இஸ்லாமியர்களின் மனதை கமல் புண்படுத்திய சாதனையைக் கண்டு சிவபெருமானே வியந்து போயிருக்கிறாராம். கமல் ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள். “எனக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது; நான் ஒரு நாத்திகன்” என்று பெருமைபடும் கமலைப்பார்த்து ஏன் சிவபெருமான் வியக்க வேண்டும் என்றுதான் எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. மாறாக “நீ என்னை நம்பவில்லை, அல்லவா? உனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்” என்றல்லவா சிவபெருமான் அவருக்கு சாபம் விட்டிருக்க வேண்டும்?
வரும் வியாழக்கிழமை ‘விஸ்வரூபம்’ படம் திரையிடப்படும் நிலையில், ‘அந்த படத்தை காழ்ப்புணர்ச்சியால் முடக்க வேண்டும்; கமலின் முதலீட்டுக்கு நஷ்டம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணம் இஸ்லாமிய அமைப்புகளுக்கு சற்றும் கிடையாது. அவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக, நியாயமான முறையில் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்’ என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.
“படம் முழுவதிலும் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே படத்தை தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று கருத்து தெரிவித்தவர்கள், மதச்சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டு ஒருசில மிகமோசமாக சித்தரிக்கப்படும் காட்சிகளை மட்டும் களைவதற்கு ஒத்துக்கொண்டு, பெருந்தன்மையாக இஸ்லாமிய அமைப்புகள் நடந்துக் கொண்டது அவர்களது பண்பையும், நாகரிகத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
‘ரோஜா’, ‘பம்பாய்’ படம் வந்தபோதெல்லாம் ஏற்படாத ஒரு கூட்டமைப்பு இப்பொழுதாவது வந்திருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைபவர்கள் பலர். இந்த ஒற்றுமை நீடிக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Better Late than Never
ரசிகர்களுக்கும், தடை உத்தரவு பிறப்பித்த செல்வி ஜெயலலிதாவுக்கும் நன்றி சொன்ன கமல், பேச்சுவார்த்தை நடத்திய இஸ்லாமிய கூட்டமைப்பினருக்கு நன்றி சொல்லாதது ஏன் என்றுதான் இன்னமும் புரியவில்லை.
தீவிரவாதி முல்லா உமர் அமெரிக்காவில் இருந்து தப்புவதுபோல் ‘விஸ்வரூபம்’ படத்தை கமல் முடித்துள்ளார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தின் 2-ம் பாகத்தில் முல்லா உமர் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிடுவது போன்றும் அதனை கமல் முறியடிப்பது போன்றும் திரைக்கதை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இரண்டு தரப்பினரையும் பதற்றத்துடனே வைத்திருப்பதில் அப்படியென்ன ஒரு திருப்தி கமலுக்கு என்றுதான் நமக்கு புரியவில்லை.
தடை உத்தரவை தனது விளம்பர யுக்திக்காக சாதகமாக்கிக் கொண்டு, இஸ்லாமிய அமைப்புகளுக்கு கமல் திறமையாக ‘அல்வா’ கொடுத்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. திரை அரங்குகளில் முன்பதிவுகள் எல்லாம் நிரம்பி வழிவதைப் பார்க்கையில் கமலின் விளம்பர யுக்தி நன்றாகவே வேலை செய்கிறது என்பது மட்டும் உறுதி.
தடைஉத்தரவு நீடித்த சமயத்தில் தேனீ நாடளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஹாரூன் அவர்களையும், ‘லெட்டர் பேட்’ இயக்கத்திற்கு சொந்தமான கோனிகா பஷீரையும் கமல் அழைத்து, இவர்கள்தான் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் பிரதிநிதிகள் என்பதைப்போன்று பேரம் பேசியது நகைப்பிற்குரியதாக இருந்தது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையின்போது மெளனம் காத்த ஜே.எம்.ஹாரூன் அவர்கள் சமுதாய அக்கறையோடு(?) வரிந்துக் கட்டிக்கொண்டு முத்தரப்பு பேச்சுவார்த்தை என்று களத்தில் குதித்ததற்கு காரணம் அவர் ‘விஸ்வரூபம்’ படத்தின் மலேசியா நாட்டில் திரைப்படம் வெளியிடுவதற்கான திரைப்பட வெளியீட்டு உரிமையைப் பெற்றிருந்ததுதான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
தீர்ப்பு அளித்தபின் எந்த நீதிபதியாவது பிரதிவாதிக்கு ஆதரவாக வாதியிடம் பேரம் பேசுவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தணிக்கைக் குழுவில் இடம்பெற்று விஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளித்த ஹஸன் முகம்மது ஜின்னா இதற்கொரு நல்லுதாரணம்.
