RSS

இன்னிசை ராணி


ஒரு காலத்தில் இந்தப் பெண்மணியின் இனிமையான குரல் ஒலிக்காத இஸ்லாமியர்களின் வீடே கிடையாது என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம். இவரது பாடல்கள் எல்லோருடைய உதடுகளையும் முணுமுணுக்க வைத்தது. இதமான குரல். இனிமையான சாரீரம். பண்ணிசையில் இலகுவான ஏற்ற இறக்கம். கண்ணை மூடிக் கொண்டு கேட்டாலும் இது கே.ராணி உடைய குரல் என்று எளிதில் கண்டுபிடித்துச் சொல்லி விடலாம்.


நாகூர் இசைமுரசு இ.எம்.ஹனிபாவுடன் இப்பெண்மணி இணைந்து பாடிய பாடல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அத்தனையும் முத்துக்கள்.
அன்றைய கால கட்டத்தில் “இவர்களிருவரும் இணைந்து பாடிய பாடல்கள் மூலமாகத்தான் இஸ்லாத்தைப் பற்றியும் இஸ்லாமிய சரித்திர நிகழ்வையும் எவ்வளவோ நாங்கள் அறிந்துக் கொண்டோம்” என்று கூறியவர்கள் ஏராளம். புலவர் ஆபிதீன் காக்கா அவர்களுடைய எழுத்தாற்றல் அதற்கு துணை நின்றது.


இசைமுரசு நாகூர் ஹனிபா எத்தனையோ இஸ்லாமியப் பாடல்கள் பாடியிருந்தாலும் தொடக்க காலத்தில் அவர் கே. ராணியுடன் இணைந்து பாடிய பாடல்களுக்கு நிகரில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவர்கள் இருவருடைய ‘கெமிஸ்ட்ரி’யும் அட்டகாசமாக ஒத்துப் போனது. இசை ஞானத்தில் இருவருக்கிடையிலும் நல்ல புரிதல்கள் இருந்தன. டி.எம்..எஸ்ஸுக்கு இணையான ஜோடி பி.சுசீலா போன்று, முஹம்மது ரஃபிக்கு இணையான ஜோடி லதா மங்கேஷ்கர் போன்று, இஸ்லாமியப் பாடல்களுக்கு நாகூர் ஹனிபா – கே.ராணி ஜோடி என்ற அளவில் சிலாகித்து பேசப்பட்டது.


இன்று, இசைமுரசு நாகூர் ஹனிபா, கே.ராணி இருவருமே நம்மிடையே இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய இன்னிசை என்றென்றும் நம் காதுகளில் தேனாய் பாய்ந்துக் கொண்டிருக்கிறது.


கே.ராணி பாடிய கீழ்க்கண்ட இஸ்லாமியப் பாடல்கள் அன்றும், இன்றும், என்றும் பசுமரத்தாணியாய் நம் மனைதில் நீங்காது நிலைத்திருக்கும்.


அன்பு மார்க்கம் தந்த எங்கள் அஹ்மதே யா முஸ்தஃபா !
அறிவு தீபம் ஏற்றி வைத்த முஹம்மதே யா முஸ்தஃபா !


திருமறையின் அருள்மறையில் விளைந்திருப்பதென்ன?-அறிவு
இறைத்தூதர் நபி பொன்மொழியில் பொதிந்திருப்பதென்ன-அன்பு


ஓதுவோம் வாருங்கள் !
லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
உயர் கலிமாவின் பொருள் உலகெங்கும் கேட்க


நெஞ்சிலே வாழ்கின்றவர் ! நேர்வழி காட்டுபவர் !
நானிலம் போற்றுபவர் ! நீதர் நபியாம் நாயகர் !


தீனோரே நியாயமா மாறலாமா !
தூதர் நபி போதனையை மீறலாமா ! உள்ளம் சோரலாமா !


வாழ வாழ நல்ல வழிகள் உண்டு ! நபி வழங்கிய நெறிகளிலே !
வாரி வாரி தந்த வைரம் உண்டு ! அவர் வாய்மலர் மொழிகளிலே !


எல்லாம் வல்ல ஏகன் நீயே ! இணையில்லாத அல்லாஹ் நீயே !
என்றும் புகழ்வோமே அல்ஹம்துலில்லாஹ் !!


அருள் மேவும் ஆண்டவனே ன் ! அன்புடையை காவலனே !
இருள் நீக்கும் தூயவனே ! இணையில்லாத அல்லாஹ்வே !


தீன் கொடி நாட்டிய தேவா ! – இறைத்
தூதரே யா முஸ்தபா !


பாலைவனம் தாண்டி போகலாமே நாம் !
புவிபோற்றும் மதினா நகராளும் நபியை நாம் !
பண்போடு சென்று காணலாம் !!


எல்லா உலகும் ஏகமாய் ஆளும் இணையற்ற அல்லாஹ்வே !
வல்லமை வாய்ந்த உன்னிடம் நாங்கள் மன்னிப்பை வேண்டுகிறோம் !


மக்கள் யாவரும் ஒன்றே குலமெனும் மார்க்கம் வந்தது யாராலே
மக்காவென்னும் நகரம் தந்த மாந்தர் திலகம் நபியாலே !


இன்ப வாழ்வு பொங்கிட வேண்டும் !
ஏழை எளியோர் உயர்ந்திட வேண்டும் !
அன்பு எங்கும் பரவிட வேண்டும் !
யா அல்லாஹ் ! யா அல்லாஹ் ! கருணை செய்வாய் !!


இன்று வந்து நாளை போகும் நிலையிலே
என்ன செய்து வாழுகின்றாய் உலகிலே?


இஸ்லாமியப் பாடல்கள் மாத்திரமே இவர் பாடியிருக்கிறார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவருடைய சாதனைகளின் மறுபக்கம் சரியாக எடுத்துரைக்கப்படவில்லை என்பது என் கருத்து.. பி.சுசிலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரியைத் தெரிந்து வைத்திருக்கின்ற அளவுக்கு இவரை யாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.


வெறும் எட்டே வயது நிரம்பிய சிறுமியொருத்தி திரைப்படங்களில் பின்னணி பாடி வானளாவிய புகழைப் பெற்றார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சிறுமுது திறனாளியாக (Child Prodigy), குழந்தை மேதையாக இவர் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
அக்காலத்தில் வைஜயந்திமாலாவின் நாட்டிய நிகழ்ச்சி பெரிய அரங்குகளில் நடைபெறும். நிகழ்ச்சிக்கிடையில் அவர் உடைமாற்றிக் கொண்டு வர சற்று நேரம் பிடிக்கும். அந்த இடைவெளி நேரத்தை பூர்த்தி செய்வதற்கு 5 வயது குழந்தையாக, அருமையாக பாடக்கூடிய திறன் படைத்திருந்த சிறுமி ராணியை மேடையில் ஏற்றி பிரபலமான பாடல்களை பாட வைப்பார்கள். கேள்வி ஞானத்தை வைத்து, கேட்டுப் பழகி, திறமையை வளர்த்துக் கொண்ட சிறுமி ராணியின் பிசிறில்லாத லாவகமான குரல்வளம் பலத்த கரகோஷத்தை அள்ளித் தரும்;. அரங்கத்தையே அதிர வைக்கும்.


நாட்டிய நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே குழந்தை ராணி தூங்கிவிடுவாளாம். அவளை வைஜயந்திமாலாவும் அவருடைய பாட்டி யதுகிரி அம்மாளும் அவளை காரில் எற்றிக் கொண்டு அவளுடைய வீட்டிற்கு கொண்டு போய்ச் சேர்ப்பார்களாம். ஒரு பேட்டியில் அவரே இதைச் சொல்லியிருக்கிறார்.


ஒருநாள் வைஜயந்திமாலாவின் நடன நிகழ்ச்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தபோது அதைக் கண்டு களிக்க இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் வந்திருக்கிறார். சிறுமி ராணியின் திறமை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி போயிருக்கிறார்.


அடுத்த நாள் ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு ராணியின் வீட்டுக்கே வந்துவிட்டார். தமிழிலும், தெலுங்கிலும் ஒருசேர வெளிவந்த “தேவதாஸ்” திரைப்படத்தில் பாட வைத்தார். தேவதாஸ் படம் வெளிவருவதற்கு நீண்ட நாட்கள் பிடித்ததால், ராணி பின்னணி பாடியிருந்த மற்ற மற்ற படங்கள் முதலில் வெளிவந்தன.


1943-ஆம் ஆண்டில் பிறந்த இவர், தனது எட்டாவது வயதிலேயே ரூபாவதி (1951) , சிங்காரி (1951) போன்ற தெலுங்கு சினிமாவில் பாடத் தொடங்கிவிட்டார்.

இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டுச் சென்ற படம் “தேவதாஸ்” என்பதில் சந்தேகமில்லை.

தேவதாஸ் படத்தில் இவர் பாடிய
//எல்லாம் மாயை தானா? – பேதை
எண்ணம் யாவும் வீணா?
ஏழை எந்தன் வாழ்வில் – இனி
இன்பம் காண்பேனோ?”//


என்ற சோகம் பிழியும் பாடல் ‘சூப்பர் டூப்பர் ஹிட்’ ஆகி இவருக்கு வானளாவிய புகழைத் தேடித் தந்தது தெலுங்கு மொழியில் “அந்தா பிராந்தியேனா” என்று தொடங்கும் இதே பாடலும் மிகவும் பிரபலமானது.


‘தேவதாஸ்’ படத்தில் கண்டசாலாவுடன் இவர் பாடிய “உறவும் இல்லை பகையும் இல்லை” என்ற பாடல், தெலுங்கில் “செலிய லேது செலிமி லேது” என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.


ராணிக்கு தாய்மொழி தமிழும் கிடையாது; தெலுங்கும் கிடையாது. இவர், கான்பூரிலிருந்து தென்னாட்டில் குடியேறிய ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா கிஷன் சிங் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர். பல இடத்திலும் அவருக்கு பணிமாற்றம் நிகழ்ந்தது.


ராணிக்கு மொழி எந்தக் காலத்திலும் ஒரு தடைக்கல்லாக இருந்தது கிடையாது. ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றிய இவருடைய தந்தை பல இடங்களுக்கு மாற்றலாகிக் கொண்டிருந்ததால், பல மொழிகளையும் கற்கக் கூடிய வாய்ப்பு அவருக்கு கிட்டியது.

சிறுவயது முதற்கொண்டே கிரகித்துக் கொள்ளக்கூடிய சக்தி மிகுதியாக இருந்ததால், அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு உச்சரிப்பை அட்சர சுத்தமாக பாடக் கற்றுக் கொண்டார். நாகூர் ஹனிபாவுடன் இணைந்து பாடிய பாடல்களில் அரபிமொழி உச்சரிப்பு இவரிடத்தில் அம்சமாக இருப்பதை நாம் நன்றாகவே உணர முடியும்.


இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமல்ல, பற்பல திராவிட முன்னேற்றக் கழக கொள்கைப் பாடல்கள் நாகூர் ஹனிபாவுடன் இணைந்து பாடியுள்ளார். ‘வாழ்க திராவிட நாடு’, ‘அன்னை மொழி காத்து நிற்கும் அண்ணா வாழ்கவே’ உள்ளிட்ட தி.மு.க. கொள்கை பாடல்களும் ராணியின் குரலில் ஒலிப்பதிவாகி உள்ளன.


நாகூர் ஹனிபா நாகூரில் சொந்த வீடு கட்டி அதன் திறப்புவிழாவிற்கு அறிஞர் அண்ணாவை அழைத்தபோது கே.ராணியுடைய பாட்டுக் கச்சேரியைத்தான் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.


தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி, வங்காளமொழி, சிங்களம் என ஏராளமான மொழிகளில் பாடியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் உஸ்பெஸ்கிஸ்தான் மொழியைக் கூட இவர் விட்டுவைக்கவில்லை.


500-க்கும் மேலான பாடல்கள் இவர் பாடியிருக்கிறார். இலங்கை தேசிய கீதம் இவர் பாடியது.


அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தில்லியில் நடந்த இசை நிகழ்ச்சியில் கர்மவீர்ர் காமராஜர் இவருக்கு “இன்னிசை ராணி” என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தார். ராஜ்கபூரின் ‘சங்கம்’ படப்பாடலை அந்த மேடையில் பாடியபோது, ராஜ்கபூர் மனம் நெகிழ்ந்து இவர் குரல்வளத்தைப் புகழ்ந்தார்.


