RSS

Tag Archives: கவிஞர் காதர் ஒலி

வைரத்தூறல் – மதிப்புரை


நாகூரில் காதர் ஒலியைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

இப்படி நான் சொன்னதும் “நீங்கள் சுன்னத் ஜமாஅத்தா அல்லது தவ்ஹீதா?” என்ற அடுத்த கேள்வி எழக்கூடும்.

நான் சொல்ல வருவது நம்மூர் கவிஞர் காதர் ஒலியை.

இவர் பரிகாசப் பாடலில் தொடங்கி இதிகாசப் பாடல்களை எட்டி இருப்பவர். இதுவரை வாழ்த்துப்பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தவரை நாம் வாழ்த்த வேண்டிய தருணம் வந்து விட்டது.

குடத்திலிட்ட விளக்கு இன்று குன்றின் மேல் ஒளிர்கிறது.

இவரது “வைரத்தூறல்” மழையில் நனைந்த நான் இவரது கவிதைகளுக்கு மதிப்புரை வரைந்தால் என்ன என்று தோன்றியது.
—————————————————————————————-

புலவர் ஆபிதீன் இயற்றி நாகூர் E.M.ஹனீபா மற்றும் A.ராணி இணைந்து பாடிய இந்த அருமையான பாடலை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

‘மக்கள் யாவரும் ஒன்றே குலமெனும் மார்க்கம் வந்தது யாராலே?’ என்று நாகூர் ஹனீபா அவர்கள் கேள்வி தொடுக்க ‘மக்கா என்னும் நகரம் தந்த மாந்தர் திலகம் நபியாலே’ என்று ராணி பதிலுரைக்கும் இந்த பாடல் எத்தனை ஆண்டுகளானாலும் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

கவிஞர் காதர் ஒலியின் “பிரிவினை எதற்கு?” என்ற இந்த கவிதையைப் படித்தபோது ஆபிதீன் காக்காவுடைய அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

பிறந்த உலகில் பற்பலப் பிரிவாய்
பிரிந்துக் கிடப்பது எதனாலே?
சிறந்த அறிவும் செயல்படுத்திறனும்
சிதைந்து போகுது அதனாலே!
தெரிந்து இருந்தும் தெளிவு படாமல்
திருந்த மறுப்பது எவராலே?
புரிந்து கொண்டால் பலமே பெறலாம்
புண்ணியம் படரும் செயலாலே!

நம் மக்கள் கொள்கை அடிப்படையில் பிரிந்துக் கிடப்பதை கவிஞரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மற்றொரு இடத்தில்

விண்மீன்கள் சிதறிக் கிடந்தால்
விண்ணுக்கு அழகு!
மூமீன்கள் சிதறிக் கிடந்தால்
முளைக்குமா விடிவு?

என்று குமுறுகிறார். மீனை வைத்து “விண்மீன்கள்” “மூமீன்கள்” என்ற வார்த்தை விளையாட்டு எனக்கு பிடித்திருந்தது. கவுச்சியாக இருந்தாலும் கவர்ச்சியாக இருந்தது.

———————————————————————————————————————-

1993-ஆம் ஆண்டு வெளிவந்த மணிரத்னத்தின் ‘திருடா திருடா’ படம் எல்லோர் நினைவிலும் பசுமையாக இருக்கிறது. நம் கவிஞரின் “வைரத்தூறல்” தொகுப்பில் “திருடா! திருடா” என்ற தலைப்பைக் கண்டதும், இவர் எந்த திருடனைப் பற்றி சொல்லப் போகிறார்? ஒருவேளை கிரானைட் திருடனைப் பற்றி இருக்குமோ என்ற ஆவலில் கவிதையைப் படிக்க நமக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

அப்பா அம்மா சொல்லைப் பின்னே தள்ளாதிருடா
அச்சம் அகந்தை அழுக்கு நெஞ்சில் கொள்ளாதிருடா
தப்பித் தவறி தறுதலை வழியில் செல்லாதிருடா
தரங்கள்கெட்ட வார்த்தையை வாயால் சொல்லாதிருடா

என நாசுக்காக நம் கவிஞர் நல்லுபதேசம் நயம்பட உரைக்கிறார்.
———————————————————————————————————————

இன்றைய இளந் தலைமுறையினருக்கு உவமைக் கவிஞர் சுரதாவைப் பற்றி அதிகம் தெரியாது. பாரதிதாசன் மிது கொண்டிருந்த பேரன்பின் காரணமாய் “சுப்பு ரத்தின தாசன்” என்ற தன் புனைப்பெயரை மேலும் சுருக்கி “சுரதா” என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக் கொண்டவர்.

“விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்”

என்ற கே.பாலச்சந்தரின் “நாணல்” படத்தில் இடம்பெற்ற பாடலின் சாயலை கவிஞர் காதர் ஒலியின் “ஆடையோ ஆடை!” என்ற கவிதையில் காண முடிகிறது.

கவர்ச்சி கன்னிக்கு காலாடை
காற்றில் பறக்குது மேலாடை
கட்டழகு பெண்ணுக்கு நூலாடை
காய்ச்சிய பாலுக்கு பாலாடை

என்று பாடும் கவிஞர் மேலும் தொடர்கிறார்.

நீதான் எனக்கு என்னாடை
நான்தான் உனக்கு உன்னாடை
நீக்கிடமுடியா இவ்வாடை
நெஞ்சிலே மனக்கும் அன்பாடை

கவிஞர் காதர் ஒலியின் ஆடை வரிகளில் வீசிய பா-வாடை என் மனதிற்குள் பலவிதமான சிந்தனையை தோற்றுவித்தது.

‘…அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை…” (அல்குர்ஆன் 2:187) என்ற திருக்குர்ஆன் வரிகள் நினைவுக்கு வந்தன.

