RSS

Category Archives: முன்ஷி அப்துல்லாஹ்

சொல்ல மறந்த வரலாறு – (பாகம் – 3)


img_2736

முன்ஷி அப்துல்லாஹ்

உலகச் சரித்திர  ஏடுகளில்  இடம் பெற்றிருக்கும் ஒரு உன்னதமான மனிதனின் பூர்வீக ஊர்தான் இந்த நாகூர் என்ற நினைப்பு   நாகூர் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பெருமிதத்தை ஏற்படுத்தும்  என்பது திண்ணம்.

அது ஏனோ தெரியவில்லை நாகூரின் மண்ணின் மைந்தர்களுக்கு இலக்கிய ஈர்ப்பு என்பது ஒரு வரமாக அமைந்து விட்டது போலும். இலக்கிய வானில், தமிழிலும் பிற மொழிகளிலும் சுடர்விட்ட பிரகாசித்த பிரபலங்கள் இங்கு கணக்கிலடங்காது. குன்றிலிட்ட விளக்காக சுடர்  விட்டு எரிய வேண்டிய அவர்களது புகழ் குடத்திலிட்ட விளக்காக யாரும் அறியா வண்ணம் மறைக்கப்பட்டது  வருத்தத்தை தருகிறது.  அப்பேர்ப்பட்ட மாமனிதர்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொணர்வதுதான் இவ்வலைத்தளத்தின் நோக்கம்.

‘திரைகடல் ஓடி திரவியம் தேட’ கீழை நாடுகளுக்கு பயணமான நாகூர் வம்சாவழி  குடும்பத்தில் வந்துதித்த, , உலகப் புகழ் பெற்ற “நவீன மலாய் இலக்கியத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் முன்ஷி அப்துல்லாஹ்வின் வாழ்க்கை வரலாற்றை அலசும் நாம், அவருடைய பெயருக்கும் புகழுக்கும் காரணமாக விளங்கிய அவரது எழுத்தாற்றலை சற்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.

மலாக்கா காவற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்திய சிப்பாய்களுக்கு மலாய் மொழி கற்றுக் கொடுப்பதுதான் முன்ஷி அப்துல்லாஹ் ஏற்ற முதற்பணியாகும்.  அதன் பிறகு பிரித்தானிய மற்றும் அமெரிக்க கிறித்துவ மிஷனரி பணியாளர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் மலாய் கற்றுக் கொடுக்கும் பணியில் அவர் ஈடுபடுத்தப்பட்டார்.

img_2751

சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ்

சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ் உடனான தொடர்பு

இத்தருணத்தில் சிங்கப்பூர் நிறுவனர் சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ் (Sir Thomas Stamford Raffles) என்பவரைப் பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும்.

இவர், பிரித்தானிய அரசியலாளராகவும், பிரித்தானிய சாவகத்தின்  (British Java) துணைநிலை ஆளுநராகவும் (1811–1815),  பிரித்தானிய பென்கூலனின் (Bencoolen) ஆளுநராகவும் (1817–1822), இன்னும் சொல்லப்போனால் சிங்கப்பூரை நிறுவியவரும் ஆவார்.

அதுமட்டுமின்றி,  நெப்போலியப் போர்களின் அங்கமாக டச்சு மற்றும், பிரான்சு நாட்டு படைகளிடமிருந்து இந்தோனேசியத் தீவான  சாவகத்தை கைப்பற்றி பிரித்தானியப் பேரரசை விரிவாக்குவதில் பெரும் பங்காற்றியவரும் இவரே. தொழில்முறை அல்லாத எழுத்தாளராக சாவகத்தின் வரலாறு (தி ஹிஸ்டரி ஆப் ஜாவா) என்ற நூலை எழுதியுள்ளார்.

இவருக்கு உதவியாளராக இருந்து பேரும் புகழும் பெற்றவர்தான் நம் கட்டுரையின் நாயகன் முன்ஷி அப்துல்லாஹ். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட தொடர்பு சுவராஸ்யமானது.

முன்ஷி அப்துல்லாஹ்வுக்கும் சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ்க்கும் இடையே உண்டான தொடர்பு வெகுகாலத்திற்கு முந்தியது

ஆங்கிலத்தில் Child Prodigy என்றும் ஜெர்மானிய மொழியில் Wunderkind என்றும் சொல்வார்களே அப்பதத்திற்கு ஒப்ப ‘சிறுமுது அறிஞராக’த் திகழ்ந்தவர் முன்ஷி அப்துல்லாஹ் என்பதை ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

இசைத்துறையில் மொசார்ட், சதுரங்கத்தில் பால் மர்ஃபி, கணிதத்தில் காஸ் மற்றும் நியூமான், கலைத்துறையில் பாபுலோ பிக்காசோ, தமிழ்ப் புலவர்களில் திருஞானசம்பந்தர் ஆகியோரை சிறுமுது அறிஞர்களுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

முதன் முதலில் ராபிள்ஸ் மலாக்கா வந்தபோது பன்மொழி பாண்டித்தியம் பெற்ற சிறுவன் அப்துல்லாஹ்வின் திறமையைக் கண்டு வியந்து, தன்னோடு பணியில் அமர்த்திக் கொண்டார். மலாய் நாட்டு சிற்றரசர்களை சந்திக்கவும், உரையாடவும், அவர்களோடு கருத்துக்கள் பரிமாறவும் அப்துல்லாஹ்வின் சேவை அவருக்கு பேருதவியாக இருந்தது.

ராபிள்ஸ் மலாக்காவை விட்டு போகும்போது அப்துல்லாஹ்வையும் அழைத்துப் போகவே விருப்பப்பட்டார். ஆனால் அவருடைய தாயார் சல்மா அவரை விட்டு பிரிய சம்மதிக்கவில்லை, அதன்பின் ஒன்பது  வருடத்திற்கு பிறகு சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ்ஸை சிங்கப்பூரில் வைத்து  முன்ஷி அப்துல்லாஹ்வை மீண்டும் சந்திக்கிறார். இந்த திறமையாளர்   தன்னோடு கூடவே இருந்தால் பலவற்றை தன்னால் சாதித்துக் காட்ட முடியும் என்று உறுதியாக நம்புகிறார்.. முன்ஷி  அப்துல்லாஹ்வை இணங்கவைத்து மீண்டும் தன்னுடனேயே பணியில் அமர்த்திக் கொள்கிறார்.

ஜனவரி 29, 1819 தினத்தன்று  ஸ்டம் போர்டு ராபிள்ஸ் சிங்கப்பூர் வந்திறங்கிய பின்னர் இத்தீவு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. சிங்கப்பூர் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் பாறைகள் இருந்தன. அவற்றில் இருந்த இந்திய மொழி போன்று செதுக்கப்பட்டிருந்த சொற்களை அவரின் பயணக் குழு கண்டுபிடித்தபோது, சிங்கப்பூரில் இந்தியர்களின் செல்வாக்கு இருந்திருக்க வேண்டும் என்பதை அவர் மறு உறுதிப்படுத்தினார். பாறைகளில் காணப்பட்ட எழுத்துக்கள் நீரலைகளால் உருமாறி தெளிவில்லாமல் இருந்தன.

கிழக்காசிய நாடுகளுள் குறிப்பிடத்தக்க இக்குட்டித்தீவுக்கு  சிங்கப்பூர். முதன் முதலாக, “சிங்கப்பூரா’ என்று பெயர் சூட்டியவர்கள்  நம் தமிழ்நாட்டு அரச பரம்பரையினர்தான். துமாசிக் என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டுக்கு, சிங்கப்பூரா என்று பெயரிட்டவர் இளவரசர் திரிபுவனா என்பது சரித்திரக் குறிப்பு. ராஜேந்திர சோழனின் வாரிசான நீல உத்தமன் கி.பி., 1160-ல் சிங்கப்பூராவை நிறுவியதாகக் கூறப்படுகிறது. அப்போதெல்லாம் சோழ மன்னர்களுக்கும், பல்லவர்களுக்கும் இந்த நாட்டுடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

என்ற சுவையான தகவல்களை அள்ளித் தருகிறார் மூத்த பத்திரிக்கையாளரும், சிறந்த எழுத்தாளருமான ஜே.எம்.சாலி.

