RSS

Category Archives: நாகூர் வட்டார மொழியாய்வு

நாகூரும் நற்றமிழும் பாகம் -1


 

நாகூரில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படும் தூய தமிழ்ச் சொற்களை தொடராக எழுதலாம் என ஒர் எண்ணம்.

“ரொம்பத்தான் இஹ பீத்திகிறாஹா. எங்க ஊருலேயும்தான் இப்படிச் சொல்லுவாஹா” என்று நீங்கள் சொல்வது எனக்கு புரியாமல் இல்லை,.

“பீத்திக்கிறீங்க” என்று சொல்றீங்க பாத்தீங்களா இதுவும் தூய தமிழ்ச் சொல்தான். பீற்றுதல் என்றால் அகம்பாவத்துடன் பெருமை பேசுதல்.

நான் நாகூரோடு சம்பந்தப்பட்டவனாதலால் நானறிந்த வட்டார வழக்கைத்தான் நான் சொல்ல முடியும்.. உங்கள் ஊரோட சம்பந்தப்பட்ட சொல்லாடல்களை நீங்களும் தாராளமாக பகிரலாம். இதில் பீத்திக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லே சார்.

நாகூர் வட்டார வழக்கில் இந்த “ஏலலே” என்ற சொற்பதம் மிகவும் சர்வ சாதாரணம்.

“உங்களெ வந்து பாக்க ஏலல தங்கச்சி”

“எனக்கு உடம்புக்கு ஏலல”

நாகூர் மக்களின் அன்றாட பேச்சு வழக்கில் அடிபடும் சொற்றொடர் இது.

“அஹ ஏலாமையா இருக்குறாஹா” என்று சொன்னால் அவர் உடம்புக்கு முடியாமல் இருக்கிறார் என்று அர்த்தம்.

அக்காலத்தில் “ஏலாமை” என்ற சொற்பதத்தை பயன்படுத்தப்பட்டிருக்கும் சில செய்யுள்கள் உங்கள் பார்வைக்கு:

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார்
கோள்வேங்கை அன்னையால் நீயும் அருந்தழையாம்
ஏலாமைக்கு என்னையோ நாளை எளிது

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று

இதோ ஒரு குறள் உங்கள் பார்வைக்கு:

எண்ணலெல்லாம் ஏற்றமிக்க எண்ணுக ஏலாதும்
நண்ணற்க நம்பிக்கை நைந்து

இயலுதல் என்ற பொருளில் “ஏலுதல்” என்ற வார்த்தையும், இயலாமை என்ற பொருளில் “ஏலாமை” என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

மேலேயுள்ள குறளில் “நைந்து” என்ற சொல் தளர்ந்து என்ற பொருளில் வருகிறது.

இந்த பழஞ்சொல் நம் வட்டார வழக்கில் “நைஞ்சு” என்றாகி விட்டது.

“செம்சட்டி (செம்புசட்டி) நைஞ்சு (நைந்து) போச்சு” என்பன போன்ற சொற்றொடர்களை நாம் அன்றாடம் கேட்க முடிகிறது.

“நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி” (புற:376:11).
“நல்கும் வாய் காணாது நைந்து உருகி என் நெஞ்சம் ஒல்கு வாய் ஒல்கல் உறும்” (தி.நூ:17:3).
“நைந்து வீழும் முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இப் புனத்தே” (கோவை:61).: “தேய்ந்த நுண்ணிடை நைந்து உகச் செப்பினை” (சீவ:3:270).

இதுபோன்ற சொல்லாடல் பழந்தமிழ்ப் பாடல்களில் நாம் கான முடிகின்றது.

“ஏலலே” என்பது சங்கத்தமிழ்ச் சொல் என்பதை உங்களுக்கு நான் புரிய வைத்து விட்டேன். இதுக்குமேலே என்னால ஏலலே வாப்பா.

– அப்துல் கையூம்

(இதில் சில கருத்துக்கள் ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் நான் எழுதியதுதான்)

 

ஏசுறாஹா


“ஏசு” என்பதால் இது மார்க்கப் பதிவு என்று நினைக்க வேண்டாம். அந்த “ஏசு” வேற. இந்த “ஏசு” வேற.

“அஹ ஏசுறாஹா”,  “என்னை ஏசாதீங்க”,  “ஏம்பா ஏசுறே?”

நாகூர் வட்டார மொழியில் இதுபோன்ற பேச்சுக்கள் சர்வ சாதாரணம். திட்டுதல் என்று பொருள்படும் இச்சொல்லை வேறு சில இடங்களில் “வைதல்” –என்று சொல்வதை காதுபட கேட்டிருக்கிறேன். உதாரணம்: “அவிங்க வையுறாங்க” “ஏம்பா வையுறே?”

“வசைபாடுதல்” அல்லது “வஞ்சித்தல்” என்ற சொல் “வைதல்” என்று மருவியிருக்கக்கூடும் என்பது என் கணிப்பு. நிந்தித்தல் என்பது இதன் பொருள். சில  இடங்களில் ஏசினான் என்பதை “மானாவாரியா பேசிப்புட்டான்” என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

“ஏசுறாஹா” என்று நாகூரில் பயன்பாட்டில் இருக்கும் இச்சொல் தூயதமிழ்ச் சொல்லா என்ற சந்தேகம் ரொம்ப நாளாக எனக்கிருந்தது. இந்த ஒளவையார் பாடலை படித்தபின் அந்த ஐயம் முற்றிலும் தீர்ந்தது.

ஏசி இடலின் இடாமையே நன்று – எதிரில்
பேசும் மனையாளில் பேய்நன்று – நேசமிலா
வங்கணத்தில் நன்று வலியபகை, வாழ்விலாச்
சங்கடத்தில் சாதலே நன்று
…ஒளவையார்

நானும் இதன் முதல் வரியை கேட்ட மாத்திரத்தில் “ஏசி போட்டுக்கிட்டு ரூமிலே தூங்கறத விட ஏசி போடாம தூங்குறதே சாலச் சிறந்தது” என்று ஒளவையார் சொல்கிறாரோ என்று தவறாக நினைத்தேன்.

இப்பாடலின் பொருள்: “ஏசி விட்டு ஒருத்தருக்கு தானம் தருவதை விட, தானம் தராமலிருப்பதே மேல். கணவனுக்கு முன்னால் நின்று மறுத்துப் பேசும் Female மனைவியைக் காட்டிலும் பேயானது ரொம்பவும் மேல். அன்பில்லாத உறவினைக்காட்டிலும் பெரும்பகையே மேல். சங்கடத்தால் நசிந்துபோன வாழ்வைக்காட்டிலும் சாவதே மேல்.

இப்பொழுது ஒளவையார் உயிரோடிருந்திருந்தால் இந்த கடைசி வரிக்காக “அவர் தற்கொலைக்குத் தூண்டினார்” என்று அவர் மீது வழக்கு போட்டிருப்பார்கள்.

ஏசுதல் என்ற சொல்லை ஒளவையார் பயன் படுத்தி இருப்பதால் அது சங்க காலத்து தூயதமிழ்ச்சொல் என்பது நன்கு விளங்குகிறது.

நாகூர் அதன் சுற்று வட்டார வழக்கில் பயன்பாட்டில் இருக்கும் இதுபோன்ற எண்ணற்ற தூயதமிழ்ச் சொற்களை தொகுத்து இதற்கு முன்பும் நிறைய எழுதியிருக்கிறேன்.

#அப்துல்கையூம்

 

ஏலாமை


யாராவது ஏதாவது ஒரு நல்ல ஜோக் முகநூலில் பகிர்ந்தால் போதும். ஒரு நபராவது நிச்சயம் “முடியலே” என்று கமெண்ட் அடித்திருப்பார்.

அவருக்கு என்ன “முடியலே?” என்று யோசித்துப் பார்த்து விட்டு “அவரால் சிரித்து மாள இயலவில்லை” என்று அவர் சொல்ல வருகிறார் என்பதை நாம் புரிந்துக் கொள்கிறோம்.

இந்த “இயலவில்லை” என்ற வார்த்தைதான் நாளடைவில் “ஏலலே” என்று ஆகிவிட்டதோ என்று ஆராய்ந்து பார்க்கையில் அக்காலத்து செய்யுள்கள் பலவற்றிலும் இப்பதத்தை பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது.
நாகூர் வட்டார வழக்கில் இந்த “ஏலலே” என்ற சொற்பதம் மிகவும் சர்வ சாதாரணம்

“உங்களெ வந்து பாக்க ஏலல தங்கச்சி”

“எனக்கு உடம்புக்கு ஏலல”

“இந்த மாதிரி எடத்துக்கு என்னாலே வர ஏலாது”

நாகூர் மக்களின் அன்றாட பேச்சு வழக்கில் அடிபடும் சொற்றொடர் இது.

