RSS

Tag Archives: எழுத்தாளர் ஆபிதீன்

நெருப்பில்லாமல் புகையாது


நாகூர் ஆபிதீன் என்றால் புலவர் ஆபிதீனைத்தான் எல்லோரும் அடையாளம் காட்டுவார்கள். இன்னொரு ஆபிதீனும் இருக்கிறார் “குடத்திலிட்ட விளக்காக”.

“வேறு உலகத்தில் ஜீவராசிகள் இருக்கிறார்களா?” என்று விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். “செவ்வாய்க் கிரகத்தில் அப்படி ஏதாவது உண்டா?” என்ற ஆராய்ச்சியில் விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள்.

இது அல்லாமல் வேறொரு தனியுலகம் உண்டு. அங்கு ஜீவராசிகள் இருக்கிறார்கள். 24-மணி நேரமும் அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள் என்பது 100% உண்மை. அப்படியொரு உலகம் தனியாக இயங்குவது தெரியாமலே பலபேர்கள் இன்னும் இந்த பூமியில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை

அந்த உலகத்திற்குப் பெயர் “இணைய உலகம்” என்பதாகும்.

இணைய உலகத்தில் பிரவேசிப்பவர்கள் அனைவருக்கும் நாகூர் ஆபிதீன் என்ற பெயர் பரிச்சயம். இந்த உலகத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு ஆபிதீனைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் ஒரு “Three-in-one” Product. ஆமாம். ஓவியர், பாடகர், எழுத்தாளர். (நமக்கெல்லாம் ஒரு வேலையே ஒழுங்காக வரமாட்டேன் என்கிறது)

“நெருப்பின்றி புகையாது” என்பார்கள். படிப்பவர்கள் எல்லோரும் இவரை “ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்!: என்று ரவுண்டு கட்டி புகழும்போது, “ஒண்ணுமில்லாமலா இப்படிப் புகழ்வார்கள்?” என்ற கேள்வி எழுந்து “அப்படி என்னதான் இந்த மனுஷனிடம் இருக்கிறது?” என்ற ஒரு தேடலை நமக்கு ஏற்படுத்துகிறது

இந்த ஆபிதீன் என்றால் “Break the Rules” என்ற அர்த்தம் ஆகிவிட்டது.

வேறு என்ன? “சிறுகதை” என்ற ஒன்று இருக்கிறது. “குறுநாவல்” என்ற ஒன்று இருக்கிறது, “நாவல்” என்ற ஒன்று இருக்கின்றது.

சிறுகதையையே நாவல் சைஸுக்கு எழுதுபவரை எந்தக் கூண்டில் கொண்டுபோய் நிறுத்துவது?

ஏற்கனவே நாகூர்க்காரர்கள் மீது “நையாண்டி மிக்கவர்கள்”; “குசும்பு, இவர்களுக்கு கூடவே பிறந்தது” என்றெல்லாம் பழிச்சொல் தாராளமாகவே விழுகிறது. இந்த மனுஷனால் அந்த பழிச்சொல் மேலும் ஊர்ஜிதமாக்கப்பட்டதுதான் மிச்சம்.

ஆர்தர் கோனான் டாயில் என்ற ஆங்கில எழுத்தாளர் “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததைப் போன்று, சுஜாதா,  “வஸந்த்” என்ற பாத்திரத்தை உருவாக்கியதைப் போன்று, தமிழ்வாணன், “சங்கர்லால்” என்ற பாத்திரத்தை உலவ விட்டதைப்போன்று இவர் “அஸ்மா” என்ற பாத்திரத்தை வாசகர்கள் மனதில் நிலைக்க வைத்துள்ளார்.

ஆர்.கே.நாராயண் அவர்களால் “மால்குடி” என்ற கிராமம் பிரபலமானதைப் போன்று, “நாகூர்” என்ற சிற்றூர் இவரது கதைகள் மூலம் பிரபலம் அடைந்துள்ளது.

இவர் தனது வலைத்தளத்தில் என்ன எழுதினாலும் அதில் பின்னூட்டம் இடுவதற்கென்றே ஒரு வாசக பட்டாளத்தை தன்வசம் வசியப்படுத்தி வைத்திருக்கும் மோடிமஸ்தான் இவர். இந்த மோடி மஸ்தானிடம் மூடி மறைக்கும் பழக்கமில்லை.

ஒரு இலக்கணத்துக்கு உட்பட்டு எழுதாமல் மனம்போன வாக்கில் இவர் எழுதுவதால் வாசகர்களுக்கு இரண்டு விதமான போனஸ் கிடைக்கிறது.

1. போகிற போக்கில் பல சுவையான பொதுஅறிவு தகவல்களை நமக்கு அள்ளித் தெளித்த வண்ணம் செல்வது.

