Category Archives: நாகூர் ஹனீபா
தந்தை பெரியாரும் நாகூர் ஹனிபாவும்
பெரியார் என்ற சொல் எவரும் உச்சரிக்க உகந்த சொல் அல்ல என்று கருதப்பட்ட அந்தக் காலத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளிலும் சுயமரியாதைச் சிந்தனைகளிலும் கவரப்பட்டு திராவிட முழக்கங்கள் முழங்கிக் கொண்டிருந்தார் நாகூர் ஹனிபா.
1935-ஆம் ஆண்டு அது. அப்போது ஹனிபாவுக்கு பத்து வயதுதானிருக்கும். ஹனிபாவின் தந்தையார் முகம்மது இஸ்மாயில் மலேசியாவிலுள்ள கோலாலம்பூர் நகரில் ரயில்வே போர்மேனாக பணி புரிந்து வந்த நேரம். அதுசமயம் தமிழக மண்ணில் புரட்சிக் கருத்துக்களை வித்திட்டுக்கொண்டிருந்த தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனைகள் அவரை பெரிதும் ஆட்கொண்டன.
தமிழ்நாட்டில் செட்டியார் தொடக்கநிலை பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தன் அன்பு மைந்தன் ஹனிபாவின் மனதில் சுயமரியாதைக் கருத்துக்கள் வேரூன்றுவதற்கு அவரது தந்தை ஒரு முக்கிய காரணமாக இருந்தார் என்றே கூறலாம்
‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா’ என்று சொல்வார்களே, அதுபோல ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்ற பழமொழிக்கேற்ப தன் தந்தைக்கு, அவரது ஆணைபடியே, இங்கிருந்தபடி இஸ்லாமிய பத்திரிக்கைகளையும் ,சுயமரியாதை இயக்க ஏடுகளை வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கப்பல் போக்குவரத்து நாகை துறைமுகத்திலிருந்து மலேயாவுக்கு செயற்பாட்டில் இருந்தது. நாகூர் அல்லது சுற்றுவட்டாரத்து பயணிகள் யாரையாவது தொடர்பு கொண்டு பத்திரிக்கை கட்டுகளை தவறாமல் ஹனிபா தன் தந்தைக்கு அனுப்பி வைப்பார்.
- வேலூர் நகரிலிருந்து 1910-ஆம் ஆண்டு முதற்கொண்டு வெளிவந்துக் கொண்டிருந்த இஸ்லாமிய நாளிதழான “சைபுல் இஸ்லாம்”
- “இராமாயண சாயபு” என்றழைக்கப்பட்ட தாவூத் ஷா அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1923-ஆம் ஆண்டு முதல் வெளிவந்துக் கொண்டிருந்த “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கை
- 1925-ஆம் ஆண்டு முதல் வெளிவந்துக் கொண்டிருந்த பெரியாரால் ஆரம்பித்து வெளியிடப்பட்ட சுயமரியாதை இதழான “குடியரசு” பத்திரிக்கை. இவைகள் குறிப்பிடத்தக்கவை.
“குடியரசு” இதழைத் தொடங்கி வைத்தவர் தமிழறிஞரும் திருப்பாதிரிப் புலியூர் திருமடத்தின் தலைவராகவும் விளங்கிய ’சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமி’ எனும் ’ஞானியார் சுவாமிகள்’ என்பது கூடுதல் செய்தி.
இவைகளை ஒன்று விடாமல் சேகரித்து தன் தந்தைக்கு தவறாமல் அனுப்பிக் கொண்டிருந்தார் ஹனீபா. அனுப்புவதற்கு முன்னர் அவைகளை ஒரு வரிகூட விடாமல் ஒன்றுக்கு பலமுறை படித்து, தன்னைத்தானே உரமேற்றிக் கொள்வார். இப்படியாகத்தான் ஹனிபா திராவிடக் கொள்கைகளும், சுயமரியாதைச் சிந்தனைகளையும் தனக்குத்தானே வளர்த்துக் கொண்டார்.
திராவிட இயக்கம் ,மேலோங்கி வந்த காலத்தில் பெரியாரைப் பற்றி நாகூர் E.M.ஹனிபா அவர்கள் பாடிய பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது.
