RSS

Category Archives: நீதிபதி இஸ்மாயீல்

சிவாஜி கணேசனும் நீதிபதி இஸ்மாயிலும்


ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1961-ஆம் ஆண்டு சிவாஜி நடித்து வெளியான படம் “பாவமன்னிப்பு. அதில் நாகூர் ஹனிபா, டி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்துப் பாடிய “எல்லோரும் கொண்டாடுவோம்” என்ற பாடல் எல்லோருக்கும் நினைவிருக்கும். சிவாஜி கணேசன் முஸ்லிம் பாத்திரமேற்று மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

உண்மையில் இப்படத்தின் மூலக்கதை நடிகர் சந்திரபாபு எழுதியது. தான் கதாநாயகனாக நடிக்க வேண்டி “அப்துல்லா” என்ற பெயரில் தானெழுதி வைத்த கதையை இயக்குனர் ஏ.பீம்சிங்கிடம் சென்று கதை சொன்னார். அவரும் சம்மதிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சந்திரபாபுவே நடித்தார். கிட்டத்தட்ட 3,000 அடி எடுத்த பிறகு பீம்சிங்குக்கு ஒரு சந்தேகம் வந்தது. கதாநாயகனாக சந்திரபாபு நடித்தால் படம் ஓடுமா என்று.

சிவாஜி கணேசனின் சகோதரர் வி.சி.சண்முகத்தின் திருமண விழாவில் கலந்துக் கொள்ள பீம்சிங் செல்கிறார். அச்சமயம் சிவாஜி கணேசனை சந்தித்து இப்படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். கதையும் பிடித்துப் போகவே சிவாஜியும் சம்மதிக்கிறார். இதற்கிடையில் ‘ஜென்டில்மேனான’ சந்திரபாபுவும் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து இந்த மாற்றத்துக்கு சம்மதிக்கிறார். படத்தில் “கதை” புத்தா பிக்சர்ஸ் குழுவினர் என்றுதான் காண்பிப்பார்கள். சந்திரபாபு பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும்.

அக்கால கட்டத்தில் சந்திரபாபுவும் சாதாரண நடிகர் அல்ல. சிவாஜிக்கு நிகராக சம்பளம் வாங்கியவர். இன்னும் சொல்லப்போனால் “சபாஷ் மீனா” படத்தில் சிவாஜியை விட ஒரு ரூபாய் கூடுதலாக சம்பளம் வேண்டும் என்று நிர்ப்பந்தித்து வாங்கியவர் “சபாஷ் மீனா” திரைப்படம் பாவமன்னிப்பு வெளிவருவதற்கு மூன்று ஆண்டுகள் முன்பே வெளிவந்த படம்.

“பாவமன்னிப்பு” படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்ய ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து, சென்னை சாந்தி தியேட்டருக்கு மேலே AVM என்று எழுத்துடன் பறக்கவிடப்பட்ட ஹைட்ரஜன் பலூன் நிகழ்வு 50+ ஆசாமிகளுக்கு நன்றாக நினைவிருக்கும். சிவாஜிக்கு சொந்தமான “சாந்தி” திரையரங்கில் திரையிடப்பட்ட முதற்படம் “பாவமன்னிப்பு”.

பொதுவாக தமிழ்த் திரைப்பட உலகில் முஸ்லிம் பாத்திரம் என்றாலே “நம்மள்கி”, “நிம்மள்கி” என்று மார்வாடி போன்றுதான் டமில் பேச வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

முஸ்லிம் பாத்திரம் பெரும்பாலும் சல்வார் கமீஸ் அணிந்து, கூம்பு தொப்பியணைந்த, ஆஜானுபாகுவான நெட்டை ஈட்டிக்காரனாக இருப்பார். “அரே.. சைத்தான் கி பச்சா” என்று ஒரு குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு தெருவெல்லாம் கடன்காரனை விரட்டுவார். கடன்காரரும் தலை தெறிக்க ஓடுவார்.

சினிமாவில் முஸ்லிம் பாத்திரங்கள் என்றால் ஒருசில குறிப்பிட்ட தொழில் செய்பவர்களாக மட்டுமே காட்டப்படுவார்கள்.

தலையில் வலைப்பின்னல் வெள்ளைத் தொப்பி, கழுத்தில் தாயத்து, கைவைத்த பனியன், இடுப்பில் அகலமான பச்சை நிற பெல்ட் அணிந்திருந்தால் அவர் கசாப்புக் கடைக்காரர். சாதாரண நேரத்திலும் அவர் கசாப்புக் கத்தி கையுமாகத்தான் நடமாடுவார்.

முஸ்லிம் கதாபாத்திரமென்றால் அடிக்கொரு தரம் “அச்சா.. அச்சா” என்று சொல்ல வேண்டும்., திடீரென்று சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் “அரே அல்லா” என்று நீட்டி முழங்க வேண்டும்.

அதே கெட்டப்பில் நீளமான தாடி வைத்துக்கொண்டு, கழுத்தில் மலைப்பாம்பு போல ‘இஞ்ச் டேப்பு’ தொங்கினால் அவர் தையற்கடை பாய்.

அதே கெட்டப்பில் கழுத்தில் மணியெல்லாம் அணிந்துக்கோண்டு, பச்சை நிற சால்வை போட்டுக்கொண்டு, கையில் குமைஞ்சான் சட்டியோடு கடை கடையாக, புகை மண்டலம் சூழ யாராவது அலைந்தார் என்றால் அவரும் முஸ்லிம் குணச்சித்திர பாத்திரம்.

மணிரத்தினம் படமென்றால் அந்த முஸ்லிம் தீவிரவாதியாக இருப்பான், பாகிஸ்தான் தீவிரவாதியுடன் “ஒயர்லெஸ்ஸில்” பேசுவான்.

வயதான முதியவர் முஸ்லிம் பாத்திரம் என்றால் அவருக்கு நீளமான தாடி இருக்கும்; ஆனால் மீசை முழுவதுமாக மழித்திருப்பார். ஆனால் எல்லோரும் தமிழை கடித்துக் குதறிதான் பேசுவார்கள்.

“நிம்பள் எங்கே போறான்?” “நம்மள்கி வாணாம்” “நம்பள் நமாஸ் படிக்கப் போறான்” என்றுதான் பெரும்பாலான முஸ்லிம் கேரக்டர்கள் பேசுவார்கள். ஒருவர் கூட தூயதமிழ் பேச மாட்டார்கள்.

தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு இந்துமதச் சகோதரனுக்கும் நிச்சயமாக ஒரு முஸ்லிமாவது தன் வாழ்க்கையில் இணைபிரியாத நண்பனாக இருப்பான். ஒன்றாகவே உண்பார்கள், ஒன்றாகவே பழகுவார்கள். இவன் அவன் வீட்டுக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பான். அவன் இவன் விட்டுக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பான். நான் சொல்வது எதார்த்தமான நிஜவாழ்க்கை. அவர்கள் எல்லோரும் நல்ல தமிழில் உரையாடுபவர்களாகத்தான் இருப்பார்கள். தன் முஸ்லீம் நண்பன் வானத்திலிருந்து தனியாக குதித்து வந்தவனல்ல என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும்.

“உங்கள் முஸ்லிம் நண்பர் “நம்மள்கி.. நிம்மள்கி” என்றுதான் தமிழ் பேசுவாரா?” என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். “யோவ்! நீ லூசா?” என்று திருப்பிக் கேட்பார்கள்.

நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயில் பற்றி எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். கம்பராமாயணத்திற்கு அவர் ஒரு அத்தாரிட்டி. “பாவமன்னிப்பு” படத்தில் சிவாஜி கணேசனுக்கு இளைஞர் வேடம். சிவாஜியைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் அவர் ‘அல்வா’ போன்றவர். பாத்திரத்தோடு ஒன்றிப் போய்விடுவார்.

இப்படத்தில் முஸ்லிம் வாலிபராக பாத்திரம் ஏற்றிருக்கும் சிவாஜி கணேசனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அதாவது, இந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கையில் எப்படி பேசுவது? முஸ்லிம் என்பதால் தூய தமிழில் பேச வேண்டுமா அல்லது “பட்லர் இங்கிலீஷ்” போன்று “பட்லர் தமிழில்” பினாத்த வேண்டுமா? இந்த சந்தேகத்தை யாரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது?

சிவாஜிக்கு இப்போது நீதிபதி மு.மு.இஸ்மாயில் ஐயா ஞாபகம்தான் வந்தது. அவரிடம் சென்று கேட்கிறார். “ஐயா நான் முஸ்லிம் இளைஞர் பாத்திரம் எற்று நடிக்கின்றேன். இந்த வேடத்திற்கு ஏற்றார்போல் ‘ஸ்லாங்காக பேச வேண்டுமா அல்லது நல்ல தமிழிலேயே பேச வேண்டுமா?

