RSS

Category Archives: ஒரு வரலாற்றுப் பார்வை

ஸ்மார்ட் சிட்டி எங்க ஊரு


Nagai

இந்தியாவில் 100 Smart Cities உருவாக்குவதுதான் பாரதப் பிரதமர் மோடியின் கனவாம். மிக்க மகிழ்ச்சி. ஆனால் இதுபோன்ற ஸ்மார்ட் நகரத்தை எத்தனையோ ஆண்டுகட்கு முன்னரே பார்த்தவர்கள் நாம் என்ற உண்மையை   நாகையின் சரித்திர வரலாற்றை சிறிது சிறிதாக ஆராய முற்பட்ட பின்தான் அதன் மகத்துவத்தை முழுதாக  நான் அறிந்துக் கொண்டேன்.

பூம்புகார், நாகை போன்ற தன்னிறைவு பெற்ற தன்னிகரில்லா நகரங்களை விடவா தலைசிறந்த ஓர் எடுத்துக்காட்டு வேண்டும்? விரிவாகச் சொல்ல வேண்டுமெனில் நகரெங்கும் WIFI கனெக்ஷனைத் தவிர, அத்தனை அடிப்படை வசதிகளும் கொண்ட பேரூராக திகழ்ந்தது எங்களூர் என்று மார்தட்டிக் கொள்வதற்கு முழுமையான அருகதை நாகை மற்றும் நாகூர்வாசிகளுக்கு  இருக்கிறது.

அன்று “ஸ்மார்ட் சிட்டி”யாக இருந்த நாகையை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன். இனி நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

ஆன்மீக பூங்கா

வாருங்கள்…. அக்காலத்து நாகை நகர தெருக்களுக்குள் நகர்வலமாய் ஒரு வீதி உலா போய் வருவோம். தென்னகத்து சுவர்க்க பூமியைச் சுற்றி வருவது தெவிட்டாத இன்பமன்றோ?

அதோ பார்த்தீர்களா அரசு மருத்தவமனை…..

அக்காலத்தில் ஆன்மீக வாதிகளின் நந்தவனமாகத் திகழ்ந்த அமைதி பூங்கா அது.

பாண்டிச்சேரியில் தற்போது அமைந்திருக்கும் “அரவிந்தர் ஆஸ்ரமம்” கேள்விப்பட்டிருப்பீர்களே! அதே போன்று தெய்வீக மணங்கமழும் மடாலயங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த பூங்காவனம். இயற்கையன்னையின் மடியில், இரம்மியமான சூழலில், சுற்றிலும் தென்னை, புன்னை, இலந்தை, மற்றும் நாவல் மரங்கள், பச்சைப்பசேல் என காட்சி தரும் பசும்புல் போர்த்திய புல்வெளி. புத்த சமயத்தினரும், சீனர்களும், நாக நாட்டவர்களும் வந்து தங்கி அமைதி காணும் நந்தவனம். ஆத்ம நிம்மதி நாடி அடைக்கலம் தேடி வரும் ஆன்மீகவாதிகளின் வேடந்தாங்கல். வழிப்போக்கர்கள் இளைப்பாறும் வசீகர சுற்றுப்புறச் சூழல், ஆங்காங்கே தியானக் குடில்கள். எனவேதான் “சித்தம் கவரும் தென்நாகை “(7.101.9) என்று சுந்தர நாயனார் அன்று பொருத்தமாக பாடி வைத்தார்.

புத்தம் சரணம் கச்சாமி   [நான் புத்தரிடம் சரணம் அடைகிறேன்]
தர்மம் சரணம் கச்சாமி   [நான் தர்மத்திடம் சரணம் அடைகிறேன்]
சங்கம் சரணம் கச்சாமி   [நான் சங்கத்திடம் சரணம் அடைகிறேன்]

என்ற மந்திர ஓசை ஓயாது முழங்கிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற இன்பலோகம் அது.மனோ இச்சைகளை அடக்கியாண்ட  துறவிகளும், சன்னியாசிகளும் சுற்றித் திரிந்த  ஆனந்தாலயம். ஆரவாரமின்றி அமைதி மட்டுமே செங்கோலாட்சி செலுத்திய திறந்தவெளி வளாகம். அண்டை நாட்டு அரசிளங்குமரிகள் ஓய்வெடுக்க வேண்டி அமைக்கப்பட்டிருந்த அடுக்கு மாடி பயணியர் விடுதிகள்.

“பொன்னியின் செல்வன்” நாவலை படித்தவர்களுக்கு இக்கட்டுரையை படிக்கையில் நாகை சூடாமணி விஹாரம், கடல் கொந்தளிப்பு, சேந்தன் அமுதன், பூங்குழலி, அருள்மொழிவர்மன், புத்த பிட்சு போன்ற பாத்திரங்களும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களும், அனைத்து சம்பவங்களும்  நினைவுகளை அலைமோதுவதை தவிர்க்க முடியாது.

நகரின் உள்கட்டமைப்பு

ஊரை ஒட்டினாற்போல் சற்றே தூரத்தில் கூடாரங்களால் நிறையப்பட்ட திறந்தவெளி பூஞ்சோலை. வெளிப்பாளையம் என்றழைக்கப்படும் இப்பகுதிதான் நாகையின் மையப்பகுதி. இங்குதான் போர் வீரர்களின் குடியிருப்புகள் இருந்தன. நடுநிசியிலும் பெண்டிர்கள் திருட்டு பயமின்றி சர்வ சுதந்திரமாக நடமாடினர். சகல மதத்தினரும் சமய வேறுபாடின்றி சந்தோஷமாகத் திரிந்த சன்மார்க்க பூமியாகத் திகழ்ந்தது நம் நாகை.

“இந்த நாட்டில் எப்பொழுது ஒரு பெண் பயமில்லாமல் தனியாக இரவில் தெருவில் நடக்க முடிகிறதோ அன்று தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தாக அர்த்தம்” என்று காந்தியடிகள் பகர்ந்தார். அப்படிப்பட்ட சுதந்திர பூமியாக என்றோ திகழ்ந்தது எங்களூர்.

இப்போது காடம்பாடி என்று அழைக்கிறார்களே, அதன் சிறப்பை அறிவீர்களா..?

காடவர் கோன் பாடி – இதுதான் காடம்பாடியாக மருவியது. காடவர் என்றால் பல்லவர். பாடி என்றால் தற்காலிக கூடாரம். ஊரின் ஒதுக்குப்புறத்தில் கூடாரங்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் அது.

கண்ணுக்கெட்டிய தொலைவில் இலந்தை மரங்கள் நிறைந்த, திட்டுத் திட்டாய் காட்சியளிக்கும் மேட்டுப் பகுதி. “பதரிதிட்டா” (பொருள்:இலந்தை செறிந்த மேட்டுப் பகுதி) என்ற மூலவார்த்தையிலிருந்து “அவுரித்திடல்” என்ற காரணப்பெயர் பிறந்தும் இப்படித்தான்.

இன்று சப் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் இயங்கும் இடத்தில்தான் அந்நாளில் அந்த புகழ்பெற்ற சூடாமணி பெளத்த விஹாரம் வீற்றிருந்தது

“வர வர மாமியார் கழுதை போல் ஆனாளாம்” என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு மேலும் “கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆன கதை” என்று மற்றொரு பழமொழி உண்டு. இவ்விரு பழமொழிகளும் நாகைக்குத்தான் சாலப் பொருந்தும். நாகை நகரத்து பூர்வீக வரலாற்றை அறிந்தவர்கள் அந்த சிறப்புக்களை எல்லாம் இழந்து நிற்பதைப் பார்த்து கண்ணீர் வடிப்பார்கள். நாகைக்கு மட்டும் வாய்பேசும் வாய்ப்பிருந்தால் “எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்” என்ற விவேக்கின் வசனத்தைத்தான் சொல்லிக் காட்டும்.

நேர்த்திமிகு உள்கட்டமைப்பு கொண்ட நகரம்; தன்னிறைவு பெற்று நிம்மதியாய் வாழும் குடிமக்கள்; அகன்று, பரந்த தேரோடும் வீதிகள்; தூண்டா விளக்கு மணி மாடங்கள்; அங்காடித் தெருக்கள்; ஆங்காங்கே தென்றல் தாலாட்டும் தோப்புக்கள்; நகரின் மேற்கிலும், வடக்கிலும் இருபுறமும் கலைநயமிக்க தோரண வாயில்கள். “மேலைக்கோட்டை வாயில்”,  “வடக்கு கோட்டை வாயில்” இதன் பெயர்கள்.

பரண் அமைத்த வீடுகள்; உவலைக் கூரை அமைந்த பாடிவீடுகள், இலையும் தழையும் வேயப்பட்ட கூரை இல்லங்கள், இலைகளால் வேயப்பட்ட குரம்பை, மாட மாளிகைகள், மாட வீதிகள், செல்வம் கொழிக்கும் யவனர் மாளிகைகள், கொடிமர மேடைகள், வழிநெடுகிலும் சோழநாட்டு கொடிகள் அசைந்தாடும் கம்பங்கள், போரிட்டு மாண்ட மறவர்களின் நினைவாக நடுகற்கல்/ வீரகற்கள்

வணிகத்தின் பொருட்டு வந்திறங்கும் பன்னாட்டு வணிகப் பெருமக்கள், பலமொழி பேசும் மக்கள், கூலவாணிகர், மீன்வாணிகர், பொற்கொல்லர், கன்னார்; தச்சர், பூவணிகர், ஓவியம் தீட்டுவோர், கற்றச்சர், மாலுமிகள், புலவர், பாணர், இசைவாணர், முத்துவேலை செய்பவர்கள்; பட்டாடை, பருத்திஆடை, கம்பளி ஆடை நெய்பவர்கள், வணிகர், நிலக்கிழார், நாழிகை கூறுவோர், மறையவர், அரண்மனை அலுவலர்கள், படை வீரர்கள் என அனைத்து தரப்பினரும் உலா வரும் வீதிகள்.

துறைமுக நகரம்

கடல் வாணிபத்தை பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை, தேவாரப் பாடல்கள் குறிப்பிடும் அத்தனை சிறப்புக்களும் ஒரு நிமிடம் நம் கண்முன் காட்சிகளாய் விரிகின்றன.

முழுநேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம். இரவிலும் வெளிச்சத்தை உமிழ்ந்துக்கொண்டு தூங்காத நகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கார மாநகர் இந்த நாகை மாநகர்.

ஆயுதமேந்திய காவலர்களால் (“சேண்தார் புரிசைதார்” என்றால் இங்கு படை என்று பொருள்) கண்காணிக்கப்படும் கடலோரப்பகுதிகள்; பகர்னர்கள் (வியாபாரிகள்) மையம் கொண்டிருக்கும் வியாபார கேந்திரம். (In otherwords; Let us call it as a Cosmopolitan smart city monitored by Coast Guards and State of Art Security Personnels)

“பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர்” என்று கம்பன் உரைத்தானே அதுபோன்ற ஒரு Multi-cultural, Multi-Ethnic, Multi-lingual நகரமாகத் திகழ்ந்தது அக்காலத்து நாகை.

வெளிநாட்டு பொருட்களும் உள்நாட்டு பொருட்களும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகின்ற காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். ஆனை தந்தம், பட்டு நூலிழை, வெற்றிலை, வெட்டிவேர், கனகம் (தங்கம்) , கற்பூரம் வர்த்தகம் அமோகமாக நடைபெற்றது.

Crane இன்றி, Fork Lift இன்றி, 20-அடி/ 40 அடி Container, Truck  இன்றி பரிகள் இறக்குமதியாகும் காட்சியையும், மிளகுப்பொதிகள் ஏற்றுமதியாகும் காட்சியையும் சற்று கற்பனைச் செய்து பாருங்கள்.

மேற்கு மலையிலிருந்து அகிலும், சந்தனமும், தென்கடலிலிருந்து முத்துக்கள், மேற்கடலிலிருந்து பவளம் முதலியன வந்திறங்கும். உரோம நாடுகளிலிருந்தும் அராபிய நாடுகளிலிருந்து பொதிகள் வந்திறங்கும், இவைகளை மீண்டும் கடாரம் (மலேயா), சீனம், சுமத்திரா, ஜாவா தீவுகளுக்கு மறுஏற்றுமதி செய்து வாணிபம் புரிந்தது நம் தமிழர்களே.

பெரும் பெரும் மலைகள் கடலில் மிதந்து போவதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். எவ்வளவு ஒரு பிரமாண்டமான காட்சியாக இருக்கும்? இதைத்தான் “வரையார்வன போல வளரும் வங்கங்கள் கரையார் கடல் நாகை” (1.84.7) என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர். “வங்கம்” என்றால் பெரியவகை கப்பல்களைக் குறிக்கும்.

பாரீஸ் நகரம் போன்று தூங்காத நகரமாக நாகை இயங்கியது, அது காமக் களியாட்டங்களுக்காக இரவை பகலாக்கியது என்றால் இது வணிக செயல்பாடுகளுக்காக இரவிலும் ஒளி உமிழ்ந்துக் கொண்டிருந்தது.

சூயஸ் கால்வாயைப் போன்று சுங்கவரி இந்த துறைமுகத்தில் வசூலிக்கப்பட்டன. அனைத்து வகை கப்பல்களும் நாகைவழியே வந்துதான் பின்னர் கீழைநாடுகளுக்கு தங்கள் பயணங்களை மேற்கொண்டு தொடர்ந்தன. பண்டங்களை சுமந்துக்கொண்டு வரிசை வரிசையாய் வந்து நிற்கும் பொதிவண்டிகள் முதலியன நாகையை சுறுசுறுப்பு வணிக மையமாக செயல்பட வைத்தன.

தௌ-இ-சிலு போன்ற சீன மொழிக் குறிப்புகளிலும் நாகப்பட்டினத்தின் துறைமுகச் சிறப்புகள் பேசப்படுகின்றன.

“சோழர் காலத்தில் தமிழகத்தின் மிகத் முதன்மையான பன்னாட்டுத் துறைமுகமாக இருந்துள்ளதையும் தொடர்ந்து ஐரோப்பியர் காலம்வரை இவ்வூர் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இடமாக விளங்கியதையும் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது”  என்று முனைவர் பா.ஜெயக்குமார் தனது “தமிழகத் துறைமுகங்கள்” (2001) என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

வடநாகை (நாகூர்) 

பூம்புகார் எப்படி மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரு பிரிவுகளாக இருந்ததோ அதே போன்று நாகூரும், நாகப்பட்டினமும் வடநாகை, தென்நாகை என்று இரண்டு பிரிவுகளாக இருந்தன.

வடநாகைக்கும் (நாகூர்) தென்நாகைக்கும் (நாகப்பட்டினம்) இடையே, ஊரின் குறுக்கே அமைந்திருந்த சிந்தாறு, தற்போது பார்ப்பனர்சேரி என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் அக்காலத்தில் மறையவர் அகரம் அமைத்து (அக்ரகாரம்) வாழ்ந்தனர். பிறகு இது காலப்போக்கில் இது “பால்பண்ணைச்சேரி” ஆகி விட்டது.

தற்போது “நாகூர்” எனப்படும் வடநாகையைச் சற்று பவனி வருவோம்.இங்குதான் சங்க இலக்கிய காதலர்களான ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் ஒருகாலத்தில் அலைந்து திரிந்திருப்பார்கள். நாகூரில் வெட்டாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில்  இயற்கையாகவே துறைமுகமாக இயங்குவதற்கான அத்தனை அடிப்படை வசதிகளையும் கொண்டிருந்தது. நாகூர் வெட்டாறுக்கு அருகாமையிலிருக்கும் பகுதிகள் வர்த்தக சேமிப்பு கிடங்குகளாக செயல்பட்டன. பண்டக சாலை, கல்பண்டக சாலை என்று பெயர் தாங்கி நிற்கும் வீதிகள் அழிந்துப்போன வர்த்தகச் சுவடுகளின் எச்சங்களாக இன்றும் காட்சி தருகின்றன.

ஏற்றுமதிக்கான அத்தனை பொருட்களும் இங்குதான் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. சரக்கு பொருட்கள் ஏற்றுவதும் இறக்குவதுமாக இவ்வீதிகள் இரவு நேரங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தன.“கரி பரித்தொகை மணி துகில் சொரிவதாம் காலத்தால்” என்று இங்கு நடைபெறும் வாணிபத்தைக் குறித்து சேக்கிழார் தனது அதிபத்த நாயனார் புராணத்தில் கூறுகிறார். (3994-8.4.3.)

இப்பொழுது நெல்லுக்கடைத் தெரு என்று அழைக்கப்படும் வீதி “வாணியத் தெரு” என்று அழைக்கப்பட்டது. வாணிபத் தெரு என்பதின் மறுபெயர்தான் இது. அரவை மில்களும், செக்கு எண்ணெய்ஆலைகளும் இருந்த இத்தெருவில் வீதி முழுவதும் போரடித்த நெற்களை பரப்பி வைத்திருப்பார்கள். “ஆண்டி குளம்” – இக்குளத்தில்தான் தென்நாகைக்கு செல்லும் வழியில் ஆண்டிப் பண்டாரங்கள் குளித்து ஓய்வெடுப்பார்கள். ஆண்டி குளத்திற்கும், தர்கா குளத்திற்கும் அடித்தளத்தில் தொடர்புக் குழாய்கள் உள்ளன என்பது ஒரு கூடுதல் தகவல்.