“ஆசுகவி” என்று எல்லோராலும் போற்றப்பட்டவர் புலவர் ஆபிதீன். ஆபிதீன் காக்கா என நாகூர் மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்டவர்.
அவர் எழுதிய அந்த அற்புத பாடல் வரிகள் இதோ :
பேரறிவாளர் அவர் பெரியார் எனும் ஈவேரா
ஆரறிவார் பெருமை தமிழா,
ஆபிதீன் சொல் ஈவெரா தமிழா
ஆபிதீன் சொல் ஈவெரா !
தூங்கிக் கிடந்த உன்னை துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈவெரா-வே தமிழா
தாத்தாவாம் ஈவெரா-வே
வேதியர் கண்கள் முன்னே
வேட்டிகளை அணியச் செய்து
வீதி உலாவச் செய்தார் – தமிழா
வீரராம் ஈவெரா-வே
வீரராம் ஈவெரா-வே
புரோகிதப் புற்றுக்குள்
பாலை விட்டு
…………………………………….
புகுத்தல் தருமத்திற்கு
விரோதம் என்றே கூறிட்டார்
வித்தகர் ஈவெரா-வே – தமிழா
வித்தகர் ஈவெரா-வே
இப்பாடல் அக்காலத்தில் அனைத்து இனஉணர்வாளர்களின் உதடுகளையும் முணுமுணுக்க வைத்தது ..
இப்பாடல் திராவிட இன உணர்வாளர்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது.
1939-ல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்த ராஜாஜி நாகூர் வந்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கறுப்புக்கொடி காட்டி காவல்துறையால் கைது செய்யப்பட்டபோது ஹனிபாவுக்கு வயது எத்தனை தெரியுமா..? சொன்னால் நம்ப மாட்டீர்கள். வெறும் பதின்மூன்று வயது.
“சின்ன வயதிலேயே தமிழ்.. தமிழ் என்ற தமிழுணர்வுடன் வளர்ந்தவர் நாகூர் ஹனிபா. தமிழுக்கு ஒரு தீங்கென்றால், அந்தத் தீங்கினைத் தடுத்து நிறுத்திட, தமிழர் நலன் காத்திட தமிழ்மொழி காத்திட, தோள்தட்டிதன்னை ஒப்படைத்துக் கொள்ளக் கூடிய தியாக சீலர் நாகூர் ஹனிபா” என வாயாரப் புகழ்கிறார் டாக்டர் கலைஞர்.
மேலும், “பெரியார் பெயரை உச்சரித்தால், அண்ணாவின் பெயரைச் சொன்னால் ஒருவித முகக்கோணலுடன் சமுதாயத்தில் பலர் பார்த்து ஒதுக்கிய நேரத்தில் – அவர்களின் பெயரைச் சொன்னால் பிழைக்கவே முடியாது எனும் அச்சுறுத்தல் ஆட்டிப் படைத்த நேரத்தில் – இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, மேடை தோறும் இசைமுழக்கம் செய்த அனிபாவின் இளமைத் தோற்றத்தையும் கண்டிருக்கிறேன். இன்று என்னை விட ஓரிரு வயது குறைந்தவராயினும் நரைத்த தாடியுடன் கழகத்தின் கொடிமரமாய் மிடுக்காகத் திகழ்வதையும் கண்டு பூரிப்புக் கொள்கிறேன்.”
என்று புகழாரம் சூட்டுகிறார் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.
1938-ஆம் ஆண்டில் தந்தை பெரியார் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தஞ்சை மாநிலத்திலிருந்த பெரும்பாலான ஊர்களில் பொதுக்கூட்டங்களில் பேசினார்.
மே மாதம் 22 கூத்தாநல்லூரில் நடந்த மீலாது விழா. அதே 25-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மன்னார்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்.
மே மாதம் திருபுவனத்தில் நடந்த முஸ்லீம் லீக் மாநாடு.
