RSS

Category Archives: பாராட்டுக்கள்

யூசுப் ரஹ்மத்துல்லா சேட்


ஒப்பில்லா ஓர் இறையின் திருப்பெயரால் …அன்பிற்கினியீர்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..  நெஞ்சம் நிறைந்த நல்லாசிகள்.

தாங்கள் எழுதிய கவிதை நூல்கள் இரண்டும் படித்து மகிழ்ந்தேன். உங்கள் புலமையான வரிகள் எனக்கு வியப்பையோ ஆச்சரியத்தையோ சற்றும் அளித்திடவில்லை.

இது புலவர் கோட்டை. நாகூரின் அற்புதம். பெரும் புலவர் வா.குலாம் காதிர் நாவலனாரும் அவரின் சமகால பெரும் புலவர்களும், குறிப்பாக மு.மு.யு.முகம்மது நெய்னா மரைக்காயரும், நாகூர் மண்ணில் படைத்துச் சென்றிருக்கும் தமிழ்ப் புலமையும், கவிதைகளும் புதையலாக இப்பூமியில் தோண்டத் தோண்ட வந்துக் கொண்டே இருக்கும்.

தங்களின் “அந்த நாள் ஞாபகம்” கவிதை நூலில் :

“ஒற்றையிலே போகாத
மாதர் பிராட்டி
உடற்மறைக்க அணிகின்ற
வெண் துப்பட்டி

உற்றவரின் துணையோடு
வெளியே செல்லும்
உயர்ந்த கலாச்சாரத்தின்
உறைவிட மன்றோ..?”  – என்று கூறியுள்ளதும்,

“கற்றவரும் பின்பற்றும்
கோஷா ஒழுக்கம்” –  என்று குறிப்பிட்டிருப்பதும்,
பாட்டுக்கும், புகழுக்கும் தங்களின் இஸ்லாமிய ஞானத்திற்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

அந்த நாள் நாகூர் கால சூழ்நிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள். இத்தாலியரின் ஆட்டுக்கால் சூப்பையும், சில்லடி பக்கீரின் ஆட்டிறைச்சி “சாப்ஸ்”ஸின் ருசியையும், பாஜிலால் சாஹிபின் ஆஷுரா பஞ்சா கேளிக்கையையும் எழுதி இருக்கலாம்.

இந்த கவிதை நூலை நீங்கள் இன்னும் சிறப்பாக நம் மக்களுக்கு நீங்கள் வழங்க வேண்டுமென்பது எனது ஆசை. இந்த நூலின் மறுபதிப்பில் நான் எழுதி இருப்பவைகளையும், விடுதலை இயக்கப் போராட்ட மாவீரர் தியாகி M.E.நவாப் சாஹிப் மரைக்காயர் அவர்களின் தியாகத்தையும், தனது வாழ்நாள் முழுதும் நகராட்சி உறுப்பினராக இருந்து மக்கள் பணி புரிந்த மா.சூரிய மூர்த்தி செட்டியாரையும், பிரான்ஸ் காலனி காரைக்காலிலிருந்து ஜப்பான் சில்க்குகள் கடத்தப்பட்டு 5000 பியூஜி சில்க்குகளும் 8 அணாவும், கிரேப் சில்க் பூட்டா சேலை ரூபாய் 4.50 க்கும் விற்பனைச் செய்யப்பட்டதையும் சேர்த்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் மேலும் பல்லாண்டு, பல்லாண்டு வாழவும், பல கவிதை நூல்கள் படைத்து வெளியிடவும் எல்லா வல்ல இறைவனிடம் பிரார்த்தனைச் செய்கிறேன்.

‘ஜெய்ஹிந்த்’

இவண்

தங்கள் வளம் நாடும்

மு.யூசுப் ரஹ்மத்துல்லா சேட்
(சமூக நல ஊழியன்)

12/6, சுப்பு செட்டி தெரு
நாகூர் – 611002

(நாகூரின் மூத்த குடிமகன்களில் ஒருவரான ஜனாப் M. யூசுப் ரஹ்மத்துல்லா சேட் பழம்பெரும் காங்கிரஸ்வாதி என்பது குறிப்பிட்டத்தக்கது. அவரது தேசிய உணர்வு கடிதத்தை முடித்திருக்கும் விதத்தில் நன்கு புலப்படுகிறது. இதனை அவர்கள் மறைவதற்கு சிலநாட்கள் முன்பு எழுதியது.)

