பிரபலமானவர்களின் பெயரை நம்மோடு இணைத்துப் போட்டால் நாமும் பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணம் எனக்கும் இல்லாமலில்லை.
இணையத்தில் சென்று “நாகூர்” என்று தட்டச்சு செய்து குதுகூலமாய் ‘கூகுளி’த்துப் பார்த்தால், நாகூர் தர்காவைவிட அதிகமான தகவல்கள் நாகூர் ரூமியைப் பற்றித்தான் காணக் கிடைக்கின்றன.
நாகூர் ரூமி, டிராயர் போட்டுக்கொண்டு (அண்ட்ராயர் அல்ல) அலைந்த காலத்திலிருந்து அவரை எனக்குத் தெரியும். அப்போது அவரது பெயர் A.S.முஹம்மது ரபி. அவரது தந்தை என் தந்தையின் ஆத்ம நண்பர். சாவன்னா என்று அன்போடு அழைக்கப்படும் அவர், நாகூர் கடைத்தெருவில் நடந்து வந்தால் ஏறெடுத்து பார்க்கத் தோன்றும். சடசடவென்று சலசலக்கும் ரெட்டைமூட்டு புதுக்கைலி உடுத்தி, “See through” பாரின் சட்டை, அரசியல்வாதியைப் போன்று தோளில் உல்லன் ஷால். அரும்பு மீசை. கையில் 555 சிகரெட் டின். பார்ப்பதற்கு இளம் வயது S.S.R. போன்று காட்சியளிப்பார். பெரியவனானதும் நாமும் இப்படித்தான் பந்தாவாக காட்சிதர வேண்டும் என்று அப்போது மனதில் நினைத்ததுண்டு.
ரபிக்கும் எனக்கும் சிறுவயதிலேயே ஓர் ஒற்றுமை உண்டு. ஆமாம். நாங்களிருவரும் ‘பாட்டிச் சொல்லைத் தட்டாத’ பிள்ளைகள்.
அது என்ன “நாகூர் ரூமி” என்ற புனைப்பெயர்? எனக்கு குழப்பம் என்றால் குழப்பம், அப்படியொரு குழப்பம். ரூமி என்றால் ரோம நகரத்தைச் சேர்ந்தவர் என்று பொருள். ஜலாலுத்தீன் என்ற பெயரில் ஒரு மகா கவிஞர் இருந்தார். அவர் ரோம் நகரத்திலிருந்து வந்ததால் அவருக்கு ஜலாலுத்தீன் ரூமி என்று பெயர் வந்ததாக எங்கோ படித்த ஞாபகம்.
அப்படியென்றால் இவர் “நாகூரைச் சேர்ந்த ரோம நகரத்துக்காரர்” என்றல்லவா அர்த்தம் ஆகிறது. அப்ப இவர் ரோம நகரத்துக்காரரா அல்லது நாகூர்க்காரரா? – இது இன்னும் எனக்குத் தீராத குழப்பம்.
ஜலாலுத்தீன் ரூமியின் நினைவாக புனைப்பெயர் சூட்டிக் கொண்டாரா அல்லது ரூமிலேயே தங்கி உட்கார்ந்துக் கொண்டு நூல்கள் புனைந்துக் கொண்டிருப்பதால் ரூமி என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டாரா என்று விளங்கவில்லை.
எது எப்படியோ, இவர் ரூமில் உட்கார்ந்து எழுதும் நூல்கள் இன்று உலகம் முழுவதும் படிக்கப் படுகிறது, விமர்சிக்கப்படுகிறது என்பதே உண்மை. ‘பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்’ என்று சொல்வதைப்போல இவரை என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதின் மூலம் எழுத்துலகம் என்னையும் ஓர் எழுத்தாளன் என்று ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இவருக்கு முஹம்மது ரபி என்று பெற்றோர்கள் பெயர் வைத்ததற்கு காரணம் இவரும் இந்திப் பாடகர் முஹம்மது ரபியைப் போன்று பெரிய பாடகர் ஆக வேண்டும் என்ற ஆசையினாலும் இருக்கக் கூடும். ஆனால் இவரது குரல்வளம் என்னமோ லதா மங்கேஷ்கர் போலவே இருக்கிறது.
