RSS

Category Archives: நகுதா

நகுதா


– அப்துல் கையூம்

நாகூரில் வாழ்ந்த வணிகப் பெருமக்கள் நகுதா, மரைக்கார், மாலிமார், செறாங்கு, சுக்காணி என்ற பெயர் தாங்கி வாழ்ந்தனர். ‘மரக்கலராயர்’ என்ற பெயர் மருவி மரைக்காயர்/மரைக்கார் ஆனதும், ‘மாலுமியார்’ என்ற சொல் மருவி மாலிம்/மாலிமார் ஆனதும் எல்லோரும் அறிந்ததே. தென்பகுதியில் மற்றுமொரு முக்கிய துறைமுகமாக விளங்கிய பரங்கிப்பேட்டையிலும் நகுதா என்ற பெயரை பரவலாகக் காண முடிகிறது. அங்கு ‘நகுதா மரைக்காயர் தெரு’ என்று ஒரு வீதியே இருக்கிறது.

நாகூர் வணிகர்கள் சொந்தமாக கப்பல் வைத்து வணிகம் புரிந்த விவரத்தை பிற்பாடு காண்போம். இவர்கள் சிறிய பாய்மரக் கப்பல்கள் மூலம் இலங்கை, கீழைநாடுகள் மட்டுமின்றி கல்கத்தா போன்ற நகரங்களுடனும் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தனர். [படம்: 1926-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அப்துர் ரஹீம் உஸ்மான் என்பவரால் கட்டப்பட்ட இந்த பள்ளிவாயிலுக்கு Nakhoda Mosque என்று பெயர்]

Nakhoda என்ற பெயரின் மூலத்தை ஆராய்கையில் பல சுவையான தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

Nao + Khoda என்ற கூட்டு வார்த்தைதான் Nakhoda என்று வாதிடுகிறார் முனைவர் ஜே.ராஜா முகம்மது. இவர் “Maritime History of Coromandel Muslims 1740-1900”) என்ற ஆய்வு புத்தகத்தை எழுதிய ஆய்வாளர்.

அரபு மொழியில் Nokhoda என்றால் Chief என்று அர்த்தம். பாரசீக மொழியில் “Khoda” என்றால் மாஸ்டர் அல்லது கேப்டன் என்று அர்த்தம். “Nao” என்ற வார்த்தை “நாவாய்” என்ற சங்ககால வார்த்தையிலிருந்துதான் உருவாகி இருக்கிறது என்பது அறிஞர்களின் கருத்து.

தமிழில் ‘நாவாய்’ என்ற சொல் தொன்றுதொட்டு கப்பலைக் குறிப்பதாகும். ஆங்கிலத்தில் கையாளப்படும் ‘Naval’ , ‘Navy’ போன்ற சொற்கள் தமிழ் மொழியிலிருந்து பிறந்த வார்த்தை என்ற செய்தி நம்மைத் தலை நிமிர வைக்கிறது. கப்பலும், கப்பல் வணிகமும் தொன்று தொட்டு தமிழர்களின் கைவந்த கலையாக இருந்து வந்திருப்பதை சரித்திரம் நமக்கு எடுத்துரைக்கின்றது.

விரிவாகச் சொல்ல வேண்டுமெனில் சங்க இலக்கியத்தில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில் போன்ற பல வார்த்தைகள் கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலன்களை குறிப்பதை நாம் அறிய முடிகிறது. இதில் திமில், அம்பி – இவையிரண்டும் மீன் பிடித்தலுக்கும், பெரிய கப்பலிலிருந்து பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு வரவும் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. வங்கம், நாவாய் – இவையிரண்டும் நீண்ட கடற்பயணத்திற்கும், கடல் வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மற்றொரு ஆராய்ச்சி இது. நூஹ் நபி (அலை) அவர்களுடைய பெயர் பைபிளில் “Noah” என்று அழைக்கப் படுகிறது. நூஹ் நபி (அலை) அவர்களுடைய கப்பல் “Noah’s Ark” என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. எனவே “Navy” “Naval” என்ற வார்த்தை “Noah” என்ற வார்த்தையிலிருந்து பிறந்ததாகவும் கருதப் படுகிறது.