நாகூர் துறைமுகத்திலிருந்து சங்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. சங்குகளில் பலவகையுண்டு.  மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு, வலம்புரிச் சங்கு – இதுபோன்று பலவகைகள் உண்டு. இவையாவும் தெற்குத் தெருவின் ஒரு பகுதியில் மெருகேற்றி பாலீஷ் செய்யப்பட்டன. இக்குறுகிய வீதி  “சங்கு வெட்டி சந்து” என்ற பெயரில் இன்றளவும் விளங்கி வருகிறது.

கி. பி. 1794-ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு  வியாபாரப் பிரதிநிதியாக கல்கத்தாவில் பணிபுரிந்தார் மீரா நயினா என்ற பிரமுகர். நாகூர் துறைமுகம் வழியே இலட்சக்கணக்கான சங்குகள் வங்காளத்திற்கு ஏற்றுமதி ஆனதற்கான அரசு ஆவணங்கள் உள்ளன. வங்காளத்தில் இருந்து திரும்பும் தோணிகளில் அந்த நாட்டு, அரிசி, சீனப்பட்டு, கண்ணாடிச்சாமான், லஸ்தர் விளக்குகள் போன்ற புதுமைப் பொருட்கள் நாகூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

நாகூர் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதியான பிரதான பொருட்கள் கைத்தறித்துணிகள், சங்கு, உப்பு, நெல், கருவாட்டு சிப்பங்கள் தென்னங்கீற்றுகள் முதலியன. இசுலாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலரில் அமீர் அலி N. கேப்டன்  எழுதிய ஆய்வுக்கட்டுரையில் இதுபோன்ற பல அரிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

[அதன்பின் வந்த இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நாகூரில் பனை ஓலைப்பெட்டி, தடுக்கு, ஓலைத் தொப்பி, ஓலைப்பாய், அஞ்சறைப் பெட்டி, கிளுகிளுப்பை போன்ற கைவினைப் பொருட்கள் பெருமளவில் குடிசைத் தொழிலாய் இருந்து வந்தது. சாயப்பட்டறை, கைத்தறி துணிகள் தறி, பிரிண்டட் அச்சுத் துணிகள், பத்தை லுங்கிகள், சுருட்டு தயாரிப்பு, மரத்தாலான கடைசல் பொருட்கள், விளையாட்டு பொருட்கள் – இதுபோன்ற எண்ணற்ற கைத்தொழில்கள் அமோகமாக நடந்து வந்தன. “கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள். கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்” என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்கள் வடநாகை (நாகூர்) மக்கள்.]

நாகூர் ஆண்டகை நாகூர் வந்து சேருவதற்கு முன்பே இஸ்லாம் மார்க்கம் இப்பகுதியில் தழைத்திருந்தது. ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர், சோழர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் தமிழர்களை ‘சூலியா’ (சோழியன் அதாவது சோழநாட்டான்) (Chulia) என்று அழைத்திருக்கின்றனர். சீனப்பயணிகள்கூட ‘Chu-Li-Yen’ என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ் முஸ்லீம்களை சோனகர் என்றும் அழைத்தனர்.

ஆனால் பிற்காலத்தில் நாகூர் நாகப்பட்டினத்திலிருந்து வந்த தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் இச்சொல்லால்தான் அடையாளப்படுத்தப்பட்டனர்.

அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து துணிமணிகள், யானைத்தந்தம், அரிசி, கோதுமை முதலியவற்றைக் கொண்டுவந்து விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக மிளகு, தகரம், பீங்கான், வாசனைத்திரவியம், பொன் முதலியவற்றை வாங்கிச் சென்று வியாபாரம் செய்து வந்தனர் இந்த சோழியர்கள்.

கி.பி 15-நூற்றாண்டுவாக்கில் மலாயாவில் மலாக்கா நகரம் வணிகச் சந்தையாக சிறந்து விளங்கியது. Chulia Street என்னும் வீதி இன்னமும் உள்ளது.

நாகூர் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்கள் உரோமானியர்கள் அரேபியர்கள் இவர்களின் வணிகத்தலமாக மட்டும் விளங்கவில்லை. சீனர்களின் வியாபார கேந்திரமாகவும் திகழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

தென்னிந்திய வரலாற்று ஏடுகளிலேயே “பகோடா” எனப்படும் சீனர்களின் புத்த ஆலயம் காணப்பட்ட ஒரே ஸ்தலம் நாகூர் மற்றும் நாகப்பட்டினம்தான்.

சீனப்பயணி யுவான் சுவாங் நாகூர் வந்துள்ளார். நாகூரைப் பற்றியச் சிறப்புகளை தன் பயண அனுபவ நூலில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஆச்சரியப்படுத்தும் செய்தி என்னவெனில் நூறு புத்த மடங்களும், பதினாறாயிரம் புத்தத் துறவிகளும் இப்பகுதியில் வசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாகூரில் தங்கியிருந்த சீனவணிகர்கள் தங்கள் நாட்டு கல்தச்சு இலக்கணத்திற்கு ஏற்ப இங்கு ஒரு கோயிலை கட்டியுள்ளாதக குறிப்பு காணப்படுகிறது.. இதனை கோபன் நேபார் என்ற மேல்நாட்டு அறிஞரும் தேமாலே என்ற வரலாற்று ஆசிரியரும் பதிவு செய்துள்ளனர்

பல்வகைச் சிறப்புக்கள் 

சோழநாட்டின் ‘நாசிக்’ நகரமென நாகையைச் சொல்லலாம். நாணயம் அச்சடிப்பதும் இங்குதான் “கம்பட்டம்” என்று மராத்திய மொழியில் குறிப்புகள் உள்ளன. இதில் செலவு போக ஆலந்துக்காரர்களுக்குப் பாதி, ஏகோசி மன்னருக்கு பாதி. நாணய அச்சடிப்பின் சின்னமாக நாணயக்காரத் தெரு இன்னும் பெயர்  சொல்லிக் கொண்டிருக்கிறது. பிற்காலத்தில் வெங்காய ஏற்றுமதிக்கு சிகரமாகத் திகழ்ந்தற்கு “வெங்காயக் கடைத்தெரு” அத்தாட்சியாக இன்றும் விளங்குகிறது.

தென்னிந்திய திருச்சபை மேல்நிலைப்பள்ளியின் தெற்கே ஹாலந்துகாரர்கள் கட்டிய ஆளுனர் வளமனையைக் காணலாம். இக்கட்டிடத்தின் முகப்பில் ஆறரை அடி உயரம், ஐந்தடி அகலத்தில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது, இப்பாதை நேராக கொடிமரத்திற்கு சென்று அடைகிறது. கப்பலில் வந்திறங்கும் ஆளுநரும் அவர் குடும்பத்தாரும் இந்த சுரங்கப்பாதை வழியேதான் வளமனை வந்து அடைவார்களாம். வி.ஐ.பி.களுக்கு இதைவிட “இஸட் பிரிவு”  பாதுகாப்பு வேறென்ன வேண்டும்?

அதுமட்டுமல்ல. நாகை அரண் சுவர்களால் சூழப்பட்ட நகராக இருந்ததாம், (இப்போது அதற்கான எந்த அடிச்சுவடும் இல்லாமலே போய்விட்டது.) அரண் என்று சொல்லப்பட்டது நகரைச் சுற்றி எழுப்பட்ட சுற்றுச்சுவரை குறிப்பதன்று; மாறாக தோரணவாயில்களைத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்று வேறொரு வாதத்தையும் ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். அரணும் இல்லாது அரண்மனையும் இல்லாது அதேசமயம் வரலாற்றுப் புகழ் நகராக வணிகக் கோட்டையாக நாகை திகழ்ந்தது என நாம் பெருமைபட்டுக் கொள்ளலாம்.

கல்வி மையம்

“கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்று பாரதி பாடினானே அவன் வரிகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த “மாதிரி நகரம்” தான் நாகை. கற்றறிந்த சான்றோர்கள், கன்னித்தமிழ் வளர்த்துப் போற்றிய  புலவர் பெருமக்கள் வாழ்ந்த ஊர் இது. காளமேகப் புலவர் போன்றோர் வியந்த ஊர் இது.

அரபு நாடுகளில் எப்படி எகிப்து நாட்டு கெய்ரோவும், ஈராக் நாட்டு பக்தாதும் கல்விக்கூடங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்ததோ, வட இந்தியாவில் எப்படி நாளந்தா நகரம் கல்வியின் மையமாகத் திகழ்ந்ததோ அதுபோன்று தென்இந்தியாவில் நாகை அந்நாளில் பெயரோங்கி விளங்கியது. எங்கெங்கு காணினும் கல்வி நிலையங்கள்.

“கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்“ என்ற ஞான சம்பந்தரின் பாடலிலிருந்து இப்பகுதி மக்களின் கல்வித்தரம் நன்கு புலப்படும்.

சமத்துவ நகர்

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நாகூரை குறிப்பிடுவார்கள். மதநல்லிணக்கம் என்பது வடநாகைக்கும் தென்நாகைக்கும் ஒன்றும் புதிதல்ல. பண்டு தொட்டு இவ்வூர் சைவ, வைணவ, சமண, பௌத்த இஸ்லாமிய சமயங்களின்   சமத்துவ நகராகத் திகழ்ந்தது. இத்சிங், மார்க்கோபோலோ, இப்னு பதூதா, இரசீதுத்தீன் ஹுவான் சுவாங் மற்றும்   மேற்கத்திய பயணிகளின் குறிப்புகளில் யாவும் நாகப்பட்டினத்தின் பெருமையை எடுத்துரைக்காத நூல்களே இல்லை எனலாம்.

நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழகத்தில் 5 சமஸ்கிருத செப்பேடுகளிலும், 16 தமிழ் செப்பேடுகளிலும் மொழியிலும் சூடாமணி விகாரம் பற்றிய குறிப்பு உள்ளது. இவற்றில் 21 செப்பேடுகள் பெரியதாகவும், 3 செப்பேடுகள் சிறியதாகவும் உள்ளது. இந்த செப்பேடுகளில் புத்த விகாரத்திற்கு கூடுதல் மானியம் வழங்கப்பட்ட தகவல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகூர், நாகபட்டினம் பல்லவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. காயரோகணர் கோயில் மற்றும் நாகநாதர் கோயில் கல்வெட்டுக்களில் இது பல்லவர் காலத்தில் துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்ததற்கான போதுமான ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன. இரண்டாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் (691-729). ஒரு சீனப்பயணியின் ஆன்மீகச் செல்வாக்கினால் பல்லவர் காலத்தில் புத்த விகாரம் இங்கு எழுப்பப்பட்டது.

அதற்குப் பிறகு, பத்தாம் நூற்றாண்டில் இந்த நகரம் சோழர்களின் முழுக்கட்டுப்பாட்டுக்கு வந்தது. நாகையில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய சோழர் கால கல்வெட்டு முதலாம் இராஜராஜன் (கி.பி. 985-1014) காலத்தை சேர்ந்தது. ஸ்ரீ விஜய சூளாமணி வர்மன் எனும் ஜாவா நாட்டு மன்னனால் ராஜ ராஜ சோழனின் ஆதரவுடன் பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்படதுதான் சூடாமணி விகாரம் என்ற புத்தக்கோயில்.

10,11-ம் நூற்றாண்டுகளில் சோழ நாட்டில் ஆழமாக காலூன்றியிருந்த புத்தமதம் எப்படி அடிச்சுவடே இல்லாமல் போனது என்பது புரியாத புதிர்.

பசுக்களையும் அந்தணர்களையும் காப்பாற்றுகின்றவரான
சிரீமத் சத்ரபதி மகாராசராச சிரீ பிரதாப சிம்ம மகாராசா சாகேப் அவர்கள்

என்று மாராத்திய மன்னன் பிரதாப்சிங்கை போற்றும் வகையில் உள்ள சொற்றொடரை நாகூர் மினாரா கல்வெட்டு ஒன்றில் காணமுடிகின்றது.

எடுப்பார் கைப்பிள்ளை 

‘கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதை’யாக நாகை மண்ணை ஆள வந்த மராத்திய மன்னர்கள் முதற்கொண்டு நாயக்க மன்னர்கள்வரை ஆளாளுக்கு கஷ்டம் வந்தால் அண்டா குண்டாவை மார்வாடிக் கடையில் அடகுவைக்கும் ஏழைகளைப்போல நாகையை போர்த்துகீசியகளிடமும், ஆலந்துக்காரர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும், அடகுவைத்தும், ஏலம்விட்டும், குத்தகை விட்டும் “எடுப்பார் கைப்பிள்ளை” ஆக்கிய வரலாற்றை எழுதுவதற்கு பக்கங்கள் காணாது.

ராஜராஜ சோழச் சக்கரவர்த்தி நாகப்பட்டினத்தில் சூளாமணி விஹாரத்துக்காக ஒரு கிராமத்தின் வருமானத்தை கடாரத்தின் ஆட்சியாளரான சூளாமணிவர்மதேவன் என்பவருக்கு அளித்தார் என்ற செய்தியையும், அவருக்குப் பின் அவர் மகன் மஹாவிஜயதுங்கவர்மன் என்பவருக்கு அது தொடரப்படவேண்டும் என்ற செய்தியையும் கொண்டிருக்கிறது.

“ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி” என்பார்கள். ஆனால் நாகை விடயத்தில் இந்த ஊரையே பிள்ளையார் கோயில் ஆண்டியாக்கி களிப்புற்றார்கள் இதை ஆள வந்தவர்கள்.

அகழாய்வு ஆவணங்கள்

பழங்கற்காலம் தொடங்கி புதிய கற்காலம், பெருங்கற்காலம் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் அனைத்து காலத்து தொல்லியல் ஆதாரங்கள் நாகையில் கிடைத்துள்ளன. 2009-ஆம் ஆண்டு தொல்லியல் துறை நாகப்பட்டினத்தில் அகழாய்வு மேற்கொண்டபோது நிறைய அகழாய்வு பொருட்கள் கிடைக்கப் பெற்றன. முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

நாகை நீதிமன்ற வளகாத்தில் நான்கு சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொண்டதில் 2000 ஆண்டுகளுக்குரிய பண்பாட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன,.

வெண் களிமண்ணாலான புகைபிடிப்பான்கள், 1753 வருடம் பொறித்த டச்சு செம்புக்காசுகள், 16-ஆம் நூற்றாண்டு சீனக்களிமண் சில்லுகள், Porcelene சில்லுகளில் மசூலா படகுகளின் உருவமும் தோணிகளின் உருவமும் பொறிக்கப்பட்டிruந்தன

இவ் அகழாய்வில் சோழர் காலக் கூரை ஓடுகள், பானை ஓடுகள் கிடைத்ததோடு ‘ஸ்ரீராஜராஜ’ எனப் பெயருடன் சோழப் பேரரசன் முதலாம் இராஜராஜனின் செப்புக் காசு ஒன்றும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

300 மேலான பெளத்த படிமங்கள் நாகையில் கண்டுபிடிக்கப்பட்டன.  சென்னை அருங்காட்சியகம், நியூயார்க் நகரத்திலிருக்கும்  ராக்ஃபெல்லர்  சென்டர் போன்ற இடங்களில் இவைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

நான் வளர்ந்தது நாகப்பட்டினத்தில். நான் அங்கு வசித்த காலம்வரை நாகை புத்த மத மையமாக ஒருகாலத்தில் விளங்கியது என்பதை நான் அறிந்திருக்கவே இல்லை. சில ஆண்டுகளுக்குமுன் சென்னை அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தேன். முதன்மை நோக்கம், அங்கு இருக்கும் நடராஜர் வெண்கலச் சிற்பங்களைப் பார்ப்பதுவே. அற்புதமான திருவாலங்காட்டு நடராஜரையும் காளையின்மீது சாய்ந்த நிலையில் (காளை இல்லை) இருக்கும் வெண்கல அர்தநாரியையும் பார்த்தபின் சுற்றிவரும்போது திடீரெனக் கண்ணில் பட்டன பல்வேறு வெண்கல புத்தர்கள். அனைத்தும் சோழர் வெண்கலச் சிலைகள். அனைத்தும் (அல்லது கிட்டத்தட்ட அனைத்தும்) நாகப்பட்டினத்தின் சுற்றுப்புறங்களில் கண்டெடுக்கப்பட்டவை

என்று எழுதுகிறார் கிழக்கு பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் திரு. பத்ரி சேஷாத்திரி

– அப்துல் கையூம்

qaiyum-fb2

தொடர்புடைய சுட்டி :

ஒரு ஊருக்கு இத்தனைப் பெயர்களா..?

மீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு

நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது..?

 

Tags: , ,

ஒரு ஊருக்கு எத்தனைப் பெயர்கள் !!!


நாகூரின் பழைய பெயர்தான் என்ன?

“நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது?” என்ற விளக்கத்தை ஏற்கனவே நான் பல கட்டுரைகளில் பதிந்திருக்கிறேன். நாகூரின் பண்டைய கால பெயர் என்னவாக இருந்தது? அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல் இவ்வாய்வு நமக்கு பல அரிய ஆய்வுகளைத் தேடித்தரும்.

நாகூர் பெயர்காரணம் தெரிந்துக் கொள்வதற்கு முன்பாக, நாகூரை ஒட்டியுள்ள நாகப்பட்டினத்தின் பழைய பெயர் என்னவாக இருந்தது என்பதை ஆராய்வது இன்றிமையாதது. “ஒரு ஊருக்கு இத்தனை பெயர்களா?” என்று வியப்பில் நாம் ஆழ்ந்து போவோம்.