சென்ற முறை தாயகம் சென்றபோது இவரிடம் நான் தொலைபேசியில் மணிக்கணக்கில் உரையாடி மகிழ, இவரால் என் சுமூகமான இல்லற வாழ்வில் ஒரு பெரிய குழப்பம் உண்டானதுதான் மிச்சம். இவரது குரல் ஒரு பெண்குரல் போல் இருப்பதினாலும், இவர் தொலைபேசியில் சற்று உரக்க பேசினதினாலும், அது என் மனைவியின் காதில் விழ “ஒரு பொம்பளைப் புள்ளைக்கூட மணிக்கணக்கா அப்படியென்ன சிரிச்சு சிரிச்சு பேச்சு வேண்டிக் கிடக்கு?” என்று பொரிந்து தள்ளி விட்டாள் என் இல்லத்தரசி. உண்மையை அவளுக்குப் புரிய வைப்பதற்குள் எனக்கு தாவு கழன்று விட்டது. பத்தினி விரதனான நான் அன்று அரை பட்டினி.
இந்தக் கீச்சுக் குரலை வைத்துக் கொண்டு அவர் நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் எஸ்.எம்.ஏ.காதரிடம் கர்னாடகச் சங்கீதம் கற்று ‘வர்ணம்’ வரை வந்ததை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இவர் ‘நல்லி விருது’ வாங்கிய நாட்களை விட ‘பள்ளி விருது’ வாங்கிய நாட்களில் சுவராஸ்யம் அதிகம். பள்ளி நாட்களில் ‘பேஷாக் மாந்திர்” என்ற சன்ச்சல் பாடிய பாட்டைப் பாடி பரிசும் வாங்கியிருக்கிறார். பொருத்தமான கீச்சுக்குரல் பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் இவர் என்று நினைத்துக் கொள்வேன். அந்த உச்ச ஸ்தாயி பாடலில் சன்ச்சலுடைய குரலும் பாகிஸ்தான் பெண் பாடகிகள் குரல் போல்தான் ஒலிக்கும்.
யார் செய்த புண்ணியமோ, நல்ல வேளை இவர் இஸ்லாமியப் பாடகராக ஆகவில்லை. ஆகியிருந்தால் இஸ்லாமிய இசையுலகிற்கு இன்னொரு K.ராணி கிடைத்திருப்பார்.
ஹரிஹரனை ரபிதான் எனக்கு அறிமுகப் படுத்தினார். அப்போது பாடகர் ஹரிஹரன் திரைப்படத்துக்குள் அடியெடுத்து வைக்காத நேரம். 1980-களின் தொடக்கத்தில் ஒரு கேசட்டை என்னிடம் கொடுத்து தமிழ்க்காரர் ஒருவர் எவ்வளவு இனிமையாக, குலாம் அலிக்கு நிகராக உருது கஸல்கள் பாடுகிறார் கேளுங்கள் என்று சிபாரிசு செய்தார். (மாண்டலின் வாத்தியத்தைக் ஓரளவுக் கற்றுக்கொண்டு நானும் இசை மேதையாக வரவேண்டும் என்று கனவுக் கண்டுக் கொண்டிருந்த காலமது)
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நாங்கள் ஒன்றாக பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவரும் நானும் மன்னார்புரம் “Birds Lodge’ மாணவர் விடுதியில் தங்கியிருந்தோம். தற்போது அவரது வலைப்பூவிற்கு “பறவையின் தடங்கள்” என்று பெயர் சூட்டியிருப்பது இதனால்தானோ என்னவோ.
ஆங்கில இலக்கியம் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் நானும் அவரும் இணைந்துதான் (சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருந்த) ஆங்கிலப் பேராசிரியர் யூசுப் சாரிடம் ட்யூஷன் படிக்கப் போவோம். எங்களிருவருக்கிடேயே நடக்கும் உரையாடல்களில் பெரும்பாலும் ஷேக்ஸ்பியர், மில்டன், கீட்ஸ், பைரன், வோர்ட்ஸ்வொர்த், ஷெல்லி இவர்கள்தான் வந்து தலைகாட்டி விட்டு போவார்கள். கம்பன், பாரதி பெரும்பாலும் வரமாட்டார்கள்.
