RSS

Category Archives: நாகூர் பாஷையில் திருக்குறள்

இன்று சில குறள்கள் (நாகூர் பாஷையில் விளக்கம்)


திரு

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சில் மிசைவான் புலம்.

வூட்டுக்கு வர்ற விருந்தாடி ஜனங்களுக்கு பசியாற வச்சிட்டு, அஹ உங்காம மிச்சம் மீதி வச்ச பணியான் பண்டத்தெ சாப்புடறஹ, கொள்ளையிலே வெரை போட வேண்டிய அவசியம்கூட இருக்காது/. (ஆமாம்.. குத்ரத்தா அதுவா மொளைச்சுக்கும் போல)

*     *     *

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்மீதி 

கிராஅத்து/ ஹஜ்ரத்தோட பயான் –  இதையெல்லாம் காதாலே கேக்குற நசீபு இக்கிதே, அந்த பரக்கத்து எல்லா பரக்கத்த விடவும் கைரானது.

 

 

(செல்வம் = பரக்கத்,   கைரானது = மேன்மையானது)

*     *     *

செவிக்குண வில்லாத போழ்து சிறிது 
வயிற்றுக்கும் ஈயப் படும்.

யாராச்சும் அலஹா ஓதுற கிராஅத்தெ கேட்டுக்கிட்டே இருந்தோம்னா  சொட்டுக்கூட பசிக்கவே பசிக்காது.. பொறவுதான் கொஞ்சக்கோனு பசியாறலாமேன்னு  நெனப்போம்..

(கொஞ்சக்கோனு = சிறிது,

*     *     *

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு 
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

நீங்களா ஓதுலேன்னாலுங்கூட பரவாயில்லே ஹஜ்ரத்துமாருவக்கிட்ட கேட்டு தெரிஞ்சுகிடுங்க. ஓடியாடி ஓஞ்சிப்போயி வயசான காலத்துலே அதுதான் நம்மளுவளுக்கு அஸாக்கோல் மாதிரி தாக்கிப் புடிக்கும்

(அஸாக்கோல் = ஊன்றுகோல்,  ஓதுங்க = கற்க)

*     *     *

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே 
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

வலுக்கி உடுற தரையிலே நடக்கும்போது எப்படி நம்மளுக்கு அஸாக்கோலு ஒத்தாசையா இருக்கோ, அதுமாதிரி சாலிஹான சந்தனக்கட்டையா இருக்குற சீதேவி மனுசருடைய நசீஹத்து நம்மளுக்கு ஆஃபியத்தா உதவும்.

(சீதேவி மனுசர்/ சாலிஹான சந்தனக்கட்டை  = ஒழுக்கமுடையோர்,  நசீஹத்து = அறிவுரை)

*     *     *

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்.

சின்னக்கோண்டு சூராவாயிருந்தாலும் சரி, அதோட அர்த்தத்தெ தஜ்வீதெ முளுசா கேட்டு தெரிஞ்சுக்கிடோம்னு சொன்னா அது நம்மளுவளுக்கு நெறஞ்ச பரக்கத்தையும், ரஹமத்தையும், சலாமத்தையும் கொடுக்கும்.

*     *     *

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் 
தீண்டிய கேள்வி யவர்.

(குர்ஆன்/ ஹதீஸு) எல்லாத்தையும் நல்லா ஆராய்ஞ்சு பார்த்து பொறுப்பா பேசுறஹ சமயத்துலே சிலதை தப்பா புரிஞ்சிக்கிட்டாலும், பேத்தனமா ஒண்ணும் உளர மாட்டாஹா.

*     *     *

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய 
வாயின ராதல் அரிது.

எதையும் புரியாம லூசு மாதிரி பேசுற ஜனங்களுவ அடக்க ஒடுக்கமா பேசமாட்டாஹா. (ஹக்கா சொல்றேன்) அடாவாடித்தனமாத்தான் தூக்கிஎறிஞ்சுதான் பேசுவாஹா

*     *     *

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் 
பேரா இடும்பை தரும்.

