RSS

Tag Archives: ஆய்வுக் கட்டுரை

ஸ்மார்ட் சிட்டி எங்க ஊரு


Nagai

இந்தியாவில் 100 Smart Cities உருவாக்குவதுதான் பாரதப் பிரதமர் மோடியின் கனவாம். மிக்க மகிழ்ச்சி. ஆனால் இதுபோன்ற ஸ்மார்ட் நகரத்தை எத்தனையோ ஆண்டுகட்கு முன்னரே பார்த்தவர்கள் நாம் என்ற உண்மையை   நாகையின் சரித்திர வரலாற்றை சிறிது சிறிதாக ஆராய முற்பட்ட பின்தான் அதன் மகத்துவத்தை முழுதாக  நான் அறிந்துக் கொண்டேன்.

பூம்புகார், நாகை போன்ற தன்னிறைவு பெற்ற தன்னிகரில்லா நகரங்களை விடவா தலைசிறந்த ஓர் எடுத்துக்காட்டு வேண்டும்? விரிவாகச் சொல்ல வேண்டுமெனில் நகரெங்கும் WIFI கனெக்ஷனைத் தவிர, அத்தனை அடிப்படை வசதிகளும் கொண்ட பேரூராக திகழ்ந்தது எங்களூர் என்று மார்தட்டிக் கொள்வதற்கு முழுமையான அருகதை நாகை மற்றும் நாகூர்வாசிகளுக்கு  இருக்கிறது.

அன்று “ஸ்மார்ட் சிட்டி”யாக இருந்த நாகையை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன். இனி நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

ஆன்மீக பூங்கா

வாருங்கள்…. அக்காலத்து நாகை நகர தெருக்களுக்குள் நகர்வலமாய் ஒரு வீதி உலா போய் வருவோம். தென்னகத்து சுவர்க்க பூமியைச் சுற்றி வருவது தெவிட்டாத இன்பமன்றோ?

அதோ பார்த்தீர்களா அரசு மருத்தவமனை…..

அக்காலத்தில் ஆன்மீக வாதிகளின் நந்தவனமாகத் திகழ்ந்த அமைதி பூங்கா அது.

பாண்டிச்சேரியில் தற்போது அமைந்திருக்கும் “அரவிந்தர் ஆஸ்ரமம்” கேள்விப்பட்டிருப்பீர்களே! அதே போன்று தெய்வீக மணங்கமழும் மடாலயங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த பூங்காவனம். இயற்கையன்னையின் மடியில், இரம்மியமான சூழலில், சுற்றிலும் தென்னை, புன்னை, இலந்தை, மற்றும் நாவல் மரங்கள், பச்சைப்பசேல் என காட்சி தரும் பசும்புல் போர்த்திய புல்வெளி. புத்த சமயத்தினரும், சீனர்களும், நாக நாட்டவர்களும் வந்து தங்கி அமைதி காணும் நந்தவனம். ஆத்ம நிம்மதி நாடி அடைக்கலம் தேடி வரும் ஆன்மீகவாதிகளின் வேடந்தாங்கல். வழிப்போக்கர்கள் இளைப்பாறும் வசீகர சுற்றுப்புறச் சூழல், ஆங்காங்கே தியானக் குடில்கள். எனவேதான் “சித்தம் கவரும் தென்நாகை “(7.101.9) என்று சுந்தர நாயனார் அன்று பொருத்தமாக பாடி வைத்தார்.

புத்தம் சரணம் கச்சாமி   [நான் புத்தரிடம் சரணம் அடைகிறேன்]
தர்மம் சரணம் கச்சாமி   [நான் தர்மத்திடம் சரணம் அடைகிறேன்]
சங்கம் சரணம் கச்சாமி   [நான் சங்கத்திடம் சரணம் அடைகிறேன்]

என்ற மந்திர ஓசை ஓயாது முழங்கிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற இன்பலோகம் அது.மனோ இச்சைகளை அடக்கியாண்ட  துறவிகளும், சன்னியாசிகளும் சுற்றித் திரிந்த  ஆனந்தாலயம். ஆரவாரமின்றி அமைதி மட்டுமே செங்கோலாட்சி செலுத்திய திறந்தவெளி வளாகம். அண்டை நாட்டு அரசிளங்குமரிகள் ஓய்வெடுக்க வேண்டி அமைக்கப்பட்டிருந்த அடுக்கு மாடி பயணியர் விடுதிகள்.

