RSS

Tag Archives: சித்தி ஜுனைதா பேகம்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 6


ரவீந்தர் காப்பியடித்தாரா?

ரவீந்தர்

ரவீந்தர் இளமையிலும் முதுமையிலும்

“ரவீந்தர் சுட்டாரா?” என்றுதான் இப்பதிவுக்கு தலைப்பு கொடுக்கலாம் என்றிருந்தேன். “இது என்ன புதுக்கதையாக இருக்கிறது? எம்.ஆர்.ராதாதானே சுட்டார்? என்று வாசகர்கள் கூறுவார்களே என்று பயந்து நான் தலைப்பை மாற்றிவிட்டேன்.

“இந்தப் பதிவில், உள்ளதை உள்ளபடி எழுதப்போகிறேன்” என்று என் நண்பரிடம் மனம் திறந்தபோது  “தேவையா இது? ஏன் ஊர்வம்பை விலைக்கு வாங்குறீங்க?” இப்ப உங்க பேச்சு என்ன எடுபடவா போவுது” என்று முன்னெச்சரிக்கை வேறு விடுத்தார்.

“இதனால் சிலருடைய மனவருத்தத்திற்கு நான் ஆளாகக் கூடும்” என்று இதயத்தின் மூலையில் ‘பட்சி’ அமர்ந்து குறி சொன்னாலும், “CALL  A SPADE A SPADE” என்று என் மனசாட்சி தைரியமூட்டியது.

நண்பர் ஆபிதீனின் கதையைச் ‘சுட்டு’ பெரிய ஆளாகி விட்ட சாரு நிவேதிதா போல, சித்தி ஜுனைதா பேகத்தின் கதையைச் ‘சுட்டு’ பெரிய ஆளாகி விட்டாரே ரவீந்தர் என்று அவர்மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

தீவிரமாக ஆராய்ந்து பார்த்ததில் அது “தவறான புரிதல்” என்ற உண்மை தெரிய வந்தது.

பிரபல எழுத்தாளர்கள் உட்பட ஏகப்பட்ட இணையதள நண்பர்களும் ரவீந்தரை தவறான கண்ணோட்டத்தில்தான் இதுவரை பார்த்து வருகிறார்கள் என்பது மட்டும் அப்பட்டமாக விளங்குகிறது.  “ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம். ஆனால் அநியாயமாக ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது” என்று சொல்வார்கள். செய்யாத ஒரு குற்றத்திற்காக ரவீந்தரை குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து பழி சுமத்துவதை என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.

ரவீந்தர் மற்றும் சித்தி ஜுனைதா – இருவரும் நாகூரைச் சேர்ந்தவர்கள். கெளரவமான குடும்பத்தில் பிறந்தவர்கள். பண்பட்ட பாரம்பரியம் கொண்டவர்கள்.  தங்கள் எழுத்துக்கள் மூலம் பிறந்த ஊருக்கு பெருமைத் தேடி தந்தவர்கள். தமிழ் எழுத்துலகில் ஆளுமை கொண்டவர்கள். நல்ல படைப்பாளிகள். கற்பனைத் திறன் கொண்டவர்கள். சான்றோர்களின் பாராட்டுதல்களைப் பெற்றவர்கள். ஊர்க்காரன் என்ற முறையில் இவர்களிருவரும் என் இருகண்களைப் போன்றவர்கள். இதில் யாரை நான் குறை கூறுவது?

ரவீந்தருக்கு வக்காலத்து வாங்குவதோ அல்லது சித்தி ஜுனைதாவை குறைத்து மதிப்பிடுவதோ என் பதிவின் நோக்கமல்ல.

ரவீந்தர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இதுதான்:

“சித்தி ஜுனைதா பேகம் எழுதிய “காதலா? கடமையா?” என்ற நாவலை காப்பியடித்து “நாடோடி மன்னன்” படத்திற்கு ரவீந்தர் பயன்படுத்திக் கொண்டார்” என்பதுதான் குற்றச்சாட்டு.

இது உண்மையா? எத்தனையோ கதைகள், நூல்கள்,  நாடகங்கள் ரவீந்தர் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்களே. இன்னொருவரின் கதையை காப்பியடித்து பெயர் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் அவருக்கு என்ன வந்தது? இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் ஆயிற்றே? அப்படிச் செய்தால் ஒருநாள் இந்த உண்மை வெளிவராமலா போகும்? அப்படி தெரியவந்தால் அவருடைய பெயருக்கு அது களங்கமல்லவா? என்றெல்லாம் வினாக்கணைகள் நம் மனதில் சுனாமி அலைகளாய் பாய்கின்றன.

இந்த குற்றச்சாட்டு எப்போது எழுந்தது?  எப்போது இது விஸ்வரூபம் எடுத்து பரவியது என்பதை சற்று நிதானமாக அலசிப் பார்த்தால் “கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாய்” பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.

திரையுலகில் அரிய சாதனை படைத்த ரவீந்தர் என்ற ஒரு மாமனிதர் உயிருடன் இருக்கிறார். தேனாம்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார் என்ற விஷயமே 2002-ஆம் ஆண்டில்தான் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. அதுவரையில் அந்த பெரியவர் ஊடகங்களால் கண்டுக்கொள்ளப் படாத ஒரு மனிதராகத்தான் தன் இறுதிநாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார்.

ரவீந்தரின் இருப்பிடத்தைக் கேள்வியுற்று இரண்டு இஸ்லாமிய எழுத்தாளர்கள் அவரை பேட்டி காணச் செல்கிறார்கள். அதில் ஒருவர் முன்னாள் புதுக்கல்லூரி பேராசிரியர் முனைவர் ஹ.மு.நத்தர்சா. மற்றொருவர் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது. இருவருமே நாடறிந்த நல்லவர்கள், சமுதாயக் காவலர்கள்.

முனைவர் ஹ.மு.நத்தர்சா 2002-ஆம் ஆண்டு ‘தினமணி’ ஈகைத்திருநாள் மலரில் கட்டுரை வரைகிறார். அது ரவீந்தரைப் பற்றியது. அதே 2002-ஆம் ஆண்டு ‘தினகரன்’ இதழில் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது கட்டுரை வரைகிறார். அது  சித்தி ஜுனைதாவைப் பற்றியது.

முனைவர் ஹ.மு.நத்தர்சா தனது கட்டுரையில் ”1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் “நாடோடி மன்னன்தான் முதன் முதலில் ரவீந்தரின் பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது” என்ற விவரத்தை அச்சில் பதிக்கிறார்.

ஆனால் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது அவர்களோ

“நாடோடி மன்னனுக்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவர் ரவீந்தர் (இயற்பெயர் : ஹாஜா முஹைதீன்). இவரும் நாகூரைச் சேர்ந்தவர். 74 வயதான இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் நேரில் சென்று ‘காதலா கடமையா’ நாவல் தாங்கள் வசனம் எழுதிய நாடோடி மன்னன் படக்கதையுடன் ஒத்துள்ளதே என்று கேட்டேன். அதை அவர் ஒப்புக் கொண்டார்”

என்று வாக்கு மூலம் அளிக்கிறார். இந்த வரிகள் சர்ச்சைகளுக்கு “பிள்ளையார் சுழி” இடுகின்றன.

ரவீந்தர் அப்போதிருந்த தள்ளாத நிலையை முனைவர் ஹ.மு.நத்தர்சாவின் கட்டுரை சித்தரித்துக் காண்பிக்கின்றது. அவருடைய வரிகளை அப்படியே இங்கே தருகிறேன்.

“நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.”

நோயின் கடுமையான தாக்குதலால் அவதியுற்றிருந்த ரவீந்தர் தெளிவாக பேசக்கூடிய நிலையில் இல்லை என்பதை ஹ.மு.நத்தர்சாவுடைய வருணனையிலிருந்து நம்மால் நன்கு அறிய முடிகின்றது .வார்த்தைகள் ரவீந்தருக்கு தடுமாறுகின்றன. நினைத்ததை அவரால் பேச முடியவில்லை என்பது புரிகிறது.

“ஒப்புக்கொண்டார்” என்று உறுதியாகக் கூறும் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது ரவீந்தரிடம் அவர் கேட்ட கேள்விக்கு “ஆமாம்” என்று தலையாட்டினாரா அல்லது சைகை மூலம் ஒப்புதல் காண்பித்தாரா என்ற விவரம் அக்கட்டுரையில் தென்படவில்லை.

முனைவர் ஹ.மு.நத்தர்சா எழுதிய கட்டுரையில் “அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார்” என்று எழுதுகிறார்.

அதே 2002-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி சித்தி ஜுனைதாவின் உறவினரான நாகூர் ரூமி “ஆச்சிமா ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் கீழ்க்கண்ட தகவலை தன் கட்டுரையில் வடிக்கிறார்.

“இந்த நாவல் (காதலா? கடமையா?) ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. திரைப்படத்துறையில் நாகூரைச் சேர்ந்த வசனகர்த்தா ரவீந்தர் என்று ஒருவர் இருந்தார். இவரும் மாமா தூயவனிடம் இணைந்து பணியாற்றியவர்தான். எம்ஜியாரின் மகாதேவி படத்துக்கு வசனமெழுதியவர் இவர்தான். “மணந்தால் மகாதேவி இல்லையென்றால் மரணதேவி” என்ற புகழ்பெற்ற வசனம் இவருடையதுதான். எம்ஜியாரின் “நாடோடி மன்னன்” படத்தில் ஒவ்வொரு சீக்வென்சும் அப்படியே “காதலா? கடமையா?” நாவலில் உள்ளதுதான் என்று சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் நண்பர் என்னிடம் சொன்னார். படத்தை மறுபடி சிடியில் பார்த்ததில் அது உண்மை என்று தெரிந்தது. ரவிந்தர் ஆச்சிமாவின் நாவலிலிருந்து “சுட்டு”விட்டார் என அவர் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. படம் அப்படித்தான் உள்ளது. அதுதான் உண்மை என்று சொல்ல முடியாவிட்டாலும் நாவல் ஏற்படுத்திய தாக்கத்திற்கு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.”