பூம்புகார் கடலால் கொள்ளப்படுவதற்கு முன் நாகப்பட்டினத்தின் பெயர் “நீர்பெற்று”.

சோழர்களின் ஆட்சியின்போது இதன் பெயர் “சோழகுலவல்லிப்பட்டினம்”

ராஜராஜ சோழன் ஆட்சியில் “சத்திரிய சிகாமணி” என்றிருந்தது.

“நாவல் பட்டினம்” என்ற மற்றொரு பெயர்க்காரணம் மிகவும் சுவையானது. “நாவல்” என்ற சொல் “நாவாய்” என்ற வார்த்தையிலிருந்து உதித்தது. Navy, Naval முதலிய ஆங்கில வார்த்தைகள் “நாவாய்” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து பிறந்ததுதான். பட்டினம் என்றால் கடற்சார்ந்த ஊர். நாவல் பட்டினம் என்றால் கப்பல் நகரம்.

”நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் கண்ட உரவோன் மருக!

களிஇயல் யானைக் கரிகால் வளவ ! (பாடல்-66)

மேற்கண்ட புறநானூற்றுப் பாடலில் “நாவாய்”  என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தின் பெயர் நாவாந்துறை (நாவாய்+துறை)

புத்த இலக்கியங்களில் இதன் பெயர் ”படரிதித்த” என்பதாகும். பாலி மொழியில் பதரி என்றால் இலந்தை என்று பொருள். (அதுதாங்க ஜூஜூபி). பதரி திட்டா என்றால் இலந்தை செறிந்த மேட்டு நிலம் என்று பொருள். பதரிதிட்டா என்ற சொல் படரிதித்த என்று காலப்போக்கில் மருவிப் போனது.

நாகங்கள் மிகுந்த பகுதியாக இருந்ததால் இது “நாகப்பட்டினம்” என்றும், நாகமரம் (புன்னை மரம்) மிகுதியாக காணப்பட்டதால் இது நாகப்படினம் என்றும் பெயர் பெற்றதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

நாகர் இன மக்களுக்கும் இவ்வூருக்கும் இருந்த நெருங்கிய தொடர்பின் காரணமாக இவ்வூர் நாகர்பட்டினம் (நாகர்+பட்டினம்) என்று அழைக்கலாயிற்று என்று ரா.பி.சேதுப்பிள்ளை தனது “தமிழகம் ஊரும்பேரும்” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“நாகப்பட்டினம்” என்று சொல்வதைக் காட்டிலும் “நாகபட்டினம்” என்று சொல்வதே மிக்க பொருத்தமாகும்

நாக்கில் வசம்பு வைத்து தேய்த்தாலும் திருந்தாத டச்சுக்காரர்களில் வாயில் இந்த ஊர் “நேகபேட்டன்” என்று அல்லல் பட்டது

தொலமி (Ptolemy) என்ற கிரேக்க அறிஞர் இதனை “நிகாம்” என்றும் “நிக்காவ்வா” (Nikawa) என்றும் அழைக்கிறார்.

“நாகவதனா” (Nagavadana)  என்று சீனப்பயணி யீஜிங் (Yijing or I-tsing) அழைக்கிறார்.

“மலிபட்டான்” (Mali-pa-tan)  என்று  இரச்புத்தீன் அழைக்கிறார்.

“நவுட்டபட்டனா” (Navwttapattana) என்று கலியாணிப் பட்டயம் கூறுகிறது.

“நெகபட்டன்”  என்று போர்த்துகீசியர்கள் குறிப்பிடுகிறார்கள்

“நெகபெட்டாம்” (Negapettum) என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிடுகின்றனர்.

“நெகமா”, “நாகானனை”, “நாகநகரம்” என்று புத்த நூல்கள் பகர்கின்றன.

ஒரு ஊருக்கு இத்தனைப் பெயர்களா? என்று நாமும் விழி பிதுங்கிப் போகிறோம்.

 

மகேந்திரவர்மன் பல்லவன் காலத்தில் (604-630) வாழ்ந்த அப்பர் திருநாவுக்கரசு நாயனார் “வங்கமலி கடல் நாகை” (தேவாரம் 4.108) என்றே குறிப்பிடுகிறார். அவர் நாகை என்று குறிப்பிடுவது நாகூர், நாகப்பட்டினம் இரண்டு ஒன்றிணைந்த பேரூரை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாகநாதர் கோயிலில் காணப்படும் கல்வெட்டிலும் “நாகை” என்ற பெயரையே காண முடிகின்றது

வங்கம் என்றால் பெரியவகை கப்பல்களைக் குறிக்கும். கப்பல் என்பதற்கு சங்கத்தமிழில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில்  என்ற பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வங்கம், நாவாய் இவையிரண்டும் பெரியவகை கப்பல்கள்.

அப்பர் “நாகை” என்றுதானே குறிப்பிடுகிறார். இதில் நாகூர் எங்கிருந்து வந்தது என்ற கேள்விகள் எழலாம். நியாயமான கேள்வி.  மேற்கொண்டுபடித்தால் நாகூரும் நாகையும் வெவ்வேறல்ல என்பது பநன்கு விளங்கும்.

அடுத்து திருஞான சம்பந்தர் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். “வரையார்வன போல வளரும் வங்கங்கள் கரையார் கடல் நாகை” என்று பாடுகிறார்.(1.84.7).

பெரிய மலையொன்று கடலில் மிதந்து போவதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பிரமாண்டமான காட்சியாக இருக்கும்? பெரிய கப்பல்களாகிய வங்கம் மலைபோல் நகர்ந்தன என்கிறார் திருஞானசம்பந்தர்.

சுந்தரர் பாடிய பாடல்களில் யாவும் நாகையை தென்நாகை என்றே குறிப்பிடுகிறார். இதற்கு உதாரணமாக கீழே பத்து பாடல்களை உதாரணம் காட்டியிருக்கிறேன். சுந்தரர், பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 840 – 865) காலத்தைச் சேர்ந்தவர்.

துன்னா மயூரம் சோலைதொறும் ஆட, தூரத் துனைவண்டு

தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து  –  (7.101.1)

 

முரைக் கை பவளக்கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம்

திரைக்கை காட்டும் தென்நாகை  – (7.101.2)

 

முல்லை முறுவல் கொடிஎடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட

செல்லும் புறவின் தென்நாகைத் திருக்காரோணம் – (7.101.3)

 

தூண்டா விளக்கு மணி மாட வீதிதோறும் சுடர் உய்க்க

சேண்தார் புரிசைத் தென்நாகை – (7.101.4)

 

பருவன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்

தெருவில் சிந்தும் தென்நாகை – (7.101.5)

 

ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறம்கை அனம்

சேடை உடுத்தும் தென்நாகை – (7.101.6)

 

கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணி மாளிகை குழாம்

இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகை – (7.101.7)

 

தொள்ளை ஆம் நல்கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத்

தொள்ளும் வேலைத் தென்நாகை – (7.101.8)

 

முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடி மன்னர்

சித்தம் கவரும் தென்நாகை – (7.101.9)

 

திரை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக் கோபுரத்து நெருக்கமலர்ச்

சிறைவண்டு அரையும் தென்நாகை – (7.101.10)

தென்துருவம் என்ற ஒன்று இருப்பதினால்தானே மற்றதை நாம் வடதுருவம் என்று அழைக்கிறோம்? கடற்கலம் அணையும் நகரமாக புகழ் பெற்று விளங்கிய நாகையின் தென்பகுதி “தென்நாகை” என்றும், வடக்குப் பகுதியான நாகூர் “வடநாகை” என்று அழைக்கப்பட்டது.

அதன் பிறகு வந்த காலத்தில், மேற்குப் பகுதியிலிருந்த நாகூர் பகுதி “மேலநாகூர்” என்றும் கிழக்குப்புறமிருந்த பகுதி “கீழநாகூர்” என்றும் அழைக்கப்பட்டது. நாகூரில் புலமை வாய்ந்தவர்கள் மிகுதியாக இருந்தமையால் “புலவர்க்கோட்டை” என்ற சிறப்பும் பெயரும் உண்டு.

நாகூர் வடநாகையாகவும், நாகபட்டினமும் தென்நாகையாகவும் ஈருடல் ஓருயிராகவே செயல்பட்டன.

ஒரு ஊரின் இரண்டு பகுதிகள் மருவூர்ப்பாக்கம, பட்டினப்பாக்கம் என்றழைக்கப் பட்டதைப் போல் நாகூரும் நாகப்பட்டினமும் ஓர் ஊரின் இருகூறாகக் கருதத் தக்கவை என்கிறார்  இரா.பி.சேதுப்பிள்ளை. (தமிழகம் ஊரும்பேரும், பக்கம் :36)

1799-ஆம் ஆண்டு தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆங்கிலேயர் வசம் ஆனபோது நாகபட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது. பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது. இந்த தகவல்களை ஆங்கிலேயக் குறிப்பேடுகளில் காண முடிகின்றது.

நாகூரின் மற்ற மற்ற சிறப்புகளை அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் விளக்கமாக பார்ப்போம்.

அப்துல் கையூம்

 

Tags: ,

இந்திய சுதந்திர போராட்டத்தில் நாகூர் இறைநேசரின் பங்களிப்பு


அறியாமல் போன வரலாறு

நாகூரில் வாழ்ந்து மறைந்து நாகூரிலேயே அடக்கமாகி இருக்கும் இறை நேசரை (1490-1579) அவர்களை “சுதந்திர போராட்ட வீரர்” என்று எனது நண்பரொருவர் முகநூலில் குறிப்பிட்டு இருந்ததைக் கண்டு “இது உண்மையான தகவலா?” என்று வேறொரு முகநூல் நண்பரொருவர் ஆர்வத்துடன் எனக்கு விளக்கம் கேட்டு தகவல் அனுப்பியிருந்தார்.

அதோடு அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை “அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?” என்ற பழமொழியையும் கிண்டல் தொனியில் எழுதியிருந்தார்.

“இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்” என்று எழுதுகிறார் பிரபல நாவலாசிரியரும், பத்திரிக்கையாளருமான குஷ்வந்த்சிங், [29.12.1975 தேதியிட்ட இல்லஸ்டிரேட் வீக்லி’]

[நாகூர் இறைநேசச் செல்வரின் வாழ்நாள்காலம் ஓரிரு ஆவணத்தில் 1490-1579 என்றும், மற்றொரு ஆவணத்தில் 1532-1600 என்றும், தைக்கா தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்கள் எழுதிய நூலில் 1504-1570 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பல சரித்திரக்கூற்றுகளில் அவர்கள் 68 வருடங்கள் மட்டுமே இப்பூவுலகில் வாழ்ந்ததாக குறிப்புகள் பரவலாக காணப்படுகின்றன. நாகூர் தர்கா நிர்வாகத்தினர் கணக்குப்படி 527 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பிறந்ததாகவும், 459 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் மறைந்ததாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.]

நாகூர் ஆண்டகை (ஆண்+தகை) ஒரு ஆன்மீக ஞானி என்ற வகையில்தான் எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்களே தவிர, இந்திய நாட்டுச் சுதந்திர போராட்டத்திற்கு அவர்கள் ஆற்றிய அரும்பணி வெளியுலகத்திற்கு தெரியாமல் போனது மிகவும் துரதிருஷ்டமானது. 2007-ல் நானெழுதிய கட்டுரை ஒன்றில் இதனை குறிப்பிட்டு இருக்கிறேன்,

நமக்குத் தெரியாத தகவல் ஒன்று தாமதமாக கிடைக்கப் பெறுகிறது என்ற ஒரே காரணத்தால் அது உண்மை அல்ல என்று ஆகிவிடாது. ஆன்மீகத்தில் சிறந்து விளங்கிய எத்தனையோ உன்னத மனிதர்கள் இலக்கியத்திலும், சமூகப்பணியிலும், வேறு துறைகளிலும் சிறந்து விளங்கியிருப்பது கண்கூடு.

நாகூர் ஆண்டகையின் முழுமையான வரலாறு மற்றும் அவர்கள் வாழ்வில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் தேதி வாரியாக பதிவு செய்யப்பட்டு வந்தது உண்மை. இவை பெரும்பாலும் அரபுத்தமிழில் எழுதப்பட்டவை. போர்த்துகீசியர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு காலத்தில் அரபுத்தமிழில் எழுதப்பட்டிருந்த அவையாவும் அழிந்துப் போயின. அரபுத்தமிழ் நூல்கள் என்றால் அரபி எழுத்துக்களால் எழுதப்பட்ட தமிழ் புத்தகம் என்று பொருள். அதனால்தான் அவர்கள் வாழ்ந்த காலமும் துல்லியமாக கணக்கெடுப்பதில் சற்றே வித்தியாசம் காணப்படுகின்றது. அவர்கள் தங்கள் இறுதிகாலத்தில் நாகூரில் வாழ்ந்த காலம் சுமார் 28 ஆண்டுகள்.

இந்திய சுதந்திர போராட்டம் என்றதும் ஆங்கிலேயர்களை எதிர்த்து நம்மவர்கள் புரிந்த போராட்டம் மட்டுமே என்று பலரும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். நாம் பாடத்திட்டத்தில் படித்த வகையில் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது பகத் சிங்கும். வ.வு.சி.யும், வீரபாண்டிய கட்டபொம்மனும், திப்பு சுல்தானும்தான்.

ஆகையால்தான் நாகூர் ஆண்டகையின் பெயரை சுதந்திர போராட்ட வீரர் என்று குறிப்பிட்டால் அது ஒரு நகைப்பிற்குரிய விஷயமாக நமக்கு தென்படுகிறது,

போர்த்துகீசியர்களையும், டச்சுக்காரர்களையும் எதிர்த்து நம்மவர்கள் போரிட்டதை ஏன் சுதந்திர போராட்டமாக யாரும் கருதுவதில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.

நாகூரில் வாழ்ந்த நம் இறைநேசர் ஆன்மீகம் போதித்ததோடு மட்டும் நின்று விடவில்லை. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி விலாவாரியாக எழுதத் தவறியதுதான் இந்த தவறான புரிதலுக்கு முதன்மையான காரணம் என்று நினைக்கிறேன். அல்லது அப்படி எழுதப்பட்ட நூல்கள் நமக்கு முழுமையாக கிடைக்காமல் போனதால் கூட இருக்கக்கூடும்.

தமிழ் மொழியில் பாக்கள் வடிவிலும், உரைநடையிலும், தெருக்கூத்து வடிவிலும் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை வடித்த பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களது ஆன்மீகப் பணியை மட்டுமே அதிகம் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிலும் ஆதாரமில்லாத பல செய்திகளும், மிகைப்படுத்தப்பட்ட தகவல்களும் கலந்து விட்டது என்பதை நாம் அடியோடு மறுப்பதற்கில்லை.

ஆன்மீகம் தவிர்த்து அவர்கள் தீர்த்து வைத்த சமூகப் பிரச்சினைகள் ஏராளம்; . ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து இன மக்களுக்கும் அவர்கள் ஆற்றிய பொதுநலத் தொண்டு கணக்கிலடங்காது. அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலும் சரி, அவர்கள் மறைந்த பின்னரும் சரி, பிறமதத்து சகோதர்களே அவர்கள் மீது கூடுதல் அன்பும், எல்லையற்ற அபிமானமும் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

நாகூரில் நிகழ்ந்த நகர்வலம் ஒன்றிற்கு மராத்தி மன்னர்கள் வழங்கியதாக தஞ்சை சரஸ்வதி மகாலில் காணப்படும் மோடி ஆவணங்களில் கீழ்க்கண்ட தகவல்கள் நம் கூற்றுக்கு சுவராஸ்யம் கூட்டும் [மராத்திய மோடி எழுத்தில் எழுதப்பட்டதால் இது ‘மோடி ஆவணம்’ என்றழைக்கப்படுகிறது. மற்றபடி நமோ பிரியர்கள் இதில் உரிமை கொண்டாடத் தேவையில்லை].

ஈட்டிக்காரர்கள்-40, யானையின் மேலுள்ள விருதுகள், மேளம், சங்கீத மேளம், அரபி வாத்தியம், துருப்புகள், கோட்டையிலும் கோட்டைக்கு வெளியிலுமுள்ள தப்பு, தம்பட்டம் வகையறா, நெட்டியினால் செய்த மரங்கள், தீவட்டிகள்-20, வாணங்களின் கடிகள், பல்லக்குத் தூக்குகிற ஆட்கள்-5, டகோரா வாத்தியம் ஜோடி-1, குதிரையின் சேணங்கள், நாகூர் தர்காவிற்கு நகரா வாத்தியமும் தர்காவில் மூடுகிற போர்வையும், பண்டிகையையொட்டி நிகழும் கொடியேற்றத்தின் போது, விளக்கு எண்ணைய் வாங்க பத்து நாட்களுக்குப் பணமும் அரண்மனையிலிருந்து தந்ததாக கணக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. (தொகுதி 1:212/ 214/215/217)

போர்த்துகீசியர்களை எதிர்த்த இறைநேசர்

அந்நிய நாட்டு சக்திகள் சோழமண்டல கடற்கரையோரங்களிலும், தென்மாவட்ட கடற்கரையோரங்களிலும், கேரளக் கடற்கரையோரங்களிலும் அத்துமீறி ஆக்கிரமிப்பு நடத்தியபோதெல்லாம் அரணாக இருந்து தென்னிந்திய மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுத்தவர் நாகூர் இறைநேசர் என்பது பெரும்பாலோருக்கு போய் எட்டாதச் செய்தி.

