RSS

Category Archives: ஏ.ஹெச்.ஹத்தீப்

நூல் வெளியீட்டு விழா


Manitha Neyam

கடந்த 07.08.2009 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நாகூர் தேசிய மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் உயர்திரு ஏ.ஹெச்.ஹத்தீப் அவர்கள் எழுதிய “தேவை மனித நேயம்” என்ற நூல்

வெளியீட்டு விழாவினை நாகூர் தமிழ்ச்சங்கம் விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தது.

தலைமை :      M.A. அபுல் அமீன் – பொருளாளர், நாகூர் தமிழ்ச் சங்கம்

முன்னிலை :  
திரு. பொன். சுந்தரராசன் – தலைவர், நாகூர் தமிழ்ச் சங்கம்
திரு. S. குமார் – தாளாளர், தேசிய மேல்நிலைப்பள்ளி, நாகை & நாகூர்
திரு. முரா. சுப்ரமணியம், [த.மு.எ.ச.]    / திரு. கா. இரகு. – நாகை தமிழ்ச் சங்கம்

வரவேற்புரை :
திரு. R. பழமலைநாதன்
தலைமை ஆசிரியர், தேசிய மேல்நிலைப்பள்ளை, நாகூர்
துணைத்தலைவர், நாகூர் தமிழ்ச் சங்கம்

தொகுப்புரை :
கவிஞர் இதயதாசன்
மக்கள் தொடர்பு செயலாளர், நாகூர் தமிழ்ச் சங்கம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மா.இராசேந்திரன் நூலினை வெளியிட்டு, நூலின் சிறப்புகளையும், மனிதநேயத்தின் இன்றைய அவசியத்தையும் அமுதத்தமிழில் அழகுற எடுத்துரைத்தார். அவரது சொற்பொழிவு கருத்தாழமிக்கதாகவும் சிந்தனையைத் தூண்டும் வண்ணமாகவும் அமைந்திருந்தது. வரலாற்றுச் சான்றுகளோdu இஸ்லாமியச் சகோதரர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய சிறப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக சரம் தொடுத்தார். “இருட்டிலே நிகழ்த்தப்பட்டு, இருட்டிலேயே புதைக்கப்பட்ட சில கோர சாகசங்களை இந்நூல் வெளிச்சமிடுகிறது” என்ற புதிரோடு தொடங்கப்பட்டிருக்கும் நூலின் அட்டைப்பட புகைப்படத்தை வெகுவாகப் பாராட்டினார் துணைவேந்தர். இருட்டறைக்குள் ஒரு அரிக்கன் விளக்கை ஏந்தியிருக்கும் அந்தச் சிறுவனின் வெளிறிப்போன முகபாவம் ஆயிரம் அர்த்தங்களை கற்பிக்கிறது என்றார்.

முதற் பிரதியைப் பெற்ற நாகூர் தமிழ் சங்கத்தின் நிறுவனரும், பஹ்ரைன் பாரதி தமிழ்ச்சங்கத்தின் நிறுவனரும், பெரும் வணிகருமான M.G.K. முஹம்மது ஹுசைன் மாலிம் நூலாசிரியரை வாழ்த்திப் பேசினார். நூலில் இடம் பெறும் சம்பவத்தை ஒட்டி பேசுகையில், ஈராக் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியையும். எண்ணெய் வளத்தை அபகரிக்க அமெரிக்க ஆதிக்க வர்க்கம் கையாண்ட நயவஞ்சக சூழ்ச்சியையும், தான் வியாபார நிமித்தம் மேற்கொண்ட அரபுநாடுகள் சுற்றுப்பிரயாணத்தின்போது தான் பெற்ற நேரடி அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார்.