ஒருவர் மற்றவருக்கு ஆடை என்றால் இருவரும் சரிசமம் என்று அர்த்தமாகிறது அல்லவா? ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்பார்கள். இந்துமதம் கூட சிவபெருமானை ஆண்பாதி, பெண்பாதியாக – உமையொருபாகனாக, மாதிருக்கும் பாதியனாக, மங்கை பங்கனாக, அர்த்தநாரீஸ்வரராக உருவகப் படுத்துகிறது.

வாழ்க்கைத்துணை இல்லாத மனித வாழ்க்கையும் அரைகுறையாகத்தான் ஆகிவிடுகிறது. பரிபூரணம் ஆவதில்லை. அதனால்தான் இஸ்லாம் சன்னியாசத்தை ஆதரிப்பதில்லை.

கவிக்கோ அவர்கள் ஜூனியர் விகடனில் இவ்வரிகளுக்கு விளக்கம் தந்ததை சற்று கூர்ந்து கவனித்தால் பலப்பல உண்மைகள் கண்முன் புலப்படுகின்றது.

ஆடையை ஏன் உதாரணம் காட்ட வேண்டும்?

ஆடை, மானத்தை பாதுகாக்கின்றது; மரியாதை கூட்டுகின்றது; மதிப்பை உயர்த்துகின்றது. ஆணுக்குப் பெண் ஆடையாகவும், பெண்ணுக்கு ஆண் ஆடையாகவும் இருப்பது கட்டாயமாகின்றது. குர்ஆன் கவிதைநயமிக்கது என்பதற்கு இவ்வசனமே நல்லதொரு சான்று.

மனைவியின் மானத்திற்கு பங்கம் ஏற்படுகையில் கணவன்தான் கேடயமாக செயல்பட்டு அவளுக்கு கேடு விளையா வண்ணம் பாதுகாக்கின்றான். கணவனுக்கு அவள் மனைவியானவள், தன் சொல்லாலும் செயலாலும், மதிப்பையும் மரியாதையையும் தேடித் தருகிறாள். எனவேதான் அவனுக்கு அவள் ஆடை, அவளுக்கு அவன் ஆடை என்ற பொருத்தமான உதாரணம் சுட்டிக் காட்டப் படுகின்றது.

உயிரினங்களில் மனிதன் மாத்திரம்தான் ஆடை அணிகிறான். அதேபோன்று ‘திருமணம்’ என்ற புனித பந்தம் மனிதர்களாகிய நமக்கு மட்டும்தான் கடமையாக்கப்பட்டிருக்கின்றது. “வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” என்பது வெறும் கற்பனைக்குத்தானே அன்றி நிஜவாழ்க்கைக்கு அல்ல.

பொருத்தமான ஆடையைத் தெர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் தேவையோ, அதே அளவு கவனம் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதிலும் அவசியம் தேவை என்பதை சொல்லாமல் சொல்கின்றது.

தட்பவெப்ப காலங்களில் குளிர் நம்மை தாக்காமலும், வெயில் நம்மை சுட்டெரிக்காமலும் ஆடை நம்மைக் காக்கின்றது. இன்பங்களிலும் துன்பங்களிலும் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அளித்து, ஆடை நம் அங்கங்களை மறைப்பதுபோல் அவரவர் தத்தம் குறைகளை மறைத்து இல்லறவாழ்க்கை நடத்த வேண்டும் என்பதுதான் இதன் உட்கருத்து.

God Makes Man. Tailor makes him Gentleman என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். ஆடையை அணிந்ததும் மனிதனுக்கு மதிப்பு கூடி விடுகின்றது. பாதுகாப்பாக உணர்கிறான். மானம் காக்கப் படுகின்றது.

நன்மதிப்பு, சமுதாய அந்தஸ்து, கெளரவம் – இவைகளை ஈட்டித் தருகின்றது ஆடை, அணிகலன்.

ஆடை அணியாதவனை காட்டுமிராண்டி என்று பழித்துரைக்கிறோம்.

ஆடை நாகரீகத்துக்கான குறியீடு; சமூகத்தின் பண்பாடு. ‘அறிவுக்கனி’யை உண்டதும் ஆதாமும் ஏவாளும் புரிந்த முதற்காரியம் இலைதழைகளை ஆடையாக்கிக் கொண்டதுதான். சுயநினைவு இழக்கும் பைத்தியக்காரன் செய்யும் முதற்காரியம் ஆடைகளை கிழித்துக் கொள்வதுதான். புரிதலின்றி இல்லற வாழ்க்கையில் கணவனும் மனைவியும் தாம்பத்திய வாழ்வை கெடுத்துக் கொள்வதும் பைத்தியக்காரர்கள் செய்யும் செய்கைகளுக்குச் சமம். அவர்களது வாழ்க்கை தாறுமாறாய்க் கிழிந்து சின்னாபின்னமாகி விடுகின்றது.

கவிஞர் காதர் ஒலியின் மேற்கூறிய இவ்வரிகள் மனநிறைவைத் தந்தது.

நீதான் எனக்கு என்னாடை
நான்தான் உனக்கு உன்னாடை
நீக்கிடமுடியா இவ்வாடை
நெஞ்சிலே மனக்கும் அன்பாடை

——————————————————————————————————————–
இதோ கவிஞர் காதர் ஒலியின் மற்றொரு கவிதை:

கொசுக்களுக்கு கொண்டாட்டம்
நன்றி சொல்லும் பொதுக்கூட்டம்
முன்னிரவிலும் பின்னிரவிலும்
மூக்குப்பிடிக்க ரத்த விருந்து
மிக்க நன்றி! மின்வெட்டுக்கு!

நாகூரில் விருந்து என்றால் “சஹன் சாப்பாட்டில்” நாலுபேர்தான் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். கவிஞர் சொல்லும் இந்த ரத்த விருந்தில் கூட்டம் கூட்டமாக அல்லவா உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்?

