RSS

Tag Archives: சாருவைப்பற்றி

சாருவுக்கு என் பதில்


charu

அன்புசால் சாரு நிவேதிதா என்னும் ரவி அண்ணன் அவர்களுக்கு,

நாகூர் பற்றி நான் பெருமை பேசினால் அது மிகப் பெரிய ஃபாஸிஸத்தில் போய் முடியும்.  என்று எழுதி இருக்கிறீர்கள்.

மேற்கே
ரொமாண்டிசிஸம்
நாச்சுரலிஸம்
ரியலிஸம்
அப்பால்
இம்ப்ரஷனிஸம்
என் மனைவிக்கு
தக்காளி ரஸம்
 

என்று பசுவய்யா எழுதிய புதுக்கவிதைதான் சட்டென்று என் நினைவுக்கு வந்தது.

அண்ணாயிசம் போன்று ஃபாஸிஸம் என்றால் என்னவென்று நிறைய பேருக்கு புரியவே போவதில்லை.

நாகூர் பற்றி பெருமை பேசினால் அது எப்படி ஃபாஸிஸத்தில் (அதுவும் “மிகப் பெரிய” ஃபாஸிஸத்தில்) போய் முடியும்? அதை இந்த ட்யூப்லைட்டுக்கு சற்று விளக்க முடியுமா?

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் ஏனைய விஷயங்களைத் தீர்மானிக்கப்படும் கொள்கை ஃபாஸிஸம் என்பது என் கருத்து.

அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே ஃபாஸிஸம். முதலாம் உலக மகா யுத்தத்தின் போது இத்தாலியில் தோன்றிய ஃபாஸிஸத்தின் அடையாளமாக இத்தாலியின் முசோலினி மற்றும் ஜெர்மனியின் ஹிட்லரை உதாரணம் காட்ட முடியும்.

சாரி சாரு.  உங்களுடைய இந்த கருத்துடன் என்னால் ஒத்துப்போகவே முடியவில்லை.

நீங்கள் பிறந்த வளர்ந்த ஊரின் பெருமைகளை சொல்வதால் உங்களை ஃபாஸிஸ்ட் என்று சமுதாயம் முத்திரை குத்தி விடுமோ என்று பயந்து நடுங்குவது தெரிகிறது. ஊர் பெருமைகளைச் சொல்வது எப்படி ஃபாஸிஸம் ஆகும் என்று புரியாமல் விழிக்கிறேன் நான்.

உங்களை நாகூர்க்காரன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படவோ, வேதனைப்படவோ, துன்பப்படவோ,  துயரப்படவோ, துவண்டுபோகவோ வேண்டியதில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

உங்களுடைய கருத்துக்களோடு நான் மட்டும்தான் ஒத்துப்போக முடியவில்லையா அல்லது என்னைப்போன்று பலரும் முரண்பட்டு குழம்புகிறார்களா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

 “தமிழ் பேசும் பலரும் தமிழ்தான் உலகிலேயே சிறந்த மொழி என்கிறார்கள்.  நான் அவர்களிடம் அரபியும் உலகின் மிகச் சிறந்த மொழிகளில் ஒன்று என்றும், தமிழுக்கு எத்தனை பெருமைகள் உண்டோ அத்தனை பெருமையும் அரபிக்கு உண்டு என்றும் சொல்வது உண்டு.  சொல்வது மட்டும் இல்லை.  பல கட்டுரைகளில் அப்படி எழுதியிருக்கிறேன்”

என்று எழுதியிருக்கிறீர்கள்.

நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் நாகூர்க்காரர்கள் எல்லாம் அரபி மொழி பேசுபவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. நாகூர் ஏதோ அரேபிய பிரதேசத்தில் இருக்கிறது என்று தமிழ்நாட்டு பக்கமே இதுவரை எட்டிப்பார்த்திராத உங்கள் யு.எஸ்.வாசக அபிமானிகள் தவறாக புரிந்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

உலக மாந்தர்களுக்காக அருளப்பட்ட திருக்குர்ஆன் எனும் வேதம் அரபு மொழியில் இருப்பதினால் அதனைப் படித்து புரிந்துக் கொள்ளும் வண்ணம் இஸ்லாமியர்கள் அந்த மொழியை கூடுதலாக கற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

எனவே இஸ்லாமியர்கள் தமிழை வெறுக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாகாது. “நான்காம் தமிழ்சங்க நக்கீரர்” என்று போற்றப்படும் நாகூரைச் சேர்ந்த மகாவித்வான் குலாம் காதிறு நாவலர் மதுரையில் தமிழ் வளர்த்த வரலாறு உங்களுக்குத் தெரிந்ததுதானே?