பொறுமையாக கேட்ட நீதியரசர் சொன்னார் “முஸ்லிம் பாத்திரங்களில் நடிக்கும்போது தாராளமாக எல்லோரும் உரையாடுவதுபோல இயல்பாகவே நீங்க பேசலாம். நல்ல தமிழில் பேசுவது எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் செய்கிற பெருமை” என்றார்.

நெகிழ்ந்துப்போன சிவாஜி கணேசன் அப்படியே செய்கிறேன் என்று நன்றி பெருக்கோடு கூறினார்.

 

நீதிபதி மு.மு.இஸ்மாயீல்


IMG_6768

5-ம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்றபோது எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியன் மற்றும் நீதிபதி மு.மு.இஸ்மாயீல்

 

நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் – அரிய புகைப்படங்கள்


நாகூர் மண்ணின் ஆளுமை பொருந்திய பிரபலங்களில் நினைவில் நிறைந்திருப்பவர்  நீதியரசர் மு,மு.இஸ்மாயீல். வேட்டி அல்லது கோட் சூட் அணிந்த அவரது  புகைப்படங்களே அதிகம் காணக்  கிடைக்கின்றன இந்த அரிய புகைப்படங்கள் – அவர் கைலி அணிந்து கேசுவலாக இருந்தபோது எடுக்கப்பட்டது. (புகைப்பட உதவி: சிங்கை முஹம்மது இஸ்மாயில்)

 

நீதிபதி மு.மு.இஸ்மாயில்

ரஹீம் சேட், கவுஸ் சேட் அவர்களின் சகோதரர் இப்ராஹிம் (பேங்காக்), நீதிபதி மு.மு.இஸ்மாயீல்

நீதிபதி மு.மு.இஸ்மாயீல்

யூசுப் ரஹ்மத்துல்லாஹ் சேட், சந்திரசேகர் ((நாகூர் செட்டியார் ஸ்கூல் தேவிகா  டீச்சரின் கணவர்) ரஹீம் சேட், பட்டாமணியார், அபுனா. (அமர்ந்திருப்பவர்கள்) கெளஸ் சேட், நீதிபதி மு,மு,இஸ்மாயீல்

 

கம்பன் அவன் காதலன் – 11-ஆம் பாகம்


Rajiv Gandhi

இனிக்கும் இராஜ நாயகம் – பாகம் 3

வண்ணக் களஞ்சியப் புலவரின் கவிதைத் திறன் :

தமிழிலக்கிய மரபின்படி அனைத்து காப்பியங்களும் கடவுள் வாழ்த்துடனே தொடங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. பைந்தமிழில் புதுமைகள் பல புகுத்து இருப்பினும் காப்பிய இலக்கணங்கள் ஒவ்வொன்றையும் விதிமுறைகள் வழுவாமல் அவற்றை கவனமாக பின்பற்றியவர் வண்ணக்களஞ்சியப் புலவர் என்பது இவரது மற்றொரு சிறப்பு.

 ஆரணத் தினிலகி லாண்ட கோடியி

லேரணக் கடல்வரை யினின்மற் றெங்குமாய்

பூரணப் பொருளெனப் பொருந்ருமோர் முதற்

காரணக் கடவுளை கருத்திருத்துவாம்

என்ற இறைவணக்க வரிகளுடன் “இராஜநாயக” காப்பியம் அட்டகாசமாய்த் தொடங்குகிறது. இக்காப்பியம் முழுக்க முழுக்க “சாலமன்” என்று விவிலியம் போற்றும் சுலைமான் நபி அவர்களைப் பற்றியது என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டிருந்தோம். மொத்தம் 2240 பாடல்களைக் கொண்ட காப்பியம் இது.

இவருக்கு வண்ணக் களஞ்சியப் புலவர் என்ற கெளரவப் பெயர் நாகூர் வாழ் புலவர்களால் “புலவர்கள் அவை”யில் வழங்கப்பட்டதன் காரணம் இவர் பாவினங்களில் ஒன்றான வண்ணம் அதிகமாகப் பாடியதால்தான்.

பல்லவி

மனமே வாழ்வைச் சதமென் றனுதினம் நபிபதம்
வாழ்த்தா திருந்தாய் மனமே

சரணம்

நண்ணும் திருமதினத் தண்ணல் அப்துல்லா பெறும்
நாத ராமகு முதர்
வண்ணக் களஞ்சியமும் விண்ணோரெவரும் துதி
வணங்கும் கமலப் பாதர்
கண்ணீர் பெருகிவரும் அந்நாள் மகுஷரிலே
காப்போ ரவரல்லாமல்
தீர்ப்போம் துயரமெவர்

மேலே காணும் இப்பாடல் வண்ணக் களஞ்சிய பாடல் வகை வண்ணங்களில் ஒன்றாகும்

வண்ணக் களஞ்சியப் புலவரின் மொழிவளமும்,  கவிநடையும்,  சொல்லாட்சியும் வியந்து போற்றத்தக்கது. கவிகம்பனின் கவிதை நடைக்கிணையாக ஒப்பிட்டு நோக்க வல்லது. அதில் வரும் சந்தம் போற்றும் தன்மை வாய்ந்தது.இலக்கியத்திறன் கொண்டது.

“தீன்விளக்கம்” என்ற இவரது மற்றொரு காப்பியத்தில் [ஒன்பதாம் போர்புரி படலம் -44-253] இவர் கையாண்டுள்ள சொற்பதம் போர்வீரர்களுக்கு எழுச்சியை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது.  இதில் காணும் சந்தத்தில் வீரமுழக்கம் இருப்பதை படிப்போர் புரிந்துக் கொள்ள இயலும்.

வடவைபோல் கொதிப்பன்

சண்டமாருதம் போல்எதிர்ப்பன்

இடிகள்போல் எதிர்ப்பன் போரில்

ஏழுலகம் இவனுக்கு ஈடோ

கடிதினில் எதிர்த்து யானும்

கையிழந்தேன் இங்கே

உடல் உயிரொடுமே சேர்ந்தது

ஊன்றிய விதி ஒன்றாமே!

இராஜநாயகம் காப்பியத்திலுள்ள காணப்படும் உவமை. உவமேயம், படிமம், குறியீடு,  சந்தம், வருணனை, வார்த்தை பிரயோகம், சொல்லோவியம், அனைத்தையும் இலக்கிய ரசனையோடு காண்பது அவசியம்.

இராஜநாயகத்தில் ‘ஹுர்லீன்கள் ‘ என்றழைக்கப்படும் சொர்க்கத்து கன்னிகைகளுக்காக தனியான ஒரு படலத்தையே புலவர் அமைத்துள்ளார்.

வண்ணக் களஞ்சியப் புலவரின் கவிநடையை ஏன் கவிகம்பனின் கற்பனைவளத்துடன் ஒப்பிட்டுச் சொன்னேன் என்பதற்கு கீழ்க்காணும் வரிகள் என் கூற்றுக்கு சான்று பகரும். வண்ணக் களஞ்சியப் புலவரின் உருவகக் கற்பனை மெச்சத்தக்கது. “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல அவருடைய உருவக வருணனைக்கு இப்பாடல் ஒன்றே நல்லதோர் எடுத்துக்காட்டு.

வரம்செய்வோன் நபிவரவு அறிந்து
எழில் பொழின் மன்னன்
திருந்து சாணை செய்பதும
ராகங்களைத் திறையாகப்
பொருந்தவே இடற்கு இணைதரு
மகிழலர் புன்னை
அரும்பு எலாந்தர ளங்களை
இடுவது ஒத்தருளும்

(எறும்புகள் விருந்திடு படலம் – 6)

சோலை ஒன்றிற்கு சுலைமான் நபியவர்கள்  நுழைகின்றபோது அச்சோலையை ஒரு குறுநில மன்னனாகப்  புலவர் உருவகப்படுத்துகிறார். மன்னர்களுக்கெல்லாம் மன்னராகிய அந்த மாமன்னரின் வருகையைக் கண்டு அச்சிற்றரசன் (சோலை) பூரிக்கின்றானாம். கைம்மாறாக பரிசில் ஏதாவது தரவேண்டுமே! என்ன செய்வது? அவன் கப்பம் செலுத்துகிறான். எப்படிப்பட்ட கப்பம்?

மகிழ மலர்கள் திறையாக (வரிப்பணமாக) மாமன்னரின் கால்களில் சரமாரியாக வந்து விழுகின்றன . அச்செம்மலர்கள் நவமணிகளில் ஒன்றாகிய (பதுமராகமாகிய) பட்டை தீட்டிய மாணிக்கக் கற்களாகக் காட்சி தருகின்றனவாம். தூறலாகப் பொழிந்த புன்னை அரும்பு மொட்டுகள்  முத்துகளாகக்  (தரளம்) காட்சி அளிக்கின்றனவாம்.