‘பாரதரத்னா’ விருது பெற்ற புகழ்ப்பெற்ற இந்திய பொறியாளர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவின் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்வதற்காக கர்னாடக அரசு இவரை தனிவிமானத்தில் (Chartered Flight) ஏற்றி அனுப்பி வைத்தது.


“நல்ல சுருதி சுத்தமும் வார்த்தை சுத்தமும் உள்ள பாட்டு அவளுடையது, ரொம்ப நல்லா பாடுவா. அனுபவிச்சு பாடுவா, நல்ல ஞானம் உள்ளவ, அன்போடு பழகக் கூடிய ஜீவன். நான் நிறைஞ்ச மனசோட நினைச்சுப் பார்க்கிற பாடகி” என்று பாடகர் டி.எம்.எஸ். செளந்தர்ராஜன் இவருக்கு புகழாரம் சூட்டினார்.

கே.ராணி அன்றைய காலத்தில் புகழ் உச்சியிலிருந்த அத்தனை இசையமைப்பாளர்களின் இசையிலும், அத்தனை பிரபல பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ளவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


தெலுங்கு படத்தில் அவர் பாடியுள்ள படங்களை பட்டியலிட்டால் இங்கு பக்கங்கள் காணாது.


சுஜாதா (1953), செடா சுலங் (1955), சிரிமலி (1959) மெலிகொலுப்பு, போன்ற சிங்கள படங்களில் இவர் பின்னணிக் குரல் பாடியிருக்கிறார்.


கன்னட மொழி படங்கள்:
பாக்யோதயா 1956, ரத்னகிரி ரகசியா, ஸ்கூல் மாஸ்டர் (1958), காலி கோபுரா (1962) , ரத்ன மஞ்சரி (1962) லவகுசா (1963)


மலையாள மொழி படங்கள்:
அச்சனும் மகளும் (1957) வேலுத்தம்பி தாளாவா (1962) கலாயும் காமினியும் (1963)


தமிழில் இவர் பாடிய பாடல்களைக் கணக்கிட்டால் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கின்றன.


சின்னதுரை, தர்ம தேவதை, கல்யாணம் பண்ணிப் பார், கல்யாணி, வளையாபதி, சண்டிராணி, குமாஸ்தா, ஜெனோவா, கண்கள், மாமியார், பெற்றதாய் திரும்பிப்பார், வஞ்சம், கூண்டுக்கிளி, மா கோபி, நால்வர், நல்ல காலம், பணம்படுத்தும் பாடு, ரத்த பாசம், சுகம் எங்கே, ஆசை அண்ணா அருமை தம்பி, குணசுந்தரி, கதாநாயகி, முதல் தேதி, போர்ட்டர் கந்தன் , அமர கீதம், இல்லறமே இன்பம், காலம் மாறிப் போச்சு, மர்ம வீரன், சர்க்கஸ் சுந்தரி, மறுமலர்ச்சி, மாய மோகினி, நன்னம்பிக்கை, ஒன்றே குலம், பாசவலை, காவேரி, படித்த பெண், பிரேம பாசம், சந்தோஷம்., அலாவுத்தீனும் அற்புத விளக்கும், எங்கள் விட்டு மஹாலக்ஷ்மி, மகதல நாட்டு மேரி, மாயா பஜார், தங்கமலை ரகசியம், அரசாளப் பிறந்தவன், பூலோக ரம்பை, எங்கள் குடும்பம் பெருசு, காத்தவராயன், மாலையிட்ட மங்கை, பானை பிடித்தவள் பாக்கியசாலி, சம்பூர்ண ராமாயணம், சாரங்கதாரா, அருமை மகள் அபிராமி, அழகர் மலைக்கள்வன், பால நாகம்மா, தெய்வ பலம், மன்னன் மகள், நல தமயந்தி, பாண்டித்தேவன் புதுமைப் பெண், சுமங்கலி, ஆளுக்கொரு வீடு , சவுக்கடி சந்திரகாந்தா, எல்லோரும் இந்நாட்டு மன்னர், குழந்தைகள் கண்ட குடியரசு, மங்கைக்கு மாங்கல்யமே பிரதானம், இந்திரா என் செல்வம், லவகுசா, வழி பிறந்தது, ஹரிச்சந்திரா.‘சந்திப்பு’ (வெளிவரவில்லை)


1965 ஆண்டுக்குப் பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதன்பிறகு இசைக்கச்சேரி செய்ய ஆரம்பித்தார். இக்கால கட்டத்தில் அவர் இசைமுரசு நாகூர் ஹனிபாவுடன் இணைந்து பாடிய பாடல்கள் யாவையுமே இஸ்லாமிய மக்கள் அல்லாது பிறசமயத்தார்களும் விரும்பிக் கேட்டனர்.


இவரது கணவரின் பெயர் சீதா ராமி ரெட்டி. முன்பே இறந்து விட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு (2018) இந்த ‘இன்னிசை ராணி’ தனது 75வது வயதில் மரணமுற்றார். ஹைதரபாத்தில் இவரது மகள் விஜயாவின் வீட்டில் இவருடைய உயிர் பிரிந்தது.
தமிழகத்தில் எந்த ஊடகங்களும் இவரது மரணச் செய்தியை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. தெலுங்கு மற்றும் சிங்களமொழி ஊடகங்கள் மாத்திரமே இவரை நினைவு கூர்ந்து இவரது சாதனைகளைப் பகிர்ந்தன.

ஒரு சில தமிழ்ப் பத்திரிக்கைகள் ஓரத்தில் கட்டம் கட்டி சின்னதாக செய்தி வெளியிட்டிருந்தன..
காரணம் இவருடைய மரணச் செய்தி வனிதா விஜயகுமாரின் விவாகரத்து செய்தி போல அவ்வளவு முக்கியமான செய்தியாக அவர்கள் கருதவில்லை.

K. Rani

அப்துல்கையூம்

 

காரைக்கால் ஏ.எம்.தாவூத்


இஸ்லாமிய இன்னிசை உலகம் என்றென்றும் நெஞ்சில் நினைவு வைத்திருக்க வேண்டிய கடந்த கால பாடகர்களில் காரை ஏ.எம்.தாவூத் முக்கிய பங்கு வகிக்கிறார்.

இஸ்லாமியப் பாட்டுலகில் முன்னோடியாகக் கருதப்படுபவர் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

அந்த முன்னோடிக்கே முன்னோடியாக திகழ்ந்தவர் ஒருவர் உண்டென்றால் அது இவர்தான் என்று அடித்துச் சொல்லலாம். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம். காரை தாவூத், இசைத்துறையில் இமயத்தைத் தொட்ட இசைமுரசுக்கே ஓர் அழகிய முன்மாதிரி.

காலச் சுழற்சியில் காற்றோடு காற்றாக கரைந்துப் போன பெயர்களில் இந்த இன்னிசை வேந்தரின் பெயரும் ஒன்று.

காரைக்கால் ஏ.எம்.தாவூத் அவர்கள் 1905ஆம் ஆண்டு பிறந்தார், 1936ஆம் ஆண்டு முதலே இவர் தமிழ்க் கூறும் நல்லுலகில் நாடறிந்த இஸ்லாமியப் பாடகராய் வலம் வந்துக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டில் இவரை அறிந்து வைத்தவர்களைக் காட்டிலும் இலங்கையில் இவரைப் போற்றிப் புகழ்வோர் அநேகம் பேர்கள் உண்டு.

HMV (His Master’s Voice) நிறுவனத்து இசைத்தட்டில் இஸ்லாமியப் பாடல்கள் முதன் முதலாகப் பாடியவர் நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அல்லது நாகூர் இ.எம்.ஹனிபா என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

முதன் முதலில் எச்.எம்.வி. நிறுவனத்தில் இஸ்லாமியப் பாடல் பாடியவர் காரைக்கால் தாவூத் அவர்கள் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய தகவல். நாகூர் மண்ணுக்கும் இசைத்துறைக்கும் உள்ள தொடர்பை எல்லோரும் நன்கறிவர். நாகூர்வாசியான இவர் அறியப்பட்டது காரை ஏ.எம்.தாவூத் என்ற பெயரில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது,

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப்போல் காரை தாவூத் அவர்களின் பெருமையை அறிந்துக்கொள்ள இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவின் இந்த வாய்மொழி வாக்குமூலமே போதுமானது.

பத்திரிக்கையாளர் அ.மா.சாமி அவர்கள் “உங்களுக்கு எப்படி இசையில் விருப்பம் ஏற்பட்டது?” என்று கேட்ட கேள்விக்கு இசைமுரசு தந்த பதில் இதோ:

“எங்கள் தந்தையார் கோலாலம்பூரில் ரெயில்வே ‘போர்மேன்’ ஆக வேலை பார்த்தார். 28 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, அங்கிருந்து திரும்பினார். இடையிடையே வந்து போனார். ஒருமுறை வரும்போது ஒரு கிராமபோன் பெட்டி கொண்டு வந்தார். கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, தியாகராச பாகவதர், பி.யு.சின்னப்பா, சைகால், இஸ்லாமியப் பாடகர் காரைக்கால் தாவூத் போன்றவர்களின் இசைத்தட்டுகளை அந்த கிராமபோன் பெட்டியில் ஓடவிட்டு, நான் கேட்பேன். இது அவர்களைப் போலப் பாட வேண்டும் என்ற ஆசையை என்னிடம் ஏற்படுத்தியது. எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டால், அப்படியே திரும்பிப் பாடும் ஆற்றல் இயற்கையாகவே எனக்கு இருக்கிறது, அப்படிப் பாடிப் பாடி பழகிக் கொண்டேன்.” என்று தன் மனதில் தோன்றியதை அப்படியே புட்டுப் புட்டு வைத்தார்.

நாகூர் ஹனிபாவைக் காட்டிலும் காரை தாவூத் அவர்கள் வயதில் 20 வருடம் மூத்தவர். நாகூர் ஹனிபா பாடத் தொடங்குவதற்கு முன்பே புகழின் உச்சத்தில் இருந்தவர் காரை தாவூத் அவர்கள்.

உசைன் பாகவதர், வித்வான் எஸ்.எம்.ஏ,காதர், குமரி அபுபக்கர், இசைமணி எம்.எம்,யூசுப், எச்.ஏ.ஏ.காதர், காரைக்கால் தாவூத் போன்று முறையாக சங்கீதம் கற்றவன் நானல்ல என்று நாகூர் ஹனிபாவே பலமுறை சொல்லியும் இருக்கிறார். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதைப் போலவே இசையை கேட்டுக் கேட்டு கேள்வி ஞானத்திலேயே தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டவர் அவர். இப்பேறினை இறையருள் என்றே சொல்ல வேண்டும்.

காரை தாவூத் அவர்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்தது புலவர் ஆபிதீன், கவிஞர் சலீம் முதலானோர். முன்பே சொன்னது போல இவருடைய திறமைக்கு முறையான அங்கீகாரம் தந்து போற்றிப் புகழ்ந்தோர் இலங்கை வாழ் தமிழர்களே. இவரை தாவூத் மாஸ்டர் என்றே மரியாதைப் பொங்க அழைத்தனர்.

ஒரு காலத்தில் இவருடைய பாடல்கள் திருச்சி வானொலியிலும், இலங்கை வானொலி கூட்டு ஸ்தாபனத்திலும் அதிகப் படியாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். இங்கிலாந்து நாட்டில் பி.பி.சி. ஆரம்பிக்கப்பட்ட 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இலங்கை வானொலி அச்சமயத்தில் தமிழகமெங்கும் எல்லோராலும் விரும்பிக் கேட்கப்பட்ட வானொலி சேவையாகும்.

உலகில் எந்த ஒரு வானொலி நிலையத்திலும் இல்லாத அளவு ஒரு லட்சத்திற்கும் மேலான இசைத்தட்டுகளை பாதுகாத்து வைத்திருக்கும் இந்த ஸ்தாபனத்தின் சேகரிப்பில் காரை ஏ.எம்.தாவூத் அவர்களின் ஏராளமான இசைத்தட்டுகள் இன்னும் அரிய பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டு இருக்கின்றன என்ற செய்தி மனதுக்கு நிறைவாக இருக்கின்றது,

அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாடு 2014 பிப்ரவரி மாதம் 14,15,16 நாட்களில் கும்பகோணம் நகரில் நடந்தேறியது. அதில் “முஸ்லிம்களின் இசைப்பாடல் மரபுகள்” என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடத்தப்பட்டது.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அப்போதைய தலைவராக இருந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தொடங்கி வைத்தார். அக்கூட்டத்தில் காரைக்கால் ஏ.எம்.தாவூத் அவர்களின் இசை பங்களிப்பை நினைவு கூர்ந்து “வாழ்நாள் சேவை விருது” (Posthumous) வழங்கப்பட்டது. உயிரோடு இருந்தபோது கிடைக்காத அங்கீகாரம் மறைந்த பின்பாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சியாக இருந்தது.