அப்துல்லாஹ் தமிழ், உருது, அரபி, மலாய் போன்ற பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த காரணத்தால் அவருடைய மொழித்திறனை சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்.

அதுமட்டுமின்றி,  மலாய்க்காரர்களுடன் முன்ஷி அப்துல்லா நெருங்கி பழக்கக்கூடியவராக இருந்தமையால் ராபிள்ஸுக்கு அது மேலும் பயனுள்ளதாக இருந்தது.   மலாய்க்காரர்களுடன் உள்ள தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தது.

சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ்க்கு மொழிபெயர்ப்பாளராகவும், அந்தரங்க காரியதரிசியாகவும் பல ஆண்டுகள் அவருடன் பணி புரிந்தார் முன்ஷி அப்துல்லாஹ்.

முன்ஷி அப்துல்லாஹ்வின் எழுத்துப்பணி

இன்றளவும் சிங்கப்பூர் சரித்திர வரலாற்றுச் சான்றுகளுக்கு முன்ஷி அப்துல்லா வழங்கிய குறிப்புகளே இன்றிமையாத ஒன்றாக விளங்குகிறது என்பது உலகறிந்த உண்மை.

அழிந்துவரும் கையெழுத்துச் சுவடிகளையெல்லாம் கையால் எழுதி பிரதிகள் எடுத்து பொக்கிஷமாக பாதுகாத்து வைத்த பெருமையும் முன்ஷி அப்துல்லாஹ்வைச் சாரும்.

writings

 

தமிழ் முஸ்லீம்களிடையே அன்றைய காலத்தில் அரபுத்தமிழ் என்ற எழுத்து வடிவம் இருந்தது. அதாவது தமிழ்மொழியாக்கத்தை அரபி லிபியில் எழுதுவது. முன்ஷி அப்துல்லாஹ் நூலாக எழுதிய வடிவமும் அதுபோலத்தான் இருந்தது. அதாவது மலாய்மொழி ஆக்கத்தை அரபி லிபியில் எழுதுவது. பிற்பாடுதான் மலாய் மொழியை ஆங்கில லிபியில் எழுதத் தொடங்கினார்கள்.

அரசு பணியாக இவர் கெலந்தான் என்ற இடத்திற்கு சென்று வந்த அனுபவத்தை நூலாக Kisah Pelayaran Abdullah ke Kelantan என்ற பெயரில் எழுதினார். இவர் இதனை 1843-ஆம் ஆண்டில் எழுதி முடித்தார். 1849-ஆம் ஆண்டில் இது  நூல் வடிவமாக வெளிவந்தது. வியாபார ரீதியாக பிரசுரிக்கப்பட்ட முதல் நூலும் இதுதான் என்கிறார்கள்.

இதனைப்   படித்துப் பார்த்த ஆல்ஃப்ரட் நார்த் என்ற நண்பர்தான் இவரை சுயசரிதம் Hikayat Abdullah (அப்துல்லாஹ்வின் கதை) எழுதத் தூண்டியவர். தன் நூலில் அவர் இந்த நண்பரை நன்றியுடன் குறிப்பிட்டு எழுதுகிறார்.

“இந்த அளவுக்கு மொழி ஆளுமை உடைய நீ, ஏன் உன் அனுபவத்தை தொகுத்து ஒரு நூலாக எழுதி வெளியிட்டு, பிறர் பயன்பட செய்யலாகாது?”

என்று ஆல்ஃப்ரட் ஏற்றி வைத்த தீப்பொறி முன்ஷி அப்துல்லாஹ்வின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி சொல்லொணா ஆர்வத்தைத் தூண்டி கிரியாவூக்கியாய் செயற்பட்டது. கரும்பு தின்ன கூலியா? “எழுத்தாக்கம்  என் உயிர்மூச்சு” என்று ஆகிப்போன அவர் இப்பணியை மனநிறைவுடன் செய்யத் தொடங்கினார்.

“ஹிகாயத் அப்துல்லாஹ்” எனும் நூலை, தனது வாழ்வின் மறக்க முடியாத நினைவலைகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பணி நிறைவுற்றது.  இந்நூல் சிங்கப்பூரை பற்றிய தொடக்க கால சரித்திரத்தை விவரித்ததோடு,  19-ஆம் நூற்றாண்டின்   முற்பகுதியின் மலாக்கா சமூகத்தை பற்றிய விவரங்களையும் அப்பட்டமாகச்  சித்தரித்துக் காட்டுகிறது.

1811-ஆம் ஆண்டு பிரிட்டாஷாரின் ஜாவா படையெடுப்புக்கு ஆதாரமாகத் திகழ்வது அப்துல்லாஹ் எழுதிய டயரி குறிப்புக்கள்தான்.

முன்ஷி அப்துல்லாஹ்வின் சிறப்புகள் பலவற்றை சி.பி.பக்லி என்பவரின் சிங்கப்பூர் பற்றிய வாய்மொழி வரலாறு (1819- 1867) எனும் நூலில் நாம் காண முடிகின்றது.

முன்ஷி அப்துல்லாஹ்வின் “Kisah Pelayaran Abdullah” என்ற நூலை மொழிபெயர்த்த  E.கூப்பர் அப்துல்லாஹ்வின் எளிமையான எழுத்து நடையை வெகுவாகப் புகழ்கிறார். பாரம்பரிய இலக்கிய மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எதார்த்தமான வழக்கு மொழியில் மலாய் சொலவடையும் பழமொழிகளும் கலந்து எளிமையான மொழியில் எழுதிய முதற் எழுத்தாளன் இவர் என்று  நற்சான்று வழங்குகிறார்.

முன்ஷி  அப்துல்லாஹ்வின் சுயசரிதம் 1840-1843 –ல் எழுதப்பட்டு 1849 மார்ச் மாதம் பிரசுரமானது

முன்ஷி அப்துல்லாஹ்வின் ஜித்தா பயணம் “Kisah Pelayaran Abdullah ke-Negeri Jeddah” என்ற படைப்பு  அவருடைய  எழுத்தாற்றலுக்கு   மற்றொரு மணிமகுடம் எனலாம்.  இது அவர் மறைந்த பிறகு புத்தகமாக வெளியிடப்பட்டது..இது அவர் தனது நாட்குறிப்பில் எழுதி வைத்த அனுபவம், அவரது நண்பர் ஒருவரால் வெளிக்கொணரப்பட்டு நூலாக பதிப்பானது.

1874-ஆம் ஆண்டில் அப்துல்லாஹ்வின் “Hikayat Abdullah” வாழ்க்கை வரலாற்றினை ஜான் டி. தாம்சன்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆனால் அது முழுமையாகவும் துல்லியமாகவும் எழுதப்படவில்லை.

அதன் பின்னர் William Shellabear enpavar 1915- ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

முன்ஷி அப்துல்லாஹ்வின் உயரிய பண்பு

முன்ஷி அப்துல்லாஹ் பன்மொழி வித்தகராகவும் மொழி ஆளுமை மிக்கவராக இருந்தபோதிலும் அவரிடத்தில் காணப்படும் தன்னடக்கம் நம்மை வியக்க வைக்கிறது. தனது சுயசரிதையில் இப்படியாக அவர் எழுதுகிறார்.

“கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு” என்பார்கள். இந்த உண்மையை  முன்ஷி அப்துல்லாஹ் மனதளவில் பூரணமாக உணர்ந்திருந்தார்.  அவரது தந்தை அப்துல் காதிரின் கண்டிப்பான வளர்ப்பில் வளர்ந்தவரல்லவா?

“Moreover what made me sad in my own heart was that I am an ignorant man, with very little command of language, and unskilled in the art of composition. And then again I am occupied more or less with the work of my profession. So because of all these things I felt worried”.

மொழி பாண்டித்தியம் பெற்ற ஒரு மனிதன் தன்னைத் தானே “அறிவிலி” என்று அடைமொழியிட்டு அழைத்துக் கொள்வதை தன்னடக்கம் என்று சொல்லாமல் வேறு எப்படி வர்ணிக்க இயலும்?

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப அப்துல்லாஹ்வின் அமைதியான பண்பும், அடக்கமும், அலட்டிக் கொள்ளாத தன்மையும் காண்போரை வியக்க வைத்தது.

“நான் மிகவும் சாதரணமானவன், எனது கல்வித்திறனும் அறிவும் மிகவும் சாதரணமானது. நான் என் சுயசரிதை எழுதுமளவுக்கு நான் தகுதியானவனா என்பது எனக்குத் தெரியாது” என்று தன்நூலில் தன்னடக்கத்துடன் பணிவாக எழுதுகிறார் அவர்.

முன்ஷியின் மலாய் நடை மிகவும் எளிமையானதாக இருந்தது. கடினமான பாரம்பரிய நடையில் இருந்த மலாய் மொழியின் நடையை இலகுவாக்கி பாமரரும் புரியும் வண்ணம் எளிமையாக்கித் தந்த பெருமை நம் கட்டுரை நாயகனையே சாரும். கடினமான தமிழில் இருந்த தமிழ்த்   திரைப்படப் பாடல்களை   அன்றாடம்  பேசும் மொழியில் எளிமையாக்கி கவிதை வார்த்த கவியரசு கண்ணதாசனைப் போல்  மலாய் மொழியை இலகுவாக்கி   சாமான்ய மனிதனும் புரிந்துக் கொள்ளும் வகையில் வழிவகுத்தவர்  முன்ஷி அப்துல்லாஹ்.

எனவேதான் இவர் “நவீன மலாய் மொழியின் இலக்கியத் தந்தை” என்று எல்லோராலும் இன்றளவும் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படுகிறார்.  மலாய் இலக்கியம் ஒரு மாபெரும் மாற்றத்தைச் சந்தித்தது இவரின் எழுத்தின் மூலம்தான், அதீத கற்பனை புனைவுகள், நாட்டுப்புற கதைகள், மற்றும் புராண இதிகாசங்களில் சிக்கித் தவித்து வந்த மலாய் மொழியை மீட்டி ஜனரஞ்சக முறையில் எளிமையாக்கி யதார்த்த நடையில் கொண்டு வந்த பெருமை  முன்ஷி அப்துல்லாஹ்வைச்  சாரும்.  இவருடைய படைப்புக்கள்   மலேயா சரித்திர சான்றுகளைக் கூறும் ஆவண நூலாகத் திகழ்கிறது.

பிரசித்திப் பெற்ற வணிகர்களாகத் திகழ்ந்த எட்வர்ட் போஸ்டெட் (Edward Boustead) மற்றும் ஆர்ம்ஸ்ட்ராங் சகோதரர்கள் (Armstrong Brothers) போன்றவர்களுக்கு மலாய் மொழி ஆசானாகத் திகழ்ந்தவர் முன்ஷி அப்துல்லாஹ்.

முன்ஷி அப்துல்லாஹ்வும் கிறித்துவ மிஷனரிகளும்

முன்ஷி அப்துல்லாஹ்விற்கு கிறித்துவ மிஷினரிகளுடன் தொடர்பு ஏற்பட்டபோது அவர் சந்தித்த தடங்கல்கள் ஏராளம். முதலில் பெரிதாக எதிர்ப்பு கிளம்பியது அவருடைய தந்தையாரிடத்திலிருந்துதான். காரணம் சத்திய மார்க்கத்தின் சன்மார்க்கப் பிடிப்புடன் வளர்க்கப்பட்ட தன் மகன் எங்கே தடம் புரண்டு போய்விடுவானோ என்ற இயல்பான ஓர் அச்சம் அவருக்கு   மேலோங்கி  இருந்தது.. கிறித்துவ மதப் பிரச்சாரத்திற்காக முனைப்புடன் இயங்கும் பாதிரிமார்கள் தன் மகனை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி விடுவார்களோ என்று நினைத்து முன்ஷி அப்துல்லாவிற்கு பல்வேறு தடைகளை விதித்தார்.

முன்ஷி அப்துல்லாஹ் பாதிரிமார்களின் நட்பை விரும்பியதற்கு அவருக்கிருந்த  சுயநலமும் காரணம் எனலாம். முதலாவதாக மிஷனரிகள் ஏற்படுத்தி தரும் மொழிபெயர்ப்பு பணியில் நல்ல ஊதியம் கிடைக்கும் என்று நம்பினார். அடுத்து,  பல மொழிகளில் நிபுணத்துவம் பெற்று பன்மொழியாளனாக ஆகவேண்டும் என்று எதிர்கால கனவு கண்ட முன்ஷி அப்துல்லாஹ்விற்கு அவர்களிடமிருந்து  ஆங்கிலம் பயின்று கொள்ளும் அழகான ஒரு வாய்ப்பை அவர் நழுவவிடத்   தயாராக இல்லை.

இதன் தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை- சச்சரவுகள், மனத்தாங்கல்கள், கருத்து வேறுபாடுகள், கொஞ்ச நஞ்சமல்ல.

முன்ஷி அப்துல்லாஹ் ஒருநாள் தன் தந்தையுடன் தனிமையில் அமைதியாக உட்கார்ந்து அவருக்கு புரிய வைத்தார்.

“வாப்பா,, நான் உங்களுடைய கண்டிப்பில் வளர்ந்த பிள்ளை. என் மனதில் உள்ள ஈமானை, நீங்கள் கற்றுத் தந்த மார்க்க படிப்பினையை ஒருநாளும் மறந்து போகிறவனல்ல. . எனக்கு நல்லது எது; கெட்டது எது; என்று நன்றாகத் தெரியும். அப்படியிருக்க நான் கிறித்துவ சமயபோதகர்களின் பணியை செய்வதினாலும் அவர்களுடன் நெருங்கி பழகுவதினாலும் நான் மதம் மாறிவிடுவேன் என்று  நினைக்காதீர்கள்”

என்று உறுதியளித்தபிறகு அவரது தந்தை அப்துல் காதிர் ஓரளவு சமாதானம் ஆனார். அதன்பிறகு ஒரு நாள் மில்னர் மற்றும் தாம்ஸன் கொடுத்த உறுதிமொழியின் பேரில் தன் பணியைத் தொடங்கினார்.  தொழில் தர்மம் வேறு;  கொண்டிருக்கும் கொள்கை வேறு என்ற அடிப்படையில் பைபிளின் புதிய ஏற்பாட்டினை மொழிபெயர்க்கும் பணியிலும், அதனூடே ஆங்கிலத்தில் புலமை காணும் வகையில் அவர்களிடத்திலிருந்து மொழிதேர்ச்சியும் பெற்றார்.

1815-ஆம் ஆண்டு பைபிளை மலாய் மொழியில் மொழிமாற்றம் செய்வதற்கு  இவரை மிஷனரிகள் பயன்படுத்திக் கொண்டனர். “முஸ்லீமான நான் எதற்கு கிறித்துவ மதத்தின் நூலை மொழிபெயர்க்க வேண்டும்?” என்றெல்லாம் அவர் பாரபட்சம் சிறிதளவும் காட்டவில்லை.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

என்ற பொன்னான வரிகள் யாருக்கு பொருந்துதோ இல்லையோ முன்ஷி அப்துல்லாஹ்வுக்கு முழுமையாக பொருந்தும். தனக்கு இடப்பட்ட பணியினை செவ்வென முடித்து தருவதில் அவர் வல்லவர். இன வேறுபாடோ, மதவேறுபாடோ அவர் பார்க்கவில்லை.