புலவரின் உருவகக் கற்பனை நயம் நம்மை அப்படியே மாய உலகிற்கு அழைத்துச் சென்று நம்மை மகிழ்விக்கின்றதுதென்னவோ மறுக்க முடியாத உண்மை.  இயற்கையின் வருணனையில் சற்று நேரம் நம்மை நாமே மறந்து போகின்றோம். இலக்கிய இன்பம் என்று இதைத்தான் சொல்கின்றார்கள் போலும்.

வண்ணக் களஞ்சியப் புலவரின் கற்பனை ஆற்றலுக்கு மற்றொரு சான்றினை இங்கே காண்போம். உயர்ந்த நிலைமாடத்தில் பளிங்கினால் உருவான  தளம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அத்தளத்தில் எழில் மங்கைகள் நின்ற வண்ணம் காட்சி தருகின்றார்கள்.  அவர்கள் கண்களின் பிம்பம் பளிங்குத் தளத்தில் பளிச்சென்று தெரிகிறது.  மின்மினி  நட்சத்திரங்களாய்  அவைகள் ஒளிர்கின்றன. அவர்களின் கண்களின் தோற்றத்தை, குளத்தில் உள்ள மீன்கள் என நினைத்ததாம் மீன்கொத்திப் பறவை. அந்தரத்திலிருந்து  அசுர வேகத்தில் பறந்து வந்து அதனைக் கவ்விக் கொள்ள நினைக்கிறது. அந்தோ! பாவம்! பளிங்குத் தரையில் மோதி பலனற்று போகிறதாம்.

பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்

தளம்குளிர் புனல்என நெடிய

கருவிழி இரண்டு கயல்எனத் தோன்றக்

கண்டுவந்து உடல்அசை யாது

விரிசிறை அசைத்துஅந்த ரத்தின்நின்று எழில்சேர்

மீன்எறி பறவைவீழ்ந் திடுமே

(நகரப் படலம் – 3 (13)

தமிழிலக்கியத்திற்கு அதிகமான காப்பியங்கள் பங்களிப்பு செய்த பெருமை முஸ்லிம் புலவர்களையேச் சாரும். வேறு எந்தச் சமயத்தாரும் இதுகாறும் ஒரு சாதனையை புரியவில்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது. அவர்கள் தமிழுக்கு வழங்கிய காப்பியங்களின் எண்ணிக்கை மொத்தம் இருபத்தைந்து. அதில் பெருங்காப்பியங்கள் 16.  சிறுகாப்பியங்கள் 9.

அதென்ன சிறுகாப்பியங்கள்? பெருங்காப்பியங்கள்? உங்களுக்குள் கேள்வி எழலாம். விளக்கம் பெற தண்டியலங்காரம் துணைபுரிகிறது.

அறமுத நான்கினுங் குறைபாடுடையது.

காப்பிய மென்று கருதப் படுமே”

(தண்டியலங்காரம் – பாடல் 10)

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் பயப்பன “பெருங்காப்பியம்” என்றும், அவற்றுள் ஏதேனும் குறைந்து காணப்பட்டால் அது “சிறுகாப்பியம்” என்றும் தண்டியலங்காரம் தெளிவாக்குகிறது. தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும். [எழுதப்பட்ட காலம் 946-1070]

இவ்வகையில் நோக்கும்போது முஸ்லிம் புலவர்கள் எழுதிய ஒன்பது காப்பியங்கள் சிறுகாப்பியங்கள் என்ற காப்பியத் தகுதியைப் பெறுகின்றன.   காப்பிய இலக்கணங்கள்  பொருந்துமாறும் அவை அமைந்துள்ளன.  அவர்களின் 16 படைப்புகள் பெருங்காப்பியங்கள் என்ற தகுதியைப் பெறுகின்றன. இச்சாதனை இஸ்லாமியப் புலவர்கள் தமிழ் மொழிக்களித்த மகத்தான பங்களிப்புக்கு சிறந்த சான்றாகும். வண்ணக்களஞ்சியப் புலவர் எழுதிய “இராஜநாயகம்” பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

உமறுப் புலவரும் வண்ணக் களஞ்சியப் புலவரும் :

இவ்விரு புலவர்களின் தமிழாற்றலும், அற்புத கவிதை நடையும், மொழியாளுமையும்  நம்மை இவர்களின் காப்பியத்தின்பால் ஈர்க்கின்றன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதே சமயம் உண்மைக்கு புறம்பான அதீத கற்பனைகளில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை.  மார்க்கம் அல்லது வரலாற்றின் அடிப்படையில் வரும்போது அறிவுக்கு ஒவ்வாத பொய்யான கற்பனைகள் நம்மை முகஞ்சுளிக்க வைக்கின்றன.  இவ்விரு பெரும்புலவர்களின் கவிநடையில் நாம் நெகிழ்ந்து போகின்றோம் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் இழைத்திருக்கும் தவறுகளை என்னால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

சீறாப்புராணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சில வரலாற்று நிகழ்வுகள் அதீத கற்பனைகளைச் சேர்த்து உமறுப்புலவர் வழங்கியிருப்பதை நாம் காண்கிறோம். இதே பாணியை ஆங்காங்கே வண்ணக்களஞ்சியப் புலவரும் பின்பற்றியிருப்பதை நம்மால் காண முடிகிறது.

அண்ணலாரின் பிறப்பு படலத்திலிருந்து காப்பியம் நெடுகிலும் இதுபோன்ற கற்பனைச் செருகுகளை காண நேரிடுகின்றது. அண்ணலார் அவர்களை அன்னை ஆமினா அவர்கள் ஈன்றேடுத்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை உமறுப்புலவர் வருணிக்கின்றார்.

பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து

பரந்து செவ் வரிக்கொடி யோடி

மான்மருள் விழியா ராமினா விருந்த

வளமினைத் திசையினை நோக்கி

நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி

னாலுமூ லையுமொரு நெறியாய்த்

தூநறை கமழ வொளிதிகழ் தரவே

சுஜுதுசெய் தெழுந்தன வன்றே

(நபியவதாரப் படலம், பாடல் 105)

நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தபோது கஃபதுல்லாஹ்வின் நாலு மூலையும் அன்னை ஆமினா இருந்த வீட்டை நோக்கி ஒரு சேர சுஜுது செய்து எழுந்தனவாம். இதுபோன்ற ஒரு நிகழ்வு திருக்குர்ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ சொல்லப்பட்டிருக்கின்றனவா என்று ஆராய்ந்தால் நமக்கு வெறும் ஏமாற்றம்தான் மிஞ்சுகின்றது..

கஃபதுல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி அனைத்துலக மாந்தர்களும் சுஜுது செய்ய வேண்டியது கடமையாக போதிக்கப்பட்டிருக்க உமறுப்புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி கஃபதுல்லாஹ்வே சுஜுது செய்தது எனக் கற்பனை செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

அனைத்து ஆற்றலையும் கொண்ட அல்லாஹ்வை சிரம்தாழ்த்தி வணக்கம் செய்ய நிறுவப்பட்ட கஃபத்துல்லாஹ் அன்னை ஆமினா அவர்களின் வீட்டை நோக்கி சிரம்தாழ்த்தி வணக்கம் செய்தது என்ற கற்பனை நமக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது. இது புலவர்களுக்கே உரித்தான கற்பனை போலும் என்று சமாதானப்படுத்த மனம் நினைத்தாலும் மார்க்க ரீதியில் நோக்கும்போது இப்படி உண்மைக்கு மாறாக எழுதியிருக்கிறாரே என்று மனது வேதனை கொள்கிறது.

வண்ணக்களஞ்சியப் புலவரும் உமறுப்புலவரின் அதே பாணியை பின்பற்றி இருப்பதை நாம் காண முடிகின்றது. இராஜ நாயகம் காவியத்தில் உள்ள 20-ஆம் படலத்தில் கஃபா பற்றிய சில செய்திகள் கிடைக்கிறன. இதில் கஃபா பற்றிய பாடல் ஒன்று..

அத்தலத்திழிந்தங்கிருந்தனர் அதன் மேல்

அமரர்கள் கரத்தினால் இயற்ற

எத்தலத்தினிலும் வியனுற விளங்கி

இலங்கொளி கதிர்மதி இருபால்

நித்த நித்தமும் சாய்ந்தோட மேலவர்கள்

தவமெலாம் நிறைவுற உலக

மத்திமத்துதித்த ககுபத்துல்லா தன்

வாய் திறந்தழுதது அன்றே

இந்தப் பாடலில் கஃபா அழுததாகவும் சொல்லப்படுகிறது.  அதற்கு இறைவன்  அதனிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்க, அது சொல்லிற்றாம்

“… எனைச் சூழ் தரவுன்னக் கிணையாய்

இயற்றிய புத்துகளை வைத்து

ஆதிவித வணக்கம் புரிந்தனர் கொடியோர்

ஆகையால் அழுதனன் என்ன..”