இம்முறை தாயகம் சென்ற நான் மின்வெட்டினால் ரொம்பவே நொந்து போய்விட்டேன். கலைஞர் ஆட்சியின்போது வெளிவந்த ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது.

அரவிந்த் சாமிக்கும் ஆற்காடு வீராசாமிக்கும் என்ன வித்தியாசம்?

அரவிந்த் சாமி வந்தது “மின்சாரக் கனவு”, ஆற்காடு வீராசாமி வந்ததும், மின்சாரமே கனவு.

இதுக்கு அது எவ்வளவோ தேவலாம் என்று தோணுகின்றது.

இவ்வளவு அருமையாக கவிதை எழுதும் என் நண்பருக்கு அடுத்த முறை ஊர் செல்லுகையில் ஏதாவதொன்று பரிசளிக்க வேண்டும். ‘டார்டாய்ஸ்’ கொசுவர்த்திச் சுருள் பொருத்தமான பரிசாக இருக்குமோ?  “அனுபவம்தான் கவிதை” என்பான் கவியரசு கண்ணதாசன். கொசுக்கடியால் எந்த அளவுக்கு நம் கவிஞர் பாதிக்கப்பட்டிருந்தால் இது போன்ற அனுபவக் கவிதைகளை அவர் எழுதி இருப்பார் என்று நம்மால் எளிதில் கற்பனைச் செய்து ஊகிக்க முடிகின்றது.

“கடிஜோக்” கேள்விப்பட்டிருப்பீர்கள். இது “கடிகவிதை”

அசுக்கடி புசுக்கடி கொசுக்கடி
அவரவர் உடம்பினில் அடிதடி
இசுக்கடி நசுக்கடி பொசுக்கடி
இரவினில் நடக்குது அதிரடி

கொசுத்தொல்லையை விவரிப்பதோடு நிற்கவில்லை. அதை போக்குவதற்கும் ஆலோசனை தருகிறார் கவிஞர். ஒரு பிரச்சினையை எடுத்துச் சொல்வதோடு மட்டும் கவிஞனின் பங்களிப்பு நின்று விடுவதில்லை. அதற்கு நிவர்த்தி வைத்தியமும் சொல்ல வேண்டும்.

கொசுக்கு பயந்தா வலையடி?
குப்பைக் கூளத்தைத் தொலையடி
அசுத்த அசிங்கத்தை அகற்றடி
அதுதான் கிருமிக்கு சவுக்கடி.

வேப்பிலை புகையைப் போடடி
வெகுண்டு ஓடிடும் கொசுவடி
காப்பில்லை கொசுவத்தி சுருளடி
காசுக்குத் தாண்டி அழிவடி

என்று இப்பிரச்சினைக்கு தீர்வு காண விழைகிறார். இதை படித்துவிட்டு கொசுவத்திச் சுருள் விற்பனையாளர்கள் நிச்சயம் இவர்மீது கடுப்பாவார்கள் என்பது நிச்சயம்.
———————————————————————————————————————–

தினக்கூலித் தொழிலாளிகளின் அவல வாழ்க்கையை எடுத்துரைக்கையில் இப்படி கூறுகிறார் நம் கவிஞர்:

ஒருவேளை அடுப்பெரிக்க
மூன்று வேளை வெயிலில் காயும்
விறகுகள்

தன்னைச் சார்ந்தோரை வாழவைப்பதற்கு தன்னைத்தானே வருத்திக் கொள்கிறான் தினக்கூலிக்காரன். மனிதனை விறகாய் உருவகப்படுத்துகையில் சித்தர் பாடல்களில் காணும் தத்துவக்கருத்தை   இந்த ‘ஹைக்கூ’ கவிதையில் நம்மால் உணர முடிகிறது.

பார்த்தா பசுமரம்
படுத்து விட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?

திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ஞானப்பாடல்தான் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. (இது கண்ணதாசன் எழுதிய பாடலா அல்லது கவி கா.மு.ஷெரீப் எழுதிய பாடலா என்ற விவாதம் நமக்கு இப்போது தேவையில்லாதது.)  [பார்க்க]

———————————————————————————————————————

எட்டு வயது சிறுமியாக இருந்த என் மகள் ஒரு முறை என்னிடம் “ரூபாய் நோட்டில் ஏன் காந்தி சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியுமா?” என கேள்வி கேட்டாள். “தெரியாது” என்று நான் பதில் சொன்னதும் “அவர் அழுதா நோட்டு நனைந்து விடுமே!” என்று சிரித்தபடி கூறிவிட்டு ஓடிவிட்டாள். இதை நகைச்சுவையாக ரசித்த எனக்கு, கவிஞர் காதர் ஒலியின் இதே கருத்தைக்கொண்ட கவிதை சீர்தூக்கி சிந்திக்க வைத்தது.

வாக்களித்து விட்டு வெளியே வந்தவன்
வாழ்க காந்தி என்றான்!! கேட்டால்
வேட்பாளர் கொடுத்த பணத்தில்
காந்தி சிரிக்கிறாராம்

ஊழல் நிறைந்த தேர்தல் களங்களின் அவலத்தை உரித்துக் காட்ட இந்த வரிகள் போதாதா?

———————————————————————————————————————

கவிஞர் காதர் ஒலி எழுதியுள்ள “திருப்புகழ் தமிழ்”, “தமிழச்சித் தாலாட்டு”, “தாய் மண்ணை மதி” “தமிழா! தமிழா”, “திருக்குறள் சுவை”  “முண்டாசுக் கவிஞன்” “புதுவையின் புயல்”  போன்ற கவிதைகள், அவருக்கு தமிழ்மொழியின் மீதுள்ள ஈடில்லா பற்றையும் தமிழ் தாக்கத்தையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

“புதியதோர் உலகம் செய்வோம்” என்றான் பாரதிதாசன் “புதிய பாரதம் செய்வோம்” என்று முழக்கமிடுகிறார் நம் கவிஞர். “ஓடி விளையாடு பாப்பா” என்று பாலர்களுக்கு கவிதை பாடினான் பாட்டுக்கோர் புலவன் பாரதி.