“பொன்னியின் செல்வன்” நாவலை படித்தவர்களுக்கு இக்கட்டுரையை படிக்கையில் நாகை சூடாமணி விஹாரம், கடல் கொந்தளிப்பு, சேந்தன் அமுதன், பூங்குழலி, அருள்மொழிவர்மன், புத்த பிட்சு போன்ற பாத்திரங்களும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களும், அனைத்து சம்பவங்களும்  நினைவுகளை அலைமோதுவதை தவிர்க்க முடியாது.

நகரின் உள்கட்டமைப்பு

ஊரை ஒட்டினாற்போல் சற்றே தூரத்தில் கூடாரங்களால் நிறையப்பட்ட திறந்தவெளி பூஞ்சோலை. வெளிப்பாளையம் என்றழைக்கப்படும் இப்பகுதிதான் நாகையின் மையப்பகுதி. இங்குதான் போர் வீரர்களின் குடியிருப்புகள் இருந்தன. நடுநிசியிலும் பெண்டிர்கள் திருட்டு பயமின்றி சர்வ சுதந்திரமாக நடமாடினர். சகல மதத்தினரும் சமய வேறுபாடின்றி சந்தோஷமாகத் திரிந்த சன்மார்க்க பூமியாகத் திகழ்ந்தது நம் நாகை.

“இந்த நாட்டில் எப்பொழுது ஒரு பெண் பயமில்லாமல் தனியாக இரவில் தெருவில் நடக்க முடிகிறதோ அன்று தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தாக அர்த்தம்” என்று காந்தியடிகள் பகர்ந்தார். அப்படிப்பட்ட சுதந்திர பூமியாக என்றோ திகழ்ந்தது எங்களூர்.

இப்போது காடம்பாடி என்று அழைக்கிறார்களே, அதன் சிறப்பை அறிவீர்களா..?

காடவர் கோன் பாடி – இதுதான் காடம்பாடியாக மருவியது. காடவர் என்றால் பல்லவர். பாடி என்றால் தற்காலிக கூடாரம். ஊரின் ஒதுக்குப்புறத்தில் கூடாரங்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் அது.

கண்ணுக்கெட்டிய தொலைவில் இலந்தை மரங்கள் நிறைந்த, திட்டுத் திட்டாய் காட்சியளிக்கும் மேட்டுப் பகுதி. “பதரிதிட்டா” (பொருள்:இலந்தை செறிந்த மேட்டுப் பகுதி) என்ற மூலவார்த்தையிலிருந்து “அவுரித்திடல்” என்ற காரணப்பெயர் பிறந்தும் இப்படித்தான்.

இன்று சப் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் இயங்கும் இடத்தில்தான் அந்நாளில் அந்த புகழ்பெற்ற சூடாமணி பெளத்த விஹாரம் வீற்றிருந்தது

“வர வர மாமியார் கழுதை போல் ஆனாளாம்” என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு மேலும் “கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆன கதை” என்று மற்றொரு பழமொழி உண்டு. இவ்விரு பழமொழிகளும் நாகைக்குத்தான் சாலப் பொருந்தும். நாகை நகரத்து பூர்வீக வரலாற்றை அறிந்தவர்கள் அந்த சிறப்புக்களை எல்லாம் இழந்து நிற்பதைப் பார்த்து கண்ணீர் வடிப்பார்கள். நாகைக்கு மட்டும் வாய்பேசும் வாய்ப்பிருந்தால் “எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்” என்ற விவேக்கின் வசனத்தைத்தான் சொல்லிக் காட்டும்.

நேர்த்திமிகு உள்கட்டமைப்பு கொண்ட நகரம்; தன்னிறைவு பெற்று நிம்மதியாய் வாழும் குடிமக்கள்; அகன்று, பரந்த தேரோடும் வீதிகள்; தூண்டா விளக்கு மணி மாடங்கள்; அங்காடித் தெருக்கள்; ஆங்காங்கே தென்றல் தாலாட்டும் தோப்புக்கள்; நகரின் மேற்கிலும், வடக்கிலும் இருபுறமும் கலைநயமிக்க தோரண வாயில்கள். “மேலைக்கோட்டை வாயில்”,  “வடக்கு கோட்டை வாயில்” இதன் பெயர்கள்.