விஸ்வரூபம் பெற்றுத் தந்த பாடம் கொஞ்சநஞ்சமல்ல. இதிலிருந்து ஒவ்வொருவரும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடித்தவர்கள்தான் எத்தனை எத்தனைப்பேர்?
“முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றும், “நான் லுங்கி அணியாத முஸ்லிம், தொப்பி போடாத இஸ்லாமியன்” என்றும், “ஒரு கையிலே குடிஅரசு ஏடும், மற்றொரு கையிலே ‘தாருல் இஸ்லாம்’ ஏடும்தான் அக்காலத்தில் என் கைகளில் அலங்கரிக்கும்” என்றும் சூளுரைத்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த சந்தர்ப்பத்தை எப்படி சாதூர்யமாக ஜெயலலிதாவுக்கு எதிராக பயன்படுத்திக் கொண்டார் என்பதையும் நாம் பார்த்தோம்.
பழனிபாபா காலந்தொட்டே “நான் முஸ்லீம்களின் தோழன்” என்று மார்தட்டிய மருத்துவர் ராமதாஸ் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதையும் புரிந்துக்கொள்ள முடிந்தது. இதில் ‘சாத்தான் வேதம் ஓதிய கதை’யாக எந்த முகத்தோடு அவர் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து அறிக்கை விட்டார் என்று நமக்கு புரியவில்லை. வன்னிய இனத்தைச் சேர்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கொல்ல வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த்தின் “பாபா” படத்தை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் பார்க்கக் கூடாது என்று அறிக்கை விட்டவர்தான் இந்த ராமதாஸ். “சினிமாக் காரர்களுக்குப் பின்னால் கொடிபிடித்தே நம் நாட்டு மக்கள் கெட்டு குட்டிச் சுவராய் போய் விட்டனர்” என்று அறிக்கை விட்ட ராமதாஸ்தான் இப்போது கமலுக்காக கொடி பிடிக்கிறார். “பாபா” படத்தில் ரஜினிகாந்த் சிகரெட் குடிக்கிறார் என்று காரணம் காட்டி அந்த படத்தின் படப்பெட்டிச் சுருளை ஆளைவைத்து முந்திரிக்காட்டுக்குள் ஒளித்து வைத்து, தொண்டர்கள், குண்டர்கள் உதவியோடு திரையரங்குகளை சேதப்படுத்தி சூறையாடியவர்தான் இந்த ராமதாஸ்.
சர்ச்சைக்குரியவரும், விவகாரம் பண்ணும் ஆசாமி என்று பெயர் பெற்றவருமான சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் நடுநிலையாக நடந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது.
தொல்திருமாவளவன் போன்றவர்களுடைய நியாயமான அறிக்கை முஸ்லீம்களுக்கு ஆதரவாக அமைந்தது.
பிரச்சினைக்குரிய காட்சிகள் இருந்தால் கட்டாயம் நீக்கப் பட வேண்டும் என்று சீமான் அறிக்கை விட்டது அவருடைய துணிச்சலைக் காட்டியது.