இப்படியாக எழுதுகிறார் நாகூர் ரூமி. “பேராசிரியர் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்றும் “அதுதான் உண்மை என்று சொல்ல முடியாவிட்டாலும்” என்று அவர் இழுக்கும்போது ஒரு யூகமாகத்தான் அவர் இதைச் சொல்லுகிறார் என்பதை தெளிவாக உணர முடிகிறது.

ஆனால் அழுத்தமாக ரவீந்தர் மீது எந்த குற்றச்சாட்டையும் அவர் வைக்கவில்லை.  வார்த்தைகளை கவனமாக கையாண்டிருக்கிறார். “உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது” என்று சொன்னால் “அது ஒருக்கால் பொய்யாகவும் இருக்கக்கூடும்” என்று அர்த்தமாகிறது அல்லவா?

அதே 2002-ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த நா.கண்ணன் என்பவர் ஷார்ஜா தமிழ் மன்றத்தில் பேசச் சென்ற போது சடையன் சாபு வாயிலாக சித்தி ஜுனைதாவின் நூலைப்பற்றி கேள்வியுற்று அதை முதுசொம் கூடத்தில் ஆவணப்படுத்த வேண்டி இலத்திரன் பதிவுகளாக்கி கணினி சார்ந்த மின் உலகில் சாசுவதமாக்க நாகூர் பயணமாகிறார். சொல்லரசு ஜாபர் முஹ்யித்தீன் துணைகொண்டு சித்தி ஜுனைதாவை சந்தித்து தகவல் திரட்டுகிறார்.  சித்தி ஜுனைதாவின் எழுத்தாற்றல் பரவலாகத் தெரிய வருகிறது.  நா.கண்ணனின் பதிவேட்டில் “நாடோடி மன்னன்” விவகாரம் எதுவும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

நாகூர் ரூமி எழுதுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது 1999-ஆம் ஆண்டு முஸ்லிம் முரசு பொன்விழா மலருக்காக சித்தி ஜுனைதாவைச் சந்தித்து அட்டகாசமான ஒரு பேட்டி ஒன்றை சொல்லரசு ஜாபர் முஹ்யித்தீன் அச்சிலேற்றுகிறார். அதிலும் “நாடோடி மன்னன்” விவகாரம் பற்றிய ஆதாரமற்ற தகவல்கள் எதுவும் கிடையாது.

2002-ல் எழுப்பபட்ட  “ரவீந்தர் காப்பியடித்தார்” என்ற  ஊர்ஜிதமற்ற செய்தி ‘எபோலா’ தீநுண்ம நோய் போன்று மெல்ல மெல்ல பரவி வருகிறது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறும் ரவீந்தர் இதற்கெல்லாம் மறுப்பு தெரிவிக்கும் ஆரோக்கிய நிலையில் இல்லை. இப்படிப்பட்ட சர்ச்சைகள் அவரைச் சுற்றி நடந்துக்கொண்டு இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு 4.11.2004 அன்று ரவீந்தருடைய உயிர் பிரிகிறது.

இணைய தளத்தில் பதியப்படும் ஆவணங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் “பூமராங்”காக திரும்பத் திரும்ப நம்மைச் சுற்றி வரும் என்பது நாமெல்லோரும் அறிந்ததே.   சுவற்றில் அடித்த பந்தாய் நம் பார்வைக்கே ஒருநாள் திரும்ப வரும்.

 2007-ஆம் ஆண்டு அ.வெண்ணிலா என்பவர்  “உயிர் எழுத்தில்”

“கற்பனையை மையமாகக் கொண்ட இச்சரித்திரக் கதையே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் என்பதும் சுவாரசியமான தகவல்.” என்றெழுதி வாசகர்களின் சந்தேகப் பயிருக்கு யூரியா உரமேற்றுகிறார். 

மறுபடியும் 13.11.2011 தேதியன்று “தினமலர்” பத்திரிக்கையில் “தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்” என்ற தலைப்பில் சித்தி ஜுனைதாவைப் புகழ்ந்து பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஜே.எம்.சாலி கட்டுரை தீட்டுகையில் டாக்டர் கம்பம் சாஹீல் ஹமீது தந்த கீழ்கண்ட தகவலையும் சேர்த்துக் கொள்கிறார்.

“இந்த நாவலின் கதைச் சுருக்கமே எம்.ஜி.ஆர்., நடித்த, “நாடோடி மன்னன்’ திரைப்படத்திற்கு மூலக் கதையாக அமைந்தது என்று கூறப்பட்டது. அதற்கு கதை, வசனம் எழுதிய ரவீந்தர் இதை ஒப்புக் கொண்டார். நாகூரைச் சேர்ந்த ரவீந்தரின் இயற் பெயர் காஜா முகைதீன்”.

கட்டுரையை வெளியிட்ட ‘தினமலர்’ பத்திரிக்கை தன்னை “உண்மையின் உரைகல்” என்று வேறு பிரகடனப் படுத்திக் கொள்கிறது. கட்டுரை தீட்டிய ஜே.எம்.சாலி  எத்தனையோ படைப்பாளிகளை தமிழுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். சமுதாயத்தின் நன்மதிப்பை பெற்றவர். நம்பகரமான மூத்த பத்திரிக்கையாளர் வேறு.

மறுபடியும் இந்த காப்பியடித்த விவகாரம் “விஸ்வரூபம் -2” ஆகி அலாவுத்தீன் பூதமாக வெளிக்கிளம்புகிறது ‘வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால்’ சொல்லவும் வேண்டுமோ? குழுமங்களிலும், வலைத்தளங்களிலும், வலைப்பூக்களிலும்  சூடு பறக்கும் விவாதப் பொருளாக இது மாறுகிறது.

திரும்ப திரும்பச் சொன்னால் பொய்க்கூட உண்மையாகி விடும் என்பது ‘கோயபல்ஸ் தியரி’. நாமே உண்மைக்கும் புறம்பான ஒரு விஷயத்தை யாரிடமாவது பரப்பி விட்டிருப்போம். அதே செய்தி சுற்றிச் சுற்றி நம்மிடம் பிறிதொரு நாள் நம் காதில் விழும் போது நாமே குழம்பிப் போய் விடுவோம். “நெருப்பில்லாமல் புகையாதே! ஒருக்கால் இது உண்மையாகவே இருக்குமோ?” என்று நம்மையே சந்தேகிக்க வைத்து விடும். அதுவும் செய்தியைச் சொன்னவர் நம்பகரமான ஆளாக இருந்து விட்டால் போதும். நாம் கேள்விப்பட்டது உண்மைதான் என்ற அசையா முடிவுக்கு வந்துவிடுவோம்.

ரவீந்தர் விஷயத்தில் இதுதான் நடந்துள்ளது. பிரச்சினை இதோடு முற்றுப் பெறவில்லை.

அதற்கு அடுத்த ஆண்டு 9.1.2012 அன்று கீரனூர் ஜாகிர் ராஜா தனது  வலைப்பதிவில் சித்தி ஜுனைதாவைப் பற்றி ஒரு கட்டுரை பதிவிடுகிறார். இவரும் நாடறிந்த எழுத்தாளர். ‘கருத்த ராவுத்தர்’ என்ற குறுநாவல் எழுதி வாசகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான்

இப்படியாக ஆளாளுக்கு யூகத்தின் அடிப்படையிலேயே கிரகித்து எழுதி, எழுதி ரவீந்தரை ஒருவழியாக “எழுத்துலகத் திருடனாக” உருவகப் படுத்தி விடுகிறார்கள்.

ஆனால் ஒரே ஒருவர் மட்டும்தான் இதிலுள்ள சூட்சமத்தை லேசாக கோடிட்டுக் காட்டுகிறார். அவர் வேறு யாருமல்ல “வலைப்பூ தாத்தா” நாகூர் ஆபிதீன். ( இவரை நான் “தாத்தா” என்று அழைப்பது இவருடைய வயதினால் மட்டுமல்ல. ‘கல்தோன்றா மண்தோன்றா காலத்திலிருந்தே’ வலைப்பூ தொடங்கி தினத்தந்தி கன்னித்தீவில் வரும் ‘உள்ளதை உள்ளபடி காட்டும்  மாயக்கண்ணாடி’ போல எதையும் பட்டவர்த்தனமாக கூறி எதிரிகளை எளிதில் சம்பாதித்துக் கொள்பவர் என்பதால்.)

“ஒரு ரகஸ்யம், இஸ்லாமிய இலக்கியவாதிகளிடம் சொல்லிவிட வேண்டாம், ‘காதலா கடமையா?’ ஒரு ஆங்கில நாவலின் தழுவல்தான் என்பார் புதுமைப்பித்தன்!” என்று இந்த சர்ச்சைகளுக்கு எதிர்மறை கருத்தை முன்வைக்கிறார்.

“கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற கூற்றுக்கிணங்க ஒருவர் கூட  இது ஆதாரபூர்வமான செய்திதானா? இதைச் சொன்னது யார்? எதனை அடிப்படையாகக் கொண்டு கூறுகிறார்கள்? என்று சற்றும் ஆராய்ந்துப் பார்க்கவில்லை. ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்ற ரீதியில் பேசினார்கள்.