மதநல்லிணக்கத்திற்கு அவர்கள் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள் எனலாம். மக்களின் நல்வாழ்வுக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்தார்கள். இன்னும் சொல்லப்போனால் போர்த்துகீசியர்கள் தமிழக மண்ணில் அழுத்தமாக காலூன்ற முடியாமல் போனதற்கு அவர்கள் காட்டிய கடும்எதிர்ப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இல்லையென்றால் தமிழகத்தின் இப்பகுதி மற்றொரு கோவா மாநிலமாக மாறியிருக்கும். இந்நேரம் நம் அம்மணிகள் கவுன் அணிந்த ‘ஆன்டி’களாக வலம் வந்துக் கொண்டிருப்பார்கள்.

ஆன்மீக ஞானிகளின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னே ஒரு மறைவான நோக்கம் இருக்கும். வடநாட்டிலிருந்து வந்து தமிழக கடற்கரையோரம் இப்பகுதியை தேர்ந்தெடுத்து அவர்கள் இங்கு வந்து குடிபெயர்ந்ததற்கு காரணம் உண்டு. குவாலியரைச் சேர்ந்த அவர்களின் குரு ஹஸ்ரத் முஹம்மது கெளது என்ற ஆன்மீக ஞானியின் பரிந்துரையின் பேரில்தான் அவர்கள் இவ்வூரை தங்களது இருப்பிடமாக்கிக் கொண்டார்கள். இப்பகுதியில் இறைநேசரின் பிரச்சாரத்தால் இஸ்லாத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

நாகூர் ஆண்டகை போர்த்துகீசியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது. இறைநேசரின் உயிருக்குச் சேதம் விளைவிப்பதற்காக போர்த்துகீசியர்கள் பலவிதத்திலும் முயன்று தோற்றுப் போனார்கள்.

குடகு தேசத்து ஆயுதம் தாங்கிய வீரர்கள் அவர்களை கொல்ல வந்தபோது, முயற்சி பலனளிக்காமல் தோற்றுப்போனதோடு மட்டுமின்றி மாண்டும் போனார்கள் என்ற விவரத்தை “மதுரை தமிழ் சங்கத்து நான்காம் நக்கீரர்” என்று போற்றப்பட்ட நாகூர் குலாம் காதிறு நாவலர் எழுதிய நூலின் குறிப்பு சான்று பகர்கிறது குடகு தேசம் என்று அவர் குறிப்பிடுவது போர்த்துகீசியர்களின் கோட்டையாக விளங்கிய இன்றைய கோவா மாநிலம்.

போர்த்துகீசியர்களின் அட்டகாசங்கள்

போர்த்துகீசியர்கள் முஸ்லீம்களின் மீது புரிந்த அடக்குமுறை, அட்டூழியங்கள் குறித்து டான்வர், வைட்வே, ரோலாண்டு E.மில்லர், C.R.D.சில்வா, மானா மக்கீன், ஓ.கே.நம்பியார், , மஹதி போன்றவர்கள் நிறையவே எழுதியுள்ளனர். கப்பல்கள் சொந்தமாக வைத்தும், பெருமளவில் கீழைநாடுகளுக்கு வணிகம் செய்தும் பெரும் செல்வந்தர்களாக பொருளீட்டி வாழ்ந்து வந்த சோனக முஸ்லீம்களின் வியாபாரத்தை நசுக்கி, பொருளாதார ரீதியில் அவர்களுக்கு பெருத்த சேதத்தை உண்டு பண்ணியவர்கள் போர்த்துகீசியர்கள்.

போர்த்துகீசியர்களுக்குப் பிறகு வந்த டச்சுக்காரர்களும் முஸ்லீம்களின் மீது அதேபோன்று பகைமை உணர்ச்சியை வெளிக்காட்டினாலும், போர்த்துகீசியர்கள் அளவுக்கு மகாகொடுமைக்காரர்களாக இருந்ததில்லை.

போர்த்துகீசியர்கள் பிரதான எதிரிகளாகக் கருதியது முஸ்லீம்களைத்தான். இந்துக்களும் போர்த்துகீசியர்களின் அட்டூழியத்திலிருந்து தப்பவில்லை. நாகூரில் இருந்த அரங்கநாதர் கோயிலை போர்த்துகீசியர் இடித்ததாக சரித்திர ஆதாரங்கள் சான்று பகர்கின்றன.

போர்த்துகீசியர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டதையும் அவர்களுக்கு பெருஞ்சேதம் விளைவித்த வரலாற்று நிகழ்வுகளையும் முஸ்லீம்களை அவர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவங்களையும் ஆதாரத்துடன் என் நண்பர் நாகூர் ரூமி “குஞ்சாலி மரைக்காயர்கள்” என்ற தலைப்பில் தனி கட்டுரை ஒன்றில் வடித்துள்ளார். போர்த்துகீசிய படையெடுப்புக்கு மூலக்காரணமாக இருந்த வாஸ்கோடா காமாவை “ஷைத்தான்” என்று அவர் சித்தரிந்திருந்தது என்னை வெகுவாக ரசிக்க வைத்தது.

இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் முற்றிலும் அழிந்து போனது போர்த்துகீசிய ஆக்கிரமிப்பின்போதுதான். அக்காலத்தில் இலக்கிய படைப்புகளும், இஸ்லாமிய வரலாறு கூறும் ஆவணங்கள் அனைத்தும் பனை ஓலைச்சுவடியில்தான் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அரபுத்தமிழில் எழுதப்பட்டிருந்த மார்க்க சம்பந்தப்பட்ட நூல்கள் அதில் ஏராளம். மார்க்க நூல்கள் இந்தக் கொடிய மிருகங்களிடம் சீரழிந்து அதன் புனிதத்துவத்திற்கு பங்கம் விளைந்து விடக்கூடாதே என்று எண்ணி முஸ்லீம்களே ஏராளமான ஓலைச்சுவடிகளை கடலில் தூர எறிந்திருக்கிறார்கள் என்பதை படிக்கும்போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

ஆக, 17-ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட இஸ்லாமிய மார்க்க/ தமிழிலக்கிய படைப்புகள் நம் கையில் கிடைக்காமல் போனதற்கு போர்த்துகீசியர்களின் அட்டகாசம் ஒரு தலையாய காரணம் என்பதை வரலாற்று பதிவேடுகள் உறுதிபடுத்துகின்றன.

இறைநேசரின் அறிவுரையின்பேரில்

நாகூர் இறைநேசச் செல்வரின் அறிவுரையால் கவரப்பட்டு, அவர்களின் தூண்டுதலின் பெயரில் போர்த்துகீசிய படையுடன் எதிர்த்து போர் புரிந்தவர்களின் வரிசையில் பலரும் உண்டு. கேரளத்து குஞ்சாலி மரைக்காயர்கள், சேரந்தீவின் (Serandib) சீதாவக்கை (sitawaka) பகுதியை அரசாண்ட அரசன் மாயதுன்னே (1501-1581) போன்ற பலர்.

அதுமட்டுமின்றி நாகூரார் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்து அவர்கள் சொற்படி கீழ்ப்படிந்து நடந்த மன்னர்கள் பலர். சேவப்ப நாயக்கர் (1532-1560), அச்சுதப்ப நாயக்கர் (1560-1600), மட்டுமின்றி அதற்குப்பின் வந்த பிரதாப்சிங், சரபோஜி, இராமனாதபுரத்து சேதுபதிகள் இப்படியாக இறைநேசரின் அபிமானிகள் பட்டியல் நீள்கிறது. (முஸ்லிம் குரல் 15.02.1987)

விஜயநகர் பேரரசின் கிருஷ்ணதேவராயரையும் (1509-1529 ஆட்சி) நம் இறைநேசர் சந்தித்துப்பேசி, போர்த்துகீசியர்களை எதிர்த்து போர்புரிய ஆலோசனைகள் வழங்கி இருக்கிறார்கள்.[இத்தகவல் தமிழ்நாடு வக்பு வாரியம் வெளியிட்ட ‘இஸ்மி’ என்ற சஞ்சிகையில், ஏப்ரல், 1981 பக்கம்25, காணக் கிடைக்கிறது].

குஞ்சாலி மரைக்காயர் போர்த்துகீசியர்களை எதிர்த்து போரிட்டது மலபார் கடற்கரையில்தானே? நாகூருக்கும் கேரளத்து குஞ்சாலி மரைக்காயருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? என்ற வினா பலருடைய மனதிலும் எழலாம்.

நாகூரார் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே தமிழக கடலோரப் பகுதிகளை போர்த்துகீசிய படைகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு உறுதி பூண்டார் குஞ்சாலி மரைக்காயர். இதற்கு சீதாவக்கை அரசின் மாயதுன்னே முழு ஒத்துழைப்பும் நல்குவதற்கு முழுமனதுடன் முன்வந்தார். [ஆதாரம்: Portugese rule in Ceylon 1966 edition P:65 by Tikiri Abeya Singhe, University of Ceylon]

கி.பி. 1537-ல் நாநோடி குன்ஹா என்பவர், கவர்னர் பதவிக்கு வந்தபோது தியோ-கோ-தே-எஸல்வேலி என்பவனின் தலைமையில் கோழிக்கோடு கடற்கரையை முற்றுகையிட முயன்றான். போப்பூர் நதிக்கரையில் உள்ள சாலியன் என்ற இடத்தில் கோட்டையைக் கட்டவும் முயற்சிகள் மேற்கொண்டான்,. குஞ்சாலி மரைக்காயர் சாலியன் கோட்டையை தாக்குதல் நடத்தி போர்த்துகீசியர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக நாகப்பட்டின கடற்கரையிலும் இப்போர் மூண்டது. இங்கு 51 சிறப்புக் கப்பல்களில் 8000 வீரர்களுடன் குஞ்சாலி மரைக்காயர் வந்து போர்த்துகீசியர்களை எதிர்க்கொண்டார். இச்சம்பவங்கள் யாவும் நாகூர் இறைநேசர் நாகூரில் வாழ்ந்துவந்த காலங்களில் ஏற்பட்டவை.

ஏற்கனவே 1536-ஆம் ஆண்டு நடந்த போரில் குஞ்சாலி மரைக்காயர் போர்த்துகீசியர் கப்பல்களுக்கு பெரும் பொருட்சேதத்தை விளைவித்தார். அவர்களை வேதாளை எல்லையிலிருந்து தூத்துக்குடி எல்லை வரை விரட்டியடித்தார்

மீண்டும் கி.பி. 1538-ஆம் ஆண்டில் தூத்துக்குடி கடற்கரையோரங்களில் போர்த்துக்கீசியருக்கும், குஞ்சாலி மரைக்காயருக்கும் உக்கிரமான போர்கள் நடைபெற்றன. இங்கும் போர்த்துக்கீசிய படையை குஞ்சாலி மரைக்காயர் தோற்கடித்தார்.

குஞ்சாலி மரைக்காயர் கேரளத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் நாகூர் கடலோரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலும் அந்நிய சக்திகளை எதிர்த்து போராடி தமிழக மக்களுக்கு அரணாக இருந்து போர்புரிந்தது நாகூர் இறைநேசர் அவர்களின் உத்தரவின் பேரில்தான்.

ஒரு மனிதரை சுதந்திர போராட்ட வீரராக கருதுவதற்கு அவர் வாளெடுத்து அந்நியர்களோடு போர் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆயுதமேந்தி களம் காண வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. போர் வீரர்களுக்கு கிரியாவூக்கியாகவும், தூண்டுதலாகவும் இருந்து அவர்களைச் செயல்படுத்த வைத்தார்களே அந்த மாமனிதர் அதுவே நிறைவானச் செயல்.

இறைநேசர் சேரந்தீவு (சிலோன்) சென்று வந்ததற்கு சரித்திர ஆதாரங்கள் உள்ளதைக் கண்டோம். அவர்களுடன் பயணித்த சீடர்களில் ஒருவர் செய்யது ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் என்ற புனிதர். அவருடைய சமாதி கண்டியில் உள்ள மீரா மக்காம் என்ற இடத்தில் உள்ளது.

பல கலைகளை கற்றுத் தேர்ந்திருந்த நாகூர் இறைநேசர் கேரளத்து பொன்னானி பகுதிக்குச் சென்று தங்கியிருந்தபோது குஞ்சாலி மரைக்காயரின் போர்வீரர்களுக்கு போர் பயிற்சியும் அளித்திருக்கிறார்கள்.

குஞ்சாலி மரைக்காயர், பச்சை மரைக்காயர், அலி இப்ராஹிம் இந்த மூன்று தளபதிகளும் நாகூர் இறைநேசரின் சிஷ்யக்கோடிகள். நாகூராரின் உத்தரவின் பேரிலேயே இவர்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் இருந்தன.

இறைநேசரின் தூண்டுதலும், அவர்களின் ஆலோசனைகள் அறிவுரைகளும் இந்த மூன்று தளபதிகளுக்கும் உந்துச் சக்தியாய்த் திகழ்ந்தன. நாகூரார் அளித்த உற்சாகம் அவர்களுக்கு அளித்த போர்ப்பயிற்சி ஆகியவை மனதளவில் அவர்களுக்கு ஆற்றலையும், நம்பிக்கையையும் வளர்த்து வீர உணர்ச்சியை உரமேற்றியது.

அந்நிய சக்திகளுக்கு எதிராக உயிரை துச்சமாக மதித்து போராடி வீர தீர செயல்கள் புரிந்த மாவீரன் குஞ்சாலி மரைக்காயர் கொழும்பில் எதிரிகளின் குண்டுக்கு இரையாகி நாட்டுக்காக தன்னுயிர் ஈந்து வீரமரணம் எய்தினார்.

இன்று முஸ்லீம்களை அந்நியர்கள் என்றும் வந்தேறிகள் என்று வாய்க்கூசாமல் பேசும் சங்பரிவார்களுக்கு இத்தககைய வராலாற்று நிகழ்வுகள் ஒருபோதும் தெரிந்திருக்க நியாயமில்லை. நேதாஜியின் இராணுவப்படைக்கு (INA) அக்காலத்தில் ஒரு டி ரூபாய் அள்ளி வழங்கிய வள்ளல் ஹபீப் முஹம்மதைதெரியுமா என்று இவர்களிடத்தில் கேட்டுபாருங்கள்.

ஹாஜி பக்கீர் முஹம்மது சேட் என்ற முஸ்லிமால் வழங்கப்பெற்ற (அப்போதைய) இரண்டு இலட்சம் ரூபாயின் மூலம் வாங்கப்பட்ட சுதேசிக்கப்பலின் மாலுமியான வ.உ.சி.க்கு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் தனி இடம் உண்டு. இருநூறுக்கும் அதிகமான சிறப்புப் போர் கப்பல்களைக் கொண்ட மாபெரும் கடற்படையை உருவாக்கி நூறு ஆண்டுகளாக அந்நியரை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த குஞ்சாலி மரைக்காயர்களின் வீரதீர சாகசங்கள் மறைக்கப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனை.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நாகூர் இறைநேசர் கொண்டிருந்த நாட்டுப்பற்றுக்கு, அவர்கள் உதிர்த்த இந்த பொன்மொழியே தக்க சான்று பகரும்.

“உண்மையையும் பொய்யையும் பிரித்தறிவிக்கும் பொருட்டு இறைவன் என்னை இந்தியாவில் தோன்றச் செய்துள்ளான்.”

தான் இந்தியாவில் பிறந்ததை ஒரு பேறாக எண்ணியதை அவர்கள் உதிர்த்த இவ்வாசகம் அவர்களின் உள்ளக்கிடக்கையை பறைசாற்றி நம் கூற்றை மெய்ப்பிக்கின்றது.

குஞ்சாலி மரைக்காயர்

நாகூர் இறைநேசச் செல்வரின் ஆன்மீக பொதுத்தொண்டால் கவரப்படவர்களின் வரிசையில் முதலாவதாக இடம் பெறுபவர் குஞ்சாலி மரைக்காயர். இவரைப் பற்றிய ஏராளமான தகவல்கள் ரோலாண்டு E. மில்லர் எழுதிய ‘Mappilla Muslims of Kerala’ என்ற நூலில் காணக் கிடைக்கிறது.

1967-ம் ஆண்டு ‘குஞ்சாலி மரைக்கார்’ என்ற பெயரில் ஒரு மலையாள திரைப்படமும், அதே பெயரில் 1968-ஆம் வருடம் எஸ்.எஸ்.ராஜன் தயாரிப்பில் கொட்டரக்காரா ஸ்ரீதரன் நடித்த தேசிய விருது பெற்ற திரைப்படமும் வெளியாகியது. அதற்கு பிறகுதான் கேரளத்தில் இருந்த பலருக்கும் குஞ்சாலி மரைக்காயரைப் பற்றிய பல அரிய தகவல்கள் தெரிய வந்தன.

1502 – 1600 இடைப்பட்ட காலங்களில் குஞ்சாலி மரைக்காயர் என்ற பெயரில் நான்கு கப்பற்படை தளபதிகள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் முறையே:

குஞ்சாலி மரைக்காயர்-1 = குட்டி அஹ்மது அலி
குஞ்சாலி மரைக்காயர்-2 = குட்டி பக்கர் அலி
குஞ்சாலி மரைக்காயர்-3 = பட்டு குஞ்சாலி
குஞ்சாலி மரைக்காயர்-4 = முகம்மது அலி

போர்த்துகீசியர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டி அவர்களை புத்தி பேதலிக்க வைத்தவர்கள் இந்த நான்கு குஞ்சாலி மரைக்காயர்கள்.

