நாகூரின் பழைய பெயர்தான் என்ன?
“நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது?” என்ற விளக்கத்தை ஏற்கனவே நான் பல கட்டுரைகளில் பதிந்திருக்கிறேன். நாகூரின் பண்டைய கால பெயர் என்னவாக இருந்தது? அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல் இவ்வாய்வு நமக்கு பல அரிய ஆய்வுகளைத் தேடித்தரும்.
நாகூர் பெயர்காரணம் தெரிந்துக் கொள்வதற்கு முன்பாக, நாகூரை ஒட்டியுள்ள நாகப்பட்டினத்தின் பழைய பெயர் என்னவாக இருந்தது என்பதை ஆராய்வது இன்றிமையாதது. “ஒரு ஊருக்கு இத்தனை பெயர்களா?” என்று வியப்பில் நாம் ஆழ்ந்து போவோம்.
பூம்புகார் கடலால் கொள்ளப்படுவதற்கு முன் நாகப்பட்டினத்தின் பெயர் “நீர்பெற்று”.
சோழர்களின் ஆட்சியின்போது இதன் பெயர் “சோழகுலவல்லிப்பட்டினம்”
ராஜராஜ சோழன் ஆட்சியில் “சத்திரிய சிகாமணி” என்றிருந்தது.
“நாவல் பட்டினம்” என்ற மற்றொரு பெயர்க்காரணம் மிகவும் சுவையானது. “நாவல்” என்ற சொல் “நாவாய்” என்ற வார்த்தையிலிருந்து உதித்தது. Navy, Naval முதலிய ஆங்கில வார்த்தைகள் “நாவாய்” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து பிறந்ததுதான். பட்டினம் என்றால் கடற்சார்ந்த ஊர். நாவல் பட்டினம் என்றால் கப்பல் நகரம்.
”நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ ! (பாடல்-66)
மேற்கண்ட புறநானூற்றுப் பாடலில் “நாவாய்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தின் பெயர் நாவாந்துறை (நாவாய்+துறை)
புத்த இலக்கியங்களில் இதன் பெயர் ”படரிதித்த” என்பதாகும். பாலி மொழியில் பதரி என்றால் இலந்தை என்று பொருள். (அதுதாங்க ஜூஜூபி). பதரி திட்டா என்றால் இலந்தை செறிந்த மேட்டு நிலம் என்று பொருள். பதரிதிட்டா என்ற சொல் படரிதித்த என்று காலப்போக்கில் மருவிப் போனது.
நாகங்கள் மிகுந்த பகுதியாக இருந்ததால் இது “நாகப்பட்டினம்” என்றும், நாகமரம் (புன்னை மரம்) மிகுதியாக காணப்பட்டதால் இது நாகப்படினம் என்றும் பெயர் பெற்றதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
நாகர் இன மக்களுக்கும் இவ்வூருக்கும் இருந்த நெருங்கிய தொடர்பின் காரணமாக இவ்வூர் நாகர்பட்டினம் (நாகர்+பட்டினம்) என்று அழைக்கலாயிற்று என்று ரா.பி.சேதுப்பிள்ளை தனது “தமிழகம் ஊரும்பேரும்” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
“நாகப்பட்டினம்” என்று சொல்வதைக் காட்டிலும் “நாகபட்டினம்” என்று சொல்வதே மிக்க பொருத்தமாகும்
நாக்கில் வசம்பு வைத்து தேய்த்தாலும் திருந்தாத டச்சுக்காரர்களில் வாயில் இந்த ஊர் “நேகபேட்டன்” என்று அல்லல் பட்டது
தொலமி (Ptolemy) என்ற கிரேக்க அறிஞர் இதனை “நிகாம்” என்றும் “நிக்காவ்வா” (Nikawa) என்றும் அழைக்கிறார்.
“நாகவதனா” (Nagavadana) என்று சீனப்பயணி யீஜிங் (Yijing or I-tsing) அழைக்கிறார்.
“மலிபட்டான்” (Mali-pa-tan) என்று இரச்புத்தீன் அழைக்கிறார்.
“நவுட்டபட்டனா” (Navwttapattana) என்று கலியாணிப் பட்டயம் கூறுகிறது.
“நெகபட்டன்” என்று போர்த்துகீசியர்கள் குறிப்பிடுகிறார்கள்
“நெகபெட்டாம்” (Negapettum) என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிடுகின்றனர்.
“நெகமா”, “நாகானனை”, “நாகநகரம்” என்று புத்த நூல்கள் பகர்கின்றன.
ஒரு ஊருக்கு இத்தனைப் பெயர்களா? என்று நாமும் விழி பிதுங்கிப் போகிறோம்.
