RSS

Category Archives: மத நல்லிணக்கம்

நாகூர் – ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு


கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் 72-ஆம் பிறந்த நாள் விழாவின்போது, சிலம்புச் செல்வர் மா.பொ.சி.அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள் :

“காயிதே மில்லத் வாழும் நாட்டில், அவர்களின் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமைப்படுகிறேன்.”

“இந்தப் பாரதத் திருநாட்டிலே, ராஜாஜிக்கு அடுத்த நிலையிலே இருக்க வேண்டியவர், வைத்து பாராட்டத்தக்கவர் நம்முடைய காயிதேமில்லத் ஆவார்கள்”

“ஒரிஸ்ஸா, மகாரஷ்டிரம், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட காணமுடியாத ஒற்றுமையைத் தமிழ்நாட்டுமக்கள் வேறுபாடின்றிக் கடைப்பிடித்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக நாகூர் விளங்குகிறது! காயிதே மில்லத் விளங்குகிறார்கள்!”

தொடர்புடைய சுட்டி : யுக பாரதி – சமயத்திற்கப்பால்

 

அயோத்திராமன் அழுகிறான்


Religious Harmony final

(6-12-92 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுதில் கவிஞர் வைரமுத்து இடிந்துபோய் எழுதியது)

கங்கை காவிரி
இணைக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?

காடுகள் மலைகள்
திருந்த வேண்டும்
கரசேவகரே வருவீரா?

வறுமைக்கோட்டை
அழிக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?

மாட்டீர்கள் சேவகரே
மாட்டீர்கள்

நாம்
உடைக்கவே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை

வித்துண்ணும் பறவைகள்
விதைப்பதில்லை

     *     *     *

விளைந்த கேடு
வெட்கக் கேடு

சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்

அடிமை இந்தியன்
ஐந்நூறாண்டுப் பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே!
வறுமைக் கோட்டின்கீழ்
நாற்பதுகோடி மக்கள் என்றாய்
அறிவுக் கோட்டின்கீழ்
அறுபது கோடி
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்?

     *     *     *

மதம் ஒரு பிரமை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுதயுத்தம்?

மதம் என்பதொரு வாழ்க்கைமுறை சரி
வன்முறை என்பது எந்த முறை?

அந்த கட்டடத்தின் மீதெப்போது
கடப்பாரை வீழ்ந்ததோ
அப்போது முதல்
சரயூ நதி
உப்புகரித்துக் கொண்டே
ஓடுகிறது

சீதை சிறைப்பட்டபின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

     *     *     *

மாண்புமிகு மதவாதிகளே

சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா?

அயோத்திராமன்
அவதாரமா? மனிதனா?

அயோத்திராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்

பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்?

அயோத்திராமன்
மனிதன்தான் எனில்
கர்ப்பத்தில் வந்தவன்
கடவுள் ஆகான்
மனிதக் கோயிலுக்கா
மசூதி இடித்தீர்?

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று

இனிமேல்
சிந்த வேண்டியது
வேர்வைதான்

நம் வானத்தைக்
காலம் காலமாய்க்
கழுகுகள் மறைத்தன

போகட்டும் இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும் !

 vairamuthu