ஓடி நடக்காதே தாத்தா; உன்
உடம்புக்கு நல்லதல்ல தாத்தா
பீடி குடிக்காதே தாத்தா; பல
பிணிகளை உண்டாக்கும் தாத்தா

மாடி ஏறாதே தாத்தா; திடீர்
மயக்கம் வந்துவிடும் தாத்தா
ஆடி அலையாதே தாத்தா; அது
ஆகாது உந்தனுக்கு தாத்தா

மாமிசம் தின்னாதே தாத்தா; அந்த
மருத்துவர் சொல்கேளு தாத்தா
பூமியை நம்பாதே தாத்தா; அதை
புரிந்தவன் நீதானே தாத்தா

என பேத்தி தாத்தாவுக்கு அறிவுரை கூறுவதுபோல் கவிதை வடித்துள்ளார். இந்த ஐடியா ஏனோ பாரதிக்கு வராமல் போய்விட்டது. வந்திருந்தால் ‘பாப்பா பாட்டு’ பாடியதைப்போன்று ‘தாத்தா பாட்டையும்’ அவன் பாடிச் சென்றிருப்பான்.

மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்

என்று பைந்தமிழ்த்தேனீ பாரதி பாடினான். கவிஞர் காதர் ஒலியின் கனவு சற்று மாறுபட்டு இருக்கின்றது.

பஞ்சம் இல்லாத பாரதம் வேண்டும்
பசுமையும் வளமையும் பெருகிட வேண்டும்
லஞ்சம் வாங்காத அலுவலர் வேண்டும்
லட்சியம் எல்லாம் நடந்திட வேண்டும்

என தான் காணும் கனவை எடுத்தியம்புகிறார். படிக்கின்ற வாசகன் மனதிலும் கவிஞரின் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனை உள்மனதில் எழுகின்றது.

——————————————————————————————————————

கவிஞர் காதர் ஒலியின் கவிதைகளில் காணப்படும் உவமை, உவமேயம், உருவகம், சொல்நயம், வார்த்தை சந்தம் – இவைகள் பாராட்டும்படி இருக்கின்றது. உதாரணத்திற்கு பூமியை உயிருள்ள ஒரு பொருளாய் கற்பனை செய்திருப்பது நம்மை ரசிக்கத் தூண்டுகிறது.

பூமி விடும் பெருமூச்சுதான் புயல் காற்றாம், நரம்புத் தளர்ச்சி பூகம்பமாம், திடீர் வயிற்றுப்போக்கு சுனாமியாம், சிறுநீரகக் கோளாறு வெள்ளப் பெருக்காம், செரிமான இல்லாமல் எடுக்கப்படும் வாந்திதான் எரிமலை வெடிப்பாம்.

கத்திரிக்காயை மகுடம் அணிந்த இளவரசியாக கற்பனைச் செய்வதும், துகில் உரிப்பவரை அழவைக்கும் சக்தி எங்களுக்குத்தான் உள்ளது என்று பாஞ்சாலிக்குகூட இல்லாத சக்தியை வெங்காயத்திற்கு அளித்து அழகு பார்ப்பதும், தரம் மாறாமல் நிறம் மாறும் கர்ப்பிணி என்று மிளகாயை உருவகப் படுத்துவதும், கவிஞரின் கற்பனாச் சக்திக்கு ஒரு சபாஷ் போட வைக்கிறது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்

‘விவசாயி’ படத்தில் மருதகாசி வெளியிட்ட அதே ஆதங்கத்தை அவர் பானியில் வெளியிடுகிறார் கவிஞர் காதர் ஒலி

பிறந்து வளர்ந்து படித்த மண்ணில்
பிழக்கத் தொழிலா உனக்கில்லை?
பறந்து சென்று இளமையைத் தொலைத்து
பணத்தைக் குவிப்பது கணக்கில்லை!
சிறந்த மனையால் சிரிக்கும் மழலை
செழித்த முகத்தில் பொலிவில்லை
திறந்து சொன்னால் அயலகம் சென்று
திறம்பட உழைபதில் புகழில்லை

என்று நம் கவிஞர் நடைமுறை வாழ்க்கையை, அயல்நாட்டு மோகத்தைச் சாடுகையில் பங்கஜ் உதாஸ் அவர்களின் “சிட்டி ஆயிஹே” கஜல்தான் நினைவில் வந்தது.

“ரோட்டி கப்படா அவுர் மக்கான்” என்ற படத்தில் “மெஹங்காயி மார்கயி” என்ற இந்தி பாடலில் அருமையான ஒன்று வரி வரு.ம் அதன் சாராம்சம் இதுதான்:

கைநிறைய பணம் கொண்டுச்சென்று
பைநிறைய காய்கறிகள் வாங்கி வருவோம் அன்று
பைநிறைய பணம் கொண்டுச்சென்று
பைநிறைய காய்கறிகள் வாங்கி வருகிறோம் இன்று

கவிஞர் காதர் ஒலி அவர்களின் கவிதையிலும் அதே கருத்துச்செறிவு காணக்கிடைக்கின்றது.

நோட்டு புத்தகத்துடன்
பள்ளிக்குச் சென்றேன் அன்று
நான் படிக்க!!

நோட்டுக் கட்டுடன்
பள்ளிக்கூடம் செல்கிறேன் இன்று
என் பிள்ளை படிக்க!!

என்று கல்வியின் அவலத்தை துகிலுரித்துக் காட்டுகின்றார்.