(பாடல்- 20-05)

“தன்னைச் சுற்றிக் கொடியவர்கள் சிலைகளை (புத்துக்களை) வைத்து வழிபடுவதால் அழுதேன்”  என்றுரைத்ததாக புலவர் குறிப்பிடுகின்றார்.

இதன் பிறகு நபிகள் வந்து இவற்றை அகற்றி கஃபாவைத் தூய்மை செய்ததாகவும் அங்கே குறுபான் (உயிர்பலி) கொடுத்ததாகவும்  இராஜநாயகம் நூல் குறிப்பிடுகிறது.

 பொருந்தும் எப்பதிக்கும் முதற்திருப்பதியாம்

புனிதநன்னகரில் வந்ததன் பின்

அருந்தவமியற்றும் ககுபத்துல்லாவுட்

புகுந்து அதைச்சூழ்ந்து அணியாய்

இருந்த புத்தனைத்தும் ஏவலார் தமை விட்

எடுத்தெறிந்திடப் புரிந்து இறையைப்

பரிந்ததிலிருந்து வணங்கியுட் கனிந்து

பரவினர் கருணையங் கடலே

(பாடல்- 20-10)

தமிழ் இலக்கியத் திருமண மரபுகளுக்கும், இசுலாமிய மரபுகளுக்கும் நிறைய வேறுபாகள் உள்ளதை யாவரும் அறிவர். அப்படியிருக்க உமறுப்புலவரும், வண்ணக் களஞ்சியப்புலவரும், தமிழ் மரபை இக்காப்பியங்களில் காட்டும் எண்ணத்தில் உண்மைக்கு முற்றிலும் மாறான கருத்துக்களை பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாய் இருக்கிறது.

வண்ணக் களஞ்சியப் புலவரின்  காப்பியமொன்றில் பகுதாதில் நிகழ்ந்த ஒரு திருமண நிகழ்ச்சி தமிழ்நாட்டு விழாவாக சித்தரிக்கப்படுகிறது. Poetic Licence எனப்படும் புலவர்களுக்கே உரித்தான உரிமத்தை, கற்பனை என்ற பெயரில் அறிவுக்கு ஒவ்வாத காட்சிகளை புகுத்தியிருப்பதை நாம் காண முடிகின்றது.

சீறாப்புராணத்தில் வரும் இவ்வரிகளை சற்று பாருங்கள்.

பொருத்தமிது நலதினத்தின் முகுர்த்தமிது வருகவென்ப

பொருவிலாத குருத்தவள மணிமாலைக் குவலிது

பாற்குறித் தெழுந்தார் கொற்ற வேந்தர் அபூத்தாலிபு

இப்பாடல் சீறாப்புறாணத்தில்  மணம் பொருத்துப் படலத்தில் இடம் பெற்றுள்ளது. ,(பாடல் 56)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கதீஜா நாயகிக்கும் திருமணம் புரிவதற்காக, இருவருடைய குடும்பத்திலுள்ள பெரியோர்கள் கலந்து பேசிய காட்சி நமக்கு நகைப்பூட்டுகின்றது. குடும்பத்தார் இருவரும் ‘பொருத்தம்’, ‘நல்ல நாள்” முகூர்த்தம்’ முதலியவற்றைக் குறித்துக் கொண்டு மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்தார்களாம். கதீஜா நாயகியின் தந்தையாகிய குவைலிதிடம் அபூதாலிபு, “சீதனப் பொருட்களும் வெற்றிலை-பாக்கு வகையறாக்களும் தருக” எனக் கேட்டாராம். அதைக் கேட்ட குவைலிது, வெற்றிலை, பாக்கு, ஏலம், இலவங்கம், தக்கோலம், கற்பூரம், சந்தனம் ஆகியவற்றைப் பொன் தட்டில் எடுத்துக் கொடுக்க, அதனை அபூதாலிபு வாங்கி, லெப்பைகளுக்கும் மற்றவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தாராம். (மரைக்காயர், மாலுமியார், இராவுத்தர் – இவர்களை ஏன் விட்டார் என்று புரியவில்லை)

ஒரு பாடலில்அன்னை கதீஜா நாயகிக்கு நெற்றிக்குப் பொட்டும் இட்டு அழகு பார்க்கிறார் உமறுப் புலவர்.

மணமகனாகிய நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களின் மணஊர்வலக் காட்சி படம் பிடித்துக் காட்டுகையில் தண்ணுமை, முருகு, துந்துபி, சிறுபறை, சல்லரி, பதலை, திண்டிமம், பேரிகை, முரசு, மத்தளி முதலிய இசைக் கருவைகளெல்லாம் கடலொலியையும் விஞ்சி ஒலிக்க, நபியவர்கள் அதன் நடுவே பவனி வந்ததாகக் குறிப்பிடுகின்றார் உமறுப்புலவர். (மணம்புரி படலம், பாடல் 42).

கம்ப ராமாயணத்தில் இடம்பெறும் வருணனைகள், காட்சியமைப்புகள் உமறுப்புலவர், வண்ணக் களஞ்சியப் புலவர் இவர்களிருவரையும் வெகுவாகப் பாதித்திருப்பதை நாம் நன்றாகவே உணர முடிகின்றது.அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்த கதை நம் நினைவுக்கு வருகிறது.

இந்த வருணனையை பாருங்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீதிஉலா வருகையில் அவ்வூரிலுள்ள எழுவகை பெண்களாகிய பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகியோர் பெருமானாரின் அழகைப் பார்ப்பதற்காகத் திசைதோறும் நெருங்கிக் கூடினார்களாம் (பாடல் 51).

 “முஹம்மதின் வடிவை நோக்கித் தினந்தோறும் பூத்த தையலார் திரண்டு கூடி …”

என இதனைப் பாடுகிறார் உமறுப்புலவர் (பாடல் 60).

பெருமானாரைப் பார்த்த பெண்களின் மார்புப் புறங்களிலெல்லாம் பசலை படர்ந்ததாம். இந்தக் கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி பெருமானாரின் அழகைப் பருகிக் கொண்டிருக்கும்போது அவளுடைய மார்பில் பூசியிருந்த சந்தனம் பொரிந்து போயிற்றாம். அதற்கு என்ன காரணம் என்று அவள் இன்னொருத்தியிடம் இரகசியமாகக் கேட்டாளாம் (பாடல் 64):

 கோதறு கருணை வள்ளல் குலவுத்தோள் வனப்பைக் கண்ணால்

தீதற வாரியுண்ட செழுங்கொடி யொருத்தி செம்பொன்

பூதரக் கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்கொல்

காதினில் உரைமின் என்றோர் காரிகை தன்னைக் கேட்டாள்

மென்மார்புடன் பெண்கள் திரண்டிருந்த தோற்றமானது, வள்ளல் நபியின் பவனிக்காக அமைக்கப்பட்ட மாணிக்க விளக்குகள்போல் இருந்தனவாம் (பாடல் 72).

இங்ஙனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊர்வலமாக வந்து மணப் பந்தலை அடைகிறார்களாம். அப்போது அமுதமொழி பேசும் பெண்கள் இருபுறமும் நெருங்கி நின்று தீபங்கள் ஏந்த, எண்ணிலடங்காத பெண்கள் அயினிநீர் கொண்டு அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார்களாம். அவ்வேளையில் குறவை ஒலி ஓங்கி முழங்க மணமகனாம் நபியவர்கள் குதிரையிலிருந்து இறங்கியதாக உமறுப்புலவர் புளுகித் தள்ளுகிறார். 103).

சீறாப்புராணத்தை மட்டுமே படித்து நபிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிய  முனைகின்ற ஒருவர் இதனையும் உண்மைச் சம்பவமாகக் கருதிக் கொள்ள மாட்டாரா? இவ்வாறு நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையோடு நேரடியாக முரண்படுகின்ற கவிதை வரிகள் இந்நூலில் அனேகம் உள்ளன.

உதாரணத்திற்கு சென்னையில் நடந்த அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 7 ஆவது மாநாட்டில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நிகழ்த்திய உரை என் நினைவுக்கு வருகிறது. “சீறாப்புராணத்தில் மானுக்கு துணை நின்ற படலம் என்ற தலைப்பிலே ஒரு பகுதி வருகிறது. அதாவது, மானுக்குத் துணையாக இருந்த படலம் என்பதாகும். அது அருவிபோன்ற தமிழ் ஓட்டமும் ஆற்றுப் பெருக்குப் போன்ற வளமான சொற்களும் கொண்டன. அதிலே நபிகள் நாயகம் மான் ஒன்றை காப்பாற்றுவதற்காக அதற்கு பிணை கொடுத்து நின்றார் என்பதுதான் அப்பகுதி” என்று அந்த நிகழ்ச்சியை எடுத்துரைத்து நபிகள் நாயகம் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவதற்காக எங்ஙனம் செயல்பட்டார் என்பதை பெருமையாகச் சொன்னார்..