 

அந்த நாள் ஞாபகம் – ஒரு கண்ணோட்டம்


babu-chicha2.jpg

“அந்த நாள் ஞாபகம்” – இது நாகூரை பற்றி, நாகூர் மக்களுக்காக, நாகூரான் ஒருவனால் நெய்யப்பட்ட பட்டாடை.  இதிலுள்ளவை நாகூரில் வாழ்ந்த, வாழும் அனைவருக்கும் தெரியும். ஆனால் உன் வண்டல் மண் மனது தான் நாகூரின் வரலாற்று விதைகளை விருட்சம் ஆக்கியிருக்கிறது.  

நீ சொல்லிய அனைத்தும், நீ சொல்ல மறந்த தூய தமிழ்ச்சொல்லாம் “மறுசோறு”, சுவையான தாளுச்சா, எங்கும் காணமுடியாத “சீனிதுவையல்” , அதுவும் வாழைப்பழமும், புலவு சோறும் சேர்ந்து சஹானில் உருவாகும் “பஞ்சாமிர்தக்குளம்”, அதை நால்வர் பங்கு போட்டுக் கொள்ளும் பாங்கு, அரை அடி விட்டமுள்ள “ஜாங்கிரி”, ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் ஆஸாத், யூசுப் – பட்டரைகள்.  யாசகம் கேட்டுக் வருபவர்களிடம் கூட மாஃப் செய்யுங்கள் (மன்னியுங்கள்) என்று மரியாதை செய்யும் பண்பு அத்தனையும் ‘பிளாஷ்பேக்” ஆக “ஞாபகம் வருதே”.

உன் எழுத்தில் அழகும் உண்டு. “வெள்ளியிலே தகடு செய்து ஏய்ப்போர்” என்று கூறும் தைரியமும் உண்டு.

நாகூர் மண்ணை சுவைத்து பின் அசைபோட்டு ரசிக்கும் நீதான் நாகூரின் மண்ணின் மைந்தன். நீ மலராகி மணம் வீசும் போது மற்றவர்கள் ரசிக்கிறார்கள். நீ கிரெசன்ட் பள்ளியில் மொட்டாக இருக்கும்போதே  நான் ரசித்தேன். நீ முளையிலேயே தெரியும் விளையும் பயிர்.

உன்னை கவிஞர்கள், நண்பர்கள்,  நீ அடையாளம் காட்டிய அனைவரும் பாராட்டுகிறார்கள்  ஆனால் உன் ஒவ்வோர் அசைவிலும் ஆனந்தம் கண்ட உன் பாட்டி – என் தாயார் – உன்னைப் பார்த்து மகிழ, பாராட்ட இல்லாதது உன் துரதிஷ்டமே …! 

என்ன..  உன் கண்ணீர் கன்னத்தில் உருண்டோடி வாய்க்குள் விழுந்து இனிக்கிறதா ..? அது பாசத்தின் கண்ணீர். இனிக்கத்தான் செய்யும். எனக்கும் அது இனிக்கிறது..

டாக்டர் அ.அப்துல் ரஜாக்

பெருந்துறை – 17.07.2007

 

சமரசம் பத்திரிக்கை மதிப்புரை


samarasam.gif  இங்கே கிளிக்

சமரசம் பத்திரிக்கையின் மதிப்புரை
இதழ் : சமரசம் 1 – 15 ஆகஸ்ட் 2007
மதிப்புரை வழங்கியது : தாழை எஸ்.எம்.அலீ
 
நாகூர் என்றவுடன் தர்காவே நினைவுக்கு வரும். அங்குள்ள மினாரக்களோடு புறாக்கள் விளயாடும் காட்சி நெஞ்சுக்குள் பகல் கனவுகளாய் நடமாடும். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பிருக்கும். நாகூருக்கோ பல்வேறு சிறப்புகள். அது அலைவாய்க்கரையூர், தொடர்வண்டித் தொடர் முடியும் ஊர், சோழ மண்டலக் கடற்கரையின் நடுவிலுள்ள ஊர், பிரஞ்சு எல்லையிலுள்ள பாரம்பர்ய வணிகர்களின் ஊர், கலையும், இலக்கியமும் கைகோர்த்து நடக்கும் ஊர் எனப் பல்வேறு சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