சன் டிவி “நேருக்கு நேர்” புகழ் திரு. வீரபாண்டியன் நூலை ஆராய்ந்து அதன் சிறப்புகள் ஒவ்வொன்றையும் எடுத்துரைத்தார். காண்டலிஸாவை ஜார்ஜ் புஷ் “காண்டி .. காண்டி..” என்று நெருக்கமாக அழைக்கும் நுணுக்கமான தகவலைக்கூட குறிப்பிட்டிருக்கும் நூலாசிரியரின் எழுத்தாற்றலை எடுத்தியம்பினார்.  (‘காண்டி’ என்றால் மலாய் மொழியில் ‘கழிப்பிடம்’ என்று அர்த்தமாம். இவர் சொல்லிதான் நமக்குப் புரிந்தது. இந்த உண்மை காண்டலிஸாவுக்கு மட்டும் தெரிந்திருந்தால் இந்நேரம் ஜார்ஜ் புஷ்ஷை விஷம் வைத்தே கொன்றிருப்பார்.)

இந்நூலுக்கு “தேவை மனிதநேயம்” என்று பெயர் வைத்திருப்பது அவ்வளவு பொறுத்தமில்லை என்ற தனது தனிப்பட்ட கருத்தினை வெளியிட்டார் திரு வீரபாண்டியன். இத்தலைப்பானதுஇதனை ஒரு கட்டுரைத் தொகுப்பு போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும், இத்தனை நேர்த்தியான பாங்கோடு எழுதப்பட்டிருக்கும் இந்த அரசியல் புதினத்திற்கு நல்லதொரு கவர்ச்சியான பெயரை வைத்திருக்கலாமே என்ற தனது ஆதங்கத்தை உரிமையுடன் முறையிட்டார். உண்மையான கதாபாத்திரங்களை இடம்பெறச் செய்து, இன்றைய நாட்டு நடப்பு விஷயங்களை தனது கற்பனைப் பாத்திரங்களோடு இணைத்து கதை புனைந்திருக்கும் அழகான உத்தியை பாராட்டியதோடு, “இக்கதையில் வரும் நிகழ்வுகளும், இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்களும் நூலாசிரியரின் சொந்தக் கற்பனையே” என்னும் நூலாசிரியரின் வாக்குமூலம் இந்த அரசியல் புதினத்திற்கு சற்றும் பொருந்தாது என்ற வாதத்தை எடுத்துரைத்தார்.

கவிஞர் ஜபருல்லாஹ் பேசும்போது “வீரபாண்டியன், தன் பெயரை எப்போதும் திரு வீரபாண்டியன் என்று எழுதுவது வழக்கம். ஆகவே அவருக்கு இன்னொரு “திரு” போட்டால் திரு திரு என்று ஆகிவிடும்” என்று தமாஷ் செய்ய, திரு வீரபாண்டியன் அளித்த விளக்கம் இது. சன்டிவி தொலைக்காட்சியில் பணிபுரிகையில் “செய்தியாளர்கள் தொகுப்பாளர்கள் அனைவருக்கும் ‘திரு’ என்ற அடைமொழி சேர்க்காமல் வீரபாண்டியனுக்கு மாத்திரம் ‘திரு வீரபாண்டியன்’ என்று மரியாதை செய்கிறீர்களே.. அது ஏன்?” என்று வினவியிருக்கிறார் கலைஞர் அவர்கள். அதற்கு காரணம் இருக்கிறது. வீரபாண்டியனின் தந்தையார் பெயர் திருநாவுக்கரசு. தி.வீரபாண்டியன் என்று எழுதினால் நாட்போக்கில் அது நெடிலாகி தீ.வீரபாண்டியன் என்றாகி நெருப்பாய்க் கொதித்திடுமே என்ற காரணத்தால் “திரு” அடைமொழி பெயரோடு இணைந்த காரணத்தை அந்த தமிழ்த் தாத்தாவிடம் விளக்கி இருக்கிறார். “ஒப்புதல் பெற வேண்டிய இடத்திலேயே நான் ஒப்புதல் பெற்று விட்டேன். ஆகையால் கவிஞரின் இந்த கிண்டல், குறும்புகள் இங்கு செல்லுபடியாகாது என்றார். (வீரபாண்டியன் என்ற பெயரில் இரண்டு பிரபலங்கள் உள்ளதால் சுப.வீரபாண்டியனுக்கு வரும் மடல்கள் இவருக்கும் இவருக்கு வரவேண்டிய மடல்கள் அவருக்கும் போய்விடுவது உண்டாம்)

தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணையம் உறுப்பினரும், நாகூர் தமிழ்ச்சங்கத்தின் நெறியாளரும், சமுதாயக் கவிஞருமான  கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் “தேவை ஒரு குண்டு” என்ற் தலைப்பில் கவிதை பாடினார். கவிஞர் ஜபருல்லாஹ் பேசும்போது “இன்றைய காலகட்டத்தில் தீவிரவாதம் நாம் அனைவருக்கும் அவசியம் தேவை” என்ற வரிகள் அனைவரையும் திடுக்கிட வைத்தது. “பிரச்சினைகளை தீவிரமான வாதம் செய்வதன் மூலமே அதற்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும்”  என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. தீவிரவாதச் செயல்களை மட்டுமே எதிர்க்க வேண்டுமேயொழிய தீவிரவாதத்தை ஒருபோதும் எதிர்க்கலாகாது என்று தீவிரவாதம் செய்தார் கவிஞர். 
 
வழக்கறிஞரும், முன்னாள் சட்டசபை உறுப்பினரும். நாகூர் தமிழ்ச் சங்கத்தின் நெறியாளருமான M.G.K. நிஜாமுத்தீன் மனித நேயத்தின் மேம்பாட்டையும், அவசியத்தையும் அவருக்கே உரிய ஆதங்கத்துடன் அழகுற பேசினார். உணர்ச்சிமயமான அவரது உரை, அவரது பரந்த அணுகுமுறை, மாறுபட்ட நூல் விமர்சனம் யாவும் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது. நூலாசிரியர் ஏ.ஹெச்.ஹத்தீப் ஏற்புரை வழங்க, சங்கத்தின் துணைச் செயலாளர் S. சாஹா மாலிம் நன்றியுரை வழங்க, கூட்டம் இனிதே முடிவுற்றது.

hatheeb02

ஏ.எச் ஹத்தீப் பற்றிய சிறுகுறிப்பு :

வேகமாக வளர்ந்து வரும் இந்நூலாசிரியர் நாகூர் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். இவரது 17-வது வயதில் சுதேசமித்திரன் வார இதழில் முதல் சிறுகதை வெளியானது. அதைத் தொடர்ந்து 70-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். பயங்கரவாதம், நாட்டு நடப்புப் பற்றிய சுமார் 100 கட்டுரைகள், 10 நாவல்கள் இவரது எழுத்துக்களுக்குச் சான்று. தினமணிக்கதிர், சுதேசமித்திரன், தினத்தந்தி, தினத்தந்தி, மாலைமுரசு, மணிவிளக்கு, சமநிலை சமுதாயம், கண்மணி போன்ற பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் பிரசுரமாகியுள்ளன். 3 நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். திரப்படக் கதை பிரிவில் 2 ஆண்டாண்டு கால அனுபவம் இவரை பக்குவப் படுத்தியிருக்கிறது. சுமார் 10 ஆண்டுகாலம் லயன்ஸ் சங்கங்களின் மாவட்டத் தலைவராக செயலாற்றியிருக்கிறார். தொண்டு நிறுவனங்கள் நடத்துகிற 3 பள்ளிக்கூடங்களில் தாளாளர் பொறுப்பு வகித்துள்ளார். அரபு மொழியில் “Calligraphy” எனப்படும் வடிவெழுத்து வடிப்பதில் இவர் கைதேர்ந்தவர். சவூதி அரேபியாவில் ARAMCO நிறுவனத்தில் 7 ஆண்டுகாலம் Calligrapher ஆக பணிபுரிந்துள்ளார். தற்சமயம் முழுமூச்சாக எழுத்துப்பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் இவரைத் தெரிந்துக் கொள்ள ..

இவரைப் பற்றிய அறிமுகம்