கட்டுரை ஆசிரியர் : நாகூர் ரூமி
இசை இறைவனுக்கு எதிரியாக இருக்க முடியுமா! தன்னுடைய பிரதிநிதியாக, தன்னைப்போலவே மனிதனைப் படைத்ததாகச் சொல்லும் இறைவன் இசையுணர்வு அற்றவனாக இருப்பான் என்ற கற்பனை சரிதானா?! ஆனால் நடைமுறையில் கண்டுகொள்ளப்படாத, பிடிவாதமான விளக்கங்கள், ஆமாம் அப்படித்தான் என்று சொல்லுகின்றன!
இசையை ரசிப்பதன் மூலமோ உருவாக்குவதன் மூலமோ அதில் ஈடுபாடு காட்டுவது ஏற்புடையதல்ல என்றொரு கருத்து இஸ்லாமிய உலகில் இருக்கத்தான் செய்கிறது. இறைவனிடமிருந்து மனிதனை இசை தூரமாக்கிவிடுகிறது என்றும் இறைச்சிந்தனையை அது மறக்கடிக்கவைத்துவிடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இசையில் ஒருவன் தன்னையே மறக்க நேரிடுவதால் அது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வாதிடப்படுகிறது. (இந்த காரணத்துக்காகத்தான் நல்ல இசையை ஒருவன் கேட்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்)! அது ஹராமானது (அனுமதிக்கப்படாதது) என்று அழுத்தமாகச் சொல்பவர்களும் உண்டு. இதற்காக திருக்குர்ஆனிலிருந்தும் நபிமொழியாகிய ஹதீதுகளிலிருந்தும் ஆதாரங்கள் காட்டப்படுகின்றன.
குழந்தையாய், தந்தையாய், தாயாய், சகோதரனாய், சகோதரியாய், கணவனாய், மனைவியாய், மாணவனாய், ஆசிரியராய் — இப்படி ஆயிரமாயிரம் உறவு நிலைகளில் பரிணமிக்கின்ற மனிதன், தான் வாழும் கணந்தோறும் இறைவனை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து இப்படிப்பட்ட விளக்கத்தில் உட்குறிப்பாக உள்ளது. அதற்குத் தடையாக இருக்கும் இசையானது ‘சாத்தானின் குரல்’ என வர்ணிக்கப்படுகிறது. சாத்தானின் குரல்தான் எவ்வளவு வசீகரமான கந்தர்வக்குரலாக உள்ளது! இறைவனின் படைப்பின் அற்புதம்தான் என்னே!
எல்லா மதங்களும் — இஸ்லாம் உட்பட — இறைவனை வணங்குவதற்கும் நினைப்பதற்கும் நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி வைத்துள்ளன. மற்ற நேரங்களில் இறைவனை மறந்துவிடவேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல. பரீட்சையில் தேறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண் நாற்பது என்று — நம்ம ஊர்ப்பக்கம் — இருப்பது மாதிரி இது. நீங்கள் நூற்றுக்கு நூறு வாங்கலாம். அது உங்கள் இஷ்டம். உங்கள் திறமை. உங்கள் உழைப்பு.
ஆனால் பொதுவாக சாதாரணமானவர்களுக்காகத்தான் குறைந்தபட்சம் என்று எல்லை நிர்ணயிக்கப்படுகிறது. என்னை வணங்குவதற்காகத்தான் உன்னைப் படைத்தேன் என்று இறைவன் திருக்குர்ஆனில் மனிதப்படைப்பின் நோக்கத்தைப் பற்றிக் கூறினாலும், ஐந்து வேளை தொழுகை என்பது உண்மையான இறைவணக்கத்திற்கான ஒரு குறைந்தபட்ச அடிப்படை பயிற்சிக் களம்தான். ஜஸ்ட் பாஸ¤க்காகத்தான். இந்த கருத்தை இமாம் கஸ்ஸாலி போன்ற மேதைகள் அழகாக விளக்கிக்கூறியுள்ளார்கள்.
இசையைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதற்குப் பிறகு வரலாம். ஆனால் இசையை ரசிக்காத, சினிமாப்பாடல்களைக் கேட்காத, ஒரு ‘காதல் பிசாசு’க்கோ ‘மன்மதராசா’வுக்கோ தாளம் போடாத முஸ்லிம் விரல்கள் உண்டா என்றால் இந்த உலகில் அப்படிப்பட்ட விரல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதுதான் நிதர்சனமாக உள்ளது!
இசைக்கருவிகள் இல்லாத இசையை அல்லது வாய்ப்பாட்டை மட்டும் — ரெண்டோன் ரெண்டு ரெண்டிரண்டு நாலை அல்ல — அனுமதிக்கும் ஒரு குழு உள்ளது. நாகூர் ஹனி·பா போன்றோரின் பாடல்களை ரசிக்கும் இன்னொரு குழு உள்ளது. நாகூர் ஹனி·பாவின் பாடல்கள் என்றால் ஹார்மோனியம், தபலா, சிந்தசைஸர் போன்ற கருவிகளோடு உள்ளதுதான் என்பது சொல்லத் தேவையில்லை.
இசையையும் இறைவனையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாத, இசையை இசையாக மட்டும் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய குழுவும் உள்ளது. இதுதான் பெரும்பான்மை. இது எல்லாப்பாடல்களையும் ரசிக்கும். வெறும் இசைக்கருவிகளின் நாதத்திலிருந்து, கர்னாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, கஜல், கவ்வாலி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பீதோவன், மைக்கேல் ஜாக்ஸன், நுஸ்ரத் ·பதே அலிகான், மிஸ்டிக் இன்டியா என எல்லாரையும் எல்லாவற்றையும். இது நடைமுறை. இது நிற்க.
இஸ்லாம் அனுமதிக்காத ஒரு விஷயம், முஸ்லிம்களால் ரசிக்கப்பட்டுக் கொண்டும் உருவாக்கப்பட்டுக்கொண்டும் வந்தாலும் அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்வதற்கு அது சரியான காரணமாகிவிடாது என்ற வாதம் — அல்லது பிடிவாதம் — இசையையும் இஸ்லாத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாததால் வருகிறது என்று நான் நினைக்கிறேன்.