மூன்றாவது குஞ்சாலி மரைக்காயர்

மூன்றாவது குஞ்சாலி மரைக்காயர்

கோழிக்கோட்டை ஆண்டுவந்த சாமுத்திரி (Zamorin) இந்து மன்னரின் கப்பற்படைத் தளபதிகள்தான் இந்த குஞ்சாலி மரைக்காயர்கள். கப்பற்படை வியூகம் அமைப்பதில் தலைச்சிறந்தவர்கள். போர்முறைகளில் அபாரமான தேர்ச்சி பெற்றவர்கள். பருவக்காற்று, கடற்பயணம், கப்பல் செலுத்தும் முறை ஆகிய நுணுக்கங்கள் நன்கு அறிந்தவர்கள். குஞ்சாலி மரைக்காயர்கள் கடற்போர் வழிமுறைகளில் புதுப்புது யுக்திகளைக் கையாண்டார்கள்.. கொரில்லா தாக்குதல் முறையை அறிமுகப்படுத்தி எதிரிகளை நிலைகுலையச் செய்தார்கள்.

குஞ்சாலி மரைக்காயருக்கு மேலைநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? The Pirates. அதாவது கடற்கொள்ளையன்.. அவர்களின் பார்வையில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழிபறிக் கொள்ளைக்காரன். பகத்சிங் தீவிரவாதி. பகதூர்ஷா ஜாபர் தேசத்துரோகி. அப்படித்தானே எழுதி வைத்திருக்கிறார்கள்?

15823718._UY470_SS470_

போர்த்துகீசிய படைகளுக்கு பெரும் சவாலாக விளங்கிய மராத்திய கப்பற்படைத் தளபதி ‘சார்க்கெல்’ கனோஜி ஆங்கரே போன்றவர்கள் குஞ்சாலி மரைக்காயர்களுக்குப் பிறகு வந்தவர்களே. தமிழில் சாண்டில்யன் எழுதிய “ஜலதீபம்”, “கடல் புறா” என்ற வரலாற்றுப் புதினங்களில் கனோஜி ஆங்கரே ஒரு முக்கிய கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருப்பது நம்மில் பலருக்கும் நினைவிருக்கலாம்.

இந்திய விடுதலைக்காக, காலனி ஆதிக்கத்தை எதிர்த்து, இறுதி வரைப் போராடி, அவர்களுக்குப் பல சேதங்களை ஏற்படுத்தி, பாரதத்திற்கு வெற்றிகள் பல தேடித் தந்த தலைசிறந்த மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் என்ற வரலாற்றை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. முதலாம் குஞ்சாலி மரைக்காயர் 11 கப்பலுடன் இலங்கைவரை சென்று போரிட்டு அங்கு வீரமரணம் அடைந்தவர்.  இரண்டாவது குஞ்சாலி மரைக்காயர் கண்ணனூர் கடற்பகுதியில் புகுந்த போர்த்துக்கீயர் தாக்கியபோது பொன்னானியில் கோட்டை கட்டியிருந்த அவர்அங்கேயே மரணமடைந்தார்.

கேரளத்து மரைக்காயர்மார்கள் தொடக்கத்தில் கொச்சியில்தான் இருந்தார்கள். போர்த்துகீசியர்களின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு பொன்னானி என்ற பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள். பொன்னானிக்கு நாகூர் ஆண்டகை சென்று வந்ததற்கான சரித்திர ஆதாரங்கள் உண்டு என்பதை பலரும் அறிவர்.

போர்த்துகீசியர்களை எதிர்த்து போரிடுவதற்கு இந்த மரைக்காயர்மார்கள் தங்களின் உடல் வலிமையை மாத்திரம் உவந்தளிக்கவில்லை, மேலும், படை பலத்தையும், தங்களின் செல்வங்களையும் ஏராளமாக கொடுத்து துணைபுரிந்தார்கள். இதன் காரணமாகவே கோழிக்கோடு சாமுத்திரி அரசர்கள் இவர்களை கப்பற்படைத் தளபதியாக்கி அவர்களுக்கு பெரிதும் முக்கியத்துவம் தந்தனர்.

சாமுத்திரிகள் மற்றும் போர்த்துகீசியர்களுடனான போர் 16-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது. வீரத்தால் இவர்களை வெல்ல முடியாது, வெறும் சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும் என்ற முடிவுக்கு வந்தனர் போர்த்துகீசியர். , அதற்கான சதித்திட்டத்தையும் தீட்டினர்.

நான்காம் குஞ்சாலி மரைக்காயர் சாமுத்திரிகளின் அரசை கைப்பற்ற திட்டம் தீட்டுகிறார் என்ற வதந்தியை பரப்பி, அம்மன்னரையும் நம்ப வைத்தனர். அது வேலை செய்தது. இறுதியில் போர்த்துகீசியர்களும் சாமுத்திரிகளும் கைக்கோர்த்து நான்காம் குஞ்சாலி மரைக்காயரை போரிட்டு வீழ்த்தி 1600-ல் அவரை மாய்த்தனர்.

குஞ்சாலி பயன்படுத்திய வாள்

குஞ்சாலி மரைக்காயர் பயன்படுத்திய வீரவாள் இன்னும் வடகரை மாவட்டதிலுள்ள கோட்டக்கல் பள்ளிவாயிலில் பாதுக்கக்கப்பட்டு வருகிறது

கொச்சினில் உள்ள பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு துறைக்கு ‘குஞ்சாலி மரைக்காயர் ஸ்கூல் ஆஃப் மரைன் எஞ்சினியரிங்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

images

மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் ஒரு பிரிவுக்கு ‘ஐ.என்.எஸ். இரண்டாம் குஞ்சாலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

kunjali

மூன்று ரூபாய்க்கான கலர் ஸ்டாம்ப் ஒன்று கடந்த 2000 டிசம்பர் 17-ம் தேதி குஞ்சாலியின் கடல் படையை நினைவூட்டும் விதமாக வெளியிடப்பட்டது.

கோழிக்கோட்டில் அவர் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு வீட்டை குஞ்சாலி நினைவகமாக அரசு வைத்துள்ளது. அதில் அவர் பயன்படுத்திய வாள்கள், போர்க்கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Kunjali Maraicar

நாகூராரின் ஆன்மீக சிந்தனையில் கவரப்பட்ட ஒரு குஞ்சாலி மரைக்காயர் அவர்களை நாடி வந்து நாகூரிலேயே வசித்தார் என்பது சரித்திரம். நாகூரில் பெயர் பெற்று விளங்கும் “குஞ்சாலி மரைக்காயர் தெரு” அந்த சுதந்திர போராட்ட மாவீரரின் நினைவாகவே சூட்டப்பட்டுள்ளது.

முஸ்லீம்கள் மீது பகைமை ஏற்படக் காரணம்

போர்த்துகீசியர்களுக்கு முஸ்லீம்கள் மீது ஏனிந்த பகைமை உணர்ச்சி எற்பட்டது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். தென்னிந்திய கடற்கரையோரங்களில் அரேபியர்களுக்குப் போட்டியாக போர்த்துகீசியர்கள் வணிகம் புரிவதற்கு இங்குள்ள முஸ்லீம்கள்தான் தடைக்கற்களாக இருக்கிறார்கள் என்று நம்பினார்கள்.

அக்காலத்தில் சாமுத்திரி அரசர்களிடம் அரேபியர்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது உண்மை. காரணம், என்னவெனில் தென்னிந்தியாவிற்கும் அரேபியர்களுக்கும் இடையேயான நெருக்கமான உறவு மற்றும் வணிகத்தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலங்காலமாக நீடித்து வரும் பந்தம் இது. நபிகள் நாயகம் காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட தொடர்பு அல்ல. அதற்கு முன்பே ஏற்பட்ட தொடர்பு.

கேரளத்தில் சாமுத்திரி அரசர்கள் வியாபரத்திற்கு அனுமதி வழங்காததால் அவர்களின் ஆட்சியை குலைப்பதற்கு போர்த்துகீசியர்கள் சகல வித்தைகளையும் கையாண்டனர். இதற்கு முட்டுக்கட்டையாக இருந்த முஸ்லீம்கள் மீது பகைமை வளர்ந்தது; குறிப்பாக குஞ்சாலி மரைக்காயர்கள் மீது.. இந்த பகைமை நாளடைவில் பெரிதாகி முஸ்லீம்கள் என்றாலே அவர்கள் மீது போர்த்துகீசியர்களுக்கு ஒரு விதமான வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது.

கடல் வாணிபம்

.”The Kunhali Marakkar or Kunjali Marakkar was the title given to the Muslim naval chief of the Zamorin (Samoothiri)” என்று விக்கிபீடியா குறிப்பிடுகின்றது. குஞ்சாலி மரைக்காயரை Naval Chief என்று வருணித்திருப்பதால் இந்த Navy என்ற வார்த்தையின் ஆதிமூலத்தை எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

“Navy” என்ற ஆங்கில வார்த்தையே “நாவாய்” என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பிறந்ததுதான்

நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
– (புறநானூறு – பாடல் 66)

என்று கரிகால்வளவனைப் பாடுகிறார் வெண்ணிகுயத்தியார் எனும் பெண்புலவர். வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!” என்று பொருள்.

(கரிகால் வளவனின் காலம் இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகட்கு முன்பு என்பதைக் கருத்தில் கொள்க. பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஹப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞன் என்று மேலைநாட்டவர்கள் கருதுகிறார்கள். பாய்மரக்கப்பல் செலுத்திய கரிகால்வளவனின் காலம் அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முந்தைய காலம்.

சுலைமான் நபி (King Solomon) காலத்திலிருந்தே, தமிழ்நாடு/ கேரள நாட்டிற்கும் அரபிகளுக்கும் இடையே வர்த்தக உறவு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதில் மிளகு ஒரு முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முந்திய காலத்தில் எழுதப்பட்ட அரபுக் கவிஞர் உம்ருல் கைஸின் கவிதையொன்று இதற்கு சான்று பகர்கிறது.

கவிஞர் தன் காதலியின் நினைவாக பாடுகிறார். அவள் வீட்டு முற்றத்தில் புறாக்கள் எச்சம் இடுகின்றன. அந்த எச்சம் எப்படி இருக்கிறதென்றால் இந்திய மிளகு போன்று இருக்கிறதாம். தொன்றுதொட்டே இந்த இந்தியப் பண்டம் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கின்றது என்பது புலனாகிறது.

ஒரு அரபுக்கவிஞன் தன் காதற்கவிதையில் காட்டுகின்ற ஒப்பீட்டில் ஒரு சரித்திர உண்மையையே வெளிக்காட்டி விடுகிறது.

அரேபியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.

“நீரில் வந்த நிமர்பரிப்புரவியும்”

என்று பட்டினப்பாலை வருணிக்கிறது. குதிரைகளுக்கு பதிலாக மிளகு போன்ற பண்டங்கள் இங்கிருந்து ஏற்றுமதி ஆயின. சங்ககால இலக்கியமான அகநானூறு இதனை எடுத்துக் காட்டுகிறது. இலவங்கப்பட்டை, காசியா, ஏலக்காய், இஞ்சி, மிளகு, மற்றும் மஞ்சள் வகைகள் இந்த வணிகத்தில் முதலிடம் பெற்றன. புளியை அரபி மொழியில் “தமருல் ஹிந்த்” என்றே அழைக்கின்றனர். இதற்கு “இந்தியாவின் பேரீத்தம்” என்று பொருள். இந்த வார்த்தைதான் மருவி ஆங்கிலத்தில் TAMARIND என்று ஆகியது.

250px-Pasai

சமுத்திரா அல்லது பசை (சுமத்திராவின் வடக்கு கடலோரம்) என்று அழைக்கப்படும் நாட்டின் மன்னர் (ஐந்தாம்) சுல்தான் அஹ்மது 1512-ஆம் ஆண்டில் போர்த்துகீசிய மன்னனுக்கு அரபி மொழியில் எழுதிய கடிதம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதில் நாகூர் பகுதிகளில் மரைக்காயர்மார்கள் அரிசி எற்றுமதி தொழிலில் கொடிகட்டிப் பறந்தார்கள் என்ற விவரம் காணப்படுகின்றது.

நாகூர் இறைநேசரை பொறுத்தவரை அவர்களுக்கு சமய அறிவு மட்டுமல்லாது பொது அறிவும், நாட்டு நடப்பும், உலக நடப்பும் அத்தனையும் அறிந்து வைத்திருந்தார்கள். அதற்கு காரணம் பரந்து விரிந்த இவ்வுலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள் பயணம் சென்று வந்ததால் என்று கூறலாம். அவர்கள் பயணம் சென்று வந்த நாடுகளை பட்டியலிட்டால் வியந்து போவீர்கள். தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பலூசிஸ்தான், பாராசீகம் (ஈ:ரான்), ஈராக், ஏமன், ரோம், சிரியா, சிலோன் மாலத்தீவு, லட்சத்தீவு, பர்மாவிலுள்ள மோல்மீன் பகுதி ஏனைய நாடுகளுக்கு சென்று வந்திருக்க்கும் தகவலை மூத்த பதிரிக்கையாளர் ஜே.எம்.சாலி தருகிறார்.

ஷேக் சதக் இப்ராஹிம் மரைக்காயர்

நாகூர் இறை நேசர் தஞ்சை மாநிலம் வந்தபோது அவருடன் வந்த சிஷ்யக்கோடிகளின் எண்ணிக்கை 404 பேர்கள். துறவறம் பூண்ட அவர்களை பக்கீர்மார்கள் என்று அழைத்தனர். செய்யதுனா ஷேக் சதக் மரைக்காயர் (1512-1599) என்பவர் அந்த பக்கீர்மார்களில் ஒருவர். இறைநேசரின் முதன்மைச் சீடராக (கலீஃபாவாக) விளங்கியவர். இவர் காயல்பட்டினத்தை சேர்ந்தவர். பொதுநலத்தொண்டில் சிறந்து விளங்கியவர். பிற்காலத்தில் பக்கீர் கூட்டத்திலிருந்து ஷேக் சதக் இப்ராஹிம் மரைக்காயரை நாகூர் நாயகர் விலகச் செய்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட கட்டளையிட்டார். இவர்களின் வழியில் ஆன்மீக நேசர்கள் பிறக்கட்டும் என்றும் ஆசீர்வாதித்தார்.. கீழக்கரையின் புகழ்பெற்ற இறைநேசர் சதக்கத்துல்லாஹ் அப்பா இவரது பேரர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

போர்த்துகீசிய கவர்னர் மானுவல் டிசூஸா (Manuel de Souza ) என்பவன் 1515 முதல் 1536 -வரை போர்த்துகீசிய கவர்னராக பொறுப்பெற்றிருந்தான். இவன் Alfonso Albuquerque வுக்கு பிறகு பொறுப்பேற்றவன். ஷேக் சதக் இப்ராஹிம் மரைக்காயர் வீரமிகு இளைஞர். திடக்காத்திரமான உடல்வாகு பெற்றவர். கொரில்லா தாக்குதல் முறையில், ஒருநாள் துணிச்சலாக கடலுக்குச் சென்று போர்த்துகீசிய கப்பலுக்குள்ளேயே நுழைந்தார். அந்த போர்க்கப்பலில் இருந்துக்கொண்டுதான் மானுவல் டிசூஸா உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். டிசூஸாவுடன் நேருக்கு நேர்மோதி அவனைப் பிடித்து கடலில் தள்ளினார் ஷேக் சதக்.. இந்த நிகழ்வு ரமலான் மாதத்தில் மூன்றாம் பிறையன்று (ஹிஜ்ரி 943) 1536-ஆம் ஆண்டு நடந்ததாக டாக்டர் ஷுஐபு ஆலிம் எழுதியிருக்கிறார். (ஆதாரம்: Arabic, Arwi and Persian in Serandib and Tamil Nadu by Afdalul Ulama Dr.Tayka Shu’ayb A’lim)

போர்த்துகீசிய வரலாற்று ஆவணங்களில் இதே பெயருடைய மற்றொரு மானுவல் டிசூஸாவின் நிகழ்வுகளும் காணப்படுகிறது, அவர் துறவியாகவும் எழுத்தாளராகவும் இருந்தவர். இந்த இரண்டு பேர்களையும் பலரும் குழப்பிக் கொள்கிறார்கள்,
நாகூர் – நாகை

நாகூர், நாகப்பட்டினம் இவையிரண்டும் தொன்றுதொட்டு இரட்டை நகரமென பெயர்பெற்ற ஹைதராபாத், செகந்திராபாத் போன்றே ஓர் அங்கமென செயல்பட்டன. ஓர் ஊரின் இரண்டு பகுதிகள் மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் என்றழைக்கப்பட்டதைப் போல் நாகூரும், நாகப்பட்டினமும் ஓர் ஊரின் இருகூறாகக் கருதத்தக்கவை என்று இக்கூற்றுக்கு வலுசேர்க்கிரார் இரா.பி.சேதுப்பிள்ளை.(ப:36,தமிழகம் ஊரும்பேரும்)

போர்த்துக்கீசியர்களின் பதிவேடுகள் நாகூரை ‘நாகூரு’ என்றும் நாகப்பட்டினத்தின் முஸ்லீம்களின் குடியிருப்புப் பகுதி என்றும் குறிக்கின்றன. பின்னர் ஆற்காடு நவாப்கள் இதனை “காதர் நகர்” என்று அழைத்தனர். பண்டு “புலவர் கோட்டை” என்ற மற்றொரு சிறப்புப் பெயரும் உண்டு

கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் ஆண்டகை நாகூருக்கு வருவதற்கு முன்னரே முஸ்லீம்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வணிகத்தில் சிறந்து விளங்கினர். இப்பகுதி ஏற்றுமதி இறக்குமதி கேந்திரமாக திகழ்ந்து வந்தது

போர்த்துகீசியர்களின் அத்து மீறல்கள் தலைவிரித்தாடிய போதெல்லாம் பாதுகாப்புக்கு வேண்டி கேரளக் கடலோரம் சூழ்ந்திருந்த அடர்ந்த காடுகளில் சென்று பதுக்கிக் கொள்வார்கள். ஆனால் பரந்து விரிந்த தமிழக கடற்கரைகளில் இதுபோன்ற வசதிகள் இல்லை. பிடிப்பட்ட முஸ்லீம்கள் போர்த்துகீசியரின் வன்கொடுமைக்கு ஆளானார்கள். இதுபோன்ற சித்திரவதைகளுக்கு பயந்தே உயிரை மாய்க்கவும் தயங்காமல் போரிட்டு ஏராளமான முஸ்லீம் வீரர்கள் வீரமரணம் எய்தினார்கள்.

