RSS

Category Archives: ஏழைக் குசும்பு

நாகூர் வட்டார மொழியாய்வு – 1


ஏழைக் குசும்பு

நாகூர் மக்களின் புழக்கத்திலிருக்கும் வட்டார மொழியில் காணப்படும் சுவையை அசைபோடும் எனக்கு அவை யாவையும் தொகுத்து ஒரு நூலாகவே வெளியிடும் எண்ணம் எனக்குள்ளது. நான் ஆய்வு செய்து வைத்திருக்கும் விடயங்களை ஒவ்வொன்றாக என் வலைப்பூவில் பதிப்பிக்க நாட்டம் (இன்ஷாஅல்லாஹ்) கொண்டுள்ளேன்.

நண்பர் ஒருவரின் வாயால் “ஏழைக்குசும்பு” என்ற வார்த்தையை கேட்டேன். வேறொரு நபர் அவரை சதா நையாண்டி செய்து பாடாய்ப் படுத்தியிருக்கிறார். அந்த நபர் இவரைவிட பணவசதியிலும், குடும்பநிலையிலும் சற்று குறைந்தவர். பொறுத்துப் பொறுத்து பார்த்த இவர் அவரைப் பற்றி என்னிடம் குறை கூறும் போது “அது வேற ஒண்ணுமில்லே நானா! ஏழைக்குசும்புன்னு சொல்லுவாஹல்லே. அதுதான்” என்றார்.

“ஏழைக்குசும்பு” என்ற வட்டார வழக்கை நானும் இதற்குமுன் பல முறை செவியுற்று இருக்கிறேன்.

அது என்ன ஏழைக்குசும்பு?

குசும்பு செய்வது ஏழைகள் மட்டும்தானா? பணக்காரர்கள் நக்கல், நையாண்டி செய்வதில்லையா? பணக்காரர்கள் செய்தால் அதற்குப் பெயர் “பணத்திமிர்”, ஏழைகள் செய்தால் அதற்குப் பெயர் “ஏழைக்குசும்பு” என்று சொல்கிறார்களா?

ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசம் பார்க்காத சமூகமாச்சே நம் சமூகம்! வந்தாரை வாழவைக்கும் சிங்கார நாகூர் என்று போற்றுகிறார்களே!

என் சிறுவயதில் கஜ்ஜாலி காக்கா என்ற மார்க்க ஞானம் பெற்ற பெரியவர் தன் கடைக்கு (அயல்நாட்டுப் பொருட்கள் விற்பனை) வெங்கடாஜலம் (லெவல்) என்ற தலித் இளைஞனை ‘சேல்ஸ்மேனாக’ நியமித்து பாகுபாடு களைய வைத்து புரட்சி செய்தது நினைவுக்கு வந்தது. சட்டை போடவே தயங்கும் அவர்களில் ஒருவரை, புது வேட்டிச்சட்டை அமர்க்களமாக உடுத்தி வைத்து அழகு பார்த்த காட்சி இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க “ஏழைக்குசும்பு” என்ற வார்த்தையின் பின்னணியை ஆராய்ந்த போது அது ஒரு நல்ல சொற்றொடரை வார்த்தது.

“இயலாக் குசும்பு” என்ற வார்த்தைதான் நாளடைவில் உருமாறி “ஏழைக்குசும்பு” என்றி ஆகி விட்டது.

நேருக்கு நேர் ஒருவனுடன் மோத இயலாதவன், இயலாத காரணத்தினால் வேறு விதமாக, வார்த்தையினால் அவனை கேலி செய்து தன் வஞ்சத்தைத் தீர்த்து கொள்கிறான்.

இது அவனது “இயலா குசும்புதானே???

– அப்துல் கையூம்