பிரச்சினை இப்பொழுதாவது முற்றுபெற்றதா என்று கேட்டால் இனிமேல்தான் அது நாகையில் கிளம்பி ஆந்திராவை நோக்கிச் செல்லும் புயல் போல இன்னும் வலுவாகிப் போகிறது.

“அறியப்படாத தமிழுலகம்” என்ற பெயரில் பா இளமாறன், ஐ சிவகுமார், கோ கணேஷ் ஆகிய மூவர் நூலொன்றை எழுதுகிறார்கள் அதில் கீழ்க்கண்ட தகவல்களை அச்சில் ஏற்றுகிறார்கள்.

‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதைப்போல “நாடோடி மன்னன்” தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையை கிரகித்துக் கொள்ள முடிகிறது.

என்ற ‘ஹிரோஷிமா’ குண்டை ஊரறிய போடுகிறார்கள்.

“நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத்தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன”

என்பது அவர்களின் கொலம்பஸ் கண்டுபிடிப்பாக இருக்கிறது.  “ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கிய கதை” நம் ஞாபகத்திற்கு வருகிறது. இதற்குப்பிறகு அம்மூவர் இன்னொரு கேள்விக்குறியை  நம்முன் நாட்டுகின்றனர்.

“பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில் ஒரு பெண்ணாக இருந்து அந்தக் கால கட்டத்தில் எதிர்கொள்ளவேண்டிய சங்கடங்கள் பிரச்சனைகள் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம்”

என்று முடிவுக்கு அவர்களே வந்துவிடுகிறார்கள். ‘கேள்வியும் நானே! பதிலும் நானே!” என்ற பாணியில் அவர்களே வினா தொடுத்து அதற்கு அவர்களே பதிலும் உரைத்து விமோசனம் அடைந்து விடுகிறார்கள்

“நாடோடி மன்னன்” படம் வெளிவந்த ஆண்டு 1958. சித்தி ஜுனைதா நம்மை விட்டு மறைந்த ஆண்டு 1998. ஆச்சிமாவின் கதையைத் திருடி ரவீந்தர் “நாடோடி மன்ன”னில் பயன்படுத்தி இருந்தால் இந்த 40 ஆண்டு கால இடைவெளியில் இந்த விவரம் அவர்களின் கவனத்துக்கு வராமலா இருந்திருக்கும்? தன் இறுதிக்காலம்வரை பத்திரிக்கையும் கையுமாக இருந்து உலக நடப்பை அறிந்து வந்த ஒரு முற்போக்கு பெண்மணிக்கு இதுகூட தெரியமலா இருந்திருக்கும்? தன் கதையை இன்னொருத்தர் திருடிவிட்டார் என்று தெரிந்தால் அவரிடமிருந்து எதிர்வினை இல்லாமலா போகும்?

இத்தனை காலம் அவர்களுக்கு வேண்டிய ஒருத்தரிடமாவது தன்னுடைய ஆதங்கத்தை பகிர்ந்திடாமலா இருந்திருப்பார்கள்? இந்த நாற்பாதாண்டு கால இடைவெளியில் ரவீந்தர் காப்பியடித்த இந்த விவகாரம் எப்படியாவது கசிந்திருக்குமல்லவா?

நாகூர் என்ற ஊர் இருந்தது தமிழ்நாட்டில்தானே? செவ்வாய் கிரகத்தில் அல்லவே?

தன்னுடைய “காதலா? கடமையா?”  நாவலை காப்பியடித்து ரவீந்தர் “நாடோடி மன்ன”னில் பயன்படுத்திக் கொண்டார் என்று தன் வாழ்நாளில் ஒருமுறைகூட யாரிடமும் அந்த மங்கையர்க்கரசி சொல்லவில்லையே?

அதேபோன்று ரவீ’ந்தர் தன் வாழ்நாளில் ஒருவரிடம் கூட” சித்தி ஜுனைதாவின் நாவலைத் தழுவியதுதான் ‘நாடோடிமன்னன்’ கதை” என்று ஒருபோதும் பிரகடனப் படுத்தியது கிடையாதே?.

பிறகு ஏன் இந்த ஆதாரமற்ற அவதூறு? வெறும் யூகத்தை மட்டும் அடிப்படையாக வைத்து ஏன் ரவீந்தர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும்?

“அறியப்படாத தமிழுலகம்” நூலை  எழுதிய அம்மூவர் மேலும் மேலும் கேள்விகள் கேட்டு அவர்களுடைய கருத்தை நம்மிடம்  வலுக்கட்டாயமாக திணித்து  நம்மை நம்ப வைக்க முயலுகிறார்கள். இதோ படியுங்கள் அவர்களின் கூற்றை:

“மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற ரவீந்தர் நாகூரை சேர்ந்தவர் என்பதும் ஜுனைதா பேகம் இது விஷயத்தில் மெளனம் காத்ததற்கான காரணம் என்றும் ஊகிக்க முடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத புதிராக நீடிக்கிறது”

என்று ராம்ஜெத்மாலானியின் வாதத்தைப்போன்று கிறுக்கு கேள்விகள் மன்னிக்கவும் குறுக்கு கேள்விகள் கேட்டு நம்மை திக்குமுக்காடவைத்து நம்மை நம்பச் சொல்கிறார்கள்.  கதையைத் திருடியவர் ஒரே ஊர்க்காரராக இருந்து விட்டால் எழுதியவர் தன் தார்மீக உரிமையை விட்டுக் கொடுத்து விடுவார் என்ற ‘லாஜிக்’ பொருந்தவில்லையே?

நான் முன்பே சொன்னது போன்று 1958 முதல் 1998 வரை ‘நாடோடி மன்னன்’ என்ற திரைப்படக்கதை  அவருடையதுதான்  என்ற விவரத்தை யாருமே சித்தி ஜுனைதாவின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என்ற வாதம் நம்பும்படியாக இல்லை. ‘கேப்பையிலே நெய் வடியுது’ என்றால் கேட்கின்ற நாம் யோசிக்க வேண்டாமா?

விக்கிபீடியாவில் சித்தி ஜுனைதாவைப்பற்றிய விவரங்களை பதிவேற்றிய சந்திரவதனா என்ற பெண்மணி “சித்தி ஜுனைதாவும் நாடோடி மன்னன்களும்” என்ற தலைப்பில் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது புனைந்த சுட்டியை வெளி இணைப்பாகச் சேர்க்க, அது எல்லோர் பார்வையிலும் படும்படியான நிரந்தர ஆவணமாக இணையதளத்தில் பதிவாகி விட்டது. யூகங்களின் அடிப்படையில் தரப்பட்ட விவகாரங்கள் நாளடைவில் எப்படி ஓர் அத்தாட்சி பிரமாணமாக ஆகிவிடுகிறது என்பதற்கு இது ஒன்றே நல்ல எடுத்துக்காட்டு. 

ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. பன்மொழியாளர்கள் பனிரெண்டு பேர்கள் ஒன்றுகூடி  சோதனை ஒன்றை நடத்தினார்கள். வட்டமாக அமர்ந்துக்கொண்டு ஒரு காகிதத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட சொற்றொடரை அடுத்தவர் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கவேண்டும் அதனையடுத்து அச்சொற்றொடரை ஸ்பானீஷ், ஜெர்மன், என்று ஒவ்வொரு மொழியாக மொழிபெயர்த்தபின் கடைசியாக உட்கார்ந்திருப்பவர் அதை மீண்டும் ஆங்கில மொழியிலேயே மொழியாக்கம் செய்ய வேண்டும். இறுதியில் அந்த காகிதத்தை வாங்கிப் பார்த்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் முதலில் ஆங்கிலத்தில்  எழுதப்பட்ட வாசகத்திற்கும் இறுதியாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட வாசகத்திற்கும் இம்மியளவும் தொடர்பில்லை. அதற்கு எதிர்மறையான கருத்து எழுதப்பட்டிருந்தது.

ரவீந்தர் விஷயத்திலும் இதுதான் நடந்துள்ளது. செய்யாத குற்றத்திற்காக அவர் ‘சிலுவை’யில் அறையப்பட்டிருக்கிறார். அனுமானத்தின் அடிப்படையிலேயே ஆளாளுக்கு அவரை விமர்சித்துள்ளார்கள். வெறும் யூகங்களை வைத்தே அவர் மீது பழிசுமத்தி இருக்கிறார்கள். உண்மை எது, பொய் எது, என்று ஆராயாமலேயே அவர் பெயருக்கு களங்கம் சுமத்திருக்கிறார்கள். “தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆகி” தனிமனிதன் ஒருவனின் தன்மானத்திற்கும் கெளரவத்திற்கும் பங்கம் விளைவித்திருக்கிறார்கள். இது அவருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.

டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது அவர்களை குறை கூறுவதற்காக நான் இதனை இங்கே எழுதவில்லை. அவர் “தினகரன்”  இதழில் “காதலா? கடமையா?” நாவல் மற்றும் “நாடோடி மன்னன்” படக்கதை  இவையிரண்டிற்கும் குமுதத்தில் வரும் “ஆறு வித்தியாசங்களை கண்டு பிடி” என்ற ரீதியில் செய்த ஒப்பீடு இந்த யூக யாகத்திற்கு சாம்பிராணியை அள்ளி வீசி இருக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

“இந்த நாவலை (காதலா? கடமையா?”)  படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1958-ல் தயாரித்து இயக்கி நடித்த “நாடோடி மன்னன்” திரைப்படக் கதை “காதலா? கடமையா?”  நாவலின் கதையோடு ஒத்திருந்ததுதான்”

‘காதலா கடமையா?’ நாவலின் இந்தக் கதைச் சுருக்கம்தான் நாடோடி மன்னனுக்கு அடிப்படைக் கதையாக அமைந்திருந்ததை காண முடிந்தது

என்றெல்லாம் சந்தேகத்தைக் கிளப்புகிறார் அந்த எழுத்தாளர். தன் வாதத்திற்கு பக்கபலமாக சில ஒப்பீடுகளை  டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது நடத்துகிறார்   ‘தினகரன்’ பத்திரிக்கையில் அவர் செய்த ஒப்பீடு இதோ உங்கள் கனிவான கவனத்திற்கு :

‘காதலா கடமையா?’ நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் :

1.  18 வயது முதல் 45 வயதுக்குள் புத்தகப் பயிற்சி அளித்து கல்வியில் ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.
2. வைத்திய வசதிகள்
3. பயிர்த்தொழில், குடிசைத் தொழில் பெருக்குதல்
4. பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல். உயர் கல்விச்சாலையும் அமைத்தல். அனாதை விடுதி, தனி மருத்துவமனை அமைத்தல்.
5. ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க வசதி.
6. ஏழை பணக்காரர் வேற்றுமையை நீக்குதல்

இதே கருத்துக்கள்  நாடோடி மன்னன் திரைப்படத்தில்  இளவரசனாக நடிப்பவன் போடும் சட்டமாகும்.

1. ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்குதல்
2. பயிர்த்தொழில் செய்தல்
3. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்களைக் கட்டுதல்
5. கல்வி வைத்திய வசதி ஏற்படுத்துதல்
6. வாழ்விழந்த பெண்களுக்காக செலவிடுதல், மருத்துவமனை அமைத்தல்
7. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி ஏழை பணக்காரர் வேறுபாடு நீக்குதல்
8. வயோதிகர், கூன், குருடு, முடம் போன்றோர்க்கு உதவி செய்தல்
9. கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புச் சலுகை
10. உழுபவனுக்கே நிலம் சொந்தம்
11. கற்பழித்தால் தூக்கு தண்டனை
…. என்று இடம் பெற்றுள்ளன.

இந்த ஒப்பீட்டை பட்டியலிட்ட அவர்  “காதலா கடமையா?’ நாவலின் சமுதாய கருத்துக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த காரணத்தால் நாடோடி மன்னனில் அதே கருத்துக்களுடன் சில புதிய சிந்தனைகளையும் சேர்த்து ரவீந்தர் வசனமாக எழுதியுள்ளார்” என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை  அள்ளி வீசுகிறார்.

“நாவலில் இடம்பெறும் திட்டங்களும் படத்தில் இடம்பெறும் திட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதைக் காணலாம்” என்று நாட்டாமையாக மாறி தீர்ப்பும் வழங்கி விடுகிறார்.

உதாரணத்திற்கு மோடி அரசாங்கம் அறிவித்துள்ள நலத்திட்டங்களில் சில இந்திராகாந்தியின் இருபது அம்சத்திட்டங்களோடு ஒத்துப் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்காக அவர்  இந்திராகாந்தியின் திட்டங்களை அப்படியே காப்பியடித்து விட்டார் என்று வாதிடுவது முறையாகுமா?

இந்த லாஜிக்படி பார்த்தால் அர்ஜுன் நடித்த “முதல்வன்” படமும்கூட  “காதலா? கடமையா?” நாவலின் “கள்ளக்காப்பி” அல்லது “ஈயடிச்சான் காப்பி” என்றுதான்  சொல்ல வேண்டும்.

டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீதின் மற்றுமொரு வாதம் எனக்கு சிரிப்பை வரவழைத்தது இதோ அவருடைய வார்த்தைகளில்:

“நாடோடி மன்னனில் இளவரசனாக நடிப்பவனிடம் அவன் காதலி ,’அத்தான் நாம் காதலோடு பிறப்பதில்லை. கடமையோடுதான் பிறக்கிறோம். உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டால் நாடு நலம் பெறும்’ என்று குறிப்பிடுகிறாள். ‘காதலா கடமையா?’ என்ற நாவலின் தலைப்பு நாடோடி மன்னன் திரைப்பட வசனத்திலும் அப்படியே வந்துள்ளது. இது வசனகர்த்தா ரவீந்தரிடம் நாவலின் தலைப்பு ஏற்படுத்திய ஆழமான தாக்கமாகக் கருதலாம்”

“நாடோடி மன்னன்” படத்தில் வரும் வசனத்தில் “காதல்” என்ற வார்த்தையும் வருகிறதாம். “கடமை” என்ற  வார்த்தையும் வருகிறதாம். அதனால் நாவலின் தலைப்பு ரவீந்தருக்கு ஒரு ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணியதாம். “என்ன இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு?” என்ற வடிவேலுவின் காமெடி வசனம்தான் பட்டென்று என் நினைவுக்கு வந்தது.

1981-ஆம் ஆண்டு பாக்கியராஜ் “இன்று போய் நாளை வா!” என்று ஒரு படமெடுத்தார். அதற்காக இப்படம் இராமயணத்தின் தழுவல் என்று சொல்லி விடுவதா?

1939-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் “மாயா மச்சீந்தரா” என்ற படத்தில் சிறிய வேடமேற்று நடித்தார். “இந்தியன்” படத்தில் “மாயா மச்சீந்திரா” என்ற வார்த்தைகளோடு ஒரு பாடல் இடம் பெறுகிறது. அதற்காக இவையிரண்டிற்கும் தொடர்பு உள்ளது என்று கூறிவிட முடியுமா?

மேலும் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது மூன்று ஆதாரங்களை (?) நமக்கு சமர்ப்பிக்கின்றார். அவை பின்வருமாறு :

  1. ‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசன்  சிறை வைக்கப்பட்டு இருக்கும் தீவு மாளிகையும், இளவரசனாக நடிப்பவன் சண்டையிட்டு மீட்கும் காட்சியும் “நாடோடி மன்னன்” திரைப்படத்திலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.
  2. இதைப்போல “நாடோடி மன்னன்” திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் ‘காதலா கடமையா?’ நாவலில் வரும் காட்சிகளைப் பின்பற்றி அமைத்து இருக்கின்றன.
  3. ‘காதலா கடமையா?’ நாவல் நாடோடி மன்னன் திரைப்படம் முழுவடிவம் பெறுவதற்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் அமைந்துள்ளது

மொத்தத்தில் சித்தி ஜுனைதாவின் நாவலை ரவீந்தர் காப்பியடித்தார் என்பதை அவரது கற்பனை ஆதாரங்களுடன் வாசகர்களின் மனதில் பதிய வைத்து விட்டார். வெறும் யூகங்களின் அடிப்படையில் தொடங்கிய அவரது வாதம்  “கோயபல்ஸ் தியரியாய்” ரவீந்தர் மீது களங்கம் சுமத்தி கட்டுரையை முடித்து விடுகிறார்.

“காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாய்”, “பிள்ளையார் பிடிக்க குரங்காய் ஆன கதையாய்” தெரிந்தோ தெரியாமலோ ஒரு சர்ச்சைக்கு வித்திட்டு ரவீந்தரை தீராத பழிக்கு ஆளாக்கி விடுகிறார் அந்த சீரிய எழுத்தாளர்.

நாணயத்தின் மறுபக்கம்

ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இதுவரை நான் பாடிய புராணம் நாணயத்தின் ஒரு பக்கம்தான், நாணயத்தின் மறுபக்கத்தையும் இப்போது பார்ப்போம்.

“நாடோடி மன்னன்” படத்தின் கதை ரவீந்தர் திருடி விட்டார் என்று பெரும் பெரும் எழுத்தாளர்கள் முதற்கொண்டு இணையத்தில் வலம்வரும் நண்டு சுண்டுகள் வரை குற்றம் சொல்கிறார்களே உண்மையிலேயே “நாடோடி மன்னன்” கதையை எழுதியது ரவீந்தர்தானா?

இப்பொழுதுதான் நமக்கு பேரதிர்ச்சியே காத்துக் கிடக்கிறது.

உண்மையில் “நாடோடி மன்னன்” கதையை எழுதியது ரவீந்தரே கிடையாது, இந்த ஒரு பதிலிலேயே அத்தனை குற்றச்சாட்டுகளும் தவிடு பொடியாகி விடுகின்றன.  குற்றச்சாட்டு வீசிய அத்தனை பேர்களுடைய முகத்திலும் கரியை பூசி விடுகிறது. வேறு யார்தான் இதை எழுதினார்கள் என்கிறீர்களா? சற்றே பொறுமை காக்க வேண்டுகிறேன்.

அப்படியென்றால் செய்யாத ஒரு குற்றத்திற்காகத்தான் ரவீந்தர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு இவ்வளவு காலம் பழிச்சொல்லுக்கு ஆளாக்கப்பட்டாரா? ‘பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்’ என்பார்களே, அது இதுதான் போலிருக்கிறது.

‘நாடோடி மன்னன்’ படக்கதை எப்படி உருவாகியது என்பதற்கு அப்படத்தை தயாரித்து இயக்கிய எம்.ஜி.ஆரே தெளிவாக வாக்குமூலம் அளித்துள்ளார். படம் உருவான கதையை ஒரு நூலாகவே வெளியிட்டார்.

1937-38 ம் ஆண்டுகளில் எம்,ஜி,ஆர் கல்கத்தாவில் “மாயா? மச்சீந்திரா? ” படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம்.