போர்த்துக்கீசியர்கள் அட்டகாசம் மேலோங்கி இருந்த காலத்தில் கடற்கரையோரம் வாழ்ந்த முஸ்லீம்கள் தங்கள் பெயரை தமிழ் சார்ந்த பெயர்களாக மாற்றிக் கொண்டார்கள். அதேசமயம் தங்களின் இறை நம்பிக்கைக்கு குந்தகம் விளையா வண்ணம், இந்துமத கடவுள்களின் பெயர்கள் கலக்காமல் பார்த்துக் கொண்டார்கள். பிச்சை தம்பி, சீனி முத்து, குப்பை தம்பி. முத்து தம்பி, சீனி கனி, முத்து கனி, தம்பி பிள்ளை, செல்லக்கனி, செல்லத்தங்கம், முத்துதங்கம்.சீனி அப்பா, சக்கரைத்தம்பி, சின்னப் பொண்ணு, மல்லிகா, சீனியம்மா, செவத்தம்மா, செல்ல துரை, தம்பி துரை, இதுபோன்ற பெயர்கள் முஸ்லீம்களிடையே புழக்கத்திற்கு வந்தது போர்த்துகீசியர்கள் காலத்தில்தான்.

வேதாளை (Vedalai) மற்றும் சிலாபத்தில் (Chilaw) நடந்த போர்

போர்த்துகீசியர்களுக்கும் குஞ்சாலிகளுக்கும் நடந்த போர் பல ஆண்டுகள் நீடித்தது. குஞ்சாலி மரைக்காயர் என்ற பெயரில் பல குஞ்சாலி மரைக்காயர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே முன்னரே பார்த்தோம். இதில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் பெரும் புகழும் பெற்றுத் திகழ்ந்தவர். அனைத்து குஞ்சாலி மரைக்காயர்களும் போர்த்துகீசியர்களுடன் எதிர்த்து போரிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீதாவக்கை ( Sitawaka), இராஜ்ஜியத்தின் மன்னனாக மாயாதுன்னே (1501-1581) என்பவன் 60 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுடைய பெரும்பான்மையான வாழ்நாள் போர்த்துகீசியர்களை எதிர்த்து போரிட்டதிலேயே காலம் கழிந்தது.

சீதாவக்கை அரசின் தலைநகரான சீதாவக்கபுரி (இன்றைய அவிசாவளை) அக்காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆண்ட போர்த்துகீசியரால் அழித்தொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வரசு இல்லாமற் போனது.

1525, 1527, 1536, 1539 ஆகிய காலங்களில் சாமுத்திரி (Zamorin) முஸ்லிம் படைவீரர்கள் குறிப்பாக சோனகர்கள், சேரந்தீவுக்குச் சென்று மாயதுன்னே அரசனுக்கு ஒத்தாசையாக போர்த்துகீசிய படைகளை எதிர்த்து போரிடுவதற்கு பெரிதும் துணை புரிந்தனர்.

வேதாளை அடுத்துள்ள கடல்பகுதிதான் போர்த்துகீசியர்களுடன் நடந்த யுத்தத்திற்கு களம் ஆனது. 1525- ஆண்டு முதல் இந்தப் போர் நடை பெற்றது.

கேரளப் பகுதியில் கொச்சி, பொன்னானி, பர்கூர், செதுவாய் ஆகிய இடங்களிலும் பெரும் போர்கள் நடந்தன. போர்ச்சுக்கீசியருக்குப் பெரும் அவமானமும், தோல்வியும், சேதமும் ஏற்பட்டது.

வேதாளை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும் . கீழக்கரைக்கும் இராமேஸ்வரத்திற்கு இடையே உள்ள இந்த கடற்பகுதியில்தான் கடற்படை தாக்குதல் நடைபெற்றது.

இவ்வூரின் வடக்கே பாக் நீரிணையும், தெற்கே மன்னார் வளைகுடாவும் கடல் எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்கே சுந்தரமுடையான் கிராமமும் கிழக்கே மரைக்காயர்பட்டினமும் வீற்றுள்ளது. சுமார் 20 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இவ்வூர் தெற்கே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் முசல் தீவு காணப்படுகிறது. இப்பகுதி அரிய கடல் உயிரினங்களை கொண்டுள்ளது ஆகவே மத்திய அரசால் இப்பகுதி கண்காணிக்கப்படுகிறது.

இவ்வூர் இப்னு பதூதா என்னும் அறிஞரால் ”பதலா” எனும் பெயருடன் அறியப்பட்டுள்ளது. வேத அலை என்னும் பெயர் மருவி ”வேதாளை” ஆனது எனவும் கூறுகின்றனர்..

ஆரம்ப காலத்தில் இருந்தே இப்பகுதியில் கடல் வழி வாணிபமும் ,மீன்பிடி தொழிலும் முக்கியத்துவம் பெற்றவை. இலங்கைக்கு இங்கிருந்து பல குடும்பங்கள் வாணிபம் மூலமாக இடம்பெயர்ந்தும், இங்கே குடியேறியும் உள்ளன.
சிலாபம் (Chilaw)

சிலாபம் (Chilaw) புத்தளம் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற மீன் சந்தையைக் கொண்ட ஓர் பெரிய நகர். இது

1927-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இந்த இடத்திற்கு வருகை புரிந்தார். சிலோன் என்று அப்பொழுது அழைக்கப்பட்ட இலங்கைக்கு ஒரே ஒரு முறைதான் மகாத்மா காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
வேதாளையில் காணப்படும் கல்லறை நினைவுக்கற்கள் போர்த்துகீசியர்களுடன் போரிட்டு மடிந்த முஸ்லீம் பெருமகனார்களைப் பற்றிய விவரங்களைக் கூற போதுமானது.

குஞ்சாலி மரைக்காயர்களில் ஒருவரின் கல்லறை சிலாபத்தில் உள்ளது. சிலாபம் என்ற இடத்தை 1304 முதல் 1377 வரை உலகம் சுற்றிவந்த இப்னு பதூதா “பந்தர் சலாவத்” என்று இப்பகுதியைக் குறிப்பிடுகிறார்.

பந்தர் என்றால் துறைமுகம் என்று பொருள். பரங்கிப்பேட்டைக்கு “பந்தர்” என்ற மற்றொரு அடைமொழியும் உண்டு என்பதை காண்க. இன்றளவும் சிலாபத்தில் போர்த்துகீசியர்களுடன் போரிட்டு வீரமணம் எய்திய பலரது கல்லறை காணப்படுகிறது. இதுவரை எந்த ஆய்வாளர்களும் இதனை ஆராய்ந்து போதுமான தகவல்கள் வெளிக்கொணரவில்லை என்பது மிகுந்த ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

– அப்துல் கையூம்

தொடர்புடைய சுட்டி :

ஆசியாநெட்டில் குஞ்சாலி மரைக்கார்

குஞ்சாலி மரைக்காயர்கள்

நான்தான் அந்த நாகூரி

 

 

 

Tags: ,

ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ


(ஆனந்த விகடனில் வெளியான சுஜாதாவின் கட்டுரைக்கு முனைவர் ஜெ.ராஜா முகமதுவின் மறுப்புக் கடிதம்)

(கட்டுரையாசிரியர் ஜெ. ராஜா முகமது ‘தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறும், சமுதாய வாழ்க்கையும்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத் துறையின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது ‘புதுக்கோட்டை மாவட்ட வரலாறு’, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்று மாணவர்களுக்குப் பாட நூலாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது)

ஆனந்த விகடன் 17.4.05 இதழில் ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் சுஜாதா வைஷ்ணவஸ்ரீ எழுதியுள்ள ஸ்ரீரங்கம் தல வரலாறு கூறும் கோயில் ஒழுகு புத்தகத்தில் வரும் செய்திகளை அலசியுள்ளார். ஸ்ரீரங்கத்திற்குத் சித்திரைத் தேர் இழுக்க வரும் கோவிந்தா கூட்டம் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் பிரதிபலிக்கக்கூடும் எனவும், கி.பி. 1323இல் முகம்மதியர் படையெடுப்பின்போது 13,000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம் எனவும் தனது விபரீதக் கற்பனையைக் கடைவிரித்துள்ளார்! வரலாற்று நூல்களில் காணாத விஷயம்!

இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததா? 1323இல் டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டு மதுரையில் ஆட்சியமைத்தார். இந்தப் படையெடுப்பின்போது முஸ்லிம்களின் படை ஸ்ரீரங்கம் சென்றது குறித்தும் அங்கு 13000 வைஷ்ணவ பிராமணர்களைக் கொன்றது குறித்தும் முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பில் செய்தி ஏதும் இல்லை. சமகாலத்துத் தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பிலும் செய்தி ஏதும் இல்லை. மாலிக்காபூரின் படையெடுப்பை சுஜாதா குறிப்பிடுகிறார் போலும். ஆனால் இது நடந்தது 1311இல். மாலிக் காபூரின் படையெடுப்பு குறித்து அமீர் குஸ்ருவின் குறிப்புகள் மட்டுமே சான்றாகக் காட்டப்படுகின்றன. வேறு சான்றுகள் எதுவும் இல்லை. மாலிக் காபூரின் படையெடுப்பு நிகழ்ந்த ஊர்கள், கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பொருட்களின் அளவு ஆகியன குறித்து வரலாற்று ஆய்வாளர்களிடையே வண்டி வண்டியாய்க் கருத்து வேற்றுமை உண்டு.

திருச்சிப் பகுதியில் 26.03.1311 முதல் 01.04.1311 வரை ஏழு நாட்கள் பிர்துல், காந்தூர், ஜல்கோட்டார், பிரமஸ்த்புரி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு சண்டை நடைபெற்றதாக குஸ்ருவின் குறிப்பு கூறுகிறது. இவை எந்த ஊராக இருக்கலாம் என அடையாளம் கண்டுபிடிக்க முற்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் மனம்போல் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டிருக்கின்றனர். இதைப் பற்றி அதிகமாக எழுதி இருப்பவர் கிருஷ்ணசாமி ஐயங்கார் (புத்தகம்: South India and Her Mohammedan Invaders) மேற்சொன்ன ஊர்களில் பிரமஸ்த் புரி என்பரை ஏதாவது ஒரு பெரிய கோயில் நகரத்துடன் தொடர்புபடுத்திவிட தண்டப் பிரயத்தனப்பட்டிருக்கிறார் ஐயங்கார். இவ்வூர் சீர்காழி, சிதம்பரம் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என அனுமானிக்கிறார். ஸ்ரீரங்கம் என அறுதியிட்டுச் செல்ல அவரால் முடியவில்லை. சிதம்பரம்தான் என அடித்துக் கூறுகிறார் சத்தியநாத ஐயர். இல்லை, இல்லை காஞ்சீபுரம் என்கிறார் நீலகண்ட சாஸ்திரி. ஸ்ரீரங்கமாக இருக்கலாம் என இன்னொருவர் கூறுகிறார். எத்தனை முரண்பாடு!

எனவே, ஸ்ரீரங்கத்தில் மாலிக் காபூர் படையெடுப்பு நடைபெற்றதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. சரி, ஸ்ரீரங்கத்தில் மாலிக் காபூர் படையெடுப்பு நடந்ததாகவே வைத்துக்கொள்ளுவோம். அப்போது 13000 வைணவ பிராமணர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற புள்ளி விவரத்தை எந்த சென்சஸ் புத்தகத்திலிருந்து சுஜாதா எடுத்தார்?

பிராமணர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எப்போதும் நெருங்கிய நல்லுறவு உண்டு. முஸ்லீம் மன்னர்களின் அமைச்சர்களாகவும் உயர் அதிகாரிகளாகவும் பிராமணர்களே இருந்துள்ளனர். திப்புவின் அமைச்சர் பூரணய்யா ஒரு பிராமணர். திப்புவின் மறைவிற்குப் பிறகு திப்புவின் மகனிடம் நாடு ஒப்படைக்கப்பட வேண்டுமென ஆங்கிலேய அரசுடன் வாதாடியவர். இதுபோல் இன்னும் பல அரிய செய்திகள் உண்டு. ஒரு காதல் கதையைக் கேளுங்கள்!

திருவரங்கன் திருமேனியைக் கண்டு காதல் கொண்டு தனது காதல் நிறைவேறாததால் ஸ்ரீரங்கம் வந்து செத்து மடிந்த டில்லி சுல்தானிய இளவரசிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் துலுக்க நாச்சியார், பீவி நாச்சியார் என்ற பெயரில் இன்றும் வழிபாடு நடைபெறுகிறது. இதை 1961இல் வி. ஹரிராவ் எழுதியுள்ள ஸ்ரீரங்கம் கோவில் ஒழுகு சிறப்பித்துக் கூறுகிறது. இது சமய நல்லிணக்கம் நிமித்தம் ஏற்பட்ட பாசமும் நேசமும் நிறைந்த கதையாகக்கூட இருக்கலாம். இதை ஏன் சுஜாதா கண்டுகொள்ளவில்லை? வெட்கமா?

இந்திய இனங்களுக்கிடையே பகைமைத் தீயை உண்டாக்க 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் திட்டமிட்டு இந்திய வரலாற்றைத் திரித்து எழுதினர். இதன் ஒரு பகுதிதான் மாலிக் காபூர் படையெடுப்பு குறித்த செய்தியும்! இது குறித்து நமது நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மேலாய்வு செய்யாமல் கிளிப்பிள்ளைகளாக இருந்து வந்துள்ளனர். உண்மை புதைந்து போயிற்று! ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ இன்னும்கூட எரிந்துகொண்டுதான் இருக்கிறது. தனது பங்கிற்கு சுஜாதாவும் கொஞ்சம் நெய் அபிஷேகம் செய்திருக்கிறார்! சுஜாதாவிடம் ஆதாரம் இருந்தால் காட்டட்டும். ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் தயார். அமைதிப் பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் வேண்டாம் இந்த விஷ(ம)ப் பிரச்சாரம்! சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் சமுதாய நல்லிணக்கச் சிந்தனையுடன் எழுதுவது நல்லது. தமிழ் வார இதழ்களில் நம்பர் ஒன்-ஆக விளங்கும் ஆனந்த விகடனில் இப்படிப்பட்ட அரைகுறைச் செய்திகள் வருவது வருத்தத்தை அளிக்கிறது.

இப்படிக்கு
ஜெ. ராஜா முகமது
நன்றி: காலச்சுவடு

 

நாகூர் – ஒரு வரலாற்றுப் பார்வை


கடந்த ஆகஸ்ட் 21, 2007 -ல் ஆபிதீன் பக்கங்களில் வெளிவந்த இந்த சிறப்பான கட்டுரை, அதற்கு முன்பு கூகுள்ஸ் பக்கங்களில் அவர் பதிவு செய்த இந்த பதிவு, வலைத்தளங்களில் சுற்றிச் சுற்றி வருவது இக்கட்டுரைக்குள்ள மகத்தான வரவேற்பைக் காட்டுகிறது.  எனது பால்ய நண்பன் ஹாஜா மெய்தீனின் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் இதனை இங்கே பதிவு செய்கிறேன்.

– அப்துல் கையூம் 

நாகூர் – ஒரு வரலாற்றுப் பார்வை
முனைவர் ஜெ.ராஜா முகமது M.A., B.Sc., (காப்பாட்சியர் ,அரசு அருங்காட்சியகம் , புதுக்கோட்டை – 622 002 )

நாகூர் என்றதும் நம் சிந்தைக்கு இனிமையுடன் நினைவுக்கு வருவது நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வர் ஹஜ்ரத் செய்யிது காதிர் ஷாஹுல் ஹமீது மீரான் சாஹிபு அவர்களின் தர்கா ஒன்றுதான். ஆனால் தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாற்றிலும், இஸ்லாம் வளர்த்த இன்பத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட நாகூர் சிறப்பான இடம் வகிக்கிறது. இவை குறித்த சில வரலாற்றுச் செய்திகளை இங்கு காண்போம்.