இவ்வூரில் பிறந்த கவிஞர் அப்துல் கையூம் ‘அந்த நாள் ஞாபகம்’ எனும் பெயரில் தன் இளமைக் கால நினைவுகளை கைச்செண்டு கவிதைகளாய்க் கொண்டு வந்துள்ள பாங்கு போற்றுதற்குரியது. ஊர்க்கதைகளை நதி போலவோ, சிற்றாறு போலவோ சொல்லாமல் ஊற்றுச் சுரப்பாக கவிஞர் சொல்லியிருப்பதில் எளிமையும் இனிமையும் பீரிடுகிறது. தர்காவையும் அதன் பிம்பத்தையும் காட்டுகிறார் பாருங்கள் :

‘கிண்ணமென கவிழ்ந்திருக்கும்
     தர்கா கலசம்
          கிழக்குவாசல் குளக்கரையில்
               பிம்பம் பதிக்கும்’

குளக்கரையில் தர்காவின் பிம்பம்; நம் மனங்களிலோ நாகூரின் பல்வேறு பிம்பங்களைப் பதிக்கும் கவிஞரின் கவிதை பொம்மலாட்டங்கள்.

‘அரபுமொழி கலந்தவண்ணம்
      அருந்தமிழ் உரைக்கும்
           அணங்குகளின் சம்பாஷணை
                அசத்த வைக்கும்’

அங்குள்ளவர்களின் உரையாடல் மட்டுமா அசத்துகிறது. கவிஞரின் கைவண்ணமும் அல்லவா நம்மை அசத்துகிறது ! கைவண்ணத்தின் முன்னோடிகளான படைப்பாளிகளைப் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.

‘காலங்கள் கடந்து நிற்கும்
      ஆபிதீன் பாட்டு
           காதற்காவியம் புனைந்த
                சித்தி ஜுனைதா’

இதயத்திற்கு சுவை தந்தவர்களைப் பற்றிக் கூறிய கவிஞர், நாவுக்குச் சுவை தருவதைப் பற்றியும் கூறுகிறார்.

‘நளபாகம் மிளிருகின்ற
      மறவை சோறு
           நால்வராக உண்பதுவோ
                அதுஒரு பேறு’

மறவை எனும் பெரிய வட்ட ‘சஹனில்’ நாலு பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இன்றும் கடலோரக் கிராமங்களில் உண்டு. அதையும் கவிஞர் ஞாபகப்படுத்துகிறார். ஓரிடத்தில் இளமைக்கால பறவை வேட்டையை இயல்பாக சொல்கிறார்.

‘சுங்குத்தான் குழல்ஊதி
      சுட்டக் களிமண்
           சூறாவளியாய் தாக்கி
                சுருண்டிடும் குருவி’

நீண்ட குழலை வாயில் வைத்து சுட்ட களிமண் உருண்டையால் குருவியை வேட்டையாடும் பாங்கும் கடலோரக் கிராமங்களிலுள்ள கலையே. வாய்க்காற்று சூறாவளியாக மாறியதை சொல்லாமல் சொல்வது சுருண்டு விழும் குருவிகள்தான்.

அந்த நாள் ஞாபகங்களை சில கவிதைகள் மட்டும் சொல்லவில்லலை; கவிஞரின்  எல்லாக் கவிதைகளுமே ‘செலுலாய்டு பிலிம்’களாக மாறிச் செல்கின்றன.

‘துயில் காணும் நேரத்திலும்
      தொடர்கதை போன்று
           தோன்றுகின்ற பழங்கதைகள்
                 துரத்துது இன்று’

என நூலின் இறுதிக்கு முன் கூறுவது நமக்குந்தான்.

இந்நூலை மிக விரைவாக படித்து முடித்த நம்மை நூலில் உள்ள அந்த நாள் ஞாபகங்கள் நம்மையும் துரத்துவது உண்மைதான். நூலை படித்து முடிக்கும்போது அணிந்துரையில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் கூறியது நெஞ்சில் நிழலாடுகிறது.

“கவிஞர் கையூமுக்கு பார்க்கின்ற கண்கள் இருக்கின்றன; பதிய வைத்துக் கொள்ளும் இதயம் இருக்கிறது; பாட்டாக எடுத்துச் சொல்லும் திறமையும் பழுத்திருக்கிறது.” ஈரோட்டுக் கவிஞர் பழுத்திருக்கிறது எனச் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நாகூர்க் கவிஞர் நூலின் ஒவ்வொரு கவிதையிலும் மெய்ப்பித்திருக்கிறார்.

அறிமுக உரையில் வாழ்த்துக் கூறும் ஹ.மு.நத்தர்சா “நாகூர் தர்காவுக்கு உண்டு ஒரு அலங்கார வாசல்! ஒட்டு மொத்த நாகூரின் பேரழகை எழுத்துப் பூக்களால் சித்தரித்துக் காட்டும் இவரது பேனாவின் உயரம் கண்டு பிரமித்துப்போய் நிற்கிறது நாகூர் மனாரா” எனக் கூறுவது உண்மை என்பதைக் கவிஞர் கையூம் மெய்ப்பித்துள்ளார்.

நாகூர் மினாராவோடு நம்மையும் பிரமிக்கச் செய்திருக்கும் இந்நூலை வெளியிட்டிருக்கும் ‘சுடர்’ பதிப்பகமும் பாராட்டுக்குரியது. காரைக்கால் சுடரில் நாகூரைக் காணும் வாய்ப்பைப் பெறுங்கள்.

– தாழை எஸ்.எம்.அலீ  
 
 
 

 

கவிஞர் நந்தலாலா


வழினெடுக வரும் வானிலா

– கவிஞர் நந்தலாலா
நீள் கவிதை ‘ஆலமரம்’ என்றால் குட்டிக் கவிதை ‘போன்சாய்’ ஆகும் என்ற புரிதலில் கவிஞர் அப்துல் கையூம் அவர்களின் நல்ல முயற்சியே இந்தத் தொகுப்பு.
சொற்களை வெறும் சொற்களாகவே பயன்படுத்தும் நாம் சாதாரண மனிதர்கள்.
சொற்களுக்குள் சில நேரம் வெடிமருந்தையும் சில நேரம் தேன் சொட்டையும் நிரப்பத் தெரிந்தவர்கள் கவிஞர்கள்.
கண்முன் விரியும் காட்சிகளுக்கு, புலன்களுக்கு புலப்படாத அர்த்தத்தை கவிஞனால் மட்டுமே சொல்ல முடியும். அதனால் அதை ‘படைப்பு’ என்கிறோம்.
‘போன்சாய்’ நல்ல படைப்பு.
போன்சாயை பார்க்கும் நமக்கு முதலில் வருவது ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி. பிறகு சின்ன துக்கம்.
ஆலமரத்தின் அத்தனையயும் அப்படியே சுருக்கமாய் சின்னதாய்.. நம் வீட்டிற்குள். இதில் ஒரு வசதி – முழு மரத்தையும் நம்மால் நம் வீட்டுக்குள் இருந்துக் கொண்டே பார்க்க முடியும்.
ஆனால் – படை ஒதுங்க வேண்டிய ஆலமரம், தன் கம்பீரத்தை இழந்து இப்படி போன்சாய் வடிவில் எனும்போது சின்ன துக்கம் தவிர்க்க முடியாதது.
ஒரு வகையில் மகிழ்ச்சியும் துக்கமும் கலந்தே எல்லாவற்றிலும் இருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
இனிப்பை அதிகப்படுத்திக் கொண்டே போனால் கசப்பாவதும், சிகப்பை அடர்த்தியாக்கினால் கருப்பாவதும் இயற்கை தந்துள்ள அதிசயம். ஆனால் உண்மை.
காவியங்கள் கடல்கள் என்றால், போன்சாய்கள் நம் வீட்டுக்குள் அலை அடிக்கும் நீச்சல் குளங்கள்.
நீச்சல் குளங்களில் குளித்து, களித்து பழகியவனுக்கு கடலில் குளிக்க ஆசை வரலாம். வந்தால் நல்லதுதான். அது போலவே ‘போன்சாய்’ பேரிலக்கியங்களையும் படிக்கத் தூண்டினால் அதுவே அப்துல் கையூமின் வெற்றிதான்.
வெறும் களிப்பு வாழ்க்கையை அலுத்துப் போகச் செய்யும். துன்பத்தின் மிகையோ சோர்வையே எச்சமாக்கும். இரண்டும் கலக்கும்போது வாழ்க்கை அர்த்தமாகும்.
கை அகலக் கவிதை நூலாம் ‘போன்சாய்’ இந்த அனுபவங்களை அள்ளித் தருகிறது.
இதில் உள்ள கவிதைகளுக்கு தலைப்பில்லை – ‘ஏன் இல்லை’ என்பதற்கு – கவிஞர், பிறக்கும்போது பெயருடனா பிறக்கிறோம் என்கிறார். உண்மைதான். பெயரா மனிதனை நிலைக்கச் செய்கிறது? தலைப்பா கவிதையை வாழ வைக்கும்? கவிதைக்குள் உள்ள கவித்துவம்தான் கவிதையை காலம் கடந்து வாழ வைக்கும்.
இப்படி வாழும் கவிதைகளை ‘போன்சாய்’ நிறையவே தருகிறது. ‘தவறுகள் எனக்குப் பிடிக்கும்’ என்ற கவிதை நமக்குள் வேறு ஒரு கதவைத் திறக்கிறதா இல்லையா? இறகுக்கும் சிறகுக்குமான வேறுபாடு எத்தனை நுட்பமானது.
‘கேள்விக்குறிகள் குனிந்து தேடுவது விடைகளையா?” என்று அப்துல் கையூம் கேட்கும்போது விரியும் கற்பனை எத்தனை சுகமானது.
ஒரு நல்ல கேள்வி பல நூறு பதில்களை விடச் சிறந்தது. ஏனெனில் பதில்கள் நின்று போகும். கேள்விகள் மட்டுமே தொடரும்.
ஒரு கவிஞனுக்கு நடப்பும், நவீனமும் புரிந்துள்ளது என்பதற்குச் சான்று –   “ ஒரு புள்ளியை விட்டாலும் இணையமே திறக்காதே” என்ற புள்ளி கவிதை.
கண்ணுறக்கம் சுமக்கும் கனவுகளின் எடையை இவர் யோசிப்பது எனக்கும் பிடிக்கிறது.
‘நிழல்களை’ – ‘நிஜங்களினால் மிதிபடும் போலி’ எனச் சொல்வதும்;
‘கண்ணீர் அஞ்சலி’ பத்திரிக்கை விளம்பரத்தில் – நல்லவேளை என் பெயர் இல்ல என்று திருப்தி அடையும் மனிதனாய் இன்றைய வாழ்வைச்  சொல்வதும்  புதுமை.
எட்டே சொற்கள் – ‘ஓட்டை’ பற்றிய கவிதை. அடைக்கப்பட வேண்டிய ஓட்டையை அடையாளம் காட்டுகிறது.
வீட்டின் வரவேற்பறையில் உள்ள மீன்தொட்டியை மீன்களுக்கான ‘கண்ணாடி கல்லறை’ என்று இவர் சொல்லும்போது – சுதந்திரம் இழத்தல் சாவதற்குச் சமம் என்ற பார்வை பளிச்சிடுகிறது.
பிறை நிலவை – கழன்று விழுந்து சூரியரதக் குதிரையின் லாடமாய்ச் சொல்வது நல்ல கற்பனை. அதைப்போலவே – மரங்கொத்தி மரத்தில் எழுப்பும் சப்தத்தை நுழையுமுன் அனுமதி கேட்பதாய் சொல்வதும் அழகுதான்.
நடந்து போகும்போது வான்நிலா எப்போதும் நம்மோடே தொடர்ந்து வருவது போல – நல்ல கவிதை எப்போதும் தொடர்ந்து வருவது போல – நல்ல கவிதை எப்போதும் நம்முள் தொடர்ந்து வரும். தொடர்ந்து வரும் கவிதைகள் ‘போன்சாய்’ முழுவதும் உள்ளன.
துண்டு துண்டாய் நறுக்கி மாம்பழம் சாப்பிடுவது சொளகர்யமானதுதான். கைகளின் விரல் இடுக்கெல்லாம் சாறு வழிய; உதட்டையும் மீறி மூக்கு வரையில் சாறு படிய முழுமாம்பழமாய் சாப்பிடுவதும் ஒரு தனி ரசனைதான்.
மாம்பழத்துண்டுகளை தட்டு முழுக்க வைத்துள்ள கவிஞர் அப்துல் கையூம் – முழு மாம்பழம் விரைவில் தருவார்.
பஹ்ரனில் இருந்தாலும் தமிழ் அவரை நம்மோடு இணைக்கிறது. அவரது இதயம் தமிழருக்காய்த் துடிக்கிறது.
நந்தலாலா
மாநிலத் துணைத் தலைவர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  
 

புதிய பார்வை – பத்திரிக்கை மதிப்புரை


puthiya-parvai.jpgஅந்த நாள் ஞாபகம்
புத்தகப் பார்வை
கழனியூரன்

வேரின் வாசம்

தற்போது பஹ்ரைன் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் அப்துல் கையூம் தான் பிறந்து வளர்ந்த நாகூர் என்ற ஊரைப் பற்றிய கவிதைகளை எழுதி அக்கவிதைகளை மட்டும் தொகுத்து ‘அந்த நாள் ஞாபகம்’ என்ற அழகிய சிறுநூலைத் தமிழ் இலக்கிய உலகுக்குப் படைத்துத் தந்துள்ளார்கள்.
இடைக்காலத்தில் சிலேடை உலா, அந்தாதி, பிள்ளைத்தமிழ் என்று பல்வேறு சிற்றிலக்கியங்களைப் படைக்கும் மரபு, நம் தமிழ்ப் புலவர்களிடம் இருந்தது. அத்தகைய ஒரு மரபைப் பின்பற்றிக் கவிஞர் இந்நூலைப் படைத்துள்ளார்.
எதுகை, மோனை மற்றும் இயைபுத் தொடையுடன் கூடிய ஆசிரிய விருத்தத்தால்  இக்கவிதைகள் அமைந்துள்ளன. இசையோடு பாடுவதற்கு ஏற்ற வகையிலும் இப்பாடல்கள் திகழ்கின்றன.
கடல் கடந்து வாழும் கவிஞர், தான் பிறந்து வளர்ந்த ஊரின் அமைப்பை, அழகை, அவ்வூர் மக்களின் உணவுப் பழக்க வழக்கத்தை, அவர்கள் அணியும் உடைகளை, அவ்வூர் பெற்றெடுத்த இசைவாணர்களை, புலவர்களை, எழுத்தாளர்களை, அரசியல்வாதிகளை,  நாகூர் தர்ஹாவின் மேன்மைகளை, அத் தர்ஹாவை சுற்றி நடைபெறும் சில அறியாமைசார் பழக்கங்களை, அம் மக்கள் பேசும் வட்டார வழக்கு மொழியை என்று ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளார் இந்நூலில்.
தலை நிமிர்ந்து நிற்கும் தர்காவின் கலசம். அந்தக் கலசத்தின் பிம்பம் அருகில் உள்ள அலை அடிக்கும் குளத்தில் விழுகிறது.  இந்தக் காட்சி கவிஞரை கவிதை எழுதத் தூண்டுகிறது.
கிண்ணமென கவிழ்ந்திருக்கும்
     தர்கா கலசம்
          கிழக்குவாசல் குளக்கரையில்
               பிம்பம் பதிக்கும்”
என்று அக்காட்சியை தன் கவிதை மூலம் காட்டுகிறார். ரசித்து அனுபவிக்க நல்ல கவிதை ஒன்று தமிழுக்குக் கிடைக்கிறது.
தேநீரை அந்த ஊர்மக்கள் ‘தேத்தண்ணி’ என்றும், மிளகு ரசத்தை ‘மொளவுத் தண்ணி’  என்றும் விருந்தை ‘சோத்துக் களரி’ என்ற
வார்த்தையாலும், குழம்பை ‘ஆணம்’ என்றும் அவர்கள் சார்ந்த வட்டார வழக்குமொழி நடையில் பேசுவதையும், இறவாரம், யானீஸ் அறை, கலாரி, பலகட்டு மனைகள், வெண்துப்பட்டி, பசியாறல் (சாப்பிடுதல்), சோறு, சூலி, திறப்பு (சாவி), அசதி (சோர்வு), ஊஞ்சல் பாட்டு, மறவை சோறு, சீதேவி, வாங்கனி (வாருங்கள்), போங்கனி (போங்கள்), அகடம் பகடம், காண்டா (உருளைகிழங்கு), போன்ற எண்ணற்ற வழக்குச் சொற்களை மிகக் கவனத்துடன் இத்தொகுப்பில் கவிஞர் பதிவு செய்துள்ளதால், இத்தொகுப்பு நூல் ஒரு நாட்டார் தரவாகவும் திகழ்கிறது.
நல்லிணக்கம் பேணுகின்ற
     நாகூர் போன்று
          நானிலத்தில் வேறுஒரு
               நற்பதி ஏது?
என்று வினவி தாம் பிறந்த ஊரின் பெருமை பேசும் கவிஞர்,
போலிகளும் இவ்வூரில்
     பிழைப்பது உண்டு
          பொட்டலத்து சர்க்கரையை
               புனிதம் என்று
என்ற கவிதையில் அவ்வூரில் உள்ள மாசு மருவையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
இன்றைய நவீன கவிதை உலகில் மரபான இம்முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
அந்த நாள் ஞாபகம் :
அப்துல் கையூம் (மரபுக் கவிதைகள்);
வெளியீடு : சுடர், 57, லெமர் வீதி
காரைக்கால் – 609 602
பக். 62,  விலை ரூ. 20/=
அக்டோபர்  16-31, 2007    * புதிய பார்வை *   27
Kazhaneeyuran@yahoo.co.in
 