Justin-McCarthys-play-If-I-Were-King1 220px-If-I-Were-King-poster-1938

ஒருநாள் அவர் நண்பர்கள் சிலருடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போகிறார். ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த  IF I WERE KING படம் அது….அதில் ஒரு காட்சியில் “நான் மன்னனானால்?” என்று தொடங்கி கதாநாயகன் வசனம் பேசுகிறான்.. ஆங்கிலம் சரளமாகத் தெரியாத எம்,ஜி,ஆரால் வசனங்கள் முழுவதையும்  புரியமுடியாமல் போனாலும் வசனத்தின் சாரம்சத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது. அந்தக் கருத்து அவர் மனதில் ஆழப்பதிந்து அடிக்கடி  ‘நான் மன்னனானால்?’ என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறார். “நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே என் மனதில் தோன்றிவிட்டது” என்று பெருமையுடன் எம்.ஜி.ஆர். தன் புத்தகத்தில் எழுதுகிறார்.

1894-ல்  ஆண்டனி ஹோப் எழுதிய “THE PRISONER OF ZENDA” என்ற நாவல், 1901-ல் ஜஸ்டின் ஹண்ட்லி மேக்கர்த்தி யின் நாடகமான “IF I WERE KING”  மற்றும்   “VIVA ZAPATA” என்ற ஆங்கிலப்படம் இவை மூன்றின் ‘கிச்சடி’ கலவைதான் “நாடோடி மன்னன்” படக்கதை. நான் மேற்கூறிய நாவலும், நாடகமும் பிறகு படமாக வெளிவந்தன.

200px-Hope_Prisoner_of_Zenda_coverThe_Prisoner_of_Zenda_1952_poster

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் கதை இலாகாவில் பங்கு வகித்த ஆர்.எம்.வீரப்பன், வித்வான் கே.லக்‌ஷ்மணன், எஸ்.கே.டி.சாமி இம்மூவரையும் எம்.ஜி.ஆர். இந்த மூன்று படங்களையும் பார்க்க வைக்கிறார்.  கதையின் போக்கு எப்படி வரவேண்டும் என்பதை  எம்.ஜி.ஆரே  கோடிட்டும் காட்டுகிறார். இம்மூவரும் இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை தமிழ் மண்ணுக்கு ஏற்றவகையில் உருவாக்குகின்றனர். தானே அதில் இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தையும் அவர்களிடம் வெளிக்காட்டுகிறார். நாடோடி மன்னனின் படக்கதை இப்படியாகத்தான் உருபெற்றிருக்கிறது.

“IF I WERE KING” என்ற நாடகத்தை அடிப்படையாக வைத்து “THE VAGABOND KING”  என்ற ஹாலிவுட் படம் 1930-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இதில் டென்ன்ஸ் கிங் கதாநாயகனாக நடித்திருந்தார். பல விருதுகளை அள்ளிச் சென்றது.

vagabond (1)the-vagabond-king-1930-dvd-jeanette-macdonald-dennis-ef80220px-VagabondKing1930

“IF I WERE KING”  நாடகமும் பலமுறை மேடையில் அரங்கேறி பெருத்த வரவேற்பை பெற்றிருந்தது. 1938-ஆம் ஆண்டு ரோனால்ட் கோல்மேன் நடிக்க இதுவும் திரைப்படமானது. “THE PRISONER OF ZENDA”  நாவலும் 1937-ல் திரைப்படமானது.

(இப்படம் வெளிவந்ததும், சித்தி ஜுனைதா எழுதிய நாவல் வெளிவந்ததும் ஒரே வருடம்)

ஆங்கிலப் படத்தை தழுவி தமிழ்ப்படம் எடுப்பது தமிழ்த்திரையுலத்திற்கு ஒன்றும் புதிதல்ல. எம்.ஜி.ஆர் முதல் கமலஹாசன் வரை இதனைச் செய்திருக்கிறார்கள். இதைத் தவறு என்று நான் குற்றம் கூற மாட்டேன். “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்று பாரதி கண்ட கனவை இவர்கள் நனவாக்குகிறார்கள் என்று திருப்திகொள்ள வேண்டியதுதான்.

“VAGABOND KING” என்ற படத்தலைப்பையே   தமிழில் அப்பட்டமாக மொழிபெயர்த்து “நாடோடி மன்னன்” என்ற தலைப்பைக் கொடுத்து பத்திரிக்கைகளிலும் எம்.ஜி.ஆர். விளம்பரம் கொடுத்து விடுகிறார்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பரணி பிக்சர்ஸ் சார்பில்  “THE PRISONER OF ZENDA” ஆங்கிலப்படத்தின் தழுவலாக ஒரு தமிழ்ப்படத்தை தயாரிப்பதற்கான ஏற்பாடு நடிகை பி,பானுமதி செய்து வருகிறார் என்ற செய்தி எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு எட்ட அவருக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிடுகிறது.

இப்படி ஒரு முட்டுக்கட்டை வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை, இப்பொழுது என்ன செய்வது? எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் முதல் கன்னி முயற்சி இது. அறிவிப்பிலிருந்து பின்வாங்கினால்  எம்.ஜி.ஆர். பெயர் கெட்டுவிடும், இப்பொழுது இது அவருக்கு ஒரு கெளரவப் பிரச்சினையாக ஆகி விடுகிறது..

பி.பானுமதியை சந்தித்து அவருடைய படத்தயாரிப்பை வாபஸ் வாங்கி கொள்ளுமாறு கோரிக்கை விடுக்க அவர் சற்றும் மசியவில்லை. பானுமதி தயாரிக்கும் படம் “THE PRISONER OF ZENDA” படத்தின் நேரடி தழுவலாக இருந்தால் தனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை என்றும், தான் எடுக்கப்போகும் படம் மூன்று படங்களின் தழுவல் என்றும் எம்.ஜி.ஆர் தன் கருத்தை பானுமதிக்கு புரிய வைக்கிறார்.

ஆரம்பத்தில் இசைந்து கொடுக்காத பானுமதி  ஒருவழியாக தன் எண்ணத்தை கைவிட்டு படத்தை நிறுத்திவிடுவதாக பெருந்தன்மையோடு ஒப்புக் கொள்கிறார். அதற்கு பரிகாரமாக பி.பானுமதியையே இப்படத்தில் கதாநாயகியாக எம்.ஜி.ஆர். நடிக்க வைக்கிறார்.

படப்பிடிப்பு தொடங்கிய காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கும் பானுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பானுமதி கதாநாயகியாக நடித்த “ரத்னகுமார்’, “ராஜமுக்தி’ போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். சிறு வேடங்களில் நடித்தவர். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். பிற்காலத்தில் முன்னணி நடிகராக, வசூல் நாயகனாக முன்னேறினார். இருப்பினும் “EGO’ காரணமாக, படப்பிடிப்பில் பானுமதி சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று திரைப்பட உலகைச் சார்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் எம்.ஜி.ஆர்., படத்தின் கதையில் மாற்றம் செய்கிறார். படத்தின் முதல் பாதி வரை கதாநாயகியாக நடித்த பானுமதியை இடைவேளைக்குப் பிறகு புகைப்படத்தில் மட்டுமே காட்டுகிறார். பி.சரோஜாதேவியை இன்னொரு கதாநாயகியாக அறிமுகப்படுத்தி அதற்கேற்ற வகையில் கதையிலும் மாற்றம் செய்கிறார்.

இத்தனை இடியாப்ப சிக்கல் நிறைந்து மாற்றம் செய்த கதையைத்தான்  சித்தி ஜுனைதாவின் நாவலிலிருந்து ரவீந்தர் சிரமப்படாமல் அப்படியே ‘அபேஸ்’ செய்துவிட்டார் என்று வாய்க்கூசாமல் சொல்லுகிறார்கள்.

“ஒரு நாட்டின் இளவரசனுக்கு முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. சதிகாரர்கள் இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்கிறார்கள். தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்கிறார்கள். இந்நேரத்தில் இளவரசனைப் போல் உருவ ஒற்றுமையுடைய ஒருவன் வெளியூரிலிருந்து தற்செயலாக அங்கு வருகிறான். அவனைச் சந்தித்த இளவரசனின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்றே நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறான்”.

இதுதான் 1938-ஆம் ஆண்டு சித்தி ஜுனைதா எழுதிய  “காதலா? கடமையா?” என்ற நாவலின் கதை. அதே 1938-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் பார்த்த “IF I WERE KING” ஏறக்குறைய இதே கதைதான்.

 “நாடோடி மன்னன் கதை விவாதத்தின்போது  எம்.ஜி.ஆர் அவர்கள் ரவீந்தரிடம் பாதிக்கதை வரையில் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது  மீதிக்கதையை ரவீந்தர் சொல்லி முடித்தார். இதைக் கேட்டு வியந்த எம்.ஜி.ஆரிடம் ‘காதலா கடமையா?’ என்ற நாவலில் படித்த கதைதான் இது என்று ரவீந்தர் தெரிவித்தார்”

என்று டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது தன் கட்டுரையில் எழுதுகிறார். தெளிவாக பேச முடியாத நிலையிலிருந்த ரவீந்தர் அப்படியே இவரிடம் கூறியிருந்தாலும் இதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எம்.ஜி.ஆர். பார்த்த ஆங்கிலப் படத்தின் கதையும், சித்தி ஜுனைதா எழுதிய “காதலா? கடமையா?” கதையும் ஒத்துப் போகிறது என்றுதானே இதற்கு அர்த்தம்?