இப்படியாக கலைஞர்  கருணாநிதி முதற்கொண்டு சிலம்பொலி செல்லப்பன் உட்பட சகோதர சமயத்தைச் சார்ந்த அறிஞர்கள் உண்மைக்குப் புறம்பான சரித்திரத்தில் காணப்படாத  நிகழ்வுகளை சீறாவை முன்வைத்து தவறாக விளங்கிக் கொண்டார்கள் என்பது நமக்கு புரிகின்றது.

சீறாப் புராணத்தில் இடம்பெறும் அந்தக் காட்சியைப் பார்ப்போம்.

புலி துரத்தியதால் மான் கூட்டம் ஒன்று சிதறி ஓடியதில் ஆண் மானையும், அண்மையில் பிறந்த கன்றினை பிரிந்து வந்த பெண் மானையும் வேடன் ஒருவன் பிடித்து வைத்து தனக்கு நல்ல உணவாகும் எனக் கட்டிப் போட்டிருந்தானாம்.

அவ்வழியே வந்த நபிகள் நாயகத்திடம், “”என்னை விட்டால் ஓடிப்போய் என் குட்டிக்குப் பால் கொடுத்துத் திரும்பி வந்து விடுவேன்” என மான் வேண்டியதாம். நாயகமவர்கள் வேடனிடம் இதைக் கூறி அந்த மானை விடுவிக்குமாறு பரிந்துரைத்தார்களாம். “”ஓடிப் பிழைக்கும் மான் ஒருபோதும் திரும்பாது” என்றானாம் வேடன். “”மான் வராவிட்டால் ஒன்றுக்கு இரண்டாக நான் தருவேன்” என நாயகம் பிணை நின்றதும் வேடன் மானை விடுவித்தானாம். மான் வேகமாக ஓடிச்சென்று கன்றுக்குப் பால் கொடுத்து விட்டு வேடனிடம் திரும்பிச் செல்ல தயாரானபோது அதன் ஆண் மானும் மற்ற மான்களும் தடுத்தும் அது கேட்கவில்லையாம். தாய் மான் எவ்வளவோ சொல்லியும் கேளாது கன்றும், அதனுடனேயே வந்ததாம். மான் ஒன்றுக்கு இரண்டாக வருவதைக் கண்ட வேடன் மனந்திருந்தி, மானை சுதந்திரமாக விட்டதோடு இஸ்லாத்திலும் சேர்ந்தானாம்.

இந் நிகழ்ச்சியைக் கூறும் உமறுப் புலவர்,

மானைக் கொண்டுவரப் போய்
ஈமானைக் கொண்டு அகத்திற் புக்கான்

என்கிறார். “மான் – ஈமான்” என்ற இரண்டு வார்த்தைகளை வைத்து நடத்தும் சொல் விளையாட்டை மட்டுமே நம்மால் ரசிக்க முடிகின்றதே தவிர புலவருடைய அதீத கற்பனை நமக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

வரலாற்றின்படி இப்படியொரு நிகழ்வு நபிகளின் வாழ்வில் நடந்ததா என்று ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இது பச்சையான பொய் என்பது படிப்போர் எல்லோராலும் புரிந்துக் கொள்ள இயலும். கம்பராமாயணத்தில் இடம்பெற்ற புள்ளிமான்/ மாயமான் நிகழ்வைப்போன்று ஒன்றினை தானும் புனையவேண்டும் என்று உந்தப்பட்டு உமறுப்புலவர் தன் கற்பனையை இப்படி ஓட விட்டிருக்கலாம்

வண்ணக் களஞ்சியப் புலவரின்  கஃபத்துல்லா சுஜுது செய்வதாய் சொல்லப்பட்ட கற்பனை முதலானவை உமறுப்புலவரின் படைப்பின் தாக்கமே என்பது நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வண்ணக்களஞ்சியப் புலவரின் “ஈகையின் சிறப்பு” போன்ற இஸ்லாத்திற்கு மாறுபடாத கருத்துக்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

ஈகையின் சிறப்பு :

இஸ்லாத்தில் ஐம்பெருங் கடமைகளில் ஒன்று ஈகை. தர்மங்களில் தலையானது தானம் என்பர் சான்றோர். தனது பாடல்களுக்கிடையே இஸ்லாத்தின் கடமைகளே ஆங்காங்கே வலியுறுத்த வண்ணக் களஞ்சியப் புலவர் தயங்கவில்லை  ‘‘தரும லாபப் படல”த்தில் வரும் ஈகையின் சிறப்பை உணர்த்தும் பாடலை இப்போது பார்ப்போம். இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகிய ஈகையின் மேன்மையை விளக்கிடும் பாடலிது :

இயற்பெரும் பல மந்திரம் எவையை ஓதிடினும்
வியத்த நோன்பு நித்தமும் உறையினும் இதன்மேல் எச்
செயல் பொருந்து புண்ணியங்கள் செய்யினும் பசிதீர
நயத்தொ ஈய்வதோர் தருமத்தைப் போலுண்டோ லாபம்.

ஆனதத்துயிர் இடறையும் அகற்றி வாழ்வருளும்
வானகப் பெரும் பதவியும் தரும் எல்லாம் மாறித்
தானிறக்கினும் உடன்வரு சருவ சாதகமாய்
நானிலத்தினில் தருமத்தைப் போலுண்டோ லாபம்

கூட்டு மக்களும் மனைவியும் சுற்றமும் குறித்த
தேட்டு மற்றெவைகளும் உடலும் உடன் சேரா
தீட்டு நற்றுணை வருபொருள் எவையென எண்ணி
நாட்டும் தன்மம் செய்யாதது போலுண்டோ நட்டம்’

  • வேதவரிகள் வழக்கமாக எத்தனையோ ஓதினாலும், சிறப்பான நோன்பு நோற்ற போதிலும், அதனினும் மேலான நற்ககரியங்கள் செய்த போதிலும், மனமுவந்து ஒருவருக்கு பசிதீர ஈகையளித்திடும் செயலுக்கு ஈடுண்டோ?
  • ஒரு உயிரின் துன்பம் தீர்த்தால் அவருக்கு மேலுலகில் பெரும் பதவி கிடைக்கும். ஓருவர் செய்யும் தானம் அனைத்தும் மரணித்துப் போகையில் உடன் வருவது போல் நற்பயன் வேறு ஏதுமுண்டோ?
  • மனைவி, மக்கள், உறவினர் கூட்டம் தேடிவைத்த செல்வம் முதலியன  கூடவே வராது. ஈகை ஏதும் புரியாது சுயநலத்தோடு வாழும் வாழ்க்கைக்கு கிடைக்கும் கேடு போல நட்டம் வேறு எதுவும் உண்டோ?
  • ஆதாயத்துக்கான வருமானம் தேடல், இன்னும் பிற வகையிலான பொருளீட்டால் சம்பாத்தியம் அனைத்தும் உயிர் பிரியும் போது உடன் சேர்ந்து வரவே வராது, தருமம் செய்யாது சுயநலத்தோடு  தான், தனது குடும்பம் என வாழும் போக்கினால் கிடைக்கும் அழிவும், கேடும் போல் வேறு அழிவு உண்டோ?

ஒரு சித்தருக்குரிய சிந்தனையை வண்ணக் களஞ்சியப் புலவரின் இப்பாடலில் நாம் உணர முடிகிறது.  வீடு வரை உறவு, வீதி வரை மனை, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ? என்ற கண்ணதாசனின் வரிகளைக் செவியுறும் போது அவர் வண்ணக் களஞ்சியப் புலவரின் பாடலால் உந்தப் பட்டிருப்பாரோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றன.

இஸ்லாமிய கலைக்களஞ்சியம் தந்த பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் தனது “முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்”” என்ற நூலில் வண்ணக்களஞ்சியப் புலவரின் புலமையை மனம் திறந்து பாராட்டுகிறார். இராஜ நாயகத்தில் நல்லுபதேசங்கள் பலவற்றைக் காண முடிகின்றது.

யாரையும் நகையாடாதே, வீண்தர்க்கம் செய்யாதே, சினமுறாதே, இறையை அஞ்சு, அவனை தியானம் செய், நல்லோர் நட்பை நாடு, தீயோர் நட்பை தவிர், அன்பு செய், துன்பம் வருகையில் துணிந்திரு, நேரிய முறையில் இல்லறம் செய், நல்லறம் புரி – இதுபோன்ற மனிதனின் வாழ்வை மேம்படுத்தக்கூடிய நற்போதனைகளைன் வண்ணக்களஞ்சியப் புலவர் எழுதிய “இராஜ நாயகத்தில்’ பல்வேறு இடங்களில் நாம் காண முடிகிறது.