பெரிய மனுசஹ பேச்சைக் கேக்காம ஒரு வரத்துலே வந்து ஆட்டம் போடுற ஹராம்ஜாதாவுக்கு பலா முசீபத்து புடிச்சு வாட்டி எடுத்துடும்..

(பலா முசீபத்து = இடும்பை,  பெரியார் = பெரிய மனுசஹ)

*     *     *

 

இன்று சில குறள்கள் (நாகூர் பாஷையில் விளக்கம்)


திரு

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

காசு பணம் இல்லாதஹலுக்கு எப்படி இந்த தாருல் ஃபனா இல்லியோ அந்த மாதிரி அல்லாஹுத்தாலாவுடைய ரஹ்மத்து இல்லாதஹலுக்கு தாருல் பகா நஸீபும் கிடையாது.

(ரஹ்மத்து = அருள்)

*     *     *

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

பிஸாது பேசி ஹயாத்தா இருக்குறதெ விட ஹயாத்தளிஞ்சு மவுத்தா போறது எவ்வளவோ தேவலே.

(புறங்கூறுதல் = பிஸாது.  சாதல் = மவுத்து)

*     *     *

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 
நோயின்மை வேண்டு பவர்.

முஸீபத்து செய்யிறஹலுக்குத்தான் முஸீபத்து வரும். அதனால முஸீபத்து வரக்கூடாதுன்னு நெனச்சிங்கன்னா மத்தஹலுக்கு முசீபத்து செய்யாம இருக்குறது கைர்.

*     *     *

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

மாப்புள்ளமாருவ சொல்ற மாதிரி பொண்டுவ அதபு அந்தீஸா நடந்துக்கிட்டாஹான்னு சொன்னா அஹலுக்கு ஜன்னத்து நஸீபுத்தான் போங்க.

(பொண்டுவ = பெண்டிர்)

*     *     *

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

சீதேவியான மனுஷி நம்மளுக்கு பொண்டாட்டியா கிடைக்க நஸீபு இல்லேன்னு சொன்னா மாப்புள்ளைமாருவ முஹல்லாவுலே தல நிமிந்து நடக்க முடியாது.

*     *     *

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா 
செய்யாமை மாசற்றார் கோள்.

அல்லஹுத்தாலா உங்களுக்கு நெறஞ்ச பரக்கத்தைக் கொடுக்கணும்னா மத்தஹலுக்கு கெடுதல் செய்யக்கூடுதுங்குற ஹாஜத்த மொதல்லே கல்புலே நிய்யத்து வையுங்க.

(பரக்கத்து = பேறு,  நிய்யத்து = நாட்டம்)

*     *     *

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்.

உங்களுக்கு யாராச்சும் அதாபு செஞ்சாஹான்னா அஹ வெக்கிச்சு போற மாதிரி அஹலுக்கு ஏதாச்சும் நல்லது செஞ்சிடுங்க.

*     *     *

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா 
பிற்பகல் தாமே வரும்.

நீங்க சுபுஹு நேரத்துலே யாருக்காச்சும் அதாபு கொடுத்தீங்கன்னு வச்சுக்குங்க, மக்ரிபு நேரம் வர்றத்துக்குள்ளாரயே அல்லஹுத்தாலா உங்களுக்கு காமிச்சுக் கொடுத்துடுவான்.

*     *     *

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்.

சோறு உண்டுட்டு செரிமானம் ஆனபொறவு சோறு உண்டா மருந்து மாத்திரெ எதுவும் தேவையிரிக்காது

*     *     *

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் 
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

சோத்துக்களறிக்கி போய் வரும்போது மறுசோறு வேணாம்னு சொல்லி அளவா சோறு உண்டா உடம்புக்கு எந்த பலா முஸீபத்து அண்டாம ஸலாமத்தா இருப்பீங்க.