ஜூன் 8, அய்யம்பேட்டை பனகல் பந்தலில் (பசுபதி கோயில்) நடந்த முதல் சுயமரியாதை மாநாடு
ஜூன் 9, திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி கூட்டம்
ஜூலை 24, மாயவரத்தில் நடந்த 10,000 க்கும் மேலானோர் கலந்துக் கொண்ட மாபெரும் முஸ்லீம் லீக் மாநாடு
ஜூலை 25, கும்பகோணம் காங்கேயன் பார்க்கில் நடந்த இந்தி எதிர்ப்பு கூட்டம்
ஜூலை 26, வவ்வாலடியில் நடைபெற்ற முஸ்லீம் லீக் பொதுக்கூட்டம்
ஜூலை 27, மாயவரம் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டம்
இவை யாவும் தந்தை பெரியார் கலந்துக் கொண்டு சொற்பொழிவாற்றிய கூட்டங்கள். இவை அனைத்திலும் ஒன்று விடாமல் நாகூர் ஹனிபா தமிழின உணர்வோடு தொண்டராக கலந்துக் கொண்டு செயலாற்றிய கூட்டங்கள்.
இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா அவர்களிடம் தந்தை பெரியாரைப் பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் தந்த பதிலும் :
தந்தை பெரியாருடன் உங்களுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது?
“பெரியாரை நாகூருக்கு அழைத்து நான் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் நான் பாடியதைக் கேட்டு மகிழ்ந்தார், பெரியார். “அனிபா அய்யா பாட்டுக்கு ஒலிபெருக்கித் தேவையில்லை” என்பார். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வரும்போது என்னை அழைத்து வரச்சொல்லி பாட வைத்துக் கேட்டு மகிழ்வார், பெரியார். சிலநேரம் என் பாட்டைக் கேட்டு, ஒரு ரூபாய் இனாம் கூடக் கொடுத்திருக்கிறார்.”
திராவிட இயக்கங்கள் தமிழ் நாட்டில் தழைப்பதற்கு பெரியாரின் பெருமைமிகு சீடராக விளங்கிய நாகூர் ஹனிபாவும் மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது .
அப்துல் கையூம்
தமிழகத்து தான்சேன் பிறந்த தினம்
25 டிசம்பர்
இன்னிசை பிறந்தது
மூங்கிலின் உராய்விலா?
எனக்குத் தெரியாது.
தமிழகத்து தான்சேன்
தரணியில் பிறந்தது
இன்றுதான் என்று
எனக்குத் தெரியும்.
நாயகப் பெருமான் புகழ்
நற்றமிழில் பாடி
தாயகத்திற்கு பெருமை சேர்த்த
தன்மான கவரிமான்
பண் பாடி சிறந்த
வெண்தாடி வேந்தன்
கண்ணியம்சேர்
கறுப்புச் சூரியன்
இனபேதம் மதபேதம் காணாது
சங்கநாதம் முழங்கிய
சிங்கக் குரலோன்
சமயம் கடந்த
சங்கீத இமயம்
எட்டுக்கட்டை தொனியில்
எட்டுத்திக்கும் இவன்குரல்
இன்றும் கேட்கும்
என்றும் கேட்கும்
ஒலிபெருக்கியே மிரளும்
ஒரே மனிதன்
இவனாகத்தான் இருக்கும்
இஸ்லாமிய இசையில்
இவன் தொட்ட சரணம்
எட்டிப் பிடிக்க
இதுவரையில்லை ஜனனம்
பாட்டால் கலகம்
விளைவித்தோர் உண்டு – இவன்
பாடியே கழகம் வளர்த்த
திராவிடக் காளை
முப்பால் புகழ்
முத்தமிழ் கானத்தை
ஏழுகடலுக்கு அப்பால்
எட்டிவைத்த சிறப்பால்
இவனை நாம் போற்றுகிறோம்
வெல்லமென இனிக்கும்
இவன் குரல்
இல்லம்தோறும் இசைக்கும்
நிகழ்காலம் இவனை
நினைக்குதோ இல்லையோ
வருங்காலம் நிச்சயம்
வாழ்த்திப் பேசும்
அன்று முதல் இன்று வரை
ஒரே கட்சி
கூடு விட்டு கூடு மாறா
கொள்கையுள்ள பட்சி
இந்த
கறுப்புச் சூரியனின்
கன்னித் தமிழுக்கு
ஏதோ ஒரு கம்பீரம்.