 

Tags:

டாக்டர் பி.மு.மன்சூர்


BONSAI REACTION

டாக்டர் பி.மு.மன்சூர்
Retd. Vice Principal
Head of the research Dept of Tamil
Jamal Mohamed College, Trichy
Joint Secy Islamiya Ilakkiya Kazhagam  

உங்களின் போன்சாய் நூலை, அவசரமாக கவிக்கோவும், ஆழமாக நண்பர் நந்தலாலாவும் எழுதிய மதிப்புரை முதல் 159 பக்கங்களையும் பலமுறை படித்தேன். உங்கள் மொழியில் சொல்ல வந்தால் மனதை பாதிக்கும் அருமையான பல கவிதைகள்.

அவைகளில் மிகச் சிறந்தது “இறகுகள் – சிறகுகள்”. சிந்தனயைத் தூண்டுவதாக அமைந்திருந்தது. நீங்கள் சம்மதித்தால் நமது கல்லூரி பாடதிட்டம் (பகுதி-1)-ல் இக்கவிதையை இணைப்பதற்கு பரிந்துரை செய்வேன்.

நெஞ்சில் நிலைத்த சில வரிகள் :

  • சவரனுக்காக சருகாகும் முதிர்க் கன்னிகள்
    தொப்புள் கொடி – தேசியக் கொடி
    இந்தியனிடமிருந்து இந்தியாவை மீட்டி
    பள்ளியில் புவியியல்
    டிசம்பர் 26 – காலன் வந்த கறுப்பு தினம்
    இந்தியன் – மலிவுப்பதிப்பு

இப்படி பல கவிதைகளில் உங்களின் சமூகப் பார்வை பளிச்சிடுகிறது

மரங்கொத்தி அருமையான படிமம்.கடலை போதும், செக்ஸி மரங்கள், இன்னும் சில கவிதைகள் உங்களின் நகையும், குறும்பும் உணர்த்தின.

பேண்ட் ஜிப்புக்காக எழுதிய முதல் கவிஞர் நீங்கள்தான். தேன் நிலவு – அவள் திறந்த புத்தகம், இவன் புத்தகப் புழு.  இது போதும். பிற வரிகள் அர்த்தமிழந்து போகின்றன. 

போஸ்ட் மேனுக்காக நீங்கள் விடுத்த கோரிக்கை என்னை 36 ஆண்டுகளுக்கு முன்னர் இழுத்துச் சென்றது. அதுதானே படைப்பின் வெற்றி.

போன்சாய் இந்த பாலையில் பூத்த நறுஞ்சோலை!
ஜமால் நந்தவ்னத்தின் பாரிஜாத மலர்!

ஆசிகளுடன்

P.M. மன்சூர்
August 21, 2007
mansurepm@hotmail.com

 

டாக்டர் ஹ.மு.நத்தர்சா


nathersa2.jpg 

 

அறிமுக உரை

மனதை மயக்கும் வெளிச்சப் புன்னகை !

நாகூர் – எங்கள் சம்பந்தக்குடி! பெண் கொடுத்தவர்கள், எடுத்தவர்கள்! சுகதுக்கங்களின் சரிபாதி சொந்தக்காரர்கள், நாங்கள்!

காரைக்கால் பிரஞ்சு யூனியன் பிரதேசமாக இருந்தபோது நாகூர் மாப்பிள்ளைமார்கள் கையில் கடவுச்சீட்டைப் பத்திரமாக வைத்திருந்து ஒவ்வொரு முறையும் பலத்த சோதனைக்குப் பிறகு நாடுவிட்டு நாடு பெயர்ந்து இல்லற வாழ்க்கை நடத்தியது, தனிக்கதை!

எப்போது நாகூர் கந்தூரி வந்தாலும் கொடியேற்றம் தொடங்கி பீரோட்டம் முடிய மச்சானின் பங்களா வீட்டில் கூடாரமிட்டு கும்மாளமிட்ட அந்த இனிய நாட்கள் அற்புதமானவை!

ஒவ்வொருவர் மனதிலும் புதைந்துக் கிடந்த ஈரநினைவுகளை ஒரு வெளிச்சப் புன்னகையாய் அள்ளி வந்துள்ளது கவிஞர் அப்துல் கையூமின் அந்த நாள் ஞாபகம்.

