ஒருவர் இறந்து விட்டால் அவர் “மரணித்து விட்டார்” அல்லது “மறைந்து விட்டார்” என்று கூறுவதுண்டு. சிலவேளை “காலமானார்” என்றும் கூறுவதுண்டு. அதன் பொருள் காலத்தால் எளிதில் அழிக்க முடியாத இடத்தை அவர் அடைந்து விட்டார் என்பதாகும். சாதனை படைத்த சிலரை “அவர் வரலாற்றில் இடம் பிடித்து விட்டார்” என்று கூறுவதுண்டு.
2005-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி நீதிபதி இஸ்மாயில் அவர்கள் காலமானபோது அவர் நினைவைப் போற்றும் வகையில், பழ.பழனியப்பன் 19.1.2005 அன்று ‘தினமணி’ நாளிதழில் ஒரு கட்டுரை வரைந்தார். அதன் தலைப்பு “இலக்கியமான நீதிபதி” என்பதாகும்.
ஒருவரின் இறப்பு “வரலாறு” ஆக முடியும். அது எப்படி “இலக்கியம்” ஆக முடியும்? நம்மை சிந்திக்க வைக்கின்ற கேள்வி இது.
நீதிபதி இஸ்மாயீல் அவர்களைப் பொறுத்தவரை “அவர் இலக்கியமானார்” என்ற கூற்று சாலப்பொருத்தம். தமிழிலக்கியம் பேசும் சான்றோர்களின் தண்டமிழ் பேச்சிலெல்லாம், எக்காலமும், எங்காகிலும் இவர் பெயர் என்றென்றும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.
சென்னையில் 1974-ஆம் ஆண்டு இவரது பெருமுயற்சியால் கம்பன் கழகம் நிறுவப்பட்டது. அதன் தலைவராக இஸ்மாயில் நியமிக்கப்பட்டபோது “The Right Person in the right Place” என்று ஆங்கிலப் பத்திரிக்கையொன்று இவரைப் புகழ்ந்து தள்ளியது. தொடர்ந்து 28 ஆண்டுகள் கம்பன் கழகத்தின் தலைவராக பணிபுரிந்து சாதனை நிகழ்த்தியவர் இவர்.
1923-ஆம் ஆரம்பத்தில் திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் மூத்ததா அல்லது அதற்கு முன்னரே பிற ஊர்களில் கம்பன் கழகங்கள் நிறுவப்பட்டதா என்பது சரியாகத் தெரியவில்லை.
காரைக்குடி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சென்னை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, ராஜபாளையம், தேரெழுந்தூர், வேலூர், கோயம்புத்தூர், ராசிபுரம், சேலம், விழுப்புரம், புதுச்சேரி போன்ற பற்பல ஊர்களில் தற்போது கம்பன் கழகம் விழாக்களை கோலாகலமாக நடத்தி வருகின்றன.
இதுதவிர இலங்கை, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற அயல் நாடுகளிலும் கம்பன் கழகம் காலூன்றி வெற்றிநடை போட்டு வருகின்றது.
கம்பன் கழகம் புதிதாக ஓரிடத்தில் ஆரம்பிக்கப் பெற்றால் அவ்விடத்திற்குக் காரைக்குடிக் கம்பன் கழகத்திலிருந்து தாய்ச் சீர்வரிசை அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனராம். ஆஹா! என்னே ஓர் அற்புதமான தமிழர் பண்பாடு!
கம்பன் கழகமானது, தமிழறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கருத்துக்களைப் பகிரும் அற்புதக் களமாகத் திகழ்கிறது. தாய்மொழியாம் தனித்தமிழின் சிறப்பை தரணியெங்கும் பரவும் வண்ணம் தன்னிகரில்லா தமிழ்த்தொண்டு புரிந்து வருகிறது.