மகேந்திரவர்மன் பல்லவன் காலத்தில் (604-630) வாழ்ந்த அப்பர் திருநாவுக்கரசு நாயனார் “வங்கமலி கடல் நாகை” (தேவாரம் 4.108) என்றே குறிப்பிடுகிறார். அவர் நாகை என்று குறிப்பிடுவது நாகூர், நாகப்பட்டினம் இரண்டு ஒன்றிணைந்த பேரூரை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாகநாதர் கோயிலில் காணப்படும் கல்வெட்டிலும் “நாகை” என்ற பெயரையே காண முடிகின்றது
வங்கம் என்றால் பெரியவகை கப்பல்களைக் குறிக்கும். கப்பல் என்பதற்கு சங்கத்தமிழில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில் என்ற பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வங்கம், நாவாய் இவையிரண்டும் பெரியவகை கப்பல்கள்.
அப்பர் “நாகை” என்றுதானே குறிப்பிடுகிறார். இதில் நாகூர் எங்கிருந்து வந்தது என்ற கேள்விகள் எழலாம். நியாயமான கேள்வி. மேற்கொண்டுபடித்தால் நாகூரும் நாகையும் வெவ்வேறல்ல என்பது பநன்கு விளங்கும்.
அடுத்து திருஞான சம்பந்தர் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். “வரையார்வன போல வளரும் வங்கங்கள் கரையார் கடல் நாகை” என்று பாடுகிறார்.(1.84.7).
பெரிய மலையொன்று கடலில் மிதந்து போவதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பிரமாண்டமான காட்சியாக இருக்கும்? பெரிய கப்பல்களாகிய வங்கம் மலைபோல் நகர்ந்தன என்கிறார் திருஞானசம்பந்தர்.
சுந்தரர் பாடிய பாடல்களில் யாவும் நாகையை தென்நாகை என்றே குறிப்பிடுகிறார். இதற்கு உதாரணமாக கீழே பத்து பாடல்களை உதாரணம் காட்டியிருக்கிறேன். சுந்தரர், பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 840 – 865) காலத்தைச் சேர்ந்தவர்.
துன்னா மயூரம் சோலைதொறும் ஆட, தூரத் துனைவண்டு
தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து – (7.101.1)
முரைக் கை பவளக்கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம்
திரைக்கை காட்டும் தென்நாகை – (7.101.2)
முல்லை முறுவல் கொடிஎடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட
செல்லும் புறவின் தென்நாகைத் திருக்காரோணம் – (7.101.3)
தூண்டா விளக்கு மணி மாட வீதிதோறும் சுடர் உய்க்க
சேண்தார் புரிசைத் தென்நாகை – (7.101.4)
பருவன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்
தெருவில் சிந்தும் தென்நாகை – (7.101.5)
ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறம்கை அனம்
சேடை உடுத்தும் தென்நாகை – (7.101.6)
கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணி மாளிகை குழாம்
இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகை – (7.101.7)
தொள்ளை ஆம் நல்கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத்
தொள்ளும் வேலைத் தென்நாகை – (7.101.8)
முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடி மன்னர்
சித்தம் கவரும் தென்நாகை – (7.101.9)
திரை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக் கோபுரத்து நெருக்கமலர்ச்
சிறைவண்டு அரையும் தென்நாகை – (7.101.10)
தென்துருவம் என்ற ஒன்று இருப்பதினால்தானே மற்றதை நாம் வடதுருவம் என்று அழைக்கிறோம்? கடற்கலம் அணையும் நகரமாக புகழ் பெற்று விளங்கிய நாகையின் தென்பகுதி “தென்நாகை” என்றும், வடக்குப் பகுதியான நாகூர் “வடநாகை” என்று அழைக்கப்பட்டது.
அதன் பிறகு வந்த காலத்தில், மேற்குப் பகுதியிலிருந்த நாகூர் பகுதி “மேலநாகூர்” என்றும் கிழக்குப்புறமிருந்த பகுதி “கீழநாகூர்” என்றும் அழைக்கப்பட்டது. நாகூரில் புலமை வாய்ந்தவர்கள் மிகுதியாக இருந்தமையால் “புலவர்க்கோட்டை” என்ற சிறப்பும் பெயரும் உண்டு.
நாகூர் வடநாகையாகவும், நாகபட்டினமும் தென்நாகையாகவும் ஈருடல் ஓருயிராகவே செயல்பட்டன.
ஒரு ஊரின் இரண்டு பகுதிகள் மருவூர்ப்பாக்கம, பட்டினப்பாக்கம் என்றழைக்கப் பட்டதைப் போல் நாகூரும் நாகப்பட்டினமும் ஓர் ஊரின் இருகூறாகக் கருதத் தக்கவை என்கிறார் இரா.பி.சேதுப்பிள்ளை. (தமிழகம் ஊரும்பேரும், பக்கம் :36)
1799-ஆம் ஆண்டு தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆங்கிலேயர் வசம் ஆனபோது நாகபட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது. பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது. இந்த தகவல்களை ஆங்கிலேயக் குறிப்பேடுகளில் காண முடிகின்றது.
நாகூரின் மற்ற மற்ற சிறப்புகளை அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் விளக்கமாக பார்ப்போம்.
அப்துல் கையூம்