முத்தாய்ப்பாக தமிழக முதல்வர் அவர்களின் பாரபட்சமில்லா செயல்பாடுகள் பாரட்டத்தக்கதாக இருந்தன. மாநிலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு பொறுப்புள்ள முதல்வராய் அவர் செயல்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
நடுநிலையாக கருத்து சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் ‘அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்து’, ‘ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால்’ என்ற நிலையில், ‘மதில்மேல் பூனை’யாக விவாதித்த மனுஷ்யபுத்திரன் அவர்களையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
“விஸ்வரூபம்” திரைப்பட விவகாரத்தினால் எத்தனை நண்பர்கள் எதிரியானார்கள் என்று சொல்ல இயலவில்லை. “விஸ்வரூபம்” தந்த பாடம் யோசிக்க வேண்டிய ஒன்று. இந்து-முஸ்லீம் சகோதரர்களிடையே ஒரு தற்காலிக இடைவெளியை ஏற்படுத்தியது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
முஸ்லீம்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஊடகங்களிலும், இணையத்தள பதிவுகளிலும், முகநூலிலும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் எதிர்மறை விமர்சனங்களை பெரிதும் சந்திக்க வேண்டியதிருந்தது.
அதேசமயம் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருந்த வேளையில் கமல் அவர்களை கண்ணியமற்ற முறையில் மதிப்பிற்குரிய பி.ஜெய்னுலாப்புத்தீன் அவர்கள் விமர்சித்தது ‘எரிகிற தீயீல் எண்ணையை ஊற்றுவது’ போலிருந்தது. ஏன் பீ.ஜெ. பேசியதில் என்ன தப்பு? புவனேஸ்வரி விஷயத்தில் தினமலர் ஆசிரியரை கேடுகெட்ட முறையில் சினிமாக்காரர்கள் மேடையில் விமர்சித்ததை விடவா இவர் விமர்சித்துவிட்டார் என்று இதற்கு எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்.
இதே வார்த்தையை ஒரு நன்னிலம் நடராசனோ, வண்ணை ஸ்டெல்லாவோ, தீப்பொறி ஆறுமுகமோ மேடையில் பேசியிருந்தால் யாரும் கவலைப்படப் போவதில்லை. சமுதாயத்தில் ஒரு தலைவர் அந்தஸ்த்தில் இருக்கும் ஒருவர் பேசிய பேச்சு எல்லோரையும் முகஞ்சுளிக்க வைத்தது. நடுநிலையாளர்களைக்கூட எதிரியாக மாற்றியது.
தங்களின் மத உணர்வை புண்படுத்துகிறது என்று உணர்ந்து சட்டரீதியாக ஜனநாயக முறையில் போராடிய ஒரு சமூகத்தாரின் மீது பரவலாக ‘மதவெறி பிடித்தவர்கள்’ என்ற சாயம் பூசப்பட்டதை அனுபவ ரீதியாகக் கண்டோம்.
ஒரு படைப்பாளிக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டுமா? வெகுஜனங்களுக்கு அது இருக்கக் கூடாதா?
- “இது எங்களுடைய மதஉணர்வை காயம் படுத்துகிறது. இதன் விளைவால் ஒரு சமூகத்தார் மீது தவறான ஒரு புரிதலை ஏற்படுத்தும்.”
- “உண்மைக்கு புறம்பான விஷயங்கள் ஆவணப்படம் என்ற போர்வையில் வெளிவரக்கூடாது”.
- “இது ஒரு கற்பனை பாத்திரம்; இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை என்ற அறிவிப்புடன் இப்படத்தை வெளியிட வேண்டும்”
- “இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலாக கருதும் திருக்குர்ஆன் வசனங்களை தவறான இடத்தில் ஒலிப்பதை ஆட்சேபிக்கிறோம்”.
இஸ்லாமியர்களின் இந்த நியாயமான கோரிக்கைகள் எப்படி “மதவெறி” கருத்துக்கள் ஆகும்?
இஸ்லாமிய அமைப்புகள் தமிழக அரசிடம் செய்த முறையீட்டினை “கலாச்சாரத் தீவிரவாதம்” என்று கமல் வருணித்தது முறையான செயலா? அப்படியென்றால் முறையீட்டவர்கள் தீவிரவாதிகள் என்றுதானே அர்த்தம்?
சமுதாயப் பொறுப்புடைய ஒருவர் பேசும் பேச்சா இது?
“விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்கள் தேசபக்தி இல்லாதவர்கள்” என்று கமல் அறிக்கை விட்டார். இவர் எந்த நாட்டு தேசபக்தியைச் சொல்கிறார்? இவர் சொல்ல வருவது இந்திய தேசத்தையா அல்லது அமெரிக்க தேசத்தையா?
ஆப்கான் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டினால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று கேட்கிறார்கள். பயங்கரவாதத்தை உலகமெங்கும் தூவி வரும் அமெரிக்கர்களை நல்லவர்கள் என்று காட்டுவது எந்த வகையில் நியாயம்?
‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்பார்கள். கமல் ஆஸ்கார் விருது வாங்குவதற்கு முஸ்லீம்கள்தான் இளிச்சவாயர்களாக கிடைத்தார்களா?
“தான் காந்தியின் பக்தன் என்றும் காந்தீய வழியிலேயே தனது அணுகுமுறைகளும் இருக்கும்” என்று கூறி மகாத்மா காந்திக்கும் ஏன் அவர் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கிறார் என்றுதான் நமக்குப் புரியவில்லை. நூறு கோடி பட்ஜெட் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி அவர் அடிக்கும் இந்த Public Stunt-கள் அனைத்தையும் பார்க்கும்போது அவருக்கு காந்தியை விட காந்திபடம் போட்ட நோட்டுக்களை பன்மடங்காக பெருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.
காந்தி மீதும், இந்தியா மீதும் இத்தனை அன்பு வைத்திருக்கும் இவர் மதசார்பற்ற நாட்டைத் தேடிப் போவேன் என்று ஏன் கூற வேண்டும்? இந்தியாவை விட ஒரு மதச்சார்பற்ற வேறு தேசம் பூமியில் எங்கு இருக்கிறது என்று நமக்கு அவர் விவரிக்கட்டும். அமெரிக்காதான் அந்த மதச்சார்பற்ற நாடு என்று அவர் தப்புக்கணக்கு போட்டிருந்தால் அது அவரது அறியாமையாகத்தான் இருக்க வேண்டும். தனது பெயர் முஸ்லீம் பெயரோடு ஒத்திருந்த ஒரே காரணத்தினால் ‘பாதுகாப்பு சோதனை’ என்ற பெயரில் அமெரிக்க விமான நிலையத்தில் அலைக்கழிக்கப்பட்டதை அவர் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
ஒரு படத்தை படமாக பார்த்து விட்டுப் போவதுதானே? உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் தவிர்த்துவிட்டு போகலாமே? ஏன் அதை தடுக்க வேண்டும்? என்பதுதான் பெரும்பாலோனோர் எழுப்பிய கேள்வி. நியாயமான கேள்விதான். அப்படிச் செய்திருந்தால் ஒருவேளை இதுவும் ‘பத்தோடு பதினொன்றாக’ Flop படமாக போயிருக்கக் கூடும். இவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்காது. இத்தனை எதிர்பார்ப்பும் மிகுந்திருக்காது. ஒரு சில கோடிகள் கூடுதலாக வசூல் ஆகப்போவதற்கு கமல் முஸ்லீம் சமுதாயத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
இப்படி ஒரு எதிர்ப்பு உருவாகும் என்பது கமலுக்கு நன்றாகவே தெரியும். “துப்பாக்கி” படத்திற்கு எதிர்ப்பு வந்தபோதே இது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்று அவர் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார். இதையே ஒரு கருவியாக வைத்து அனுதாப அலையை உண்டாக்கி ரசிகர்களை பரவசப்படுத்தி பணம் பண்ணி விடலாம் என்று அப்பொழுதே திட்டமும் தீட்டி விட்டாரோ?
தொடக்கத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்குவதற்கு கமல் உடன்படவில்லை. இஸ்லாமிய அமைப்புகளிடம் கூடிப்பேசி அப்பொழுதே ஆட்சேபனைக்குரிய காட்சிகளைக் களையும் முடிவை எடுத்திருந்தால் படவெளியீட்டில் எந்த ஒரு தாமதமும் ஏற்பட்டிருக்காது. ஆனால் இந்த அளவுக்கு இலவசமாக விளம்பரம் கிடைத்திருக்குமா? இரவு பகலாக ஊடகங்களில் இதுபற்றிய செய்திகள் ஓடிக் கொண்டிருக்குமா? கமலைப் பொறுத்தவரை இது ஒரு ஜாக்பாட் சந்தர்ப்பம். அதை லாவகமாக முழுக்க முழுக்க தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கமல் திறமையான கலைஞன், திறமையான வியாபாரி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.