இதை படித்தபோது என் மனதின் மூலையில் அமர்ந்திருந்த பட்சி மீண்டும் “BRO கொஞ்சம் மாத்தி யோசி” என்றது. “IF I WERE KING” அல்லது “THE VAGABOND KING” அல்லது  “THE PRISONER OF ZENDA” அல்லது “VIVA ZAPATA” நாவல் அல்லது படத்திலிருந்து கருவை ஏன் சித்தி ஜுனைதா கடன் வாங்கியிருக்கக்கூடாது? (என் வார்த்தைகளின் பிரயோகத்தை தயவு செய்து கவனிக்கவும்). அசோகமித்திரனின் கூற்றும் நினைவுக்கு வந்தது.

வெறும் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த  சித்தி ஜுனைதாவுக்கு இந்த ஆங்கில மொழியில் வந்த நாவல், நாடகம், திரைப்படம்  பற்றிய அறிவு எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி இப்பொழுது எழலாம். இஸ்லாமிய பெண்களிடையே கல்வியறிவு அவ்வளவாக இல்லாத காலத்தில், தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரில் வாழ்ந்து வந்த ஒரு பெண்மணிக்கு இவையெல்லாம் தெரிந்து வைத்திருப்பது சாத்தியம்தானா?  என்று நீங்கள் கேட்கக்கூடும். நியாயமான கேள்விதான்.

ஏன் சாத்தியமில்லை? என்பதுதான் என் கேள்வி.

The night has a thousand eyes,
And the day but one;
The mind has a thousand eyes
And the heart but one:

என்ற பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோன் (Francis William Bourdillon) ஆங்கிலக் கவிஞனின் அமுதவரிகளை அழகுத்தமிழில்

இரவுக்கு ஆயிரம் கண்கள்,

பகலுக்கு ஒன்றே ஒன்று

அறிவுக்கு ஆயிரம் கண்கள்,

உறவுக்கு ஒன்றே ஒன்று

என்று பாடலெழுதிய கண்ணதாசன் வெறும் எட்டாவது வரை மட்டும் படித்தவர்தானே?

 “ஜுனைதா பேகம் மிகக்குறைந்த அளவே படித்தவர். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அதுவும் 1894இல் வெளியான ஓர் ஆங்கில நாவல் ஜுனைதா பேகத்திடம் எப்படிப் போய்ச் சேர்ந்தது, அதை அவருக்கு யார் படித்துக் காண்பித்தார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும்.”

என பிரபல எழுத்தாளர்  பத்ரி சேஷாத்ரி ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறார். என்னதான் கட்டுப்பாடான ஒரு இறுக்கமான சமுதாய கட்டுக்கோப்பில் அவர் வளர்ந்தாலும்கூட  எல்லோரும் நினைப்பதைப் போன்று அவரொன்றும் ‘கிணற்றுத் தவளை’யாக இருக்கவில்லை

இதற்கு பதில் தெரிய வேண்டுமென்றால் சித்தி ஜுனைதாவின் குடும்பப் பின்னணியை பற்றி சற்று தெரிந்துக் கொள்வது மிக அவசியம். சித்தி ஜுனைதா பள்ளிப்படிப்பை சமுதாய சூழ்நிலையால் தொடரவில்லை என்றாலும்கூட அவர் தமிழறிவையும், எழுத்தாற்றலையும் – கேட்டும், தெரிந்தும், பயிற்சியினாலும் வீட்டிலிருந்தபடியே தெரிந்துக் கொண்டார். ஏட்டறிவை விட கேள்வி ஞானம் சிறந்தது என்பதில் ஐயமில்லை.

சித்தி ஜுனைதாவின் தந்தையார்  எம்.ஷெரீப் பெய்க் ஆங்கில பாடம் படித்த பட்டதாரி இல்லையென்றாலும் ஆங்கிலம் நன்றாக அறிந்தவர். ஆங்கிலேயக் கப்பலொன்றில் கேப்டனாக பணி புரிந்தவர். அந்தக் காலத்திலேயே “நெல்சன்ஸ் என்சைக்ளோபீடியா” வைத்து படித்துக் கொண்டிருந்தவர் என்றால் உலக விஷயங்களில் அவர் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

சித்தி ஜுனைதா தன் தந்தையாரிமிருந்து நாட்டு நடப்பை கேட்டறிய சாத்தியமில்லையா?

அறிஞர் அண்ணாவால் பாராட்டுப் பெற்ற முனவ்வர் பெய்க் சித்தி ஜுனைதாவின் இளைய சகோதரர், ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றவர். அஞ்சலகத் தலைவராக பணியாற்றியவர். “நானும் என் சகோதரும்தான் ஒன்றாக அமர்ந்து படிப்போம் எழுதுவோம்” என்று 1999-ஆம் ஆண்டு முஸ்லிம் முரசு பொன்விழா மலரில்  சொல்லரசு, மு.ஜாபர் முஹ்யித்தீன் பதிப்பித்த நேர்காணலிலிருந்து நாம் அறிய முடிகின்றது.

சித்தி ஜுனைதா தன் தம்பியிடமிருந்து இந்த ஆங்கில படங்களின் கதைகள் ஏதாவதொன்றை கேட்டறிந்து அதனை தன்  மனதில் பசுமரத்தாணிபோல் பதிய வைத்து அந்த தாக்கத்தின் விளைவால் அந்த நாவலை புனைந்திருக்க வாய்ப்பு இல்லையா?

இன்னொரு சகோதரர் முஜீன் பெய்க். நாட்டு நடப்பு அறிந்தவர். காரைக்காலிலிருந்து வெளிவந்த “பால்யன்” பத்திரிக்கையை பலகாலம் வெற்றிகரமாக நடத்தியவர். ஆங்கில ஞானம் உடையவர். வீட்டில் உலகச் செய்திகளை தாங்கிவரும் அப்பத்திரிக்கைகள் குவிந்திருக்கும். அவரிடமிருந்து நாடு நடப்பை கேட்டறிய சாத்தியமில்லையா?

சித்தி ஜுனைதா டயரி எழுதும் பழக்கமுள்ளவராக இருந்திருக்கிறார். மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்த அவருடைய டயரியில் தெள்ளத் தெளிவான தமிழ் எழுத்துக்களில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் எழுதி வைத்திருக்கிறார்.

என் இளம்பிராயத்தில் சித்தி ஜுனைதாவின் மருமகன் ஆஸாத் அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிங்கப்பூரில் கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றி, நேர்மையான மனிதர் என்று பெயரெடுத்தவர். தமிழ்ப்பற்றின் காரணமாக தன் மகனுக்கு செல்வமணி என்ற தமிழ்ப்பெயர் வைத்தவர். அரைக்கால்சட்டையும், காலுறை, காலணி அணிந்து “கெளரவம்”  சிவாஜி போன்று வாயில் ‘பைப்’ வைத்து  ‘வாக்கிங் ஸ்டிக்’கைச் சுழற்றியபடி அவர் நடந்துபோகும் அழகே அழகு.  நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்.

இதுபோன்ற ஆங்கில பாண்டித்தியம் பெற்ற மனிதர்களுக்கிடையே வாழ்ந்த அவர் ஆங்கில நாவல்களின் கதையை அறிந்து வைத்திருக்க ஏன் சாத்தியமில்லை?

டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது 2002-ல் எழுதிய கட்டுரைக்குப் பிறகுதான் இதுபோன்ற ஹேஸ்யங்கள் தொடர்ந்தன என்பது என் தாழ்மையான அபிபிராயம்.

“நாடோடி மன்னன்” படத்தின் வசனத்தை ரவீந்தர் எழுதினார். இதற்காக அவர் இரவு பகல் என பாராது உழைத்தார். ஒருசில வசனங்கள் எழுதிய கண்ணதாசன் பெயர்தான் இப்படத்தில் பிரதானமாக விளம்பரப்படுத்தப்பட்டது.  தன் சொத்துக்கள அனைத்தையும் முடக்கி இப்படத்திற்காக முதலீடு செய்த எம்.ஜி.ஆர்.  “இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். தோல்வியடைந்தால் நாடோடி” என்று கூறினார்.

பிரபலமான கண்ணதாசனின் பெயர் விளம்பரத்தில்இடம்பெற்றால்தான் படத்தின் வெற்றிக்கு துணைபுரியும் என்றெண்ணி ரவீந்தரை ஓரங்கட்டியிருக்கலாம்.

mgr-nadodi-3

நாடோடி மன்னன் பட சுவரொட்டியில் கண்ணதாசன் பெயர்

நாடோடி மன்னன் பட  டைட்டிலில் “வசனம்” என்ற இடத்தில் கண்ணதாசனின் பெயரோடு இணைத்து ரவீந்தரின் பெயர் காண்பிக்கப்படும். ஆனால் பெரும்பாலான விளம்பரங்களில் அவருடைய பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும். (மேலேயுள்ள சுவரொட்டியைக் காண்க)

“நாடோடி மன்னன்” படத்தின் வெற்றி விழா மதுரை முத்துவின் மேற்பார்வையில் மதுரையில்  தடபுடலாக ஏற்பாடாகியது. நான்கு குதிரைகள் பூட்டிய அலங்கார ரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது 110 பவுனில் தயாரிக்கப்பட்ட தங்க வாள் மின்னியது. ஊர்வலத்தின் இறுதியில் தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான வெற்றி விழாவில் ‘பளபள’வென்று மின்னிக் கொண்டிருந்த வீரவாளை நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருக்கு பரிசளித்தார்.

நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி போன்றோர் விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள். படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று அல்லும் பகலும் பாடுபட்ட ரவீந்தரை யாருமே கண்டுக் கொள்ளவேயில்லை.