எத்தனையோ முறை திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் தேடி வந்தும் அதில் இவர் ஆர்வம் காட்டவில்லை என்ற இவரைப் பற்றிய சுவையான செய்தி நமக்கு மகிழ்வைத் தருகிறது. எண்ணற்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய கவி. கா.மு,ஷெரீப் அவர்கள் திரையுலகில் பிரவேசித்தமைக்கு, பிற்காலத்தில் மனம் வருந்தியிருக்கிறார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுத வாய்ப்பு தேடிவந்தபோது “அம்மி கொத்த ஏன் சிற்பியை அழைக்கிறீர்கள்?” என்ற வினாவை அவர்களிடத்திலேயே தொடுத்தார். நம் கவிஞரும் அதேபோன்ற தெளிவான சிந்தனையில் இருப்பது புலனாகிறது. புகழ் என்ற போதை அவரை மசிய வைக்கவில்லை. பணத்தாசை என்ற பாப்பாவூர் பேய் அவரைப் பிடித்து ஆட்டவில்லை.

நீ துளியில் பிறந்த உளி
சிற்பம் செத்துக்கவா?
அம்மிக் கொத்தவா?
தீர்மானிப்பது உன் விதி!!

எனக்கென்னவோ கவிஞரின் இக்கவிதை, கேள்விகளால் வேள்விகள் நடத்தி, தனக்குத்தானே கேட்டுக்கொண்ட கேள்வியாகத்தான் தோன்றுகின்றது. இக்கேள்விக்கு பதிலுரைக்கும் வண்ணம் தன் வாழ்க்கையையும் சீர்பட அமைத்துக் கொண்டதை நம்மால் பார்க்க முடிகிறது.

வளரட்டும் மேலும் இவரது கவித்திறமை என்று நம் இதயம் வாழ்த்துகின்றது.

 

Tags: , , ,

பாரதிதாசனும் நாகூர் மக்களும்


பாரதிதாசன்

புதுச்சேரியின் எல்லையில் நாகூர் இருப்பதினாலோ என்னவோ அந்த புதுவைக்காற்று நாகூர் மக்களை வெகுவாகவே கவர்ந்திழுத்தது போலும்.

நாகூர் கவிஞர் காதர் ஒலியின் “வைரத்தூறல்” கவிதைத் தொகுப்பை புரட்டிக் கொண்டிருந்தபோது அவரது “புதுவைப் புயல்” என்ற கவிதை, சீரான சிந்தனை ஊற்றுகளை பெருக்கெடுக்க வைத்தது. புரட்சிக் கவிஞர் பாரதி தாசனைப் பற்றிய கவிதை அது:

மூவேந்தன் வளர்த்த முதிர்கனித் தமிழை உண்டு
நாவேந்தன் தானாகி நாளெல்லாம் பாட்டெழுதி
காவேந்தன் மணமாகி கவிதைகள் பலப்பாடி
பாவேந்தன் எனப் பேர்பெற்ற பாரதிதாசன்

புதுவையில் உதித்த புதியதோர் விடியல்
பூந்தமிழுக்குக் கிடைத்த பொற்குவிப் புதையல்
எதுகையில் மோனையில் இசையிடும் தென்றல்
ஏழ்மையில் திகந்த தூய்மையின் திங்கள்

சித்திரை மாதத்தில் ஊறும் கனலூற்று
செந்தமிழ் சொல்லாய் சீறும் அனல்காற்று
முத்திரைப் பதித்த கதிரின் ஒளிக்கீற்று
முற்போக்கு சிந்தையில் வேதியல் வீச்சு

வாத்தியார் பணியில் வாழ்வேணி ஏறியவன்
ஆத்திகனாய் முப்பதாண்டு ஆற்றலுடன் வாழ்ந்தவன்
நாத்திகம் பேசியே நாத்தமும் பேறியவன்; சமூக
நாற்றங்களை நடுத்தெருவில் நிற்கவைத்து சாடியவன்

வாழ்ந்ததோ எழுபத்தி மூன்று ஆண்டுகள்
வரைந்ததோ எழுபத்தி இரண்டு நூல்கள்
வாழ்க்கையில் விளைத்தது அளப்பரியச் சான்றுகள்; தமிழர்
வாழ்வுக்கு வையத்தில் அவனும் ஓர் ஊன்றுகோல்

பாவேந்தர் பாரதிதாசனின் அருமை பெருமைகளை அழகுத்தமிழில் எடுத்துரைக்கும் கவிஞர் காதர் ஒலியின் கவிதைப் பாங்கினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பொதுவாகவே நாகூர்க்காரர்களுக்கு பாவேந்தர் பாரதிதாசன்மீது அளப்பரிய அன்பு உண்டு. நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய இஸ்லாமியப் பாடல்களையும், கழகப் பாடல்களையும்தான் எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்களேத் தவிர அவர் தமிழ்மொழியைப் போற்றிப் புகழ்ந்து பாடிய உணர்வூட்டும் பாடல்களை பலரும் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

உண்மையைச் சொல்லவேண்டுமெனில் நாகூர் ஹனீபா, தமிழுணர்வு பாடல்களை மேடைதோறும் முழங்குவதற்கு முழுமுதற் காரணமாக இருந்ததே பாவேந்தருடைய பாடல்கள்தான் என்று அடித்துச் சொல்லலாம்.

நாகூர் ஹனீபா, பாரதியாரின் பாடல்களை பாடாமல் பாரதிதாசனின் பாடல்களை தேர்ந்தெடுத்து பாடியதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. நீதிக்கட்சியின் கோட்பாடுகளிலும், தந்தை பெரியாரின் புரட்சிக் கருத்துக்களிலும் அதீத ஈடுபாடு கொண்டிருந்த நாகூர் ஹனீபாவுக்கு தனது தமிழ் வேட்கையை வெளிக்காட்டுவதற்கு பாரதிதாசனின் பாடல்களைத்தான் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்தார். அதனால்தான்

தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈ.வே.ரா

என்று தந்தை பெரியாரை போற்றிப் பாடினார் நாகூர் ஹனிபா. ஈ.வே.ரா. பெரியாரின் முதன்மைச் சீடராக விளங்கியவர் பாவேந்தர் பாரதிதாசன், என்பது எல்லோரும் அறிந்ததே.

