RSS

Category Archives: நாகூரும் சுருட்டும்

நாகூரும் சுருட்டும்


சர்ச்சிலின் மீதி சுருட்டு

‘சுருட்டு’ என்றதும் சீட்டுக் கம்பெனிகள்தான் ‘சட்’டென்று ஞாபகத்திற்கு வருகிறது. அவர்கள்தான் ‘கிரைண்டர் கொடுக்கிறேன்’, ‘பிரிட்ஜ் கொடுக்கிறேன்’ என்று நம்மூருக்கு வந்து ஆசை வார்த்தைகள் காட்டிவிட்டு இரவோடு இரவாக பணத்தை ‘சுருட்டி’க்கொண்டு ஓடி விடுகிறார்கள். ‘சுருட்டு’ என்றதும், சிலகாலத்திற்கு முன்பு சர்ச்சைக்குள்ளான, சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ‘சுருட்டு சாமியாரின்’ பெயரும் நம் நினைவில் வராமலில்லை.

நாகூர் தெற்குத் தெருவில் சர்ச்சில் மாமா என்ற பெரியவர் இருந்தார். இங்கிலாந்து பிரதமருக்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும். வின்ஸ்டன் சர்ச்சிலைப் போன்று இவர்களும் சுருட்டும் சகிதமாக காட்சி தந்ததால் இந்த கம்பீர காரணப் பெயர்.

இதனை எழுதுகையில் என் இளம் வயது நினைவுகளை வாசகர்களிடம் பரிமாறாமல் இருக்க முடியவில்லை. என்னுள்ளத்தில் இன்னும் பசுமையாய் படித்திருக்கும் நினைவுகள் அவை. என் பாட்டிமாவுக்கு சுருட்டு என்றால் பயங்கர இஷ்டம். அது மாத்திரமில்லை, நடுராத்திரியில் எழுந்து உட்கார்ந்துக்கொண்டு சுருட்டு குடிக்கும்போது பார்க்க பயங்கரமாக இருக்கும். முற்றத்தில் இருக்கும் காற்றுப் பந்தல் வழியே அந்த சுருள் புகைவட்டம் ஓசோன் ஓட்டையை நோக்கி பயணமாகும். புகை மூட்டத்திற்கிடையே சிந்தனையில் மூழ்கி, ‘அவ்தார்’ படத்தில் வரும் பறவையில் அமர்ந்து, கற்பனையுலகில் சஞ்சரித்து ஜாலியாக அவர்கள் வலம் வருவதை சிலசமயம் நான் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.

பாட்டிமாவின் இளம் வயதிலேயே என் பாட்டனார் மறைந்து விட்டதால் அவருடைய ஞாபகம் அலைமோதும் போதெல்லாம் சுருட்டு புகைப்பார்கள் என்று வீட்டார் எனக்குச் சமாதானம் சொன்னார்கள். அவர்களின் துக்கத்திற்கு அதுவொரு அருமருந்தாக இருந்தது போலும். தொடக்கத்தில் துர்நாற்றமாக உணர்ந்த எனக்கு நாளடைவில் அந்த நெடி பழக்கமாகி விட்டது. சின்ன பையனான நான் இரவு நேரங்களில் அவர்களுக்கு பக்கத்தில்தான் படுத்துறங்குவேன். இப்பொழுது கூட சுருட்டு நெடி எங்கிருந்து வந்தாலும் அவர்கள் என் மீது பொழிந்த அந்த அதீத பாசம் நினைவில் வர என் கண்கள் குளமாகிவிடும். (ஆண்டிகுளம் அல்ல. அதில்தான் நீரே கிடையாதே).

அவர்கள் மவுத்தான பிறகு வருஷப் பாத்திஹா என்று ஓதி அவர்களுக்கு பிடித்தமான அந்த சுருட்டுக் கட்டு ஒன்றை (பல ஆண்டுகளுக்கு முன்பு) அந்த சபையில் வைத்த என் வீட்டாரின் அறியாமையை நினைத்தால் இப்பொழுதுகூட எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும். காலப்போக்கில் மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்டு இதுபோன்ற ‘படையல்’ மூடப்பழக்கங்கள் ஒழிந்துப்போனது ஒருபுறம் சந்தோஷத்தை தருகின்றது.

பைநிறைய சுருட்டுக் கட்டுகளை சைக்கிளின் ஹாண்டில் பாரின் இருபுறமும் தொங்கவிட்டுக்கொண்டு கூன்விழுந்த முதுகோடு சைக்கிள் ஓட்டிச் செல்லும் மாலிமார் நானா வினியோகிக்கும் இரண்டொரு சுருட்டு கட்டுகளை பத்திரமாக வாங்கி என் பாட்டிமாவின் கையில் அதை நான் கொடுக்கும்போது அவர்களுடைய முகத்தில் எழும் சந்தோஷ ரேகைகளை எழுத்தில் வடிக்க இயலாது.

ஆங்கிலத்தில் இதற்கு “Cheroot” என்று பெயர். இந்தப் பெயர் மேலைநாட்டுக்கு வாரி வழங்கியது சாட்சாத் தமிழர்களேதான். சுருட்டுதான் ‘செரூட்’ என்று ஆனது. சுருட்டுக்கு பிரசித்திப் பெற்றது க்யூபாவின் ஹவன்னா சுருட்டுதானே? அதற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஏன் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள் என்று கேட்கலாம். இவையிரண்டும் பார்ப்பதற்கு சினிமாவில் வரும் இரட்டையர்கள் போன்று ஒரே மாதிரி இருக்கும். அதற்குப் பெயர் “Cigar”. இதற்குப் பெயர் “Cheroot”.

“சுருட்டு” என்ற தமிழ்ப்பெயர் “cheroute” என்று பிரஞ்சு மொழிக்கு மாறி பின்னர் அது ஆங்கிலத்தில் “cheroot” என்று ஆகி விட்டது. 16-ஆம் நூற்றாண்டில் காரைக்கால் பிரஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது நம்மூர் சுருட்டு ஐரோப்பாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகியிருக்கிறது. அப்பொழுது நாகூரில் நிறைய சுருட்டு கம்பெனிகள் இருந்ததாக பதிவுகள் பறைசாற்றுகின்றன. நாகூர் எல்லையில் இருக்கும் வாஞ்சூர் என்ற சிற்றூர் வழியே இந்த சுருட்டுகள் கடத்தப்பட்டு பிரஞ்சு தேசத்திற்கு ஏற்றுமதியாகும். பிற்காலத்தில் இந்த சுருட்டு மார்க்கெட்டை பர்மா நாடு தன் வசமாக்கிக் கொண்டதும் இந்த குடிசைத்தொழில் இங்கு நலிவடையத் தொடங்கி விட்டது.

16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாகூரில் பத்துக்கும் மேற்பட்ட சுருட்டு கம்பெனிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்றன. என் இளம்பிராயத்தில் ரோட்டுத்தெருவில் மான்தலை மார்க் நம்பர் 1 சுருட்டுகளை தயாரிக்கும் கம்பேனி அமோகமாக இயங்கி வந்தது நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. சொக்கலிங்கம் கம்பெளண்டர் வீட்டிற்கு எதிரே பொட்டு மூப்பனாரின் சக்தி விலாஸ் சுருட்டு கம்பேனி இயங்கி வந்ததும் நன்றாக நினைவிருக்கிறது.

“Cheroot” மற்றும் “Cigar” – இவையிரண்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சுருட்டு ஏழைகளின் தோழன். சிகார் பணக்காரர்களின் கம்பெனி. ‘சுருட்டு’ மேக்கப் போடாத ஷோபா மாதிரி. ‘சிகார்’ மேக்கப் போட்ட ஷோபனா மாதிரி. சிகாரில்  நல்ல finishing இருக்கும். சிம்ரன் போன்று இடை குறுகியிருக்கும். சுருட்டு மேலிருந்து கீழ்வரை ஒரே சைஸாக இருக்கும் (சாரி. இதற்கும் ஏதாவதொரு நடிகையை உதாரணம் காட்டி வம்பில் மாட்டிக் கொள்ள எனக்கு துணிவில்லை)

மார்க் ட்வெய்ன்

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ட்வெயின் ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர். என்னை பாராட்டித் தொலைக்க வேண்டும் என்று நிர்ப்பந்தத்திற்கு ஆளான நாகூர் ரூமி என்னை ஒருமுறை “நீங்கள்தான் நாகூரின் மார்க் ட்வெயின்” என்று போற்றிப் புகழ்ந்தார். அதற்கு பதில் நேரடியாகவே “ஏன் இப்படி கோமாளித்தனமாக எழுதுகிறீர்கள்?” என்று சாடி மகிழ்ந்திருக்கலாம். அந்த மார்க் ட்வெய்னுக்கு மிகவும் பிடித்தது நம்ம ஏரியா லோக்கல் சரக்கு சுருட்டுதான்.

“ஏண்ணே! சிகார் குடிக்காம இந்த சுருட்டைக் குடிக்கிறீங்க?” என்று யாரோ ஒருத்தர் மார்க் ட்வெயினிடம் கேட்டபோது. “போயா உன் வேலையைப் பாத்துக்கிட்டு. காசோட அருமை எனக்குத்தான் தெரியும். சிகாரைவிட இந்த சுருட்டு எவ்வளவு cheap தெரியுமா? மட்டமா இருந்தாலும் இதுலேயும் புகை வருதில்லே, அது போதும்.” என்று பதில் சொன்னாராம். நண்பர்கள் பலர் ஹவான்னா சிகார்களை பரிசாக அளித்த போதும் அவர் அதனை அலமாரியில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். விலையுயர்ந்த அந்த சிகார்களைக் காட்டிலும், துர்நெடி வீசும், தரத்தில் சற்று மட்டமான சுருட்டுகளைத்தான் மார்க் ட்வெயின் மிகவும் விரும்பி புகைத்தார். (அவருடைய ரசனை அப்படி. அதற்கு நாமென்ன செய்ய முடியும்?.)

படப்பிடிப்பின்போது சில்க் ஸ்மிதா கடித்து வைத்த மீதி ஆப்பிளை ஏலம் விட, அதிக விலை கொடுத்து ஒரு ரசிகர் அதை வாங்கினார் என்ற பத்திரிக்கைச் செய்தி நமக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது நினைவிருக்கலாம். நம்ம ஆளுதான் இப்படி என்றால் ஆங்கிலேயர்கள் ஒண்ணும் இதற்கு குறைச்சலில்லை. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் புகைத்து பாதியில் அணைத்து வைத்த சுருட்டு ஒன்று ரூ.3.31  லட்சத்திற்கு விற்கப்பட்டது. சர்ச்சில் ஆஷ்ட்ரேவாக பயன்படுத்திய ஒரு வெண்ணெய் பேப்பர்கூட  யாரும் எதிர்பாராத வகையில் சுமார் ரூ.3 லட்சத்திற்கு விற்கப்பட்டதாம். (அட கர்மமே!)

அண்ணாத்துரை மூக்கில் ஏற்றிய பொடி யாரிடாமது மிச்சமிருந்தால் கொண்டு வாருங்கள். அந்த மிச்சப்பொடியையும், பொடிமட்டையையும் ஏலம் விட்டால் நல்ல தொகை கிடைக்கும். விஜய் மல்லையாவுக்குத் தெரிவித்து விட்டால் போதும் நிச்சயம் வந்து அதை ஏலம் எடுத்து விடுவார்.