“அஹ ஏலாமையா இருக்குறாஹா” என்று சொன்னால் அவர் உடம்புக்கு முடியாமல் இருக்கிறார் என்று அர்த்தம்.

அக்காலத்தில் “ஏலாமை” என்ற சொற்பதத்தை பயன்படுத்தப்பட்டிருக்கும் சில செய்யுள்கள் உங்கள் பார்வைக்கு:

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார்
கோள்வேங்கை அன்னையால் நீயும் அருந்தழையாம்
ஏலாமைக்கு என்னையோ நாளை எளிது

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று

இதோ ஒரு குறள் உங்கள் பார்வைக்கு:

எண்ணலெல்லாம் ஏற்றமிக்க எண்ணுக ஏலாதும்
நண்ணற்க நம்பிக்கை நைந்து

இயலுதல் என்ற பொருளில் “ஏலுதல்” என்ற வார்த்தையும்,  இயலாமை என்ற பொருளில் “ஏலாமை” என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

மேலேயுள்ள குறளில் “நைந்து” என்ற சொல் தளர்ந்து என்ற பொருளில் வருகிறது.

இந்த பழஞ்சொல் நம் வட்டார வழக்கில் “நைஞ்சு” என்றாகி விட்டது.

“செம்சட்டி (செம்புசட்டி) நைஞ்சு (நைந்து) போச்சு”  என்பன போன்ற சொற்றொடர்களை நாம் அன்றாடம் கேட்க முடிகிறது.

“ஏலலே” என்பது பழஞ்சொல் என்பதை உங்களுக்கு புரிய வைத்து விட்டேன். இதுக்குமேலே என்னால ஏலலே வாப்பா.

– அப்துல் கையூம்

 

நாசமத்துப் போ !


 [ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘திண்ணை’ இதழில் எழுதிய கட்டுரையை மறுபடியும் பிரசுரித்திருக்கிறேன். ஒரு சிறிய வேண்டுகோள். எனது பதிவுகளை நண்பர்கள் தங்கள் வலைப்பூவில் மீள்பதிவு செய்வதில் எனக்கேதும் ஆட்சேபணை கிடையாது. ஆனால் தயவுசெய்து இணைய நடமுறைக்கேற்ப எழுதிய என் பெயரையும், எடுத்தாண்ட என் வலைப்பதிவயும் குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.]

“உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?” – பாடலொன்றில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நம்மைப் பார்த்து கேட்கின்ற கேள்வி இது.

ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் அமெரிக்கன் வீசினானே அதுபோன்ற வலிமைமிக்க அணுகுண்டா? அல்லது கண்டம் விட்டு கண்டம் பாய எந்நேரத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ராட்சத ஏவுகணைகளா? என்று நாம் விடையைக் குடைவதற்கு முன்பே “நிலை கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குதான் அது!” என்று நாம் சற்றும் எதிர்பாராதவண்ணம் ஒரு பதிலைத் தருவான் அந்த பாட்டாளிக் கவிஞன்.

நயவஞ்சகர்களின் நாக்கு மட்டும்தான் கொடியதா? சிற்சமயம் நல்லவர்களின் நாக்கும் கொடிய ஆயுதமாக உருமாறி விடுகிறதே? கோபத்தில் கொந்தளிக்கும் சாபம் பலித்திருப்பதாகவும் பகர்கிறார்களே? உண்மைதானோ?

வரம்பு மீறி வீசப்படும் வசைமொழிகள் இருக்கிறதே, அது அணுகுண்டைக் காட்டிலும் ஆபத்தானது; ஏவுகணையைக் காட்டிலும் நாசம் விளைவிக்கக் கூடியது. சிலர் கடுமையான வார்த்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கக்கி விடுவார்கள். கணநேர ஆத்திரம் அவர்களின் கண்களை மறைத்து விடும். அதன் பின்னர் அவர்கள் அறியாமல் சொன்னதை நினைத்து மனம் வருந்துவார்கள்.

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு”

என்று வார்த்தைகளின் கொடூரத்தன்மையை விளக்குவான் ஐயன் திருவள்ளுவன்.

மனமாரச் சொன்ன வாழ்த்தும், மனமெரிந்து சொன்ன சொல்லும் கட்டாயம் பலிக்கும் என்பார்கள். இரு மனங்களுக்குள் ஏற்படும் திருமண பந்தத்தை, ஊரறிய, உலகறிய ‘சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்’ என்று அழைப்பிதழ் அச்சடித்து, அனைவரையும் வரவேற்று, ஆனந்தம் அடைகிறோம். ஏன்? நான்கு பேர்கள் கூடி நின்று நாவால் முழங்கும் நல்லாசிகள் இளம் தம்பதியினரின் வாழ்க்கையில் வளம் சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பில்தான். “நூறாண்டு காலம் வாழ்க” என்றும் “பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என்றும் ஆன்றோர்களின் ஆழ்மனதிலிருந்து வரும் ஆசிகளுக்கு ஈடு இணையேது?

நான் பிறந்த மண்ணான நாகூரில் சில விசித்திரமான பழக்க வழக்கங்கள் காணக் கிடைக்கும். வாசலில் நின்று யாசகம் கேட்கும் ஆசாமிகளுக்கு ஈவதற்கு ஏதும் இல்லாதபோதும் கூட இல்லத்திலிருப்பவர்கள் இசைக்கின்ற பதில் நம் இதயத்தைக் கவரும்.

“மாப்பு செய்யுங்க பாவா” என்று மனம் நோகாத வண்ணம் கூறுவார்கள். “பாவா” என்றால் தந்தைக்குச் சமமான சொல். “மாப்பு செய்யுங்கள்” என்றால் மன்னித்துவிடுங்கள் என்று பொருள். ஒரு சாதாரண பிச்சைக்காரனிடம் சென்று தாங்கள் ஏதோ தகாத செயல் செய்து விட்டதைப் போன்று மன்னிப்பு கேட்பது விந்தையாக இருக்கிறதல்லவா? உயர்ந்த பண்பாட்டுக்கு இது ஒரு உன்னத அளவுகோள்.

“ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்” – என் தாயார் எனக்கு அடிக்கடி கூறும் அறிவுரை இது. நம்மைச் சுற்றிலும் இரு வானவர்கள் இருக்கிறார்கள். நாமுரைக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் ‘அப்படியே ஆகட்டுமென்று’ ஆசி வழங்குகிறார்கள் என்பார். உள்ளத்திலிருந்து அன்றி உதட்டளவில் உச்சரிக்கும் வார்த்தைகள் கூட ஒரு சில நேரத்தில் உண்மையாகி விடுவதுண்டு.

நல்ல நல்ல விஷயங்கள் நாகூரில் நடைமுறையில் இருப்பதைப்போன்று களைய வேண்டிய கேடு கெட்ட பழக்கங்களும் எங்களூரில் உண்டு. இக்கட்டுரை அதற்கு உதவி புரிந்தால் அதை விட வேறு மகிழ்ச்சி எனக்கில்லை.

“களிச்சல்லே போவா”, “கொள்ளையிலே போவா”, “படிய விழுகுவா”, “கட்டையிலே போவா”, “கசங்கொள்ளுவா”, “கர்மம் கொள்ளுவா”, “பலா கொள்ளுவா”, “ஹயாத்தெ அழிவா” இதுபோன்ற வசைமொழிகள் நம்மிடையே சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதில் நாம் காண முடியும். இதன் ஆழ்பொருளை உணருபவர்கள் ஒருக்காலும் இவ்வார்த்தைகளை தங்கள் நாவால் மொழியவே மாட்டார்கள்.

ஒருகாலத்தில் தொடர்பேதி எனும் பெருவாரி நோய் பரவி உயிரைக் குடித்தது. “களிச்சல்லே போவா” என்று மொழியும் வசைமொழியானது ‘நீ தொடர் பேதி வந்து செத்து மடி” என்று அர்த்தம். இன்னும் ஒரு படி மேலே சென்று “ஒரு களிச்சல்லே போவா” என்று திட்டுவார்கள். வியாதி தாக்கிய மாத்திரத்திலேயே, ‘ஒரே வயிற்றுப்போக்கிலேயே நீ செத்து மடி’ என்ற பொருள் பொதிந்த மிகக்கொடிய சொற்றொடர் அது.

கொள்ளை நோய் என்பது பிளேக் (Plague) நோயைக் குறிக்கும். ஒரு காலத்தில் இந்நோய் தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம். “கொள்ளையிலே போவா” என்றால் “நீ Plague நோயால் செத்து மடிவாயாக” என்று பொருள்.