(முஸீபத்து = பீடை, ஸலாமத்தாக = நலமாக)

*     *     *

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் 
நோயள வின்றிப் படும்

தொண்டக்குளி ஹல்க்  புடிக்கிற மாதிரி வயிறு முட்ட சோறு உண்டா சீக்காளியா போயிடுவோம்

*     *     *

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் 
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

நோம்பு புடிச்சு அதனால வர்ற ‘தக்வா’வினாலே, அஹ இஸ்ராயீல் (அலை) அஹல தேடி வர்றதைக்கூட தள்ளிப்போட முடியும்.

*     *     *

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் 
கட்காதல் கொண்டொழுகு வார்.

(வாஞ்சூருக்கு போயி) கள்ளுக்குடிச்சிட்டு வர்ரஹ சீரளிஞ்சு போறது மட்டுமில்லே, அஹல கண்டு எந்த ஜனமும் மதிக்கவும் மாட்டாஹா

– ஆக்கம் : அப்துல் கையூம்

 

நாகூர் பாஷையில் திருக்குறளுக்கு பொருளுரை


(ஏற்கனவே இணையத்தில் பல்வேறு வலைப்பதிவுகளில் நானெழுதிய இந்த “நாகூர் பாஷையில் திருக்குறள்” பொருளுரை வெளிவந்திருந்தாலும் நாகூர்வாசிகளின் நகைச்சுவை உணர்வைத் த் தூண்டுவதற்கு மீண்டும் இந்த மீள்பதிவு)

“உடுக்கை இழந்தவன் கைபோல” என்று தொடங்கும் ஒரு திருக்குறளை எனது வலைப்பதிவில் எழுதப்போய் நம்ம ஊர்க்காரர் ஒருவர் இதுக்கு என்ன அர்த்தம்னு விளக்கம் கேட்டார். அவருக்கு நாகூர் பஷையிலேயே விளக்கினேன். அவருக்கு உடனே புரிந்துப் போய் விட்டது.

இதேபோன்று குறள்களுக்கு  நாகூர் பாஷையிலேயே பதவுரை எழுதினால் என்ன என்ற ஒரு விபரீத ஆசை எனக்கு தோன்றியிருக்கக் கூடாதுதான். என்ன செய்வது? திருவள்ளுவர் என்னை மாப்பு செய்வாராக.

———————————————————————————————————————-

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

கைலி அவுந்து உலும்போது கை எப்படி கப்புன்னு புடிச்சுக்குதோ அதுமாதிரி கூட்டாளி முசீபத்துலே இருக்கும்போது உளுந்தடிச்சு போயி கூடமாட ஒத்தாசை செய்யிறதுதான் தோழமாருவளுக்கு அலஹு.

(Meaning: முசீபத்து = Distress, கூட்டாளி = Friend,  கூடமாட ஒத்தாசை = Help)

*     *     *

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அரபு பாஷைக்கு அலீஃப் எழுத்து எப்படியோ அதுமாதிரி அல்லாஹுத்தாலாதான் இந்த துனியாவுக்கு எல்லாமே.

(Meaning:  துனியா = World.,  அலீஃப் = First Apphabet in Arabic)

*     *     *

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

அஹ எஹல பாக்கும்போது, எஹ அஹல பாக்கும்போது ஆவுக்கெச்சேனோ! பேச்சு மூச்சே இரிக்காது

*     *     *

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்

பச்சப்புள்ளெ மதலை பேச்சை கேக்காதஹத்தான் பீப்பீ சத்தம்தான் அலஹா இக்கிது, புல்புல்தாரா சத்தம் அலஹா இக்கிதுன்னு பேத்துவாஹா.

*     *     *

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

புள்ளெ வாப்பாவுக்கு செய்யிற உதவி என்னான்னு சொன்னா ‘இவனைப் பெத்ததுக்கு அஹ ரொம்பவும் கொடுத்து வச்சஹன்னு முஹல்லாக்காரஹ சொல்றமாதிரி அவன் நடந்துக்கணும்.