(ஷேக்ஸ்பியரை – சேகப்பிரியர் என்றும், டென்னிஸனை – தேனிசையான் என்றும், வோர்ட்ஸ்வொர்த்தை – வார்த்தைப் பிரியன் என்றும், பைரனை – பைரவன் என்றும் என்று தமிழ்ப்படுத்தி அழைக்கும் தமிழார்வலர்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை)
என்னுடைய மற்ற நண்பர்கள் ரபியை ஒரு விநோதப் பிறவி போன்றே பார்ப்பார்கள். காரணம் அவர் அறிவுஜீவிகளின் லிஸ்டில் சேர்க்கப்படிருந்ததால். அறிவுஜீவி எனப்படும் ஜீவராசிகள் அதிகமாக பேச மாட்டார்கள். தனியொரு உலகத்தில் சஞ்சரிப்பார்கள். ஆர்ட் பிலிம்தான் பார்ப்பார்கள். (புரியுதோ இல்லையோ) இந்தி கஸல் கேட்பார்கள். புதுக் கவிதை எழுதுவார்கள். லா.ச.ரா. போன்றவர்களின் எழுத்துக்களை வாதிப்பார்கள். கையில் ஹெரால்ட் ராபின்சன் புத்தகம் வைத்திருப்பார்கள். ஜோல்னா பை ஒன்று தோளில் தொங்கும். செம்மறி ஆடுபோல் குஞ்சு தாடி இருக்கும். (ரபிக்கு முகத்தில் முடி வளர்த்தி குறைவு என்பதால் தாடி மிஸ்ஸிங்)
நாகூரில் ரபி, ஆபிதீன், அறிவழகன் (சாரு நிவேதிதா) நண்பர்களாக ஒன்றாகச் சுற்றுவார்கள்.
இவர் ஒரு பன்முகப் படைப்பாளி. பராக் ஒபாமா மட்டுமின்றி பர்வேஸ் முஷர்ரப் பற்றியும் எழுதுகிறார். கர்ம வீரரைப் பற்றியும் எழுதுகிறார் கம்பனையும் ஆராய்கிறார். தலாய் லாமாவைப் பற்றி எழுதுங்கள் என்றாலும் எழுதுவார்.
அது மட்டுமா? ஆங்கிலப்பாடம் நடத்துகிறார். புதுக்கவிதை எழுதுகிறார். இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்கிறார். தன்முனைப்பு நூல்கள் எழுதுகிறார். தலைவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதுகிறார். போதாத குறைக்கு பாபா ராம்தேவ் ஆக மாறி “ஆல்ஃபா தியானம்” வேறு நடத்துகிறார். (ஷில்பா ஷெட்டி யோகா கற்றுக் கொடுக்கும்போது இவர் கற்றுக் கொடுத்தால் என்ன?)
நான் ஜமாலில் பட்டப்படிப்பு முடித்த காலத்தில் மற்ற நண்பர்களிடம் ஆட்டோ கிராப் வாங்கியதுபோல் இவரிடமும் வாங்கினேன். பிற நண்பர்கள் எல்லோரும் யாவும். “This page is Blue. Our friendship is True”, “This Page is Yellow. You are a good fellow”, “This page is Pink. Truly I will think” என்று ரைம்ஸ் எழுதிய நேரத்தில், ரபி மட்டும்
உன் நினைவுகள்
என மனதில்
போட்டோகிராப்பாய் பதிந்திருக்க
நீ ஏன் உன்
ஆட்டோகிராப்பை நீட்டுகிறாய்
என்று எழுதி இருந்தார். அப்போதே எனக்குத் தெரியும், இவர் ஒரு காலத்தில் வாசகர்கள் ஆட்டோகிராப் வாங்குமளவுக்கு பெரிய எழுத்தாளர் ஆவார் என்று. அது உண்மையாகி விட்டது.