Brain Hemorrhage ஒரு மனிதனை தாக்கும் போது மூளைக்குச் செல்கின்ற நரம்பு மண்டலக் குழாய்கள் வெடித்துச் சிதறும். தடாலென்று கீழே விழுந்து இறந்து விடுவார்கள். நொடியில் மரணம் தழுவிக் கொள்ளும். இதைத்தான் “படிய விழுவாய்” என்று ஏசுவது.

மோசமான மரணமென்பது ‘கோமா’ ஸ்டேஜில் மடிவதுதான். மரணத் தருவாயில் இறை நாமத்தைக் கூட உச்சரிக்க இயலாது. கோமாவில் இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு மட்டுமே இருக்கும். மற்ற பாகங்கள் செயலிழந்து விடும். உணர்வு அறவே இருக்காது. உடம்பு மரக்கட்டையாக போய் விடும். அதைத்தான் “கட்டையிலே போவா” என்று வசை பாடுவது.

மிகக்கொடுமையான நோய்களில் ஒன்று குஷ்டம். பாதிக்கப்பட்டவனின் தேகத்தை சிறுகச் சிறுக குலைத்து அவன் மேனியழகை சிதைத்து விடும். “கசங் கொள்ளுவா“ “பலா கொள்ளுவா” “கர்மம் கொள்ளுவா” என்று சொல்வதெல்லாம் “நீ குஷ்டம் வந்து செத்து மடிவாயாக” என்ற வசைச் சொற்கள்தான்.

“ஹயாத்” என்றால் அரபிமொழியிலும் உருது மொழியிலும் “வாழ்நாள்” என்று பொருள். “ஹயாத்தை அழிவாய்” என்றால் உன் வாழ்நாளை சுருக்கிக் கொள்வாயாக என்று பொருள்.

இதுபோன்ற மிகக்கொடிய வசை மொழிகளால் தாய் தான் பெற்ற பிள்ளைகளைத் திட்டுவதும், மகன் அல்லது மகள் தன் உடன் பிறந்தவர்களைத் திட்டுவதும் வாடிக்கையான விஷயமாகப் போய் விட்டது.

இதன் உள்ளர்த்தங்களை நாம் உணருவோமாகில் ஒருபோதும் இத்தகைய வசைமொழிகளை மொழியவே மாட்டோம். பிற்பாடு இந்த உள்ளார்ந்த அர்த்தங்களை நம்மவர்கள் உணரத் தொடங்கியதும் இத்தகைய வசைமொழிகள் சிறுகச் சிறுக குறையத் தொடங்கின.

உருது மொழி கவிதையொன்று என் நினைவுக்கு வருகின்றது.

உஸ் Boli மே க்யா மஜாஹே ஜிஸ் மே Gali நா ஹோ”
உஸ் சசுரால்மே க்யா மஜாஹே ஜிஸ் மே சாலி நா ஹோ
உஸ் மெஹஃபில் மே க்யா மாஜாஹே ஜிஸ்மே Thaali நா ஹோ

இக்கவிதையின் பொருள் இதுதான்:

வசைச்சொல் இல்லாத மொழியில் என்ன சுவை இருக்கிறது?
மச்சினச்சி இல்லாத மாமனார் வீட்டில் என்ன சுவை இருக்கிறது?
கைத்தட்டல் இல்லதா ஆன்றோர் சபையில் என்ன சுவை இருக்கிறது?

திட்டுவதிலும் தனியொருசுகம் இருக்கின்றது போலும். அந்த சுகத்தை இழக்க இவர்கள் தயாராக இல்லை. திட்டுகின்ற அதே கடுமையான தொனியில் சில நல்ல வார்த்தைகளையும் சேர்த்துக் கொண்டனர். “அட நீ நல்லா இருப்பே” “அட முஸீபத்து நீங்கிப் போக” என்னும் சொற்கள் திட்டுகின்ற அதே தொனியில் இருக்கும். ஆனால் வாழ்த்துக்களாக உருவெடுக்கும்.

பற்பல ஊர்களில் “நீ நாசமாப் போவா” என்ற ஏசுதலை “நீ நாசமத்துப் போ” என்று சொல்லக் கேட்கலாம் “நாசம் அற்றுப் போ” என்றால் “நாசமெலாம் கலைந்து நீ நன்றாக இருப்பாயாக” என்று பொருள்.

பெரும்பாலான வீடுகளில் தம் பிள்ளைகள் வெளியே போகும்போது “நான் போகிறேன்” என்று பிரியாவிடை பகர்ந்தால் “அப்படிச் சொல்லக் கூடாது. போய் வருகிறேன் என்று சொல்” என பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள்.

சில வீடுகளில் பிள்ளைகளைப் பார்த்து “எங்காவது போய்த் தொலை” என்று திட்டுவார்கள். இதுவும் திருத்தப்பட வேண்டிய வழக்கங்களில் ஒன்று. “எண்ணத்தின் அளவே செயல்” என்பார்கள். எண்ணங்களும் பேச்சுக்களும் நல்லவைகளாக இருந்தால்தான் நம்முடைய செயல்களும் நல்லதாக இருக்க முடியும்.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

என்கிறது புறநானூற்றுப் பாடல் (புறம் :214). யானையை வேட்டையாடி வருவேன் என்று காட்டுக்குப் போகின்றவனின் நோக்கம் நிறைவேறுவது திண்ணம். அவனுள் ஏற்படும் அந்த உயர்ந்த எண்ணத்தின் மனபலமானது அவனுக்குள் ஒரு உத்வேகத்தை உண்டு பண்ணுகிறது. முயலை வேட்டையாடி வருவேன் என்று போகின்றவன் வெறுங்கையோடுதான் வருவான். எண்ணம் எப்பொழுதும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டுமென்பது இப்பாடலின் கருத்து.

கம்பராமாயணம், பெரியபுராணம், நெடுநல்வாடை போன்ற நூல்களில் ‘வையம்,’ அல்லது ‘உலகம்’ என்ற மங்கல வார்த்தைகளோடு தொடங்குவதைக் காணலாம் இவைகளை “அமுதச் சொற்கள்” என்று பகுத்தறிந்து சொல்வார்கள்.

இதே ‘சென்டிமென்ட்’ தமிழ்த் திரையுலகிலும் பரவலாகவே காணப்படுகிறது. படப்பதிவின் ஆரம்பத்தில் “வெற்றி! வெற்றி! வெற்றி!” (ஆயிரத்தில் ஒருவன்) என்று சொல்வதைப் போன்றோ அல்லது “ஆத்தா நான் பாஸாயிட்டேன்” (16 வயதினிலே) என்றோ வசனங்களை பதிவு செய்வது வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது.

‘தூறல்நின்னு போச்சு’ என்றெல்லாம் திரைப்படத்திற்கு பெயர் வைப்பது முறையல்ல. பலபேர்களின் வாயிலிருந்து இவ்வார்த்தைகள் வரப்போகத்தான் மழையே இல்லாமல் போய்விட்டது என்று ‘டணால்’ தங்கவேலு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நல்ல வார்த்தைகள் மாத்திரமே நம் வாயிலிருந்து வெளி வரவேண்டுமென்பது அவரது ஆதங்கம்.

‘செந்தாமரை’ எனும் படத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமிக்காக ஒரு பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதினார். படத்தில் அவரே பாடி, அவரே நடிப்பார். “பாடமாட்டேன் – நான் பாடமாட்டேன்!” என்று அப்பாடல் தொடங்கும். அதனைத் தொடர்ந்து

“பாவலர் செய்த தமிழ்க் கலைப்பாட்டன்றி
வேறு எதையும் – பாடமாட்டேன்!”

என்று பாடல் வரிகள் தொடரும். இப்பாடல் அவர் பாடியதற்குப் பின்னர் அவர் குரல் வளம் போய்விட்டது. அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த ‘அவன் அமரன்’ என்ற படத்திற்கு சீர்காழி கோவிந்தராஜன் அவருக்கு பின்னணிக் குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Negative Impact ஏற்படுத்தக்கூடிய இவ்வரிகள் காரணமாகி வாக்குப்பலிதம் ஆகிவிட்டதோ?

கவிஞர் கண்ணதாசன் ‘வானம்பாடி’ படத்திற்காக

“கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன்
காதலித்து வேதனையில் சாகவேண்டும்!”

என்று எழுதினார். படத்தில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பாடலைப் பாடவந்த டி.எம். சௌந்தரராஜன் பல்லவியைப் பார்த்து நடுநடுங்கிப் போய்விட்டார். பாடமாட்டேன் என்று மறுத்து விட்டார். உடனே நொடியில் கண்ணதாசன்

“கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!”