*     *     *

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

வந்த விருந்தாடி ஜனங்களுக்கு பணியான் பண்டம் வச்சுக் கொடுத்து, வேற யாராச்சும் வர்ராஹலான்னு வாசக்கதவெ பார்த்துக்கிட்டு இருந்தா அஹலுக்காகா மலாயக்கத்துமாருவ மஹ்ஷர்ருலே காத்துக்கிட்டு இருப்பாஹா.

(Meaning: மலாயிக்கத்துமாருவ = Angels)

*     *     *

இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

ஏழைப்பட்ட ஜனங்களெ எல்லாரும் ஏசுவாஹா. காசுபணம் இருக்குறஹலெ தலையிலே தூக்கிவச்சுக்கிட்டு ஜிங்கு ஜிங்குன்னு (பாப்பாவூர்லே ஆடுற மாதிரி) ஆடுவாஹா.

*     *     *

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

ஓதுங்க. (சாபு சொல்ற மாதிரி) நல்லா ஓதுங்க. ஓதி முடிச்சப்பொறவு அதுக்கு தகுந்தமாதிரி அதபு அந்தீஸா நடந்துக்குங்க.

(Meaning: அதபு அந்தீஸா = Act  Morally)

*     *     *

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

யார் பிஸாது செஞ்சாலும் அஹ ஹக்கா பேசுறாஹலான்னு விசாரிச்ச பொறவுதான் எதையும் முடிவு பண்றதுதான் புத்திசாலித்தனம்.

*     *     *

யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

வாயை அடக்கி பேசுங்கனி. இல்லாட்டி பலா கர்மம் கொண்டு ஹயாத்தெ அளிஞ்சு போயிடுவியும்.

*     *     *

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

நல்ல அமல் செய்யிறதைக் காட்டிலும் பரக்கத் வேற ஒண்ணுமே கெடையாது. அத செய்யாமப் போனா அதைவிட பலா முசீபத்து வேற எதுவுமே கெடையாது.

(Meaning:  அமல் = Good Deeds)

*     *     *

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

நாம அஹல பாக்குறப்போ அஹ தரையை பாக்குறாஹா; நாம அஹல பாக்காதப்போ அஹ  நம்மள பாத்து அஹலுக்குள்ளேயே பேத்தனமா சிரிச்சுக்குறாஹா.

*     *     *

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்

ஹவா நஃப்ஸ் புடிச்சு நாம தனியா உக்காந்து வயித்துலே கொட்டிக்கிறது இருக்கே அது  மிஸ்கீன் மாதிரி மத்தஹக்கிட்டே காசுபணம் கேக்குறதை விட முசீபத்தானது.

(Meaning:  ஹவா நஃப்ஸ் = Greediness)

*     *     *

விருப்புஅறாச் சுற்றம் இயையின், அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும்

ஒருத்தஹலுக்கு மொஹபத் காட்டுற சொந்தக்காரஹ மட்டும் அமைஞ்சிட்டாஹான்னா, அந்த சீதேவிக்கு நெறஞ்ச பரக்கத்தையும், நீடிச்ச ஸலாமத்தையும் கொடுக்கும்.

(Meaning:    மொஹபத்=Love)

*     *     *

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்;மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்

வூட்டுக்கார உம்மனைக்கு பயந்தாங்கொள்ளி மாதிரி பயந்து நடுங்குறஹ,  சாலிஹான மனுசருக்கு ஒத்தாசை பண்ணக்கூட பயப்படுவாஹா.

(Meaning: சாலிஹான சந்தனக்கட்டை= Good Samaritan)

*     *     *

யாதானும் நாமாம்ஆல்; ஊராம்ஆல் என்னொருவன்
சாம்துணையும் கல்லாத ஆறு

நாலெழுத்து படிச்சஹலுக்கு சஃபர் செய்யிற எல்லா நாடும் அஹலோடசொந்த ஊரு மாதிரிதான். அப்படியிருந்தும் ஏன் அஹலுவோ படிக்காம இருக்குறாஹா?