பாவேந்தர் பாடல்களில் காணப்படும் வடமொழி கலப்பில்லா வார்த்தைகள், அழுத்தம் திருத்தமான சந்தங்கள், புரட்சிக் கருத்துக்கள், தெள்ளுதமிழ் நடை, இவைகள் முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும்.

நாகூர் ஹனீபா அவர்களிடம் இயற்கையாகவே சிறுவயதுமுதல் தமிழார்வம் மேலோங்கி இருந்தது. 1938-ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் முதலமைச்சராக மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பதவி வகித்த நேரமது. பள்ளிக்கூடங்களில் இந்தியை கட்டாயப் பாடம் ஆக்கினார் அவர். இதை எதிர்த்துத் தமிழ்நாடே எரிமலையாக கொந்தளித்து பொங்கி வெடித்தது. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அப்போது (1939) ராஜாஜி நாகூருக்கு வந்தார். அங்கே அவருக்குக் கறுப்புக்கொடி காட்டி கைது செய்யப்பட்ட நாலு பேரில் நாகூர் ஹனீபாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருக்கு வயது என்ன தெரியுமா? வெறும் 13 வயதுதான்!

அந்நாளில் திராவிடர் இயக்கத்தில் புகழ்பெற்ற பேச்சாளராக அறிமுகமாகியிருந்த “டார்பிடோ” ஜனார்த்தனம் அவர்களை நாகூர் ஹனீபா மற்றும் தமிழார்வலர்கள் அவரை அழைத்து நாகூரில் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் நாகூர் ஹனிபா, தன் சிம்மக்குரலால் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் – நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே” என்ற பாடலை உணர்ச்சி பொங்கப் பாடி எல்லோரையும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தார். அதனைத் தொடர்ந்து அரசியல் மேடைகளில் பாடத் தொடங்கி விட்டார்.

நாகூர் ஹனீபா அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கும் அவரது தமிழுணர்வுக்கும் கிரியாவூக்கியாக இருந்தது பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்கள்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

2010 அக்டோபர் மாதம் 10-ஆம்தேதி, நாகை மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் காடம்பாடி திடலில் நடைபெற்ற கூட்டத்தின்போது கலைஞர் கருணாநிதி அவர்கள் பேசிய வார்த்தைகள் இது:

“திராவிட நாட்டைப் பற்றி நாகூர் அனிபா, பாரதிதாசன் ஆகியோர் பாடிய பாடல் இன்றும் காதில் ஒலிக்கிறது. திராவிட இனம், கலாசாரம், பண்பாட்டை காப்பாற்றுவோம். இதனை இந்தியா முழுவதும் வளர்ப்போம். தமிழ்நாட்டில் உள்ள இந்த இயக்கத்தை எனக்கு பிறகு எனது மகன்கள், குழந்தைகள், பேரன், பேத்திகள் காப்பாற்றுவார்கள். அந்த தைரியம் எனக்கு இந்த கூட்டத்தை பார்க்கும் போது ஏற்படுகிறது”

திராவிட நாட்டுப் பெருமையை உலகறிய பறை சாற்றிய பெருமை நாகூர் ஹனிபா, பாரதிதாசன் இருவருக்குமுண்டு என இருவரையும்
ஒரே தட்டில் சீர்தூக்கிப் பார்த்து சான்றிதழ் வழங்குகிறார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

(இறுதியாக அவரது குடும்பச் சொத்தான திராவிட கழகத்தை கட்டிக் காக்கும் தலையாய பொறுப்பு தன் குடும்பத்திற்குத்தான் என்று
சூசகமாக முன்மொழிந்த அவரது வார்த்தைகள் நம் கட்டுரைக்கு இப்போது தேவை இல்லாதது என்று நினைக்கிறேன்)

தலைவாரிப்பூச்சூடி உன்னை

நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய பாடல்களிலே எனக்கு மிகவும் பிடித்த பாரதிதாசன் பாடல் இது. பெண்பாலர்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தும் கருத்துச் செறிவுள்ள பாடல்.

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் – பாட
சாலைக்குப் போ!என்று சொன்னாள் உன் அன்னை!

சிலைபோல ஏன்அங்கு நின்றாய்? – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்?

விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!

மலைவாழை அல்லவோ கல்வி? – நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் – கேலி
பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!

கடிகாரம் ஓடும்முன் ஓடு! – என்
கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு.

கடிதாய் இருக்குமிப் போது! – கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!

கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு – பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!

நாகூர் ஹனீபாவின் கம்பீரக் குரலில் இப்பாடலைக் கேட்கையில் கல்வியை உதாசீனப்படுத்தும் கல்மனதும் கரைந்து விடும். கல்வியின் மாண்பினை கனிவாய் உணர்த்தும் பாடல் இது. பெண்களுக்கான கல்வியை சமுதாயம் வெகுவாக புறக்கணித்த காலகட்டத்தில் பாரதிதாசன் எழுதி, நாகூர் ஹனீபா பாடிய இப்பாடல் குறிப்பாக இஸ்லாமியச் சமுதாயத்தினரிடையே பெருத்த மனமாற்றத்தை உண்டாக்கியது என்றால் அது மிகையாகாது.

நாகூர் போன்ற இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர்களில் பெண்கள் சமுதாயத்தினரிடையே ஓர் விழிப்புணர்ச்சி உண்டாக்கி, கல்வி விகிதாச்சார எண்ணிக்கையை உயர்த்துவதற்கு நாகூர் ஹனீபா அவர்கள் புரிந்த மெளனப்புரட்சி காரணமாக அமைந்திருக்கின்றது.

நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடலை எழுதியவர் கவிஞர் சாரணபாஸ்கரன்.