இலங்கையிலுள்ள மாத்தளை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், தமிழறிஞருமான ஜனாப் ஏ.ஏ.எம். புவாஜி எழுதிய “மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு” என்ற நூலை நான் அண்மையில் படிக்க நேர்ந்தது. அதில் காரைக்கால் ஏ.எம்.தாவூத் அவர்களைப் பற்றிய குறிப்புகள் கண்டு நான் நெகிழ்ந்துப் போனேன்.

இந்நூலில் 1950களில் இசை மற்றும் இலக்கியத் துறையில் புகழ்ப் பெற்றிருந்த தமிழக ஆளுமைகளைப் பற்றிய அத்தனை விஷயங்களைப் பற்றியும் அவர் விரிவாகவும் ஆழமாகவும் எழுதியுள்ளார்.

1950களில் மீலாத் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள், பதம் பாடுதல், இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சிகள் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் மாத்தளையில் இருந்து வந்தது. குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்த பிரபல பாடகர்களை வரவேற்று உரிய மரியாதை செலுத்துபவர்களாக மாத்தளைவாசிகள் இருந்தார்கள். தமிழகத்து பிரபலங்கள் இலங்கை வரும்போதெல்லாம் அங்குள்ள பத்திரிக்கைகளும் அவர்களைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகளையும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளையும் வரைந்தன.

கவ்வாலி பாடல்களும் மாத்தளை முஸ்லிம்கள் மத்தியிலே இசை ரசிகர்களை உருவாக்கியிருந்தன. இலங்கைக்கு வரும் இந்திய பாடகர்கள் மாத்தளைக்கு வருவது வழக்கமாக இருந்தது. இங்கு பாட்டுக் கச்சேரிகள் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டன. இப்படி மாத்தளையில் பாடியவர்களில் மலாங் பாய், கலீபுல்லாஹ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

காரைக்கால் தாவூத் இலங்கைக்கு 12 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போய் வந்த வண்ணமிருந்தார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அங்கு உருவாகியிருந்தனர்.

“இத்தகைய பிரபல இஸ்லாமியப் பாடகர்களின் வருகையினால் மாத்தளையில் உருவான சிறந்த பாடகர், தன் வாழ்க்கையையும் தன் சொத்தின் பெரும் பகுதியையும் இஸ்லாமிய இசைக்காகவே அர்ப்பணித்தவர் மர்ஹூம் சேகு தாவுத் மாஸ்டர் ஆவார்” என்று தன் நூலில் ஏ.ஏ.எம். புவாஜி குறிப்பிடுகிறார் .

தாஸிம், கே.எம். எஸ். தெளவ்தான், கே.எம்.எஸ். சல்சபீல் போன்றோர் தமிழகத்து பாடகர் காரை ஏ.எம்.தாவூத் மாஸ்டர் அவர்களின் இசையால் உந்தப்பட்டு இசைத் துறைக்குள் புகுந்தவர்கள் என்று இலங்கை எழுத்தாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“புதையல் மூட்டையின் மேல் அமர்ந்துக்கொண்டே நாம் புதையலைத் தேடுகிறோம்” என்று கவிக்கோ சொல்வதைப் போல நாகூர்க்காரரின் பெருமை இலங்கையைச் சேர்ந்தவர்கள் சொல்லித்தான் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தாவூத் நானா என்று உள்ளுர்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் மிகவும் நேசிக்கப்பட்டார். முதல் மனைவி மறைந்ததும் இரண்டாவது திருமணம் புரிந்துக் கொண்டார், இவருக்கு மூன்று ஆண், ஒரு பெண் வாரிசுகள். மூத்த மகன் “ஷாஹா” என்றழைக்கப்படும் D, ஷாஹுல் ஹமீது என் பால்ய காலத்து நண்பர். பாடகருடைய சொந்த வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் அவரிடமிருந்து பெறப்பட்டவை.

காரை தாவூத் போன்று இன்னும் எத்தனையோ இசைத்துறை ஆளுமைகள் கண்டுக்கப்படாமலேயே மறைந்தும் போய் விட்டனர். சிலர் இன்றும் மறக்கப்பட்டு வாழ்கின்றனர். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் வாலை மணி ஆசானிடம் முறைப்படி சங்கீதம் பயின்று, கவி கா.மு.ஷெரீப் அவர்களின் சீறா விளக்கவுரை பாடல்களை தனது கம்பீரக் குரலால் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றவர் இஸ்லாமியப் பாடகர் குமரி அபூபக்கர் அவர்கள்.

கவி.கா.மு.ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு இவருக்கு அழைப்பே கொடுக்கப்படவில்லை என்பது விநோதம்.

#அப்துல்கையூம்

 

இலங்கை தமிழ்ச் சகோதரர்களும் இசைமுரசு நாகூர் ஹனிபாவும்


தமிழ் நாட்டு பிரபலங்களுக்கு குறிப்பாக அவர்கள் இசைத்துறை, திரைப்படத்துறை, இலக்கியம், அரசியல் என எத்துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அழைத்து கெளரவித்து உரிய மரியாதைச் செலுத்துவதில் இலங்கை தமிழருக்கு நிகர் வேறு யாருமில்லை என நான் சொல்வேன்.

இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து “தாரகை” என்ற இதழ் 01.04.1953 அன்று வெளியிட்ட ஒரு செய்தியை படிக்கையில் நாகூர் ஹனிபாவுக்கு இலங்கை நாட்டில் எந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது என்பதை நாம் நன்றாக அறிந்துக் கொள்ள முடியும் .

“இசைமுரசு ஜனாப் ஹனீபா ஏப்ரலில் இலங்கை வருகிறார்” என்ற தலைப்புச் செய்தியுடன் அவரைப் பற்றிய சிறப்பான அறிமுகம் அதில் கொடுக்கப்பட்டிருந்தது.. இச்செய்திகள் யாவும் 100 நூல்களுக்கு மேல் எழூதியிருக்கும் வரலார்றாசிரிய செ.திவான் ஆய்ந்து முறையே ஆதாரத்துடன் வெளியிட்ட செய்திகளாகும் . இலங்கை “தாரகை” இதழில் வெளியான அச்செய்தியை ஒரு வரி கூட மாறாமல் அப்படியே தந்திருக்கின்றேன்.

//தமிழக இளம் பாடகர்களிலே தோழர் ஹனிபாவும் ஒருவர். இருபத்தைந்து ஆண்டுகளை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் இவர் “இசைமுரசு” என்ற பட்டத்தைப் பெற்றவர் மாத்திரமல்ல, எழுச்சி எண்ணங் கொண்ட சீர்த்திருத்தவாதியுங் கூட. பாடகர்களில் பலர் ஏதோ ஒரு காரியத்திற்காக அதுவும் பழமைப் பிடிப்புகளிலே பதுங்கி நின்று பணியாற்றும் பரம பக்தர்களாக காட்சியளிப்பார்களே தவிர , நாட்டுக்கு, மொழிக்கு, சமுதாயத்திற்கு பயன்படும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள். அப்படியே ஒரு சிலர் பயன்படுகிறார்கள் என்றால் அவர்களுக்கு பழமை விரும்பிகளுக்கு மத்தியிலே ஏற்படுவது எதிர்ப்பு..

தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டோர் தமிழ்ப் பாட்டுக்களைத்தான் பாட வேண்டும் என்று 1928-ம் ஆண்டு, காலஞ்சென்ற ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் தமிழிசைக் கழகம் தமிழ் நாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்குப் பல கட்சியினர்களின் ஆதரவும் கிடைத்தது மட்டுமல்ல மூக்கால் பாடும் முசிரிகளும் ஆங்காரக் குரல் அரியக் குடிகளும் “அழகு தமிழிலே பாடினால்தான் மரியாதை” என்ற முடிவுக்கு வரும் அளவுக்கு அந்த இயக்கம் மதிப்புப் பெற்றது. இன்னும் ஒரு சிலர், தமிழில் ஒழுங்கான இசை நுணுக்கங்கள் இல்லை என்று கூறி தெலுங்கிலும் ஹிந்தியிலும் பாடிக்கொண்டலைவதும் ஆச்சரியம்தான்.! பிற மொழிகள் பேரிலுள்ள துவேஷத்தால் தமிழ்ப்பாடல்தான் பாட வேண்டுமென நான் கூறவில்லை. அந்த மொழிப் பாடல்கள் நம்மை திட்டாமலாவது இருக்கின்றதா என்பதுகூட தெரியாமல் தலையை அசைத்து ரசிப்பதில் அர்த்தமில்லை என்பதாகக் கூறுகிறேன்.

“செந்தமிழில் இசைப்பாடல்கள் இல்லையெனச்
செப்புகின்றீர் மானமின்றிப்
பைந்தமிழில் இசையின்றேல் பாழுங்கிணற்றில்
வீழ்ந்துயிரை மாய்த்தலன்றி
எந்தமிழில் இசையில்லை எந்தாய்க்கே
உடையில்லை என்பதுண்டா?”

என்று ஆத்திரத்துடன் கேட்கின்றார் நமது அன்புக் கவிஞர் பாரதிதாசன்,

“கிளிபோலச் சொல்வதன்றித் தமிழ் நூற்கள்
ஆராய்ந்து கிழித்திட்டீரோ?
புளியென்றால் புலியென்றே உச்சரிக்கும்
புலியீரே புளுக வேண்டாம்
துளியறிவும் தமிழ் மொழியில் உள்ளதுவோ
பாடகர்க்கு சொல்வீர் மெய்யாய் !”

என்று கனல் கொப்பளிக்க தமிழ் பாடல்களில் இசையில்லை என என்ணுகின்ற பாடகர்களை பார்த்துக் கடாவுகின்றார் புரட்சி வேந்தன்.

கவிஞரின் கருத்துப்படி தமிழ் பாக்கள்தான் பாட வேண்டும் என்ற எண்ணத்தினரைக் கொண்ட முற்போக்காளர் படைவரிசையில் நிற்பவர் தோழர் இசைமுரசு ஹனீபா அவர்கள். இனிமையான குரலமைப்பு, அவர் கையாளும் முறையே தனிச்சுவை தரும்.! சமீப காலங்களில்தான் தமிழ்ப் பட உலகு அவரை நாடியிருக்கின்றது. சில வாரங்களில் வரப்போகும் அறிஞர் அண்ணாவின் சொர்க்க வாசலிலும், திருமதி ராஜகுமாரியின் வாழப் பிரந்தவளிலும் ஒரு சில பாடல்கள் பாடியிருக்கின்றார். சென்ற மாதம்தான் இசைத்தட்டில் அவர் குரலை வெளியிட ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். வருங்காலம் ஒரு சிறந்த முன்னேற்றத்தை அவருக்கு அளிக்குமென எதிர்ப்பார்க்கலாம். இலங்கைக்கு அவர் சமீபத்தில் வருகிறாரென்ற செய்தி இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கின்றது. ஏப்ரல் முதல் வாரத்தில் தோழர் ஹனீபா இலங்கையில் ஒரு சில கச்சேரிகளில் கலந்துக் கொள்வாரெனத் தெரிகிறது.//

தமிழகத்து பாடகர் ஒருவர் தனது இனிமையான குரலால் இலங்கை வாழ் தமிழர்கள் மனதில் எத்தகையவொரு தாக்கத்தை 1950களில் உண்டு பன்ணினார் என்பது இந்த பத்திரிக்கை செய்தியிலிருந்து நான் உணர்ந்துக்கொள்ள முடிகிறது.

கச்சேரி என்றால் தெலுங்கு கீர்த்தனைகள்தான் என்றிருந்த நிலைமையை தலைகீழாக புரட்டிப் போட்ட பாடகர்களில் நாகூர் ஹனிபாவும் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

அதே சமயம் நாகூர் ஹனிபாவைப் பற்றி தவறான புரிதல்கள் கொண்ட எழுத்தாளர்களும் இலங்கையில் இருக்கத்தான் செய்தார்கள். இலங்கை “தினகரன்” பத்திரிக்கையில் மான மக்கீன் என்ற மூத்த எழுத்தாளர் நாகூர் ஹனிபா மீது தொடுத்த தனிப்பட்ட தாக்குதலுக்கு ஜூன் 4,2010 அன்று நான் ஒரு மறுப்புக் கடிதம் எழுத நேர்ந்தது.