கமல் இஸ்லாமியர்கள் மனதை மட்டும் புண்படுத்துவதை ஒரு வாடிக்கையாக கொள்ளவில்லை. தான் சார்ந்திருக்கும் பிராமணச் சமூகத்தையும், இந்து மதத்தையும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இழிவுபடுத்தி வருபவர்தான் இந்த கமல். “பூணூல் என்பது சொறிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கிறது” என்று கிண்டல் செய்தவர் அவர். இதைவிட ஒருவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கேவலமாக இழிவுபடுத்த முடியுமா என்று எனக்குத் தெரியாது.
“மன்மதன் அம்பு” என்ற கமல் படத்தில் “கண்ணோடு கண்ணை கலந்தாள்” என்ற பாடலில் அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்த வரிகள் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என்ற ஆட்சேபனை இந்துக்களின் மத்தியிலிருந்து எழுந்தது. அந்த பாடலை நீக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் போராடியபோது “சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த பாடலை நீக்க முடியாது” என்று இதேபோன்று வாதிட்ட கமல் பின்னர் அந்த பாடலை நீக்க ஒப்புக் கொண்டது எல்லோருக்கும் நினைவிருக்கும்.
இந்தியில் வெளிவந்த “A Wednesday” படத்தைத் தழுவி “உன்னைப் போல் ஒருவன்” படத்தை எடுத்திருந்தார் கமல். “A Wednesday” படத்தில் ஒரு இந்து, தீவிரவாதம் செய்வது போலவும், தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது போலவும் காட்சி அமைப்புகள் கிடையாது. ஆனால் “உன்னைப்போல் ஒருவன்” படத்தில் வேண்டுமென்றே இந்து கதாபாத்திரத்தை உருவாக்கி இந்துக்களுக்கு எதிரான வசனங்களைத் திணித்திருந்தார்.
விஸ்வரூபம் படத்தில் பிராமணப் பெண்ணாக நடிக்கும் கதாநாயகிக்கு சிக்கன் சமைத்துக் கொடுத்து தன் சொந்த சமூகத்தாரின் மனதை புண்படுத்துவது தேவைதானா?
Times Now பேட்டியில் “இனி மதங்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் வைப்பீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல் “இனி இஸ்லாமிய, கிறித்துவ, பவுத்த, சீக்கிய மதங்களை புண்படுத்துவதுபோல காட்சிகள் வைக்க மாட்டேன்” என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்து மதத்தின் பெயரை சொல்லாமல் விட்டது எனக்கு தற்செயலாகத் தோணவில்லை. “எலி ஏன் எட்டுமுழ வேட்டி கட்டிக்கொண்டு போகிறது?’ என்று போகப் போகத்தான் தெரியும். பணம் பண்ணவும், இலவசமாக விளம்பரம் தேடவும் அடுத்து எந்த ஜாதியினர், எந்த மதத்தினர் கமலின் இச்சைக்கு பலிகடா ஆகப் போகிறார்கள் என்று சொல்லத் தெரியவில்லை.
கமலை ஒரு Sadist என்று வர்ணித்த அவரது முதல் மனைவி வாணி கணபதியின் கூற்று இங்கு பொருந்துகிறது. பிறருடைய துன்பத்தில் இன்பத்தைக் காண்பவனின் பெயர்தான் Sadist. பிறமதத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தி இரசிப்பதில் அப்படி என்ன ஒரு சந்தோஷம் கமலுக்கு என்று எனக்குத் தெரியவில்லை.