பரண் அமைத்த வீடுகள்; உவலைக் கூரை அமைந்த பாடிவீடுகள், இலையும் தழையும் வேயப்பட்ட கூரை இல்லங்கள், இலைகளால் வேயப்பட்ட குரம்பை, மாட மாளிகைகள், மாட வீதிகள், செல்வம் கொழிக்கும் யவனர் மாளிகைகள், கொடிமர மேடைகள், வழிநெடுகிலும் சோழநாட்டு கொடிகள் அசைந்தாடும் கம்பங்கள், போரிட்டு மாண்ட மறவர்களின் நினைவாக நடுகற்கல்/ வீரகற்கள்

வணிகத்தின் பொருட்டு வந்திறங்கும் பன்னாட்டு வணிகப் பெருமக்கள், பலமொழி பேசும் மக்கள், கூலவாணிகர், மீன்வாணிகர், பொற்கொல்லர், கன்னார்; தச்சர், பூவணிகர், ஓவியம் தீட்டுவோர், கற்றச்சர், மாலுமிகள், புலவர், பாணர், இசைவாணர், முத்துவேலை செய்பவர்கள்; பட்டாடை, பருத்திஆடை, கம்பளி ஆடை நெய்பவர்கள், வணிகர், நிலக்கிழார், நாழிகை கூறுவோர், மறையவர், அரண்மனை அலுவலர்கள், படை வீரர்கள் என அனைத்து தரப்பினரும் உலா வரும் வீதிகள்.

துறைமுக நகரம்

கடல் வாணிபத்தை பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை, தேவாரப் பாடல்கள் குறிப்பிடும் அத்தனை சிறப்புக்களும் ஒரு நிமிடம் நம் கண்முன் காட்சிகளாய் விரிகின்றன.

முழுநேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம். இரவிலும் வெளிச்சத்தை உமிழ்ந்துக்கொண்டு தூங்காத நகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கார மாநகர் இந்த நாகை மாநகர்.

ஆயுதமேந்திய காவலர்களால் (“சேண்தார் புரிசைதார்” என்றால் இங்கு படை என்று பொருள்) கண்காணிக்கப்படும் கடலோரப்பகுதிகள்; பகர்னர்கள் (வியாபாரிகள்) மையம் கொண்டிருக்கும் வியாபார கேந்திரம். (In otherwords; Let us call it as a Cosmopolitan smart city monitored by Coast Guards and State of Art Security Personnels)

“பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர்” என்று கம்பன் உரைத்தானே அதுபோன்ற ஒரு Multi-cultural, Multi-Ethnic, Multi-lingual நகரமாகத் திகழ்ந்தது அக்காலத்து நாகை.

வெளிநாட்டு பொருட்களும் உள்நாட்டு பொருட்களும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகின்ற காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். ஆனை தந்தம், பட்டு நூலிழை, வெற்றிலை, வெட்டிவேர், கனகம் (தங்கம்) , கற்பூரம் வர்த்தகம் அமோகமாக நடைபெற்றது.

Crane இன்றி, Fork Lift இன்றி, 20-அடி/ 40 அடி Container, Truck  இன்றி பரிகள் இறக்குமதியாகும் காட்சியையும், மிளகுப்பொதிகள் ஏற்றுமதியாகும் காட்சியையும் சற்று கற்பனைச் செய்து பாருங்கள்.

மேற்கு மலையிலிருந்து அகிலும், சந்தனமும், தென்கடலிலிருந்து முத்துக்கள், மேற்கடலிலிருந்து பவளம் முதலியன வந்திறங்கும். உரோம நாடுகளிலிருந்தும் அராபிய நாடுகளிலிருந்து பொதிகள் வந்திறங்கும், இவைகளை மீண்டும் கடாரம் (மலேயா), சீனம், சுமத்திரா, ஜாவா தீவுகளுக்கு மறுஏற்றுமதி செய்து வாணிபம் புரிந்தது நம் தமிழர்களே.

பெரும் பெரும் மலைகள் கடலில் மிதந்து போவதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். எவ்வளவு ஒரு பிரமாண்டமான காட்சியாக இருக்கும்? இதைத்தான் “வரையார்வன போல வளரும் வங்கங்கள் கரையார் கடல் நாகை” (1.84.7) என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர். “வங்கம்” என்றால் பெரியவகை கப்பல்களைக் குறிக்கும்.

பாரீஸ் நகரம் போன்று தூங்காத நகரமாக நாகை இயங்கியது, அது காமக் களியாட்டங்களுக்காக இரவை பகலாக்கியது என்றால் இது வணிக செயல்பாடுகளுக்காக இரவிலும் ஒளி உமிழ்ந்துக் கொண்டிருந்தது.

சூயஸ் கால்வாயைப் போன்று சுங்கவரி இந்த துறைமுகத்தில் வசூலிக்கப்பட்டன. அனைத்து வகை கப்பல்களும் நாகைவழியே வந்துதான் பின்னர் கீழைநாடுகளுக்கு தங்கள் பயணங்களை மேற்கொண்டு தொடர்ந்தன. பண்டங்களை சுமந்துக்கொண்டு வரிசை வரிசையாய் வந்து நிற்கும் பொதிவண்டிகள் முதலியன நாகையை சுறுசுறுப்பு வணிக மையமாக செயல்பட வைத்தன.

தௌ-இ-சிலு போன்ற சீன மொழிக் குறிப்புகளிலும் நாகப்பட்டினத்தின் துறைமுகச் சிறப்புகள் பேசப்படுகின்றன.

“சோழர் காலத்தில் தமிழகத்தின் மிகத் முதன்மையான பன்னாட்டுத் துறைமுகமாக இருந்துள்ளதையும் தொடர்ந்து ஐரோப்பியர் காலம்வரை இவ்வூர் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இடமாக விளங்கியதையும் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது”  என்று முனைவர் பா.ஜெயக்குமார் தனது “தமிழகத் துறைமுகங்கள்” (2001) என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

வடநாகை (நாகூர்) 

பூம்புகார் எப்படி மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரு பிரிவுகளாக இருந்ததோ அதே போன்று நாகூரும், நாகப்பட்டினமும் வடநாகை, தென்நாகை என்று இரண்டு பிரிவுகளாக இருந்தன.

வடநாகைக்கும் (நாகூர்) தென்நாகைக்கும் (நாகப்பட்டினம்) இடையே, ஊரின் குறுக்கே அமைந்திருந்த சிந்தாறு, தற்போது பார்ப்பனர்சேரி என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் அக்காலத்தில் மறையவர் அகரம் அமைத்து (அக்ரகாரம்) வாழ்ந்தனர். பிறகு இது காலப்போக்கில் இது “பால்பண்ணைச்சேரி” ஆகி விட்டது.

தற்போது “நாகூர்” எனப்படும் வடநாகையைச் சற்று பவனி வருவோம்.இங்குதான் சங்க இலக்கிய காதலர்களான ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் ஒருகாலத்தில் அலைந்து திரிந்திருப்பார்கள். நாகூரில் வெட்டாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில்  இயற்கையாகவே துறைமுகமாக இயங்குவதற்கான அத்தனை அடிப்படை வசதிகளையும் கொண்டிருந்தது. நாகூர் வெட்டாறுக்கு அருகாமையிலிருக்கும் பகுதிகள் வர்த்தக சேமிப்பு கிடங்குகளாக செயல்பட்டன. பண்டக சாலை, கல்பண்டக சாலை என்று பெயர் தாங்கி நிற்கும் வீதிகள் அழிந்துப்போன வர்த்தகச் சுவடுகளின் எச்சங்களாக இன்றும் காட்சி தருகின்றன.

ஏற்றுமதிக்கான அத்தனை பொருட்களும் இங்குதான் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. சரக்கு பொருட்கள் ஏற்றுவதும் இறக்குவதுமாக இவ்வீதிகள் இரவு நேரங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தன.“கரி பரித்தொகை மணி துகில் சொரிவதாம் காலத்தால்” என்று இங்கு நடைபெறும் வாணிபத்தைக் குறித்து சேக்கிழார் தனது அதிபத்த நாயனார் புராணத்தில் கூறுகிறார். (3994-8.4.3.)

இப்பொழுது நெல்லுக்கடைத் தெரு என்று அழைக்கப்படும் வீதி “வாணியத் தெரு” என்று அழைக்கப்பட்டது. வாணிபத் தெரு என்பதின் மறுபெயர்தான் இது. அரவை மில்களும், செக்கு எண்ணெய்ஆலைகளும் இருந்த இத்தெருவில் வீதி முழுவதும் போரடித்த நெற்களை பரப்பி வைத்திருப்பார்கள். “ஆண்டி குளம்” – இக்குளத்தில்தான் தென்நாகைக்கு செல்லும் வழியில் ஆண்டிப் பண்டாரங்கள் குளித்து ஓய்வெடுப்பார்கள். ஆண்டி குளத்திற்கும், தர்கா குளத்திற்கும் அடித்தளத்தில் தொடர்புக் குழாய்கள் உள்ளன என்பது ஒரு கூடுதல் தகவல்.