“தமிழுக்கு அமுதென்று பேர்; அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றும் “பாண்டியர் ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்த பைந்தமிழ் அமுதமே நீ” என்றும் “தலைவாரி பூச்சூடி உன்னை; பாடசாலைக்கு போவென்று சொன்னால் உன் அன்னை” என்ற புரட்சிக் கவிஞனின் பாடலையும் “இன்பத்தமிழ் எங்கள் மொழியாகும்; இஸ்லாம் எங்கள் வழியாகும்” என்று வாழ்நாள் முழுதும் தொண்டைக் கிழிய பாடி இன்று பேசக்கூட முடியாமல் தடுமாறும் நாகூர் ஹனிபாவும் ‘உங்கள்’ ஊர்க்கார்தான் என்பதை மறந்து விடாதீர்கள் சாரு. தமிழ்மொழியை சீராட்டி பாராட்டி வளர்ந்த நாகூர்க்காரர்களின் பட்டியலை இட்டால் அது அனுமார் வாலென நீண்டு கொண்டே போகும்.

“காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தனிச்சிறப்புகள் உண்டு.. தமிழைப்போன்று அரபி மொழிக்கும் பெருமைகள் உண்டு என்றுதானே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்? தமிழை விட அரபுமொழிக்குத்தான் பெருமை என்று சொன்னால்தான் யாராவது முரண்பாடு கொள்வார்களேத் தவிர நீங்கள் சொன்ன கருத்துக்கு யாரும் ஆட்சேபனை செய்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.

தமிழ் மொழியைப் போன்று அரபி மொழியும் உலகத்தின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதை எல்லோரும் அறிவர்.. அரபி மொழியின் ஒரு சில சிறப்புகளை மட்டும் இங்கு நான் எடுத்து வைக்கிறேன்.:

தமிழ் இலக்கணத்தில் ஒருமை, பன்மை (Singular, Plural) தான் இருக்கிறது. அரபி மொழியில் ஒருமை, இருமை பன்மை (Singular, Dual, Plural) இம்மூன்றும் இருக்கிறன. அரபி மொழியில் சிங்கத்தைக் குறிப்பதற்கு முன்னூறுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் இருக்கின்றன. அதை விட ஆச்சரியம் தரக்கூடிய செய்தி என்ன தெரியுமா? ஒட்டகத்தைக் குறிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகள் அம்மொழியில் உள்ளன. அரபி மொழி எத்துணை சொல்வளம் பொருந்தியது என்பதற்கு இது ஒன்றே எடுத்துக்காட்டு.

அரபியில் உள்ள “அல்லாஹ்” என்ற சொற்பதத்திற்கு இணையாக வேறு எந்த மொழிகளிலும் வார்த்தைகள் கிடையாது. ஆங்கிலத்தில் “GOD” என்ற சொற்பதமும் பொருந்தி வராது. ஆணுக்கு “GOD” என்றும் பெண்ணுக்கு “GODDESS” என்றும் சொல்கிறார்கள்.  “அல்லாஹ்” என்ற சொல்லிற்கு பாலினம் (Gender) கிடையாது. தமிழில் கடவுள் என்ற சொல்லுக்கு “ஆண்கடவுள்” “பெண்கடவுள்” என்ற இரண்டு பொருள்களும் உண்டு. தெய்வம் என்ற வார்த்தையும் அப்படித்தான். ஆண் தெய்வம், பெண் தெய்வம் உண்டு. ஆண்டவன், இறைவன், கர்த்தர் இச்சொற்கள் யாவும் ஆணைத்தான் குறிக்கின்றன.