இசையில் தன்னை மறக்கும் நிலையானது இறைச்சிந்தனைக்கு அன்னியமானது என்ற பிரதான குற்றச்சாட்டு ரொம்ப மேலோட்டமானதாக உள்ளது. ஒரு மனிதன் தன்னை மறந்து ஒரு காரியத்தில் ஈடுபடும்போதுதான் அதில் வெற்றி வருகிறது. குயவன் பானையைச் செய்யும்போதே அதை எவ்வளவுக்கு விற்கலாம் என்று நினைத்துக்கொண்டே செய்தால் பானை கோணிக்கொள்ளும். பரிட்சை எழுதும் மாணவன் எழுதும்போதே பாஸ் ஆவோமா மாட்டோமா என்று யோசித்துக்கொண்டே எழுதினால் என்னாகும்?!
எனவே தன்னை மறத்தல் என்பதை வேறு வார்த்தைகளில் சொன்னால் ஒரு காரியத்தில் முழுமையாக ஈடுபடுதல் என்று சொல்லலாம். மனைவியோடு கூடும்போது கணவர்கள் தங்களை மறக்கிறார்கள். மனைவிகளும்தான். மறப்பதற்காக நாம் அந்த நேரத்தில் எந்தவித முயற்சியும் எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. அது தானாகவே நிகழும். அது அப்படித்தான். தன்னை மறத்தல் என்பது வெற்றியின் ரகசியங்களில் ஒன்றாகும்.
பல முஸ்லிம் வீரர்கள் உடம்பில் தைத்த அம்புகளை, தாம் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருக்கும்போது உருவிக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். காரணம், தொழுகையில் தன்னை, தன் உடலை மறந்து ஈடுபட்டிருக்கும்போது அம்பை உருவும்போது படும் வேதனையை உணரவே மாட்டார்கள் என்பதால்தான். இது இஸ்லாமிய வரலாறு காட்டும் உண்மையாகும். ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ அவர்களுக்கு இவ்வாறு நடந்துள்ளது.
எனவே தன்னை மறப்பதனால் இறைச்சிந்தனை தடைபடுகிறது என்பது சரியான வாதமல்ல. இந்திய இசைச்சூழலைப் பொறுத்த அளவிலும் இந்த வாதம் பொருந்தாது போய்விடுகிறது. கர்னாடக சங்கீதத்தின் வரலாற்றைப் பார்த்தால் தியாகராஜரின் சாகித்யங்கள் அனைத்தும் இறைத்துதியாக, கடவுள்களைப் புகழ்ந்து பாடுவதாகவே உள்ளன. “ஸ்ரீ கண நாதா, சிந்து ராகவர்ணா”வில்தானே கர்னாடக சங்கீத அப்பியாசமே தொடங்குகிறது! இசையை பக்தி என்ற தளத்தில் மட்டுமே கர்னாடக சங்கீதம் இயக்கி வருவதால், தூய இசையை பக்தியிலிருந்து விடுதலை செய்து, காதல் — தூய காதல்தான் — போன்ற உணர்ச்சிகளையும் பிரதிபலிக்குமாறு கருவமைத்து பாடல்கள் இயற்றி, ‘புரட்சி’ செய்ய வேண்டும் என்று இன்றைய வித்வான்கள் சிலர் அங்கலாய்க்கின்ற அளவுக்கு இந்திய இசையிலிருந்து இறைச்சிந்தனை பிரிக்க முடியாததாக உள்ளது.
இந்த இடத்தில் சூ·பிகளுடைய இசையையும் சேர்த்துக்கொள்ளலாம், அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இல்லாவிட்டாலும். இறைத்தியானத்திற்கு ஒரு சிறந்த கருவியாக மௌலான ஜலாலுத்தீன் ரூமி இசையையும் நடனத்தையும்கூட பயன்படுத்தினார். “இறைவனை நேசிப்பவர்களின் உணவுதான் இசை” என்று அவர் சொன்னார். ரூமியின் பாதையைப் பின்பற்றிய சிஷ்யர்கள் ‘the whirling dervishes’ என்றே குறிப்பிடப்பட்டார்கள்.
பொதுவாகவே சூ·பிகள் என்று அறியப்பட்ட இஸ்லாமிய ஞானிகள் பெரும்பாலோர் ‘ஸமா’ என்னும் இசையை ‘திக்ர்’ என்னும் இறைத்துதி செய்யும் ஒரு ஊடகமாக வைத்திருந்தனர். ‘ஸமா’ என்ற சொல்லுக்கு ‘கேட்டல்’ என்றுதான் பொருள். இசை கேட்பதென்பது அதன் ஒலிகளை மட்டும் கேட்பதல்ல. அதன் ஆன்மீக அர்த்தங்களை உணர்ந்துகொள்வது. அதுதான் உண்மையான கேட்டலாகும் என்று சூ·பிகள் கருதினர். இமாம் கஸ்ஸாலி, இப்னு அரபி போன்ற மாபெரும் இஸ்லாமிய அறிஞர்களும் இந்த கருத்தை வலுப்படுத்தும் விதமாகவே தமது நூல்களில் எழுதியுள்ளனர்.
இப்படி இசையைக் கேட்பதன் மூலம் இறைவனிடம் நெருக்கம் ஏற்படுகிறது என்று எகிப்தின் பிரபல சூ·பி துன்னூன் மிஸ்ரி கூறுகிறார். சங்கீதம்தான் என் இறைவன் என்பதாக ஹிந்துஸ்தானி பாடகி பர்வீன் சுல்தானா சொன்னதும் இங்கு நினைவுக்கு வருகிறது. இன்றும்கூட நாகூர் தர்கா உருஸின்போதும், அஜ்மீர் தர்கா உருஸின்போதும் கவ்வாலி பாடகர்கள்கூடி பக்தியையும் இறைப்புகழையும் இசையுடன்கூடிய பாடல்களில் வெளிப்படுத்துவது தர்காக்களின் பிரிக்கமுடியாத ஒரு அம்சமாகவே விளங்குகிறது.