(Meaning:  சஃபர் = Journey)

*     *     *

கல்லாதான் சொல்கா முறுதல், முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற்று அற்று

[பின்குறிப்பு:  மாப்புசெய்ங்க சீதேவி. இதுக்கு பதவுரை எழுதி பொண்டுவக்கிட்ட “அதபு கெட்ட மனுஷன்”னு ஏச்சுபேச்சு வாங்குறதுக்கு நான் தயாரா இல்லை]

*     *     *

பழிஅஞ்சிப், பாத்துஊண் உடைத்து ஆயின், வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

அல்லா ரசூலுக்கு பயந்து, ஹலாலான வழியிலே சம்பாதிச்சு, வூட்டு மனுசருவோ, சொந்தக்காரஹ, இஹலுக்கு பவுந்து உண்ணுரஹலோட பரம்பரை என்னிக்குமே அழியாது.

*     *     *

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

வூட்டுக்கார உம்மனைக்கூட ஒத்துமையா, ஜதப்பா குடும்பம் நடத்துற சாலிஹான சீதேவி மனுசரு, மனுசருலே சேத்தியில்லே. மலாயக்கத்துமாருவ மாதிரின்னு வச்சுக்குங்களேன்.

(Meaning:  வூட்டுக்கார உம்மனை = Better Half)

*     *     *

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்;அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

ஹவா நஃப்ஸ் இல்லாதஹலுக்கு முசீபத்து அண்டவே அண்டாது. அது இருக்குறஹலுக்கு (அல்லா வச்சு காப்பாத்த) பலா முசீபத்து ஹல்கை புடிச்சு வாட்டி எடுத்துடும்.

*     *     *

பணைநீங்கிப் பைந்தொடி சோரும், துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

அஹ என்னை வுட்டுட்டு (சபர்) போனப் பொறவு என் தோள்பட்டைக்கூட துறும்பா இளைச்சு போச்சு. இப்ப கை மெலிஞ்சிட்டதாலே பூட்டுக்காப்பு, பொன்மணிபவளம் கூட ‘புசுக்’குன்னு கழண்டு கழண்டு உலுந்துடுது.

*     *     *

கவ்வையால் கவ்விது காமம்; அதுஇன்றேல்
தவ்என்னும் தன்மை இழந்து

நான் அந்த புள்ளே மேலே மொஹப்பத் வச்சிருக்கேன்னு இந்த ஊருக்காரஹ உடாமே பிஸாது பண்றதுனாலேதான் எங்களோட மொஹப்பத்து இவ்ளோ நாளு நீடிச்சிக்கிட்டு இக்கிது. இல்லாக்கட்டி எப்பவோ அது உப்பு சப்பு இல்லாம முடிஞ்சி போயிருக்கும்.

*     *     *

களித்தொறும் கள்உண்டல் வேட்டுஅற்றால்; காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

(வாஞ்சூர்லே போயி) கள்ளுக் குடிச்சிட்டு வந்து மெதப்புலே இருக்குறஹ எப்படி குஷியா இருக்குறாஹலோ அதுமாதிரி எங்க காதலெ பத்தி ஊருலே பிஸாது பண்ணும்போதுதான் கல்புக்கு ராஹத்தா இக்கிது.

*     *     *

கண்டது மன்னும் ஒருநாள்; அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண்டு அற்று

நான் அஹலை பாத்துப் பேசுனது கொஞ்சமோ நஞ்சமோதான். (களிச்சல்லே போவ) அதுக்குள்ளே ஊரு ஜனங்களுவ பொறையை பாம்பு புடிச்சு ‘லபக்’குன்னு வாயிலே போட்டுக்கிட்ட மாதிரி பிஸாது பண்ணுறாஹலே??

(Meaning : பிஸாது =  Backbiting)

*     *     *

அமிழ்தினும் ஆற்ற இனிதே,தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

சின்னப் புள்ளையிலுவோ கையைப் போட்டு பிசையிற கோதுமைக் கஞ்சியானது, பாச்சோறை விட அம்புட்டு ருசியா இக்கிது.

(Meaning: பாச்சோறு = பாயசம்)

*     *     *

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
  

வாப்பாக்காரஹ புள்ளைக்கு செய்யிற சவாபான காரியம் என்னன்னு சொன்னா, முஹல்லாவுலே/ மஜ்லீசுலே, அவனை பெரிய ஆளா, நசீபு உள்ளவனா ஆக்கிக் காட்டணும்.

*     *     *

என்புஇல் அதனை வெயில்போலக் காயுமே
அன்புஇல் அதனை அறம்

எலும்பு இல்லாத புழுவை பட்டப் பவலு வெய்யிலு காய்ச்சி மவுத்தாக்குற மாதிரி, கல்புலே ஈவு இரக்கம் இல்லாதஹலே காதரவுலியா கண்ணை அவுச்சிடுவாஹா.

(Meaning :கல்பு =  Heart)

*     *     *

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

ஒருத்தஹலுக்கு நெருக்கடியான வஃக்துலே கூட மாட ஒதவி ஒத்தாசை செய்யிறது கொஞ்சக்கோனு இருந்தாலும் தேவலே. ஆனா அது இந்த துனியாவை விட ரொம்ப ரொம்ப பெருசு.

*     *     *

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

ஹாஜத்து எப்பவுமே பெருசா இருக்கணும். ஒருவேளை நம்மளோட ஹாஜத்து கைக்கூடாம போனாக்கூட, பெரிய மனுசஹலுவோ நம்மள, ஆஹா ஓஹோன்னு பாராட்டுவாஹா. அதுவே முராது ஹாசில் ஆன மாதிரிதானே?

(Meaning: ஹாஜத்து = Aim, Ambition, Target)

*     *     *

பரியது, கூர்ங்கோட்டது ஆயினும், யானை,
வெரூஉம் புலிதாக் குறின்.

(நாகூர் தர்ஹா) யானைக்கு பெரிய சரீரமும், கூர்மையான கொம்பும் இருந்தாலும் கூட, புலி தாக்குனுச்சுன்னு வச்சுக்குங்க, அதுக்கு அத்து பித்து எல்லாம் கலங்கிப் போயிடும்.

*     *     *

புறந்தூய்மை நீரான் அமையும், அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்

நம்மளோட சரீரம் ஒளு செஞ்சா நஜீஸ் நீங்கும். அதுமாதிரி கல்பு, ஹக்கான அமல்னாலேதான் சுத்த பத்தமாவும்.

(Meaning : நஜீஸ் =  Dirt)

*     *     *

மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம்செய் வாரின் தலை

கல்பு அறிய ஹக்கா பேசுறஹ, இத்திகாஃப் இருக்குறஹலை விட, ஜகாத் கொடுக்குறஹலை விட ரொம்ப ரொம்ப ஒசத்திஹானஹ.

*     *     *

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்,
தீயுழி உய்த்து விடும்

பொறாமை, பொச்சரிப்பு எஹக்கிட்ட இக்கிதோ, அது அஹலோட ஆஸ்தி அந்தஸ்த்தெ ஹயாத்தளிக்கிறதோட  நிக்காம, அஹலெ நரகத்து கொள்ளிக்கட்டையா ஆக்கிப்புடும்.

*     *     *

உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர், எஞ்ஞான்றும்
கள்ஒற்றிக் கண்சாய் பவர்

(மனாரடி ஓரம் விக்கிற) கஞ்சா, அபினை வாங்கிச் சாப்பிடுறது ஊரு ஜமாஅத்துக்கு தெரிஞ்சிச்சுன்னா அப்புறம் விசயம் நாறி நறங்குலைஞ்சுப் போயிடும். கபர்தார்.

*     *     *

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்தி விடும்

அடக்க ஒடுக்கமா இருந்தாஹான்னா மலாயித்துமார்ல சேத்தி. அடங்காம ரொம்பத்தான் ஒரு வரத்துலே வந்தாஹான்னாஅஹ ஹயாத்தே இருட்டா போயிடும்.