1815 ஆண்டு லண்டன் மிஷனரி சொஸைட்டியைச் சேர்ந்த வில்லியம் மில்னே என்ற என்ற பாதிரியார் மலாயா நாட்டு  மக்களுக்காக இலவச பைபிள் வகுப்பை நடத்த தொடங்கினார்.

பன்மொழி வித்தகராக  ஆகத் துடித்த முன்ஷி அப்துல்லாஹ் ஆங்கில மொழியில் பாண்டித்தியம் பெற வேண்டி  அந்த வகுப்பில் போய்ச் சேர்ந்ததும் அப்போதுதான்.

மலாய் மொழியில் அப்துல்லாஹ்வுக்கு ஆளுமை உள்ள ரகசியத்தை வில்லியம் மில்னே அறிந்துக்கொண்டார். வயது வித்தியாசம் பாராமல் அவரையே தன்னை ஆசானாக நியமித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மலேயா நாட்டுக்கு ஒன்றன்பின் ஒன்றாக வந்த மற்ற மிஷனரிகளும் அப்துல்லாஹ்வின் திறமையை பயன்படுத்திக் கொண்டன. அப்துல்லா மொழிபெயர்ப்பில் தன்னை முழுநேரமும் ஈடுபடுத்திக் கொண்டதோடு ஆங்கிலத்திலும் நன்றாக மொழித்திறனை வளர்த்துக் கொண்டார்.

அதே 1815-ஆம் ஆண்டில் ஜெர்மன் பாதிரியார் கிளாடியஸ் ஹென்றி தாம்ஸன்  (Rev. Claudius Henry Thomsen) அப்துல்லாஹ்வின் இணைபிரியா நண்பரானார். இருவரும் சேர்ந்து பைபிளை மலாய் மொழியில் மொழிபெயர்த்து நூல் வடிவமாக்கினார்கள்.

பைபிளின் புதிய ஏற்பாடு “The Kitab Injil al-Kudus daripada Tuhan Esa al-Masihi” என்ற தலைப்பில் பதிப்பானது.

1818-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி மேஜர் வில்லியம் பர்குஹார் (Major William Farquhar) ஆங்கிலேய-சீன கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகையில் அப்துல்லாஹ்தான் முன்னிலை வகித்தார். பாதிரியார் தாம்ஸன் மே மாதம் 1822-ஆம் ஆண்டு 11-ஆம்தேதி சிங்கப்பூருக்கு பயணமானார்..

முன்ஷி அப்துல்லாஹ் மொழிபெயர்ப்பாளாராக தன் வாழ்க்கையைத் தொடர சிங்கப்பூர் வந்த ஆண்டு ஜூன் மாதம் 1819..

1830 – ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பாதிரியார் பெஞ்சமின் பீச் கீஸ்பெர்ரி (Benjamin Peach Keasberry) மலாய் மொழியில் வெளியிட்ட கிறித்துவ அமைப்பினரின்  பைபிளை பல்வேறு நீக்கங்கள் செய்து,  திருத்தங்கள் செய்து, அதனை  மெருகெற்றி தந்ததும் முன்ஷி அப்துல்லாஹ்தான்.

முன்ஷி அப்துல்லாஹ் எப்படிப்பட்ட அரசியல் விமர்சகராக இருந்தார்; அவருடைய துணிச்சல் எப்படிப்பட்டது என்ற விவரங்களை நாம் அடுத்த பாகத்தில் காண்போம்.

– அப்துல் கையூம்

……..இன்னும் வரும்

முற்பகுதி:

சொல்ல மறந்த வரலாறு (பாகம்-1)

சொல்ல மறந்த வரலாறு (பாகம்-2)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tags:

சொல்ல மறந்த வரலாறு (பாகம்-2)


IMG_2728

முன்ஷி

அரபு நாட்டிலிருந்து வந்து, தமிழ் நாட்டிலுள்ள நாகூரில் குடியேறி, மலேயா நாட்டுக்கு வாழ்வாதாரம் தேடி, மலாய் மொழியில் பாண்டித்தியம் பெற்ற அப்துல்லாஹ்விற்கு “முன்ஷி” என்ற உருதுமொழி அடையாளம் எப்படி ஏற்பட்டது? என்று ஒரு நண்பர் வினா தொடுத்திருந்தார். நியாயமான கேள்வி.

ஏராளமான பழைய இந்திப்படங்களில் “முன்ஷி” என்ற கதாபாத்திரம் இடம் பெற்றிருக்கும். ஜமீந்தாருக்கு கணக்குப்பிள்ளையாக வரும் அவர் வெய்ஸ்-கோட் அணிந்து, தலையில் மார்வாடி தொப்பி மாட்டிக்கொண்டு,. சோடா புட்டி கண்ணாடியை மூக்கு வரை தாழ்த்தி உற்றுப்பார்த்தவாறு, கையில் கணக்கு நோட்டும், தடித்த இங்க் பேனாவும் கையில் ஏந்தியவாறு திரைப்படத்தில் காட்சி தருவார்.

“முன்ஷி” என்ற உருது வார்த்தை பாரசீக மொழியிலிருந்து தழுவப்பட்டது. “முன்ஷி” என்றால் ஆசான், காரியதரிசி அல்லது எழுத்தர் என்று பொருள். முகலாயர்களின் அரசவையில் முன்ஷிகளுக்கு பெருத்த மரியாதை தரப்பட்டது. பன்மொழி வித்தகராக கருதப்பட்ட அப்துல்லாஹ்வுக்கு “முன்ஷி” என்ற கெளரவப் பட்டம் வழங்கி சிறப்பித்தார்கள். அதை வழங்கியது யார் என்பதை பிறகு பார்ப்போம்.

மலாய் மொழியின் மூலவார்த்தைகள் என்று ஆராய்ந்தாலே வெறும் 157 வார்த்தைகள் மட்டும்தான். பண்டைய காலத்து (7-14-ஆம் நூற்றாண்டு) மலாய் மொழியில் சம்ஸ்கிருதத்தின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இஸ்லாம் மார்க்கம் கீழை நாடுகளில் பரவ ஆரம்பித்தபோது (14-18-ஆம் நூற்றாண்டு), அதன் தாக்கம் மலாய் மொழியின் மீது அதிகம் காணப்பட்டது. அக்கால கட்டத்தில்தான் அரபி மற்றும் பாரசீக வார்த்தைகள் கலக்க ஆரம்பித்தன. 19-20 நூற்றாண்டுகளில்தான் நவீன மலாய் மொழி சுமார் 8,00,000 சொற்றொடர்களுடன் திருத்தி அமைக்கப்பட்டது.