“தமிழோடு நிலைத்திருக்கப் பிறந்தவன் இக்கவிஞன்” என பாவேந்தர் பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்டவர் இவர். “தஞ்சை பாரதிதாசன்” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் என்பதை இங்கு நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழுக்கு அமுதென்று பேர்

“பஞ்சவர்ணக்கிளி” என்ற படத்தில் இடம்பெற்ற பாரதிதாசனின் “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற இனிமையான கானம் பி.சுசிலா அவர்களின் குரலில் ஒலிக்கையில் ஒரு மென்மையான வசந்தத்தை நாம் உணர முடியும். அதே பாடலை நாகூர் ஹனீபாவின் குரலில் கேட்கையில் நம் நரம்புகள் யாவும் முறுக்கேறும். பாடல் ஒன்றுதான் என்றாலும் பாடுபவர்களின் தொனியில் கேட்போரிடையே வெவ்வேறு உணர்ச்சியினை உண்டாக்க முடியும் என்பதற்கு இப்பாடல் நல்லதொரு சான்று.

“இன்பத்தமிழ் எங்கள் மொழியாகும், இஸ்லாம் எங்கள் வழியாகும்” என்ற தாரக மந்திரத்தோடு இஸ்லாமியப் பெருமக்கள் தங்கள் தாய்மொழியை ஒரு கண்ணாகவும், தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்கத்தை மற்றொரு கண்ணாகவும் பாவித்து தங்கள் வாழ்க்கை முறையை பேணிவருவதை நாம் கண்குளிர காண முடிகிறது

சங்கே முழங்கு

‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!’ என்ற பாரதிதாசனின் வைரவரிகள் தமிழர்களின் நெஞ்சில் ஆழமாய்ப் பதித்துள்ள அற்புதமான வரிகள். நாகூர் ஹனிபாவின் குரலில் பாவேந்தரின் பாடலைக் கேட்கும்போது நம்மையறியாமலேயே ஒரு தமிழுணர்வு தலைதூக்குவதை நம்மால் உணர முடிகிறது.

கன்னித்தமிழ்ச் சாலையோரம் சோலையிலே
கவிதைக் கனிகள் உண்ணும் பறவைகளே!

கவிஞர் காதர் ஒலியின் வைரத்தூறல் கவிதைதொகுப்பில் இடம் பெற்றிருக்கும் “புதுவைப்புயல்” என்ற கவிதை நாகூர் மக்களுக்கும் பாவேந்தருக்கும் இடையேயான இணைபிரியா பந்தத்தை மீண்டும் உறுதி படுத்தியிருக்கின்றது.

 

Tags: , , , , , ,

கவிஞர் காதர் ஒலியும் “இந்தி ஒழிக”வும்


இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் இறந்தவர்களுக்காக சென்னையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம்

இந்த ஈத்பெருநாளன்று நாகூர் தமிழ் சங்கத்தில் எனது பால்ய நண்பர் கவிஞர் காதர் ஒலியை சந்தித்தபோது “வைரத்தூறல்” என்ற அவரது கவிதை நூலை எனக்கு பரிசாக அளித்தார். புத்தகத்தைப் புரட்டியதும் அவர் வடித்த “தமிழ்ப்போர்” என்ற கவிதைதான் முதலில் என் கண்ணில் பட்டது. தமிழை “போர்” என்று வர்ணிப்பவர்கள் இந்த தமிழ்ப்போரை வாசித்தால் தமிழுணர்வு பெறுவது நிச்சயம்.

இந்தியென்ற நந்தியை இந்நிலத்தில் மேயவிட,
     இறுமாப்பாய் மேற்கொண்ட முயற்சியை
செந்தமிழர் சிங்கங்கள் செங்குருதி சிந்தியே
     சிறைச்சாலை சென்று அதை ஒடுக்கினரே!
வெந்தணலில் வதங்கியே வெட்டுப்பட்டு விம்மியே
     வெஞ்சமரை கண்டபோதும் அஞ்சவில்லை!
கந்தகமாய் தான்பொங்கி கெடுமதி கும்பல்களை
     கரியாக்கும் வரையில் கண்கள் துஞ்சவில்லை!

பாக்குளிக்கும் தமிழகத்தில் தீக்குளித்து தமிழ்காத்த
     பாய்மரக் கப்பல்களை மறக்குமோ?
நாக்குளிக்கும் தேனாறாம் நறுந்தமிழாம் தாய்மொழிபோல்
     நலம் சேர்க்கும் அமுதமினி சுரக்குமோ?
பூக்குவிக்கும் வாசனையை புறம்போக்கு மலவண்டு
     புறக்கணிக்க நினைப்பது நடக்குமோ?
தூக்குமேடை போனாலும் தமிழ்வாழ்க! தமிழ்வாழ்க!
     தாக்குதல் நாயென்ன கடிக்குமோ?

தார்பூசி எழுத்தழித்து தண்டவாளத்தில் தலைசாய்த்து
     தன்னைத் தியாகம் செய்தவர்கள் கொஞ்சமா!
ஊர்கூடி மறியல்செய்து உடம்பெல்லாம் வடுபெற்ற
     உத்தமர்க்கு இங்கென்ன பஞ்சமா!
வேர்அறுக்க நடிக்கின்ற வடக்கிற்கு தலையாட்டும்
     வேடதாரி வேடர்களே திருந்துவீர்!
சீர்மிகுந்த தமிழன்னை சினத்தோடு வெகுண்டெழுந்தால்
     சமுதாய வாழ்க்கையிலே வருந்துவீர்!

காதர் ஒலியின் இந்த கவிதையைப் படித்தபோது பல்வேறு சிந்தனைகள் என் மனக்கண்முன் நிழலாடியது.

1960-களில் இக்கவிதையை நான் படிக்க நேர்ந்திருந்தால் அப்போது என் இந்தி எதிர்ப்பு உணர்வுக்கு இது குமைஞ்சான் போட பயன்பட்டிருக்கும். இக்கால கட்டத்தில் இக்கவிதை ஏனோ எனக்குள் மனமாற்றம் எதுவும் உண்டாக்கவில்லை.