இந்த
பச்சைத் தமிழனின்
‘நச்’சென்ற
உச்சரிப்பில்
நமக்கெல்லாம்
நரம்புகள் புடைக்கும்.
‘முரசு’ ஒலித்தால்
நரம்புகள்
புடைக்கத்தானேச் செய்யும் ?
இவன்
வாயிலிருந்து புறப்பட
வார்த்தைகள்
வரம் பெற்று வந்து
இவனை
வலம் வரும்.
ஆர்மோனியக்
கட்டைக்குள்
அடங்காத
எட்டுக்கட்டை குரல்
இவன் குரல் !
இவன்
பாடிடும் பாணி;
பாமரன் மனதிலும்
பதித்திடும்
பசுமரத்தாணி !
தொப்பி யணிந்த
இவன்
தமிழிசைக்கு கட்டியதோ
தலைப்பாகை !
இன்னிசையில்
இவன் சூடியதோ
வெற்றி வாகை !
நாகூரின்
அடைப்புக்குறிக்குள்
இந்த இசைவாணனின்
நாமமும்
நாடெங்கும்
நினைவுறுத்தும்.
வாழ்வாங்கு வாழ
வளமோடு வாழ
வாழ்த்தும் என் இதயம்
நாகூர் ஹனிபாவும் கைத்தறி துணி விற்பனையும்
1953-ஆம் ஆண்டு அது…..
திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகி நான்கே நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. பெரியாரின் சீடராக இருந்த நாகூர் ஹனிபா, அறிஞர் அண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக முழுமூச்சாய் பெரிதும் பாடுபட்டார்.
1953-ல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இந்த போராட்டத்தின்போது அறிஞர் அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு “ஐவர் வழக்கு” என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அவர்களே திமுகவின் ஐம்பெருந்தலைவர்கள் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டனர். இந்த ஐம்பெருந்தலைவர்கள் பட்டியலில் கலைஞர் கருணாநிதி பெயரெல்லாம் கிடையவே கிடையாது.
நாகூர் ஹனிபா அறிஞர் அண்ணாவின் மீது தீவிர பற்று வைத்திருந்தார். அதே போன்று அறிஞர் அண்ணாவும் எந்தவொரு போராட்டத்திற்குச் சென்றாலும் தன்னுடன் நாகூர் ஹனிபாவையும் தவறாமல் அழைத்துச் சென்றார்.
1953-ஆம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்பஅலை வீசியது. சொல்லவொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள் அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின் குடும்பம் படும் அவலங்களை அவரால் காணப் பொறுக்கவில்லை. நெய்த துணிகள் யாவும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன. குடும்பங்கள் பசியால் வாடினர். சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலை. இதனால் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை நாடும் அவல நிலை ஏற்பட்டது. சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டனர்.
முன்பு தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது கதர் மூட்டையை தலையில் சுமந்து ஊர் ஊராகச் சென்று விற்றார். அதேபோன்று ஒரு எண்ணம் அறிஞர் அண்ணாவின் மனதிலும் உதித்தது. கழகத் தலைமை ஒன்று கூடி கைத்தறித் துணிகளை விற்று அதனைக் கொண்டு நெசவாளர்களின் துயர் துடைக்க முடிவு செய்தனர். விற்பனை செய்வதற்கு முதற்கட்டமாக திருச்சி மாநகரத்தை தேர்ந்தெடுத்தனர்.
“திருச்சியில் யார் துணிகளை விற்பது?” என்ற கேள்வி எழுந்தபோது “திருச்சியில் நானே சென்று விற்கிறேன்” என்று அறிஞர் அண்ணா அறிவிப்பு செய்தார். கழகத்தொண்டர்களுக்கிடையே இந்த அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும், மிகுந்த எழுச்சியையும் உருவாக்கியது.