ஆனால், உமறுப்புலவரின்  சீறாப்புராணத்தில் இஸ்லாத்திற்கு முரணான பொய்யும் புனைவுகளுங்கூடிய செய்திகள் மலிந்து காணப் படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ்க் காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப் படலம், நகரப் படலம் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு, கற்பனை நயம்படப் புலவர் பாடிச் செல்கிறார் என இவற்றை ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களுடைய பதிவு செய்யப்பட்ட வரலாற்றைக் கூறும் ; மெய்யான வரலாற்றைப் பாடும்போதுகூட புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது..

– தொடரும்

 

 

கம்பன் அவன் காதலன் – பாகம் 10


இனிக்கும் இராஜ நாயகம் – பாகம் 2

வண்ணக் களஞ்சியப் புலவரின் “இராஜநாயகம்” என்ற காப்பியத்தை “இனிக்கும் இராஜ நாயகம்” என்ற பெயரில் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் அனுபவித்து ஆராய்ந்த ஆய்வுநூலை அலசுவதற்கு முன்பாக, வண்ணக் களஞ்சியப் புலவரின் தமிழ்ப்புலமையை சற்றே அறிந்து வைப்பது இப்பதிவின் புரிதலுக்கு கூடுதல் சுவைகூட்டுமென நினைக்கிறேன்.

தன் வாழ்நாளின் பெரும்பகுதியை “புலவர்கோட்டை” என்றழைக்கப்படும் நாகூரிலேயே கழித்தவர் வண்ணக் களஞ்சியப் புலவர். தமிழறிந்த கற்றோர்கள் சபையில், தன் புலமையை கொண்டாடும் தமிழார்வலர்களுக்கு மத்தியில், தன் புலமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் வாழ்வதைவிட ஒரு புலவனுக்கு வேறென்ன ஆனந்தம் இருக்க முடியும்?

இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் சுவாசிக்கும் ஊர் நாகூர். சங்கத்தமிழ் வார்த்தைகளை அன்றாட வழக்குமொழிகளில் சுவைக்கும் ஊர் அது. திரும்பும் இடங்களிலெல்லாம் இசையை காற்றில் பறக்கவிட்டு செவிகளுக்கு விருந்தூட்டும் ஊர் அது. மீசலில் பிறந்தபோதும் வாசம் செய்ய வசமான இடமென நாகூரை அவர் தேர்ந்தெடுத்ததன் காரணம் நமக்கு விளங்குகிறது.

எத்தனையோ இஸ்லாமியப் புலவர்கள் இருக்க உமறுப்புலவரையும், வண்ணக் களஞ்சியப் புலவரையும் மட்டும் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் போற்றிப் புகழ்வதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்?

அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வரலாறு சம்பந்தப்பட்ட காப்பியங்களை ஆராய்வதில் நீதிபதிக்கு பேரார்வம் இருந்தது. இரண்டாவது, இவ்விரு புலவர்களின் அபார தமிழாற்றலில் அவர் தன் மனதை பறிகொடுத்திருந்தார்.

வண்ணக்களஞ்சியப் புலவரின் பெருமையை நாம் பேசுகையில் அறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்று என் ஞாபகத்திற்கு வருகின்றது.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது வண்ணக்களஞ்சியப் புலவரின் பெயரையும் இணைத்து நினைவுத்தூண் அமைக்க இஸ்லாமியப் பெரியோர்கள் ஒன்றுகூடி சேர்ந்து எடுத்த முயற்சி பலனற்றுப் போனது.

1967-ல் அண்ணா அவர்களின் தலைமையில் திமுக ஆட்சி பீடம் ஏறியபிறகு, 1968-ஆம் ஆண்டு சென்னை மாநகரில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் புகழ்ப்பெற்ற தமிழ்ப் புலவர்கள் யாவருக்கும் சிலைகள் எழுப்ப முடிவானது.

கே.பி. செய்குத்தம்பி முதலான இஸ்லாமியப் பெரியோர்களெல்லாம் ஒன்று கூடி மேயர் ஹபீபுல்லா தலைமையில், வெளியூரில் இருந்த அறிஞர் அண்ணாவைச் சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தனர். இஸ்லாத்தில் சிலை வைக்க அனுமதி இல்லாததால் உமறுப்புலவர், புலவர் நாயகம், வண்ணக்களஞ்சியப் புலவர் போன்ற புலவர் பெருமக்களின் பெயர்களையும் அவர்களைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளைப் பொறித்து நினைவுத்தூண் ஒன்றை நிறுவலாம் என்ற ஆலோசனையை முன்வைத்தனர். அதற்கானச் செலவுகளை இஸ்லாமியச் சமுதாயமே ஏற்றுக் கொள்ளும் என்ற தீர்மானத்தையும் தந்தனர்.

இதனைச் செவிமடுத்த அறிஞர் அண்ணா அவர்களோ மனமுவந்து “சென்னைக்குச் சென்று நாவலர் நெடுஞ்செழியனிடம் பேசுங்கள். அவர் இதற்கான ஏற்பாட்டைச் செய்வார்” என்று அறிவுறுத்தினார். நாவலரைச் சந்தித்து, கோரிக்கையை முன்வைத்த போது, “இதை நான் அனுமதிக்கவே மாட்டேன். மெரினாவை சமாதி கட்டும் கல்லறையாக மாற்ற நான் ஒருக்காலும் உடன்பட மாட்டேன்!” என்று முகத்தில் அறைந்தார் போல் பதில் சொல்லி அனுப்பிவிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், அப்படிச் சொன்ன நாவலரே அதற்கடுத்த ஆண்டில் (அவர் தற்காலிக முதலமைச்சராக இருக்கும்போது) ஒரு சமாதியையும், மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே பகுதியில் மற்றொரு சமாதியையும் அமைக்க அவர் கையாலேயே உத்தரவு பிறப்பிக்கும் படியும் ஆயிற்று.

வண்ணக்களஞ்சியப் புலவருக்கு மற்ற பெரும் புலவர்களுக்கு கிடைத்த பேறினைப் போன்று உரிய அங்கீகாரத்தை தமிழ்க்கூறும் நல்லுலகம் அவருக்கு வழங்கவில்லை என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை.

மகத்தான ஆற்றல்கள் பல பெற்றிருந்த பேரரசரான சுலைமான் நபியைப் பற்றிய வண்ணக் களஞ்சியப் புலவர் எழுதிய “இராஜநாயகம்” என்ற வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் திறனாய்வு நூல்தான் நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்கள் எழுதிய “இனிக்கும் இராஜநாயகம்” என்ற நூல். இது ஓர் அருமையான ஆய்வுக்கோவை. ஆழ்ந்த சிந்தனையோடு அதில் காணும் இலக்கிய ரசனையை சிலாகித்து எழுதியிருப்பார். அதில் காணும் கற்பனை வளமும், கன்னித்தமிழ்ச் சுவையும், கவிநடையும் சிந்தையள்ளும் அற்புதம்.

நீதிபதி மு,மு.இஸ்மாயீல் அவர்கள் எழுதிய “இனிக்கும் இராஜ நாயகம்” நூலை ஏ.வி.எம்.ஜாபர்தீன் – நூர்ஜஹான் அறக்கட்டளை வாயிலாக பதிப்பித்து ஆவணப்படுத்திய பெருமை தொழிலதிபரும் தமிழார்வலருமான மதிபிற்குரிய ஏ.வி.எம்.ஜாபர்தீன் அவர்களைச் சாரும்.

AVM Jaffardeen

நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்கு நினைவு பரிசை வழங்குகிறார் ஏ.வி.எம்.ஜாபர்தீன். அருகில் நிற்பவர்கள் எழுத்தாளர் ஹசன், பேராசிரியர் சே.மு.மு.

இராஜநாயகம் காப்பியத்தில் எறும்புகளுக்கும் சுலைமான் நபிக்கும் உள்ள தொடர்பினை ஆராய்வோம் என கடந்த அத்தியாயத்தில் நான் கூறி இருந்தேன். இத்தருணத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் கனிவான வரிகள் நம் மனக்கண்முன் வந்து நிழலாடுகின்றன.

எறும்புகள் பேசுமா? ஆம் பேசும். எறும்புகளுக்கென்று மொழி ஏதேனும் உண்டா? ஆம் உண்டு. எறும்புகள் தங்களுக்குள் கருத்து பரிமாற்றம் செய்துக் கொள்கின்றனவா? ஆம் செய்கின்றன. இது ஒன்றும் வெறும் கற்பனை அல்ல, இன்றைய உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் வெளியாகியிருக்கும் உண்மை இது.