“கமல் ஒரு தமிழன். வேறு மாநிலக்காரன் எல்லாம் இங்கே வந்து பிழைக்கிறான். தமிழன் எடுத்த படத்தை தமிழனே எதிர்ப்பதா?” என்றெல்லாம் தொலைக்காட்சி செய்திகளில் தமிழ் ரசிகர்கள் கொந்தளித்து எழுந்தார்கள். கமல் தமிழர்தான். யார் இல்லையென்று சொன்னது? தங்கஊசி என்பதினால் கண்ணிலா எடுத்துக் குத்திக் கொள்ள முடியும்?”
குஷ்பு தமிழ்ப்பெண்களை அவதூறாக கூறியபோது தமிழ்நாடே கொந்தளித்தது. ஜெயராம் தமிழ்ப் பெண்களை கிண்டலடித்தபோது அவருடைய வீட்டை அடித்து நொறுக்கினார்கள். அதே சமயம் கமல் தமிழர் பண்பாட்டையே குழிதோண்டி புதைத்தபோது பெரிதாக எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை. ஏன் என்று நமக்கு புரியவில்லை. குஷ்பு ஒரு வடநாட்டுப் பெண். ஜெயராம் ஒரு மலையாளி. கமல் ஒரு தமிழன். தமிழன் தமிழனை தாரளமாக இழிவு படுத்தலாம் என்பதாலா?
“விருமாண்டி” படத்தின்போது எழுந்த பிரச்சினையின்போது கமல் சொன்ன கருத்து இது: “ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாறும் பண்பாடு தமிழ்ப் பண்பாடு, ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு தமிழ்ப் பெண்டிர் மார்பை மூடும் ஜாக்கெட் அணிந்ததில்லை, ‘சும்மா’தான் இருந்தார்கள், இப்போது அதுதான் தமிழ்ப் பண்பாடு என்று மூடிக் கொள்கிறார்கள் என்றார்.
”கடாஅக் களிற்றின்மேற் கண்படாம் மாதர் –
படாஅ முலைமேல் துகில்” – குறள், 1087.
என்று 2000 ஆண்டுகட்கு முன்னரே எழுதி வைத்த திருவள்ளுவர் பொய் சொல்லுகிறார் போலும். கமல் மட்டுமே தமிழ் வரலாற்றை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் என்றுதானே அர்த்தமாகிறது.
கமலுக்கு தன் அருமை மகள் அரைகுறை உடையில் திரையில் தோன்றினால் ஏன் அவருக்கு ஆபாசமாகத் தோன்றுவதில்லை என்று புரிகிறதா? அவர் அறிந்திருந்த வரலாற்றுப்படி தமிழ்பெண்கள் எல்லோரும் அப்போது அரை நிர்வாணமாகத் திரிந்தவர்கள்தான்.
CBI மற்றும் RAW அமைப்பு உளவுத்துறைகளுக்கு தெரியாத உண்மைகள் எல்லாம் கமலுக்கு மட்டுமே தெரிந்திருப்பது வியப்பாக இருக்கிறது. “முல்லா உமர் கோவை மற்றும் மதுரையில் சுற்றித்திரிந்ததாக காண்பித்திருக்கிறீர்களே?” என்று கேட்டதற்கு அதற்கான முன்னூறூக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது என்று கூறுகிறார். இவருடைய இதுபோன்ற பொய்பிரச்சாரங்களால் முஸ்லீம்களின் மீது மேலும் சந்தேகம் வலுப்பெற்று கோவை குண்டுவெடிப்பில் கைகதாகியுள்ள நிரபராதிகள் வெளியே வரவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் வியப்பதற்கில்லை.
“படத்தை படமாக பார்த்துவிட்டு போவதுதானே?” என்று வாதாடும் என் நண்பர்கள் இதனைப் புரிந்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
‘100 கோடி பட்ஜெட்’, ‘தாவர சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுவிடும்’, ‘இந்த வீடு எனதில்லை என்றாகி விடும்’, ‘நடுரோட்டுக்கு வந்து விடுவேன்’ என்றெல்லாம் கூறி கமல் ரசிகர்களை ரொம்பவும்தான் கதற வைத்து விட்டார்.