ஒரு ஜேசுதாஸ் அல்லது லதாவின் குரல், ஒரு சந்தூர் அல்லது வீணையிலிருந்து வரும் நாதம் ஒருவனை இறைவனிடமிருந்து தூரப்படுத்த முடியுமானால், அவனை வேறு எதுதான் தூரப்படுத்தாது? திரைப்படம் தூரப்படுத்தும். தொலைக்காட்சி தூரப்படுத்தும். கம்ப்யூட்டர் தூரப்படுத்தும். கல்லூரி தூரப்படுத்தும். கஷ்டம் தூரப்படுத்தும். சந்தோஷம் தூரப்படுத்தும். உட்கார்ந்தால் தூரமாவான். படுத்தால், தூங்கினால், விழித்தால் என்று வாழ்வின் எல்லா நிலைகளையும் கணங்களையும் இறைவனிடமிருந்து தூரமாகும் வாய்ப்பாகவே அவன் பயன்படுத்திக் கொண்டிருப்பான்.
இறைவனை நெருங்கக் கூடிய வாய்ப்புகள் என்று கருதப்படும் தொழுகை, நோன்பு ஆகியவற்றைச் செய்யும்போதும் அவன் இறைவனிடமிருந்து ரொம்ப தூரம் விலகிப்போய்விடுவான். தொழுவதற்காக அவன் தலை தரையில் படும்போது வாசலில் கழட்டிப்போட்ட புது பாட்டா க்வாடிஸ் செருப்பு திருட்டு போய்விடுமோ என்று நினைத்துக் கொண்டிருப்பான். நோன்பு பிடித்திருக்கும்போது, நோன்பு திறக்க மெதுவடை, மக்ரூனி, கஞ்சி இவற்றோடு வேறு என்னென்ன அய்ட்டங்களை தயார் செய்யச் சொல்லலாம் என்று சிந்தித்துக் கொண்டிருப்பான். மனசாட்சி உள்ளவர்கள் நான் சொல்வதை ஒத்துக்கொள்வர்.
இதற்கு நேர்மாறாக, சரியான இறைச்சிந்தனை உள்ளவர், எந்த காரியம் செய்தாலும் அதில் இறைச்சிந்தனை இருக்கத்தான் செய்யும். ஒரு பல்வலிக்காரன், பேசும்போதும், சாப்பிடும்போதும், சும்மா இருக்கும்போதும் பல் வலியை உணர்ந்து கொண்டே இருப்பதுபோல. ஒரு கர்ப்பிணிப்பெண் நடக்கும்போதும், குனியும்போதும் உட்காரும் போதும் தன்னுள்ளே ஒரு உயிர் இருக்கிறது என்பதை மறக்க முடியாததைப் போல.
இறைவனிடமிருந்து மனிதனை எதாவது பிரிக்க முடியுமா? இறைவனைத் தவிர வேறு என்னதான் இருக்கிறது? இருப்பது யாவும் அவன்தானே? எல்லாவற்றிலும் இறைவனைப் பார்ப்பதுதானே உண்மையான தவ்ஹீது (இருமையற்ற ஏகத்துவம்)? நீங்கள் ஒரு வாளியை தண்ணீர் அள்ளுவதற்காக கிணற்றினுள் விடுவீர்களேயானால் அது கீழே போய் இறைவன்மீதுதான் இடிக்கிறது என்று ஒரு ஹதீது உள்ளது! இதற்கு என்ன அர்த்தம்? சிந்திக்க வேண்டாமா?
இசை சம்மந்தப்பட்ட இஸ்லாமிய வரலாற்றைப் பார்க்கும்போதும் இந்த உண்மை நமக்கு விளங்குகிறது. உலக அளவில் இஸ்லாம் பரவத்தொடங்கிய காலத்திலிருந்தே இசைபற்றி பலவிதமான ஆழ்ந்த ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இசை தொடர்பான கட்டுரைகளும், கோட்பாடுகளும், தத்துவங்களும், புதிய புதிய இசைக்கருவிகளும், இசைக் கலைஞர்களும் உருவாகியுள்ளனர். ஆனால் எதனாலும் இஸ்லாம் கெட்டுவிடவில்லை. மாறாக இஸ்லாமிய உணர்வு அதிகமாவதற்கும் தீவிரமடைவதற்கும் அவர்கள் உதவியுள்ளனர்.
ஒன்பதில் தொடங்கி பதிமூன்றாம் நூற்றாண்டுவரை இசைபற்றிய கோட்பாடுகளும் கட்டுரைகளும் இயற்றப்பட்டன. மேற்கில் அறிஞர்கள் இசைபற்றிய கோட்பாடுகளை வரைவதற்கு முன்பே அராபிய இசை பற்றிய ஆராய்ச்சிகளும் கோட்பாடுகளும் மிகுந்த வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தன. அப்பாஸிய ஆட்சியாளர்கள் (கி.பி. 750-909) இசையில் மிகவும் நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள். இசை என்று சொல்லும்போது வாத்தியக் கருவிகளுடன் கூடிய இசையும்தான். ஆரம்பகாலத்தில் அடிமைப் பெண்களே பாடகிகளாக இருந்தார்கள். பின்னர் அரச குடும்பத்திலிருந்தே படித்த, பாண்டித்யம் பெற்ற அறிஞர்கள் இசை விற்பன்னர்களாக ஆனார்கள்.
இப்னுல் முனஜ்ஜிம் என்பவர் இசையை எட்டுவகையாகப் பிரித்தார். ஒவ்வொரு வகைக்கும் கையின் ஒவ்வொரு விரலின் பெயர் வைக்கப்பட்டது. ஒரு நல்ல பாடகன் என்னென்னெ குணங்கள் கொண்டவனாக இருக்கவேண்டும் என்று இப்னு சுரை என்பவர் வரையறுத்து வைத்தார்.
அல் கிந்தி (800-873) என்ற தத்துவவாதி, சப்தம், தாளம், சாகித்யம் ஆகியவை பற்றிய ஏழு புத்தகங்கள் எழுதினார். ஊத் (lute) என்ற (கிதார் மாதிரியான) இசைக்கருவியின் நான்கு கம்பிகளும் எப்படி நான்கு வகை குணங்களையும், நிலம், நீர், காற்று, நெருப்பு போன்ற பூதங்களையும், நான்கு பருவங்களையும் குறித்தது என்று விளக்கினார். அதில் ஐந்தாவது கம்பியையும் அறிமுகப்படுத்தினார். எல். ஷங்கர் வயலினில் செய்தமாதிரி.
