இந்தப் பெயர் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரியாகவும் இருக்கலாம் அல்லது கேள்விப்படாத மாதிரியாகவும் இருக்கலாம். மேலோட்டமாக பார்த்தால் ஏதோ ஒரு காலனி அல்லது புதிதாக வந்த ட்வுன்ஷிப் பெயர் போன்று இருக்கிறது. இந்தப் பெயர் எல்லா பீடியாவிலும் (அதுதாங்க என்சைக்ளோ பீடியா, விக்கிபீடியா) மற்றும் எல்லா மீடியாவிலும் காணக் கிடைக்கிறது.
“இந்தப் பெயர் சீமையிலிருந்து வந்ததல்ல. இது நம்ம ஊரு மொளவுத்தண்ணி. அவ்வளவுதான்” என்று நான் குட்டை போட்டுடைத்தால் “ப்..பூ இவ்வளவுதானா?” “இதுக்குப்போயா இவ்வளவு பெரிய பில்டப்பு?” என்று உதட்டை நீங்கள் பிதுக்குவீர்கள்.
நான் பால்ய வயதில் நாகூர் மொம்மசா பள்ளியில் ஓதியபோது ஒரு சகமாணவன் மொட்டையடித்துக் கொண்டு வந்தான். அப்பொழுது வால்பசங்கள் எல்லோரும் கூடி “மொட்டை மொளவுத்தண்ணி, கப்பாப்பா காப்பித் தண்ணி” என்று ரைம்ஸ் பாடி கலாட்டா செய்தார்கள். இந்த ரைம்ஸுக்கு என்ன அர்த்தம் என்று இதுவரை எனக்குப் புரியவில்லை. எதுகை மோனையுடன் யாரெழுதிய பாடலென்றும் தெரியவில்லை. (ஒருவேளை என் நண்பர் கவிஞர் கிட்னிதாசன் சாரி இதயதாசனாக இருக்கக் கூடும்)
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இந்த அயிட்டத்தை ‘ரசம்’ என்றுதான் அழைக்கிறார்கள். ‘சாற்றும் அமுது’ என்று மற்றொரு அழகு தமிழ்ப் பெயர் இந்த ரசத்திற்கு இருக்கிறது. ‘சாத்துமது’ என்று சுருக்கமாக சில ஊர்களில் இதை அழைக்கிறார்கள்.
எப்பொழுதோ படித்த சுந்தர ராமசாமியின் கவிதையொன்று என் நினைவில் வந்து அலை மோதியது.
மேற்கே
ரொமாண்டிசிசம்
நாச்சுரலிசம்
ரியலிசம்
அப்பால்
இம்ப்ரெஷனிசம்
என் மனைவிக்கு
தக்காளி ரசம்
“உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. அடிப்பாவி நீ இன்னும் தக்காளி ரசத்திலேயே இருக்கிறாயே?” என்று தன் மனைவியை ஜாடைமாடையாக சாடுகிறார். “பரவாயில்லையே! நமக்கில்லாத துணிச்சல் இவருக்கு இருக்கிறதே!” என்று சுந்தர ராமசாமியை பாராட்டத் தோன்றுகிறது.
மிளகுத் தண்ணீர் என்ற அழகுத்தமிழ் பெயர்தான் நம்மூரில் மொளவுத்தண்ணி என்று உருமாறி விட்டது. மற்ற இடங்களிலெல்லாம் ரசம் என்ற வடமொழி பதத்தால் பேச்சுவழக்கில் இருந்த சொல், நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மட்டும் ‘மிளகுத்தண்ணீர்’ என்ற தூயதமிழ் பதமாக சொல்வழக்கில் நிலவி வருவது பெருமையாக இருக்கிறது.