தமிழன் இளகிய மனம் படைத்தவன் என்பது கமலுக்குத் தெரியும். தன்னுடைய ‘உலக நாயகன்’ நடுத்தெருவுக்கு வந்துவிடக் கூடாது என்று அந்த படத்தை வெற்றிகரமாக ஓட வைப்பேன் என்று ஒவ்வொருத்தனும் சத்திய பிரமாணம் செய்ததோடு நிற்காமல் அவனவன் காசோலை, வரையோலை என்று அனுப்பவும் தொடங்கி விட்டான். நல்லவேளை ‘படம் வெளியிட தாமதம் ஆகிவிட்டதே’ என்று யாரும் இதுவரை தீக்குளிக்காமல் இருந்தது நமக்கு பெருத்த ஆறுதலாக இருந்தது.
இந்த படம் வெளிவந்த பிறகு யார் பார்க்கிறார்களோ இல்லையோ நிச்சயம் முஸ்லீம் சகோதரர்கள் எல்லோரும் பார்ப்பார்கள். வேற என்ன? தலைவர்கள் எல்லோரும் பார்த்து விட்டார்கள். தொண்டர்கள் பார்க்க வேண்டாமா? எத்தனைப்பேர் சந்தோஷமாக பார்த்தார்கள்? எத்தனைப் பேர்களுடைய மனது புண்பட்டது என்ற விவரம் அடுத்த பெருநாள் வந்தால் எத்தனை பிரியாணி பார்ஸல் கமல் வீட்டுக்கு போகிறது என்பதை கணக்கெடுத்தால் புரிந்துவிடும்.
“தங்களை பிழையான விதத்தில் காண்பிப்பதாக சந்தேகிக்கும் முஸ்லிம்கள், படத்தைப் பார்த்த பின்னர் மனத்தை மாற்றிக் கொள்வார்கள், மேலும் தங்களின் அபிப்பிராய பேதத்துக்கு பரிகாரமாக அவர்களின் சகோதரன் ஹாசனுக்கு அடுத்த வருட பெருநாள் பண்டிகைக்கு அதிகமாக பிரியாணி அனுப்ப வேண்டும், நான் அவற்றை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்வேன் “ என்று கமல் சொல்லியிருக்கிறார்தானே.
இணையதளத்தில் திரைப்பட தரவிறக்கமும், திருட்டு வி.சி.டி.யும், சின்னத்திரை ஒளிபரப்பும் அதிகரித்து விட்ட இந்நேரத்தில் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குறைந்துவிட்டது என்பது நிதர்சன உண்மை. படம் வெற்றிபெற வேண்டுமென்றால் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களையும், விவகாரமான கதைகளுமே பெருத்த விளம்பரத்தை தேடித்தரும் என்ற நிலைக்கு சினிமாக்காரர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.
யார் எக்கேடு கெட்டாலும் என்ன, சமுதாயம் எப்படி சண்டை போட்டுக் கொண்டாலும் என்ன, நாம் பணம் பண்ணினால் போதும் என்ற கொள்கையை அவர்கள் ஏந்தி விட்டார்கள். விஸ்வரூபத்தை தொடர்ந்து அடுத்து முஸ்லீம்களைக் கேவலப் படுத்தி “கரும்புலி” என்ற படமும் உருவாகி வருகிறது.
இதுதான் இந்தியா என்று ஒரு காலத்தில் மேலைநாட்டு ஊடகங்களில் சேரி குடிசைகளையும், மகுடி ஊதும் பாம்பாட்டிகளையும், வீதியில் கரடி வித்தை காட்டுபவர்களையும்தான் காட்டி வந்தார்கள். அதே ஊடகத்துறையில் இந்தியர்கள் புகுந்து இன்று இந்தியாவின் இமாலய வளர்ச்சியினை படம்பிடித்துக் காட்டியபோது மேலைநாடுகள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டன. ‘முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்பதுபோல இஸ்லாமியர்கள் சினிமாத்துறையிலும், ஊடகத்துறையிலும் புகுந்து மாற்றங்கள் ஏற்படுத்துவது தப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. ஈரான் போன்ற முஸ்லீம்நாடுகள் உலகத்தரம் வாய்ந்த சினிமாக்களை படைக்கத்தானே செய்கிறார்கள்?
– அப்துல் கையூம்