அபூ அல் நஸ்ரல் ·பராபி என்ற பத்தாம் நூற்றாண்டு அறிஞரின் இசைபற்றிய நூல் ஒலியை விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்தது. அதோடு இரண்டு வகையான தம்பூர் என்ற — தம்பூரா அல்ல — இசைக்கருவிகளைப் பற்றியும் விவரித்தது. ஊத் வாசிக்கும்போது கேட்டுக்கொண்டிருப்பவர்களை தனது இஷ்டப்படி சிரிக்கவோ, அழவோ, தூங்கவோ வைப்பாராம் அல்·பராபி.
மேற்கில் ஆவெர்ரோஸ் என்று அறியப்பட்ட 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்னு ருஷ்த் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி, திருக்குர்ஆன், ஹதீது, இஸ்லாமிய சட்டங்கள், தத்துவம், தர்க்கம், மருத்துவம், வானசாஸ்திரம், கணிதம், உயிரியல் ஆகியவற்றோடு இசையிலும் பெரும் வல்லுணராக இருந்தார். அவர் ஸ்பெயினின் கார்டோபா நகர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவிசென்னா என்று மேற்கில் அறியப்பட்ட பிரபல அறிஞர் இப்னு சீனாவின் எழுத்திலும் இசைபற்றிய விபரமான குறிப்புகள் உள்ளன. கணிதம் பற்றிய பகுதியில் இசைபற்றி விபரமாக அவர் குறிப்பிட்டார். இசைக்கும், கணிதம் வானசாஸ்திரம் ஆகியவற்றுக்கும் இடையே உள்ள உறவை தனது கலைக்களஞ்சியத்தில் அவர் விளக்கினார்.
ஸ்பெயினில் ஸர்யப் போன்ற புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் இருந்தனர். ·பரீத் அல் அத்ரஷ் மற்றும் அவருடைய சகோதரி அமல் ஆகியோர் பிரசித்தி பெற்ற அரபு இசைக்கலைஞர்களாக இருந்தனர்.
பந்தீர், புஸ¥க், தர்பூகா, கிம்பி, கமஞ்சா, நே (புல்லாங்குழல் மாதிரி), கனூன் (சந்தூர் மாதிரி), ரபப் (வயலின் மாதிரி) — இதெல்லாம் அராபிய இசைக்கருவிகள் சிலவற்றின் பெயர்கள்.
உம்மு குல்ஸ¤ம் என்று ஒரு எகிப்தியப் பாடகி. சிறுவயதிலேயே திருக்குர்ஆனையும் அரபி மொழியையும் நன்கு கற்றறிந்தவள். மாதத்தின் முதல் வியாழக்கிழமைகளில் கெய்ரோ நகரில் நடக்கும் அவளுடைய கச்சேரியைக் கேட்க மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து ரசிகர்கள் வந்து குவிவார்கள். அவளது பாடல்களும் குரலும் அராபிய ஆன்மாவைத் தொட்டது என்று விமர்சகர்கள் புகழ்ந்தனர். எகிப்தின் அதிபர் நாஸர் அவளோடு நெருக்கமான நட்பு வைத்துக்கொண்டார். அவளுடைய பாடல்கள் பெரும்பாலும் அரபுகளின் வாழ்வை எடுத்துச் சொல்வதாக இருந்தன.
திருமணங்களிலும் விழாக்காலங்களிலும் திருக்குர்ஆன் வசனங்களையும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் கேட்பவர் உருகும் குரலில் அவள் பாடினாள். எகிப்தில் இரண்டு விஷயங்கள் எப்போதுமே மாறுவதில்லை : ஒன்று பிரமிடு, இன்னொன்று உம்மு குல்ஸ¤மின் குரல் என்று சொல்லுமளவுக்கு அவள் புகழ் பெற்றிருந்தாள். ஒரு ஆண்டுக்கு மூன்று லட்சம் உம்மு குல்ஸ¤ம் கேஸட்டுகள் விற்பனையானதாம்! 1975ல் அவள் இறந்தபோது அவளுடைய அடக்க ஊர்வலத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை எகிப்தின் வரலாற்றிலேயே மிக அதிகமானது என்கிறார்கள்.
முகலாயர்கள் காலத்தில் புகழ் பெற்றிருந்த மார்க்கக் கல்வி நிறுவனமான ‘தர்ஸெ நிஸாமி’யில் திருக்குர்ஆன், ஹதீஸ், தத்துவம், தர்க்கம், கணிதம் ஆகியவற்றோடு இசையும் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அல்லாமா ஷிப்லி போன்றவர்கள் அங்கு பயின்றவர்களே. புகழ்பெற்ற இறைநேசரும் மார்க்க அறிஞருமான டெல்லியின் ஷாஹ் வலியுல்லாஹ்வின் பள்ளியிலும் தர்ஸெ நிஸாமியைப் பின்பற்றி இசை பாடமாக வைக்கப்பட்டிருந்ததாம். அமீர்குஸ்ரு போன்ற இந்தியாவின் காவிய கவிஞர்களின் வாழ்வு இசையாலும் பாடலாலும் சூழப்பட்டிருந்தது.
இசை ஒரு மனித மனத்தைக் கெடுத்துவிடுகிறதா என்ற கேள்விக்கு விடை காணுமுன் இசைபற்றிய சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். பெரும்பாலோருக்கு இசையின் அர்த்தம் சினிமாப் பாடல்கள்தான். சினிமாவில் வரும் பாடலோடு கூடிய இசை, இசையின் சுத்தமான வடிவமல்ல. சினிமா இசை காட்சிகளின் பின்னணியில் உருவாவது. விரகதாபம் தொனிக்கும் பாடலை விரும்பும் ஒருவனுக்கு மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்த, அப்பாடல் வரும் படத்தின் அந்தக்காட்சி கற்பனையில் விரிகிறது. கதாநாயகனாகத் தன்னை கற்பனை செய்துகொள்ள ஏதுவாகிறது. படம் பார்க்காதவர்களுக்கு அப்பாடலின் விரசமான வரிகள் துணைபோகின்றன. எனவே இசை சம்மந்தப்படாத காரணங்களுக்காக — காட்சிக்காக, சிம்ரனுக்காக, மும்தாஜுக்காக — இசையை ரசிக்கின்ற மனப்போக்கை உருவாக்குகின்ற தீமையையும் சினிமா தவிர்க்கமுடியாமல் செய்கிறது.