கழகத்தொண்டாற்றுவதற்காக சரியான வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நாகூர் ஹனிபா இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். அண்ணாவிடம் சென்று “நானும் உங்களோடு இணைந்து பாடிக்கூவி கைத்தறி துணிகளை விற்கத் தயார்” என்றார். கண்களில் பெருமிதம் பொங்க அறிஞர் அண்ணாவும் நாகூர் ஹனிபாவின் முதுகில் செல்லமாகத் தட்டி “சபாஷ்” என்றார். [திருச்சி தெப்பக்குளத்து அருகே அறிஞர் அண்ணா, நாகூர் ஹனிபா, அன்பில் தர்மலிங்கம் முதலானோர் வீதியில் நின்று கூவிக் கூவி விற்கும் காட்சியைத்தான் மேலேயுள்ள படத்தில் காண்கிறீர்கள்]
“அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்று தந்தை பெரியார் முன்னொரு சமயம் கூறியது அறிஞர் அண்ணாவின் நினைவுக்கு வந்தது. ஊர் ஊராகச் சென்று கூவி விற்பதற்கு கம்பீர குரல்வளம் படைத்த நாகூர் ஹனிபாவைவிட வேறு பொருத்தமான ஆள் கிடையாது என்ற முடிவுக்கு வந்த அறிஞர் அண்ணா உடனே அவரை அழைத்துக் கொண்டு கழகக் கண்மணிகளோடு திருச்சிக்கு புறப்பட ஆயத்தமானார்.
அதுமட்டுமன்றி, திமுகவினரும் அவர்களது குடும்பத்தினரும் கைத்தறி ஆடைகளையே அணியவேண்டும் என அன்பாணை பிறப்பித்தார். தலைவனின் ஆணையை மகிழ்வோடு ஏற்றுக்கொண்ட தொண்டர்களும் “கைத்தறி ஆடையே இனி அணிவோம்” என மனதில் உறுதி பூண்டனர். இந்நிகழ்வை இன்றளவும் கைத்தறி நெசவாளர்கள் நினைத்துப் பார்த்து மனம் நெகிழ்கின்றனர். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றுரைத்த அறிஞர் அண்ணாவின் மனித நேயத்தை நினைத்துப் பார்த்து பெருமிதம் கொள்கின்றனர்.
அறிஞர் அண்ணாவின் இந்த கைத்தறி விற்பனைத் திட்டம் நன்றாகவே வெற்றி கண்டது. எதிர்பார்த்ததை விட கூடுதல் பலனை அளித்தது. திருச்சியில் தொடங்கி பின்னர் ஊர் ஊராகச் சென்று கழகத் தோழர்கள் கைத்தறி துணி விற்பனையில் ஈடுபட்டனர். மூட்டைகளைச் சுமந்து தெருத்தெருவாக கூவி விற்றனர். இந்த விற்பனையில் நாகூர் ஹனிபாவின் பங்கு கணிசமான அளவில் இருந்தது. “அண்ணாவின் கட்டளையை ஏற்று நான் 25,000 ரூபாய்க்கு கைத்தறி துணிகள் விற்றுக் கொடுத்தேன்” என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பத்திரிக்கையில் எழுதியும், பொதுக்கூட்டங்களில் பேசியும் கலைஞர் அவர்கள் சுயவிளம்பரம் தேடிக்கொண்டார்,
ஆனால் ‘பிழைக்கத் தெரியாத மனிதராக’, திமுகவில் பெரிய பதவியை எதுவும் நாடாமல், “அமைதிப் புரட்சி” புரிந்து, மாபெரும் சாதனையாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை மாத்திரம் கண்டு ரசித்து சந்தோஷப்படும் மனிதராக இன்றளவும் இருந்து வருகிறார் நாகூர் ஹனிபா. “நான் இவ்வளவு ரூபாய்க்கு விற்றுக் கொடுத்தேன். இதுபோன்று சாதனைகள் புரிந்தேன்” என்று இதுவரைக்கும் இந்த அப்பாவி மனிதர் எந்த ஊடகத்திலும் மார்தட்டிக் கொண்டதில்லை.
உடுமலை நாராயணகவி எழுதிய பாடலொன்று நாகூர் ஹனிபாவுக்கு கைகொடுத்தது. கம்பீரக் குரலோடு ஒலிபெருக்கியின் உதவி இல்லாமலேயே பாடத் தொடங்கினார். ‘சான்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு’ என்ற கூற்றைப் போன்று இந்த “தமிழக தான்சேன்” எந்த ஊருக்குச் சென்று தன் கந்தர்வக் குரலால் ராகமிசைத்தாலும், மக்கள் அவரது இசையில் மயங்கி கட்டுண்டனர்.
சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்
திராவிட நாட்டின் சேமம் வேண்டி
சிங்கார ஆடைகள் வாங்குவீர்.
பாடலின் ஆரம்ப வரிகள் இதுதான்.
தங்கள் அபிமான தலைவர்களைக் காணவும், “கணீர்” என்ற வெண்கலத்தொனியுடன், கம்பீரத் தோற்றம் கொண்ட நாகூர் ஹனிபா பாடும் பாடலை ஆர்வத்துடன் கேட்கவும், கட்டுக்கடங்காத கூட்டம் ஆங்காங்கே கூடியது. பொதுமக்கள் தங்கள் விருப்பம்போல் கைத்தறி துணிகளை தாராள மனப்பான்மையோடு வாங்கிச் சென்றனர்.
நெசவாளர்களின் துயரினை விளக்கும் வகையில் தந்தை பெரியார் அவர்களும் தன் பங்குக்கு 28.02.1953 தேதியிட்ட விடுதலை ஏட்டில் பின்வருமாறு தலையங்கம் எழுதியிருந்தார்.
இன்றையத் தினம் இந்நாட்டிலே நெசவாளர்கள் கஷ்டம் இருக்கிறது என்றால், அவர்கள் குடும்பம் குடும்பமாய் ஊர்சுற்றிப் பிச்சையெடுத்து அதுவும் கிடைக்காமல் பட்டினி கிடந்து, தற்கொலை செய்து கொண்டு சாகவுமான நிலைமை இந்த நாட்டிலே இருக்கிறது என்றால் யார் காரணம்? பொதுமக்களுக்குத் துணி தேவையில்லை என்று சொல்லி விட முடியுமா? அல்லது நெசவாளர்கள் தான் வேலை செய்யத் தெரியாத சோம்பேறிகள் என்று சொல்லிவிட முடியுமா? முடியாதே! அவர்களுக்கு வேலை இல்லை. செய்ய மனமிருந்தும், திறமிருந்தும், வேலையில்லாக் காரணத்தால் விதியற்று, வாழ்வற்று வீதியிலே பட்டினி கிடந்து நெசவாளி சாகிறான்.
– தோழர் ஈ.வெ.ரா
(‘விடுதலை’, 28.02.1953)
“மில்கள் கரை வேஷ்டி, கலர் புடவைகள் உற்பத்தி செய்யக் கூடாதெனத் தடை விதிப்பதுதான் கைத்தறி நெசவாளர் பிரச்னைக்கு நிரந்தரப் பரிகாரம்” என 10.6.1953-ல் அப்போது முதல் மந்திரியாக இருந்த ராஜாஜியும் தன் பங்குக்கு ஆலோசனையை எடுத்துரைத்தார். தம் திட்டத்தில் நேருஜி அனுதாபம் கொண்டுள்ளதாகவும், அவர் நிச்சயமாகச் சரியான நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
1957-ஆம் ஆண்டு கூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன் (கமால் பிரதர்ஸ்) “புதையல்” என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். கதை வசனம் மு,கருணாநிதி எழுதி இருந்தார். [அப்போது குளித்தலை தொகுதியிலிருந்து வென்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்த நேரம்.] தற்போது 6 கோடி மதிப்புள்ள கோபாலபுரம் வீட்டை 40,000 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தது கமால் பிரதர்ஸ் என்பது திமுக மூத்த தொண்டர்கள் பலரும் அறிந்து வைத்திருக்கும் செய்தி. (அந்த வீட்டை வாங்கித்தந்தது கலைவாணர் என்,எஸ்.கே. அவர்கள். கார் வாங்கித் தந்ததுதான் கமால் பிரதர்ஸ் என்ற மாறுபட்ட கருத்தொன்றும் நிலவுகிறது. உண்மை அந்த கலைஞருக்கே வெளிச்சம்)
தேங்கிக் கிடந்த கைத்தறி துணிகளை நாகூர் ஹனிபா, அன்பில் தர்மலிங்கம், மு.கருணாநிதி உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழக கண்மணிகள் வண்டிகளில் ஏற்றிக்கொண்டு ஊர்தோறும் சென்று விற்பனைச் செய்து நெசவாளர்கள் துயரைப் போக்கிய நிகழ்வு பொதுமக்களின் மனதிலிருந்து அழியாதிருந்த நேரமது
இவ்வேளையில் கைத்தறியின் மாண்புகளை விளக்கும் வகையில் கமால் பிரதர்ஸ் தயாரித்த “புதையல்” படத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் ஒரு அருமையான பாடலை எழுதியிருந்தார்.