“நாகூர் ஹனீபாவின் பாடல்கள் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று திரு. எஸ்.ஐ.நாகூர் கனி என்பவர் இலங்கை தினகரன் பத்திரிக்கையில் ஒரு பரிந்துரை செய்திருந்தார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து மூத்த எழுத்தாளர் நாகூர் ஹனிபாவுக்கு பாடல் எழுதித் தந்தவர்களை உயர்த்தியும், பாடகரை தரக்குறைவாக விமர்சித்தும் கட்டுரை (27.09.2009) ஒன்றை வரைந்திருந்தார். அவருடைய கடுமையான விமர்சனம் இலங்கை எழுத்தாளர்கள் பலரை அப்போது வெகுண்டெழ வைத்தது.

எழுத்தாளர் மதிப்பிற்குரிய திரு..மானா மக்கீன் “தினகரன்” பத்திரிக்கையில் தொடுத்த குற்றச்சாடுகள் இதோ:

//“நாகூர் ஹனீபாவின் வாழ்க்கை வரலாற்றை அ.மா.சாமியின் ஆய்வில் வெளிவந்த பிறகு புதிதாக ஓர் ஆய்வுக்கு நாகூர் ஹனிபாவிடம் எந்தச் சரக்கும் இல்லை”//

//“அவருக்கு பாடல்கள் எழுதி கொடுத்தவர்களை அவர் பிரபலப் படுத்தவில்லை”//

/“நாகூர் ஹனீபாவுக்காக எழுதப்பட்ட பாடல்களை ஹனீபாவின் பாடல்கள் என்றழைப்பது தவறு”//

//“நாம் மட்டும் பாடகர் ஹனிபாவை ஆய்வுக்குத் தூக்கிப் பிடிக்க வேண்டிய தில்லை”//

//“ஆரம்பத்திலேயே என் பேனா குத்திக் காட்டியது போல், தனக்குப் புகழும் செல்வமும் கொடுத்த உன்னதமான பாவலர் பெருமக்களை அடையாளம் காட்டத் தவறிய பாடகர் அவர்”//

//”குரல்தானம் மட்டும் செய்த ஒருவரை அரியாசனத்தில் அமர்த்துவது முறையாகாது. அதில் நல்ல தெளிவு அனைவருக்கும் இருக்க வேண்டும்”//

//“தன் சொந்த மண்ணின் குரல் வளம் மிக்க ஒருவரை உயர்த்தி வைத்தவர்கள் இக் கவிஞர்கள் (நாகூர் ஆபிதீன், நாகூர் சலீம்) இருவருமே!”//

//“ஆக நம்மைப் போன்ற மூத்த எழுத்தாளர்கள்தான், ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு யாரை, எவரை, எப்படி அடையாளமிடவேண்டும் எனச் சொல்லிக் கொடுக்க வேண்டும்”//

//“இன்று முதுமையில் தள்ளாடித் தள்ளாடி வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கும் கவிஞர் சலீமுடன் உறவாடிக் கொண்டிருப்பது வறுமை மட்டுமே.”//

//“பாடகரோ கலைஞரின் தயவில் சென்னையின் சொகுசுப் பகுதி பங்களாவில் வாசம்”//

//“ஆக மேற்படி குறிப்பிலிருந்து புலவர் ஆபிதீன் கொழும்பில் வாழ்ந்தவர் என்பது புரிந்திருக்கும். அதுவும் எங்கே? வளமிகு வாழைத்தோட்டமே.”//

//“புலவர் ஆபிதீனின் பங்களிப்புகள் பற்றி தமிழகப் பதிப்பகமொன்றுக்கு ஆய்வுநூல் எழுதிக் கொண்டிருக்கின்றேன். அன்னார் பற்றி ஒருசிறு வாழ்க்கைக் குறிப்பை வாரமஞ்சரியில் தர ஆவலாக உள்ளேன்.”//

ஆக இறுதியில் அவர் வைத்த குற்றச்சாட்டு வாயிலாக எழுத்தாளருடைய நோக்கத்தை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. புலவர் ஆபிதீனை பற்றிய அவரது நூலை விளம்பரப் படுத்த வேண்டி நாகூர் ஹனிபாவை கடுமையாக விமர்சித்தார் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவருடைய கட்டுரையில் ஏகப்பட்ட முரண்கள் இருக்கின்றன. “முதுமையில் சலீம் அவர்கள் வறுமையில் உழன்றுக் கொண்டிருக்கிறார்” என்று அப்போது இலங்கையில் வசித்த அவருக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது. இறைவன் புண்ணியத்தில் சலீம் மாமாவும் அவருடைய வாரிசுகளும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். சலீம் மாமா வறுமையில் உழலவில்லை.

மக்கள் திலகத்திற்காக எழுதப்பட்ட பாடல்களை “எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்கள்” என்றும். நடிகர் திலகத்திற்காக எழுதப்பட்ட பாடல்களை “சிவாஜியின் தத்துவப் பாடல்கள்” என்றும் எழுதும்போது, இசைமுரசுக்காக எழுதப்பட்ட பாடல்களை “ஹனீபாவின் பாடல்கள்” என்று அழைப்பதில் என்ன தவறு?

நாகூர் ஹனிபா அவர்கள் ஒவ்வொரு பாடலின் போதும் ஒரு சிற்றுரை நிகழ்த்துவார். யாரெழுதிய பாடல், எந்த சூழ்நிலையில் எழுதப்பட்ட்து, எப்போது இசைத்தட்டு வெளியாகிறது போன்ற விவரங்கள் அதில் அடங்கியிருக்கும் . மற்ற பாடகர்களிடம் இல்லாத பழக்கம் அது. இறுதிநாள் வரை புலவர் ஆபிதீனை தனது “குருநாதர்” என்றே அழைத்து வந்தார். எனவே பாடல் எழுதிக் கொடுத்தவரை அவர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கவில்லை என்பதெல்லாம் பொருந்தாத வாதம்.. கோரஸ் பாடியவர்களைக்கூட அவர் மேடையில் குறிப்பிட்டுச் சொன்னதுண்டு. .

அவர் பாடிய அனைத்து இசைத்தட்டுகளிலும் பாடலை எழுதியது யார் என்ற விவரங்கள் இருக்கும்..

ரத்த வாந்தி எடுத்து இனிமேல் பாடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியபோதும் கூட வாழ்நாளெல்லாம் மூச்சுப் பிடித்துப் பாடி தன் வெண்கலக்குரலால் தமிழர் இதயங்களில் நிறைந்து நின்ற அவரை தரக்குறைவாக எழுதியவர்களின் செயல் ஒரு கரும்புள்ளி என்றுதான் நான் சொல்வேன்

 

சிவாஜி கணேசனும் நீதிபதி இஸ்மாயிலும்


ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1961-ஆம் ஆண்டு சிவாஜி நடித்து வெளியான படம் “பாவமன்னிப்பு. அதில் நாகூர் ஹனிபா, டி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்துப் பாடிய “எல்லோரும் கொண்டாடுவோம்” என்ற பாடல் எல்லோருக்கும் நினைவிருக்கும். சிவாஜி கணேசன் முஸ்லிம் பாத்திரமேற்று மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

உண்மையில் இப்படத்தின் மூலக்கதை நடிகர் சந்திரபாபு எழுதியது. தான் கதாநாயகனாக நடிக்க வேண்டி “அப்துல்லா” என்ற பெயரில் தானெழுதி வைத்த கதையை இயக்குனர் ஏ.பீம்சிங்கிடம் சென்று கதை சொன்னார். அவரும் சம்மதிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சந்திரபாபுவே நடித்தார். கிட்டத்தட்ட 3,000 அடி எடுத்த பிறகு பீம்சிங்குக்கு ஒரு சந்தேகம் வந்தது. கதாநாயகனாக சந்திரபாபு நடித்தால் படம் ஓடுமா என்று.

சிவாஜி கணேசனின் சகோதரர் வி.சி.சண்முகத்தின் திருமண விழாவில் கலந்துக் கொள்ள பீம்சிங் செல்கிறார். அச்சமயம் சிவாஜி கணேசனை சந்தித்து இப்படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். கதையும் பிடித்துப் போகவே சிவாஜியும் சம்மதிக்கிறார். இதற்கிடையில் ‘ஜென்டில்மேனான’ சந்திரபாபுவும் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து இந்த மாற்றத்துக்கு சம்மதிக்கிறார். படத்தில் “கதை” புத்தா பிக்சர்ஸ் குழுவினர் என்றுதான் காண்பிப்பார்கள். சந்திரபாபு பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும்.

அக்கால கட்டத்தில் சந்திரபாபுவும் சாதாரண நடிகர் அல்ல. சிவாஜிக்கு நிகராக சம்பளம் வாங்கியவர். இன்னும் சொல்லப்போனால் “சபாஷ் மீனா” படத்தில் சிவாஜியை விட ஒரு ரூபாய் கூடுதலாக சம்பளம் வேண்டும் என்று நிர்ப்பந்தித்து வாங்கியவர் “சபாஷ் மீனா” திரைப்படம் பாவமன்னிப்பு வெளிவருவதற்கு மூன்று ஆண்டுகள் முன்பே வெளிவந்த படம்.

“பாவமன்னிப்பு” படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்ய ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து, சென்னை சாந்தி தியேட்டருக்கு மேலே AVM என்று எழுத்துடன் பறக்கவிடப்பட்ட ஹைட்ரஜன் பலூன் நிகழ்வு 50+ ஆசாமிகளுக்கு நன்றாக நினைவிருக்கும். சிவாஜிக்கு சொந்தமான “சாந்தி” திரையரங்கில் திரையிடப்பட்ட முதற்படம் “பாவமன்னிப்பு”.

பொதுவாக தமிழ்த் திரைப்பட உலகில் முஸ்லிம் பாத்திரம் என்றாலே “நம்மள்கி”, “நிம்மள்கி” என்று மார்வாடி போன்றுதான் டமில் பேச வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

முஸ்லிம் பாத்திரம் பெரும்பாலும் சல்வார் கமீஸ் அணிந்து, கூம்பு தொப்பியணைந்த, ஆஜானுபாகுவான நெட்டை ஈட்டிக்காரனாக இருப்பார். “அரே.. சைத்தான் கி பச்சா” என்று ஒரு குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு தெருவெல்லாம் கடன்காரனை விரட்டுவார். கடன்காரரும் தலை தெறிக்க ஓடுவார்.

சினிமாவில் முஸ்லிம் பாத்திரங்கள் என்றால் ஒருசில குறிப்பிட்ட தொழில் செய்பவர்களாக மட்டுமே காட்டப்படுவார்கள்.

தலையில் வலைப்பின்னல் வெள்ளைத் தொப்பி, கழுத்தில் தாயத்து, கைவைத்த பனியன், இடுப்பில் அகலமான பச்சை நிற பெல்ட் அணிந்திருந்தால் அவர் கசாப்புக் கடைக்காரர். சாதாரண நேரத்திலும் அவர் கசாப்புக் கத்தி கையுமாகத்தான் நடமாடுவார்.

முஸ்லிம் கதாபாத்திரமென்றால் அடிக்கொரு தரம் “அச்சா.. அச்சா” என்று சொல்ல வேண்டும்., திடீரென்று சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் “அரே அல்லா” என்று நீட்டி முழங்க வேண்டும்.

அதே கெட்டப்பில் நீளமான தாடி வைத்துக்கொண்டு, கழுத்தில் மலைப்பாம்பு போல ‘இஞ்ச் டேப்பு’ தொங்கினால் அவர் தையற்கடை பாய்.

அதே கெட்டப்பில் கழுத்தில் மணியெல்லாம் அணிந்துக்கோண்டு, பச்சை நிற சால்வை போட்டுக்கொண்டு, கையில் குமைஞ்சான் சட்டியோடு கடை கடையாக, புகை மண்டலம் சூழ யாராவது அலைந்தார் என்றால் அவரும் முஸ்லிம் குணச்சித்திர பாத்திரம்.

மணிரத்தினம் படமென்றால் அந்த முஸ்லிம் தீவிரவாதியாக இருப்பான், பாகிஸ்தான் தீவிரவாதியுடன் “ஒயர்லெஸ்ஸில்” பேசுவான்.

வயதான முதியவர் முஸ்லிம் பாத்திரம் என்றால் அவருக்கு நீளமான தாடி இருக்கும்; ஆனால் மீசை முழுவதுமாக மழித்திருப்பார். ஆனால் எல்லோரும் தமிழை கடித்துக் குதறிதான் பேசுவார்கள்.