இந்தியர்களின் தாக்கம் பற்பல நூற்றாண்டுகளாகவே கீழை நாடுகளில் இருந்து வந்தது, எனவே “முன்ஷி” என்ற உருது வார்த்தை அடைமொழியானது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இளமைப் பருவத்திலேயே மலாய் மொழியில் ஆளுமை பெற்றிருந்த அப்துல்லாஹ், இந்திய சிப்பாய்களுக்கு மலாய் கற்றுக் கொடுக்க ஆரம்பித்த காலத்தில் அவர்கள் மரியாதை நிமித்தமாக விளித்த “முன்ஷி” (ஆசான்) என்ற காரணப்பெயரே நிரந்தரமாக நிலைத்து விட்டது. அவருக்கு “இந்த” முன்ஷி பட்டம் வழங்கப்பட்டபோது அவருடைய வயது வெறும் பதின்மூன்று என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது

IMG_2739

அப்துல்லாஹ்வின் இளமை பருவம்

கெம்பங் பள்ளி என்ற சிறு கிராமத்தில் 1796 –ஆம் ஆண்டு முன்ஷி அப்துல்லாஹ் பிறந்தார் “விளையும் பயிர் முளையில் தெரியும்” என்பார்கள். இந்த பழமொழி அப்துல்லாஹ் விஷயத்தில் முற்றிலும் பொருந்தும்

அப்துல்லாஹ்விற்கும் குழந்தைப் பருவத்தில் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதனால் எப்போதும் அவர் சோர்வாகவே காணப்படுவார். அவரது தாயார் அவரை எந்தக் குறையும் இல்லாது நன்றாக கவனித்துக் கொண்டார். கடைக்குட்டி, அதுவும் ஒரே பிள்ளை, தவமிருந்து பெற்ற பிள்ளை, உடல்நலம் குன்றி காணப்பட்ட குழந்தை, இதுபோன்ற காரணங்களினால் சிறுவன் அப்துல்லாஹ் மீது அவரது தாயார் பெரிய ஆச்சி அளவற்ற பாசத்தை பொழிந்தார். தந்தையார் ஷேக் அப்துல் காதிர் அவர்களோ கண்டிப்பு என்றால் கண்டிப்பு; அப்படியொரு கண்டிப்பு.

இயக்குனர் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த “மேஜர் சந்திரகாந்த்” படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் ஏற்று நடித்த கதாபாத்திரம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டும். வைத்த இடத்தில்; வைத்த பொருள் இருக்க வேண்டும். காலையில் எழுவதும், படிக்கச் செல்வதும், வீடு திரும்புவதும், படுக்கைக்கு உறங்கச் செல்வதும் குறிப்பிட்ட நேரத்தில் நடந்தாக வேண்டும். அப்துல்லாஹ்வின் வீட்டிலும் இதே கதைதான்..

‘கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும்’ என்பார்கள்.அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள்.  கடுமையான கண்டிப்பு செலுத்திய அதே வேளையில் தந்தையார் அப்துல் காதிர் அவர் மீது மிகுந்த அக்கறை கொண்டதோடு, தன் மகன் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

நான்காவது வயதிலேயே அப்துல்லாஹ் எழுதப் படிக்க கற்றுக் கொண்டார். சிலேட்டில். அவர் எழுதியெழுதி பயின்றார். ஆறாவது வயதில் அவருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட சோர்வும் கடுமையான பலகீனமும் அவரை ஆட்டிப் படைத்ததால் கல்வியில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியவில்லை.

சிறுவயது முதற்கொண்டே அவர் கூர்மையான புத்தியும், எதையும் எளிதாக கிரகித்துக்கொள்ளக் கூடிய சக்தியை பெற்றிருந்தாலும் அவரது உடல்நலமின்மை அவரது வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தது.

திருக்குர்ஆன் பாடம் படிப்பதற்காக தந்தையார் அவரை மதரஸா அனுப்பி வைத்தார். மற்ற குழந்தைகள் அனைவரும் திருமறையை சரளமாக மனனம் செய்து ஒப்பித்தனர். ஆனால் சிறுவன் அப்துல்லாஹ் மட்டும் படிப்பதில் சற்று பின்தங்கியே இருந்தான். தன்னால் முழுமையான கவனத்தை செலுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் அப்துல்லாஹ்வை வாட்டி எடுத்தது..

மற்ற குழந்தைகள் யாவரும் திருமறையைக் கையில் ஏந்தி விழுந்து விழுந்து மனனம் செய்தனர். ஆசான் சொல்வதை சிரத்தையுடன் கற்றுக் கொண்டனர்.  அந்த நேரத்தில் அப்துல்லாஹ் மட்டும் சிலேட்டை கையில் வைத்துக் கொண்டு ஒரு ஓரத்தில் அமர்ந்து அரபி எழுத்துக்களை ஒவ்வொன்றாக கிறுக்கிக் கொண்டிருப்பான். நாளடைவில் ஒவ்வொரு அச்சரங்களையும் பொறுமையாக பசுமரத்தாணிபோல் தனது மனதில் பதிய வைத்துக் கொண்டான். கையெழுத்துக்களும் முத்து முத்தாக இருக்கும்.

அப்போது அவனுக்கு ஏழு வயது இருக்கும். திருமறையை மனனம் செய்வதில் மற்ற மாணவர்களை விட அப்துல்லாஹ் பின்தங்கி இருப்பதை அறிந்து ஆத்திரப்பட்டு ஒருநாள் பிரம்பால் பின்னி எடுத்து விட்டார். தான் கண்ட கனவுகளெல்லாம் வீணாகி விடுமோ என்ற மனவேதனை. அவனுக்கு ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டுமே. என்ன செய்வது? இம்போஸிஷன் எனப்படும் கடுமையான எழுத்துப்பயிற்சி கொடுப்பது என அப்துல் காதிர் தீர்மானித்தார்.

அப்துல்லாஹ்வினால் மனனம்தான் செய்ய முடியவில்லையே தவிர அரபி எழுத்துக்கள் அனைத்தையும் புரிந்துக்கொண்டு, நன்றாக எழுத தேர்ச்சி பெற்று, கோர்வையாக வார்த்தையாகவும் எழுத கற்றுக் கொண்டான்.

பள்ளிவாயிலுக்கு வந்துச் செல்லும் அத்தனை பெயர்களுடைய பெயர்களையும் தினமும் தந்தையிடம் அவன் எழுதிக் காண்பிக்க வேண்டும். எழுத்துக் கோர்வையில் பிழை இருந்தால் மீண்டும் மீண்டும் பிழையின்றி, திருத்தமின்றி எழுதிக் காட்ட வேண்டும்.

போகப்போக, இந்த எழுத்துப் பயிற்சி தண்டனை இன்னும் கடுமையாகியது,. திருக்குர்ஆனிலுள்ள அத்தனை அத்தியாயங்களையும் ஒவ்வொன்றாக தன் கையால் எழுதிக் காண்பிக்க வேண்டும், அதையும் செவ்வென எழுதி எழுதி தேர்ச்சி பெற்றான் அப்துல்லாஹ்.

இப்போது அப்துல்லாஹ் அரபி மொழி, மலாய் மொழி இவையிரண்டும் சரளமாக எழுதப்படிக்க கற்றுக் கொண்டான். அப்துல்லாஹ்விடம் ஊறிப்போயிருந்த அபாரத் திறமையை அப்துல் காதிரால் அறிந்துக் கொள்ள முடிந்தது. உள்ளுக்குள் அவருக்கு மிகுந்த சந்தோஷம்.  தான் ஆசைப்பட்டதைபோலவே தன் மகனை உலகமே மெச்சும் அளவுக்கு சிறந்த அறிவாளியாக ஆக்க உறுதி பூண்டார்.

இப்போது அதை விட கடுமையான பயிற்சி மேற்கொள்ள அப்துல்லாஹ்வை பழக்கப்படுத்தினார். திருமறை முழுவதையும் ஒவ்வொரு அத்தியாயமாக மலாய் மொழியில் மொழிபெயர்த்து எழுதிக் காட்ட வேண்டும். இத்தனை சிறுவயதில் இப்படியொரு சவாலான காரியத்தை முடிக்க யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

அப்துல்லாஹ் தனது 11-வது வயதிலேயே திருக்குர்ஆன் வசனங்களை எழுதிக் கொடுத்து சம்பாதிக்கவும் ஆரம்பித்து விட்டார்.