எறும்புகளே! எறும்புகளே!!

உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே1
பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே!

உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே!
உங்களோடு பேசவேண்டும்
சிறிதுநேரம் செவி சாய்ப்பீரா?

நின்று பேசி நேரம் கழிக்க
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை
எது கேட்பதாயினும்
எம்மோடு ஊர்ந்து வாரும்

ஒரு செண்டி மீட்டரில்
ஊற்றி வைத்த உலகமே!
அற்ப உயிரென்று
அவலப் பட்டதுண்டா?

பேதை மனிதரே!
மில்லிமீட்டர் அளவிலும்
எம்மினத்தில் உயிருண்டு
தன் எடைபோல ஐம்பது
மடங்கு எறும்பு சுமக்கும்
நீர் சுமப்பீரா?

உங்கள் பொழுது போக்கு?

வாழ்வே பொழுது போக்கு
தேடலே விளையாட்டு
ஊர்தலே ஓய்வு

ஆறுமுதல் பத்து வாரம்
ஆயுள் கொண்ட வாழ்வு
இதில் ஓய்வென்ன ஓய்வு
தலை சாய்வென்ன – சாய்வு

இந்த ஆயுளுக்கா
இத்தனை பாடு?

உம்மைப் போல் எமக்கு
ஒற்றை வயிறல்ல
இரட்டை வயிறு
நெரிக்க ஒன்று
சேமிக்க ஒன்று

செரிக்கும் வயிறு எமக்கு
சேமிக்கும் வயிறு
இன்னோர் எறும்புக்கு
இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு.

இனப் பெருமை பற்றிச்
சிறு குறிப்பு வரைக!

சிந்து சமவெளிக்கு முற்பட்டது
எங்கள் பொந்து நாகரிகம்

ராணிக்கென்று அந்தப்புரம்
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை
இறந்த எறும்பை அடக்கம் செய்ய
இடிபாடில்லாத இடுகாடு

மாரிகால சேமிப்புக் கிடங்கு
எல்லாம் அமைந்தது எங்கள்
ராஜாங்கம்

எங்கள் வாழ்க்கையின்
நீளமான நகல்கள்தான் நீங்கள்!

உங்களையே நீங்கள்
வியந்து கொள்வது எப்போது?

மயிலிறகால் அடித்தாலே
மாய்ந்துவிடும் எங்கள் ஜாதி
மதயானைக்குள் புகுந்து
மாய்த்துவிடும்போது.

நீங்கள் வெறுப்பது எது?
நேசிப்பது எது?

வெறுப்பது வாசல் தெளிக்கையிலே
வந்து விழும் கடல்களை
நேசிப்பது அரிசிமா
கோலமிடும் அண்ணபூரணிகளை

சேமிக்கும் தானியங்கள்
முளை கொண்டால் எது செய்வீர்?

கவரும்போதே தானியங்களுக்கு
கருத்தடை செய்து விடுகிறோம்
முளை களைந்த மணிகள்
முளைப்பதில்லை மனிதா!

உங்களால் மறக்க முடியாதது?

உங்கள் அகிம்சைப் போராட்ட
ஊர்வலத்தில் எங்கள் நான்காயிரம்
முன்னோர்கள் நசுங்கிச் செத்தது.

எதிர்வரும் எறும்புகளை
மூக்கோடு மூக்குரசும் காரணம்?

எங்கள் காலணி எறும்புதானா
வென மோப்பம் பிடிக்கும் முயற்சி
எம்மவர் என்றால் வழி விடுவோம்
அந்நியர் என்றால் தலையிடுவோம்

சிறிய மூர்த்திகளே
உங்கள் பெரிய கீர்த்தி எது?

அமேசான் காட்டு ராணுவ
எறும்புகள் யானை வழியில்
இறந்து கிடந்தால் முழு
யானையைத் தின்றே முன்னேறும்
மறவாதீர் எறும்புகளின்
வயிறுகள் யானைகளின்
கல்லறைகள்.

சாத்வீகம்தானே உங்கள்
வாழ்க்கை முறை?

இல்லை எங்களுக்குள்ளும்
வழிப்பறி உண்டு
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு

அபாயம் அறிவிக்க
சத்தம் எழுப்பி
சைகை செய்வதுண்டு

எறும்புகளின் சத்தமா?
இதுவரை கேட்டதில்லையே!

மனிதர்கள் செவிடாயிருந்தால்
எறும்புகள்
என்ன செய்யும்?

நன்றி எறும்பே நன்றி!

நாங்கள் சொல்ல வேண்டும்
நன்றி உமக்கு
ஏன்? எதற்கு?

“காணாத காமதேனுவைப் பற்றி..
இல்லாத ஆதிசேஷன் பற்றி..
பொய்யில் நனைந்த புராணம்
வளர்க்கும் நீங்கள்
இருக்கும் எங்களைப் பற்றி
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே
அதற்கு!”

என வினாக்கணைகளால் எறும்புகளைத் துருவும் கவிஞர் வைரமுத்துவின் கருத்தாழமுள்ள  கவிதைத்துளிகள் நம் ஆய்வுக்கு மெருகூட்டுகின்றது. எறும்புகளோடு உரையாட நேர்ந்தால், எப்படியெல்லாம் அவர்  கேள்விகளால் வேள்விகள் நிகழ்த்தி இருப்பார் என்ற கவிஞரின் கற்பனை ரசிக்கத்தக்கதாய் இருந்தது. இதனை வாசிக்கையில் நாமும் எறும்புகளின் வாழ்வுநெறியின் அதிசயங்களில் முழுவதுமாய் மூழ்கி மூச்சற்று போகிறோம்.

உண்மையிலேயே பிற உயிரினங்களோடு உரையாடக்கூடிய உன்னத சக்தியை உலகாளும் இறைவன் நமக்கு அளித்திருப்பானேயானால் நம் வாழ்க்கைமுறை எவ்வளவு சுவராஸ்யமாக இருந்திருக்கும்? நினைத்தாலே கற்கண்டாய் இனிக்கிறது. நெஞ்சம் குளிர்கிறது.

கவிஞர் வைரமுத்து வண்ணக்களஞ்சியப் புலவரின் காப்பியத்தை கற்றறிந்திருப்பாரோ? அல்லது நம் நீதிபதி அவர்களின் “இனிக்கும் இராஜநாயகம்” என்ற நூலை படித்திருப்பாரோ? அல்லது திருக்குர்ஆனிலும், பைபிளிலும் சொல்லப்படும் இச்சங்கதிகளை எங்காவது செவியுற்றிருப்பாரோ? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. பொதுஅறிவும், நூலறிவும் இல்லாதவன் நிச்சயமாக வாகைசூடும் கவிஞனாக ஆக முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. கவிஞர் வைரமுத்து அதற்கோர் நல்லுதாரணம்.

இன்று நம் கண்முன்னே நடக்கும் இன அழிப்புகளையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கல்மனது படைத்தவனாக மனிதன் இருந்திருப்பானா? அனைத்து ஜீவராசிகளையும் கருணைக் கண்கொண்டு பார்க்கும் ‘கல்பி’னனாக அல்லவா அவன் மாறியிருப்பான்.  சிற்றுயிர்களின் வேதனைகளையும், கஷ்டங்களையும் கூட புரிந்துக் கொள்ளும் பக்குவத்தை அடைந்துவிடும் அவன் எவ்வளவு இளகிய மனம் படைத்தவனாக உருமாறி இருப்பான்?  படுகொலை பாதகங்கள் கடுகளவேனும் நடக்குமா என்ன? இந்த புவனமே சுவனமாக அல்லவா மாறியிருக்கும்?

எல்லாம் வல்ல ஆற்றல் மிக்க இறைவன் அந்த பாக்கியத்தை அவனது உயரிய படைப்பான மனிதனுக்கு ஈந்து அருள்பாலித்திருக்க முடியும். ஏன் இச்சிற்றுயிர்களின் மொழிகளை இறைவன் ஆறறிவு படைத்த மனிதர்களான நமக்கு கற்றுத் தரவில்லை? அது அவன் மட்டுமே அறிந்த இரகசியம்..

அப்படிப்பட்ட ஓர் அற்புத ஆற்றலை இறைவன் சுலைமான் நபி (King Solomon) அவர்களுக்களித்து அருள் புரிந்திருக்கின்றான். ஆம். ஊர்வன, பறப்பன இவைகளின் பரிபாஷைகளை புரிந்துக் கொள்ளும் அபூர்வசக்தி அவர்களுக்கு இருந்தது. அதுமட்டுமன்றி காற்றையும், ஜின்களையும் அவர்களுக்கு இறைவன் வசப்படுத்திக் கொடுத்திருந்தான்.