2. தன் சொந்தக்கதை சோகக்கதையை அவ்வப்போது வாக்குமூலமாய்த் தருவது. (ரசிகனுக்கும் இது ஒரு சுவராஸ்யத்தை அளிக்கிறது. ஏனெனில் பிறர் டயரியை திருட்டுத்தனமாக படிக்கும் இன்பத்தை இது தருவதினால்)

2. நையாண்டி நவீனத்துவம் என்ற பெயரில் நமக்கு வயிறு குலுங்கும் நகைச்சுவை டானிக் கிடைப்பது

இவருடைய கதைகளை படிக்கையில் சில வட்டார மொழியை புரிந்துக்கொள்ள கூடவே ஒரு ‘கோனார் நோட்ஸும்’ வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இவருடைய கதையைப் படித்தே வண்டி நிறைய நாகூர் பாஷை கற்றுத் தேர்ந்த வாசகர்களும் உண்டு. அந்த விஷயத்தில் இவர் செய்வது ஒரு மெளனப் புரட்சிதான் என்று சொல்ல வேண்டும்.

இவரது படைப்புகளை வாசிக்கையில் “சந்தானம்” அல்லது “விவேக்கின்” காமெடியை காணொளியில் கண்டு ரசித்ததைப் போன்ற ஒரு திருப்தி ஏற்படுவதை நம்மால் உணர முடியும்.  (மேலும் எஸ்.எஸ்.சந்திரனின் டபுள் மீனிங் ஜோக்குகளையும் நமக்கு நினைவுறுத்தும்)

இவரை வாசகர்கள் விரும்புவது இவரது வெளிப்படத்தன்மையினால்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே இவர் திரைச்சீலை போடுவது கிடையாது.

இவரது ‘வெடப்பு’க்கு ஆளாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நெருங்கி பழகும் தோழராகட்டும், குடும்பம் நடத்தும் மனைவியாகட்டும், ஊர்க்காரர்கள் ஆகட்டும், தர்கா நிர்வாகம் ஆகட்டும்… ஊஹூ..ம். பாரபட்சமே பார்க்க மாட்டார்.  பேனாவால் விளாசித் தள்ளி விடுவார்.

சிலசமயம் மனுஷர் நம்மை தூக்கிப் பேசுகிறாரா அல்லது போட்டுக் கவிழ்க்கிறாரா என்றே புரியாமல் கன்பூஷியஸ் (இந்த வார்த்தை நான் கண்டுபிடித்தது) ஆகி விடுவோம்.

இவரது வலைத்தள பதிவுகள் சிலவற்றை படிக்கையில் ‘ஷிப்லி பாவா’ பேசுவதைப் போலிருக்கும். எனக்கு சில விஷயங்கள் மண்டையில் ஏறாது.  அதற்கான அறிவு நமக்கு கிடையாது போலும் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்வேன்.

ஒரு சின்ன வட்டத்துக்குள் முடங்கிக் கிடக்கும் இவர் வெளியில் வரவேண்டும். குடத்திலிட்ட விளக்காக இருக்கும் இவர் , நாகை கலங்கரை விளக்கமாக  பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் என்போன்ற சகதோழனின் விருப்பம்.

நான் சொல்வது ஒருபுறம் கிடக்கட்டும். இவரைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் படித்தால் “நெருப்பில்லாமல் புகையாது” என்ற உண்மை விளங்கும்.

watch?v=VM5wawlV_cY&feature=player_embedded

Our sweetest songs are those that tell us of saddest thought என்று கவிஞன் ஷெல்லி சொன்னான். எவ்வளவு உண்மை! ஆபிதீனின் நகைச்சுவை சொல்ல வரும் விஷயமும் மிகமிகத் துயரமானது. ஆபிதீனின் எழுத்தின் உயிரோட்டம் என்று இதைச் சொல்ல வேண்டும். இந்த நகைச்சுவை மிகமிக ஆழமான துன்ப அனுபவங்களை மிகத்துல்லியமாகவும் நுட்பமாகவும் எடுத்துரைக்கும் தன்மை கொண்டவை. – நாகூர் ரூமி

(பார்க்க பதிவுகள்)

ஆபிதீன் என்றொரு படைப்பாளியைப் பற்றி எனக்குச் சொன்னவர் யாரென்று ஞாபகம் இல் லை. எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் கிடந்தது. சாருநிவேதிதா என்ற எழுத்தாளரின் படைப் புகள் பற்றிக் கவிஞர் அல் அஸ_மத் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆபிதீன் பற்றியும் அவர் சொன்னார். அப்போதுதான் ஆபிதீன், சாருநிவேதிதா சர்ச்சை பற்றிய குறிப்புக்களை நான் எப்போதோ இணையத்தில் ஏதோ ஒரு தளத்தில் படித்த ஞாபகம் வந்தது. எனவே ஆபிதீன் பற்றி எனக்கு யாரும் சொல்லவில்லை, நான் இணையத்தில் படித்த சாருநிவேதிதா, ஆபிதீன் குறித்த சர்ச்சை ஏற்படுத்திய தாக்கம்தான் ஆபிதீனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்திருந்தது என்ற முடிவுக்கு வந்தேன். – அஸ்ரஃப் ஷிஹாப்தீன் 

