RSS

Category Archives: சீதேவி

சீதேவி


சீதேவி (ஸ்ரீதேவி), நடிகர் அனில் கபூரின் சகோதரர் போனிகபூரை மணந்துக் கொண்டு வடநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகத்தின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த அவரை தமிழ்நாடு சுத்தமாக மறந்தே போய் விட்டது.

ஆனால் நாகூர்க்காரர்கள் மட்டும் மூச்சுக்கு முந்நூறு தரம் “சீதேவி சீதேவி” என்று உச்சரித்து நாள்தோறும் அவரை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

“நல்லா இருங்க சீதேவி”, “அஹ, சீதேவி மனுசரு”, “சொல்லுங்க சீதேவி” என்ற வார்த்தைகள் நாகூர்க்காரர்களின் வாயிலிருந்து சர்வ சாதாரணமாக புறப்படும்.

“வலிய வர்ற சீதேவியெ ஏன் நாச்சியா வாணான்னு சொல்லுறீஹ?” – தாய்க்குலங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் உரையாடல் இது.

தமிழில் ஆண்களைக் குறிப்பதற்கும், பெண்களைக் குறிப்பதற்கும், வெவ்வேறு சொற்பதங்கள் தனித்தனியே இருக்கிறன. ஆனால் நாகூரைப் பொறுத்தவரை “சீதேவி” என்ற வார்த்தை UNISEX. ஆண்பாலர், பெண்பாலர் இருவரையுமே குறிக்கும் சொல். வேடிக்கையாக இருக்கிறது அல்லவா?

பெண்பாலுக்கு “தேவி” என்றால் ஆண்பாலுக்கு “தேவா” என்றுதானே அழைக்க வேண்டும்? ‘சரோஜா தேவி’ என்றால் பெண், ‘பிரபு தேவா’ என்றால் ஆண் என்று பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே கூறி விடலாமே!

இலக்கணப்படி பேசுவதாக நினைத்துக் கொண்டு  “வாங்க சீதேவா” என்று நாகூரில் வாய்மலர்ந்தால் நமக்கு பித்துக்குளி பட்டம் சூட்டி பாப்பாவூருக்கு சங்கிலியோடு அனுப்பி விடுவார்கள்.

சீதேவி (ஸ்ரீதேவி) இந்துக்களின் தெய்வம். ஆம். திருமாலின் மனைவி. முப்பெரும் தேவிகளான திருமகள், மலைமகள், கலைமகள் இவற்றுள் ஒருவர்தான் சீதேவி.

திருமகள், லட்சுமி, இலக்குமி, இப்பெயர்கள் யாவும்  சீதேவியையே குறிக்கும். சீதேவி என்றால் ஐஸ்வரியம். செல்வத்தை தருபவள் சீதேவி.

லட்சுமி கடாட்சம் உள்ளவருக்கு அதாவது பரக்கத்தான மனுஷருக்கு ‘சீதேவி மனுஷர்’ என்று அடைமொழி தருவதாகவே வைத்துக் கொள்வோம்.

சீதேவியின் லாத்தா (அக்கா) யார் தெரியுமா? அவரும் நமக்கு பழக்கப்பட்ட பெயர்தான். அவர் பெயர் மூதேவி. அடிக்கடி அப் பெயரைச் சொல்லி தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வசைபாடுவது வாடிக்கையான ஒன்று. பெற்ற பிள்ளை நேரத்தொடு வீடு வந்து சேராமல் போனால் “மூதேவி! எங்கே போயி தொலைஞ்சிச்சோ தெரியலியே!” என்று பாட்டம் விடுவார்கள்.

சீதேவியின் மூத்த அக்காள் மூதேவி என்பதால் மூத்த தேவி என்ற சொற்பதம் மருவி மூதேவி என்று சுருங்கி விட்டது.

ஜேஷ்டாதேவி (ஜேஷ்டா என்றாள் மூத்தவள்)  என அழைக்கப்படும் இந்துக்களின் தெய்வம் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாக காணப்படும். மூதேவிக்கு மற்றொரு பெயர்தான் இந்த ஜேஷ்டாதேவி.

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை

என்ற ஒளவையார் பாடலை நாலாம் வகுப்பில் சரவணா சார் என்னை வற்புறுத்தி மனனம் செய்ய வைத்தது இப்போது இதற்கு பயன்படுகிறது.

சீதேவி, மூதேவி எனும் தொன்மம்/ Concept இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

என்று ஐயன் கூறுகிறார். இதன் பொருள் : சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாள் என்பதாகும்.

ஒருமுறை சீதேவிக்கும் அவளது அக்கா மூதேவிக்கும் இடையே “யார் அழகி?” என்ற விவாதம் முற்றிப் போய் மன்னன் விக்கிரமாதித்தனிடம் இவ்வழக்கு வந்திருக்கிறது. இருவர் மனமும் நோகாதவாறு ஒரு தீர்ப்பை அவன் கூறினானாம்.

“மூதேவி போகும் போது அழகு. சீதேவி வரும் போது அழகு. ஆகமொத்தம் இருவருமே அழகுதான்” என்று ‘ஐஸ்’ வைத்து இருவரையுமே அனுப்பி விட்டான். பிழைக்கத் தெரிந்த மன்னன்.

ஒரு குறிப்பிட்ட சாராரின் தெய்வத்தின் பெயர், இன்னொரு சாரார் அன்றாட உபயோகிக்கும் வார்த்தையில் ஐக்கியமானது எப்படி என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

நாகூர் சுற்று வட்டார முஸ்லீம்களின் வீட்டுத் திருமணங்களில் கலந்துவிட்ட “பாப்பாரக் கோலம்” போன்று இதுவும் நம் அன்றாட உபயோகிக்கும் வார்த்தையில் இரண்டறக் கலந்து விட்டதோ?

‘நாலாம் நீர்’ சடங்கின்போது மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு, கையில் டம்பப்பையையும், (மந்திரக்?)கோலையும் ஏந்திக்கொண்டு “சீதேவி போடுங்கம்மா” என்று கூற, உறவினர்கள் பவுன்காசு போடுவதும் இப்படி வந்த கலாச்சார வழக்கம்தானோ?

சீதேவிகள்தான் விடை கூற வேண்டும்!