என்று மாற்றியமைத்துக் கொடுத்தார்.

இதே டி.எம்.செளந்தர்ராஜன் பிற்காலத்தில் டி.ஆர்.ராஜேந்தர் இயக்கிய ‘ஒருதலை ராகம்’ படத்தில் பாடவேண்டிய சூழ்நிலை வந்தது. அதில் இரண்டு பாடல்கள் டி.எம்.செளந்தர்ராஜன் பாடினார்.

ஒன்று “என் கதை முடியும் நேரமிது!”. மற்றொன்று “நான் ஒரு ராசியில்லா ராஜா!” என்ற பாடல். வாக்குப்பலிதம் ஏற்பட்டதினாலோ என்னவோ இத்தோடு டி.எம்.எஸ். அவர்களின் திரையுலக வாழ்க்கை அஸ்தமனம் ஆகத் தொடங்கிவிட்டது.

அதற்குப் பின்னர் அவர் பாடிய மேடை நிகழ்ச்சிகளில் எந்த பாடலையும் பாடுவார். ஆனால் அவருக்கு ‘இறங்கு முகம்” உண்டாக்கிய “நான் ஒரு ராசியில்லா ராஜா” என்ற பாடலை மட்டும் பாட மறுத்து விடுவார்.

பாலச்சந்தர் இயக்கிய ‘நீர்க்குமிழி’ என்ற படத்திற்காக வி.குமார் இசையமைக்க பாடல் பதிவு தொடங்குகிறது. சீர்காழி கோவிந்தராஜன் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்று பாடத் தொடங்கியதும் மின்சாரம் நின்று போனதாம்.

பெருந்தலைவர் காமராஜர் இறந்து போவதற்கு முன்பு கடைசியாக சொன்ன வார்த்தை “விளக்கை அணைத்து விடுங்கள்” என்பது. இதனை தீர்க்கதரிசன வார்த்தைகள் என்று சில பத்திரிக்கைகள் அப்போது எழுதின. ஒத்தமைவு (Co-incidence) என்பதைத் தவிர வேறென்ன இதில் இருக்க முடியும்?

“அழிந்துடுவாய் வேண்டாம்; கெட்டுடுவாய் கெட்டுடுவாய் என்றால் கெட்டே போவார்கள்” என்று கண்ணதாசன் ஒரு முறை கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட அறிவுரை வழங்குகின்ற கவிஞர் பிறிதோரிடத்தில்

“மன்னவன் பசியால் சாக
மடையர்கள் கொழுத்து வாழ
தென்னவர் நாடு செய்தால்
தீயில்தான் சாம்ப லாகும்
அன்னையே தமிழே இந்த
அறம் வெல்ல வேண்டு கின்றேன்”

என்று தென்னவர் நாடு தீயில் சாம்பலாகுமென அறம் பாடுகிறார். அவர் முரண்பாடுகளின் மொத்த உருவமென்பது இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகிறது.

பாரதி மாத்திரம் என்னவாம்? தமிழ் வாழ வேண்டும் என்ற உள்ளூர எண்ணம் கொண்டிருந்த அந்த மகாகவிஞன் ‘மெல்லத் தமிழினி சாகும்’ என்று சொல்லியிருக்கக் கூடாதுதான். இன்று ஊடகங்களில் உச்சரிக்கப்படும் தமிழை காது கொடுத்து கேட்கையில் பாரதியின் வாக்குதான் பலித்து விட்டதோ என்ற ஐயம்தான் எழுகிறது.

எனது நண்பர் ஒருவர் எதற்கெடுத்தாலும் “எழவு” என்ற வார்த்தையை பயன் படுத்துவார். “என்ன இது ஒரே எழவா போச்சு” – இது அவர் வாயிலிருந்து அடிக்கடி வந்து விழும் வாசகம். ஒருநாள் அவருடைய வீட்டில் உண்மையிலேயே ஒரு “எழவு” விழுந்து விட்டது, அதற்குப் பிறகு அவரது வாயிலிருந்து அந்த வார்த்தை அறவே போய் விட்டிருந்தது.

அறம் பாடிய புலவர்கள் என்று தமிழ் இலக்கியத்தில் நாம் படித்திருக்கிறோம். அறம் என்றால் தர்மம். அரம் என்றால் சாபம். அரம் பாடிய புலவர்கள் என்று சொல்வதே சரியான வழக்கு என்று சிலர் வாதாடுவதுண்டு. எது சரியான சொற்பதம் என்று ஆராய்ந்து நான் குழம்பிப் போனதுதான் மிச்சம். பிரபலமான படைப்பாளிகள் அனைவரும் “அறம்” என்றே கையாண்டிருப்பதால் நானும் “அறம்” என்றே இங்கே கையாண்டிருக்கிறேன்.

“அவன் பொடி வைத்து பேசுகிறான்” என்று பலர் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறோம். உள்ளர்த்தம் வைத்து பேசுவதைத்தான் இப்படிச் சொல்கிறோம். இதே போன்று அறம் வைத்து பாடுவதென்றால் பிறருக்கு கேடு ஏற்படும் வண்ணம் வசை பாடுவது.

அறம் பாடுவதில் பலவகை உண்டு.

1) கடுமையான வார்த்தைகள், அறியாத வண்ணம் வாயிலிருந்து வந்து விழுந்து விடுவது முதல் வகை. 2) போற்றுவது போலும் தூற்றுவது போலும் இருபொருள் பட பாடுவது இரண்டாவது வகை.
3) வேண்டுமென்றே பிறர் நாசமடையும் வண்ணம் நேரடியாகவே சாபம் விடுவது மூன்றாவது வகை.
4) தனக்குத்தானே தீமை உண்டாவதற்கு தானே அறம் பாடிக் கொள்வது நான்காவது வகை.

ஒரு தமிழ்ப் பண்டிதர் தன் மாணவனைப் பார்த்து, கீழே அமர்ந்து படி என்ற அர்த்தத்தில் “இரும் படியும் பிள்ளாய்” என்று சொல்வதற்கு பதிலாக சேர்த்தாற்போல் “இரும்படியும் பிள்ளாய்” என்று சொல்லப்போக அவர் வார்த்தை பலித்து பிற்காலத்தில் அவன் இரும்படிக்கும் தொழிலாளியாக ஆகிவிட்டானாம். மறௌமலை அடிகளார் சொன்னது இது. அறியாமல் வரும் வார்த்தைகள் சிற்சமயம் “சொற்பலிதம் “ ஆகி விடுவதுண்டு.

இன்னொரு தமிழ்ப்புலவர் தன் வறுமையை போக்க வேண்டி ஒரு தனவானிடம் சென்று ஒரு தொகை கேட்டிருக்கிறார். புலவரைப் பார்த்து “காசு என்றால் உனக்கு அவ்வளவு லேசாக போய் விட்டதா?” என்ற பொருளில் “காசா லேசா?” என்று இளக்காரமாக தனவான் கூறியிருக்கின்றார். பணம் படைத்தும் மனம் படைக்காத கருமியின் வார்த்தைகள் புலவரின் உள்ளத்தை முள்ளாய் தைத்துவிட “காசாலே சா” என்று அவர் சொன்ன வார்த்தைளை வைத்தே பதம் பிரித்து சாபம் விட்டாராம்.

பிறர் வாயிலிருந்து இதுபோன்ற வார்த்தைகள் வந்து வீழாத வண்ணம் நம்மை நாமே காத்துக் கொள்வது நம் தலையாய கடமை. ஏனெனில் வஞ்சிக்கப்பட்டவனின் உள்ளத்திலிருந்து வேதனை கலந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கு இறைவனின் சபையில் உடனடியாக அங்கீகாரம் பெற்று விடுகிறது.

“தேரா மன்னா! செப்புவதுடையேன்” என்று பாண்டியன் நெடுஞ்செழியனின் சபையில் தன் கணவனுக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக வாதாடுகிறாள் கண்ணகி. தீர ஆராயாமல் தவறான ஒரு தீர்ப்பினை கோவலனுக்கு தந்து விட்ட மன்னன்

“யானோ அரசன், யானே கள்வன்
கெடுக என் ஆயுள்”

என்று தனக்குத்தானே அறம் பாடிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வை சிலப்பதிகாரத்தில் நாம் காண்கிறோம்.

அதே போன்று நல்லோரை விலக்கி தீயோரை தீக்கிரையாக்குவதற்கு கண்ணகி விடும் சாபம் இவ்வாறாக இருக்கிறது :

“பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டீர்
மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க ..”

என்று கண்ணகி விட்ட சாபத்தில் மதுரை மாநகரமே தீக்கிரையாகிய கதையை தன் காவியத்தில் வடிக்கிறார் இளங்கோவடிகள்.