“நிம்பள் எங்கே போறான்?” “நம்மள்கி வாணாம்” “நம்பள் நமாஸ் படிக்கப் போறான்” என்றுதான் பெரும்பாலான முஸ்லிம் கேரக்டர்கள் பேசுவார்கள். ஒருவர் கூட தூயதமிழ் பேச மாட்டார்கள்.

தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு இந்துமதச் சகோதரனுக்கும் நிச்சயமாக ஒரு முஸ்லிமாவது தன் வாழ்க்கையில் இணைபிரியாத நண்பனாக இருப்பான். ஒன்றாகவே உண்பார்கள், ஒன்றாகவே பழகுவார்கள். இவன் அவன் வீட்டுக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பான். அவன் இவன் விட்டுக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பான். நான் சொல்வது எதார்த்தமான நிஜவாழ்க்கை. அவர்கள் எல்லோரும் நல்ல தமிழில் உரையாடுபவர்களாகத்தான் இருப்பார்கள். தன் முஸ்லீம் நண்பன் வானத்திலிருந்து தனியாக குதித்து வந்தவனல்ல என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும்.

“உங்கள் முஸ்லிம் நண்பர் “நம்மள்கி.. நிம்மள்கி” என்றுதான் தமிழ் பேசுவாரா?” என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். “யோவ்! நீ லூசா?” என்று திருப்பிக் கேட்பார்கள்.

நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயில் பற்றி எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். கம்பராமாயணத்திற்கு அவர் ஒரு அத்தாரிட்டி. “பாவமன்னிப்பு” படத்தில் சிவாஜி கணேசனுக்கு இளைஞர் வேடம். சிவாஜியைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் அவர் ‘அல்வா’ போன்றவர். பாத்திரத்தோடு ஒன்றிப் போய்விடுவார்.

இப்படத்தில் முஸ்லிம் வாலிபராக பாத்திரம் ஏற்றிருக்கும் சிவாஜி கணேசனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அதாவது, இந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கையில் எப்படி பேசுவது? முஸ்லிம் என்பதால் தூய தமிழில் பேச வேண்டுமா அல்லது “பட்லர் இங்கிலீஷ்” போன்று “பட்லர் தமிழில்” பினாத்த வேண்டுமா? இந்த சந்தேகத்தை யாரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது?

சிவாஜிக்கு இப்போது நீதிபதி மு.மு.இஸ்மாயில் ஐயா ஞாபகம்தான் வந்தது. அவரிடம் சென்று கேட்கிறார். “ஐயா நான் முஸ்லிம் இளைஞர் பாத்திரம் எற்று நடிக்கின்றேன். இந்த வேடத்திற்கு ஏற்றார்போல் ‘ஸ்லாங்காக பேச வேண்டுமா அல்லது நல்ல தமிழிலேயே பேச வேண்டுமா?

பொறுமையாக கேட்ட நீதியரசர் சொன்னார் “முஸ்லிம் பாத்திரங்களில் நடிக்கும்போது தாராளமாக எல்லோரும் உரையாடுவதுபோல இயல்பாகவே நீங்க பேசலாம். நல்ல தமிழில் பேசுவது எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் செய்கிற பெருமை” என்றார்.

நெகிழ்ந்துப்போன சிவாஜி கணேசன் அப்படியே செய்கிறேன் என்று நன்றி பெருக்கோடு கூறினார்.

 

காயிதேமில்லத்


123

காயிதேமில்லத் பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ள உள்ளம் விழைந்தது.

“கண்ணியமிகு” என்ற அடைமொழியுடன் யாரையாவது குறிப்பிட்டால் அது இஸ்மாயீல் சாகிப் அவர்களைத்தான் குறிக்கும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.

“கவ்மின் காவலர்” என்று அவருக்கு புகழாரம் சூட்டுவார்கள். அதென்ன கவ்மின்? எழுமின் விழிமின் உழைமின் என்பதைப் போல?

“கவ்ம்” என்றால் சமுதாயம். “கவ்மின் காவலர்” என்றால் சமுதாயக் காவலர் என்று பொருள். அவர் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டும் காவலராக இருக்கவில்லை, ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்திற்கும் மற்றும் சிறுபான்மைச் சமூகத்திற்கும் காவலராக இருந்து குரல் கொடுத்தவர்.

காயிதேமில்லத் அவர்களைக் குறிப்பிடும்போது ‘கண்ணியமிகு’ என்ற அடைமொழியைச் சேர்க்காமல் அறிஞர் அண்ணா விளித்ததே கிடையாது.

திருச்சி மற்றும் பஹ்ரைன் பொதுக்கூட்டத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் என்னை ‘கண்ணியமிகு’ என்ற அடைமொழி இணைத்து விளித்தபோது நெகிழ்ந்துப் போனேன். எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாக பூரித்தேன். திராவிட பாசறையில் பூத்த மலரல்லவா அவர்? அந்த உயர்பண்பு இருக்கத்தானே செய்யும்?

1967-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், காயிதேமில்லத் அவர்களுக்கு நாகூர் கெளதியா சங்கத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பின்போது, நான் சிறுவனாக இருந்தபோது கறுப்பு நிறத்தில் நீளமான கோட்டு அணிந்து, வெள்ளை ஷேர்வானி, உயரமான தொப்பி அணிந்த அந்த கண்ணியவானை வச்ச பார்வை தீராது ஆச்சரியத்துடன் நான் கண்ட காட்சி இன்னும் பசுமையாக நிலைத்திருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே சட்ட மன்றத்தில் இடம் பெற்று, அதற்குப் பிறகு அரசியல் நிர்ணய சபையில் பெரும் பங்காற்றிய அவரது சேவை அழிக்க முடியாத வரலாறு.

காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற்று பெருஞ்சேவை ஆற்றியவர். அவரது வாதங்களின் அடிப்படையில்தான் இந்திய அரசியல் சட்டவிதிகள் 21 முதல் 30 வரை இடம்பெற்றன. இது சிறுபான்மை சமுதாயத்தின் மொழி, கலாச்சார, மார்க்கப் பாதுகாப்புக்கு அரணாக அமைந்தன, காயிதேமில்லத் போன்றவர்களின் கர்ஜனையை தில்லி கேட்டிராவிட்டால் எப்போதோ இந்தி தேசிய மொழியாக அப்போதே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

இவரைத்தான் இந்திய சுதந்திர வரலாறைப் பற்றிய அரிச்சுவடே அறியாத எச்,ராஜா “காயிதேமில்லத் ஒரு மதவெறியர்” என ஒரு தொலைக்காட்சி உரையாடலில் திருவாய் மலர்ந்தருளினார்.

இதற்கு அவருடைய சமூகத்தைச் சார்ந்த 90 வயதைக் கடந்த, காயிதேமில்லத் வாழ்ந்த வீட்டிற்கு அண்டை வீட்டில் வசித்த திரு,கிருஷ்ணமூர்த்தி ஐயர் என்பவர் சரியான பதிலடி கொடுத்தார்,

”எங்களுக்குள் அந்த இந்து-முஸ்லிம்கிற ஃபீலிங்சே கிடையாது. நான் பிராமினா இருந்தா கூட Iam very much attached with Qaide Millath. அந்த மாதிரியே பழகிட்டேன் அவர்கிட்ட. அதனால அவர் வீட்டில எனக்கு எல்லா வகையான சுதந்திரமும் இருந்தது. So, He was very helpful எனக்கு. காயிதே மில்லத் எனக்கு உதவி செய்தது போல் வேறு யாரும் இங்கு இருக்கிறவர்கள் எனக்கு உதவி செய்யல. அதனால அவரை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. அவர் இறந்தபோது அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஒரு அன்கான்சியஸ் ஸ்டேஜுக்கே வந்துவிட்டேன்.” இது அவரது அண்டை வீட்டுக்காரரின் உள்ளத்திலிருந்து வெளிவந்த சொற்கள்.

காயிதேமில்லத்தின் நாட்டுப்பற்றை சந்தேகிப்பவர்கள் வரலாறு அறியாத மூடர்கள்.

பரங்கிமலைத் தொகுதி தேர்தலின்போது தொகுதிக்கே செல்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார் எம்.ஜி.ஆர்.. அவருடைய வெறும் கட்-அவுட்டை வைத்தே அவருக்கு பெருத்த அளவில் வெற்றியைத் தேடித் தந்தார்கள் மக்கள். இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

1954-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற மேலவைக்கு காயிதேமில்லத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நாளிலிருந்து இந்திய முழுவதும் செல்வாக்குடைய பெருந்தலைவராக காயிதேமில்லத் விளங்கினார், மஞ்சேரி என்ற தொகுதி கேரளாவில் உள்ளது, தொகுதிக்கே செல்லாமல் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒவ்வொரு முறையும் அதுவும் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து அந்தத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றது சரித்திர நிகழ்வு.

இத்தனைக்கும் அவர் பிறந்தது கேரளத்தில் அல்ல. திருநெல்வேலி பேட்டையில்.

“உங்கள் தொகுதிக்கு எட்டிப்பார்க்காத ஒருவரை எப்படி மூன்று முறை நாடளுமன்றத் தேர்தலில் அவரை தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று மஞ்சேரிக்காரர் ஒருவரை ஒரு பத்திரிக்கை நிருபர் கேட்டபோது அவர் சொன்ன பதில் ‘தொகுதிக்கு வராவிட்டால் என்ன? அவர்தான் எங்கள் இதயத்தில் வீற்றிருக்கிறாரே?”

தொடர்ந்து வாழ்நாள் முடியும்வரை சட்டப்பேரவை உறுப்பினராக அவர் இருந்து வந்தார். இப்பேர்ப்பட்ட ஒரு தலைவரை விமர்சிக்க சாரண சாரணியர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெறும் 46 வாக்குகள் மட்டுமே பெற்ற எச்.ராஜாவுக்கு தகுதி இருக்கிறதா என்பதை இதைப் படிக்கும் வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946-ஆம் ஆண்டு சென்னை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்மாயீல் சாகிப் இந்திய விடுதலைக்குப் பின் 1952-வரை சென்னை மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விளங்கினார். 1948 முதல் 1950 வரை நடுவண் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக அம்பேத்கர் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கி அந்த அரசியல் சாசனத்திலும் கையொப்பமிட்டார்.

1946-ஆம் ஆண்டு அவர் சென்னை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது முஸ்லீம் லீக் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஒன்றல்ல இரண்டல்ல 29 பேர்கள். இவர்தான் எதிர்க்கட்சித்தலைவர்.

இந்திய துணைக்கண்டம் 1947-ஆம் ஆண்டு இருகூறாக பிரிந்தது. அகில இந்திய முஸ்லீம் லீக் நிர்வாகக்குழு கறாச்சியில் ஒன்று கூடி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML), பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (PML) என்று இரண்டாகப் பிரிந்தபோது IUML-ன் அமைப்பினராக இவர் நியமிக்கப்பட்டார். அச்சமயம் பாகிஸ்தான் தலைமை அமைச்சராக இருந்த நவாப் ஜாதா லியாகத் அலிகானிடம் காயிதேமில்லத் கூறிய வார்த்தை என்ன தெரியுமா?

“எத்தகைய சூழ்நிலையிலும் இந்திய முஸ்லீம்கள் விவகாரத்தில் நீங்கள் மூக்கை நுழைக்கக் கூடாது” என்பதுதான். மேலும் “எங்களுக்கு ஏதேனும் நல்லது செய்வதாக இருந்தால் பாகிஸ்தானில் இருக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் நலனை பாதுகாக்க முயலுங்கள்” என்று துணிச்சலாக அவர் முகத்திற்கு எதிரே கூறியவர்.

1962-ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய சீனப் படையெடுப்பின்போது “என் ஒரே மகன் மியாகானை போர்க்களத்திற்கு அனுப்பத் தயார்” என்று முழங்கியது எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை.

“காஷ்மீர் முஸ்லீம்களின் தனிநாடாக வேண்டும்” என்று சிலர் பரவலாக கூறிவந்த காலத்தில் “அது இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி” என்று வாதிட்ட பெருந்தகை அவர்.