கம்பனை காதலித்த கன்னித்தமிழ் வேந்தர்கள்
கம்பனின் காதலானாக ஒரு சுகி சிவமோ அல்லது சிவக்குமாரோ இலக்கிய உலகில் பவனி வருவதில் ஆச்சரியம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? மதப்பற்றுமிக்க இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த முஸ்லிம் ஒருவர் இந்து மதத்தின் காப்பியம் ஒன்றினை கசடறக் கற்று, புலமை பெற்று, அக்காப்பியத்தின் மேன்மையை பட்டி தொட்டிகள் எங்கும் பறை சாற்றியதில்தான் வியப்பு மேலிடுகின்றது.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை
என்று பாடிய பாட்டுக்கோர் புலவன் பாரதி – பைந்தமிழ்ச் சாரதி – கம்பனின் பெயரை ஏன் முதல் ஸ்தானத்தில் குறிப்பிட்டான் என்று எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. வள்ளுவர் பெருந்தகையை விட உயர்ந்த புலவனாக கம்பனைக் கருதினானா அல்லது வெறும் எதுகை மோனைக்காக கம்பனை முதலிடத்தில் வைத்தானா என்பது கவிராஜனுக்கே வெளிச்சம்.
கம்பனைக் காதலித்தவர்கள் அந்த பாட்டுடைத்தலைவன் பதமறிந்தே கவிச்சக்கரவர்த்தியை முதல் வரிசையில் வைத்துப் போற்றிப் புகழ்ந்தான் என்று வாதிடுகிறார்கள்.
கம்பனின் காவியத்தில் உண்மை இருந்ததா என்பது வேண்டுமானால் விவாதத்திற்குரிய கருப்பொருளாக இருக்கலாம். ஆனால் அதில் பைந்தமிழ்ச் சுவை இருந்தது என்பதை “கம்பரசம்” எழுதிய அறிஞர் அண்ணாவால் கூட மறுக்க முடியாது.
கம்பன் கழகம் பரவலாகத் தோன்றுவதற்கு மறைமுக காரணமாக இருந்தவர்கள் கம்பராமாயண எதிர்ப்பாளர்கள்தான் என்பது வரலாறு கண்ட உண்மை. ஒரு விஷயத்தின் மீது எப்பொழுது எதிர்ப்பு அதிகமாகிறதோ அப்போது அதன் மவுசும் கூடுவது கண்கூடு. கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்கள் கொளுத்திவிட்டால் அப்புறம் படிக்க முடியாதே என்று அவசர அவரமாக கற்று அதன் கவிநடையில் காதல் கொண்டவர்கள் பலர்.
“கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம், கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிசம் யோசிச்ச கண்ணதாசன், சரி அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை எரிக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!”
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய இப்பேச்சு நம் கருத்துக்கு வலிமை சேர்க்கிறது.
‘கம்பனைப் போற்றுவதென்பது கன்னித்தமிழைப்போற்றுவதாகும்’ என்று நீதியரசர் இஸ்மாயீல் அடிக்கடிச் சொல்வதுண்டு. பண்டிதர்கள் மத்தியில் இருந்த கம்பனின் காவியத்தை பாமரர்கள் மத்தியில் கொண்டுச் சென்ற பெருமை பெருமளவு நீதிபதி இஸ்மாயீல் அவர்களைச் சாரும்.
“கம்பராமாயணம் பற்றியே பேசுகிறீர்களே என்று என்னை குறைபட்டுக் கொள்பவர்கள் நிறைய பேருண்டு என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களை நான் கேட்டுக் கொள்வது இதுதான். நீங்கள் அதனை படித்திருக்கிறீர்களா? அதில் தமிழ் இருக்கிறது.. இலக்கியம் இருக்கிறது. அதை படித்து பாருங்கள்..” என்று நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் நற்றமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு நயம்பட வேண்டுகோள் விடுக்கிறார்.
கம்ப ராமாயணத்தின்பால் மிகுந்த வேட்கை கொண்டு அதில் பல்பெருகிக்கிடக்கும் இலக்கியச்சுவைகளூக்குள் மூழ்கிக் கிடந்தவர் அவர் என்றால் மிகையாகாது.
இலக்கிய உலகில் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் சிலர் தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வர். மேடைகளிலும் ஊடகங்களிலும் புகழ்பெற்ற இலக்கியக்கர்த்தாக்களாக பவனி வருபவர்களை நாம் பார்க்கிறோம். உதாரணமாக பட்டிமன்ற நாயகர்களாக பவனிவரும் திண்டுக்கல் ஐ. லியோனியையோ, சாலமன் பாப்பையாவையோ, பேராசிரியர் திருஞானசம்பந்தத்தையோ, அல்லது நெல்லை கண்ணனையோ எடுத்துக் கொள்வோம். இதற்கு முன்பும் எத்தனையோ சான்றோர்கள் பிரபலமாக வலம் வந்தார்கள். ஒரு பத்து வருடங்களோ அல்லது அதிகபட்சமாக இருபது வருடங்களோ புகழின் உச்சாணிக் கொம்பில் இருப்பார்கள். பிறகு இவர்களையும் மிஞ்சும் அளவுக்கு வேறு நபர்கள் வெளிச்சத்துக்கு வர இவர்களின் மவுசு குறையத் தொடங்கும். இது நடைமுறை வாழ்க்கையில் நாம் காண்பது.