திரைப்படத்தில் யாராவது சுருட்டும் வாயுமாக வந்தால் யாருக்கு கோபம் வருகிறதோ இல்லையோ மருத்துவர் அன்புமணி இராமதாஸுக்கு B.P. எகிறி விடுகிறது. அவருடைய கட்சிக்காரர்கள் தியேட்டர் வாசலில் போர்க்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ‘டைவ்’ அடித்து விடுகிறார்கள்.

இருக்காதா பின்னே? ‘அசல்’ படத்தில் அஜீத் வாயில் சுருட்டை திணிப்பதோடு சினிமாக்காரர்கள் நிறுத்திக் கொண்டாலும் பரவாயில்லை. இவர்கள் அழகு தேவதை மும்தாஜ் வாயிலும் அல்லவா திணித்து விடுகிறார்கள். இந்தியாவில் மட்டும்  தினமும்  2,500 பேர்கள் புகையிலை பழக்கத்தால் சாகிறார்களாம்.

சுருட்டு குடிப்பதால் நன்மையும் இருக்கிறது. நான் சொல்லும் இந்த தகவலைக் கேட்டு ‘பசுமைத் தாயகம்’ இயக்கத்தார்கள் என் மீது பாய்ந்தாலும் பாயலாம். சுருட்டினால் நன்மையுண்டு என்று நான் சொல்லவில்லை. ஆங்கிலேயர் ஒருவர் கூறுகிறார்.
வெர்ரியர் எல்வின் (1902-1964) – இவர் மகாத்மா காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். இந்தியாவில் பழங்குடியினருடன் வாழ்ந்து அவர்களின் பழக்க வழக்கங்களை ஆராய்ந்தவர். இவர் சொல்வதைக் கேளுங்கள். “ஒரு காலத்தில் நான் அடிக்கடி  நோய்வாடப் பட்டிருந்தேன். நான் சுருட்டு பிடிக்க ஆரம்பித்ததிலிருந்து மலேரிய ஜூரம் என்னை சீண்டவில்லை. அதற்குப்பிறகு என்னுடைய தேகத்திலும் முன்னேற்றம் காணப்பட்டது.” என்கிறார். (Leaves from the Jungle: Life in a Gond Village, OUP 1992, p.xxix).

சுருட்டினால் கிளம்பும் துர்நாற்ற நெடி மலேரியா கொசுவுக்கு அலர்ஜியாம். அந்தக் காலத்தில் குறிப்பாக முதியோர்கள் மத்தியில் இந்த கெட்ட (?) பழக்கம் இருந்தது. தோப்புத் துரவு பக்கம் லண்டன் செல்பவர்களிடத்தில் இந்த ‘பாஸ்போர்ட்’ அவசியம்  காணப்படும்.

இப்பொழுது மலேரியா ஜூரம் அடியோடு ஒழிந்து விட்டது. எனவே நம் இளைய சமுதாயமும் நல்லவேளையாக இந்த கெட்ட பழக்கத்தை பின்பற்றவில்லை.

பெண்கள் சிகரெட் குடிப்பதை ஏற்றுக்கொள்ளாத நம் சமூகம் அவர்கள் சுருட்டு பிடிப்பதை மட்டும் பொருட்டாகக் கருதாமல் கண்டும் காணாமல் இருந்ததென்னவோ நிதர்சனமான உண்மை. அதற்குக் காரணம் ‘சுருட்டு’ நம் மூதாதையரின் கண்டுபிடிப்பு  என்பதாலோ என்னவோ. “வெண்சுருட்டு” எனப்படும் “சிகரெட்” வெள்ளைக்காரன் நம் வாயில் திணித்துச் சென்ற ஒன்று என்ற எண்ணம் பொதுவாகவே நிலவுகிறது.

லோக்கல் சரக்கு கூடும், பாரின் சமாச்சாரம்தான் கூடாது என்ற சுதேசி உணர்வு என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

ஜெய் ஹிந்த்!