RSS

Category Archives: நாகூர் நினைவுகள்

பெருமைமிகு நாகூர்


நாகூர்

உலகளாவிய பெருமை வாய்ந்த, நாகூரை பூர்வீகமாகக் கொண்ட, ஒரு மாமனிதரைப் பற்றி நான் விரைவில் எழுதப்போகிறேன் என்று ஒரு பதிவை முகநூலில் எழுதியிருந்தேன்.

“நாகூரையும் நாகூர்க்காரர்களையும் விட்டால் உங்கள் கண்ணுக்கு வேறு யாரையும் தெரியவே தெரியாதா?” என்று என்னைக் குடைகிறார்கள். “குண்டு சட்டிக்குள் ஏன் குதிரை ஓட்டுகிறீர்கள்?” என்று சாடுகிறார்கள்.

நாகூரைப் பற்றிய அரிய தகவல்களை அள்ளி நான் தெளிக்கையில் அது “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” என்ற ரீதியில் தம்பட்டம் அடிக்கும் சுயபுராணம் என்று கருத்தில் கொள்ளலாகாது.

காமதேனுவும் அமுதசுரபியும் உண்மையில் இருந்ததா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நாகூரின் சிறப்பு என்பது அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியைப் போன்றது.

நாகூரைப் பற்றிய அபூர்வ தகவல்களும் அப்படியே! வற்றாது சுரக்கவல்லது. சட்டியில் குறைந்தால்தானே அகப்பையில் குறையும்? நாகூர்பதியின் பெருமையானது தோண்டத் தோண்ட வற்றாத ‘ஜம்ஜம்’ நீரூற்று எனலாம்.

சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டா? என்பது கவிஞர் வைரமுத்துவின் மண்டையைக் குடையும் கேள்வி. ஊஹூம்…பதில் தெரியாது. ஆனால், நான் பிறந்த மண்ணுக்கு தனியொரு வாசமுண்டு!

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணமுண்டோ? இது பாண்டிய மன்னனின் மனதில் உதித்த சந்தேகம். ஊஹூம்.. நஹீன்.. மாலும். ஆனால், என் மண்ணுக்கென ஒரு மகத்தான மணமுண்டு! அது எனக்கு நன்றாய்த் தெரியும்.

இதை என்னால் பிரதாப்சிங் கட்டித்தந்த 131 அடி மினாரா மீது ஏறி நின்று உரக்கச் சொல்ல முடியும்.

நாகூர், புயலுக்கு மாத்திரம் நுழைவாயில் அல்ல. அது நாகரிகத்தின் நுழைவாயிலும்கூட. நாகர்கள் வசித்த ஊர் இது. நாகரிகம் என்ற சொல்லே நாகர் என்ற மூலச்சொல்லிருந்து பிறந்ததுதானே?.

காவிரிபூம்பட்டினத்தின் அழிவுக்குப்பின்னர் நாகூர் அயல்நாட்டு பயணிகளுக்கும், வணிகப்பெருமக்களுக்கும், அடைக்கலமாகத் திகழ்ந்த ஊர். அனைத்து மதங்களையும் அரவணைத்துப் போற்றிய சமத்துவநகர்.  அது மட்டுமா..?