அப்படிப்பட்ட இந்த மனிதருக்குத்தான் வேறு ஒருவருடைய கதையைத்திருடி “நாடோடி மன்னன்” படத்திற்கு பயன்படுத்திக் கொண்டார் என்ற அவப்பெயர்.

1987 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தார். அவர் உயிரோடிருக்கும்போது இந்த நாடோடி மன்னன் கதை விவகாரத்தை கிளப்பியிருந்தால் பத்திரிக்கையாளர்கள் யாராவது அவருடைய கவனத்திற்கு கொண்டு போயிருப்பார்கள். அவரே இதற்கான பதிலை அளித்து, உண்மையை உலகுக்குரைத்து ரவீந்தரின் மீது விழுந்த அபாண்டமான பழியைத் துடைத்தெறிந்திருப்பார்.

எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் உருவான விதத்தை ஒரு நூலாக எழுதினார் என்று சொன்னேன் அல்லவா? அதில் இப்படி எஅவர் எழுதுகிறார்:

“நாடோடி மன்னனைப் பொறுத்த வரையில் வசனகர்த்தாவில் ஒருவரான திரு.கண்ணதாசன் அவர்களுக்கும் எனக்கும் கொள்கைப் பிடிப்பும் குறிக்கோளும் ஒன்றாகவே இருந்ததனால் மேலே சொன்ன குழப்பம் நேரவே இடமில்லாமற் போய்விட்டது. இன்னொரு வசனகர்த்தாவான திரு.ரவீந்திரன் என்னுடைய கொள்கையை நன்கு புரிந்த, தொடர்ந்து என்னுடன் பணியாற்றி வருபவராதலால் நான் அமைத்த பாத்திரங்களின் குணத்தையோ தரத்தையோ மாற்றக்கூடிய எதையும் அவர் செய்யவில்லை”

இதில் கடைசி வரியை கவனித்து பார்த்தால் உண்மை நமக்கு விளங்கவரும். “நான் அமைத்த பாத்திரங்கள் குணத்தையோ தரத்தையோ” என்று எம்.ஜி.ஆர் தெளிவாக குறிப்பிடுகிறார். பாத்திரப்படப்புகள் ரவீந்தர் உருவாக்கியத்தல்ல என்பது நமக்கு புரிகிறது.  இதில் ரவீந்தர் செய்த திருட்டு எங்கே இருக்கிறது?

“எழுத்துலகத் திருட்டு” எந்த அளவு கண்டிக்கத்தக்கதோ அதைவிட மோசமானது இப்படி ஒருவர் மீது ஆதாரமற்ற அபாண்டமான குற்றச்சாட்டை அள்ளி வீசுவது. தெரிந்தோ தெரியாமலோ இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து எழுத்தாளர்களும் ரவீந்தருக்கு இழைத்திருக்கும் துரோகம் மன்னிக்க முடியாதது. தீர விசாரிக்காமல் குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்குள்ளான கோவலனுக்காக எழுதப்பட்ட சிலப்பதிகாரம் போல காவியம் எழுத நான் சொல்லவில்லை. அநீதி இழைக்கப்பட்ட கண்ணகி மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி போல எதையும் செய்ய நான் சொல்லவில்லை.

இதுதான் உண்மை. மற்ற புரளியெல்லாம் ரவீந்தர் மீது இட்டுக்கட்டப்பட்ட கதையென்று ஊரறிய, உலகறிய இப்பதிவை பலபேர்களுக்கு பகிர்ந்தாலே போதும். அந்த மனிதருள் மாணிக்கத்திற்கு நாம் செய்யும் உபகாரம் இதைவிட வேறெதுவும் இருக்க முடியாது.

நாகூர் அப்துல் கையூம்

நாகூர் மண்வாசனை

– தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 5

 

Tags: , , ,

சித்தி ஜுனைதா பேகத்தின் பெண்ணியச் சிந்தனை


(இந்த ஆய்வுக் கட்டுரை பேராசிரியை மு. ஆயிஷாம்மா அவர்களால் 2007-ஆம் ஆண்டு நடைப்பெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது)

முன்னுரை

இஸ்லாமியத் தொழில் இலக்கிய உலகில் ஒளியுமிழ் தாரகையாக மின்னிய முதல் பெண் எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம் ஆவார். இவர் இயற்றிய முதல் தமிழ் நாவல் “காதலா? கடமையா?” ஆகும். இவரது மற்ற படைப்புகளில் ஒன்றான “இஸ்லாமும் பெண்களும்” என்ற தலைப்பில் இஸ்லாம் பற்றியும் பெண்களின் பல்வேறு உரிமைகள் பற்றியும், முஸ்லிம் சமுதாய பெண்களிடையே நிலவும் சூழ்நிலை பற்றியும் கூறி பெண்ணிணத்திற்கே புரட்சியை ஏற்படுத்தியவர். அவரது முற்போக்குச் சிந்தனைகள் பற்றி நாம் இக்கட்டுரையில் காண்போம்.

சித்தி காலச் சமுதாயச் சூழல்:

ஆண் பெண் இருபாலரும் இணைந்தே மனித சமுதாயம். சமூக வாழ்வில் பெண், ஆணுக்குச் சற்றும் குறையாத ஓர் உன்னதமான பொறுப்பை வகிக்கின்றாள். மேலும், தனி ஆணுக்குச் சற்றும் குறையாத ஓர் உன்னதமான பொறுப்பை வகிக்கின்றாள். மேலும் தனி வாழ்வோ, பொது வாழ்வோ அல்லது வாழ்க்கையின் எந்தத் துறையோ ஆகட்டும், எதிலும் பெண்ணை விட்டும் நீங்கிய ஒரு சமூக அமைப்பைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. எனவே, சமூக அமைப்பில் பெண்களின் பங்கு முக்கியமானது எனும் அடிப்படையில் தான் இஸ்லாத்தின் கொள்கைகளும் வாழ்வில் தத்துவங்களும் பெண்களிடையே பரவுவதற்கு எண்பது ஆண்டுகளுக்கு முன்பே புரட்சி செய்த ஒரு பெண் படைப்பாளி என்று சொன்னால் மிகையாகாது.

இந்தச் சிறப்புகளுக்கெல்லாம் காரணம் அவருடைய கதைகள், கட்டுரைகள் அல்ல, அவைகள் எழுதப்பட்ட காலம், சூழல் பின்புலம், சித்தி ஜுனைதாவின் பள்ளிப்படிப்பின்மை ஆகியன ஆகும். அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் எழுதுவதற்கு அஞ்சினர். இப்படி முஸ்லிம் பெண்களுக்கிருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி எழுதி, தன் பெயரையும் போட்டு தன் வீட்டு முகவரியையும் மறவாமல் கொடுத்து, புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள் என்பது தான் இளம் வயதிலிருந்த இவருடைய முதிர்ச்சிக்கும் துணிச்சலுக்கும் அடையாளமானது. ஆகவே இவரை வரலாறு படைத்த, படிக்காத மேதை என்று வர்ணித்தாலும் தகும்.

சித்தி ஜுனைதா ஒரு முற்போக்கு புரட்சி எழுத்தாளர்:

“காலம் காலமாக அடிமைப்பட்டு வதைக்கப்பட்டு வாழும் பெண்களை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து ஆண்களுக்கு நிகரான மதிப்பினை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கும் செயற்பாடும் ஆகும்”, (பிரேமா, இரா.1994 ப.5)

சித்தி ஜுனைதாவும் பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்று விளங்க வேண்டும் என்ற புரட்சி எண்ணத்தை தமது கட்டுரையின் வாயிலாக பரப்பியவர். ‘பெண்கள் சினிமா பார்க்கலாமா?’ என்னும் கட்டுரையில் “இஸ்லாத்தில் ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் கிடையாது. ஆண் மகனுக்கு ஆகும் என்றால் பெண் மகளுக்கும் ஆகும் என்பதுதான் என் கருத்து ஆகும்” என்று கூறியவர். ஆண் வன்மை உடையவன்; பெண் மென்மை உடையவள். ஆணுக்குள்ள கடமைகள் வேறு; பெண்ணுக்குள்ள கடமைகள் வேறு; உரிமைகளும் வெவ்வேறுதான். ஆனால் நீதி ஒன்றாகத்தான் இருத்தல் வேண்டும் என்று பெண்களின் தனித்துவத்தை தமது ‘பெண்ணியம் அணுகுமுறைகள்’ என்பதில் இரா. பிரேமா குறிப்பிடுகிறார்.

“அறச்செல்வி ராபியா” என்னும் கட்டுரையில் ஆன்மிகத்துறையில் அதியுன்னத அந்தஸ்தைப் பெறுவதற்குப் பெண்களும் வழிகாட்டியுள்ளனர் என்பதையும், ஆன்மீக மெய்ஞ்ஞான விசாரணை என்பது ஆண்களுக்கு மட்டும் உரியது என்று நினைக்கும் எண்ணம் தவறானது என்பதையும் தமது கட்டுரையில் நிலைநிறுத்திக் காட்டியிருக்கிறார். “பாராளப் பிறந்தவள் பேயாட்டம் போடுவதா” என்னும் கட்டுரையில் பெண் கல்வியினால் இஸ்லாமியப் பெண்கள் தனித்துவம் பெற்று விளங்கலாம். ஆண்களின் மேலாதிக்கப் போக்கிற்குப் பெண் கல்வி சவாலாக அமைகிறது என்று ஒரு புரட்சிப் பெண்ணாக மாறி விதண்டாவாதம் புரிவோர் மீது சீறிப் பாய்கிறார் என்பதை அவரது கட்டுரைகள் மூலம் நாம் அறிந்துக்கொண்டு அவரை பெண்ணிய முற்போக்குச் சிந்தனைவாதி என்று சொல்வதில் ஐயமில்லை.