“இறைவன் உருவமில்லாதவன்; அவன் ஆணுமில்லை; பெண்ணுமில்லை; அலியுமில்லை” என்பதே இஸ்லாமியர்களின் நம்பிக்கை. பழந்தமிழரின் கடவுள் சித்தாந்தமும் இதுவாகத்தான் இருந்தது.

அரபி மொழியின் சிறப்பை நான் இங்கு எடுத்துரைத்திருப்பதால் எந்தத் தமிழரும் என்னை வெறுத்து ஒதுக்கி விலக்கி வைத்து விடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

எண் ஒலிப்பு, இறங்குமுக எண்கள், அளவைகள், பொன் நிறுத்தல், பண்டங்கள் நிறுத்தல், முகத்தல் அளவு, பெய்தல் அளவு போன்றவற்றிற்கு தமிழ் மொழி போன்று வேறு எந்த மொழிகளிலும் அத்தனை சொல்வளம் இல்லை என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். அரபி மொழியில் இதுபோன்று கிடையாது. செம்மொழியான தமிழ் மொழிக்கு இப்படி எத்தனையோ தனிச்சிறப்புகள் உண்டு. தமிழுக்கு ‘ழகரம்’ தனியொரு சிறப்பு. இப்படி நான் எழுதியதால் “நான் அரபி மொழிக்கு எதிரி” என்று யாரும் எனக்கு “ஃபத்வா” கொடுத்து விடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

பிறந்த ஊரைப்பற்றி எழுதினால் அது ஃபாஸிசத்தில் போய் முடியும் என்று நீங்கள் பயப்படுவது அர்த்தமற்றது சாரு.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? ‘ஏழாவது வானத்தில் பேசப்படும் மொழி நம் தமிழ்மொழிதான்’  என்கிறார் கவிக்கோ அவர் நேரடியாக அப்படிச் சொல்லவில்லைதான். பெரும்புலவர் கல்வத்து நாயகம் அப்படி சொன்னதாகக் கூறி பெருமை கொள்கிறார். உலகத்தின் முதல் மனிதனான ஆதாம் பேசிய மொழி தமிழ் மொழிதான் என்று கூறுகிறார். இக்கருத்து பெரும்பான்மையான முஸ்லீம்களுக்கு  உடன்பாடு இல்லை என்றபோதிலும் முஸ்லீம்கள் அவரைக் கொண்டாடத்தானே செய்கிறார்கள்?

 தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாரதி பாடியதே பொய் என்று எழுதியிருக்கிறேன்.

என்று சொல்லுகிறீர்கள். உண்மைதான் “சிந்துநதியின்மிசை நிலவினிலே” என்ற பாட்டில் கேரளப் பெண்களுடன் சேர்ந்து ஜாலியாக தோணியில் Outing சென்றுவிட்டு “சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம்” என்கிறான். தமிழில் பாட்டிசைக்க அவன் ஏன் விரும்பவில்லை என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. கர்னாடக இசையில் உள்ள தெலுங்கு கீர்த்தனைகள்தான் உயர்ந்தது என்று அவன் சொல்ல வருகிறானா?

ஏனென்றால் ஒவ்வொரு மொழிக்காரருக்கும் அவர் மொழி இனிதுதான்.  அதைப் புரிந்து கொள்ளாமல், அந்த சுதந்திரத்தை மாற்றானுக்குக் கொடுக்காமல் என் மொழி தான் இந்த உலகிலேயே சிறந்தது என்றும் என் மதம் தான் இந்த உலகிலேயே சிறந்தது என்றும் என் நாடுதான் இந்த உலகிலேயே சிறந்தது என்று பேசுவதும் ஃபாஸிசத்தில் கொண்டு போய் விடும்.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே என் கொள்கை.  எனக்கு எல்லா ஊருமே என் ஊர் தான்.  இந்தப் பூமியே இறைவனின் கொடை என்கிற போது நாகூர் மட்டுமே என் ஊர் என்று சொல்ல முடியுமா?