நான் வண்டலூர் கிரசெண்ட் பள்ளியில் ஹாஸ்டலில் படித்த காலத்தில் வாரத்தில் ஆறு நாட்கள் (வெள்ளிக்கிழமை தவிர்த்து) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரசம் சமைக்க வேண்டி ஒரு அய்யரை நியமித்தார்கள். மிளகு ரசம், தக்காளி ரசம், ஜீரக ரசம், பூண்டு ரசம், பைனாப்பிள் ரசம், பருப்பு ரசம், எலுமிச்சை ரசம், புளி ரசம், மைசூர் ரசம் என்று வகைவகையாக ரசனையுடன் சமைப்பார்.
இந்த மிளகு, மேலைநாடுகளுக்கு ஏற்றுமதியானது தென்னிந்தியாவிலிருந்துதான். சுலைமான் நபி (King Solomon) காலத்திலிருந்தே, தமிழ்நாட்டிற்கும் அரபிகளுக்கும் இடையே நடந்த வர்த்தகத்தில் இந்த மிளகு ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முந்திய காலத்தில் எழுதப்பட்ட அரபுக் கவிஞர் உம்ருல் கைஸின் கவிதையொன்று இதற்கு சான்று பகர்கிறது. கவிஞர் தன் காதலியின் நினைவாக பாடுகிறார். அவள் வீட்டு முற்றத்தில் புறாக்கள் எச்சம் இடுகின்றன. அந்த எச்சம் எப்படி இருக்கிறதென்றால் இந்திய மிளகு போன்று இருக்கிறதாம். தொன்றுதொட்டே இந்த இந்தியப் பண்டம் அரபு நாடுகளுக்கு சென்று அடைந்திருக்கிறது என்பது புலனாகிறது. ஒரு அரபுக்கவிஞன் தன் காதற்கவிதையில் காட்டுகின்ற ஒப்பீட்டில் ஒரு சரித்திர உண்மையையே வெளிக்காட்டி விடுகிறது.
அரேபியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
“நீரில் வந்த நிமர்பரிப்புரவியும்”
என்று பட்டினப்பாலை வருணிக்கிறது. குதிரைகளுக்கு பதிலாக மிளகு போன்ற பண்டங்கள் இங்கிருந்து ஏற்றுமதி ஆயின. சங்ககால இலக்கியமான அகநானூறு இதனை எடுத்துக் காட்டுகிறது. அரேபியர்களை “யவனர்” என்று
குறிக்கிறது. யவனர் என்றால் கிரேக்கர்கள் என்று சிலர் வாதிடுகிறார்கள். அது சரியன்று. யவனர்கள் நீண்ட ஆடை அணிந்திருப்பார்கள் என்ற வருணனை உண்டு. கிரேக்கர்களும், ரோமர்களும் (பாவனா மாதிரி) குட்டை பாவாடை அணிந்திருப்பார்கள். சீவகச் சிந்தாமணி இவர்களை ‘யவனத்துருக்கர்’ என்றே குறிப்பிடுகிறது. யவ்னம் என்றால் கோதுமை என்று பொருள். பார்ப்பதற்கு அழகாக கோதுமை நிறத்தில் இருந்த அரபிகளை யவனர் என்றே அழைத்தனர்.
“யவனர் தந்த வினைமாணன் கலங்கள்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”
அரேபியர்கள் வந்த கப்பல்கள், பொற்காசுகளை கொண்டு வந்து கொடுத்து மிளகுப் பொதிகளை ஏற்றிச் செல்லுமாம். ‘கறி’ என்ற சொல் மிளகினைக் குறிக்கும்.
“கறி” என்ற தமிழ் வார்த்தையிலிருந்துதான் “Curry” என்ற ஆங்கில வார்த்தையே பிறந்திருக்கிறது. இந்த “Curry” என்னும் சொல் ஆங்கில அகராதியில் ஒரு அங்கமாகி விட்டது. ஆங்கில கலைக்களஞ்சியத்தில் “Curry” என்ற வார்த்தைக்கு “A generic description used throughout European and American culture to describe a general variety of spiced dishes, best known in South Asian cuisines” என்ற விளக்கம் காணப்படுகிறது.