முன்னொரு காலத்தில் நாகூரில் வாழ்ந்த இஸ்லாமியக் கவிஞர் ஒருவர் மீது வேறொருவர் பொய்வழக்கை தொடர்ந்து விட, வெகுண்டுப் போன கவிஞர்

“செல்லா வழக்கை என்மீது தொடுத்தானோ?
அல்லா விடுவானோ அம்புவீர்
நில்லாமல் போகும் அவன் வாழ்வும்…”

என்று அறம் பாட, பாடப்பட்டவரின் சந்ததியே சின்னா பின்னமாகி விட்டதாம்.

சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் தம்புச் செட்டி என்பவரிடம் ரமலான் மாதத்தில் பள்ளிவாயிலில் வினியோகிக்க வேண்டி மாம்பழம் தருவித்திருக்கிறார். அவை யாவுமே அழுகிப்போன பழங்களாக இருக்க பாவலருக்கு வந்ததோ கோபம்.

“கும்மியடிப் பெண்ணே கும்மியடி
தம்புச்செட்டி தலைதெறிக்க கும்மியடி”

என்று பாட அச்சமயம் மாடிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த செட்டியார் கீழே உருண்டு விழுந்தார் என்பார்கள்.

வேறொரு முஸ்லிம் புலவர் சாத்தான் குளம் என்ற ஊருக்கு வந்த போது அவருக்கு அங்கு கொடுமை நிகழ்ந்துப் போக மனம் புழுங்கி

“சாத்தான் குளத்தாரே சங்கைகெட்ட தீனோரே
சோத்தாரே நீங்கள் சுகம்பெறவே மாட்டீர்கள்”

என்று அறம் பாடிச் சென்றதாக ஏடுகள் பகர்கின்றன.

தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராக நக்கீரர் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். குயக் கொண்டான் என்னும் வடமொழிப் புலவனொருவன் தமிழகத்திற்கு வருகை புரிகிறான். தமிழ் மொழியை நீசர் பாஷை என்றும் வடமொழிக்கு நிகர் அது சற்றும் இல்லையென்றும் இழித்தும் பழித்தும் கூறுகிறான். தமிழைத் தரக்குறைவாக கூறுவதைக் கேட்ட நக்கீரருக்கு வந்த கோபத்தை கேட்கவா வேண்டும்? சினங் கொண்ட நக்கீரர்,

“முரணில் பொதியன் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி – அரணிய
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
ஆனந்தஞ் சேர்க்க சுவாஹா”

என்று அறம் பாடி விடுகிறார். வடமொழிப் புலவனின் உடல் தீயிற் பட்டால் போல எரியத் தொடங்கி விடுகிறது.

பாடுவார் முத்தப்பச் செட்டியார் என்ற புலவரொருவர் செட்டிநாட்டுப் பகுதியிலுள்ள செவ்வூர் என்ற ஊருக்குச் சென்றிருக்கிறார். நண்பகல் நேரம். புலவருக்கு கடும்பசி. அவரவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவரை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மனிதருக்கு வந்ததே கோபம்;

“எவ்வூர்க்குப் போனாலும் எத்தேசம் சென்றாலும்
செவ்வூர்க்குச் செல்ல மனம் செல்லாதே – அவ்வூரார்
பாத்திருக்க உண்பார்; பசித்தமுகம் பாரார்;
கோத்திரத் துக்கேற்ற குணம்.” –

என்று பாடி தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டார்.

அட்டூழியம் புரிந்துக் கொண்டிருந்த லிங்காநாயக்கன் மீது பாடுவார் முத்தப்பச் செட்டியார் அறம் வைத்து பாடிய வசைப்பாடல் இதோ :

“பத்தலார்க்கு உதவுபதி எரசு மேவும்
பாக்கியனே இம்முடிலிங்கேந்த்ரா நின்,
தத்துவாம் பரிகளெங்கே கிரீடமெங்கே
தண்டிகை பல்லக்குமெங்கே தனந்தான் எங்கே,
மெத்தை கொண்ட வீடுமெங்கே யதனுள்மேவும்
மேலான பவுசோடு பண்டாரமெங்கே
சுத்தவீரங்களெங்கே சும்மா போச்சோ
தொப்பைவீரனை வதைத்த தோடந்தானே!”

என்று சபிக்க அவருடைய செல்வமும் பதவியும் பறிபோய் துன்ப நிலையை அடைந்தார் என்ற செய்தியை ஏடுகள் மூலம் அறிகிறோம்.

‘ஆசுகவி வீசு புகழ்க் காளமேகம்’ என்றும் ‘வசைக்கொரு காளமேகம்’ என்றும் அழைக்கப் பட்டவர் கவிக்காளமேகப் புலவர். அபார கவித்திறன் பெற்றிருந்த இப்புலவரை கண்டால் எல்லோருக்கும் குலை நடுங்கும். கோபம் வந்தால் புலவர் அறம் பாடிவிடுவார், எங்கே ஏதாவது கடுமையானதொரு வார்த்தை அவர் வாயிலிருந்து வந்து விடுமோ என்று அஞ்சி அவர் கேட்கும் முன்பே அவருக்கு உணவளிப்பார்களாம்.

ஒருநாள் நாகை வீதியில் சிறுவர்கள் சிலர் பாக்கு கொட்டைகளை வைத்து ‘கோலி விளையாட்டு’ விளையாடிக் கொண்டிருக்க, பசிபொறுக்க மாட்டாத காளமேகம் “சோறு எங்கே விக்கும்?” என்று கொச்சைத் தமிழில் சிறுவர்களுக்கு விளங்கும் வண்ணம் கேட்டிருக்கிறார்.

நாகை வாழ் சிறுவர்களுக்கு கிண்டல் பேச்சுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? “சோறு தொண்டைக் குழியிலே விக்கும்” (விக்கல் எடுக்கும்) என்று நக்கல் செய்து விட்டார்கள். சினமடைந்த புலவர் ஒரு கரித்துண்டை எடுத்து தெருச் சுவற்றில் எழுத ஆரம்பித்து விட்டார்.

“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு….”

என்று எழுதிக் கொண்டிருக்கும் போதே பக்கத்திலிருந்த கோவிலில் ‘ஆலயமணி’ ஒலிக்க புலவர் அங்கே பிரசாதம் வாங்கிச் சாப்பிட விரைகிறார். அதைக் கண்ட சிறுவர்கள் முற்றுப் பெறாமால் இருந்த வாக்கியத்தில்

“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு தமிழ் மணக்கும் நன்நாகை”

என்று எழுதி வைத்து விட்டனர். திரும்பி வந்து பார்த்த காளமேகம் திகைத்துப் போய் நின்று விட்டார். ஏனெனில்

“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு தெறிக்க …..”

என்று வசைபாடும் எண்ணத்தில் எழுதத் தொடங்கிய வரிகளை தலைக்கீழாக மாற்றிவிட்ட சிறுவர்களின் சமயோசித புத்தியை எண்ணி வியந்துப் போகிறார்.

“நிர்தேவத்வம்” (தேவர்கள் இல்லாமை) என்று வரம் கேட்க நினைத்து “நித்ரத்துவம்” என்று நா பிரண்டு வரம் கேட்டமையால் மாதக்கணக்கில் கும்பகர்ணன் தூங்கியதாக புராணக்கதைகள் கூறுகின்றன.

கண்ணதாசனின் அண்ணன் மகனுக்கு மகன் பிறந்திருந்தான். கவிஞர் தன் பேரக் குழந்தையைக் காணச் செல்கிறார். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்கிறார்.

“அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்”

என்று தொடங்கி குமுதம் இதழில் ஒரு பாட்டாகவே வடித்து விட்டார். அவர் எழுதிய ஏழே நாட்களுக்குள் அந்தக் குழந்தை இறந்து விடுகிறது.