 • ஒளவையாருக்கும், காளமேகப்புலவருக்கும் தமிழ் கற்றுக் கொடுத்த தரணி இது.
 • புகழ்ப்பெற்ற ஆதிமந்தி-ஆட்டனத்தி காதற்காவியம் நடந்தேறிய   ஊர் இது
 • 18-ஆம் நூற்றாண்டில் ஒரே காலத்தில் 20-க்கும் மேற்பட்ட பெரும் புலவர்கள் வாழ்ந்த “புலவர்க்கோட்டை”  இது.
 • மதுரை தமிழ்ச் சங்கத்து நாலாம் நக்கீரர் எனப்படும் நாவலர் குலாம் காதிறு நாவலரை தந்த ஊர் நாகூர்.
 • வண்ணக் களஞ்சிய புலவர் போன்ற பெரும் புலவர்கள் வாழ்ந்த பெருமைக்குரிய இடம்.
 • ஆசுகவி நாகூர் ஆபிதீன் காக்கா பிறந்த மண் இது.
 • தமிழின் முதல் பெண் நாவலாசிரியை சித்தி ஜுனைதா பிறந்த மண் நாகூர்.
 • கம்பராமாயணத்தின் கலைக்களஞ்சியமாக விளங்கிய நீதிபதி மு.மு.இஸ்மாயில் பிறந்த ஊர் நாகூர்.
 • தமிழ்த் திரையுலகில் தனிப்பெரும் வசீகரத்தோடு வலம்வந்த ரவீந்தர், தூயவன் போன்ற வசனகர்த்தாக்களையும் கதாசிரியர்களையும் பெற்றெடுத்த மண் நாகூர்.
 • ஆன்மீகச் சிந்தனையாளர், பன்மொழி எழுத்தாளர் அப்துல் வஹ்ஹாப் பாகவி போன்றவர்களை வார்த்த ஊர் நாகூர்
 • கர்னாடக சங்கீத மேதைகள் வித்வான் எஸ்.எம்.ஏ.காதர், இசைமணி எம்.எம்.யூசுப் போன்ற இசையுலக ஜாம்பவான்களை உவந்தளித்த ஊர் நாகூர்
 • அறிஞர் அண்ணாவையே வியக்க வைத்த சொல்லின் செல்வர் முனவ்வர் பெய்க் பிறந்த ஊர் இது.
 • திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவராய் மட்டுமின்றி இஸ்லாமிய பாடல்களைப்பாடி வரலாற்று சாதனை புரிந்த இசைமுரசு நாகூர் E.M.ஹனிபாவை ஈன்றெடுத்த ஊர் நாகூர்.
 • நாடகத்துறையிலும், இசைத்துறையிலும் முடிசூடா மன்னராக கோலோச்சி எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு இசை கற்பித்த ஊர் நாகூர்.
 • தெய்வீகப் பாடல்களுக்கு சிகரமாய் விளங்கிய சீர்காழி கோவிந்தராஜனின் பூர்வீக ஊர் நாகூர்.
 • இந்துஸ்தானிய இசைமேதைகளான தாவுத் மியான், சோட்டு மியான், நன்னு மியான் போன்றோர் வாழ்ந்த ஊர் நாகூர்
 • தபேலா கலைஞர் அம்பி சுவாமிநாதன், நாதஸ்வர மேதை சுப்பையா பிள்ளை, மிருதங்க வித்வான் நாகூர் எஸ்.அம்பி.ஐயர் போன்ற பிரபலங்களை பெற்றெடுத்த ஊர் நாகூர்
 • கவிஞர் நாகூர் சலீம் போன்ற மிகச்சிறந்த கவிஞர்களை தமிழுலகிற்கு தந்த ஊர் நாகூர்.
 • நடமாடும் தகவல் களஞ்சியமாய் விளங்கிய சொல்லரசு ஜாபர் மொய்தீனின் சொந்த ஊர் நாகூர்.
 • தொழிலாளர் நலனுக்காக குரல் கொடுத்த சிங்கப்பூர் பாரளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஏ.ஜப்பார் அவர்களை ஈன்றேடுத்த ஊர் நாகூர்
 • இன்றைய கால கட்டத்தில் எழுத்துலக பிரபலங்களாகவும் இலக்கிய பிம்பங்களாகவும் வலம்வரும் சாருநிவேதிதா, நாகூர் ரூமி, புலவர் சண்முக வடிவேல், புலவர் சீனி சண்முகம், கவிஞர் ஜபருல்லாஹ், கத்தீப் சாஹிப், எழுத்தாளர் ஆபிதீன் போன்றோரை உருவாக்கிய ஊர் நாகூர்.

இன்னும் எத்தனை எத்தனையோ படைப்பாளிகள். அவர்கள் அனைவரையும் குறிப்பிட பக்கங்கள் காணாது.