“தமிழ் மொழியே நம் நாட்டின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்” என்று ஆணித்தரமாக வாதிட்ட தமிழ் உணர்வாளர் அவர். “ஒரு மொழி இந்திய மொழியாக இருந்தால் மட்டும் போதாது அம்மொழி நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும்” என்று சூளுரைத்தவர். கல்விப்பணிக்கு காயிதேமில்லத் ஆற்றிய பங்கு இன்றிமையாதது,

காயிதேமில்லத் ஒருமுறை சிங்கப்பூர் சென்றிருந்தார். மாநாட்டை தொடங்கி வைத்தவர் அப்போதைய பிரதமர் லீ குவான் யூ. பொதுவாக அவர் இதுபோன்ற பொது நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு உடனே சென்று விடுவது வழக்கம். காயிதே மில்லத் ஏறக்குறைய ஒருமணி நேரம் ஆங்கிலத்தில் பேசிவிட்டு தமிழில் உரையாற்றினார். இருமொழிகளிலும் திறம்படப் பேசும் திறமை மிகுந்தவர் அவர். அவரது பேச்சைக் கேட்டு அசந்துப்போன லீ குவான் யூ வியந்துப் போனார். இறுதிவரை மேடையில் அமர்ந்து விட்டுச் சென்றார்.

1966-ஆம் ஆண்டு காயிதேமில்லத் அவர்கள் அண்ணா, ராஜாஜியுடன் இணைந்து அமைத்த அரசியல் வியூகம் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் கட்சியை தோல்வியைத் தழுவச் செய்தது. அண்ணாவின் ஆட்சி அமைய முக்கியக் காரணமாக இருந்தவர் காயிதேமில்லத் என்றால் மிகையாகாது.

இந்தியாவில் அனைத்துச் சமுதாய மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அவருடைய உரிமைக்குரலாக இருந்தது. சென்னையில் முதன் முதலாக நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டில் அண்ணா மற்றும் காயிதேமில்லத் அவர்கள் ஆற்றிய உரைகள் வரலாற்று ஏடுகள்.

“காயிதேமில்லத் வாழும் நாட்டில், அவர்களின் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமைப் படுகிறேன்”. இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்கள்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டபோது புது தில்லியைச் சேர்ந்த “ஹுமா” என்ற உர்து பத்திரிக்கையின் நிருபர் காயிதேமில்லத்திடம் வினா தொடுக்கிறார் “இச்சமயத்தில் உங்கள் இயக்கத்தின் செயற்பாடு எப்படி இருக்கும்?

“இந்தியா எங்கள் தாய்நாடு, நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியாவுக்கு யார் யார் எதிரிகளோ அவர்கள் இந்திய முஸ்லீம்களுக்கும் விரோதிகள்தான். அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்வோம்” என்று பதிலுரைக்கிறார்.

காயிதேமில்லத் அவர்கள் மரணித்து அவருடைய நல்லுடல் சென்னை புதுக்கல்லூரியில் பார்வைக்கு வைத்திருந்தபோது, தள்ளாத வயதில் நடந்துவந்த பெரியார் கூறிய வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்தது. “நான் போயிருக்கக்கூடாதா? அவர் இன்னும் வாழ்ந்திருக்கக்கூடாதா? என்று நா தழுதழுக்கக் கூறினார்.

“இன்று நாங்கள் அரசபீடத்தில் அமர்ந்து இருக்கின்றோம் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இவர்தான்” கலைஞர் உருக்கமாக உரைத்தார்.

“அண்ணாவின் மறைவுக்குப் பிறகு இவரே எங்களுக்குத் தமையனுக்குத் தமையனாய் விளங்கி வந்தார்” என எம்,ஜி,ஆர் புகழாரம் சூட்டினார். பிற்பாடு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கீழத்தஞ்சை வட்டாரத்தை “காயிதே மில்லத் மாவட்டம்” என்று அறிவித்ததும் எம்.ஜி,ஆர்.தான்

துக்ளக் ஆசிரியர் சோ தனது துக்ளக் பத்திரிக்கையில் இட்ட மறைவு அஞ்சலி சற்று வித்தியாசமாக இருந்தது. எல்லோரையும் அது கவர்ந்தது. காயிதேமில்லத்தின் புகைப்படத்தை கறுப்புக் கட்டத்தில் வெளியிட்டு, அவரது தோற்றம்:1896, மறைவு: 1972. அவ்வளவுதான். அவர் கொடுத்திருந்த தலைப்பு ‘இதோ ஒரு சிறந்த மனிதர்’. அதற்கு கீழே நபிகள் நாயகத்தின் பொன்மொழி :

‘அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் ஆசைபடாதவரே மனிதரில் சிறந்தவர் – நபிகள் நாயகம்.

1937-ஆம் ஆண்டிலேயே மெட்ராஸ் ராஜதானி என்று அழைக்கப்பட்ட ஒன்றுபட்ட தென்மாநில முதலமைச்சராக இருந்த மூதறிஞர் ராஜாஜியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர் காயிதேமில்லத் அவர்கள். “இன ஐக்கியத்திற்கும் நாட்டு ஒற்றுமைக்கு பாடுபட்ட நல்ல அரசியல்வாதி” என புகழஞ்சலி செலுத்தினார் ராஜாஜி.

1967 டிசம்பர் இறுதியில் சென்னை விருகம்பாக்கம் தி.மு.க. மாநாட்டில் மேடையில் மூவர் மட்டுமே எடுப்பாக வீற்றிருந்தார்கள். ராஜாஜி, அண்ணா, இஸ்மாயீல் சாகிப். அண்ணா இச்சேர்க்கையை கவிதை நயத்துடன் கூறினார். “லீக், தி.மு,க., சுதந்திரா கூட்டு என்பது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போல.

பச்சை வெற்றிலை : இஸ்மாயில் சாகிப், கறுப்புக் களிப்பாக்கு ; அண்ணா. காரமான சுண்ணாம்பு : ராஜாஜி.

சுண்ணாம்பை அளவறிந்து தடவாவிட்டால் வாய் வந்துவிடும் என்பதைத்தான் அண்ணா சூசகமாகச் சொன்னார் என பத்திரிக்கைகள் கருத்து வெளியிட்டன.

காயிதேமில்லத்தின் பெருமை நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அடுத்த மாதம் 5-ஆம் தேதி காயிதேமில்லத் அவர்களின் பிறந்தநாள். அண்ணாவின் பெயரைத் தாங்கிய இவ்வாட்சி அவரது பிறந்தநாளை நினைவு கூறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

-#அப்துல்கையூம்

 

குடத்திலிட்ட விளக்குகள்


Screenshot_20200129_084709

நாகூர் எத்தனையோ எண்ணிலடங்கா படைப்பாளிகளை எழுத்துலகில் களம் இறக்கியிருக்கிறது. ஆன்மீக எழுத்தாளர்கள், இலக்கிய கர்த்தாக்கள்,  மொழிபெயர்ப்பு படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், திரைப்பட வசனகர்த்தாக்கள், கவிராஜர்கள் இப்படியாக பன்முகப் படைப்பாளிகள் எழுத்துலகில் வலம் வந்தவர்கள் ஏராளம் ஏராளம்.

ஒவ்வொருவருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னால் ஒரு சில பெயர்கள் விட்டுப்போய் விடுமோ என்ற பயத்தினால் அந்த நீண்ட பட்டியலை நான் குறிப்பிடாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

அதிகமான எண்ணிக்கையில், அதாவது 55 நூல்கள் வெளியிட்டு சாதனை படைத்திருக்கும் எனது நண்பர் நாகூர் ரூமியைப் பற்றி நானிங்கு சொல்ல வேண்டியதில்லை.  நமக்கெல்லாம் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தானே கிடைக்கிறது. இவருக்கு மாத்திரம் எப்படி 36 மணிநேரம் வாய்க்கிறது என்றெல்லாம் நான் பொறாமை பட்டதுண்டு. ரூமிலேயே இருந்துக்கொண்டு எழுதுவதால் இவருக்கு ரூமி என்று பெயர் வந்ததோ என்று நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. (அப்ப ஹோமர் என்ன Home-ல் இருந்துக் கொண்டு எழுதியவரா என்றெல்லாம் கேட்டு படுத்தக்கூடாது.,ஆமாம்_

நான் இதுவரை இரண்டே இரண்டு நூல்கள்தான் எழுதியிருக்கிறேன். மூன்றாவது ஆய்வுநூல் எழுத எனக்கு 5 வருடங்கள் பிடித்தது. இன்னும் அந்த நூல் வெளிவந்த பாடில்லை. ஒரு நூலை பதிப்பிப்பதற்குள் தாவு கழன்று, நாக்கு வெளியே தள்ளி விடுகிறது. நான் பணக்கட்டைச் சொல்லவில்லை மெனக்கெட்டைச் சொல்கிறேன்.

துபாயில் இருந்துக்கொண்டு ஒரு பெரிய வாசகர் பட்டாளத்தைச் சமாளித்துக் கொண்டு எழுதிக் குவிக்கும் கணிணி பிதாமகன் ஆபிதீன் கூட இரண்டே இரண்டு நூல்கள்தான் எழுதியிருக்கிறார். (உயிர்த்தலம், இடம்). “ஓவியா ஆர்மி” போல் நிச்சயம் “ஆபிதீன் ஆர்மி”யும் இருக்க வேண்டும்.

நாகூர் ஈன்ற மற்றொரு பிரபலம் சாரு நிவேதிதா 53 நூல்களுக்கு மேல் எழுதியிருப்பதாக என் கணிப்பு.

ஆனால் நாகூரைச் சேர்ந்த ஒருவர் அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எப்போதோ சதம் அடித்து விட்டார். இவரைப் பற்றி 2012-ஆம் ஆண்டில் என் வலைத்தளத்தில் “வெளிச்சத்திற்கு வராத படைப்பாளிகள்” என்ற குறிப்போடு ஒரு பதிவு இட்டிருந்தேன்.

1a

டி.என்.சேஷனைப் பற்றி நமக்குத் தெரியும். டி.என்.இமாஜானைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது.

கவிஞர் சலீமை “நாகூரின் தாகூர்” என்று புகழ்வார்கள். ஆனால் இவரை நாகூரின் அழ.வள்ளியப்பா என்பதா அல்லது நாகூரின் தமிழ்வாணன் என்பதா என்று அடைமொழி இடுவதில் எனக்கு பெரும் குழப்பம். நேரு மாமா போன்று இவருக்கு குழந்தைகள் மீது அலாதிப் பிரியம் போல. அதனால்தான் குழந்தைகளுக்காக நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.என். இமாஜான் ஒரு குட்டி தமிழ்வாணன். “Master of All Subjects” என்று கூட சொல்லலாம். சிங்கையில் இருந்துக்கொண்டு சங்கத்தமிழ் நாதம் எழுப்பிக்கொண்டு, சந்தைப் படுத்தத் தெரிந்த சிந்தைக்கினியவர்.  நூற்றுக்கு மேலான நூல்கள் எழுதியிருக்கிறார். ஒண்ணேகால் சதம் நெருங்கி விட்டதாகக் கேள்வி.

நகைச்சுவை, கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், பொது அறிவு and What Not..? 2006-ஆம் ஆண்டு, இவர் எழுதிய 40 நூல்களை சிங்கப்பூரில் ஒரே சமயத்தில் வெளியீடு காணச் செய்து, சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கத் தெரிந்த சீரான ஆய்வாளர், தமிழாசிரியர்.

15.08.2015 தேதியன்று சிங்கப்பூர் பொன்விழாவையொட்டி டாக்டர் டி,என்,இமாஜான் எழுதிய 100 நூல்களில் வெளியீட்டு விழா நடந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்னை புதுக்கல்லூரி மாணவர்.  திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த வசனகர்த்தா தூயவன் இவரது தாய்மாமன். இவர்களது பரம்பரையில் வந்த எழுத்துலக வேந்தர்கள் பட்டியலிட்டு புகழ் பாடினால் பக்கங்கள் காணாது.

எதுகை மோனையுடன் கூடிய இவருடைய நூலின் தலைப்புகளைப் படித்தால் அதுவே ஒரு கட்டுரை போல் இருக்கிறது. உள்ளடக்கம் என்னவென்பதை இவருடைய நூலின் தலைப்பே காட்டிக் கொடுத்துவிடும். லேனா தமிழ்வாணனுடன் இணைந்து பல நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்..

இவரிடம் சென்று “எங்கே நீங்கள் எழுதிய நூல்களின் தலைப்பை வரிசைப்படுத்துங்கள் பார்க்கலாம்?” என்று கூறிப் பாருங்கள். அவர் “பெக்கெ..பெக்கெ..” என்று பாண்டியராஜன் போன்று முழிப்பது நிச்சயம்.