“அவனை எழுப்பாதீர்;
அப்படியே தூங்கட்டும்
என்றே நான் எழுதியதன்
ஈரம் உலரவில்லை;
ஏழுநாள் ஆகுமுன்னே
இளங்கன்று தூங்கி விட்டான்!
அறம் பாடி விட்டேனோ!
அறியேன்”

என்று துடிதுடித்துப் போய் விடுகிறார். அறம் பாடும் திறம் தனக்கும் முண்டு என்ற கவிஞரின் கற்பனையாகவும் இது இருக்கக் கூடும்

தண்டிவர்மனின் மகன், மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனுக்கு தன்மேல் அறம்பாடி கேட்கவேண்டும் என்ற விபரீத ஆசை வந்தது. நந்திவர்மனின் தம்பி, நாட்டை அபகரிக்க வேண்டி தன் தமையனின் தமிழார்வத்தை பயன்படுத்தி அறம் பாடுதலை கேட்க ஏற்பாடு செய்தான். அரண்மனையில் இருந்து மயானம் வரை நூறு பந்தல்கள் போடப்பட்டன. நூறாவது பந்தலின் மேல் நந்திவர்மனை இருத்தி புலவரைக் கொண்டு அறம் பாடசெய்தான். ஒவ்வொரு பாடலின் போதும் ஒரு பந்தல் எரிந்து போனது. இறுதியாக

“வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
வையகம் அடைந்ததுன் கீர்த்தி
கானுறுபுலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந் ததுன் கரங்கள்
தேனுறுமலராள் அரியிடம் சேர்ந்தாள்
செந்தழல் புகுந்ததுன் மேனி
யானுமென்கவியும் எவ்விடம் புகுவேம்
எந்தையே! நந்தி நாயகனே…”

என்ற பாடலை அப்புலவன் பாடியதும், பந்தல் தீப்பற்றி எரிந்தது. மன்னனும் தீயில் சிக்கி உயிர்நீத்தான். இதனை நந்திக்கலம்பகத்தில் காணலாம்.

“செய்யாத செய்த திருமலைரா யன்வரையில்
அய்யா அரனே அரைநொடியில் – வெய்யதழல்
கண்மாரி யால்மதனைக் கட்டழித்தாற் போல்தீயோர்
மண்மாரி யால்அழிய வாட்டு.”

என்று காளமேகம் அறம் பாட திருமலைராயன் ஆண்ட ஊரை நாசமுறச் செய்தான் என்ற தகவல் வேறு நமக்குக் கிடைக்கிறது.

அக்காலத்தில் அறம் பாடிய புலவர்கள் என்று பலபேர்கள் இருந்திருக்கிறார்கள். ஜவ்வாதுப் புலவர், ‘வெண்பாப்புலி’ வீர கவிராயர், வசைக்கவி ஆண்டான், சிங்கம்புணரி சித்தர் முத்தவடு நாதர், பாடுவார் முத்தப்பச் செட்டியார், கவிக் காளமேகம், இரட்டைப் புலவர்கள், என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.

இது தமிழ் மொழியின் சிறப்பென்றும், தமிழ் மொழியைக் கையாண்ட புலவர் பெருமான்களின் கவியாற்றல் என்றும் கற்றவர்கள் கருத்துரைக்கிறார்கள். இதனால்தானோ என்னவோ கவிபாடும் வல்லுனர்களிடம் கவித்திறனோடு சேர்த்து கர்வத்தையும் காண முடிகிறது. “படைப்பதினால் என் பெயர் இறைவன்” என்றார் கண்ணதாசன். பிறிதோரிடத்தில்

“கவிஞன் யானோர் காலக் கணிதம்
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை! அறிக!
நானே தொடக்கம்; நானே முடிவு!
நானுரைப்பது தான் நாட்டின் சட்டம்!”

இதனைக் கவிச்செருக்கு என்பதா? அல்லது தன் கவியாற்றலின் மேல் அவன் கொண்டிருந்த அதிகப் படியான மமதை கலந்த நம்பிக்கையா என்று சொல்லத் தெரியவில்லை. மேலும் அவர் நிதானத்தில்தான் இதை எழுதினாரா என்ற சந்தேகம்கூட பிறக்கிறது,

‘அறம் பாடுவது’ என்ற ஒரு துருப்புச்சீட்டினை வைத்துக் கொண்டே மக்களை அச்சுறுத்தி காரியத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில கீழ்த்தரமான புலவர்களும் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள். இம்முறைகேடுகளை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

எதற்குத்தான் அறம் பாடுவதென்ற ஒரு வரைமுறை இன்றியும் போயிருக்கிறது. காளமேகப்புலவர் இதற்கு நல்லதோர் உதாரணம். இஞ்சிகுடி என்ற ஒரு சிற்றூருக்கு அவர் சென்றிருந்த சமயத்தில் கலைச்சி என்ற தாசியிடம் உறவு கொள்ள ஆசைப் பட்டிருக்கிறார். இவரை அவள் உதாசீனப் படுத்த உடனே அவள் மீது அறம் பாடி விட்டார்.

“ஏய்ந்த தனங்கள் இரண்டும்இரு பாகற்காய்
வாய்ந்தஇடை செக்குலக்கை மாத்திரமே – தேய்ந்தகுழல்
முக்கலச்சிக் கும்பிடிக்கும் மூதேவியாள் கமலை
குக்கலிச்சிக் கும்கலைச் சிக்கு.”

அவலட்சணம் பொருந்திய மூதேவி கலைச்சியை நாய்தான் விரும்பும் என்ற அர்த்தத்தில் பாடலை முடித்திருப்பார். பயந்துப் போன கலைச்சி அவருடைய ஆசைக்கு இணங்க காளமேகம் ‘பல்டியடித்து’ அவளைப் புகழ்ந்து தொலைத்தாராம்.

தகாத செயல்களுக்குக் கூட தமிழ் மொழியை ஆயுதமாய் புலவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் அது தமிழுக்கே இழுக்குதானே?

அல்லலுற்றவன் அழுத கண்ணீர் கொடுஞ்செயல் புரிந்தவனை அழித்துவிடும் என்பது இயற்கையின் விதி. அந்த சாபம்/ அறம் தமிழில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. தமிழுக்கு மட்டுமே அந்த ஆற்றலுண்டு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தவறு செய்தவனை தண்டிக்க இறைவனுக்கு தமிழ்ப் புலவனது பரிந்துரைதான் தேவை என்பதில்லை. தமிழின் சிறப்பாக கூறப்படும் அறம் பாடும் கலையில் மிகைப் படுத்தப்பட்ட சில விஷயங்கள் காப்பிய நடைக்காக மெருகேற்றப்பட்டு இருப்பதென்னவோ முற்றிலும் உண்மை.

 – அப்துல் கையூம்

 

Tags: , ,

“லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா”


நாகூர் போன்ற கடலோரம் வாழும் முஸ்லீம்களுக்கிடையே இந்த பழமொழி அன்றாடச் சொல்வழக்கில் உள்ளது. பெரும்பாலோனோருக்கு இச் சொற்பதம் எந்த தருணத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும். ஆனால் இதன் உள்ளர்த்தம் என்ன? எதனால் இப்பழமொழி வழக்கத்திற்கு வந்தது என்ற விவரம் தெரிந்திருக்க நியாயமில்லை.

“முந்திரிக்கொட்டை” அல்லது “அதிகப்பிரசங்கி” என்று நாம் சாதாரணமாக வருணிக்கப்படும் ஒருவரைத்தான் இந்த பழமொழியை பயன்படுத்தி ‘பாசத்தோடு'(?) அழைக்கிறார்கள்.

“மீறுபல்” என்ற சொற்பதம் இங்கு வழக்கில் உள்ளது. பீர்பல் தெரியும். அது என்ன மீறுபல்? வரிசையாக இருக்கும் பற்களுக்கு நடுவே சிலருக்கு சிங்கப்பல் ஒன்று முளைக்கும்.
கோரப்பல் எனப்படும் canine teeth – அதைத்தான் நாம் சிங்கப்பல் என்கிறோம். இந்த பல்லைத்தான் “மீறுபல்” என்ற பொருத்தமான இலக்கியத் தமிழில் இங்கு விளிக்கிறார்கள்.
சிங்கப்பல் சிலருக்கு அழகும் சேர்க்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 70-களில் இந்திப்பட உலகில் பிரபலமாக இருந்த மெளஷ்மி சட்டர்ஜி இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

சான்றோர் சபையில் அர்த்தமுள்ள விவாதம் புரிகையில் யாராவது ஒருவர் அர்த்தமற்ற முறையில் அதிகப்பிரசங்கியாக ஒரு கருத்தினை எடுத்துரைப்பார். அல்லது நாம் ஒன்று
சொல்லி முடிப்பதற்கு முன்னரே அதை முழுதும் புரிந்துக்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக ஏதாவது உளறுவார். அப்படிப்பட்டவரை “லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா” என்று சாடுவது வழக்கம்.

“லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா” – இப்பழமொழியின் விரிவாக்கத்தை இப்போது நாம் காண்போம். “லெப்பை” என்ற வார்த்தை மருவி நாளடைவில் “லெவ்வை” என்று ஆகி
விட்டது. “மிஞ்சிய” என்ற பதம் “மீறிய” என்ற அர்த்தத்தில் கையாளப்பட்டுள்ளது. “குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்” என்று சொல்வதைப் போல. இன்னும் சொல்லப்போனால் “ஹராம்ஜாதா” என்ற பதம் மிகவும் அருவருக்கத்தக்கது. ஆங்கிலத்தில் அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமெனில் “Bastard” என்று சொல்ல வேண்டும். இந்த ஆங்கில வார்த்தையை
பயன்படுத்தினால் ‘வெட்டுக்குத்து’ நடக்கும். புரியாத மொழியில் சொல்வதினால் யாரும் ‘சீரியஸாக’ எடுத்துக் கொள்வதில்லை. “ஹராத்தில் பிறந்தவன்” “தவறான வழியில்
பிறந்தவன்” என்று இதற்கு பொருள் கொள்ளலாம். அதிகப்பிரசங்கித்தனமாக பேசிய ஒரே காரணத்திற்காக ஒருவரை இப்படிப்பட்ட பதத்தில் சாடி இழிவு படுத்துவது முறைதானா?
யோசித்துப் பார்க்கவேண்டிய ஒன்று.

(நல்ல வார்த்தைகளையே உரைக்க வேண்டும் என்ற நோக்கில் “நாசமத்துப் போ” என்ற தலைப்பில் திண்ணை இணைய இதழில் சில வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய
கட்டுரையை மீண்டும் “கடலோரம்” என்ற வலைப்பதிவில் ஒரு வாசக அன்பர் மீள்பதிவு செய்திருக்கிறார். அது உங்கள் பார்வைக்கு)

லெப்பை என்பவர் யார்? வர்த்தக சமூகத்தை சார்ந்தவர்கள் இவர்கள். 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரபு நாட்டிலிருந்து சோழமண்டலம் மற்றும் கடற்கரையோர பகுதியில் வந்து

குடியேறியவர்கள். லெப்பைக் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான் லெப்பை. லெப்பைக் என்றால் அரபு மொழியில் “:இதோ வந்துவிட்டேன்” என்று பொருள்.

“லெப்பைக், அல்லாஹும்ம லெப்பைக். லெப்பைக், லாஷரீக்கலக லெப்பைக்” என்ற வாக்கியத்தின் முதற்சொல்.

மக்கமா நகரத்தில், இறையில்ல வழிபாட்டின்போது. “இறைவா! உன் நாட்டப்படி இதோ நான் உன் இல்லத்தை தேடி வந்து விட்டேன்” என்று புனித யாத்ரீகர்கள் எழுப்பும் கோஷத்தின் சாராம்சம்.

பள்ளி வகுப்பில் வாத்தியார் வருகைப்பதிவு (Attendance) எடுப்பார். ஒவ்வொரு பெயராக அவர் வாசிக்கையில் மாணவர் எழுந்து நின்று “உள்ளேன் ஐயா” என்றோ “Present Sir” என்றோ உரக்கச் சொல்வார்கள்.

இறையில்ல சன்னிதானத்தில் “இதோ நான் வந்து விட்டேன்” என்று கொடுக்கப்படும் வருகைப்பதிவுதான் “லெப்பைக்” என்ற தல்பியா.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் லெப்பை என்ற கருத்து பொதுவாகவே நிலவுகிறது. அது தவறு. வேலூர், மேல்விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களும் லெப்பை என்று அழைக்கப்படுகிறார்கள். அதற்கு மாறாக கீழக்கரை, காயல்பட்டினம், அதிராம்பட்டினம் போன்ற கடலோரப்  பகுதிகளில் வாழும் லெப்பைமார்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

லெப்பைமார்களில் ஒருசாரார் அரேபியா, எமன், ஈரான் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், இன்னொரு சாரார் எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்
என்றும் சரித்திரம் சான்று பகர்கிறது.

லெப்பை என்றதும் என் நினைவுக்கு முதலில் வருவது, முதல் தமிழ் நாவலான “அசன்பே சரித்திரம்” எழுதிய பத்திரிக்கையாளரும், கல்வியாளரும், சமூக சேவையாளருமான
மு.கா.சித்திலெப்பை. அடுத்து உமர்கய்யாமின் “ரூபாய்யாத்” கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்த அப்துல் காதர் லெப்பை. அதைத் தொடர்ந்து 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
அப்துல் காதிறு நெய்னா லெப்பை என்ற ஆலிம் புலவர்,

மேலும் கீரனூர் ஜாகிர் ராஜாவின் “கருத்த லெப்பை” நாவலில் வரும் கதாபாத்திரம் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இராணி மங்கம்மாள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த “லெப்பைக் குடிகாடு” என்ற ஊரின் கதை நம் பதிவுக்கு மேலும் சுவையூட்டும்.
தஞ்சை மற்றும் இதர மாவட்டங்களைச் சார்ந்த ராவுத்தர்மார்கள் கூடியேறிய இவ்வூருக்கு ஏன் லெப்பைக்குடிகாடு என்ற பெயர் வந்தது என்று நம்மை மூளையைக் கசக்க வைக்கிறது. ‘லெப்பைக்’ என்ற தல்பியா தஸ்பீஹை அடிப்படையாகக் கொண்டு இவ்வூருக்கு லெப்பைகுடிக்காடு என பெயர் சூட்டினராம்.

லெப்பைமார்கள் என்றாலே பாத்திஹா ஓதும் மவ்லவி, ஹஸ்ரத்மார்களை குறிக்கும் வண்ணம் தவறான ஒரு கருத்தை சில மார்க்க இயக்கங்கள் பரப்பி வருவது வருத்தத்திற்குரியது. அரபு மொழியை கற்றுத்தரும் ஆசான் பணிகளை லெப்பைமார்கள் மேற்கொண்டிருந்தனர் என்பது உண்மை.

“லெவ்வெக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா” என்ற இந்த பழமொழி வழக்குத்தமிழில் வந்த காரணத்தை இப்போது ஆராய்வோம்.

ஒரு ஊரில் ஒரு லெப்பை இருந்தாராம். மாணவர்களுக்கு அரபுமொழி கற்றுக் கொடுப்பது அவரது ஆசிரியப் பணியாக இருந்தது. லெப்பை அவர்கள் அரபு மொழி அட்சரமான முதல்
எழுத்தை “அலீப்” என்று உரக்கச் சொல்லிக் கொடுப்பார். மாணவர்கள் அவரைத் தொடர்ந்து “அலீப்” என்று உரக்க வழிமொழிவார்கள். அடுத்து “பே” என்று சொல்ல, அடுத்து “தே” என்று
சொல்ல, ஆசானை அதுபோலவே மாணவர்கள் பின் தொடருவார்கள்.

இப்படிப்பட்ட மாணவர்களுக்கிடையே ஒரு “மீறுபல்லு” மணவன் ஒருவன் இருந்தான். ஆசான் “அலீப்” என்று சொல்லிக்கொடுக்க இவன் அதிகப்பிரசங்கியாக “பே” என்ற அடுத்த
அட்சரத்தை உச்சரிப்பான். இதுவே அந்த ‘முந்திரிக்கொட்டை’ மாணவனின் வழக்கமாக இருந்தது

இவனைத்தான் அந்த “லெவைக்கி மிஞ்சிய “ஹராம்ஜாதாவாக” உருவகப்படுத்த, இன்று நம் எல்லோர் வாயிலும் இந்த பழமொழி படாதபாடு படுகிறது.

இந்த மூன்று வார்த்தை பழமொழிக்கு இப்படியொரு மூச்சு முட்டும் விளக்கமா என்று வாசகர்கள் பெருமூச்சு விடுவதை என்னால் உணர முடிகிறது.

என்ன செய்வது? இனிமேலாவது இதுபோன்ற அருவருக்கத்தக்க வார்த்தைகளை நாம் தவிர்க்கப் பழகுவதே இப்பதிவின் நோக்கமேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!.

லெப்பைமார்களுக்கு மட்டும்தான் பழமொழியா மற்றவர்களுக்கு கிடையாதா என்ற கேள்வி எழலாம். இதோ ராவுத்தர்களுக்காக ஒரு பழமொழி. “ராவுத்தரே கொக்கா பறக்கிறாராம்.
குதிரை கோதுமை ரொட்டி கேக்குதாம்”.

– அப்துல் கையூம்

 

Tags: ,

மீண்டும் “பப்படம்”


பப்படத்தைப் பற்றி பதிவு போட்டால் அது “பப்படம்” (FLOP) ஆகிவிடும் என்று நினைத்தேன். எப்பொழுதோ எழுதிய இப்பதிவை “ஆஹா பக்கங்கள்” மீள்பதிவு செய்ய ‘ஆஹா’ ‘ஓஹோ’வென்று பாராட்டிய வாசக அன்பர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். இதோ அந்த “ஆஹா” பக்கம்:

பப்படம்  (Click Here)

 

Tags:

பப்படம்


“மொளவுத்தண்ணியைப் பத்தி எழுதுட்டீங்க. அடுத்தது என்ன பப்படமா?” என்று நண்பர் அடியக்கமங்கலம் ஜாபர் சாதிக் என்னை போட்டுத் தாக்கினார். “அதுக்கென்ன. எழுதுனாப் போச்சு” என்று விளையாட்டாகச் சொல்லி விட்டேன். உண்மையிலேயே பப்படத்தைப் பற்றி ஒரு பதிவு போடுவேன் என்று நானே எதிர்ப்பார்க்கவில்லை.