அகில உலக Celebrity ஆகிவிட்ட நீங்கள் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்று முழங்கினால்தான் உங்களை டெல்லிவாசிகளும் சென்னை வாசிகளும் மற்றும் பாரீஸ், அமெரிக்கா நாடுகளில் வசிக்கும் உங்கள் அபிமானிகள் உங்களை “நம்மவர்” என்று போற்றுவார்கள் என்று நினைக்கிறீர்களா? எல்லா ஊர்க்காரர்களும் உங்களுடைய புத்தகத்தை வாங்கி நீங்கள் பலனடைய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் நீங்கள் இப்படி பேச வேண்டியிருக்கிறது என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது.

நாகூரில் 20 ஆண்டு, தில்லியில் 12 ஆண்டு.  மீதியெல்லாம் சென்னை.  ஆனால் சென்னை என் ஊரே இல்லை. இந்த ஊர் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.  நாகூரும் தில்லியும் தான் நான் வளர்ந்த ஊர்கள்.

என்கிறீர்கள். நாகூரும் தில்லியும் ஒன்றாக முடியாது ரவி அண்ணா!  நீங்கள் எந்த ஊரில் சென்று தஞ்சம் அடைந்தாலும் (நாகூர் பாஷையில் சொல்ல வேண்டுமெனில்) உங்களை “வந்தாவரத்தான்”தான் என்றுதான் அந்த ஊர்க்காரர்கள் கருதுவார்கள். நீங்கள் குறிப்படும் கலீஃபா சார் போன்றவர்களிடம் உங்களை பற்றி யாராவது கேட்டால் “அட அஹலா? அஹ நம்ம ஊரு புள்ளையாச்சே” என்று அன்பொழுக பாசத்தோடு சொல்வார் என்பது மட்டும் நிச்சயம்.

நான்கூட கடந்த 36 வருடங்களாக பஹ்ரைன் மண்ணில்தான் வசித்து வருகிறேன். அதற்காக நான் பஹ்ரைனி என்று பீற்றிக் கொள்ள முடியுமா என்ன? East or West. Home is the Best  என்பதென்னவோ நூற்றுக்கு நூறு உண்மை.

ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி ஊர்க்குருவிதான். சென்னையும், டெல்லியும் நீங்கள் பணிநிமித்தமாக சென்று வசித்த இடங்களாக இருக்கலாம். அதற்காக நீங்கள் பிறந்த ஊரை சொல்லிக்கொள்ள கூச்சப்பட வேண்டியதில்லை.

இது போன்ற வாசகங்களை ஒருவர் அதன் சந்தர்ப்பத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும், அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர தமிழைத் திட்டி விட்டான், நாகூரைப் புறக்கணித்து விட்டான் என்று சொல்வது நியாயம் அல்ல. இன்னமும் என் சுவாசத்தில் நாகூர் எஜமான் கொடுத்த காற்று தான் ஓடிக் கொண்டிருக்கிறது.  இன்னமும் நான் தர்ஹாவின் குளுந்த மண்டபத்தில்தான் அமர்ந்திருக்கிறேன்.

உங்க கேரக்டரையே என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை சாரு. உங்களுடைய வார்த்தைகளிலேயே எத்தனை முரண்பாடுகள் என்பதைப் பாருங்கள். உங்களுடைய சுவாசமே நாகூர் எஜமான் கொடுத்த காற்று என்று கூறும் நீங்கள் முன்னொருமுறை

 “எனக்குப் பெரிதாக ஊர்ப்பாசம் கீர்ப்பாசமெல்லாம் கிடையாது. இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்து பொறுக்கிய இடங்களைப் பற்றிப் படிக்கும் போது தவிர்க்க முடியாமல் ஒரு ‘‘நாஸ்டால்ஜிக்‘ உணர்வு வந்து குந்திக் கொள்கிறது”

என்று எழுதியது ஏனென்று புரியாமல் விழிபிதுங்குகிறேன்.

அவருடைய கவர்ச்சியான சிரிப்பை யாரால் மறக்க முடியும்?  எப்போதும் ஒரு மனிதனால் சிரித்துக் கொண்டே இருக்க முடியுமா?  கலிஃபா சார் அதற்கு உதாரணம்.  சினீ சண்முகம் சார் மற்றவர்களை சிரிக்க வைப்பார்.

நீங்கள் பழகி மகிழ்ந்த கலீஃபா சார், சீனி சண்முகம் சார், பரீது காக்கா, பி.ஏ.காக்கா,  இவர்களும் நாகூர் பெருமையின் அங்கம்தானே சாரு?

உங்கள் இளம்பிராயத்தில் நீங்கள் பழகியவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்பது சத்தியமாக உண்மை. அதை உரக்கச் சொல்வதினால் எழுத்துலகம் உங்களை ஓரங்கட்டி விடும் என்ற ஒரு தவறான கண்ணோட்டதில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

நாகூரைச் சேர்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் பேச்சு வழக்கிலும், உடை மற்றும் உணவு முறையிலும் ஆசார பிராமணர் போன்றே வாழ்ந்தவர். அவர் சுத்த சைவம். அவருடைய நண்பர்கள் யாவரும் பிராமணர்கள். ஆய்வு செய்தது அனைத்தும் இராமரைப் பற்றிதான். தலைவராக இருந்தது கம்பன் கழகத்தில். அதற்காக முஸ்லீம்கள் அவரை ஒதுக்கி வைத்து விட்டார்களா என்ன?.

“வடுகப்பட்டி முதல் வால்காவரை” என்று வைரமுத்து நூலெழுதினார். கவிஞர் தன் ஊர்ப்பெருமையை பேசியதற்காக அவரை யாரும் ஃபாஸிஸ்ட் என்று வசைபாடவில்லையே?.

இளையராஜா சகோதர்கள் தங்களை  “பண்ணைபுரத்து சகோதரர்கள்” என்று அழைக்கப்படுவதை பெருமையாக கருதினார்கள். அதற்காக அவர்களை யாரும் ஃபாஸிஸ்ட் என்று முத்திரை குத்தவில்லையே?

நடிகர் பிரபு தன்னை “சூரக்கோட்டை சிங்கக்குட்டி” என்று சொல்லி மார்தட்டிக் கொண்டார். .

சீர்காழி சிவ சிதம்பரம் தன் முன்னோர்கள் நாகூரிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறார். நீங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும் சாரு?

பின் குறிப்பு:

சொல்ல மறந்து விட்டேனே. உங்களுடைய “புதிய எக்ஸைல்”  நாவல் பாதிவிலைக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு விற்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன், வாழ்த்துக்கள். அதில் நாகூரின் அஞ்சுவகை சோறையும். நாகூருக்கும் இசைக்கும்  இடையே உள்ள தொடர்பினையும் எழுதியிருக்கிறீர்கள்  என்று அறிந்தேன், மிக்க சந்தோஷம்.

நாகூரில் நீங்கள் கண்டு களித்து உணர்ந்த அனுபவங்களை எல்லாம் எழுதி காசு பார்க்கத் தெரிந்த உங்களுக்கு நாகூரை பற்றி எழுதினால் மட்டும் ஃபாஸிஸ்ட் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து நடுங்குவது ஏன் சாரு.?

– அப்துல் கையூம் 

சாருவைப்பற்றி

சாரு நிவேதிதாவும் நோஸ்டால்ஜியாவும்

 

இன்று முகநூலில் நண்பர் சுரேஷ் கண்ணன் பகிர்ந்த ஜோக் இது:

“ஏங்க புதுசா எக்சல் -னு வந்திருக்காமே?” என்றார் இல்லாள்.

‘இந்த இலக்கிய நியூஸ் ரமணிசந்திர இல்லத்தரசிகள் வரை பரவிடுச்சா, தேவலையே..’ என்று நினைத்தபடி

“ஆமாம்.. ஐனூறு ரூபாயாம்.. என்ன இப்ப?” என்றேன்.

“ரெண்டு ரூபா பாக்கெட்டுல கூட கிடைக்குதாமே?” என்றார்.

சற்று அதிர்ச்சியாகி “ரெண்டு ரூபாய்க்கா.. ? ஒவ்வொரு அத்தியாயமாவா விப்பாங்க?” என்றேன்..

“ஹலோ.. நான் சொல்றது துணி துவைக்கிற சர்ப் எக்சல் பத்தி.. நீங்க எதைச் சொல்லித் தொலைக்கறீங்க?” என்று சீறின குரலில் பதில் வந்ததும்தான் தெளிவான நிலைக்கு வந்து பூமியை அடைந்தேன்.

 

Tags: , , ,