ஆனால் இசைக்கு மொழி எப்போதுமே ஒரு தடையல்ல. இசைக்கு மொழி கிடையாது என்றே கூறிவிடலாம். அதன் செய்தி வார்த்தைகளை மீறியது. பாடல்வரிகள் புரியவேண்டும் என்பது நோக்கம் என்றால் அது இசை சாராத நோக்கம். அதற்கு, புரிகிற மொழியில் பாடலை எழுதி வைத்துக்கொள்ளலாம். கேட்கவேண்டியதில்லை. ‘பாடறியேன் படிப்பறியேன்’ பாடலை எவ்வளவு அனுபவித்து ரசிக்க முடியுமோ அதே அளவு, ஏன் இன்னும் அதிக அளவு, ‘மரிமரி நின்னே’யை நாம் ரசிக்க முடியும்.
உர்து தெரியாத நான் கஜல் எனப்படும் உருதுப்பாடல்களை மிகவும் விரும்பி கேட்பேன். முதல்முறையாக சித்ரா சிங்கின் “ராத் பீ நீந்த் பீ” என்ற பாடலைக் கேட்டபிறகு என் ‘நீந்த்’ (தூக்கம்) போய்விட்டது. அந்தப்பாடல் எங்கே கிடைக்கும் என்று தேடித்தேடி அலைந்து பிடித்தேன். அதில் ஆரம்பித்தது கஜலுடனான எனது உறவு.
ஜிந்தகீ மெ தொ சபீ ப்யார் கியா கர்தே ஹேன்
மேதோ மர் கர் பி மெரி ஜானு துஜே ச்சாஹ¥ங்கா
(வாழும்போதுதான் அனைவரும் காதல் செய்வர்
நான் இறந்துவிட்டாலும் என் உயிர் உன்னை நேசிக்கும் — தோராயமான தமிழாக்கம் எனது)
என்று மெஹ்தி ஹஸன் பாடுவது எனக்கும் இசைக்குமான உறவு. (இந்தப் பாடல்களின் அர்த்தங்களெல்லாம் பின்னாளில் நான் தெரிந்துகொண்டது. பாடலை ரசிப்பதற்கு இந்த அர்த்தங்கள் எனக்கு எப்போதுமே தேவையாயிருந்ததில்லை).
என் தாயாக இருந்த என் பாட்டியார் இறந்தபோது நான் அழுததைவிட அதிகமாக, குலாம்அலியின் “ஜின்கெ ஹோண்டோன்” என்ற பாடலைக் கேட்டு அழுதிருக்கிறேன். என் பாட்டியாரைவிட இசையை நான் அதிகம் நேசித்தேன் என்றோ, குலாம்அலியின் அந்த பாடல்தான் உலகின் உன்னதமான இசையென்றோ இதற்கு அர்த்தமல்ல. என் பாட்டியார் வாழ்ந்த காலத்தில் அவர்கள் இறந்துவிட்டதாக கற்பனை செய்து பல தடவை தேம்பித்தேம்பி அழுதிருக்கிறேன். (சுசீலாவின் கர்ப்பம் கலைந்துவிட்டதாக ஒரு கனவு. இந்த மனசை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று ஒரு கவிதையில் கேட்கிறார் நகுலன்! என் மனமும் அப்படியே! என்ன செய்வது?!)
அடிக்கடி ஒத்திகை பார்த்த நாடகம் அரங்கேறியபோது உணர்ச்சிகள் அடங்கிப்போனதில் ஆச்சரியமில்லை. ஆனால் குலாம்அலியின் கஜலில் ஒரு வார்த்தைகூட எனக்குப் புரியாவிட்டாலும், வார்த்தைகளைமீறி “அழுதுவிடு” என்ற செய்தியை அது என் மூளையில் அழுந்தப்பதித்து, மூளையின் கட்டளைக்கு உடனே என் விழிகளைப் பணிய வைத்தது. அதை இசையின் சக்தி என்று கொள்ளலாம்.
சப்தமென்பது ஒரு சக்தி. வெயிலைப்போல. வெயிலை ஒரு லென்ஸில் குவிக்கும்போது அதன் கீழே உள்ள இலையோ தாளோ பஞ்சோ பற்றிக்கொள்கிறது. பள்ளிக்கூட நாட்களின் பரிசோதனைதான் என்றாலும் எவ்வளவு உண்மை! இசையும் இதைப்போன்றதுதான். சப்தங்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குட்பட்ட ‘பாவ’த்திலோ அல்லது ஒரு கருத்தை நோக்கியோ குவிக்கும்போது ஏற்படும் விளைவு சக்தி வாய்ந்தது. (ருத்ரவீணை சீரியல்கூட இதை அருமையாகச் சொல்கிறது).
ஹஸ்ரத் மியான் தான்சேன் தீபக் ராகம் பாடியபோது தீ பற்றிக்கொண்டதையும், பாலமுரளி கிருஷ்ணா நீலாம்பரி பாடி கச்சேரி நடக்கும்போது அழுதுகொண்டிருந்த குழந்தையை தூங்கவைத்ததையும் வரலாறு மறந்துவிடாது. சப்தம் சக்தி என்பதால்தான் இறைவனை நாதவடிவானவனாகக் கூறுகிறார்கள். பாட்டும் நானே, பாவமும் நானே என்று ‘ஆலவாயன்’ பாடுவதை “திருவிளையாடல்” படத்தில் நாம் கேட்க, பார்க்கவில்லையா என்ன?! புனித பைபிள்கூட God said என்றே தொடங்குகிறது. கடவுளை The Word என்று சொல்வதும் உண்டு.
சப்தமென்பது சக்தி என்பதை நமக்கு இவையெல்லாம் உணர்த்துகின்றன. மிகவும் தீவிரமாக முறைப்படுத்தப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட, ஒரு புள்ளியை நோக்கி குவிக்கப்பட்ட சப்த அடுக்குகளின் அல்லது ஸ்வர வரிசைகளின் வடிவமே இசையாகும். ஆக, இசையென்பது சக்தி. சக்தி என்பது இசை. ராவணன் கெட்டவன் என்பதற்காக அவன் சங்கராபரணம் பாடியபோது அவன்மீது வளர்ந்திருந்த மலை கரையாமலா போனது? இறந்தவர் உலகுக்குச் சென்ற ஆர்·பியூஸ் தனது ஹார்ப் எனும் யாழிசையால் மீண்டு வரும் அனுமதி பெற்றானே!
