம் படிப்பறிவு இல்லாத சின்னத்தம்பி இத்தனை ஆதாரங்களுடன், சரித்திர சான்றுகளுடன் சரளமாக எடுத்துவைத்து எப்படி மணிக்கணக்கில் விவாதிக்க முடிகிறது என்று நான் வியந்துப் போனதுண்டு.

அனுதினமும் அவர் ஒட்டி உறவாடிய, வளர்ந்த, நெருங்கிப் பழகிய பகுத்தறிவு பாசறை அவரை அந்தளவுக்கு தேர்ச்சி பெற வைத்திருந்தது.

Rukmani chiinna Thamby

ருக்மணி சின்னத்தம்பி

2012-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சின்னத்தம்பியின் துணைவியார் ருக்மணி அம்மையார் மஞ்சக்கொல்லையில் மரணித்தபோது அவருக்கு வயது 84. அந்த துயரச் செய்தி என்னை மிகவும் வாட்டியது. சின்னத்தம்பியை பெரியாரின் “தீவிர” பக்தர் என்று வருணிக்கும் அதே நேரத்தில் மூதாட்டி ருக்மணியை “அதிதீவிர” என்ற அடைமொழியோடுதான் வருணிக்க வேண்டும். வெள்ளை நிற ஜாக்கெட்டும், கறுப்பு நிற புடவையும் அணிந்திருக்கும் அவரது தோற்றம் மணியம்மை போலவே இருக்கும். அவர், திராவிட இயக்கத்தின் மகளிரணி போர்வாளாகத் திகழ்ந்தவர்.

%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-4

மறைந்த ருக்மணி அம்மையார் உடலுக்கு கழகத்தின் சார்பில் கழகப்பொருளாளர் கோ.சாமிதுரை மாலை வைத்து இறுதிமரியாதை செலுத்தினார்.

நான் சிறுவனாக இருக்கையில் பலமுறை சின்னத்தம்பியின் இல்லத்திற்கு சென்றிருக்கிறேன். நாகூர் ரோட்டுத் தெருவில் இருந்தது அவர் வீடு. அது அவரது மாமனாரின் பூர்வீக வீடு. ருக்மணி அம்மையாரின் தந்தையாரும் திராவிட இயக்க கொள்கையில் தன்னை இணைத்துக் கொண்டவர். பெரியாரின் பெருந்தொண்டர். மொத்தத்தில் அந்த குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரும் பகுத்தறிவு சிற்பி ஈ.வெ.ரா.வின் பாதுகாப்பில் வளர்ந்தவர்கள்.

சின்னத்தம்பியின் வீட்டுக்குள் சென்று பார்வையிட்டால் “விடுதலை” நாளிதழ்கள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். ருக்மணி அம்மையாரும் அவர் பிள்ளைகளும் அன்றாடம் நடைபெறும் திராவிட கழகத்தின் நிகழ்வுகளை/ செய்திகளை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

தந்தை பெரியார் எப்பொழுதெல்லாம் நாகூர் வழியே பயணிக்கிறாரோ அப்பொழுதெல்லாம் சின்னத்தம்பியின் வீட்டிற்கு வந்து ஓய்வெடுக்காமல் போக மாட்டார்.

ஒருமுறை ஈ.வெ.ரா. பெரியார் சின்னத் தம்பியின் வீட்டிற்கு வருகை தந்தபோது அந்த வைக்கம் வீரரை நேருக்கு நேர், வெகு அருகாமையில் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது.

தள்ளாடும் வயதிலும் அந்த தன்மானச் சிங்கம் தாழ்த்தப்பட்டோரின் நலனுக்காக பாடுபட்டார்.   மூத்திரப்பையை தூக்கிக் கொண்டு மூடச்சிந்தனையை ஒழிப்பதற்காக ஊர் ஊராக பயணித்தவர் அந்த மூதறிஞர்.

“நாகூர் சின்னத்தம்பி இல்லத்தில் கழகப் பிரச்சாரகர்கள் அனைவருமே தங்கியிருப்போம். 1946-ல் திருவாரூர் வி.எஸ்.பி.யாகூப் அவர்கள் அமைப்பாளராக இருந்து, அங்கே அழைத்துப் போய் தங்க வைப்பார். ருக்மணி அம்மாள் அவர்கள் எத்தனை நாளாக இருப்பினும் அன்பொழுக, எங்களை – கழகத்தவரை வரவேற்று உபசரிப்பார்”

என்று பழைய நினைவுகளை அசைபோட்டு நினைவு கூறுகிறார் திராவிடக் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி.

இந்த தருணத்தில் நாகூரின் மற்றொரு மண்ணின் மைந்தன் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் கி.வீரமணியைப் பாராட்டியது என் நினைவுக்கு வருகிறது.

“கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் எந்த நேரத்திலும் எல்லா சமுதாயங்களுக்கும் தேவை. சொல்லப்போனால், ஒருவருடைய கொள்கைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது அவ்வளவு முக்கியமல்ல. அவர் தம் கொள்கைகளில் உண்மையான ஈடுபாட்டுடன் இருக்கிறாரா என்பதுதான் பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய செய்தி. அப்படிப் பார்க்கும் பொழுது திரு. கி. வீரமணி பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர் என்பதில் ஐயமில்லை”.

கி.வீரமணி அவர்களைப்போலவே அதே காலஅளவு திராவிட இயக்கத் தொடர்பும், சமுதாய சீர்த்திருத்தப்பணியில் அனுபவமும் வாய்த்தவர் சின்னத்தம்பி. அவர் மாத்திரம் சற்று படித்தவராக இருந்திருந்தால் திராவிடக் கழகத்தில் மிக முக்கிய புள்ளியாக அடையாளம் காட்டப்பட்டிருப்பார். உயர் கட்சிப் பதவி அவருக்கு கிடைத்திருக்கும்.

ருக்மணி சின்னத்தம்பி திராவிட இயக்க மகளிரணியில் முக்கிய பங்கு வகித்தவர். பல்வேறு போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்ற வீராங்கனை.  மறைந்த ருக்மணி அம்மையார் நினைவாக திராவிட கழகம் படத்திறப்புவிழா செய்து அவருக்கு மரியாதை செலுத்தியது

%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-3 %e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-2

மூதாட்டி ருக்மணி மறைவதற்கு முன் அவருடைய இறுதி ஆசை தன் கண்களை தானம் வழங்க வேண்டும் என்பதாக இருந்தது. அதுபோலவே அவரை எரியூட்டுதற்கு முன்பு அவரது கண்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டன.

இப்பொழுது சின்னத்தம்பியின் குடும்பத்தார் யாரும் நாகூரில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. என் வீட்டிற்கு நேரெதிரில் மணி என்ற அன்பர் முடிதிருத்தகம் வைத்துள்ளார். சின்னத்தம்பியின் குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமானவர். அவரிடம் அவ்வப்போது அக்குடும்பத்தாரின் நலனை மறவாமல் விசாரிப்பேன்.

உலகமெனும் நாடக மேடையில் நடிப்பதற்கு எத்தனைப் பேர்களோ வருகிறார்கள்; வந்து போகிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே நம் உள்ளத்தில்  உயர்ந்து நிற்கிறார்கள்.

  • அப்துல் கையூம்
 

Tags: , ,