நாகூர் துறைமுகத்திலிருந்து சங்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. சங்குகளில் பலவகையுண்டு.  மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு, வலம்புரிச் சங்கு – இதுபோன்று பலவகைகள் உண்டு. இவையாவும் தெற்குத் தெருவின் ஒரு பகுதியில் மெருகேற்றி பாலீஷ் செய்யப்பட்டன. இக்குறுகிய வீதி  “சங்கு வெட்டி சந்து” என்ற பெயரில் இன்றளவும் விளங்கி வருகிறது.

கி. பி. 1794-ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு  வியாபாரப் பிரதிநிதியாக கல்கத்தாவில் பணிபுரிந்தார் மீரா நயினா என்ற பிரமுகர். நாகூர் துறைமுகம் வழியே இலட்சக்கணக்கான சங்குகள் வங்காளத்திற்கு ஏற்றுமதி ஆனதற்கான அரசு ஆவணங்கள் உள்ளன. வங்காளத்தில் இருந்து திரும்பும் தோணிகளில் அந்த நாட்டு, அரிசி, சீனப்பட்டு, கண்ணாடிச்சாமான், லஸ்தர் விளக்குகள் போன்ற புதுமைப் பொருட்கள் நாகூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

நாகூர் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதியான பிரதான பொருட்கள் கைத்தறித்துணிகள், சங்கு, உப்பு, நெல், கருவாட்டு சிப்பங்கள் தென்னங்கீற்றுகள் முதலியன. இசுலாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலரில் அமீர் அலி N. கேப்டன்  எழுதிய ஆய்வுக்கட்டுரையில் இதுபோன்ற பல அரிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

[அதன்பின் வந்த இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நாகூரில் பனை ஓலைப்பெட்டி, தடுக்கு, ஓலைத் தொப்பி, ஓலைப்பாய், அஞ்சறைப் பெட்டி, கிளுகிளுப்பை போன்ற கைவினைப் பொருட்கள் பெருமளவில் குடிசைத் தொழிலாய் இருந்து வந்தது. சாயப்பட்டறை, கைத்தறி துணிகள் தறி, பிரிண்டட் அச்சுத் துணிகள், பத்தை லுங்கிகள், சுருட்டு தயாரிப்பு, மரத்தாலான கடைசல் பொருட்கள், விளையாட்டு பொருட்கள் – இதுபோன்ற எண்ணற்ற கைத்தொழில்கள் அமோகமாக நடந்து வந்தன. “கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள். கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்” என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்கள் வடநாகை (நாகூர்) மக்கள்.]

நாகூர் ஆண்டகை நாகூர் வந்து சேருவதற்கு முன்பே இஸ்லாம் மார்க்கம் இப்பகுதியில் தழைத்திருந்தது. ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர், சோழர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் தமிழர்களை ‘சூலியா’ (சோழியன் அதாவது சோழநாட்டான்) (Chulia) என்று அழைத்திருக்கின்றனர். சீனப்பயணிகள்கூட ‘Chu-Li-Yen’ என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ் முஸ்லீம்களை சோனகர் என்றும் அழைத்தனர்.

ஆனால் பிற்காலத்தில் நாகூர் நாகப்பட்டினத்திலிருந்து வந்த தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் இச்சொல்லால்தான் அடையாளப்படுத்தப்பட்டனர்.

அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து துணிமணிகள், யானைத்தந்தம், அரிசி, கோதுமை முதலியவற்றைக் கொண்டுவந்து விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக மிளகு, தகரம், பீங்கான், வாசனைத்திரவியம், பொன் முதலியவற்றை வாங்கிச் சென்று வியாபாரம் செய்து வந்தனர் இந்த சோழியர்கள்.

கி.பி 15-நூற்றாண்டுவாக்கில் மலாயாவில் மலாக்கா நகரம் வணிகச் சந்தையாக சிறந்து விளங்கியது. Chulia Street என்னும் வீதி இன்னமும் உள்ளது.