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறி சேலையடி! – நம்ம
தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி!
காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலை, மறைந்த பேரறிஞர் அண்ணா கனவு கண்டதாகும். அவர் மறைந்த பிறகு அந்த ஆலையை உருவாக்கியவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதை நினைத்தால் இதயம் வெடிக்கிறது. இதனை இப்போதைய அதிமுக அரசும் கண்டுக் கொள்வதாக தெரியவில்லை.
1955-ஆம் ஆண்டு, “நம் நாடு” கழக ஏட்டில் வெளிவந்த ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாடலை HMV நிறுவனம் பதிவு செய்ய, நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் இசைத்தட்டு வெளியானபோது, அப்பாடல் தமிழகத்தில் ஓர் இசைப்பிரளயத்தை உண்டு பண்ணி தென்னக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த மூலக்காரணமாக இருந்தது. எந்தப் பாடலை வெளியிட முதலில் HMV நிறுவனம் கட்டோடு மறுத்ததோ அந்த இசைத்தட்டுதான் அந்த ஆண்டில் அதிகம் விற்று விற்பனையில் ஒரு சாதனையைப் படைத்தது
அறிஞர் அண்ணா அடிக்கடி பெருமைபட கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “அழைக்கின்றார் அண்ணா” என்ற இந்தப்பாடலை நாகூர் ஹனிபாவை பாட வைத்து படமெடுத்து, அதைத் திரையிட அரசு அனுமதித்தால் நிச்சயம் திராவிட நாடு பெற்று விடுவேன்” என்பதுதான். அவர் அன்று உதிர்த்த சொற்கள் தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஆம். அப்படிப்பட்ட காந்தக் குரல் ஹனிபாவுடையது. அந்த சிம்மக் குரலோனுக்கு இணையாக இதுவரை யாரும் வரவில்லை. ஒலிபெருக்கியையே அதிர வைக்கும் எட்டுக்கட்டை கம்பீரச் சாரீரம் அது.
திமுக தொடக்க கால முதல் இன்றுவரை தன் விசுவாசத்தையும், தன் உழைப்பையும் அறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகவே அர்ப்பணித்திருக்கின்ற அதிசய மனிதர் அவர். கத்திக் கத்தி ரத்தவாந்தி எடுத்து, தன் செவிப்பறையும் கிழிந்து இன்று உடல் நலிந்து காணப்படுகிறது அந்த தன்மானச் சிங்கம்
நாகூர் ஹனிபாவை ஒரு இஸ்லாமியப் பாடகராக மட்டுமே அறிந்து வைத்திருக்கின்ற இன்றைய இளைய தலைமுறையினர் தமிழகத்தில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டவர் அவர் என்ற விவரம் அறிந்து வைத்திருக்கவில்லை என்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் வருங்காலத் தலைவர்களாக உருவெடுத்திருக்கும் கலைஞர் ஐயாவின் வாரிசுகளும் பேரக்குழந்தைகளும் இந்த அழிக்க முடியாத வரலாற்றையெல்லாம் அறிந்து வைத்திருக்கிறார்களா என்று யாராவது கேட்டால் நமக்கு உதட்டைத்தான் பிதுக்கத் தோணுகிறது.
வலது பக்கத்திலிருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் நாகூர் ஹனிபா
தொடர்புடைய சுட்டி:
நாகூர் அனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (5-ஆம் பாகம்)
நாகூர் அனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (4-ஆம் பாகம்)
நாகூர் அனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (3-ஆம் பாகம்)
நாகூர் அனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (2-ஆம் பாகம்)
நாகூர் அனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (1-ஆம் பாகம்)