அவர் ஊர் பற்றிய குட்டிக்கதை ஒன்று நினைவுக்கு வந்தது. மங்களம் என்ற பெண்மணியும் அவளது சகோதரியும் ஆத்தங்கரைக்கு குளிக்கச் சென்றார்களாம். அப்போது மங்களத்தை ஆற்றுத் தண்ணீர் அடித்துக்கொண்டு போய் விட்டதாம். “அடி அக்கா! மங்களம்! போயிட்டியே!” என்று அழுது புரண்டு அலறி அடித்துக் கொண்டு வீதியில் அவள் தோழி ஓடி வந்தாளாம். அந்த நேரத்தில் ஊருக்கு புதிதாக வந்த வெள்ளைக்கார துரை அவளிடம் சென்று “What is the name of this place?” கேட்க, ஒப்பாரியை நிறுத்தாமல் “அடி அக்கா! மங்களம்” என்று மறுபடியும் கூவியிருக்கிறாள். இதுதான் இந்த ஊரின் பெயர் என்று எண்ணி “அடியக்க மங்கலம்” என்று பெயர் வைத்துவிட்டு போய்விட்டானாம் வெள்ளைக்காரதுரை.

இது ஒரு வேடிக்கைக்காக சொல்லப்படும் கதைதான். “அடியற்கை மங்கலம்” அல்லது “அடியார்க்கு மங்கலம்” என்றுதான் உண்மையிலேயே இருந்திருக்க வேண்டும். அடியார்களுக்கு மங்கலம் உண்டாக்கக் கூடிய இடமாக அது இருந்திருக்கிறது.

இதுபோன்ற எத்தனையோ கதைகள் நம்மிடையே உலவுகின்றன

முந்திரிக்கொட்டை விற்றுக் கொண்டிருந்தாளாம் ஒரு கூடைக்காரி. அவளிடம் சென்று வெள்ளைக்கார துரை “How much is this?” என்று கேட்க, கேள்வியைப் புரிந்துக்கொண்ட பெண்மணி “காசுக்கு எட்டு” என்று சொன்னாளாம். அதுவே பின்னர் “Cashew Nut” என்று ஆங்கிலப் பெயராக ஆகிவிட்டதாம்.

தயாரிப்பு நம்முடையதாக இருந்த போதிலும் அதற்கு பெயர் வைப்பதும், விலைநிர்ணயம் செய்வதும் வெள்ளைக்கார துரை கையில்தான் இருந்தது.

ஊரான் ஊரான் தோட்டத்துலே
ஒருத்தன் போட்டா வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்

என்ற நாட்டுப்பாடல் இவ்வுண்மையை உணர்த்தும்.

இரண்டாம் உலகப்போரின் போது நாகூர் மக்களின் குடிசைத் தொழிலாக தடுக்கு முடைதல், பாய் முடைதல், ஓலை விசிறி, சங்கு வெட்டி பாலிஷ் செய்தல், சுருட்டு தயாரிப்பு, பப்படம் செய்தல் – இப்படி பலதரப்பட்ட கைத்தொழில்கள் வாழ்வாதரமாக இருந்திருக்கிறது.

நாகூருக்கு வந்த வெள்ளைக்கார துரை பப்படத்தை பார்த்து விட்டு “வாவ்! வாட் இஸ் திஸ்?” என்று கேட்க, “திஸ் இஸ் பப்படம்” என்று யாரோ சொல்ல “வொண்டர்ஃபுல் நேம். பப்படம்” என்று சொல்லிவிட்டு ஆங்கில அகராதியிலும் இந்த “பப்படத்தை” ஏற்றிவிட்டானாம்.

“பெரிய நானா” (Big Brother) டிவிஷோவில் Jade Goody ஷில்பா ஷெட்டியை பப்படம் என்று வசைபாட இந்த ‘பப்படம்’ அகில உலகத்திலும் பிரபலமாகி விட்டது. இனவெறி கண்ணோட்டத்தில் திட்டியதாக சர்ச்சை எழுந்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சொற்பதம் ‘பன்னாடை’ ‘பரதேசி’ என்று பொருள்படும்படி வசை பாட அவர்களுக்கு பயன்படுகிறதாம். ஷில்பாவின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது “பப்படம்” என்ற இந்த வார்த்தைதான்.

அடப்பாவிகளா! தின்பதற்காக பயன்படும் உணவுப் பண்டத்தை எப்படியெல்லாம் உதாரணம் காட்ட பயன்படுத்துகிறார்கள் என்று திட்டித் தீர்க்கலாமே என்று பார்த்தால், நாம் மட்டும் என்ன யோக்கியமா என்று எனக்குள்ளே கேள்வி எழுந்தது. ‘நொந்துப் போய்விட்டேன்’ என்று சொல்வதற்கு ‘நொந்து நூடுல்ஸாகி விட்டேன்’ என்று சீன உணவுப்பொருளை நாம் சொல்வதில்லையா? சீனாக்காரன் இதைக் கேள்விப்பட்டால் அவன் முதலில் நொந்து நூடுல்ஸாகி விடுவான்.

தமிழ்நாட்டில் ஏதாவதொரு திரைப்படம் Flop ஆகிவிட்டால் “படம் பொப்படம் ஆகிவிட்டது” என்று சொல்வதுண்டு.

நாகூரைப் பொறுத்தவரை நீளமாக உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் அயிட்டத்திற்கு பப்படம் என்று பெயர். வட்ட வடிவமாக இருப்பதற்குப் பெயர் அப்பளம். பப்படம் Unbranded goods. அப்பளம் Branded goods. (உதாரணம் அம்மாமி அப்பளம், பாப்புலர் அப்பளம்). ‘பொப்படம்’ என்ற பெயரில் அயர்லாந்தில் பிரபலமான உணவகம் ஒன்று இருக்கிறது.

அப்பளம் தயாரிப்பில் பிராமணர்கள் பிரசித்தம் என்றுச் சொன்னால் பப்படம் தயாரிப்பில் நம்மவர்கள் பிரசித்தம். நாகூர் சாப்பாட்டு மெனுவில் பப்படம் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும்.

பொதுவாக அப்பளம் என்று தமிழகத்திலும், அப்படம் என்று தெலுங்கிலும், அப்பளா என்று துளு மொழியிலும், ஹப்பளா என்று கன்னடத்திலும், பாப்பட் என்று இந்தியிலும்  அழைக்கப்படுகிறது.

அப்பள வியாபாரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முன்பு குதித்தது ஞாபகமிருக்கும். இந்தி தாரகை ஷில்பா ஷெட்டியும் அப்பளச் சட்டியில் டைவ் அடித்து விட்டார். நாளை ‘நானா கத்தா’ தயாரிப்பில் ‘லாரா தத்தா’ இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஷில்பாவின் தயாரிப்புக்குப் பெயர் “ஷில்பா பொப்படம்”.

நம்ம ஊரில் ஜொஹராமா லாத்தாவும், சின்னாச்சிமாவும் இந்த பப்படம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு சிறிய உருண்டை பொப்பட மாவை கையில் வைத்துக் கொண்டு, பலகைக்கட்டையில் லாவகமாக உருட்டி ஒரு கட்டு பப்படத்தை தயாரித்து விடுவார் சின்னாச்சிமா.

ஷில்பாவின் டெக்னிக்கை பின்பற்றி இருந்தால் இந்நேரம் “சின்னாச்சிமா பப்படம்” உலகச் சந்தையில் விற்பனையில் போட்டி போட்டிருக்கும். 

ஷில்பாவும் ஜேட் கூட்டியும் தோழிகளாகினர். ஜேட் கூட்டி கேன்சர் ஏற்பட்டு மறைந்தும் விட்டார். ‘பொப்படம்’ என்ற இந்தப் பெயரை தன் தோழியின் நினைவாக வைத்திருப்பதாக அவர் சொன்னது மனதை நெகிழ வைத்தது. ஜேட் கூட்டி மரணத்திற்கு முன்பு சாப்பிட ஆசைப்பட்டது எது தெரியுமா? பொப்படம்தான். 

– அப்துல் கையூம்

 

Tags: , ,