நாகூர் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்கள் உரோமானியர்கள் அரேபியர்கள் இவர்களின் வணிகத்தலமாக மட்டும் விளங்கவில்லை. சீனர்களின் வியாபார கேந்திரமாகவும் திகழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

தென்னிந்திய வரலாற்று ஏடுகளிலேயே “பகோடா” எனப்படும் சீனர்களின் புத்த ஆலயம் காணப்பட்ட ஒரே ஸ்தலம் நாகூர் மற்றும் நாகப்பட்டினம்தான்.

சீனப்பயணி யுவான் சுவாங் நாகூர் வந்துள்ளார். நாகூரைப் பற்றியச் சிறப்புகளை தன் பயண அனுபவ நூலில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஆச்சரியப்படுத்தும் செய்தி என்னவெனில் நூறு புத்த மடங்களும், பதினாறாயிரம் புத்தத் துறவிகளும் இப்பகுதியில் வசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாகூரில் தங்கியிருந்த சீனவணிகர்கள் தங்கள் நாட்டு கல்தச்சு இலக்கணத்திற்கு ஏற்ப இங்கு ஒரு கோயிலை கட்டியுள்ளாதக குறிப்பு காணப்படுகிறது.. இதனை கோபன் நேபார் என்ற மேல்நாட்டு அறிஞரும் தேமாலே என்ற வரலாற்று ஆசிரியரும் பதிவு செய்துள்ளனர்

பல்வகைச் சிறப்புக்கள் 

சோழநாட்டின் ‘நாசிக்’ நகரமென நாகையைச் சொல்லலாம். நாணயம் அச்சடிப்பதும் இங்குதான் “கம்பட்டம்” என்று மராத்திய மொழியில் குறிப்புகள் உள்ளன. இதில் செலவு போக ஆலந்துக்காரர்களுக்குப் பாதி, ஏகோசி மன்னருக்கு பாதி. நாணய அச்சடிப்பின் சின்னமாக நாணயக்காரத் தெரு இன்னும் பெயர்  சொல்லிக் கொண்டிருக்கிறது. பிற்காலத்தில் வெங்காய ஏற்றுமதிக்கு சிகரமாகத் திகழ்ந்தற்கு “வெங்காயக் கடைத்தெரு” அத்தாட்சியாக இன்றும் விளங்குகிறது.

தென்னிந்திய திருச்சபை மேல்நிலைப்பள்ளியின் தெற்கே ஹாலந்துகாரர்கள் கட்டிய ஆளுனர் வளமனையைக் காணலாம். இக்கட்டிடத்தின் முகப்பில் ஆறரை அடி உயரம், ஐந்தடி அகலத்தில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது, இப்பாதை நேராக கொடிமரத்திற்கு சென்று அடைகிறது. கப்பலில் வந்திறங்கும் ஆளுநரும் அவர் குடும்பத்தாரும் இந்த சுரங்கப்பாதை வழியேதான் வளமனை வந்து அடைவார்களாம். வி.ஐ.பி.களுக்கு இதைவிட “இஸட் பிரிவு”  பாதுகாப்பு வேறென்ன வேண்டும்?

அதுமட்டுமல்ல. நாகை அரண் சுவர்களால் சூழப்பட்ட நகராக இருந்ததாம், (இப்போது அதற்கான எந்த அடிச்சுவடும் இல்லாமலே போய்விட்டது.) அரண் என்று சொல்லப்பட்டது நகரைச் சுற்றி எழுப்பட்ட சுற்றுச்சுவரை குறிப்பதன்று; மாறாக தோரணவாயில்களைத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்று வேறொரு வாதத்தையும் ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். அரணும் இல்லாது அரண்மனையும் இல்லாது அதேசமயம் வரலாற்றுப் புகழ் நகராக வணிகக் கோட்டையாக நாகை திகழ்ந்தது என நாம் பெருமைபட்டுக் கொள்ளலாம்.

கல்வி மையம்

“கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்று பாரதி பாடினானே அவன் வரிகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த “மாதிரி நகரம்” தான் நாகை. கற்றறிந்த சான்றோர்கள், கன்னித்தமிழ் வளர்த்துப் போற்றிய  புலவர் பெருமக்கள் வாழ்ந்த ஊர் இது. காளமேகப் புலவர் போன்றோர் வியந்த ஊர் இது.