*     *     *

ஆற்றின் ஒழிக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

நம்மளும் ஹாலாலான பாதையிலே நடந்து, மத்தஹலையும் அந்த மாதிரி நடக்க வச்சா அஹலோட வாழ்க்கை சூஃபியாக்களோட நோன்பை விட பரக்கத்தானது.

*     *     *

துறந்தார்க்குத் துப்புறவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்

சூஃபியாக்களுக்கு ஒத்தாசையா இருக்குறதா நெனச்சுக்கிட்டு நாம செய்ய வேண்டிய தொழுவ, ஜக்காத்து இந்த மாதிரி கடமைகளை மறந்துராதீங்க சீதேவி.

*     *     *

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

நம்ம தலையோட நிக்கிற எரிச்சக்கார பொரிச்ச முட்டையை அடக்கியாளவும், கூட்டாளிமாருவோக்கு கூடமாட ஒத்தாசை செய்யிறதுக்கும் தொழுவாளி நோம்பாளி மனுசராளத்தான் முடியும்

*     *     *

வினைகுரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்

அஹ அந்த வேலைக்கி லாயாக்கான்னு மொதல்ல நல்லா தெரிஞ்சுகிட்டு பொறவு அந்த வேலயை அஹகிட்ட கொடுங்க நாச்சியா.

*     *     *

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற

நேக்குபோக்கு தெரிஞ்ச சாலிஹான புள்ளையை விட வேறு கொடுப்பினை நம்ம ஹயாத்துலே இல்லவே இல்லே

*     *     *

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரின் தற்று

சட்டி பானை , அண்டா குண்டா இதுலே பாசி கீசி புடிச்சிருந்தா பாலு தெறஞ்சு போயிடும். அதுமாதிரி அதபு அந்தீஸு இல்லாதஹ சேத்து வைக்கிற நகை நட்டு காசு பணத்தாலேயும் ஒரு ஃபாயிதாவும் இல்லே

*     *     *

தம்மிந்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

உம்மா, வாப்பாவை விட நம்ம புள்ளே புத்திசாலியா இருந்தா அது அஹலுக்கு மாத்திரமில்லே இந்த துனியாவுக்கே பவுமானம்

*     *     *

உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

வூட்டுக்கு வர்ற விருந்தாடி ஜனங்களுக்கு களறி ஒலம்ப தெரியாதஹ எவ்ளோ காசு பணம் உள்ளஹலா இருந்தாலும் பலா முசீபத்து புடிச்சஹத்தான்.

*     *     *

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து

அனிச்சம்பூ இருக்கே அத மோந்து பாத்தாலே அது சோந்து சுண்ணாம்பா போயிடும். அதுமாதிரி வூட்டுக்கு வர்ற்ற விருந்தாடி மனுசருக்கு முன்னாடி மூஞ்சியெ வலுப்பம் காமிக்கிற மாதிரி வச்சுக்கிட்டா அஹ மனசு நொந்து போயிடுவாஹா

*     *     *

ஒழுக்காறாக் கொள்க ஒருவந்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

கல்புலே பொறாமை பொச்சரிப்பு இல்லாம அதபு அந்தீஸா வாழறதுதான் சீதேவித்தனமான வாழ்வு

*     *     *

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

பரக்கத்தை சீதேவின்னு சொல்லுவாஹா. முசீபத்தெ அவளோட லாத்தா மூதேவின்னு சொல்லுவாஹா. பொறாமை பொச்சரிப்பு படுரஹலெ லாத்தாவெ கைகாட்டிட்டு சீதேவி வூட்டெ விட்டே ஓடிப்போயிடுவா.

*     *     *

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

பிஸாது பேசி, பித்னா செஞ்சு அலையிறத விட மவுத்தாயி கபருக்குள்ளே போறது எவ்வளவோ மேல்.

ஆக்கம் : அப்துல் கையூம்

தொடர்புடைய சுட்டி :

நாகூர் பாஷையில் திருக்குறள் – முதல் பகுதி
நாகூர் பாஷையில் திருக்குறள் – இரண்டாம் பகுதி