வட இந்தியர்களும், மலையாளிகளும் தமிழகத்தில் தொழில் புரிந்து வெற்றியடைந்து “ஓஹோ” என்று வாழ்ந்துவரும் பட்சத்தில் தமிழர்கள் அந்த அளவுக்கு வடமாநிலத்தில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு நமது தமிழினத் தலைவர்கள்தான் காரணம் என்பது என் தாழ்மையான கருத்து.

சிறுவனாக இருந்த காலத்தில் “இந்தி ஒழிக” என்று கோஷம் போட்டுக் கொண்டு, அவர்களோடு நாகூர் தபால்நிலையம் மற்றும் ரயில்நிலையத்திற்கு ஊர்வலமாக படையெடுத்துச் சென்று, பலகையில் எழுதப் பட்டிருக்கும் இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிப்பதை நேரில் சென்று வேடிக்கை பார்த்திருக்கிறேன்.

சராசரி தமிழனால் இன்று வடமாநிலங்களிலுக்கு வேலைநிமித்தம் அல்லது ‘ஜாலியாக” சுற்றுலா செல்லுகையில் மொழி தெரியாமல் அல்லல் பட்டுத் தவிப்பதை நாம் பரவலாக காண முடிகிறது.

திராவிடத் தலைவர்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காக நம்மை பிறமொழிகள் கற்கா வண்ணம் நம்மை மூளைச்சலவை செய்து அவர்கள் மட்டும் ஆதாயம் தேடிக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆம். அவர்கள் பேரன்களையும், வாரிசுகளையும் ஆசைதீர இந்தி படிக்க வைத்து மத்திய மந்திரி ஆக்கி காசு பார்த்தார்கள் என்பதை யாரால் மறுக்க முடியும்?

“தயாநிதி மாறனை ஏன் மத்திய மந்திரி பதவிக்கு சிபாரிசு செய்தீர்கள்?” என்று கலைஞரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“தயாநிதி இந்தி நன்றாக பேசுவான்” என்பதுதான். தமிழக மக்களை எந்த அளவுக்கு மடையர்களாக்கி இவர்கள் மகிழ்ந்தார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

“இவுங்க வாரிசுங்க எல்லாம் இந்தி படிக்கலாம் ஆனா கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிற புள்ளை இந்தி படிக்கிறதுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது. அப்படித்தானே?” என்று யாரிடம் சென்று முறையிடுவது?

“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!”

என்று நாகூர் ஹனீபாவை ஒவ்வொரு மேடையாக கத்திக் கத்தி பாட வைத்து, அவரது காதுகள் ஜவ்வை கிழிய வைத்து செவிடராக்கிய இவர்களை எந்தக் கூண்டில் நிறுத்தி வைத்து கேள்வி கேட்பது?

வன்முறை, தீவைப்பு, தடியடி, துப்பாக்கிச்சூடு, தீக்குளிப்பு என்று உயிர் நீத்தவர்கள்தான் எத்தனை எத்தனை?

செப்டம்பர் 2009-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகையில் விழாவுக்கு தலைமை தாங்கிய முதல்வர் கருணாநிதி அவர்கள்,

“தமிழகம் எந்த ஒரு மொழிக்கும் எதிரானதல்ல, அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி ஒரு மொழியை திணிப்பதை ஏற்க முடியாது. நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட போது, “இந்தி ஒழிக” என்று கோஷமிடவில்லை. “கட்டாய இந்தி ஒழிக” என்று தான் கோஷமிட்டேன்.” என்று சப்பைக்கட்டு கட்டினார்.

ஆகா.. என்ன ஒரு விளக்கம்! இவர்களது ஆவேசப் பேச்சைக் கேட்டு “இந்தி ஒழிக! இந்தி ஒழிக!” என்று கோஷமிட்டுச் சென்றவர்கள் எல்லாம் மடையர்கள் என்பது இப்போது புரிந்தது.

“திராவிடச் சோலையிலே
தீரர் வாழும் வேளையிலே
செந்தமிழை மேயவந்த
இந்தி என்ற எருமை மாடே!
முன்னம் போட்ட சூடு என்ன
மறந்ததோ உனக்கு?
என்றும் இந்தி ஏற்கமாட்டோம்
ஓடிப்போ வடக்கு!”

என்று மேடைதோறும் பாடிப் பாடி திராவிடக் கட்சியை வளர்த்த நாகூர் ஹனீபாவை எண்ணுகையில் எனக்கு பாவமாகத் தோன்றியது. தலைவர்கள் அவரை பகடைக்காயாய் பயன்படுத்திக் கொண்டது அவருக்கு இப்போதாவது புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை.

இங்கு வளைகுடா நாடுகளில் இந்தி தெரியாமல் தட்டுத் தடுமாறி மலையாளிகளுக்கு இணையாக ஈடுகொடுத்து முன்னேற முடியாமல் தவியாய்த் தவிக்கும் தமிழ்ச் சகோதர்களின் பின்னடைவுக்கு காரணம் இந்த தமிழினத் தலைவர்கள்தான் என்பது முற்றிலும் உண்மை. இவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் ‘இந்தி ஒழிக’ என்று கோஷம் போட்டு அலைந்தவர்கள் அல்லது அவர்களது வாரிசுகளாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமேயில்லை.

“உங்களிடம் “வைரத்தூறல்” நூலைக் கொடுத்து நாலு நல்ல வார்த்தைகள் எழுதுவீர்களே என்று பார்த்தால் இப்படியா எழுதுவது?” என்று எனது ஆத்ம நண்பர் கவிஞர் காதர் ஒலி கேட்டால் அவருக்கு என்ன பதில் சொல்வது என்று சீரியஸாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

 

Tags: ,