நாகூரில் இப்பொழுது கூட “இன்று சாப்பாட்டுக்கு என்ன மெனு?” என்று இல்லத்தரசியிடம் கேட்க நினைப்பவர்கள் “இன்னிக்கி என்ன கறி?” என்றுதான் வினா தொடுப்பார்கள்.
இதற்கு பதில் “ஆட்டுக்கறி, கோழிக்கறி, புறாக்கறி” என்றிருக்காது. அதற்கு பதிலாக “ராலு பொறிச்சு, முட்டைக்கோசு வதக்கி, சம்பால் பண்ணி, மொளவுத்தண்ணி காய்ச்சிருக்கேன்” என்ற பதில்தான் வரும்.
என் வீட்டிற்கு பாம்பேகாரர் ஒருவரை விருந்துக்கு அழைத்தபோது “பாபிக்கா பனாயாஹுவா சூப் பஹூத் அச்சா ஹே” என்று சப்புக்கொட்டி அந்த மடாக்குடியன் இரண்டு மூன்று கோப்பை மொளவுத்தண்ணியை Raw-வாக மடக் மடக்கென்று குடித்து விட்டார்.
கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் மருத்துவ குறிப்பேடுகளில் மிளகினை ‘இந்திய மருந்து’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒருமுறை முத்துப்பேட்டை அருகிலுள்ள ஜாம்பவன் ஓடை என்ற ஊரில் கல்யாண விருந்துக்கு சென்றிருந்தேன். தடபுடல் பிரியாணி சாப்பாட்டோடு “சொரி ஆணம்” என்ற அயிட்டமும் வைக்கப்பட்டிருந்தது. (‘குழம்பு’ என்ற சொற்பதத்திற்கான தூயதமிழ் வார்த்தைதான் ‘ஆணம்’ என்பது) அதுவும் குட்டி குட்டி செம்பு பாத்திரத்தில் பார்வையை ஈர்த்தது. மாப்பிள்ளை இல்லாமல் கூட கல்யாணம் நடந்துவிடுமாம். ஆனால் இந்த சொரி ஆணம் இல்லாத கல்யாணம் கிடையாதாம்.
முத்துப்பேட்டையைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளான “பட்டினங்கள்” பலவற்றில் இந்த சொரிஆணம், உணவுவகையில் ஒரு முக்கிய அங்கம் வகித்துவிட்டது. சொரிஆணம் என்பது தேங்காய்ப்பால் ரசம்.
“சொரிஆணம்” என்ற பெயர் ஏன் வந்தது என்று சிந்தித்துப் பார்த்தேன். செரிமாணம் ஆவதற்காக வைக்கப்படும் ரசம் இது. ‘செரிஆணம்’ என்ற சொல் ‘சொரிஆணம்’ என்று மருவியிருக்க வாய்ப்பு இருக்கிறது. தேங்காய்ப்பாலை அதன் மீது சொரிவதால் ‘சொரிஆணம்’ என்ற தூயதமிழ் சொற்பதம் வந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் ‘சொரிஆணமும்’ மொளவுத்தண்ணியும் நெருங்கிய உறவுமுறை என்று தெரிகிறது. மொளவுத்தண்ணிக்கு மேக்கப் போட்டால் சொரிஆணம். மேக்கப் போடாத சொரிஆணம் மொளவுத்தண்ணி.
அடுத்த முறை யாராவது உங்களிடம் “இன்று மதிய உணவுக்கு என்ன மெனு?” என்று கேட்டால் ஸ்டைலாக “மல்லிகா தாவணி” (Mulligatawny) என்று சொல்லி விடுங்கள். ரெஸிபி டிக்சனரியைப் புரட்டிப் பார்த்து அவர் மண்டையை போட்டு பிய்ச்சுக் கொள்ளட்டும்.