இசையின் அடிப்படைச் சப்த ஒழுங்கு சாதாரண சினிமா பாட்டிலும் உள்ளதால்தான் நம் தினசரி வாழ்வின் ஒலிகளைவிட — குக்கர் சப்தத்திலிருந்து குழாய்ச் சண்டை வரை — சினிமாப்பாடல்கள் நமக்கு அதிகம் பிடிக்கிறது.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட காட்சிகளையும் வார்த்தைகளையும் கொண்ட சினிமா இசைபோல அர்த்தம் சுருங்கிப்போனதல்ல தூய இசை. அது கனவைப் போன்றது. ஒரே கனவு நாலு பேருக்கு நான்கு விதமான அர்த்தங்களைத் தருவதுபோல, ஒரே இசை பலருக்கு, அவரவர் வாழ்க்கை அனுபவங்களுக்குத் தக்க காட்சிகளை மனத்திரையில் அது விரிக்கிறது. எனவே இசையின் இயற்கையான தன்மையில் அதற்கு அகராதி போடமுடியாது. பொதுவாக, சோகமான இசையிலிருந்து சுகமானதை பிரித்துச் சொல்ல முடியும் என்றாலும் சோகம் சுகம் என்ற இரண்டு உணர்ச்சிகளுக்குள் இசையைச் சிறைப்படுத்துவது இசையை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்வதாகிவிடலாம்.
எல்லாக் கலைகளையும் போலவே, இசையும் ஒரு வலுவான சக்தி மிகுந்த சாதனம். பல திரைப்படங்களின் வெற்றிக்கு அவற்றின் இசைதானே காரணம்?! அதுமட்டுமல்ல. மற்ற கலைகளைவிடவும் வலுவானது இசையே என்றால் அது மிகையாகாது. வார்த்தைகளின் அர்த்தங்களை அகராதி சொல்லும். அது காட்டும் அர்த்தங்களுக்கு உட்பட்டோ அல்லது அவற்றை மீறியோ ஒரு கவிதை என்ன அர்த்தப்படுகிறது என்று அனுமானிக்கலாம். இப்படிப் புரிந்துகொண்டபிறகே அதன் தாக்கம் நம்மீது ஏற்படுகிறது. மோனாலிசா என்பது புன்னகைக்கும் ஒரு பெண்ணின் ஓவியம் என்று தெரிந்து கொண்டபிறகுதான் அதன் மந்திரப்புன்னகை நம்மை பாதிக்கிறது.
ஆனால் தூய இசையைப் பொறுத்தவரை, சிந்தனை செய்வதற்கு நேரமின்றி, சப்த அதிர்வுகள் செவிகளைத் தாக்கும் அந்தக் கணமே, அதற்கேற்ப காட்சிகள் அல்லது உணர்ச்சிகள் நமக்குள் உருவாக்கப்பட்டுவிடுகின்றன. உணர்ச்சிகள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றன, தூண்டப்படுகின்றன.
குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற வியாபாரக் கட்டுப்பாடுகள் இன்றி, சுதந்திரமாக, வார்த்தைகளற்ற அகாரத்திலேயே அரை மணி நேரம் பர்வீன் சுல்தானா அல்லது பீம்ஷென் ஜோஷி சஞ்சரிக்கையில் ஒரு ஆதரவற்ற பெண் அல்லது ஒரு மனிதன் இறைவனிடம் முறையிடுகின்ற காட்சியை அல்லது செய்தியை அல்லது மன நிலையை அது கொடுக்கும். பிஸ்மில்லாகானின் ஷெனாயில் சொற்களைமீறிய ஒரு சோகத்தை உணரலாம். ஷைகோவ்ஸ்கியின் — Tchaikovsky — இசையைக் கேட்கும்போது ஒரு உலகமகா யுத்தகளத்தில் கலந்து கொண்டது போல அல்லது பார்வையாளராக இருந்ததுபோல இருக்கும். யுத்த அனுபவத்தை அவர் இசை நமக்குத் தருகிறது. சிவகுமார் ஷர்மாவின் சந்தூரின் மணித்துள்ளலை கொஞ்ச நேரம் கேட்டுக்கொண்டிருந்தால் எல்லா துன்பங்களும் மறைந்து மனதில் ஒரு மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படுகிறது. “திப்புசுல்தானின் வாள்” என்ற தொலைக்காட்சித் தொடரில் நௌஷாத்தின் டைட்டில் இசையில் திப்புவின் வீரம் ஒலிக்கவில்லையா?
ரவிஷங்கரின் சிதார், அலி அக்பர் கானின் சரோத், யஹ¥தி மெனுஹினின் வயலின், பாலசந்தரின் வீணை, சௌராசியாவின் புல்லாங்குழல் இதையெல்லாம் மணிக்கணக்கில் எப்படி ஒருவரால் கேட்கமுடிகிறது? என்ன புரிகிறது என்று சிலர் கேட்கலாம். என்ன புரியவில்லை என்பதே சரியான கேள்வியாக அல்லது பதிலாக இருக்க முடியும். நம்முடைய கலாச்சாரம் இசையோடு கூடிய கலாச்சாரம். இந்த பிரபஞ்சத்தின் ஒழுங்கு — Order of the Universe — இறைவனின் அத்தாட்சி எனும்போது, சப்தத்தின் ஒழுங்காகிய இசைக்கும் அதில் பங்குண்டு.
உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாத இறைவனை நெருங்கிய ஞானிகளின் மன நிலைக்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சங்கீதத்தில் துரித காலத்தில் ஸ்வரம் சொன்னாலும் ஸட்ஜமம் ‘ஸ’வாகவே இருக்கும். நிஷாதம் ‘நி’யாகவே இருக்கும். ஒவ்வொரு ஸ்வரமும் அதனதன் இடத்தைவிட்டு அட்சரம்கூட நகராது. தாளமும் அப்படியே. ஒன்னாங்காலம், ரெண்டாங்காலம், மூனாங்காலம் என்று எந்த கதியில் ஸ்வரம் சொன்னாலும், பாடினாலும், வாசித்தாலும் தாளம் ஓடக்கூடாது. பெண்டுலம் மாதிரி ஒரே மாதிரியாக கூடாமல் குறையாமல் போய்வந்துகொண்டே இருக்க வேண்டும்.