கிட்டத்தட்ட 50 வருட காலங்களுக்கு மேலாக கம்பராமாயணத்திற்கு உரிமம் வழங்கும் அதிகாரியாக, கம்பனுக்காக வாதாடும் வழக்கறிஞராக, அவனது காவியத்திற்கு நிபுணராக, அக்காப்பியத்தின் கலைக்களஞ்சியமாக, நடமாடும் அகராதியாக, அருஞ்சொற்பொருள் வல்லுனராக, அந்நூலுக்கு சந்தேகம் தீர்க்கும் விற்பன்னராகத் திகழ்ந்தவர் நம்மவர் நீதிபதி இஸ்மாயீல் அவர்கள்.
இந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே இவருக்கு அளிக்கப்பட்ட “இலக்கியமான நீதிபதி” என்ற அடைமொழியில் வேறு யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.
“இலக்கணமான நீதிபதி” என்று பழ.பழநியப்பன் குறிப்பிடவில்லை. ஏன் என்று கவனித்தீர்களா? இலக்கணம் மாறலாம். இலக்கியம் மாறுவதில்லை. நீதியரசர் ஓர் அமர இலக்கியம். ஓர் இலக்கியத்திற்கே இலக்கணமாகத் திகழ்ந்தவர் அவர்.
காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கலந்து கொண்டுள்ளார் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள். அரையுக காலம் ஒருத்தர் ஒரு குறிப்பிட்டத் துறையில், அவரை ஓரங்கட்ட முடியாத அளவுக்கு, முதன்மை நிலையில் இருந்து முத்திரை பதித்தார் என்றால், அவருக்கு இலக்கியத்தில் எந்த அளவுக்கு ஆளுமை சக்தி இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கம்பனின் கவித்திறமையை தமிழ்க்கூறும் நல்லுலகில் தம்பட்டம் அடித்தவர்களின் பெயர்களை எழுத்தில் வடிக்க முனைந்தால் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.
கம்பன் அடிப்பொடி சா.கணேசன், நீதிபதி இஸ்மாயீல் முதற்கொண்டு அ.ச.ஞானசம்பந்தன், நீதிபதி எஸ்.மகராசன், தொ.மு.சி.ரகுநாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், வெ.சாமிநாத சர்மா, திருச்சி ராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, அறிவொளி, தெ.ஞானசுந்தரம், கா. நயினார் முகமது, புலவர் அருணகிரி, தனிநாயக அடிகள், சே.ச., ராமலிங்கம், வையாபுரிப் பிள்ளை, எஸ்.ஆர்.கே, ரா.பி.சேதுப்பிள்ளை, ரசிகமணி டி.கே.சி, ரா.இராகவையங்கார், விஞ்ஞானி கே.எஸ். கிருஷ்ணன், பெ.நா.அப்புஸ்வாமி, பி.ஸ்ரீ.ஆச்சார்யா, தோழர் ஜீவா, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், க.கு.கோதண்டராமக் கவுண்டர், ஏ.சி.பால்நாடார், எஸ். இராமகிருஷ்ணன், கி.வா.ஜகன்னாதன், ஆல்பர்ட் பிராங்க்ளின், மு.வரதராசனார், அ.சீனிவாசராகவன், மு.இராகவ அய்யங்கார், கவிஞர் கண்ணதாசன், ஏ.என்.சிவராமன், கிருபானந்த வாரியார், கம்பராசன், சி.எம்.அழகர்சாமி, பழ.பழனியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெகவீரபாண்டியன், வே.மி.சம்மனசு, வ.சுப.மா., வள்ளல் அழகப்பர், எஸ். வையாபுரிப்பிள்ளை, இரா.சொ., அ.சீ.இரா., கவிஞர் வாலி, சுதா சேஷய்யன், என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வுச் செய்து முனைவர் பட்டம் பெற்ற என் நண்பன் நாகூர் ரூமியையும் இப்பட்டியலில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். (இன்னும் வரும்)