அந்த கூற்றின்படி ஆராய்ந்தாலும் தமிழின் தொன்மையை வைத்து பார்க்கும்போது, தமிழ் மொழி “மகா பிரளயம்” ஏற்பட்டதற்கு முன்பே தழைத்திருந்தது என்ற வாதத்தையும் நாம் மறுப்பதற்கில்லை.

ஆங்கில அகராதியில் “Navy” “Naval” என்ற வார்த்தையின் ஆதிமூலம் “நாவாய்” என்ற வார்த்தைதான் என்று பதிவாகியுள்ளது.

எனவே “நகுதா” (Nao + Khoda) என்ற பாரசீக/ அரபு வார்த்தையில் தமிழ் மொழியின் தாக்கம் இருக்கிறதென்பதற்கு போதுமான ஆதாரம் இருக்கிறது.

கட்டுமரம் என்ற தூயதமிழ் வார்த்தை ”கட்டமரான்” (catamaran) என்ற ஆங்கில வார்த்தையாய் உருமாறிப் போனதைப் போன்று “நாவாய்” என்ற தமிழ் வார்த்தை “Navy” “Naval” என்று ஆகியிருக்கிறதென்பது நமக்கு நன்கு விளங்குகிறது.

இலங்கையில் தமிழ் வணிகனாகிய நாவாய் தலைவன் தென்னிந்தியாவில் இருந்து குதிரையை கொண்டு வந்து விற்பனை செய்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன.

இராமனாதன் எழுதியிருக்கும் “இலங்கைச் சோனகர் இன வரலாறு” என்ற ஆராய்ச்சிக் கட்டுரை கடலோரவாழ் தமிழ் முஸ்லீம்கள் (சோனகர்) பற்றிய பல அரிய செய்திகளை நமக்கு அள்ளி வழங்குகின்றது. சோனகரைப் பற்றி குறிப்பிடுகையில் “சோனகர், ஆபரண வணிகராகவும், மாணிக்கக்கல் விற்பன்னராகவும், முத்துக்களைச் சேகரிப்போர்களாகவும் இருந்தார்கள்” என்று குறிப்பிடுகின்றார்.

யுவான் சுவாங், பாகியான், முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள் தமிழர்களின் கடல் வணிபத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றன. 1344-ஆம் ஆண்டு நம் கடலோரப் பகுதிகளுக்கு வருகை புரிந்த இப்னு பதூதா நம்மவர்களின் கடல் வணிபத்தைப் பற்றிய குறிப்புகள் எழுதி வைத்துள்ளார். டாலமி (Ptolemy – 79 A.D.), பெரிப்ளஸ் (Periplus – 86 A.D.) பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகளிலும் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

பருவக்காற்றை கண்டு பிடித்தது கிரேக்கர்கள் கிடையாது, தமிழர்கள்தான் என்று அடித்துக் கூறுகிறார் ஆய்வாளர் திரு.எஸ்.சாமிநாதன். தமிழ் இலக்கியத்தில் சில அதிசய காட்சிகள்” என்ற ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கும் லண்டன் பல்கலைக்கழகத்து பேராசிரியர் இவர். பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளி நாட்டவர்களுக்குக் கற்றுத் தரவில்லை என்றும் தமிழர்களுக்குத்தான் கற்றுத் தந்தார்கள் என்று கூறுகிறார். அராபியர்கள் தமிழர்களுக்கு கற்றுத் தந்த வழிவழியாய் வந்த அந்த தொழில் நுட்பம் இறுதியாக கடலோர தமிழ் முஸ்லீம்களான மரைக்காயர். மாலுமியார் சமூகத்தார் பற்றிக் கொண்டார்கள் என்பதை நம்மால் எளிதில் ஊகிக்க முடிகிறது.

“தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர். டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசியத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு, குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிரமாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்”. என்கிறார் ஆய்வாளர்.

வியாபார நிமித்தம் கப்பலோட்டிய நம்மவர்கள் இந்த பருவக் காற்று ரகசியத்தை அறிந்து வைத்திருந்தார்கள் என்பது புலனாகிறது

பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் கிப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும், கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்ததென்றும் மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்திருக்கும் சரித்திரக் குறிப்பில் சற்றும் உண்மை கிடையாது என்று கூறும் சாமிநாதனின் வாதத்தில் வலு இருக்கின்றது.

”நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
– (புறநானூறு – பாடல் 66)

(இச்சொற்களின் பொருள்: – வளி – காற்று, முந்நீர் – கடல், நாவாய் – கப்பல்). வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் இது.

“மதயானை நிறைந்த படைகளை உடைய கரிகால் வளவா! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள்” என்று இதற்குப் பொருள்.

கரிகால் பெருவளத்தான் 2200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவன். கிரேக்க அறிஞன் கிப்பாலஸ் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவன். எனவே கிப்பாலஸ் பருவக்காற்று நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே நம்மவர்கள் அந்த ரகசியத்தைக் கண்டுபிடித்து கடலோடிகளாக இருந்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகிறது.

முன்னாள் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் ஜெ. ராஜா முகம்மது திரட்டி வைத்திருக்கும் இந்த கீழ்க்கண்ட தகவல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

நாகூர் மரைக்காயர்கள் கப்பலை பிரஞ்சு நாட்டு போர்க்கப்பல்கள் வளைத்துப் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டு சமர்பித்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ள பதினேழு பேர்களுள் பதிமூன்று பேர் முஸ்லிம்கள். அவர்களது பெயர் பட்டியலில் அலிசாயபு நகுதா, பீர் சாஹிப் நகுதா, பக்கீர் முகமது நகுதா, சையது முகமது நகுதா, மதார் சாஹெப் நகுதா, சித்தி முகமது இப்ராஹிம் நகுதா போன்ற நகுதாக்களின் பட்டியலோடு முகமதலி மரைக்காயர், முகமது ஹபீப் மரைக்காயர், முகமது சையது மரைக்காயர்,  சுலைமான் மாலுமி, ஹபீப் முகமது மாலுமி,  முத்துனா சாஹிப், சையது இஸ்மாயில் லப்பை இவர்களின் பெயரும் காணப்படுகிறது. (ஆதாரம்: ibid No. 4252 pp. 148-49)

பெரும்பாலும் கப்பல் உரிமையாளர் கப்பலில் செல்வது கிடையாது. கப்பல் தலைவரான நகுதாவின் பொறுப்பில் கப்பல் ஒப்படைக்கப்படும். நகுதாவும் தனது ஊதியத்திற்குப் பதிலாக தனது வணிகப் பொருட்களை கப்பலில் ஏற்றிச் செல்லுவார். நாகூர் வணிகர்களின் வணிக நடைமுறைகள் பழக்கங்கள் குறித்த சுவையான பல செய்திகள் ஐரோப்பியரின் பதிவேடுகளில் நமக்கு கிடைக்கின்றன.[TDCR No. 3337 p.45]

நாகூரில் வசித்த அசன் குத்தூஸ் மரைக்காயர், லார்டு ஹாரிஸ் என்ற கப்பலுக்கு உரிமையாளர். இவர் 1890-ல் சாமிநாத செட்டியார் என்பவரிடம் ரூ.10,000 கடனாகப் பெற்று, பெற்ற கடனை திருப்பி அளிக்க முடியாமல் கப்பலையே கொடுத்து ஈடு கட்ட வேண்டியதாயிற்று. [ஆதாரம் :Public consultation, Vol. No. 831 p. 7-9. 1848; Vol. 832 p.7-9, 1848]

நாகூர் பக்கிர் மரைக்காயர் 1823-ல் இலங்கையிலிருந்து அனுமதியின்றி பாக்கு ஏற்றிக் கொண்டுவந்தபோது கண்டுபிடிக்கப்பட்டு அவரது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது [ஆதாரம் : TDCR No. 3325 p. 65; Public consultation Vol. 340 pp. 2450-60; Pleading of Mayors Court 1745, Vol V. pp. XV-XXI; India and Indian Ocean 1500-1800 (Ed) Ashin Das Gupta and M.N. Pearson, Calcutta-1987. pp. 10-19]

நாகூருக்கு வருகை தந்து பதிவேடுகளை ஆராய்ந்து, தொடர்புடைய வழித்தோன்றல்களிடமிருந்து தகவல்கள் திரட்டி, தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கும் தஸ்தாவேஜுகள், ஏனைய போதுமான ஆதாரங்களோடு மேற்கண்ட ஆய்வுகளை வெளியிட்டிருக்கும் முனைவர் ஜே.ராஜா முகம்மது அவர்களின் அரும்பணி நாகூர்காரர்கள் நினைவு கூறத்தக்கது.