அரபு நாடுகளில் எப்படி எகிப்து நாட்டு கெய்ரோவும், ஈராக் நாட்டு பக்தாதும் கல்விக்கூடங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்ததோ, வட இந்தியாவில் எப்படி நாளந்தா நகரம் கல்வியின் மையமாகத் திகழ்ந்ததோ அதுபோன்று தென்இந்தியாவில் நாகை அந்நாளில் பெயரோங்கி விளங்கியது. எங்கெங்கு காணினும் கல்வி நிலையங்கள்.

“கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்“ என்ற ஞான சம்பந்தரின் பாடலிலிருந்து இப்பகுதி மக்களின் கல்வித்தரம் நன்கு புலப்படும்.

சமத்துவ நகர்

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நாகூரை குறிப்பிடுவார்கள். மதநல்லிணக்கம் என்பது வடநாகைக்கும் தென்நாகைக்கும் ஒன்றும் புதிதல்ல. பண்டு தொட்டு இவ்வூர் சைவ, வைணவ, சமண, பௌத்த இஸ்லாமிய சமயங்களின்   சமத்துவ நகராகத் திகழ்ந்தது. இத்சிங், மார்க்கோபோலோ, இப்னு பதூதா, இரசீதுத்தீன் ஹுவான் சுவாங் மற்றும்   மேற்கத்திய பயணிகளின் குறிப்புகளில் யாவும் நாகப்பட்டினத்தின் பெருமையை எடுத்துரைக்காத நூல்களே இல்லை எனலாம்.

நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழகத்தில் 5 சமஸ்கிருத செப்பேடுகளிலும், 16 தமிழ் செப்பேடுகளிலும் மொழியிலும் சூடாமணி விகாரம் பற்றிய குறிப்பு உள்ளது. இவற்றில் 21 செப்பேடுகள் பெரியதாகவும், 3 செப்பேடுகள் சிறியதாகவும் உள்ளது. இந்த செப்பேடுகளில் புத்த விகாரத்திற்கு கூடுதல் மானியம் வழங்கப்பட்ட தகவல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகூர், நாகபட்டினம் பல்லவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. காயரோகணர் கோயில் மற்றும் நாகநாதர் கோயில் கல்வெட்டுக்களில் இது பல்லவர் காலத்தில் துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்ததற்கான போதுமான ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன. இரண்டாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் (691-729). ஒரு சீனப்பயணியின் ஆன்மீகச் செல்வாக்கினால் பல்லவர் காலத்தில் புத்த விகாரம் இங்கு எழுப்பப்பட்டது.

அதற்குப் பிறகு, பத்தாம் நூற்றாண்டில் இந்த நகரம் சோழர்களின் முழுக்கட்டுப்பாட்டுக்கு வந்தது. நாகையில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய சோழர் கால கல்வெட்டு முதலாம் இராஜராஜன் (கி.பி. 985-1014) காலத்தை சேர்ந்தது. ஸ்ரீ விஜய சூளாமணி வர்மன் எனும் ஜாவா நாட்டு மன்னனால் ராஜ ராஜ சோழனின் ஆதரவுடன் பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்படதுதான் சூடாமணி விகாரம் என்ற புத்தக்கோயில்.

10,11-ம் நூற்றாண்டுகளில் சோழ நாட்டில் ஆழமாக காலூன்றியிருந்த புத்தமதம் எப்படி அடிச்சுவடே இல்லாமல் போனது என்பது புரியாத புதிர்.

பசுக்களையும் அந்தணர்களையும் காப்பாற்றுகின்றவரான
சிரீமத் சத்ரபதி மகாராசராச சிரீ பிரதாப சிம்ம மகாராசா சாகேப் அவர்கள்

என்று மாராத்திய மன்னன் பிரதாப்சிங்கை போற்றும் வகையில் உள்ள சொற்றொடரை நாகூர் மினாரா கல்வெட்டு ஒன்றில் காணமுடிகின்றது.

எடுப்பார் கைப்பிள்ளை 

‘கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதை’யாக நாகை மண்ணை ஆள வந்த மராத்திய மன்னர்கள் முதற்கொண்டு நாயக்க மன்னர்கள்வரை ஆளாளுக்கு கஷ்டம் வந்தால் அண்டா குண்டாவை மார்வாடிக் கடையில் அடகுவைக்கும் ஏழைகளைப்போல நாகையை போர்த்துகீசியகளிடமும், ஆலந்துக்காரர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும், அடகுவைத்தும், ஏலம்விட்டும், குத்தகை விட்டும் “எடுப்பார் கைப்பிள்ளை” ஆக்கிய வரலாற்றை எழுதுவதற்கு பக்கங்கள் காணாது.