வார்த்தையை மடக்கி எழுதத் தெரிந்தாலே “கவிஞர்” என்று அடைமொழி இட்டுக் கொள்வதும்,  தனக்குத்தானே பட்டங்கள் சூட்டிக் கொள்ளும் நபர்கள் நிறைந்த இந்த உலகத்தில் இவரைப் போன்ற சிலர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதிப் புரட்சி செய்வது பாராட்டத்தக்கது.

குன்றிலிட்ட விளக்காக பிரகாசிக்க வேண்டிய சிலர் இன்னும் குடத்திலிட்ட விளக்காக இருப்பது துரதிருஷ்டமானது.

(பின்குறிப்பு: மேலேயுள்ள புகைப்படம் 3D புகைப்படம் அல்ல. சாதாரணப் புகைப்படம்தான். ஆனாலும் முனைவர் பேரா. நத்தர்சா மரைக்கார் அவர்களுடைய பதிவிலிருந்து திருடி ‘கிராப்’ வெட்டி அடியேன் பதிவேற்றம் செய்தது.  அன்னார் என்னை மன்னிப்பாராக)

முனைவர் டி.என்.இமாஜான் பதிவிட்ட நூல்களை இங்கும் அங்கும் தேடி ஓரளவு வரிசைப்படுத்தி இருக்கிறேன். விட்டுப் போனது இன்னும் உண்டு:

டி.என்.இமாஜான் இதுவரை எழுதியுள்ள நூல்கள்!

1. குண்டக்க மண்டக்க ஜோக்ஸ்
2. எடக்கு மடக்கு ஜோக்ஸ்
3. குழந்தைகளுக்குப் பிராணிகள் சொல்லும் ஜோக்ஸ்
4. பழமொழி ஜோக்ஸ் பாகம் -1
5. பழமொழி ஜோக்ஸ் பாகம் – 2
6. பேய் ஜோக்ஸ்
7. இமாஜான் ஜோக்ஸ்
8. ஆஸ்பத்திரி ஜோக்ஸ்
9. புருஷன்-பொண்டாட்டி ஜோக்ஸ்
10. சிரிப்பாய்ச் சிரியுங்கள்
11. நகைச்சுவையான ஹைக்கூ கவிதைகள்
12. செய்திகள் தரும் சிரிப்புகள்
13. சிறுவர் சிந்தித்துச் சிந்திய சிரிப்புகள்!
14. கணிப்பொறியில் சிரிப்புப் பொறிகள்!
15. வயிறு வலிக்கச் சிரிக்கலாம் வாங்க!
16. கெக்கெக்கெக்கே…! கெக்கெக்கெக்கே…!
17. கிச்சு….! கிச்சு…!
18. தமாஷோ தமாஷ்!
19. படித்தாலே சிரிப்புதான்!
20. மிஸ்டர் நையாண்டி!
21. பயனுள்ள தகவல்களும் பதமான நகைச்சுவைகளும்!
22. இருமுறை சிரிக்க இரட்டைச் சிரிப்புகள்!
23. ரசித்துச் சிரிக்க சினிமா பற்றிய சிரிப்புகள்!
24. ஒரே ஒரு வார்த்தையில் பலவகை சிரிப்புகள்!
25. சிரிப்புச் சொட்டும் ஒரு பக்கக் கதைகள்!
26. ஒரு பூந்தோட்டத்தில் பல பட்டாம்பூச்சிகள்! (கவிதைகள்!)
27. வாங்களேன்! சிரிங்களேன்
28. படிக்கலாம்! சிரிக்கலாம்!
29. சிரிக்கத்தான் வாரீகளா!
30. சிரிப்பு மழை!
31. சிறப்பான வாழ்க்கைக்குச் சிந்தனை முத்துக்கள்!
32. நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!
33. நகைச்சுவையூட்டும் நாடகங்கள்!
34. பழமொழியும் நகைச்சுவையும் பாகம்-1
35. பழமொழியும் நகைச்சுவையும் பாகம்-2
36. புன்னகை பூக்கும் கவிதை மின்னல்கள்!
37. பத்திரிகைகளில் படைத்த பளீர் சிரிப்புகள்!
38. இதழ்களில் எழுதிய இன்சுவைப் படைப்புகள்!
39. இனிமையில் நனைந்த கவிதை நறுக்குகள்!
40. குறும்பு கொப்பளிக்கும் கேள்வி – பதில்கள்!
41. சிந்தித்துச் சிரிக்க சிரிப்புப் புதிர்கள்!
42. சிரித்துச் சிந்திக்க சிந்தனை மொழிகள்!
43. புன்னகை மன்னன் பராக்! பராக்!
44. குறுஞ்செய்திக் குறும்புகள்!
45. நகைச்சுவை தரும் நன்மைகள்!
46. சிந்தையைச் செம்மையாக்கும் செந்தமிழ்ப் புதிர்கள்!
47. மூளையை முடுக்கிவிடும் முத்தான புதிர்கள்!
48. வாய் வலிக்கச் சிரியுங்கள்!
49. சிரிப்புக்குப் பஞ்சமில்லை!
50. சிரிக்கும்வரை விடமாட்டேன்!
51. எழுத்து விளையாட்டு!
52. வார்த்தை விளையாட்டு!
53. உங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா?
54. சிந்தையைச் சீண்டும் சுடோகுப் புதிர்கள்!
55. விவேகமான விடுகதைகள்!
56. சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!
57. அறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள்!
58. சிரித்தாலே இனிக்கும்!
59. சுட்டிகளுக்கான சுடோகுப் புதிர்கள்!
60. சிரிப்பூட்டும் செய்திகள்!
61. நகைச்சுவையான நறுக்குக் கவிதைகள்!
62. வேடிக்கையான வினாடி-வினா!
63. பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்!
64. மாணவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!
65. நகைக்க வைக்கும் நாட்டு நடப்புகள்!
66. சிந்திக்கச் செய்யும் சுடோகுப் புதிர்கள்!
67. தம்பி தங்கைகளுக்கான சுடோகுப் புதிர்கள்!
68. இளையர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!
69. பரிகாசமூட்டும் பழமொழிகளும் பொன்மொழிகளும்!
70. நகைச்சுவைக் கதம்பம்!
71. கணக்கிட்டு நிரப்பும் காக்குரோ புதிர்கள்!
72. கூட்டலால் நிறைக்கும் காக்குரோ புதிர்கள்!
73. ஒரேயொரு வார்த்தையில் பலவகைப் புதிர்கள்!
74. ஒரேயொரு சொல்லில் ஏராளப் புதிர்கள்!
75. சிரிப்பூக்கள்!
76. சாமுராய் சுடோகுப் புதிர்கள்!
77. சிந்தித்துப் பூர்த்திசெய்ய சாமுராய் சுடோகு!
78. இருமுறை சிந்திக்க இரட்டைப் புதிர்கள்!
79. பலவகையில் யோசிக்க இருவகைப் புதிர்கள்!
80. குசும்பு கொப்பளிக்கும் கேள்வி-பதில்கள்!
81. புத்தியைப் புடமிடும் ஃபுடோசிகிப் புதிர்கள்
82. புத்தியைப் புதுப்பிக்கும் புதுமையானப் புதிர்கள்!
83. வட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள்!
84. சுழற்சி முறையில் சுடோகுப் புதிர்கள்!
85. வாய் விட்டுச் சிரிங்க! (சிரிப்பு மஞ்சரி)
86. பொது அறிவை வளர்க்கும் விநாடி-வினா-விடை!
87. அறிவைச் செறிவூட்டும் அறியாச் செய்திகள்!
88. இலக்கியத்திறன் வளர்க்கும் இன்பத்தமிழ்ச் செய்திகள்!
89. படிப்பினையூட்டும் பல்சுவைக் கேள்வி-பதில்கள்!
90. தயவுசெய்து சிரியுங்கள்!
91. உங்களைப் பண்படுத்தும் உன்னதப் பொன்மொழிகள்!
92. உலகறிவை ஊட்டும் ஏராள வினாடி=வினா!
93. அறிந்து கொள்ள வேண்டிய ஆயிரம் வினா-விடைகள்!
94. வியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள்!
95. பிரபலங்கள் செய்த குறும்புகள்!
96. விளையாட்டு வினாடி-வினா-விடை!
97. திரைப்படத் தகவல்களில் வினாடி-வினா-விடை!
98. பொது அறிவுப் பூங்கா!
99. சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்!
100. சிரிக்காவிட்டால் விடமாட்டேன்!
101. சிரிப்போ சிரிப்பு (குலுங்கக் குலுங்கச் சிரிங்க!)
102. சமர்த்தாய் யோசிக்க சதுரக் கட்டப் புதிர்கள்!
103. நாட்டுப்புற இலக்கியத்தில் இனிய விஷயங்கள்!
104. எளிமையான இலக்கண விருந்து! (நன்னூல்-எழுத்ததிகாரம்)
105. அறிவார்ந்த கேள்விகளும் ஆக்கபூர்வ பதில்களும்!
106. சத்தம்போட்டுச் சிரிக்க – சிரிக்க!
107. தமிழக வரலாற்றில் தலையாயத் தகவல்கள்!
108. காப்பிய – நீதி இலக்கியங்களில் கருத்தான விஷயங்கள்!
109. எண்களால் அமையப்பெற்ற எண்ணற்றப் புதிர்கள்!
110. சிங்கப்பூரில் நடந்த சிரிப்புச் சம்பவங்கள்!
111. விகடத்தில் விளைந்த வார்த்தை ஜாலங்கள்!
112. உங்களுக்கு ஊக்கமளிக்கும் உயர்வானப் பொன்மொழிகள்!
113. நன்னூல் சொல்லதிகாரத்தில் சொல்லத்தக்கச் செய்திகள்!
114. தமிழ்மொழி இயலின் போக்கில் அறிவியல் விஷயங்கள்!
115. கரும்பாக இனிக்கும் குறும்புகள்!
116. கத்திச் சிரிக்க சிரிப்புக் கொத்து!
117. துளித்துளியாய் கவிதைத்துளிகள்!
118. களிப்பூட்டும் துளிப்பாக்கள்!
119. சிலிர்ப்பூட்டும் சின்னஞ்சிறு கவிதைகள்!

120. கருத்தான கேள்விகளும் கரும்பான பதில்களும்!
121. புன்சிரிப்பூட்டும் சென்ரியூ கவிதைகள்!
122. மொழி பெயர்ப்போருக்கான முக்கிய ஆலோசனைகள்!
123. சங்க இலக்கியத்தில் சுவையான சங்கதிகள்!
124. உள்ளே போங்க நல்லா சிரிங்க!
125. இமாஜானின் சிரிப்புச் சேட்டைகள்!
126. ஒன்று முதல் நூறுவரை ஒருங்கிணைந்த தகவல்கள்!
127. தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியமான தகவல்கள்!
128. கவிதைகளில் காணப்பெறும் இலக்கண இனிமைகள்!
129. கடந்த ஆண்டுகளில் நடந்த உயர்வான சம்பவங்கள்!
130. சிறப்புப்பெயர்கள்-புனைபெயர்கள் பற்றிய சுவையான தகவல்கள்!
131. முதன்முதலாக நடந்த முக்கியச் செய்திகள்!
132. அடைமொழிப் பெயர்கள் பற்றிய அருமையான தகவல்கள்!
133. திரைப்படங்கள் பற்றிய தெரியாத தகவல்கள்!
134. தமிழ்த்தேன் துளிகள்!
135. முத்து முத்தான மூன்றடிக் கவிதைகள்!
136. கருத்தைக் கவரும் கடுகளவுக் கவிதைகள்!
137. இக்கால இலக்கியத்தில் இனிய பக்கங்கள்!
138. பக்தி இலக்கியத்தில் சுவையான பகுதிகள்!
139. பொறிப்பொறியாய் கவிதைப் பொறிகள்!
140. இமாஜானின் இனிய குறும்புகள்!
141. குதூகலமூட்டும் குறுங்கவிதைகள்!
142. படித்தவையில் பிடித்தவை!
143. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்!
144. ஒரேயொரு வாக்கியத்தில் இருநூறு கதைகள்!
145. பள்ளிக்கூடச் சிரிப்புகள்!
146. அப்துல் கலாமின் அறிவார்ந்த சிந்தனைகள்!
147. கேட்கப்படாத கேள்விகளும் கேள்விப்படாத பதில்களும்!
148. எண்களின் அடிப்படையில் எக்கச்சக்க விஷயங்கள்!
149. பலவகை எண்களில் பல்சுவைத் தகவல்கள்!
150. சிரித்துவிட்டால் விட்டுவிடுவேன்!
151. இஸ்லாமியச் சார்பில் இனிமைச் செய்திகள்!
152. உங்களின் உயர்வுக்கான உன்னதக் கேள்வி – பதில்கள்!
153. பொன்னான பெண்மொழிகள்!
154. படித்தேன் படி-தேன்
155. தேசத்தந்தைகளின் சீரிய சிந்தனைகள்!
156. பேசாமல் சிரியுங்கள்!
157. ஆண்கள் பற்றிய அருமையான மொழிகள்!
158. பொது அறிவுக்குப் புதுவிருந்து!
159.. பொதுஅறிவுப் புதையல்!
160. வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி பதில்கள்!
161. புதிரான கேள்விகளும் புதிதான பதில்களும்!
162. இல்லத்தில் உதவும் நல்ல குறிப்புகள்!
163. விலங்குகளைப் பற்றிய வியப்பான செய்திகள்!
164. மலைக்க வைக்கும் மனிதர்கள்!
165. எள்ளலான லிமரைக்கூ கவிதைகள்!
166. அறிந்திராத கேள்விகளும் அறிஞர்களின் பதில்களும்!
167. பறவைகளைப் பற்றிய பல்சுவைச் செய்திகள்!
168. சிலேடைச்சொல் விளையாட்டு!
169. சொற்சிலம்ப விளையாட்டு!
170. அழகான ஹைபுன் கவிதைகள்!
171. எந்த நாடு? என்ன பேரு?
172. குறும்பான குக்கூ கவிதைகள்!
173. பூச்சிகளைப் பற்றிய புதுமையான செய்திகள்!
174. பகடியான பழமொன்ரியு கவிதைகள்!
175. நொடிக்கதைகள் – 100
176. சிறப்பான தலைப்புகளில் சிறந்தோரின் சிந்தனைகள்!
177. வளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துகள்!