வாழ்வாதாரம் தேடி வளைகுடா ஓரம் ஒதுங்கினாலும் பாழும் மனது இறக்கை கட்டிப் பறந்து சொந்த ஊரின் சந்து பொந்துக்களில் நுழைந்து சுகம் அனுபவித்து தன்னிடம் இரகசியமாய் மொழிந்த அதிசயங்களை இந்நூல்வழி பகிரங்கப்படுத்தி மகிழ்கிறார், கவிஞர் நாகூர் அப்துல் கையூம்.

நபிகள் நாயகம் பிறந்த நன்னாளை ஊர் அழைத்து விருந்து வைத்து கொண்டாடி மகிழும் ஊர் நாகூர்!  நா விருந்தளிக்கும் நாகூரின் பெருமையை பாவிருந்தளித்துப் பரிமாறும் கவிஞரின் இதயவாசலில் வாழ்த்துப் பன்னீர்ச் செம்புடன் நான்!

முதலிரவு அறையின் மல்லிகை பூச்சரமும், ஊதுபத்தி மணமும் மட்டுமல்ல; வாழ்க்கைப் பாதையில் வழிநெடுக சந்தித்த அத்தனை அனுபவங்களும் அற்புதமானவை எனச் சத்திய வாக்குமூலம் அளிக்கின்றன, இவரது கவிச்சித்திரங்கள்!

ஒரு சின்னஞ்சிறிய அற்புத விளக்கில் எப்படி பூதத்தை அடைத்து வைத்தான் அலாவுதீன்? என்ற வினா இன்றுவரை என் மனதில் எழும்பிக் கொண்டு இருந்தது!  ஒரு கையடக்க புத்தகத்தில் ஒட்டுமொத்த நாகூரின் பாரம்பர்ய சிறப்புகளை பட்டியலிட்டுக் காட்டியுள்ள கவிஞர் அப்துல் கையூமின் கைவண்ணத்தைக் கண்ட பிறகு அலாவுதீனை நினைத்து இப்போது ஆச்சர்ய அலைகள் எழுவதில்லை!

அழகான பெண்ணொருத்தி சிரிக்கும்போது அவள் கன்னக்கதுப்பில் தோன்றும் ஒய்யாரக் குழியில் மனம் ஒட்டிக் கொள்வதைப் போன்று, சுனாமிகளால் சூறையாட முடியாத நாகூரின் பேரழகை காட்சிப்படுத்திக் காட்டும் ஒவ்வொரு வரியிலும் சிக்கிச் சிறைப்பட்டு நகர்ந்து வர முடியாமல் தவிக்கிறது இரசனை மிக்க உள்ளம்!

புலவர்க் கோட்டையெனப் போற்றப்படும் நாகூரின் பெருமையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த எழுதப்பட்டுள்ள மெய்ப்புச் சான்றிதழ் – இந்நூல்!

நாகூர் தர்காவுக்கு உண்டு அலங்கார வாசல்! ஒட்டுமொத்த நாகூரின் பேரழகை எழுத்துப் பூக்களால் சித்தரித்துக் காட்டும் இவரது பேனாவின் உயரம் கண்டு பிரமித்துப் போய் நிற்கிறது நாகூர் மனாரா!

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணின் அழகைத்தான் புலவர்கள் இதுவரை வருணித்துள்ளனர். எல்லாத் திசைகளிலும் நிலைக் கண்ணாடிகள் வைத்து ஒரு மண்ணின் அழகைக் காட்சிப்படுத்திக் காட்டியுள்ள இந்தப் புதுக்கவிஞரின் ஆறாவது விரலை அலங்கரிக்க காத்திருக்கின்றன ஏராளமான கணையாழிகள்!
நல்வாழ்த்துக்களுடன்
ஹ.மு.நத்தர்சா

தமிழ்த்துறை,
புதுக்கல்லூரி
சென்னை – 14

(ஹ.மு. நத்தர்சா அவர்கள் புதுக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர். படைப்பிலக்கியவாதி. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வழங்கியுள்ளார். புதுவையரசின் 1996- ஆம் ஆண்டிற்கான கம்பன் புகழ்ப்பரிசு பெற்றவர். வரலாற்று ஆய்வுநூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வுக் கோவைகளில் இக்கால்  இலக்கியம், நாட்டுப்புற

இலக்கியம் குறித்து ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இஸ்லாமிய சிறுகதைகள் குறித்து ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்திய இலக்கியச் சிற்பிகளை அடையாளம் வண்ணம் சாகித்திய அகாதெமி வெளியீட்டு நூல்கள் வரிசையில் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்களை பற்றிய இவர் எழுதிய படைப்பும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.)