“நாகூர் இல்லாமல் இஸ்லாமிய தமிழிலக்கியங்கள் இல்லை” என்கிறார் புகழ்ப்பெற்ற பத்திரிக்கையாளர் ஜே.எம்.சாலி

“நாகூரில் தடுக்கி விழுத்தால் ஒரு கவிஞன் அல்லது பாடகன் காலில்தான் விழவேண்டும்” என்கிறார் சமுதாயக் கவிஞர் தா.காசிம்,

“எனக்கு ஊர்ப்பாசம் கீர்ப்பாசம் எதுவும் கிடையாது” என்று சொல்லிக் கொண்டே நாகூரின் நினைவலைகளில் மூழ்கி தனது ஒவ்வொரு நூலிலும் தன்னையறியாமலேயே புகழ்மாலை சூடும் சாரும் நிவேதிதா இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. “எங்கள் ஊர் அனுதினமும் இசை சங்கமத்தில்தான் தத்தளிக்கும். காலையில் எழுந்தவுடன் தர்காவில் இசை ஒலிக்கும். அதைபோல அழகான ஷெனாய் வாத்திய இசையும் கேட்கும். இந்த இசையைக் கேட்டுக்கொண்டே காலையில் எழுந்திருப்பதற்கு கொடுப்பினை வேண்டும். இசை சூழ்ந்த ஊர் – நாகூர் முத்தமிழும் கலந்த கலாசாரம் நாகூரில் உண்டு. உலக அளவில் வீரியமான கலாசாரமும் நாகூரில்தான்” என்று பெருமை கொள்கிறார்..

களைத்துப்போய் திண்ணையில் உட்கார்ந்திருப்பார் ஒருவர், கிட்டப்போய் பார்த்தால் அவர் ஒரு கலைமாமணியாக இருக்கக்கூடும்,

இயல், இசை,  நாடகம் – முத்தமிழையும் போற்றி வளர்த்த தரணி என்ற பெருமை நாகூரைத்தான் சாரும். பத்திரிக்கைத் தொழிலுக்கு முன்னோடியாகத் திகழ்ந்ததும் இவ்வூர்தான். தமிழ்த்தாத்தா உ.வேசா. முதற்கொண்டு  தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியாத் திகழ்ந்த மறைமலை அடிகளார் வரை  இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகூரின் பெருமை நாகூர்க்காரனுக்கே தெரியாது. அதை நமக்கு எடுத்துச் சொல்வதற்கு நமக்கு புதுக்கோட்டையிலிருந்து ஒரு ஜெ.ராஜா முகம்மது தேவைப்படுகிறது

நம்மிடையே வாழ்ந்த சித்தி ஜுனைதாவின் பெருமையை நாம் அறிந்துக் கொள்ள முடியவில்லை. அதனை ஜெர்மனியிலிருந்து வந்த முனைவர் நா.கண்ணன் சொல்லித்தான் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நாகூரில் வீடு வீடாக பாட்டுப் பாடித் திரிந்துக் கொண்டிருந்தஅப்துல் கனி, ஹாஜா மெய்தீன், சபர் மெய்தீன் போன்ற பக்கீர்மார்களின் திறமையைக் கண்டறிந்து “சூஃபி இசை” என்ற பெயரில் இஸ்ரேல் நாட்டு டெல்-அவிவ் நகரம்வரை அழைத்துச் சென்று, அவர்களை உலக நாயகர்களாக வலம் வர வைப்பதற்கு நமக்கு ஒரு வெளியூர்க்காரர்தான் தேவைப்பட்டது.

கவிக்கோ சொன்னதுபோல நாம் புதையல் மூட்டையின் மீது அமர்ந்துக்கொண்டு புதையலைத் தேடுகிறோம். தங்கச் சுரங்கத்தின் மேல் அமர்ந்துக்கொண்டு பொக்கிஷத்தை  துளாவுகிறோம். கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகிறோம்.

இப்பொழுது சொல்லுங்கள் நான் நாகூர் பெருமையை எடுத்துச் சொல்வது  “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்றதா..?.” என்று

– அப்துல் கையூம்

 

Tags: ,