(பார்க்க அஸ்ரஃப் ஷிஹாப்தீன் வலைத்தளம்)

 ஒருநாள் சாரு ஆபிதின் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு ஓவியர், சிறுகதை நாவல் எழுதக் கூடியவர் என்பதாக கூறுவார். ஒருமுறை ஆபிதீனை சாரு வீடடில் சந்தித்தேன். அதில் பழக்கம் கொள்ளும் அளவிற்கு நானோ ஆபிதீனோ பேசிக்கொண்டதுகூட இல்லை. உண்மையில் ஆபிதீனிற்கு என்னை நினைவில் வைத்துக் கொள்வதும்கூட சாத்தியமற்ற ஒரு சந்திப்பு நிற்க…

நீண்ட நாட்களாக ஆபிதீன் கதைகளை படிக்கும் எண்ணம் இருந்து வந்தது. அவரது கதைகள் படிக்க எனது சூழலில் கிடைக்கவில்லை. அல்லது தீவிரமாக அதனை தேடும் நிலையும் வாய்க்கவில்லை. அவரது எழுத்துக்களை படிக்கும் நீண்டநாள் எண்ணம் நிறைவேறியதைப்போல பதிவில் அதனை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது கதைகள் இரண்டினை சுவராஸ்யமான தலைப்புகளை கொண்டிருந்ததால் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து படித்தேன்.

1 பதிவு இணைய இதழில் ஜனவரி 2004-ல் வெளிவந்த கதை “இஸ்லாமிய கதை எழுத இனிய குறிப்புகள்”.
2. திண்ணை.காம் செப்டம்பர் 2003-ல் வெளிவந்த “ஹே! ஸைத்தான்” கதை.

நீண்ட நாட்களாக தமிழ் சிற்றிதழ்கள் இணையம் போன்றவற்றடன் தொடர்பில்லாததால்.. இவற்றை உரிய காலங்களில் படிக்க இயலவில்லை. அது வருந்தக்கூடிய செய்திதான்। பின்நவீனத்துவ கதையாடலில் ஒரு உத்தி நையாண்டி என்பது. நையாண்டியின் மூலம் உன்னதம் புணிதம் என்கிற விஷயங்களை கவிழ்த்து தலைகீழாக்கிவிடுவது. நையாண்டி என்பது ஒரு கதையாடல் உத்திதான் என்றாலும் கதையின் நையாண்டி ஒரு நகைச்சுவை உணர்வுடன் முடியாமல் வாசகனை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் வண்ணம் ஒரு ஆழ்ந்த அமைப்பை உள்ளார்ந்து கொண்டிருக்கும். கதை வாசித்தபின் ஒரு செயலூக்கமிக்க மெளனத்தை ஏற்படுத்தும். எடுத்துரைக்கப்படும் கதையாடலில் மேலமைப்பிற்குள் உள்ளார்ந்து ஓடும் கூர்மையான விமர்சனம் கதை ஏற்ற முனைந்த உணர்வு தளத்திற்கு வாசகனை இட்டுச் சென்றுவிடும். அத்தகைய உணர்வை புதுமைபித்தனின் கதைத்தொகுதிகளில் கீழ்கண்ட கதைகள் ஏற்படுத்தக்கூடியவை. “திருக்குறள் செய்த திருக்கூத்து” “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்””புதிய கந்தபுராணம்” “இலக்கிய மம்மநாயனார் புராணம்” “கட்டில் பேசுகிறது” வேதாளம் சொன்னகதை “கட்டிலை விட்டிறங்கா கதை” போன்ற கதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் நகைச்சுவையை உருவாக்குவதுடன் சமூகம், சடங்குகள், ஆச்சாரங்கள் அல்லது பழகிய மனோபாவங்கள் என கெட்டித்தட்டிப்போயுள்ள புனிதங்களை கவிழ்த்துப் போட்டுவிடும்.

அப்படியொரு உணர்வை இவ்விருக்கதைகளும் உருவாக்கின. சிரிக்காமல் ஒரு வரிக்கூட படிக்க முடியவில்லை. – ஜமாலன்

(பார்க்க ஜமாலன் வலைத்தளம்)

ஆபிதீனைப் பற்றி எனது பதிவில்

ஆபிதீனும்  ஆர்.கே.நாராயணனும்

 

Tags: , , , , , , , , ,