13-வது வயதில் மலாக்கா அரணில் முகாமிட்டிருந்த இந்திய முஸ்லிம் சிபாய்களுக்கு இஸ்லாமிய மார்க்க ஞானங்களையும் கற்றுக் கொடுக்க நியமிக்கப்பட்டார். சிப்பாய்களில் பெரும்பாலோர் வட இந்திய மாநிலத்திலிருந்த வந்திருந்த முஸ்லிம்கள். அவர்கள்தான் முதன்முதலில் இவரை முன்ஷி என்ற அடைமொழியிட்டு மரியாதையுடன் அழைக்கத் தொடங்கினர். பிறகு இதுவே இவரது பெயரின் அடையாளமாகி விட்டது என்பதை நாம் முன்னரே பார்த்தோம்.

பலமொழி கற்பதில் ஆர்வம் மிகுந்திருந்த அப்துல்லாஹ் அவர்களிடமிருந்து உருது மொழி பேசவும் நன்றாகக் கற்றுக் கொண்டார். பிற்காலத்தில் அவர் நூலாசிரியர் ஆனபொழுதில் அந்த அனுபவம் அவருக்கு மிகவும் கைகொடுத்தது.

அப்துல்லாஹ்வின் தந்தை அப்துல் காதிருக்கு பத்திரம் எழுதி கொடுப்பதுதான் பிரதான தொழிலாக இருந்து வந்தது. ஒருநாள் அவர் வெளியூர் சென்றிருந்த வேளையில் கப்பல் மாலுமி ஒருவருக்கு ஒரு ஒப்பந்த படிவம் அரசாங்க, பாண்டு பத்திரத்தில் எழுத வேண்டியிருந்தது. அப்பணியை சிறுவன் அப்துல்லாஹ்வே மேற்கொண்டு கனகச்சிதமாக எழுதி முடித்தான். மாலுமிக்கு அது மிகவும் பிடித்துப்போனது.

அதற்கான தொகை ஒரு டாலரையும் கொடுத்துவிட்டு அந்த மாலுமி அலுவலகத்தை விட்டு வெளியேறவும் அச்சமயத்தில் அப்துல் காதிர் வீட்டுக்குள் வந்து நுழையவும் நேரம் சரியாக இருந்தது.

அப்துல்லாஹ்வின் அபாரத் திறமையைக் கண்டு அவரது தந்தை பூரித்துப் போனார்,. செல்ல மகனை அப்படியே வாரி அணைத்து உச்சி முகர்ந்தார். அதன் பிறகு அப்துல் காதிர் மேற்கொண்டிருந்த மனு, பத்திரம், விண்ணப்ப படிவம், உடன்படிக்கை படிவம் பூர்த்தி செய்வது, மொழிபெயர்ப்பு போன்ற அனைத்து அலுவலக பணிகளிலும் கூடவே ஒத்தாசையாக இருந்து சிறப்பாக செயல்பட்டார். பிற்காலத்தில் அப்துல்லாஹ் மேற்கொண்ட எழுத்துப் பணிக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது.

அப்துல்லாஹ்வின மொழியார்வத்தை அறிந்த தந்தையார் மலாக்காவிலுள்ள மிகச்சிறந்த மலாய் மொழி ஆசான்களைத் தேடிப் பிடித்து அவருக்கு மொழிப்பயிற்சி அளித்தார். பழைய மலாய் கையெழுத்து ஏடுகளை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவற்றை காகிதத்தில் மறுநகல் எடுப்பது,. ஆசானை கேள்விகளால் திணறடிப்பது, ஒவ்வொரு வார்த்தைகளின் மூலத்தையும் ஆராய்வது;  இதுபோன்ற ஆர்வம் அவருடைய திறமைகளுக்கு கிரியாவூக்கியாக இருந்தன. மரபுமொழி, சொலவடைகள், பழமொழிகள் வட்டார வழக்குச் சொற்கள் இவைகளுக்கு அர்த்தம் கற்பித்து விளக்கவுரை எழுதினார்.

1811-ஆம் ஆண்டு, 14 வயது இருக்கும்போது அப்துல்லாஹ் மலாய் மொழியில் நன்றாக தேர்ச்சி பெற்று மொழி ஆளுமை நிறைந்த வல்லுனராக பெயரும் புகழும் பெற்று மலாக்காவில் செல்வாக்கு அடைந்திருந்தார்.

“Like Diamond, Palakkad is famous for 3 C’s  ie; Cook, Carnatic and Crooks” – என்பார்கள். இப்படிச் சொல்வதால் பாலக்காடு நண்பர்கள் கோபப்படுவார்களே என்று நினைக்க வேண்டாம். இதை பெருமையாக்ச் சொன்னது முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் டி.என்.சேஷன். அவரும் பாலக்காட்டுக்காரர் என்பதுதான் இதில் சுவராஸ்யம்.

அதுபோன்று நாகூரும் மூன்று விஷயங்களுக்கு மிகவும் பிரசித்திப்பெற்றது. நாகூர் அல்வா, நாகூர் பிரியாணி மற்றும் நாகூர் குசும்பு. இந்த நாகூர் குசும்பு என்ற வகையறாவில் கேலி, கிண்டல், வெடப்பு, கலாய்ப்பு, நையாண்டி, நக்கல், கஞ்சி காய்ச்சுறது, கூடு விடுவது இவைகளோடு யதார்த்த பழமொழிகளும் அடங்கும். இப்பழமொழிகள் அனைத்திலும் மெல்லிய நகைச்சுவை உணர்வு இழையோடும்.

எனது தந்தை வழி பாட்டி அம்மாஜியின் நினைவு எனக்கு வருகிறது. அவர் வாய் திறந்தால் பழமொழிகள் மடை திறந்த வெள்ளமாய் கொட்டும். இதை முதலில் செய்வதா அல்லது அதை முதலில் செய்வதா என்று யாராவது வினா தொடுத்தால் “போத்திக்கிட்டு படுத்தா என்ன; படுத்துக்கிட்டு போர்த்தினா என்ன?” என்பார்கள். சந்தோஷத்தில் ‘ஒண்ணுக்கெடக்க ஒண்ணு’  செய்தால் “பூனைக்ககு குஷி வந்தா புல்லுப் பாயை பிறாண்டுமாம்” என்பார்கள். கடுமையாக வார்த்தைகள் வாய்தவறி வந்தால் “ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்” என்பார்கள். அவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும் மற்றொரு பழமொழி “வெளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கேக்குதோ?” என்பதாகும்.

அப்துல்லாஹ்வின் மலாய் மொழி நடை உலகப்புகழ் பெற்றதற்கு காரணம் அவரது எழுத்துக்களில் காணப்படும் ஒரு துள்ளல் நடை, சொலவடை, பழமொழிகள், முதலியன,.

நாகூர் வம்சா வழியில் வந்த அதே ரத்தம், அதே மண்வாசம், பெரிய ஆச்சியின் வளர்ப்பில் கிடைத்த பயிற்சி இவையாவும் முன்ஷி அப்துல்லாஹ்வின் நகைச்சுவை உணர்வுக்கு உந்துதலாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

வெரை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்….?

(அடுத்த பாகம் மீண்டும் தொடரும்…)

 

Tags:

சொல்ல மறந்த வரலாறு (பாகம் – 1)


 

IMG_2732

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று

என்பது வள்ளுவன் வாக்கு. ஏதோ பிறந்தோம்; ஏனோ வாழ்ந்தோம்; ஏதும் செய்யாமல் மடிந்தோம் என்றில்லாமல் வாழ்க்கையின் மகத்துவத்தை உண்மையாய் உணர்ந்து, வரலாற்று சாதனை நிகழ்த்துபவனே இவ்வையகத்தில் பிறந்த பயனை முழுவதுமாக அடைகின்றான்.