நாகூர், நாகப்பட்டினத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் ஷாஹுல் ஹமீது வலி அவர்கள் நாகூருக்கு வந்த பிறகு நாகூரின் வரலாறு ஒளி பெறுகிறது. போர்த்துக்கீசியர்களின் பதிவேடுகள் நாகூரை ‘நாகூரு’ என்றும் நாகப்பட்டினத்தின் முஸ்லீம்களின் குடியிருப்புப் பகுதி என்றும் குறிக்கின்றன. போர்த்துக்கீசியர்கள் நாகப்பட்டினத்தை 16ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிடித்துக் கொண்டதும் நாகூர் முஸ்லீம்களின் வணிக வரலாறும் தெரிய வருகிறது.

நாகூர் ஷாஹுல் ஹமீது வலி அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர் (1). ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு (கி.பி. 1558) இவ்வுலக வாழ்வை நீத்தார்கள் எனவும் இவர்களது நினைவாக முதல் கந்தூரி 1559-ல் நடைபெற்றதாகவும் தர்காவின் வரலாறு கூறும் எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார் (2). ஆற்காட்டை ஆண்ட நவாபுகள் இவர்களது பெயரால் தஞ்சாவூர் நகரை காதர் நகர் என பெயரிட்டனர்(3). நாகூர் பகுதியில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்த பெருமை நாகூர் ஆண்டகை அவர்களைச் சாரும். இவர்களது அருட்கொடையைத் தொடர்ந்து பெறும் பொருட்டு தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் முஸ்லிம் மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர். இஸ்லாமியர் பெருகினர். இப்பகுதியில் இஸ்லாம் செழித்தோங்கியது.

ஷாஹுல் ஹமீது வலியுல்லா அவர்கள் நாகூருக்கு வருவதற்கு முன்பே அரேபிய நாட்டிலிருந்து செய்யிது முபாரக் வலியுல்லா அவர்களும், முகமது சித்திக் இப்னு மசூத் அவர்களும் நாகூரில் தங்கி இஸ்லாமிய மார்க்கப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களது கல்லறைகளும் நாகூரில் உள்ளன(4).

16ஆம் நூற்றாண்டில் நாகூர் பற்றிய வெளிநாட்டார் குறிப்புகளிலும், இலக்கியங்களிலும் பயணக் குறிப்புகளிலும் ஷாஹுல் வலியுல்லா அவர்களைப் பற்றியோ அல்லது தர்கா பற்றியோ குறிப்புகள் ஏதும் இல்லை. இதே காலகட்டத்தில் (1545) நாகப்பட்டினம் பகுதிக்கு வருகைதந்து ஏராளமான பரதவர்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றம் செய்து கொண்டிருந்த புனித ப்ரான்சிஸ் சேவியர் அவர்களின் குறிப்புகளிலும் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் இல்லை (5).

நாகூர் ஆண்டவர் தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் (1560-1614) நோயினைத் தீர்த்து வைத்ததாகவும் அவர்களது அருளினால் மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்ததாகவும் ‘கஞ்சுல் கராமத்து’ கூறுகிறது. நாகூர் தர்காவிற்கும் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களுக்கும் இக்காலம் முதல் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இக்காலத்தில் நாயக்க மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட ரகுநாதபியுதாயமு, சாகித்ய ரத்னகாரா, சங்கீதசுதா ஆகிய தெலுங்கு இலக்கியங்களில் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் நாயக்க மன்னர்கள் அப்போது நாகப்பட்டினத்தை ஆக்ரமித்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசியருடன் பகைமை கொண்டிருந்த காரணத்தினாலும் நாயக்க மன்னர்கள் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதாலும் நாகூர் ஆண்டவர் போன்ற வலிமார்கள் மிகப் பெரிய மருத்துவ மேதைகளாகவும் திகழ்ந்தார்கள் என்பதாலும் இத்தகைய வழக்குகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பலாம். (6). இக்காலத்தில் நாகூர் ஆண்டகையின் செயற்பாடுகள் தொடக்க நிலையில் இருந்ததாகக் கொள்ளலாம்.

இறைநேசச் செல்வர்களான புனித அடியார்களைப் பற்றிய வரலாறுகளும், அவர்களது அற்புத ஆற்றல்களை சிறப்பித்து கூறும் செய்திகளும் ஏராளம் உண்டு. தொன்றுதொட்டு வழங்கிவரும் கதைகளை அப்படியே எழுதிவிடுவது என்பது வழக்கமாக உள்ளது. அவற்றை வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி தெளிவுபடுத்த முஸ்லீம் எழுத்தாளர்கள் போதிய முயற்சிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். நமது வரலாறு பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும். நாகூர் ஆண்டவர் குறித்து நிறைய படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் இவர்கள் பற்றிய வரலாற்றுச் சான்றிதழ்கள் வலுவிழந்து நிற்கின்றன. உதாரணமாக நாகூர் நாயகர் , கடலில் வந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு தத்தளித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து தமது கண்ணாடியை கடல் நோக்கி எறிந்ததாகவும் அக்கண்ணாடி கப்பலில் ஏற்பட்ட உடைப்பை அடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ஆபத்திலிருந்து தப்பிய கப்பல் ஹாலந்து நாட்டைச்சேர்ந்த டச்சுக்காரர்களின் கப்பல் என்றும், இதற்கு நன்றிக்கடனாக டச்சுக்காரர்கள் நாகூர் நாயக்கருக்கு நன்றி செலுத்தியதாகவும், ஒரு ஆசிரியர் குறிப்பிடுகின்றார் (7). நாகூர் ஆண்டவர் அவர்கள் காலத்தில் டச்சுக்காரர்கள் கிழக்குக் கடற்கரைக்குப் பகுதிக்கு வரவே இல்லை. அப்போது நாகப்பட்டினம் பகுதியில் இருந்தவர்கள் போர்த்துக்கீசியர் ஆவார்கள். டச்சுக்காரர்கள் முதன்முதலில் 1605ம் ஆண்டிலேயே கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு வருகின்றனர் (8). 1658-ம் ஆண்டில்தான் நாகப்பட்டினம் துறைமுகம் டச்சுக்காரர்கள் வசமாகிறது (9).

தஞ்சாவூரை ஆண்டுவந்த மராத்திய மன்னர்கள் நாகூர் தர்காவை விரிவுபடுத்துவதற்கு பல்லாற்றானும் உதவிகள் செய்துள்ளனர். கி.பி. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாகூர் தர்கா சிறிய கட்டிடங்களுடனேயே இருந்து வந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு படுத்திக் கட்டினார். இம்மன்னர் நாகூர் தர்கா கட்டிடங்களின் Founder என்று சொல்லப்படுகிறது. (10). மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு பதினைந்து கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது (11). தர்காவில் உள்ள மிக உயரமான (131) அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார். பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள் வழங்கியுள்ளனர். இக்கொடைகள் குறித்த செய்திகள் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் மோடிப் பதிவேடுகளில் நிறையக் காணப்படுகின்றன. கந்தூரி உற்சவத்தின்போது ஆண்டுதோறும் மராட்டிய மன்னர்களிடமிருந்து அலங்கார ஆடைகள் வருவது வழக்கமாக இருந்தது (12). நாகூர் பகுதி ஆங்கிலேயருடைய ஆட்சிக்குட்பட்டபின்னும் மராட்டிய மன்னர்கள் தர்காவின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து பெரிதும் அக்கறைகாட்டி வந்தனர். பிரதாப்சிங் கட்டிய மனோராவை ஆங்கிலேயர்கள் தங்களது கொடிக்கம்பமாகப் பயன்படுத்தி வந்தனர். மராட்டிய மன்னர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இப்பழக்கம் நிறுத்தப்பட்டதாக ஆங்கிலேயரின் பதிவுகள் தெரிவிக்கின்றன (13).

மேலும் ஜாதி மத பாகுபாடின்றி இந்துக்களும் முஸ்லீம்களும் தர்காவிற்கு வந்து வழிபடுவதை ஆங்கிலேயர் வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளனர் (14).

இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலர் தர்காவின் கட்டிடங்களைக் கட்டுவதற்கு நிறைய பொருளுதவி செய்துள்ள செய்திகளை தர்காவில் காணப்படும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்ட செய்தியும் நமக்கு கிடைக்கிறது (15).

19-ம் நூற்றாண்டில் தர்காவின் தரிசனத்திற்கு வரும் கூட்டம் மிகவும் அதிகரித்துக் கொண்டுவந்தது. இதனால் தர்காவின் வருமானமும் பெருகியது. ஆகவே தர்கா நிர்வாகத்தைக் கவனிக்கப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்த தர்காவைப் போற்றி வந்ததால் ஒரு சமயம் முத்துசாமிப்பிள்ளை என்பவர் தர்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் (16). தர்காவிற்கான மானியங்கள் முறைப்படுத்தப்பட்டன. மானிய நிலங்களிலிருந்து வரும் நெல் வருமானத்தை வலியுல்லா அவர்களின் சந்ததியினர் நிர்வகித்து வர வழிவகை செய்யப்பட்டிருந்தது (17). 1817-ம் ஆண்டு அறநிலைய சட்டப்படி ஆங்கிலேய அரசே தர்காவின் நிர்வாகத்துக்கு வந்தது. 1934-ம் ஆண்டு முஸ்லீம் அறநிலையங்களுக்கென தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது (18). 1954-ம் ஆண்டு வக்பு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டபின் தர்கா நிர்வாகம் இச்சட்டத்தின்படி முறைப்படுத்தப்பட்டது.

நாகூர் தர்காவில் கந்தூரி 14 நாட்கள் நடைபெறுகிறது. அப்போது இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடி வலியுல்லா அவர்களின் அருள் வேண்டுகின்றனர். 9-ம் நாள் பீர் என்னும் பக்கீர் மௌனமாக அமர்ந்திருக்கும் பழக்கம் ஆந்திர மாநிலம் பெணுகொண்டா தர்கா நடைமுறைப் பழக்கங்களிருந்து பெறப்பட்டதாக தெரியவருகிறது (19). மேலும் இந்து கலாச்சாரத் தாக்கத்தினால் பல வழிபாட்டு முறைகள் தர்காவில் பின்பட்டு வருவதைக் காண்கிறோம்.

நாகப்பட்டினத்திலும், நாகூரிலும் முஸ்லிம் வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். நாகூரில் வாழ்ந்து வந்த முஸ்லிம் வணிகர்கள் பற்றிய செய்திகளும், நாகூர் துறைமுகம் குறித்த செய்திகளும் 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகப் பெருமக்கள் கப்பல் உரிமையாளர்களாகவும், கப்பல் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்பவர்களாகவும் இருந்தனர். முஸ்லிம் வணிகர்கள் அனைவருமே கப்பல்கள் வைத்திருக்கவில்லை. ஒருசில வணிகர்களுக்குச் சொந்தமாக இருந்த கப்பல்களில் பிற வணிகர்கள் தங்களது வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்று வாணிபம் செய்துள்ளனர்.

நாகூர் கடற்கரையில் 16-ம் நூற்றாண்டில் ஐந்து கோயில்கள் இருந்தன. இந்தக் கோயில்கள் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன. இத்துறைமுகத்திற்கு ஒன்றை மரப்பாய் கப்பலிலிருந்து, 300 டன் எடையுள்ள கப்பல் வரை வந்து சென்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகர்கள் சுமத்தரா, ஜாவா, மலாக்கா, மலேயா, பர்மா, இலங்கை ஆகிய கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாவன : அரிசி, சங்கு , மிளகு மற்றும் துணிவகைகள். இறக்குமதிப் பொருட்களாவன : பாக்கு, யானை, குதிரை, தேங்காய், உலோகங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் (20). நாகூர் துறைமுகத்திலிருந்து மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பிற துறைமுகங்களுக்கும் வணிகத் தொடர்பு மிக அதிகமாக இருந்து வந்தது. மேலும் நாகூர் துறைமுகம் வெட்டாறின் கிளையான குடவளாற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால், ஆற்றில் தண்ணீர் அளவு கணிசமாக இருக்கும்போது, ஆற்றினுள் குறைந்த எடையுள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் போக்குவரத்து நடந்து வந்தது. இதன்மூலம் உள்நாட்டு விளைபொருட்களை, துறைமுகத்திற்கு ஏற்றிவர ஏதுவாக இருந்தது (21).

16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர் நாகப்பட்டினம் துறைமுகத்தைப் பிடித்துக் கொண்டனர். இயல்பாக அவர்கள் முஸ்லிம்கள் மீது காட்டிய பகை உணர்வு அங்கு வாழ்ந்த முஸ்லீம் வணிகர்களை நிலைகுலையச் செய்தது. போர்த்துக்கீசிரியன் அனுமதிச்சீட்டுடன் (cartaz) முஸ்லீம் வணிகர்களும் வாணிபத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லீம் வணிகர்கள் அவர்களை விட்டு விலகிச் சென்று நாகூர் துறைமுகத்திலிருந்து தங்களது வாணிப நடவடிக்கைகளை நடத்தி வந்தனர். நம் நாட்டு மன்னர்களிடையே ஏற்பட்ட பிணக்குகளினாலும் ஐரோப்பியர்களின் தலையீட்டினாலும் தமிழகத்தின் அரசியல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக முஸ்லீம் வணிகர்களும் அவர்களது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன. பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்டது மட்டுமின்றி நாகூர் துறைமுகத்திலிருந்த முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமான இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றார் என்பதிலிருந்து முஸ்லிம் வணிகர்களின் செல்வச் சிறப்பையும் அதே சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் அறிய முடிகிறது (22).

1773-ல் மராட்டிய மன்னர் நாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களை டச்சுக்காரர்களுக்கு விற்றுவிட்டனர். இதை ஆற்காடு நவாப் எதிர்த்து தம் வசப்படுத்திக்கொண்டார் (23). பின்னர் 1788-ல் நாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 277 கிராமங்களை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா ஆங்கிலேயருக்கு அளித்தார். இதன்பின் நாகூர் துறைமுகம் ஆங்கிலேயரின் வசமானது (24).
1780-ல் ஹைதர்அலி நாகப்பட்டினத்தின் மீது படையெடுத்து வந்தார். அப்போது நாகூர் ஆங்கிலேயர் வசமிருந்தது. நாகப்பட்டினத்திலிருந்து டச்சுக்காரர்கள் ஹைதர்அலிக்கு உதவி அளித்தனர். ஹைதரின் படைகள் நாகூர்ப் பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தின. நாகூர் பகுதி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. நாகூரிலிருந்த வணிகப் பெருமக்களும் பொதுமக்களும் பயந்து பல இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் என்று நாகூரிலிருந்த ஆங்கிலேய பிரதியின் அறிக்கை கூறுகிறது (25).

தஞ்சாவூர் பகுதி முழுவதும் 1799-ல் ஆங்கிலேயர் வசமானது. நாகப்பட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது (26). பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது (27). அரசியல் குழப்பங்களினால் குடிபெயர்ந்து சென்ற வணிகர்களையும், நெசவாளர்களையும் நாகூருக்கு வந்து குடியமர ஆங்கிலேய அரசு பல சலுகைகளை அளித்தது. முஸ்லீம் வணிகர்கள் மீண்டும் நாகூருக்கு வந்து சேர்ந்தனர். நாகூரில் பலவித வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன (28). வீட்டுவரி தவிர பிற வரிகள் ரத்து செய்யப்பட்டன. வணிகர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் பொருட்டு ஆங்கிலேயர் ஒரு வங்கியை நாகூரில் ஏற்படுத்தினர் (29).

நாகூரில் ஒரு வகை ஊதா நிறத் துணி உற்பத்தி செய்யப்பட்டது. Naguri Blue Cloth எனும் இத்துணிக்கு இங்கிலாந்திலும் தூரக்கிழக்கு நாடுகளிலும் நல்ல கிராக்கி இருந்தது (30). நாகூரில் ஒரு சாயத் தொழிற்சாலையும் ஏற்படுத்தப்பட்டது. நெசவாளர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. நாகூர் பகுதியில் சுமார் 4000 நெசவாளர்கள், 1100 தறிகளில் இவ்வகை ஊதா துணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு அளித்து வந்தனர். நெசவாளர்களில் பெரும்பாலோனோர் முஸ்லிம் மக்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உற்பத்தியாகும் ஊதா துணியில் பெரும் பகுதியை முஸ்லிம் வணிகர்கள் வாங்கி ஜாவா, இங்கிலாந்து, மலாக்கா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு தங்களது கப்பல்களிலும் ஆங்கிலேய வணிகர்களின் கப்பல்களிலும் அனுப்பினர். ஆங்கிலேய கம்பெனியும், செட்டியார் இன வணிகர்களும் ஆங்கிலேய தனியார் வணிக நிறுவனங்களும் இவ்வகைத் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தனர். இந்து வணிகர்களும், முஸ்லிம் வணிகர்களும் ஒற்றுமையுடன் இருந்து வாணிபம் நடத்தி நாகூரின் வளம் பெருக்கினர் (31).

முஸ்லிம் வணிகர்களான மரைக்காயர்கள் குறித்த செய்திகள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன. மரைக்காயர், நகுதா, மாலுமி, செறாங்கு, சுக்காணி போன்ற பட்டங்களுடன் ஏராளமான முஸ்லிம் வணிகர்களின் பெயர்கள் இப்பதிவேடுகளில் காணக்கிடக்கின்றன. இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளிலெல்லாம் பெரும் செல்வாக்குடன் விளங்கினர். சில வணிகர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். 1722-ல் ஆங்கிலேயர் அச்சை நாட்டில் ஒரு வணிகச் சாவடி ஏற்படுத்தும் பொருட்டு அந்நாட்டு மன்னரிடம் அனுமதி பெற, முகமது காசிம் மரைக்காயர் மூலமாகவே அணுகவேண்டி வந்தது. இவர் நாகூரைச் சேர்ந்த ஒரு கப்பல் வணிகர்; மேலும் முகமது காசிம் மரைக்காயர் பினாங்கிலும் கெத்தானிலும் அந்நாட்டு மன்னர்களிடமும் பெரும் செல்வாக்கு உடையவராக இருந்தார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும் (32). இவருக்கு ஆங்கிலேய அரசு பல வரிச் சலுகைகளை அளித்துள்ளது (33). இது போன்று தூரக்கிழக்கு நாடுகளில் சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள் பலர் குறித்த செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களது வணிகச் சாவடிகள் பினாங்கு, அச்சை, சுமத்தரா, பெரு, கெத்தா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் வளமுடன் விளங்கியதை ஆங்கிலேயரின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன (34).

1796-ம் ஆண்டு பதிவேடு ஒன்று நாகூரில் சுமார் 70 முஸ்லீம்கள் கப்பல் வணிகர்களாகத் திகழ்ந்தனர் எனத் தெரிவிக்கிறது. இவர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை நாகூரிலேயே கட்டிக் கொண்டனர். இவ்வாண்டில் ஏழு கப்பல்கள் மட்டும் நாகூர் மற்றும் நாகப்பட்டினத் துறைமுகங்களில் முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமானவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வணிகர்கள் இக்கப்பல்களில் தங்கள் வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்றிருக்க வேண்டும். இதற்குரிய வாடகை, கமிஷன் போன்றவற்றை கப்பல் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர். கப்பல் சரக்குக் கட்டணம், பொருட்களின் மதிப்பில் 14% கமிஷன், 7 1/2% இன்ஷ¥ரன்ஸ் திட்டமும் இருந்தது. பிரிமியம் 16% ஆகும். பெரும்பாலும் கப்பல் உரிமையாளர் கப்பலில் செல்வது கிடையாது. கப்பல் தலைவரான நகுதாவின் பொறுப்பில் கப்பல் ஒப்படைக்கப்படும். நகுதாவும் தனது ஊதியத்திற்குப் பதிலாக தனது வணிகப் பொருட்களை கப்பலில் ஏற்றிச் செல்லுவார். நாகூர் வணிகர்களின் வணிக நடைமுறைகள் பழக்கங்கள் குறித்த சுவையான பல செய்திகள் ஐரோப்பியரின் பதிவேடுகளில் நமக்கு கிடைக்கின்றன (35). தங்களது கப்பல்களை பதிவு செய்து கொண்டு உரிய சுங்கத் தீர்வைகளை செலுத்திய வணிகர்கள் மட்டுமின்று பதிவு செய்யப்படாத கப்பல்களும் பல இருந்தன. சுங்கத் தீர்வையை ஏய்த்து பொருட்களை ஏற்றிவந்த இதுபோன்ற கப்பல்கள் ஆங்கிலேயரால் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமும் விதிக்கப்பட்டது. நாகூர் பக்கிரி மரைக்காயர் 1823-ல் இலங்கையிலிருந்து அனுமதியின்றி பாக்கு ஏற்றிக் கொண்டுவந்தபோது கண்டுபிடிக்கப்படு அவரது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது (36). கபூல் முகமது மரைக்காயர் தனது கப்பலில் அனுமதின்றி வங்காளத்திற்கு சங்கு ஏற்றிச் சென்றபோது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது (37).

நாகூர் துறைமுகக் கப்பல்களில் நகுதா, சிராங்கு, மாலுமி, கிராணி, சுக்காணி போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்த பல முஸ்லிம்களின் பெயர்கள் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன (38).

கி.பி. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகூர் மரைக்காயர்கள் தங்களது கப்பல்களை கொழும்பு, அச்சை, பினாங்கு, மலாக்கா, மலேயா ஆகிய நாடுகளுக்கு வணிக நிமித்தம் அனுப்பி வந்தனர். ஐரோப்பாவில் நடைபெற்ற போர்களின் தொடர்பாக இந்தியாவிலும் ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் பகை மூண்டது. இப்போர்களில் நடுநிலை வகித்து வந்த டேனிஷ்காரர்களின் கொடி மற்றும் அனுமதிச்சீட்டுடன் நாகூர் மரைக்காயர்கள் தங்கள் கப்பல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தனர். ஆனால் டேனிஷ்காரர்கள் நடுநிலையிலிருந்து மாறியபோது, அவர்களது அனுமதிச்சீட்டுடன் சென்ற கப்பல்களை பிரஞ்சு நாட்டு போர்க்கப்பல்கள் வளைத்துப் பிடித்தன. பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையிலிருந்து தங்களை காப்பாற்றக்கோரி நாகூர் முஸ்லிம் வணிகர்கள் ஆங்கிலேய அரசிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றனர். இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ள பதினேழு பேர்களுள் பதிமூன்று பேர் முஸ்லிம்கள் ஆவர். அவர்களது பெயர்கள் வருமாறு :- முகமதலி மரைக்காயர், முகமது சையது மரைக்காயர், அலிசாயபு நகுதா, ஹபீப் முகமது மாலுமி, பீர் சாஹிப் நகுதா, முத்துனா சாஹிப், சையது இஸ்மாயில் லப்பை, முகமது ஹபீப் மரைக்காயர், மதார் சாஹெப் நகுதா, சையது முகமது நகுதா, சுலைமான் மாலுமி, பக்கீர் முகமது நகுதா, சித்தி முகமது இப்ராஹிம் நகுதா (39).பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாகூர் வணிகர்களின் கப்பல்கள் வாணிகப் பொருட்களோடு பயணிகளையும் தூரக்கிழக்கு நாடுகளுக்கு ஏற்றிச் சென்றன. மலாக்கா, மலேஷியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுக்கு பெருமளவிற்கு முஸ்லிம்கள் சென்றனர். அங்கெல்லாம் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டதின் பயனாக தொழிலாளர்கள் நிறைய தேவைப்பட்டனர். நாகூரிலிருந்தும் இந்நாடுகளுக்குச் சென்றவர்கள் அந்நாடுகளில் தொழிலாளர்களாகவும், வணிகர்களாகவும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டும் இருந்தனர். 1786-ல் பினாங்கும் 1824-ல் சிங்கப்பூரும் உருவானபோது நாகூர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மரைக்காயர்கள் அங்கெல்லாம் கணிசமான என்ணிக்கையில் இருந்தனர். நாகூரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற மரைக்காயர்கள் தங்களது ஆன்மீகத் தேவைகளுக்காக அங்கெல்லாம் நாகூர் ஆண்டவர் பெயரால் தர்காக்கள் கட்டி ஆண்டுதோறும் நாகூரில் நடைபெறுவதுபோல் கந்தூரியும் நடத்தினர். இதுபோன்ற கலாச்சார மையங்கள் (தர்காக்கள்) சிங்கப்பூரிலும், பினாங்கிலும் இன்ரும் உள்ளன (40). மேலும் நாகூர் தர்காவில் கந்தூரியின்போது ஏற்றுவதற்காக ‘கொடி’, கப்பல் மூலம் அனுப்பி வந்தனர்.

1848-ல் சுமார் பத்து கப்பல் உரிமையாளர்கள் மட்டும் நாகூரில் இருந்தனர் என்பதற்கு அங்கு பதிவாகியுள்ள கப்பல்களின் பெயர்களைக் கொண்டு அறிகிறோம். இவை அனைத்தும் பாய்மரக் கப்பல்கள். அவையாவன : காதர்மீரா, ஷம்ஷீர், ஜூலிக்ஸ், கூடு காதர் பக்ஸ், பதேகாசிம், சகியா, பால காதர், அகமது பக்ஸ் முகமது மைதீன் பக்ஸ், ஜஹாங்கீர், ஷாஹுல் ஹமீது. இக்கப்பல்கள் சிங்கப்பூர், பினாங்கு, பர்மா, ஆகிய நாடுகளுக்கு பெரும்பாலும் பயணிகளை ஏற்றிச் சென்றன. குறைந்த அளவில் வணிகப் பொருட்களையும் ஏற்றிச் சென்றன (41).

19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு சில கப்பல் உரிமையாளர்களையும், கப்பல் வணிகர்களையும் நாகூரில் காண முடிகிறது. இவர்களும் பொருளாதரத்தில் முனைப்பாக இல்லை என்பதும் தெரிய வருகிறது. இக்காலத்தில் செட்டியார் வணிகர்கள் பெரும் பணக்காரர்களாக விளங்கினர். முஸ்லிம் வணிகர்கள் பலர் அவர்களிடம் கடன் பெற்று வணிகம் செய்துள்ளனர். நாகூரில் வசித்த அரசன் குத்தூஸ் மரைக்காயர், லார்டு ஹாரிஸ் என்ற கப்பலுக்கு உரிமையாளர். இவர் 1890-ல் சாமிநாத செட்டியார் என்பவரிடம் ரூ.10,000 கடனாகப் பெற்று, பெற்ற கடனை திருப்பி அளிக்க முடியாமல் கப்பலையே கொடுத்து ஈடு கட்ட வேண்டியதாயிற்று (42). இவரது சகோதரர் அகமது நைனா மரைக்காயர் ஒரு கப்பல் வணிகர் என்ற செய்தியும் கிடைக்கிறது (43). மேலும் பல கப்பல் வணிகர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றிய செய்திகளை அறியக்கூடவில்லை. மரைக்காயர் தெரு, செராங்கு தெரு, மாலுமியார் தெரு, நகுதா தெரு, பயலட் தெரு என்பன இங்கு வாழ்ந்த கப்பல் வணிகர்களை நினைவு படுத்துகின்றன.

1867-ம் ஆண்டில் நாகூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் நாகூர் வணிகர்களும் நாகப்பட்டினத்திலிருந்து தங்களது வாணிபத்தைத் தொடர்ந்தனர். சிறிய பாய்மரக் கப்பல்கள் மூலம் இலங்கை, மேற்குக் கடற்கரை, கல்கத்தா, துறைமுகங்கள், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டத் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் சிறிய அளவில் வணிகம் செய்துவந்துள்ள செய்திகள் தெரிய வருகின்றன. ஆனால் பிற நாடுகளுக்குச் சென்ற செய்திகள் கிடைக்கவில்லை. அதிக எடை கொள்ளளவு உள்ள ஆங்கிலேயரின் நீராவிக் கப்பல்களுடன் மரைக்காயர்களின் பாய்மரக் கப்பல்கள் போட்டிபோட முடியவில்லையாதலாலும் ஆங்கிலேலேயரின் பெரும் மூலதனத்துடன் இவர்களது குறைந்த மூலதனம் ஈடுகொடுக்க முடியாததாலும் ஏறத்தாழ 16-ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லிம் இனம் சார்ந்த அரசுகளில் ஆதரவு இல்லாததாலும், கிழக்குக் கடற்கரை முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நசிந்து மறைந்து போயிற்று. இதில் நாகூர் வணிகர்களும் அடங்குவர்.

17-18-ம் நூற்றாண்டுகளில் நற்றமிழ் புலவர்கள் பலர் நாகூரில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இலக்கிய உலகிற்கும் தமிழுக்கும் நல்ல சேவை புரிந்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் ஏறத்தாழ 30-க்கும் மேற்பட்ட புலவர்களின் பெயர்களும் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளும் நமக்கு தெரிய வருகின்றன. நாகூர் தந்த நல்ல தமிழ் புலவர் வரிசையில் முதலிடம் வகிப்பவர் குலாம் காதிர் நாவலர் ஆவார்கள். திரைகடலோடி தேடிய திரவியத்தை தக்கார்க்கு வேளாண்மை செய்வதில் நாகூர் வணிகர்கள் சிறந்து விளங்கினர். இவர்களது கொடைத் தன்மையினால் பல இஸ்லாமிய இலக்கியங்கள் உருவாகியுள்ளன என்பதை இஸ்லாமிய இலக்கிய வரலாற்று நூல்கள் பெருமையுடன் பேசுகின்றன (44).

நாகூரின் வணிக, ஆன்மீக கலாச்சார வரலாறு குறித்த ஒரு அறிமுகமே இக்கட்டுரை. நாகூர் குறித்து பதிவேடுகள் கூறும் விரிவான செய்திகள் மூலம் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றை தெளிவுபட தெரிந்துகொள்ள மேலும் பல செய்திகள் நமக்குத் தெரியவருகின்றன.

References :

1. T.W. Arnold , the Preacings of Islam, p. 267; Quadir Hussain Khan, South Indian Mussalmens pp.36-38
2. ஜே.எம். சாலி, தமிழகத்து தர்காக்கள், சென்னை,. 1981, பக்கம் -32.
3. S,. Mohamed Hussain Nainar, Tuzuki Wallahjahi, Madras – part I p.60.
4. M. Abdul Rahim, the Dargah of Nagore and Culture of Tamil Muslims, in Bulletin of the Institute of Traditional Culture, Madras, 1973, Jan to June pp. 92-104.
5. M. Joseph Costilloe, Francis Xavior, His lilfe and his time, Rome, 1997 – Vol II pp. 544-545.
6. V. Vridhagirisan, The Nayak, of Tanjore, Annamalai Nagar, 1942 – pp-32-33; M. Abdul Rahim op. cit.
7. ஜே.எம். சாலி, தமிழகத்து தர்காக்கள், சென்னை, பக்கம் -34
8. Tapan Roy Choudry, Jan company in Coromandel 1605-1690. A study in the inter relations of European Commerce and traditional economies. The Hague 1963-pp. 15-16.
9. The Cambridge History of India Vol. V. p. 127; Viridagirisan, opt. cit. pp. 155-6.
10. Thanjavur District Collectorate Records (TDCR) No. 3396 dt. 11th Sep. 1785.
11. Rangachari, Inscription in the Madras Presidency (Tanjore Dist.) no. 893 A & B.
12. Thanjavur Saraswathi Mahal Modi script record (TR) 4-488; 2-271, 187/C2; 104/C/9.
13. TDCR No. 3396 July 9th 1783.
14. TDCR No. 3331, p. 63.
15. Tazaki Wallajahi, pt. II pp. 196-197.
16. TDCR No. 3268. pp. 182-183.
17. ibid No. 3416 p.9. 19th July 1814; No. 3224, pp. 64-65 7th July 1788; No. 3496 pp. 69. 20th Feb. 1809.
18. G.O. Ms. 882 Law Dept. 17-2-1934.
19. B.S. Baliga, Tanjore District hand Book.
20. S. Arasarathnam Merchants companies and come in Coromandel 1600 – 1740, Cambridge- pp. 27-29; TDCR No. 3335 p. 13.
21. TDCR No. 3271 p. 195.
22. Dodwell, the Madras Despatches, 1754-1765, p. 146. Sanjay Subramaniyam, Political Economy of South India and commerce, cambridge. p.92.
23. Tanjore Original papers, Vol I p. 239.
24. C.K. Srinivasachari, Maratha Rule in Carnatic p.306; Saraswathi Mahal Modi Script (Tr) No. 5-395.
25. Military consultations 1781-74A, letter from Sir Ire coot to Col. Barthwit, Ist March 1761 and also p. No. 728; M.C. 1781-47D p. 1371.
26. TDCR No. 3228 p.82.
27 ibid No. 3182 p.250.
28. FSG Public sundries Vol. No. 36, p.39; TDCR 4238 p. 2324.
29. TDCR No. 3175 p. 163.
30. FSG Commercial consultations for 1821, Vol. 29, p.1582.
31. Public consultations, 1806 pp. 56-57; Revenue sundries 1793-94 Vol. 18 pp. 1-15; TDCR No. 3349, p.5; No. 3325 p.65.
32. Public sundries No. 21, 25th June 1772.
33. FSG Board of Revenue No. 404 18th March 1805 pp 1842-1848.
34. TDCR No. 3337 p.45
35. TDCR No. 3325 p. 65; Public consultation Vol. 340 pp. 2450-60; Pleading of Mayors Court 1745, Vol V. pp. XV-XXI; India and Indian Ocean 1500-1800 (Ed) Ashin Das Gupta and M.N. Pearson, Calcutta-1987. pp. 10-19.
36. TDCR No. 4326 pp. 14-15
37. ibid No. 3336 pp. 38-42.
38. ibid No. 4252 pp. 148-49
39. FSG public consultation 1808, Vol 339, pp. 1314-1315.. 17th Feb. 1808.
40. Susan Bayly, Saints, Goddesses and Kings, Muslims and Chiristians in South Indian Society 1700-1900 Cambridge p.93-94.
41. Public consultation, Vol. No. 831 p. 7-9. 1848; Vol. 832 p.7-9, 1848.
42. Indian Law Reporter Madras Series Vol. IXXII 1889 June – Dec. p.26-31.
43. Nagore Registration Dept. document No. 904/1893.
44. இஸ்லாமிய தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டு மலர், புதுக்கோட்டை 1992-பிப்ரவரி, மு.ஜாபர் முஹைய்தீன், நாகூர் தந்த நற்றமிழ் புலவர்கள்.

நன்றி : இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வுக்கோவை
நன்றி : ஜெ.ராஜா முகமது M.A., B.Sc. & ‘சொல்லரசு’ மு.ஜாபர் முஹையதீன்.