எது நடந்தாலும் ஒரே மாதிரியாக மனதை வைத்துக்கொள்ளும் ஞானிகளுடைய நிலையை இந்த கட்டுப்பாடு, ஒழுங்கு குறிக்கிறது. அப்படி இருக்கின்ற ஒரு வாய்ப்பு அல்லது பயிற்சி இசையில் ஆழமாகச் செல்லும்போது கிடைக்கிறது. சொர்க்கத்தின் ஏழு வாசல்களும் திறந்து காட்டப்பட்டாலும், நரகத்தில் வாயில்கள் அனைத்தும் திறந்து காட்டப்பட்டாலும் எனது நம்பிக்கை கூடப்போவதுமில்லை குறையப்போவதுமில்லை என்று அலீ (ரலி) சொன்னதும் இந்த மன நிலையையே குறிக்கிறது. எதிர்ப்புகளற்ற, எதற்கும் இசைவான ஒரு மன நிலையை, அமைதியை இசை ஏற்படுத்துகிறது.
உறங்குவதற்கு நீலாம்பரி என்றும் விழிப்பதற்கு பூபாளம் என்றும் பட்டியல் போட்டு சப்த ஒழுங்குகளை வகைப்படுத்தி வைத்திருக்கிறது நம் பாரம்பரியம். தாவரங்கள் இசையைக் கேட்டு ஆரோக்கியமாக வளர்வதை நாம் அறிவோம். எத்தனையோ நோய்களை ராகங்கள் தீர்த்துவைத்த வரலாறுகள் உண்டு. நாகூர் தர்கா வித்வான் உஸ்தாத் தாவூத் மியான்கான் கால் நோயால் அவதியுற்றபோது, ராகவல்லுணராகவும் இருந்த இறைநேசர் நாகூர் ஷாஹ¤ல் ஹமீது ஆண்டகை(ரலி) அவர்களின் உத்தரவின் பேரில் மால்கோஸ் ராகத்தை நாற்பது நாட்கள் பாடி, கால்வலி குணமானது வரலாறு. இப்படிப்பட்ட ஒரு உன்னதமான ஒரு விஷயம் எப்படி மனிதனை இறைவனிடமிருந்து தூரப்படுத்த முடியும்?!
இசை பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டைப் பற்றி இந்த இடத்தில் பேசிவிடுவது நல்லது. இசையென்றால் ஏதோ இஸ்லாத்துக்கு அலர்ஜி என்பதுபோல பலர் பேசி அல்லது நினைத்து வருகிறார்கள். திருக்குர் ஆனும் ஹதீதும் இசைக்கு எதிராக இருப்பதாக அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.
பொதுவாக திருக்குர்ஆனின் அத்தியாயங்களான 31 : 06, 17 : 64, 53 : 57-62 ஆகியவை இசைக்கு எதிரான ஆதாரங்களாகக் காட்டப்படுகின்றன. குறிப்பாக சூரா லுக்மானின் வசனமே (31:06) பலராலும் எடுத்துக்காட்டப்படுகிறது. அதில் வரும் ‘லஹ்வல் ஹதீஸ்’ என்ற பதம் idle talk என்று ஆங்கிலத்தில் சரியாகவே மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அதற்கு இசை, பாட்டு என்றும் பொருளிலிருப்பதாக சில ஹதீதுகளை ஆதாரம் காட்டி விளக்கப்படுகிறது.
லுக்மானின் அந்த குறிப்பிட்ட வசனம் என்னதான் சொல்லுகிறது? இறைவசனங்களின் தன்மையைப் பற்றிச் சொல்லிவிட்டு அதன் தொடர்ச்சியாக சிலர் அதை நம்பாமலிருப்பார்கள் என்றும் அப்படிப்பட்டவர்கள் எதை நம்புவார்கள் என்றும் சொல்லும்போது :
மனிதர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் வீணான செய்திகளை (லஹ்வல் ஹதீஸ்) விலைக்கு வாங்கி, அல்லாஹ்வுடைய வழியிலிருந்து, (அவற்றை ஜனங்களுக்கு ஓதிக்காண்பித்து) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக்கொள்கின்றனர் (31 : 06)
என்று கூறுகிறது. இந்த வசனத்தில் இசைபற்றியோ வாத்தியக் கருவிகள் இசைப்பதைப்பற்றியோ இறைவன் பேசவே இல்லை. விதிக்கப்பட்ட கதியில் கூடாமலும் குறையாமலும் இந்த பூமியை சுற்றவைத்துக்கொண்டிருக்கும் பிரபஞ்சமஹா கலைஞனாகிய இறைவனே இசைக்கு எதிராக எப்படிப் பேசுவான்?! அவனன்றி அணுவும் அசையாது எனும்போது ஏழு ஸ்வரங்கள் மட்டும் அவனுடைய அனுமதியின்றி உலாவருமா என்ன?
என்னைப் பின்பற்றுபவர்களில் ஒருசிலர் பிறன் மனைவிழைதல், பட்டாடை அணிதல், மது உட்கொள்ளல், இசைக்கருவிகளை இசைத்தல் போன்றவற்றை செய்யக்கூடியவர்களாக இருப்பர் என்று ஒரு ஹதீதில் வருவதை எடுத்துக்காட்டி, இதன்மூலம் இறைவனும் இறைத்தூதரும் இசையையும் இசைக்கருவிகளை இசைத்தலையும் தடுப்பதாக விளக்கம் சொல்கின்றனர். ஆனால் இது ஒரு சிந்தனைப்பள்ளியின் விளக்கம்தானே தவிர, ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்க அறிஞருலகம் ஒத்துக்கொண்ட ஒன்றல்ல என்பதை ஏற்கனவே கொடுத்த உதாரணங்களிலிருந்து புரிந்துகொண்டிருக்க முடியும்.