திருமண உரிமை :

ஜான் ஸ்டூவர்ட்மில், தன் பெண்ணடிமை என்ற நூலின் வழி “திருமணம் என்ற நிறுவனம் பெண்ணுக்கு மிகப் பாதகமானது, பெண்ணடிமைத்தனத்திற்கு இத் திருமணமே காரணமாக உள்ளது என்றும், இவற்றை போக்கினாலொழிய பெண் விடுதலைக்கு வழியில்லையென்றும் குரல் எழுப்பினார். இத் திருமணத்திற்குப்பின், மனைவி, தனக்கென்று சுய விருப்பம் ஆர்வம், தனித்துவம் கொண்டிருப்பதை ஆணாதிக்கச் சமுதாயம் மறுக்கிறது” என்று பெண்ணிய திறனாய்வில் திருமண உரிமையினால் பெண் சுதந்திரம் இழக்கிறாள் என்ற கருத்தும் அறியப்படுகிறது. சித்தி ஜுனைதா பேகம் தமது கட்டுரையில் பெண்கள் தமக்கு பிடித்தவரையே மணஞ்செய்து கொள்ள இஸ்லாம் அனுமதியளிக்கின்றது என்று குறிப்பிடுகின்றார்.

ஒத்த நலனும். ஒத்த குணமும், ஒத்த பண்பும் அமையாத இருவரை ஆடு மாடுகளைப் பிணைப்பதைப்போல் பிணைத்து விடுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு பெண் தனக்கு விருப்பமில்லாத ஒருவனை மணந்துகொள்ள பெற்றோராலும் மற்றோராலும் வற்புறுத்தப் படுவாளேயானால், அப்பெண் அத்திருமணத்தை நிறைவேற்றி வைக்கும் நீதிபதியிடம் முறையிட்டுக் கொள்ளலாம். என்றும் இஸ்லாமிய பெண்கள் தங்கள் வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்வதின் மூலம் குடும்ப பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் முற்படுத்துகிறார்.

மேலும் இஸ்லாம் பலதார மணத்தையும் ஆதரிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்த ஒருவன் ஊண், உடை, வீடு தங்கும் நேரம் எல்லாவற்றிலும் சமத்துவமாக ஆக்கக் கடமைப் பட்டிருக்கின்றான் என்றும் இவ்வாறு நடக்கத் தகுதியற்றவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணக்கும் உரிமையை இழந்து விடுகின்றான் என்றும் பரிசுத்த திருமறை தெளிவாக உணர்த்தியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

இஸ்லாத்தின் பெயரால் பெண்ணுலகை ஏமாற்றி ஆண்கள் தன்னலத்தின் பொருட்டு செய்யும் இந்த அடாத செய்கைக்கு இடமில்லை. ஆனால் எதற்கும் விதிவிலக்குண்டு. தீராத நோய் காரணமாக அல்லது தன் மனையாட்டியை அணுக முடியாத விலக்க முடியாத ஏதோ ஒரு காரணத்திற்காக ஒருவன் மற்றொருத்தியை மணம் புரியலாம். இஸ்லாம் எப்பொழுதும் தன்னலத்தை வெறுக்கின்றது. பிறர் நலம் ஓம்பலே இஸ்லாத்தின் ஆணிவேர் என்று இவர் கூறிய கருத்துகள் யாவும் திருக்குர்ஆன் அடிப்படையிலேயே அமைந்துள்ளன,

கல்வி உரிமை :

“பாரம்பரிய லட்சியங்களுக்கு ஏற்பவும் அதே நேரத்தில் நவீன தேவைக்கு ஏற்பவும், பெண்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும். பெண்களின் மனதில் குடிகொண்டுள்ள ‘இந்து தர்மத்தை’ப் பாதுகாத்துக் கொண்டே அவர்களுக்குக் கல்வியோடு வாழ்க்கையும் நல்க முடியும். இது வேத காலம் நோக்கித் திரும்ப விழைகிற தியோசோபிகல் சொசைட்டியின் சிந்தனைக்கு ஏற்பவே உள்ளது; எனினும் அன்றைய சூழலில் பெண்களுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதே பெரிய விஷயம்தான்” என முற்றுமுணர்ந்த கற்றோர் பலரும் அறிவிற் சிறந்த பெரியார் பலரும் இங்ஙனம் பெண் கல்வி பெண் கல்வி என்று கூவிக்கொண்டிருக்கும்போது 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெருமானார் நபி (ஸல்) அவர்கள் பெண் கல்வியைக் கட்டாய கடமையாக்கினார் என்று நபியின் திருவாக்கியத்தினை எடுத்துக்கூறி இஸ்லாமிய பெண்களுக்குத் தாய்மொழிக் கல்வியின் மகத்துவத்தைப் பற்றி சித்தி ஜுனைதா பேகம் தமது கட்டுரையில் அழகாக பறைசாற்றியுள்ளார்.

சம உரிமை :

பெண்ணின் தாழ்வு எண்ணங்களும் கருத்துப் படிமங்களும் சமுதாயத்தில் முற்றிலுமாக அகற்றப்படவேண்டும். பெண்மையின் மகத்துவம் எல்லா நிலைகளிலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட வேண்டும். ஆண், பெண் சமத்துவம் குடும்பத்திலும் சமூகத்திலும் நிலைபெற வேண்டும். தகவல் தொடர்புச் சாதனங்கள், பெண்கள் பற்றிய புதிய கண்ணோட்டத்தையும் விழிப்புணர்வையும் மனித நேயத்துடன் வலியுறுத்த வேண்டும். இவை முழுமையாகச் செயற்படும்போது பெண் மீதான வன்முறைகளும், அநீதிகளும் அழிவுகளும் சிதைவடையும் என்பதில் ஐயமில்லை. இப்பெண்ணியக் கோட்பாடுகளுக்கு முன்பே பெருமானார் ஆண்டவனால் படைக்கப்பட்ட எல்லோரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் அவர்களிடையே உயர்வு தாழ்வு கிடையாது. எளியோன், பணக்காரன், முதலாளி, தொழிலாளி, தொழிலாளி என்ற வேற்றுமையே கிடையாது என்று முதன் முதலாக உலகத்தின் நீண்ட சரித்திரத்தில் வீர முழக்கஞ் செய்தார்.

சித்திக்கு எதிர்ப்புகள்:

ஏறத்தாழ இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்னாள் பெண் நலம் காக்க அவர் தீட்டிய சொற்சித்திரங்களை யாவும் இஸ்லாம் பெண்களுக்கு எதிரான மார்க்கம் எனப் பசப்பித் திரிவோர்க்கு மிகப்பெரும் சவாலாய் அமைந்திருக்கின்றன. மேலும், பெண்கள் குடும்பம் தவிர கல்வி கேள்விகளில் ஈடுபடுதல் அன்பது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்ட 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் எல்லோர் புருவங்களையும் உயர்த்தும்படி வைத்த ஒரு பெண் ஆசிரியை சித்தி ஜுனைதா; இவர் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். ஆனால் இவர் நெடுங்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார் என்பதைவிட, எழுதிக் குவித்தார், என்பதே உண்மை. இவர் எழுதி வந்தபோது அதனைத் தடுக்கப் பலரும் முனைந்துள்ளனர். அதையும் மீறி எழுதியபோது அதை வெளியிட ஆதரவு இருக்காது என்பதை அறிந்து இவரே தனது நூல்களை வெளியிட்டும் உள்ளார். இவ்வாறு முதல் முஸ்லிம் பெண்மணி தனது முதல் படைப்பினை வெளியிடும்போது, பலவகை அனுபவங்களையும், தடைகளையும் சந்தித்துள்ளார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

முடிவுரை:

சித்தி ஜுனைதா பேகம் அவர்கள் வெளிப்படுத்தும் பெண்ணியச் சிந்தனைகள் யாவும் தன் சமயம் சார்ந்த பெண்களுக்கா மட்டுமின்றி, உலகம் முழுவதும் போராட்ட வாழ்வில் சிக்கிப் புதைந்துக் கிடக்கும் எல்லாப் பெண்களுக்காகவும் கருணை ஒளி சிந்தியதை அவரது கட்டுரைகள் மூலம் நமக்குப் புலப்படுத்தியுள்ளார். மென்மையில் உயிர்த்தெழுந்த பெண்மைக்கு எத்தகைய எழுத்து வன்மை இருக்கிறது என்பதை இக்கட்டுரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அடிக்குறிப்புகள்:

1. பெண்ணிய அணுகுமுறைகள் – இரா. பிரேமா
2. பெண்ணியத் திறனாய்வு – முனைவர் வீ. நிர்மலா ராணி
3. இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானதா? – கவிக்கோ அப்துல் ரகுமான்
4. தமிழகத்தின் சமூகச் சீர்த்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு – அருணன்

Related Links:

சித்தி ஜுனைதா – நா. கண்ணன், ஜெர்மனி

சித்தி ஜுனைதா – ஓர் இனிய அறிமுகம் 

காதலா? கடமையா? – குறுநாவல்

மகிழம் பூ – நாவல்

சித்தி ஜுனைதா –  குமுதத்தில் வெளிவந்த கட்டுரை 

சித்தி ஜுனைதாவும் நாடோடி மன்னன்களும் 

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர் – ஜே.எம்.சாலி

சித்தி ஜுனைதா –  ஒரு நேர்காணல்

சித்தி ஜுனைதா – பிறரின் பார்வையில்

 

Tags: , , , ,