வாழ்பவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்

என்று கண்ணதாசன் தன் பாட்டிலே வினா தொடுப்பான். இரண்டு நூற்றாண்டுகள் கழிந்த பின்னரும் இன்றளவும் எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும் ஒரு மாமனிதனின் பூர்வீகம் நாகூர் என்பது நம்மில் பலரும் அறிந்திராத தகவல்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

என்ற கவிஞர் வாலியின் வரிகளை மெய்ப்பிக்கும் ஒருவர்தான் நம் கட்டுரையின் நாயகன்.

முன்ஷி அப்துல்லாஹ்வின் பெயரை அறியாதவர்கள் சிங்கப்பூர் அல்லது மலேஷியாவில் யாருமே இருக்க முடியாது என்பது என் கருத்து.

“நவீன மலாய் மொழியின் இலக்கியத் தந்தை” என்று உலகளவில் போற்றப்படும் முன்ஷி அப்துல்லாஹ் நாகூரை பூர்வீகமாகக் கொண்டவர் என்ற செய்தி நாகூரில் பிறந்த ஒவ்வொரு மனிதனையும் தலை நிமிரச் செய்யும். .

மலேஷியா மற்றும் சிங்கப்பூர் –  இந்த இரு நாடுகளும் இந்த மாமனிதனை பெரிதும் கொண்டாடுகின்றன. காரணம் இவரது நாட்குறிப்பும், நூல்களும், ஆவணத் தொகுப்புகளும் இல்லாமல் போயிருந்தால் இந்நேரம் சிங்கப்பூரின் உண்மையான வரலாறே யாருக்கும் தெரியாமலேயே போயிருக்கும்

“திரை கடலோடியும் திரவியம் தேடு” என்ற ஒளவை பாட்டியின் வாக்குக்கு ஏற்ப சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேசியா நாடுகளில் குடியேறிய ஒவ்வொரு இந்திய வம்சா வழியினரையும் பெருமை கொள்ள வைத்த மாமனிதர் இவர்.

அப்துல்லாஹ்வின் சுயசரிதம்

முன்ஷி அப்துல்லாஹ்வின் சுயசரிதை

“In reading the lives of great men, I found that the first victory they won was over themselves… self-discipline with all of them came first”

என்று கூறுவார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹார்ரி எஸ். ட்ரூமன். முன்ஷி அப்துல்லாஹ்வின் சுயசரிதையான “ஹிதாயத் அப்துல்லாஹ்” என்ற நூலை நான் வாசிக்கத் தொடங்கியபோது அவருடைய நல்லொழுக்கமும், தன்னடக்கமும், சுயகட்டுப்பாடும்தான் அவரை ஒரு போற்றுதலுக்குரிய மனிதனாய் ஆக்கியது என்ற உண்மையை என்னால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது

மலாக்கா

முன்ஷி அப்துல்லாஹ்வின் பாரம்பரிய வீடு

அரசுடமையாக்கப்பட்ட முன்ஷி அப்துல்லாஹ்வின் பாரம்பரிய இல்லம்

மலேசியாவிலுள்ள 13 மாநிலங்களில் மூன்றாவது சிறிய மாநிலம்தான் இந்த மலாக்கா. இது உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 148 கி.மீ. தொலைவில் மலாக்கா நகரம் அமைந்துள்ளது

முன்ஷி அப்துல்லாஹ் பிறந்து வளர்ந்தது யாவும் மலேசியாவிலுள்ள மலாக்கா என்றாலும் தன்னை நாகூர்க்காரர் என்று சொல்லிக்கொள்வதில் அவருக்கு அளவற்ற பெருமை. தன் குடும்பத்தினர் நாகூரிலிருந்து வந்து குடியேறிய இந்திய வம்சா வழியினர் என்று அவ்வப்போது மார்தட்டிக் கொள்வார்.

முன்ஷி அப்துல்லாஹ், 1797-ஆம் ஆண்டு மலாக்காவிலுள்ள “கெம்பங் பள்ளி” என்ற இடத்தில் பிறந்தார். சந்தேகமே வேண்டாம்;  தமிழ் மொழியில் காணப்படும் பள்ளிவாயில் என்ற வார்த்தையின் சுருக்கம்தான் இந்த “பள்ளி”. தமிழ் மொழி எந்த அளவுக்கு அங்கெல்லாம் அப்போது பரவியிருந்தது என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.  அதன் பிறகு இச்சிற்றூர் “கெம்பங் மஸ்ஜித்” என்று அழைக்கப்பட்டது,  யுனெஸ்கோ நிறுவனத்தினால் உலக பாரம்பரிய தளமாக இச்சிற்றூர் அறிவிக்கப்படுள்ளது. வெறும் ஏழு பாரம்பரிய வீடுகள் மாத்திரமே இந்த கிராமத்தில் உள்ளன

அப்துல்லாஹ் போன்ற அறிவாளிகள் மலாக்காவுக்கு வாய்த்திருந்தபோதிலும் ஏன் “மலாக்கா பேயன்” என்ற சொலவடை என் நண்பர் எழுத்தாளர் ஆபிதீன் போன்றவர்களிடம் மாட்டிக்கொண்டு “லோல்” படுகிறது என்று புரியவேயில்லை.

முன்ஷி அப்துல்லாஹ்வின் வம்சாவழி

அப்துல்லாஹ்வின் தந்தை வழி பூட்டி நாகூரைச் சேர்ந்தவர்.

அப்துல்லாஹ்வின் தாய்வழி பூட்டனார் ஏமன் நாட்டு வணிகர். அவர் பெயர் ஷேக் அப்துல் காதிர்.  அந்தப் பெயரைத்தான் அப்துல்லாஹ்வின் தகப்பனாருக்கும் சூட்டினார்கள்.

அப்துல்லாஹ்வின் பூட்டனார் ஷேக் அப்துல் காதிர் நாகூரில் அரபி பயிற்றுவித்துக் கொண்டிருந்தவர். மார்க்க ஞானம் நிறைந்தவர். அரபு வம்சத்தைச் சார்ந்த இவருக்கு ஊரில் பெருத்த மதிப்பும், மரியாதையும் நாகூர்க்காரர்கள் தந்தார்கள். இவர் மணமுடித்ததும் நாகூரில்தான். மரணித்ததும் நாகூரிலேயேதான்.

இவருக்கு மொத்தம்  நான்கு மகன்கள். 1) முஹம்மது இப்ராஹிம், 2) முஹம்மது லாசா, 3) நூர் முஹம்மது மற்றும் 4) ஜைனுலாபுத்தீன்.

ஷேக் அப்துல் காதிரின் மறைவுக்குப் பின்னர்  அவரது மகன்கள் நால்வரும் வாழ்வாதாரம் தேடி கீழைநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். முஹம்மது இப்ராஹிம் மலாக்கா வந்தடைந்து அந்த ஊரிலிருந்த தமிழ் முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த மீரா லெப்பை என்பவரின் மகளார் பெரிய ஆச்சி என்ற பெண்மணியை மணமுடித்துக் கொண்டார். பெரிய ஆச்சி பள்ளிப் படிப்பை முடித்தவர். சமூக நல ஆர்வலர். வீட்டையும் கவனித்துக் கொண்டு அந்த ஊரிலுள்ள பிள்ளைகளுக்கும் கல்வி கற்பித்து வந்தார்.

இவர்கள் இருவருக்கும் பிறந்தவர்தான் அப்துல்லாஹ்வின் தந்தை ஷேக் அப்துல் காதிர். அப்துல்லாஹ்வின் பூட்டனார் பெயரைத்தான் அப்துல்லாஹ்வின் தந்தைக்கும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அப்துல்லாஹ்வின் உடன்பிறந்த மூத்த சகோதரர்கள் நான்கு பேர். ஐந்தாவதாக தவமிருந்து பெற்ற கடைக்குட்டிதான் நம் கட்டுரை நாயகன் அப்துல்லாஹ்.

