RSS

Category Archives: பப்படம்

மீண்டும் “பப்படம்”


பப்படத்தைப் பற்றி பதிவு போட்டால் அது “பப்படம்” (FLOP) ஆகிவிடும் என்று நினைத்தேன். எப்பொழுதோ எழுதிய இப்பதிவை “ஆஹா பக்கங்கள்” மீள்பதிவு செய்ய ‘ஆஹா’ ‘ஓஹோ’வென்று பாராட்டிய வாசக அன்பர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். இதோ அந்த “ஆஹா” பக்கம்:

பப்படம்  (Click Here)

 

Tags:

பப்படம்


“மொளவுத்தண்ணியைப் பத்தி எழுதுட்டீங்க. அடுத்தது என்ன பப்படமா?” என்று நண்பர் அடியக்கமங்கலம் ஜாபர் சாதிக் என்னை போட்டுத் தாக்கினார். “அதுக்கென்ன. எழுதுனாப் போச்சு” என்று விளையாட்டாகச் சொல்லி விட்டேன். உண்மையிலேயே பப்படத்தைப் பற்றி ஒரு பதிவு போடுவேன் என்று நானே எதிர்ப்பார்க்கவில்லை.

அவர் ஊர் பற்றிய குட்டிக்கதை ஒன்று நினைவுக்கு வந்தது. மங்களம் என்ற பெண்மணியும் அவளது சகோதரியும் ஆத்தங்கரைக்கு குளிக்கச் சென்றார்களாம். அப்போது மங்களத்தை ஆற்றுத் தண்ணீர் அடித்துக்கொண்டு போய் விட்டதாம். “அடி அக்கா! மங்களம்! போயிட்டியே!” என்று அழுது புரண்டு அலறி அடித்துக் கொண்டு வீதியில் அவள் தோழி ஓடி வந்தாளாம். அந்த நேரத்தில் ஊருக்கு புதிதாக வந்த வெள்ளைக்கார துரை அவளிடம் சென்று “What is the name of this place?” கேட்க, ஒப்பாரியை நிறுத்தாமல் “அடி அக்கா! மங்களம்” என்று மறுபடியும் கூவியிருக்கிறாள். இதுதான் இந்த ஊரின் பெயர் என்று எண்ணி “அடியக்க மங்கலம்” என்று பெயர் வைத்துவிட்டு போய்விட்டானாம் வெள்ளைக்காரதுரை.

இது ஒரு வேடிக்கைக்காக சொல்லப்படும் கதைதான். “அடியற்கை மங்கலம்” அல்லது “அடியார்க்கு மங்கலம்” என்றுதான் உண்மையிலேயே இருந்திருக்க வேண்டும். அடியார்களுக்கு மங்கலம் உண்டாக்கக் கூடிய இடமாக அது இருந்திருக்கிறது.

இதுபோன்ற எத்தனையோ கதைகள் நம்மிடையே உலவுகின்றன

முந்திரிக்கொட்டை விற்றுக் கொண்டிருந்தாளாம் ஒரு கூடைக்காரி. அவளிடம் சென்று வெள்ளைக்கார துரை “How much is this?” என்று கேட்க, கேள்வியைப் புரிந்துக்கொண்ட பெண்மணி “காசுக்கு எட்டு” என்று சொன்னாளாம். அதுவே பின்னர் “Cashew Nut” என்று ஆங்கிலப் பெயராக ஆகிவிட்டதாம்.

தயாரிப்பு நம்முடையதாக இருந்த போதிலும் அதற்கு பெயர் வைப்பதும், விலைநிர்ணயம் செய்வதும் வெள்ளைக்கார துரை கையில்தான் இருந்தது.

ஊரான் ஊரான் தோட்டத்துலே
ஒருத்தன் போட்டா வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்

என்ற நாட்டுப்பாடல் இவ்வுண்மையை உணர்த்தும்.

இரண்டாம் உலகப்போரின் போது நாகூர் மக்களின் குடிசைத் தொழிலாக தடுக்கு முடைதல், பாய் முடைதல், ஓலை விசிறி, சங்கு வெட்டி பாலிஷ் செய்தல், சுருட்டு தயாரிப்பு, பப்படம் செய்தல் – இப்படி பலதரப்பட்ட கைத்தொழில்கள் வாழ்வாதரமாக இருந்திருக்கிறது.

நாகூருக்கு வந்த வெள்ளைக்கார துரை பப்படத்தை பார்த்து விட்டு “வாவ்! வாட் இஸ் திஸ்?” என்று கேட்க, “திஸ் இஸ் பப்படம்” என்று யாரோ சொல்ல “வொண்டர்ஃபுல் நேம். பப்படம்” என்று சொல்லிவிட்டு ஆங்கில அகராதியிலும் இந்த “பப்படத்தை” ஏற்றிவிட்டானாம்.

“பெரிய நானா” (Big Brother) டிவிஷோவில் Jade Goody ஷில்பா ஷெட்டியை பப்படம் என்று வசைபாட இந்த ‘பப்படம்’ அகில உலகத்திலும் பிரபலமாகி விட்டது. இனவெறி கண்ணோட்டத்தில் திட்டியதாக சர்ச்சை எழுந்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சொற்பதம் ‘பன்னாடை’ ‘பரதேசி’ என்று பொருள்படும்படி வசை பாட அவர்களுக்கு பயன்படுகிறதாம். ஷில்பாவின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது “பப்படம்” என்ற இந்த வார்த்தைதான்.

அடப்பாவிகளா! தின்பதற்காக பயன்படும் உணவுப் பண்டத்தை எப்படியெல்லாம் உதாரணம் காட்ட பயன்படுத்துகிறார்கள் என்று திட்டித் தீர்க்கலாமே என்று பார்த்தால், நாம் மட்டும் என்ன யோக்கியமா என்று எனக்குள்ளே கேள்வி எழுந்தது. ‘நொந்துப் போய்விட்டேன்’ என்று சொல்வதற்கு ‘நொந்து நூடுல்ஸாகி விட்டேன்’ என்று சீன உணவுப்பொருளை நாம் சொல்வதில்லையா? சீனாக்காரன் இதைக் கேள்விப்பட்டால் அவன் முதலில் நொந்து நூடுல்ஸாகி விடுவான்.

தமிழ்நாட்டில் ஏதாவதொரு திரைப்படம் Flop ஆகிவிட்டால் “படம் பொப்படம் ஆகிவிட்டது” என்று சொல்வதுண்டு.

நாகூரைப் பொறுத்தவரை நீளமாக உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் அயிட்டத்திற்கு பப்படம் என்று பெயர். வட்ட வடிவமாக இருப்பதற்குப் பெயர் அப்பளம். பப்படம் Unbranded goods. அப்பளம் Branded goods. (உதாரணம் அம்மாமி அப்பளம், பாப்புலர் அப்பளம்). ‘பொப்படம்’ என்ற பெயரில் அயர்லாந்தில் பிரபலமான உணவகம் ஒன்று இருக்கிறது.

அப்பளம் தயாரிப்பில் பிராமணர்கள் பிரசித்தம் என்றுச் சொன்னால் பப்படம் தயாரிப்பில் நம்மவர்கள் பிரசித்தம். நாகூர் சாப்பாட்டு மெனுவில் பப்படம் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும்.

பொதுவாக அப்பளம் என்று தமிழகத்திலும், அப்படம் என்று தெலுங்கிலும், அப்பளா என்று துளு மொழியிலும், ஹப்பளா என்று கன்னடத்திலும், பாப்பட் என்று இந்தியிலும்  அழைக்கப்படுகிறது.

அப்பள வியாபாரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முன்பு குதித்தது ஞாபகமிருக்கும். இந்தி தாரகை ஷில்பா ஷெட்டியும் அப்பளச் சட்டியில் டைவ் அடித்து விட்டார். நாளை ‘நானா கத்தா’ தயாரிப்பில் ‘லாரா தத்தா’ இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஷில்பாவின் தயாரிப்புக்குப் பெயர் “ஷில்பா பொப்படம்”.

நம்ம ஊரில் ஜொஹராமா லாத்தாவும், சின்னாச்சிமாவும் இந்த பப்படம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு சிறிய உருண்டை பொப்பட மாவை கையில் வைத்துக் கொண்டு, பலகைக்கட்டையில் லாவகமாக உருட்டி ஒரு கட்டு பப்படத்தை தயாரித்து விடுவார் சின்னாச்சிமா.

ஷில்பாவின் டெக்னிக்கை பின்பற்றி இருந்தால் இந்நேரம் “சின்னாச்சிமா பப்படம்” உலகச் சந்தையில் விற்பனையில் போட்டி போட்டிருக்கும். 

ஷில்பாவும் ஜேட் கூட்டியும் தோழிகளாகினர். ஜேட் கூட்டி கேன்சர் ஏற்பட்டு மறைந்தும் விட்டார். ‘பொப்படம்’ என்ற இந்தப் பெயரை தன் தோழியின் நினைவாக வைத்திருப்பதாக அவர் சொன்னது மனதை நெகிழ வைத்தது. ஜேட் கூட்டி மரணத்திற்கு முன்பு சாப்பிட ஆசைப்பட்டது எது தெரியுமா? பொப்படம்தான். 

– அப்துல் கையூம்

 

Tags: , ,