178. வாழ்க்கைக்கு வலிமையூட்டும் கேள்வி-பதில்கள்!
179. பொன்மொழிச் சிரிப்புகள்!
180. இரசனையான வசன கவிதைகள்!
181. காதலைப் பாடும் கஜல் கவிதைகள்!
182. தெரிந்த பிரபலங்களும் தெரியாத சம்பவங்களும்!
183. தெரியாத பிரபலங்களும் தெரியவேண்டிய சம்பவங்களும்!
184. அரும்பெரும் அறிஞர்களும் அறிவூட்டும் சம்பவங்களும்!
185. மிகச்சிறுகதைகள்!

  • #அப்துல்கையூம்

 

 

எந்திர ஊர்தியும் எங்கள் ஊர் நாவலரும்


Train

நாகூருக்கும் புகைவண்டிக்கும் ஏகப்பொருத்தம் உண்டு. ஒரு காலத்தில் வடநாட்டிலிருந்து நாகூர் ரயிலில் யார் பயணம் செய்து வந்தாலும், “நாகூர் வந்ததும் என்னை எழுப்பி விடுங்கள்” என்று சகபயணிகளிடம் கெஞ்ச வேண்டியதில்லை. ரயிலில் ஏறி குறட்டை விட்டு தூக்கி விட்டால் போதும். அந்த ரயில் கடைசி நிறுத்தமாக நாகூர் வந்தடைந்து நின்றுவிடும். ரயிலைச் சுத்தம் செய்ய வருபவர்கள் அவர்களை எழுப்பி விட்டு விடுவார்கள். ஆகையால் கவலை இல்லை.

இப்பொழுது அப்படியில்லை. காரைக்காலுக்கும் தொடர்வண்டி தொடர்பு ஏற்படுத்தி விட்டதால் நாகூருக்கு இருந்த அந்த முக்கியத்துவம் முற்றிலும் போய்விட்டது.

இன்ஜினை வந்தவழியே திருப்புவதற்கு கிணறு போன்ற ஒரு சக்கர அமைப்பில் இன்ஜினைக் கொண்டு வந்து நிறுத்தி, இருபுறமும் இரு நபர்கள் லீவரைக் கொண்டு கையாலேயே திருப்புவார்கள். என் இளம் பிராயத்தில் நாகூரில் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை வேடிக்கை காணச் சென்றதுண்டு. இவ்வளவு பெரிய ரயில் இன்ஜினையே இரண்டு பேர்கள் திருப்பி வைத்து விட்டார்களே….? அவர்கள் எவ்வளவு பலசாலியாக இருப்பார்கள்? என அந்த புரியாத வயதில் கண்டு வியந்ததுண்டு.

இக்காலத்தில் ட்ரெயினை பயன்படுத்தாதவர்களே கிடையாது எனலாம். “புகைவண்டி” என்றுதான் இவ்வளவு நாட்களாக நாம் அழைத்துக் கொண்டிருந்தோம். இனிமேல் அப்படி அழைக்காதீர்கள் என்று தமிழார்வலர்கள் நம் மீது வெகுண்டு எழுகின்றார்கள்.

ஒருகாலத்தில் ரயிலானது புகை விட்டுக் கொண்டு “சிக்கு.. புக்கு. சிக்கு.. புக்கு ரயிலே..” என்று வந்தது. இப்பொழுது அது என்ன புகை விட்டுக்கொண்டா வருகிறது? என்று கேள்வியால் நம்மை துளைத்தெடுக்கிறார்கள். நியாயமான சந்தேகம்தான்.

ஆகவே, தொடர் வண்டி என்று அழையுங்கள் என்று நமக்கு அறிவுரை வழங்குகிறார்கள். ஆனால் இன்னும் எத்தனையோ இடங்களில் “ரயில்வே ஸ்டேஷன்” “புகைவண்டி நிலையம்” என்றுதான் பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றன.

புகையிரதம், புகை வண்டி, புகையூர்தி, ரயில் வண்டி, நீராவி ரயில், சாரனம் (சாரை+வாகனம்), இருப்பூர்தி, தொடருந்து, தொடரி என்று ஆளாளுக்கு வெவ்வேறு பெயர்களால் அழைத்து நம்மை குழப்புகிறார்கள்.

பொத்தாம் பொதுவாக தொடர்வண்டி என்று சொன்னால் போதுமா?

Locomotive Train, Diesel Train. Electric Train, Commuter, Goods Train, Metro Train, Mono Rail, Bullet Train என வகை வகையான ட்ரெயின்களுக்கும் தமிழ்ப் பெயர் கொடுத்து விட்டீர்களேயானால் எங்களைப் போன்ற பாமரர்கள் அழைக்க ஏதுவாக இருக்கும்.

வெறுமனே “தொடர் வண்டி” என்று எப்படி இவை யாவையும் அழைப்பது?

நாகூர் பெரும்புலவர் குலாம் காதிறு நாவலர் எழுதிய 220 அடிகளைக் கொண்ட புலவராற்றுப்படையில் இந்த தொடர் வண்டியைப் பற்றிய வருணனை நம்மை பிரமிக்க வைக்கிறது.

சங்ககால நடையில் சொல்நயம், பொருள்நயம் மிகுந்து காணப்படும் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்ட காலத்தால் அழியாத இப்புலவராற்றுப்படையில் நாம் இப்போது அழைக்கும் “தொடர்வண்டி”யினை “எந்திர ஊர்தி” என்று குறிப்பிடுகிறார் நம் பெரும்புலவர்.

தமிழிலக்கியத்தில் காணப்படும் 96 வகை பிரபந்தங்களில் ஆற்றுப்படையும் ஒன்று. ஆற்றுப்படை என்றால் நெறிபடுத்துதல் என்று பொருள். நாகூர் குலாம் காதிறு நாவலரின் புலவராற்றுப்படையை நாம் ரசித்து படிக்கையில் “இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?” என்று கோஷம் எழுப்பத் தோன்றுகிறது..

நாவலர் தன் சகபுலவர் ஒருவருக்கு “மதுரைக்கு ட்ரெயின்லேயே போகலாமே. ஜாலியா இருக்குமே” என்று பரிந்துரை செய்கிறார்.

அந்த புகைவண்டியை வருணிக்கும் அவருடைய நடையழகைப் பாருங்கள்.

//உருமுறுமோ டுறலொழியின்
இருபுறனும் இருப்புருளை
நான்குருளைக் கான்குழுமும்
வா அய்கொள்ளிப் பேஎயுயிர்ப்பின்
ஒலித்துமிழுங் கலித்தூமங்
குழல்வாயிற் சுழல்கொள்ள
மரவட்டைச் செலவொப்பச்
செல்பாண்டில் பல்கொத்த
நெடுந்தொடரி னிரைநீண்டு
கடுங்காலிற் கழிவிசையின்
எந்திர வூர்தி…//

இடி மாதிரி வித்தியாசமான சத்தம் எழுப்பும் இரும்பினால் ஆன நான்கு உருளைகள் அதற்கு உண்டு. நடுக்காட்டிலே இருக்கின்ற கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி ‘புஸ்.. புஸ்ஸென்று..’ பெரிய மூச்சு விடுகின்றது.

இடியின் முழக்கத்தோடு மாறுபடுகின்ற சத்தத்தை உடைய இரும்பினாலான நான்கு உருளைகள் இரண்டு பக்கத்திலும் உருளுகின்றன.

காட்டிலே கூடி இருக்கின்ற கொள்ளிவாய்ப் பேயின் மூச்சைப் போன்று ஒலியை எழுப்புகின்றது.

அந்த மாதிரி ஒலிக்கும் எந்திரம் கக்குகின்ற கரும் புகை இருக்கின்றதே … அப்பப்பா… ! அது எப்படி இருக்கிறது தெரியுமா? அந்த குழாயின் வாயிலாக புகை சுழன்று சுழன்று வருகிறது.

மரவட்டை மாதிரி இருக்கிறது அதன் நடை. அந்த எந்திர ஊர்தி ஒன்றுக்குப் பின் ஒன்றாக நீண்டு ஊர்ந்து ஊர்ந்துச் செல்கிறது.

“இந்த மாதிரி சிறப்பு கொண்ட எந்திர ஊர்தியில் பயணித்துப் பாரும் புலவரே!” என்று கூறுகிறார்.

இக்காலத்தில் வெளிவந்த எந்த ஒரு தமிழ் நூலிலும் எந்திர ஊர்தி என்ற பெயரோ அல்லது அதைப்பற்றிய வருணனையோ நான் அறிந்திலேன். டிரெயினுக்கு முதற் முதலாக “எந்திர ஊர்தி” என்று பெயர் சூட்டியது நம் நாவலராக இருக்கலாம் என்பது என் எண்ணம். இப்பதிவை படிக்கும் தமிழறிஞர்கள் இதற்கு விளக்கம் அளிக்கக் கூடும்.

நாவலர் அந்த தொடர்வண்டியின் அமைப்பை வருணிப்பதோடு நின்றுவிடவில்லை. மேலும் பாடுவதைக் கேளுங்கள்.

//அந்தமில் காட்சி அணிபல காண்பிர்
வீறிய மாக்கள் ஏறிறங் கிடன்றொறும்
ஊறிய அமிழ்தின் உண்டிபல் பெறுகுவிர்
பன்னாள் நடந்தினர் மன்னா தெய்க்குங்
காலுழப் பறியா மாலுற செலவின்
மலைப் புறு நெடுவழி ஒருநாள் தொலைச்சிச்
சூடிய நறுமலர் வாடிய லுறாமுன்
நிதிமலி கூடலம் பதிவயிற் புகுவிர்//

சக புலவருக்கு நம் நாவலர் மேலும் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்.

“அந்த டிரெயின்லே நீங்க கிளம்பி போனீங்கன்னா ஷோக்கான காட்சிகளையெல்லாம் வரிசையா பார்த்துக்கிட்டே போகலாம். போக வேண்டிய இடத்திற்கு சட்டுபுட்டுன்னு போய்ச் சேரலாம். அந்த அனுபவம் சூப்பரா இருக்கும். வழி நெடுக மக்கள் ஏறி இறங்கும் பல ஸ்டேஷன்கள் வரும். அதுமட்டுமல்ல வாய்க்கு ருசியா உணவு பண்டங்களும் அந்தந்த ஸ்டேஷன்களில் கிடைக்கும். நாள் கணக்கா மதுரைக்கு பயணம் போக வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளிலே நீங்க மதுரைக்குச் சென்று விடலாம்.”

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது நான்காம் தமிழ் சங்கத்தை நிறுவிய குலாம் காதிறு அவர்கள் வாழ்ந்த காலம் .

அது, 1833 ஆண்டு முதல் 1908 வரை.

#அப்துல்கையூம்