“பின்னர், சுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும். (அல்குர்ஆன்: 27:16)

இதோ மீண்டும் எறும்புகள் கதை கூறும் “இராஜநாயகம்” காப்பியத்திற்கு வருவோம். திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் இந்த வாசகத்தை கூர்ந்து கவனியுங்கள்.

 இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)” என்று கூறிற்று. ( குர்ஆன் 27:18)

அப்போது அதன் சொல்லைக் கேட்டு, சுலைமான் நபி  அவர்கள் புன்னகைத்து புரிந்தார்கள்.  மேலும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

எறும்புகள் ஒன்றொடொன்று பேசிக்கொள்கின்றன. தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்கின்றன. உண்மையில் இதுவெல்லாம் சாத்தியமா என்றெல்லாம் ஐயம் நமக்குள் எழலாம்.

எறும்புகளின் வாழ்க்கைமுறையை ஆராய்ச்சி செய்வதற்குப் பெயர் எறும்பியல் (Myrmecology) என்பது. ஆகஸ்டே ஃபோரெல், வில்லியம் மார்ட்டன் வீலர், ஈ.ஓ.வில்சன் போன்ற எறும்பியல் நிபுணர்கள் அதிசயத்தக்க ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளனர். “One of the most unusual things about ants is their ability to communicate. Signaling each other with distinctive hormones”  என்று அவர் கூறுகிறார்.

சுலைமான் நபி (அலை) அவர்களுடைய படைகள் தங்களை மிதித்து விடக்கூடும் என்று எறும்புகள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டதாகக் கூறும் குர்ஆன் வசனங்களை பார்த்து, ‘எறும்புகள் எவ்வாறு பேசிக்கொள்ளும்?’ என கேலி செய்தவர்கள் தங்கள் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்படும் அளவுக்கு எறும்புகளின் குணாதிசயங்கள் மனித சமுதாயத்தின் குணாதிசயங்களோடு ஒத்திருக்கின்றன. இதனை இன்றைய ஆராய்ச்சிகளும் உறுதிபடுத்தி இருக்கின்றன.

சுலைமான் நபியும் அவரது படையினரும் வருவதை எறும்புகள் அறிந்து கொண்டன. பெரிய படைகள் படைகளுக்கே உரிய அதிர்வுகளை எழுப்பித்தான் நடைபோடுவார்கள். அவர்களுடன் உள்ள யானை மற்றும் குதிரைப்படைகளாலும் நிலத்தில் மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படும். இப்படி நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வுகளையும் அந்த அதிர்வுகள் எந்தத் திசை நோக்கி நகர்கின்றது என்பதையும் மிக விரைவாக அறிந்து கொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு என்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு எறும்புகளுக்கு இது சாத்தியம் என்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கின்றது.

தித்திக்கும் திருமறையில் 27-வது அத்தியாயமாக ‘சூரத்துந் நம்லி’  [எறும்புகள்] எனும் ஓர் அத்தியாயத்தையே இறைவன் உருவாக்கியுள்ளான்.

பூமியில் இருக்கும் அத்தனை படைப்புகளும் நம்மை போன்ற சமூகமாக வாழ்வதாக திருமறை சொல்கிறது. திருக்குர்ஆனில் எறும்புகளின் வாழ்க்கைமுறை அழகான ரீதியில் சித்தரிக்கப்படுகிறது. பறவைகளும் விலங்கினங்களும் மனிதர்களைப் போன்ற சமுதாயங்களே என்று தெளிவாக்கப்படுள்ளது.

அதைத்தான் இன்றய நவீன விஞ்ஞானமும் பறைசாற்றுகின்றது. மனித சமுதாயத்தைப் போலவே எறும்புகளுக்கும் மன்னர், அமைச்சர், இராணுவ வீரர்கள், பணியாட்கள், அடிமைகள் இருப்பதாக அந்த ஆய்வுகள் தெளிவு படுத்துகின்றன. அவைகள் தங்களுக்குள் உணவு பண்டங்களை பண்டமாற்றம் செய்வதற்கென சந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

எறும்புகள் மிகுந்த அறிவும் சிறந்த பண்பும் அதிசயிக்கத்தக்க குணாதிசயமும் கொண்டவை. அதன் ஆற்றல் ஒவ்வொன்றையும் படிக்கும்போது ஆச்சரியத்தில் நாம் மூழ்கிப் போகிறோம். உதாரணமாக, பூமியதிர்ச்சி ஏற்படப் போவதை எறும்புகள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் இயல்புடைய உயிரினம் என ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக உயிர் அறிவியல் துறை ஆய்வாளர் கேப்ரியல் பார்பெரிக் தலைமையிலான குழுவொன்று நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலைக்கு திரும்பி விடுகின்றன. பூகம்ப நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக, எறும்புகள் வெளியேறுகின்றனநிரூபித்துள்ளது.

எறும்புகள், புவி வெப்பமயமாதலை தடுத்து, புவியை குளிர வைப்பதாக அமெரிக்காவில் அரிசோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எறும்புகள், மண்ணில் உள்ள கால்சியம், மக்னீசியம் சார்ந்த மணற்சத்துகளை சிதைக்கின்றன. இதனால், காற்றில் கலந்துள்ள கார்பன் டைஆக்சைடு படிப்படியாக குறைகிறது. இதன்மூலம், புவி வெப்பமயமாதல் குறைந்து, புவி குளிரும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Ants can carry

எறும்புகள் தங்களின் உடல் எடையைவிட ஏழு மடங்கு அதிக எடையை தூக்கவல்லது. இரையைச் சுமக்கும் போதும் இதே முறையைத்தான் எறும்புகள் கையாளுகின்றன. இதுதொடர்பாக, ஆய்வாளர்கள் கூறுகையில், எறும்பு களின் கழுத்து இணைப்பின் மூலம் மிக எளிதாக தனது சுமைகளை கோணம் மாற்றி வைத்துக் கொண்டு எளிதாக பயணம் செய்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.

தாவூத் நபிவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது தனது மகன் சுலைமான் நபியவர்களை அழைத்து நற்போதனைகள் வழங்குகிறார்கள். தேனினும் இனிய தீந்தமிழ்ப் பாக்களில் இந்த அறிவுரைகளை அருந்தமிழில் அமுதவாக்காய் அள்ளிப் பருகிட தருகிறார் வண்ணக்களஞ்சியப் புலவர்.

“பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டுவிடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும்” (அல்குர்ஆன்: 6:38).

1400 ஆண்டுகட்கு முன்னரே அறிவியல் அறிந்திராத விடயங்கள அலசி ஆராயும் திருக்குர்ஆன் மனிதனால் இயற்றப்பட்டதல்ல. அது இறைவனின் வேதம் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேறென்ன வேண்டும்?

இராஜ நாயகம் நூலில் இடம்பெற்றிருக்கும் கவிச்சுவையை நாம் அடுத்த பதிவில் (இனிக்கும் இராஜ நாயகம் -பாகம் 3)-ல் அலசுவோம்.

– தொடரும்

கம்பன் அவன் காதலன் – 9-ஆம் பாகம் 

கம்பன் அவன் காதலன் – 8-ஆம் பாகம்

 கம்பன் அவன் காதலன் – 7-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 6-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 5-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 4-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 3-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 2-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 1-ஆம் பாகம்

எழுதிய நூல்கள்

வாழ்க்கைக் குறிப்பு

பிறர் பார்வையில்

ஜெயமோகன் பார்வையில் 

தந்தை பெரியாரைப் பற்றி

கவிஞர் வாலியின் பார்வையில்

இராம வீரப்பன் பார்வையில்

டாக்டர் சுதா சேஷய்யன் பார்வையில்

ப.சிதம்பரம் பார்வையில்

அரிய புகைப்படங்கள்

 

Tags: , ,

நீதிபதி இஸ்மாயீல் – அரிய புகைப்படங்கள்


image

நீதிபதிக்கு நினைவுப்பரிசு வழங்குபவர் ஏ.வி.எம்.ஜாபர்தீன்

இஸ்மாயில் நீதிபதி

 

 

Tags: ,

நீதிபதி மு.மு.இஸ்மாயீலும் புரட்சித் தலைவரும் ஒரு திருமண விழாவில்


நன்றி: திருச்சி செய்யத்

நீதிபதி இஸ்மாயீல் 2

புரட்சித்தலைவர் , நீதிபதி மு.மு.இஸ்மாயீல் , கீழக்கரை யாசீன் காக்கா வீட்டுத் திருமண விழாவில்

 

 

இஸ்மாயீல் 2

கல்வித்தந்தை பி.எஸ்.ஏ.ரஹ்மான், புரட்சித்தலைவர், நீதிபதி மு,மு.இஸ்மாயீல்