கொட்டு அல்லது முரசு போன்ற வட்டப்பறைகளை இசைத்து புஆத் என்ற யுத்தம் பற்றிப் பாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்களை அபூபக்கர்(ரலி), “இறைத்தூதரின் வீட்டுக்குள் சாத்தானின் இசைக்கருவிகளா?” என்று கோபத்துடன் தடுக்கப்போக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்கரைத் தடுத்து, பண்டிகை போன்ற நாட்களில் நாம் இதை தடுக்க வேண்டியதில்லை என்று சொல்லி அவர்களை தொடர்ந்து இசைத்து பாட அனுமதித்ததை புகாரி, முஸ்லிம் போன்ற ஆதாரப்பூர்வமான ஹதீது தொகுப்புகளில் உள்ள பல ஹதீதுகள் பதிவு செய்கின்றன. அதுவும் இறைத்தூதரின் அருமை மனைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் (அபூபக்கரின் மகளார்) சொன்னதாக!
மேலும் அத்தியாயம் 39 வசனம் 75ல் வானவர்கள் இறைவனது இருக்கையைச் சூழ்ந்துகொண்டு இறைவனைப் புகழ்ந்து “பாடுவார்கள்” என்றும் திருமறை கூறுகிறது! உலக முடிவு நாளில் சூர் ஊதப்படும் என்று சொல்லப்படுகிறதே, சூர் என்பதும் ஒருவிதமான கருவிதானே?
மேற்கூறப்பட்ட இறைவசனமும் அதை பலப்படுத்துவதுபோல உள்ள ஹதீதொன்றும் இசைபற்றியும் இசைக்கருவிகள் இசைப்பது பற்றியும் பேசுவதாகவே ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும், பொதுவாக இசையை இஸ்லாம் அனுமதிக்காததாக எடுத்துக்கொள்ளப் போதுமானதாக அது இல்லை. காரணம், வேண்டுமென்றே இறைச்செய்தியை மனிதர்கள் மனதில் வாங்கிவிடக் கூடாதென்பதற்காக, அவர்களை வழிகெடுக்கும் பொருட்டு, பாடவோ இசைக்கவோ செய்கின்றவர்களைப் பற்றிப் பேசுவதாகத்தான் மேலே காட்டப்பட்ட லுக்மான் அத்தியாய வசனத்தை எடுத்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட இசையை வேண்டுமானால் வேண்டாம் என்று ஒதுக்கிவிடலாம்.
மேலே சொன்ன இசைக்கருவிகளுக்கு எதிரான ஹதீது பிறன்மனை விழைதல் போன்ற ஒழுக்கம் கெட்ட காரியங்களைச் செய்கிறவர்களை சபிக்கின்ற ஒன்றாக இருப்பதைக் கவனிக்கவும். ஒரு ஒழுக்கம் கெட்டவன் இசைக்கருவியொன்றை வைத்து வாசித்துக்கொண்டிருந்தால், அந்த செயலை ஆதரித்தா பேசமுடியும்? ஆனால் அதைவைத்து இசைக்கருவிகள் இசைப்பவர்கள் அனைவரும் அந்த ஹதீதில் வருவதுபோல ஒழுக்கம் கெட்டவர்கள் என்றோ கெட்டுவிடுவார்கள் என்றோ எப்படி தர்க்கிக்க முடியும்?!
“உங்கள் எண்ணத்தை வைத்தே செயல்கள் மதிப்பிடப்படுகின்றன” (இன்னமல் அ’மாலு பின் நிய்யத்தி) என்ற ஹதீதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். வாசிப்பவனின் ஒழுக்கம்கெட்டத் தனத்துக்கு கருவி எப்படி பொறுப்பாக முடியும்? மனிதனுக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தருகின்ற ஒன்றை, மன இறுக்கத்தைத் தளர்த்துகின்ற ஒரு உன்னதமான தெய்வீகக் கருவியாகிய இசையை, அதன் ஆற்றலை, ஒட்டுமொத்தமாக நாம் எப்படிப் புறக்கணிக்க முடியும்? அப்துல் பாஸித் திருமறையை ஓதும்போது நம்மை ஸ்தம்பித்து இறைச்சிந்தனையில் மூழ்க வைப்பது அவருடைய ‘கிராஅத்’ எனும் உன்னத இசையல்லவா? திருக்குர்ஆனின் இசையைத்தானே அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மர்மட்யூக் பிக்தால் “The inimitable symphony” என்று சரியாக வர்ணித்தார்!
கருவிகளின் இசை இறைவனிடமிருந்து மனிதனைப் பிரித்துவிடும் என்ற வாதம் உண்மையாக இருக்குமானால், அந்த அன்சாரிப் பெண்களை நபிகளார் ஏன் பாடவும் இசைக்கவும் அனுமதிக்க வேண்டும்? அப்போ, பண்டிகை நாட்களில் மட்டும் இறைவனை மறந்திருக்கலாம் என்று அர்த்தமா? தாய் சகோதரி போன்ற திருமணம் செய்து கொள்ளமுடியாத உறவு நிலைகளில் உள்ள பெண்களின் முன்னிலையிலும், கணவன் மனைவி தனியாக இருக்கும்போதும் பாடிக்கொள்ளலாம் என்று அனுமதி இருக்குமானால் அதற்கு என்ன அர்த்தம்? அப்படிப்பாடி ஆடுபவர்கள் மட்டும் இறைவனை அந்த நேரத்தில் மறக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அர்த்தங்கள் எப்போதுமே வார்த்தையில் இருப்பதில்லை. அதன் பின்னால் உள்ள நோக்கத்தையும் சொல்லப்பட்ட இடத்தையும் — context — வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். பாலபாடத்தையே வைத்து எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டிருப்பதில் பயனொன்றுமில்லை.
கருவிலுள்ள குழந்தைகூட இசைக்கு இசைவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கருவிலிருந்து கலாச்சாரம்வரை உயர்ந்துவிட்ட நாம் மட்டும், மனிதனை சந்தோஷப்படுத்தும், அவனுக்கு அமைதியைத் தரும் ஒரு தெய்வீக அனுபவத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும்? நம்முடைய மனம் உறுதியாக இருக்கும் பட்சம், நம்மை இறைச்சிந்தனையிலிருந்து பிரிப்பதற்கு பதிலாக இசை நம்மை இறைவனை நோக்கி மேலும் ஆழமாகச் செலுத்த நிச்சயம் உதவும்.
(“படித்துறை”யில் இந்த கட்டுரை வந்துள்ளது)
கட்டுரை ஆசிரியரின் ‘பறவையின் தடங்கள்’ வலைத்தளத்திலிருந்து
NB : The contents of articles of other writers published in this blog not necessary to be the opinion of the blogger