ராஜராஜ சோழச் சக்கரவர்த்தி நாகப்பட்டினத்தில் சூளாமணி விஹாரத்துக்காக ஒரு கிராமத்தின் வருமானத்தை கடாரத்தின் ஆட்சியாளரான சூளாமணிவர்மதேவன் என்பவருக்கு அளித்தார் என்ற செய்தியையும், அவருக்குப் பின் அவர் மகன் மஹாவிஜயதுங்கவர்மன் என்பவருக்கு அது தொடரப்படவேண்டும் என்ற செய்தியையும் கொண்டிருக்கிறது.

“ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி” என்பார்கள். ஆனால் நாகை விடயத்தில் இந்த ஊரையே பிள்ளையார் கோயில் ஆண்டியாக்கி களிப்புற்றார்கள் இதை ஆள வந்தவர்கள்.

அகழாய்வு ஆவணங்கள்

பழங்கற்காலம் தொடங்கி புதிய கற்காலம், பெருங்கற்காலம் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் அனைத்து காலத்து தொல்லியல் ஆதாரங்கள் நாகையில் கிடைத்துள்ளன. 2009-ஆம் ஆண்டு தொல்லியல் துறை நாகப்பட்டினத்தில் அகழாய்வு மேற்கொண்டபோது நிறைய அகழாய்வு பொருட்கள் கிடைக்கப் பெற்றன. முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

நாகை நீதிமன்ற வளகாத்தில் நான்கு சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொண்டதில் 2000 ஆண்டுகளுக்குரிய பண்பாட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன,.

வெண் களிமண்ணாலான புகைபிடிப்பான்கள், 1753 வருடம் பொறித்த டச்சு செம்புக்காசுகள், 16-ஆம் நூற்றாண்டு சீனக்களிமண் சில்லுகள், Porcelene சில்லுகளில் மசூலா படகுகளின் உருவமும் தோணிகளின் உருவமும் பொறிக்கப்பட்டிruந்தன

இவ் அகழாய்வில் சோழர் காலக் கூரை ஓடுகள், பானை ஓடுகள் கிடைத்ததோடு ‘ஸ்ரீராஜராஜ’ எனப் பெயருடன் சோழப் பேரரசன் முதலாம் இராஜராஜனின் செப்புக் காசு ஒன்றும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

300 மேலான பெளத்த படிமங்கள் நாகையில் கண்டுபிடிக்கப்பட்டன.  சென்னை அருங்காட்சியகம், நியூயார்க் நகரத்திலிருக்கும்  ராக்ஃபெல்லர்  சென்டர் போன்ற இடங்களில் இவைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

நான் வளர்ந்தது நாகப்பட்டினத்தில். நான் அங்கு வசித்த காலம்வரை நாகை புத்த மத மையமாக ஒருகாலத்தில் விளங்கியது என்பதை நான் அறிந்திருக்கவே இல்லை. சில ஆண்டுகளுக்குமுன் சென்னை அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தேன். முதன்மை நோக்கம், அங்கு இருக்கும் நடராஜர் வெண்கலச் சிற்பங்களைப் பார்ப்பதுவே. அற்புதமான திருவாலங்காட்டு நடராஜரையும் காளையின்மீது சாய்ந்த நிலையில் (காளை இல்லை) இருக்கும் வெண்கல அர்தநாரியையும் பார்த்தபின் சுற்றிவரும்போது திடீரெனக் கண்ணில் பட்டன பல்வேறு வெண்கல புத்தர்கள். அனைத்தும் சோழர் வெண்கலச் சிலைகள். அனைத்தும் (அல்லது கிட்டத்தட்ட அனைத்தும்) நாகப்பட்டினத்தின் சுற்றுப்புறங்களில் கண்டெடுக்கப்பட்டவை

என்று எழுதுகிறார் கிழக்கு பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் திரு. பத்ரி சேஷாத்திரி

– அப்துல் கையூம்

qaiyum-fb2

தொடர்புடைய சுட்டி :

ஒரு ஊருக்கு இத்தனைப் பெயர்களா..?

மீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு

நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது..?

 

Tags: , ,