சகோதர்கள் நான்கு பேரும் ஒன்றன்பின் ஒன்றாக இளமையிலேயே இறந்து போனார்கள். ஒரு குழந்தை ஆறு மாதத்திலும், அடுத்த குழந்தை ஒரு வயதிலும். மற்றொன்று இரண்டு வயதிலும், இன்னொன்று மூன்று வயதிலும் மரணித்து விட்டன. அடுத்தடுத்து ஏற்பட்ட துயரம் அப்துல்லாஹ்வின் தந்தையார் ஷேக் அப்துல் காதிரை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியது. அப்துல்லாஹ்வின் தாயார் குழந்தைகளின் இழப்பில் பித்து பிடித்தவர்போல் ஆகிவிட்டார். வாழ்க்கையே இருண்டது போல் ஆகிவிட்டது அவர்களுக்கு, அழுதழுது அவர் பலமிழந்து போனதுதான் மிச்சம். அக்கால கட்டத்தில் அப்துல்லாஹ் பிறக்கவில்லை. பிறகுதான் பிறந்தார்.

அத்தருணத்தில்தான் ஒரு அரபு நாட்டு மார்க்க அறிஞர் மலாக்கா வந்து சேர்ந்தார். அரபுநாட்டு ஹத்தாத் பழங்குடியைச் சார்ந்த அவரது பெயர் ஹாபில் அப்துல்லாஹ். அவர் மலாக்கா வந்தடைந்த பிறகு மார்க்க ஞானத்தை பெறுவதற்கு அவ்வூரிலுள்ளோர் அவரை நாடிச் சென்றனர்.

அந்த ஊரிலுள்ள ஆடவர், பெண்டிர், குழந்தைகள் உட்பட அனைவரும்  மார்க்க போதனை பெறுவதற்கு அவரை நாடிச் சென்றபோது ஷேக் அப்துல் காதிரின் மனைவி மாத்திரம் வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடந்தார். காரணம், தொடர்ச்சியாக குழந்தைகளை பறிகொடுத்த சோகம் அவரை மிகவும் வாட்டியது, ஏன்தான் தன் வாழ்வில் இப்படியொரு சோகம் என்று அவருக்கு புலப்படவில்லை. குழந்தைகளின் தொடர் இழப்பால் எற்பட்ட மீளாத்துயரில் இருந்து அவரால் அவ்வளவு சீக்கிரம் மீண்டு வர முடியவில்லை. திருமறையை ஓதுவதும், தொழுவதும், அழுவதுமாக ருடைய பொழுது கழிந்தது.

ஷேக் அப்துல் காதிரின் இல்லத்திற்கு  நேர் எதிர் வீட்டில்தான் மார்க்க அறிஞர் ஹாபில் அப்துல்லாஹ் பின் ஹத்தாத் வசித்து வந்தார். சப்தமாக அவரது மனைவி தேம்பி அழும் ஓசை ஒருநாள் அப்பெரியவரின்  காதில் விழுந்தது, அவர் துடிதுடித்துபோனார். அவர்களின் பிரச்சினையை அறிந்து அதற்கு தீர்வு காண  ஷேக் அப்துல் காதிரிடம் நேரில் சந்தித்து பேச விரும்பினார். ஷேக் அப்துல் காதிரின் வீட்டில் ஏற்பட்ட தொடரான துயரச் சம்பங்களை அண்டை வீட்டார் மூலம் அறிந்து அவர் மிகவும் வேதனையுற்றார். ஒருநாள் அவரை நேரில் அழைத்து,

“எதற்கும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அல்லாஹ் போதுமானவன். இறையருளால் சீக்கிரமே உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அதற்கு அப்துல்லாஹ் என்ற என் பெயரையே வையுங்கள்” என்று ஆசிர்வதித்தார்.

ஷேக் அப்துல் காதிருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஓடோடிச் சென்று தன் மனைவியிடம் இந்த நற்செய்தியை பகிர்ந்தார்.

“நீ ஒன்றும் கவலைப்படாதே. நமக்கு நல்ல நேரம் வந்து விட்டது. நாம் பட்ட துயரங்களுக்கெல்லம் விடிவு காலம் பிறந்து விட்டது. நமக்கு ஆறுதலாக இறைவனே  இப்பெரியவரை நம்மிடம் அனுப்பி இருக்கிறான் என்று எண்ணுகிறேன். சீக்கிரமே நமக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கும். அவனை வளர்த்து ஆளாக்கி மிகச் சிறந்த மனிதனாக ஆக்குவேன்” என்று உளம் பூரித்தார்.

அன்றிலிருந்து அவர் மனைவி அழுகையையும் நிறுத்தி விட்டார். அந்த மகான் சொன்னது போலவே நல்வாக்கு பலித்து,  ஷேக் அப்துல் காதிருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  மகான் சொன்னது படியே அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்கள்

இந்த அப்துல்லாஹ்தான் மலேயா நாட்டு சரித்திரப் புரட்சிக்கு வித்திடப்போகிறார் என்ற ரகசியம் அப்போது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

Jalan Munshi Abdullah

முன்ஷி அப்துல்லாஹ்வின் நினைவாக பெயர் சூட்டப்பட்டிருக்கும் நெடுஞ்சாலை

மலேஷியா நாட்டின் ஒரு நெடுஞ்சாலைக்கு இவரது நினைவாக  “ஜாலான் முன்ஷி அப்துல்லாஹ்” என்று பெயர் சூட்டப்படுள்ளது. நம் தமிழகத்தில் சோபன் பாபுவுக்கு கூட சிலை வைப்பார்கள் அது வேறு விஷயம். அங்கு ஒரு மனிதருக்கு இத்துணை வரவேற்பும், கெளரவமும், முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது என்றால் அவர் எப்பேர்ப்பட்ட சாதனை நிகழ்த்தி உள்ளார் என்பதை நம்மால் எளிதில் புரிந்துக் கொள்ள முடிகிறது

அதுமட்டுமல்ல அப்துல்லாஹ்வின் பூர்வீக வீடு மலேஷியா அரசாங்கத்தால் அரசுடமை ஆக்கப்பட்டு பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அப்துல்லாஹ் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனைகள் என்னவென்று ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பாகத்தில் விலாவாரியாக அலசுவோம்.

அப்துல் கையூம்

கட்டுரை தொடரும் (இறைவன் நாடினால்..)

References:

  • Abdullah Abdul Kadir, Munshi. (1969). The Hikayat Abdullah: The autobiography of Abdullah Abdul Kadir, 1797-1854 (pp. 1, 5-26, 31-40, 48-56, 73-75, 103-111, 121, 309). Singapore: Oxford University Press.
  • Buckley, C. B. (1984). An anecdotal history of old times in Singapore: 1819-1867 (pp. 28-29, 321, 354, 557). Singapore: Oxford University Press.
  • Dunlop, P. K. G. (2000). Street names of Singapore (p. 216). Singapore: Who’s Who Publication
  • Shellabear, W. G (Trans). (1918). The autobiography of Munshi Abdullah. Singapore: Methodist Publishing House.
  • Sng, B. E. K. (1980). In His good time: The story of the church in Singapore, 1819-1978 (pp. 33-34, 54-55). Singapore: Graduates’ Christian Fellowship.
  • Turnbull, C. M . (1972). The Straits Settlements, 1826-67: Indian presidency to crown colony (p. 17). London: Athlone Press.
  • A history of Singapore (p. 300). (1996). Singapore: Oxford University Press.
  • Abdullah Abdul Kadir, Munshi. (1967). Voyage of Abdullah being an account of his experiences on a voyage from Singapore to Kelantan in A.D. 1838. Kuala Lumpur: Oxford University Press.
 

Tags: