RSS

Tag Archives: சுதந்திர போராட்டத்தில் நாகூரார்

இந்திய சுதந்திர போராட்டத்தில் நாகூர் இறைநேசரின் பங்களிப்பு


அறியாமல் போன வரலாறு

நாகூரில் வாழ்ந்து மறைந்து நாகூரிலேயே அடக்கமாகி இருக்கும் இறை நேசரை (1490-1579) அவர்களை “சுதந்திர போராட்ட வீரர்” என்று எனது நண்பரொருவர் முகநூலில் குறிப்பிட்டு இருந்ததைக் கண்டு “இது உண்மையான தகவலா?” என்று வேறொரு முகநூல் நண்பரொருவர் ஆர்வத்துடன் எனக்கு விளக்கம் கேட்டு தகவல் அனுப்பியிருந்தார்.

அதோடு அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை “அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?” என்ற பழமொழியையும் கிண்டல் தொனியில் எழுதியிருந்தார்.

“இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்” என்று எழுதுகிறார் பிரபல நாவலாசிரியரும், பத்திரிக்கையாளருமான குஷ்வந்த்சிங், [29.12.1975 தேதியிட்ட இல்லஸ்டிரேட் வீக்லி’]

[நாகூர் இறைநேசச் செல்வரின் வாழ்நாள்காலம் ஓரிரு ஆவணத்தில் 1490-1579 என்றும், மற்றொரு ஆவணத்தில் 1532-1600 என்றும், தைக்கா தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்கள் எழுதிய நூலில் 1504-1570 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பல சரித்திரக்கூற்றுகளில் அவர்கள் 68 வருடங்கள் மட்டுமே இப்பூவுலகில் வாழ்ந்ததாக குறிப்புகள் பரவலாக காணப்படுகின்றன. நாகூர் தர்கா நிர்வாகத்தினர் கணக்குப்படி 527 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பிறந்ததாகவும், 459 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் மறைந்ததாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.]

நாகூர் ஆண்டகை (ஆண்+தகை) ஒரு ஆன்மீக ஞானி என்ற வகையில்தான் எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்களே தவிர, இந்திய நாட்டுச் சுதந்திர போராட்டத்திற்கு அவர்கள் ஆற்றிய அரும்பணி வெளியுலகத்திற்கு தெரியாமல் போனது மிகவும் துரதிருஷ்டமானது. 2007-ல் நானெழுதிய கட்டுரை ஒன்றில் இதனை குறிப்பிட்டு இருக்கிறேன்,

நமக்குத் தெரியாத தகவல் ஒன்று தாமதமாக கிடைக்கப் பெறுகிறது என்ற ஒரே காரணத்தால் அது உண்மை அல்ல என்று ஆகிவிடாது. ஆன்மீகத்தில் சிறந்து விளங்கிய எத்தனையோ உன்னத மனிதர்கள் இலக்கியத்திலும், சமூகப்பணியிலும், வேறு துறைகளிலும் சிறந்து விளங்கியிருப்பது கண்கூடு.

நாகூர் ஆண்டகையின் முழுமையான வரலாறு மற்றும் அவர்கள் வாழ்வில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் தேதி வாரியாக பதிவு செய்யப்பட்டு வந்தது உண்மை. இவை பெரும்பாலும் அரபுத்தமிழில் எழுதப்பட்டவை. போர்த்துகீசியர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு காலத்தில் அரபுத்தமிழில் எழுதப்பட்டிருந்த அவையாவும் அழிந்துப் போயின. அரபுத்தமிழ் நூல்கள் என்றால் அரபி எழுத்துக்களால் எழுதப்பட்ட தமிழ் புத்தகம் என்று பொருள். அதனால்தான் அவர்கள் வாழ்ந்த காலமும் துல்லியமாக கணக்கெடுப்பதில் சற்றே வித்தியாசம் காணப்படுகின்றது. அவர்கள் தங்கள் இறுதிகாலத்தில் நாகூரில் வாழ்ந்த காலம் சுமார் 28 ஆண்டுகள்.

இந்திய சுதந்திர போராட்டம் என்றதும் ஆங்கிலேயர்களை எதிர்த்து நம்மவர்கள் புரிந்த போராட்டம் மட்டுமே என்று பலரும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். நாம் பாடத்திட்டத்தில் படித்த வகையில் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது பகத் சிங்கும். வ.வு.சி.யும், வீரபாண்டிய கட்டபொம்மனும், திப்பு சுல்தானும்தான்.

ஆகையால்தான் நாகூர் ஆண்டகையின் பெயரை சுதந்திர போராட்ட வீரர் என்று குறிப்பிட்டால் அது ஒரு நகைப்பிற்குரிய விஷயமாக நமக்கு தென்படுகிறது,

போர்த்துகீசியர்களையும், டச்சுக்காரர்களையும் எதிர்த்து நம்மவர்கள் போரிட்டதை ஏன் சுதந்திர போராட்டமாக யாரும் கருதுவதில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.

நாகூரில் வாழ்ந்த நம் இறைநேசர் ஆன்மீகம் போதித்ததோடு மட்டும் நின்று விடவில்லை. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி விலாவாரியாக எழுதத் தவறியதுதான் இந்த தவறான புரிதலுக்கு முதன்மையான காரணம் என்று நினைக்கிறேன். அல்லது அப்படி எழுதப்பட்ட நூல்கள் நமக்கு முழுமையாக கிடைக்காமல் போனதால் கூட இருக்கக்கூடும்.

தமிழ் மொழியில் பாக்கள் வடிவிலும், உரைநடையிலும், தெருக்கூத்து வடிவிலும் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை வடித்த பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களது ஆன்மீகப் பணியை மட்டுமே அதிகம் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிலும் ஆதாரமில்லாத பல செய்திகளும், மிகைப்படுத்தப்பட்ட தகவல்களும் கலந்து விட்டது என்பதை நாம் அடியோடு மறுப்பதற்கில்லை.

ஆன்மீகம் தவிர்த்து அவர்கள் தீர்த்து வைத்த சமூகப் பிரச்சினைகள் ஏராளம்; . ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து இன மக்களுக்கும் அவர்கள் ஆற்றிய பொதுநலத் தொண்டு கணக்கிலடங்காது. அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலும் சரி, அவர்கள் மறைந்த பின்னரும் சரி, பிறமதத்து சகோதர்களே அவர்கள் மீது கூடுதல் அன்பும், எல்லையற்ற அபிமானமும் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

நாகூரில் நிகழ்ந்த நகர்வலம் ஒன்றிற்கு மராத்தி மன்னர்கள் வழங்கியதாக தஞ்சை சரஸ்வதி மகாலில் காணப்படும் மோடி ஆவணங்களில் கீழ்க்கண்ட தகவல்கள் நம் கூற்றுக்கு சுவராஸ்யம் கூட்டும் [மராத்திய மோடி எழுத்தில் எழுதப்பட்டதால் இது ‘மோடி ஆவணம்’ என்றழைக்கப்படுகிறது. மற்றபடி நமோ பிரியர்கள் இதில் உரிமை கொண்டாடத் தேவையில்லை].

ஈட்டிக்காரர்கள்-40, யானையின் மேலுள்ள விருதுகள், மேளம், சங்கீத மேளம், அரபி வாத்தியம், துருப்புகள், கோட்டையிலும் கோட்டைக்கு வெளியிலுமுள்ள தப்பு, தம்பட்டம் வகையறா, நெட்டியினால் செய்த மரங்கள், தீவட்டிகள்-20, வாணங்களின் கடிகள், பல்லக்குத் தூக்குகிற ஆட்கள்-5, டகோரா வாத்தியம் ஜோடி-1, குதிரையின் சேணங்கள், நாகூர் தர்காவிற்கு நகரா வாத்தியமும் தர்காவில் மூடுகிற போர்வையும், பண்டிகையையொட்டி நிகழும் கொடியேற்றத்தின் போது, விளக்கு எண்ணைய் வாங்க பத்து நாட்களுக்குப் பணமும் அரண்மனையிலிருந்து தந்ததாக கணக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. (தொகுதி 1:212/ 214/215/217)

போர்த்துகீசியர்களை எதிர்த்த இறைநேசர்

அந்நிய நாட்டு சக்திகள் சோழமண்டல கடற்கரையோரங்களிலும், தென்மாவட்ட கடற்கரையோரங்களிலும், கேரளக் கடற்கரையோரங்களிலும் அத்துமீறி ஆக்கிரமிப்பு நடத்தியபோதெல்லாம் அரணாக இருந்து தென்னிந்திய மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுத்தவர் நாகூர் இறைநேசர் என்பது பெரும்பாலோருக்கு போய் எட்டாதச் செய்தி.

மதநல்லிணக்கத்திற்கு அவர்கள் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள் எனலாம். மக்களின் நல்வாழ்வுக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்தார்கள். இன்னும் சொல்லப்போனால் போர்த்துகீசியர்கள் தமிழக மண்ணில் அழுத்தமாக காலூன்ற முடியாமல் போனதற்கு அவர்கள் காட்டிய கடும்எதிர்ப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இல்லையென்றால் தமிழகத்தின் இப்பகுதி மற்றொரு கோவா மாநிலமாக மாறியிருக்கும். இந்நேரம் நம் அம்மணிகள் கவுன் அணிந்த ‘ஆன்டி’களாக வலம் வந்துக் கொண்டிருப்பார்கள்.

ஆன்மீக ஞானிகளின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னே ஒரு மறைவான நோக்கம் இருக்கும். வடநாட்டிலிருந்து வந்து தமிழக கடற்கரையோரம் இப்பகுதியை தேர்ந்தெடுத்து அவர்கள் இங்கு வந்து குடிபெயர்ந்ததற்கு காரணம் உண்டு. குவாலியரைச் சேர்ந்த அவர்களின் குரு ஹஸ்ரத் முஹம்மது கெளது என்ற ஆன்மீக ஞானியின் பரிந்துரையின் பேரில்தான் அவர்கள் இவ்வூரை தங்களது இருப்பிடமாக்கிக் கொண்டார்கள். இப்பகுதியில் இறைநேசரின் பிரச்சாரத்தால் இஸ்லாத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

நாகூர் ஆண்டகை போர்த்துகீசியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது. இறைநேசரின் உயிருக்குச் சேதம் விளைவிப்பதற்காக போர்த்துகீசியர்கள் பலவிதத்திலும் முயன்று தோற்றுப் போனார்கள்.

குடகு தேசத்து ஆயுதம் தாங்கிய வீரர்கள் அவர்களை கொல்ல வந்தபோது, முயற்சி பலனளிக்காமல் தோற்றுப்போனதோடு மட்டுமின்றி மாண்டும் போனார்கள் என்ற விவரத்தை “மதுரை தமிழ் சங்கத்து நான்காம் நக்கீரர்” என்று போற்றப்பட்ட நாகூர் குலாம் காதிறு நாவலர் எழுதிய நூலின் குறிப்பு சான்று பகர்கிறது குடகு தேசம் என்று அவர் குறிப்பிடுவது போர்த்துகீசியர்களின் கோட்டையாக விளங்கிய இன்றைய கோவா மாநிலம்.

போர்த்துகீசியர்களின் அட்டகாசங்கள்

போர்த்துகீசியர்கள் முஸ்லீம்களின் மீது புரிந்த அடக்குமுறை, அட்டூழியங்கள் குறித்து டான்வர், வைட்வே, ரோலாண்டு E.மில்லர், C.R.D.சில்வா, மானா மக்கீன், ஓ.கே.நம்பியார், , மஹதி போன்றவர்கள் நிறையவே எழுதியுள்ளனர். கப்பல்கள் சொந்தமாக வைத்தும், பெருமளவில் கீழைநாடுகளுக்கு வணிகம் செய்தும் பெரும் செல்வந்தர்களாக பொருளீட்டி வாழ்ந்து வந்த சோனக முஸ்லீம்களின் வியாபாரத்தை நசுக்கி, பொருளாதார ரீதியில் அவர்களுக்கு பெருத்த சேதத்தை உண்டு பண்ணியவர்கள் போர்த்துகீசியர்கள்.

போர்த்துகீசியர்களுக்குப் பிறகு வந்த டச்சுக்காரர்களும் முஸ்லீம்களின் மீது அதேபோன்று பகைமை உணர்ச்சியை வெளிக்காட்டினாலும், போர்த்துகீசியர்கள் அளவுக்கு மகாகொடுமைக்காரர்களாக இருந்ததில்லை.

போர்த்துகீசியர்கள் பிரதான எதிரிகளாகக் கருதியது முஸ்லீம்களைத்தான். இந்துக்களும் போர்த்துகீசியர்களின் அட்டூழியத்திலிருந்து தப்பவில்லை. நாகூரில் இருந்த அரங்கநாதர் கோயிலை போர்த்துகீசியர் இடித்ததாக சரித்திர ஆதாரங்கள் சான்று பகர்கின்றன.

போர்த்துகீசியர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டதையும் அவர்களுக்கு பெருஞ்சேதம் விளைவித்த வரலாற்று நிகழ்வுகளையும் முஸ்லீம்களை அவர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவங்களையும் ஆதாரத்துடன் என் நண்பர் நாகூர் ரூமி “குஞ்சாலி மரைக்காயர்கள்” என்ற தலைப்பில் தனி கட்டுரை ஒன்றில் வடித்துள்ளார். போர்த்துகீசிய படையெடுப்புக்கு மூலக்காரணமாக இருந்த வாஸ்கோடா காமாவை “ஷைத்தான்” என்று அவர் சித்தரிந்திருந்தது என்னை வெகுவாக ரசிக்க வைத்தது.

இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் முற்றிலும் அழிந்து போனது போர்த்துகீசிய ஆக்கிரமிப்பின்போதுதான். அக்காலத்தில் இலக்கிய படைப்புகளும், இஸ்லாமிய வரலாறு கூறும் ஆவணங்கள் அனைத்தும் பனை ஓலைச்சுவடியில்தான் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அரபுத்தமிழில் எழுதப்பட்டிருந்த மார்க்க சம்பந்தப்பட்ட நூல்கள் அதில் ஏராளம். மார்க்க நூல்கள் இந்தக் கொடிய மிருகங்களிடம் சீரழிந்து அதன் புனிதத்துவத்திற்கு பங்கம் விளைந்து விடக்கூடாதே என்று எண்ணி முஸ்லீம்களே ஏராளமான ஓலைச்சுவடிகளை கடலில் தூர எறிந்திருக்கிறார்கள் என்பதை படிக்கும்போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

ஆக, 17-ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட இஸ்லாமிய மார்க்க/ தமிழிலக்கிய படைப்புகள் நம் கையில் கிடைக்காமல் போனதற்கு போர்த்துகீசியர்களின் அட்டகாசம் ஒரு தலையாய காரணம் என்பதை வரலாற்று பதிவேடுகள் உறுதிபடுத்துகின்றன.

இறைநேசரின் அறிவுரையின்பேரில்

நாகூர் இறைநேசச் செல்வரின் அறிவுரையால் கவரப்பட்டு, அவர்களின் தூண்டுதலின் பெயரில் போர்த்துகீசிய படையுடன் எதிர்த்து போர் புரிந்தவர்களின் வரிசையில் பலரும் உண்டு. கேரளத்து குஞ்சாலி மரைக்காயர்கள், சேரந்தீவின் (Serandib) சீதாவக்கை (sitawaka) பகுதியை அரசாண்ட அரசன் மாயதுன்னே (1501-1581) போன்ற பலர்.

அதுமட்டுமின்றி நாகூரார் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்து அவர்கள் சொற்படி கீழ்ப்படிந்து நடந்த மன்னர்கள் பலர். சேவப்ப நாயக்கர் (1532-1560), அச்சுதப்ப நாயக்கர் (1560-1600), மட்டுமின்றி அதற்குப்பின் வந்த பிரதாப்சிங், சரபோஜி, இராமனாதபுரத்து சேதுபதிகள் இப்படியாக இறைநேசரின் அபிமானிகள் பட்டியல் நீள்கிறது. (முஸ்லிம் குரல் 15.02.1987)

விஜயநகர் பேரரசின் கிருஷ்ணதேவராயரையும் (1509-1529 ஆட்சி) நம் இறைநேசர் சந்தித்துப்பேசி, போர்த்துகீசியர்களை எதிர்த்து போர்புரிய ஆலோசனைகள் வழங்கி இருக்கிறார்கள்.[இத்தகவல் தமிழ்நாடு வக்பு வாரியம் வெளியிட்ட ‘இஸ்மி’ என்ற சஞ்சிகையில், ஏப்ரல், 1981 பக்கம்25, காணக் கிடைக்கிறது].

குஞ்சாலி மரைக்காயர் போர்த்துகீசியர்களை எதிர்த்து போரிட்டது மலபார் கடற்கரையில்தானே? நாகூருக்கும் கேரளத்து குஞ்சாலி மரைக்காயருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? என்ற வினா பலருடைய மனதிலும் எழலாம்.

நாகூரார் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே தமிழக கடலோரப் பகுதிகளை போர்த்துகீசிய படைகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு உறுதி பூண்டார் குஞ்சாலி மரைக்காயர். இதற்கு சீதாவக்கை அரசின் மாயதுன்னே முழு ஒத்துழைப்பும் நல்குவதற்கு முழுமனதுடன் முன்வந்தார். [ஆதாரம்: Portugese rule in Ceylon 1966 edition P:65 by Tikiri Abeya Singhe, University of Ceylon]

கி.பி. 1537-ல் நாநோடி குன்ஹா என்பவர், கவர்னர் பதவிக்கு வந்தபோது தியோ-கோ-தே-எஸல்வேலி என்பவனின் தலைமையில் கோழிக்கோடு கடற்கரையை முற்றுகையிட முயன்றான். போப்பூர் நதிக்கரையில் உள்ள சாலியன் என்ற இடத்தில் கோட்டையைக் கட்டவும் முயற்சிகள் மேற்கொண்டான்,. குஞ்சாலி மரைக்காயர் சாலியன் கோட்டையை தாக்குதல் நடத்தி போர்த்துகீசியர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக நாகப்பட்டின கடற்கரையிலும் இப்போர் மூண்டது. இங்கு 51 சிறப்புக் கப்பல்களில் 8000 வீரர்களுடன் குஞ்சாலி மரைக்காயர் வந்து போர்த்துகீசியர்களை எதிர்க்கொண்டார். இச்சம்பவங்கள் யாவும் நாகூர் இறைநேசர் நாகூரில் வாழ்ந்துவந்த காலங்களில் ஏற்பட்டவை.

ஏற்கனவே 1536-ஆம் ஆண்டு நடந்த போரில் குஞ்சாலி மரைக்காயர் போர்த்துகீசியர் கப்பல்களுக்கு பெரும் பொருட்சேதத்தை விளைவித்தார். அவர்களை வேதாளை எல்லையிலிருந்து தூத்துக்குடி எல்லை வரை விரட்டியடித்தார்

மீண்டும் கி.பி. 1538-ஆம் ஆண்டில் தூத்துக்குடி கடற்கரையோரங்களில் போர்த்துக்கீசியருக்கும், குஞ்சாலி மரைக்காயருக்கும் உக்கிரமான போர்கள் நடைபெற்றன. இங்கும் போர்த்துக்கீசிய படையை குஞ்சாலி மரைக்காயர் தோற்கடித்தார்.

குஞ்சாலி மரைக்காயர் கேரளத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் நாகூர் கடலோரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலும் அந்நிய சக்திகளை எதிர்த்து போராடி தமிழக மக்களுக்கு அரணாக இருந்து போர்புரிந்தது நாகூர் இறைநேசர் அவர்களின் உத்தரவின் பேரில்தான்.

ஒரு மனிதரை சுதந்திர போராட்ட வீரராக கருதுவதற்கு அவர் வாளெடுத்து அந்நியர்களோடு போர் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆயுதமேந்தி களம் காண வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. போர் வீரர்களுக்கு கிரியாவூக்கியாகவும், தூண்டுதலாகவும் இருந்து அவர்களைச் செயல்படுத்த வைத்தார்களே அந்த மாமனிதர் அதுவே நிறைவானச் செயல்.

இறைநேசர் சேரந்தீவு (சிலோன்) சென்று வந்ததற்கு சரித்திர ஆதாரங்கள் உள்ளதைக் கண்டோம். அவர்களுடன் பயணித்த சீடர்களில் ஒருவர் செய்யது ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் என்ற புனிதர். அவருடைய சமாதி கண்டியில் உள்ள மீரா மக்காம் என்ற இடத்தில் உள்ளது.

பல கலைகளை கற்றுத் தேர்ந்திருந்த நாகூர் இறைநேசர் கேரளத்து பொன்னானி பகுதிக்குச் சென்று தங்கியிருந்தபோது குஞ்சாலி மரைக்காயரின் போர்வீரர்களுக்கு போர் பயிற்சியும் அளித்திருக்கிறார்கள்.

குஞ்சாலி மரைக்காயர், பச்சை மரைக்காயர், அலி இப்ராஹிம் இந்த மூன்று தளபதிகளும் நாகூர் இறைநேசரின் சிஷ்யக்கோடிகள். நாகூராரின் உத்தரவின் பேரிலேயே இவர்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் இருந்தன.

இறைநேசரின் தூண்டுதலும், அவர்களின் ஆலோசனைகள் அறிவுரைகளும் இந்த மூன்று தளபதிகளுக்கும் உந்துச் சக்தியாய்த் திகழ்ந்தன. நாகூரார் அளித்த உற்சாகம் அவர்களுக்கு அளித்த போர்ப்பயிற்சி ஆகியவை மனதளவில் அவர்களுக்கு ஆற்றலையும், நம்பிக்கையையும் வளர்த்து வீர உணர்ச்சியை உரமேற்றியது.

அந்நிய சக்திகளுக்கு எதிராக உயிரை துச்சமாக மதித்து போராடி வீர தீர செயல்கள் புரிந்த மாவீரன் குஞ்சாலி மரைக்காயர் கொழும்பில் எதிரிகளின் குண்டுக்கு இரையாகி நாட்டுக்காக தன்னுயிர் ஈந்து வீரமரணம் எய்தினார்.

இன்று முஸ்லீம்களை அந்நியர்கள் என்றும் வந்தேறிகள் என்று வாய்க்கூசாமல் பேசும் சங்பரிவார்களுக்கு இத்தககைய வராலாற்று நிகழ்வுகள் ஒருபோதும் தெரிந்திருக்க நியாயமில்லை. நேதாஜியின் இராணுவப்படைக்கு (INA) அக்காலத்தில் ஒரு டி ரூபாய் அள்ளி வழங்கிய வள்ளல் ஹபீப் முஹம்மதைதெரியுமா என்று இவர்களிடத்தில் கேட்டுபாருங்கள்.

ஹாஜி பக்கீர் முஹம்மது சேட் என்ற முஸ்லிமால் வழங்கப்பெற்ற (அப்போதைய) இரண்டு இலட்சம் ரூபாயின் மூலம் வாங்கப்பட்ட சுதேசிக்கப்பலின் மாலுமியான வ.உ.சி.க்கு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் தனி இடம் உண்டு. இருநூறுக்கும் அதிகமான சிறப்புப் போர் கப்பல்களைக் கொண்ட மாபெரும் கடற்படையை உருவாக்கி நூறு ஆண்டுகளாக அந்நியரை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த குஞ்சாலி மரைக்காயர்களின் வீரதீர சாகசங்கள் மறைக்கப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனை.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நாகூர் இறைநேசர் கொண்டிருந்த நாட்டுப்பற்றுக்கு, அவர்கள் உதிர்த்த இந்த பொன்மொழியே தக்க சான்று பகரும்.

“உண்மையையும் பொய்யையும் பிரித்தறிவிக்கும் பொருட்டு இறைவன் என்னை இந்தியாவில் தோன்றச் செய்துள்ளான்.”

தான் இந்தியாவில் பிறந்ததை ஒரு பேறாக எண்ணியதை அவர்கள் உதிர்த்த இவ்வாசகம் அவர்களின் உள்ளக்கிடக்கையை பறைசாற்றி நம் கூற்றை மெய்ப்பிக்கின்றது.

குஞ்சாலி மரைக்காயர்

நாகூர் இறைநேசச் செல்வரின் ஆன்மீக பொதுத்தொண்டால் கவரப்படவர்களின் வரிசையில் முதலாவதாக இடம் பெறுபவர் குஞ்சாலி மரைக்காயர். இவரைப் பற்றிய ஏராளமான தகவல்கள் ரோலாண்டு E. மில்லர் எழுதிய ‘Mappilla Muslims of Kerala’ என்ற நூலில் காணக் கிடைக்கிறது.

1967-ம் ஆண்டு ‘குஞ்சாலி மரைக்கார்’ என்ற பெயரில் ஒரு மலையாள திரைப்படமும், அதே பெயரில் 1968-ஆம் வருடம் எஸ்.எஸ்.ராஜன் தயாரிப்பில் கொட்டரக்காரா ஸ்ரீதரன் நடித்த தேசிய விருது பெற்ற திரைப்படமும் வெளியாகியது. அதற்கு பிறகுதான் கேரளத்தில் இருந்த பலருக்கும் குஞ்சாலி மரைக்காயரைப் பற்றிய பல அரிய தகவல்கள் தெரிய வந்தன.

1502 – 1600 இடைப்பட்ட காலங்களில் குஞ்சாலி மரைக்காயர் என்ற பெயரில் நான்கு கப்பற்படை தளபதிகள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் முறையே:

குஞ்சாலி மரைக்காயர்-1 = குட்டி அஹ்மது அலி
குஞ்சாலி மரைக்காயர்-2 = குட்டி பக்கர் அலி
குஞ்சாலி மரைக்காயர்-3 = பட்டு குஞ்சாலி
குஞ்சாலி மரைக்காயர்-4 = முகம்மது அலி

போர்த்துகீசியர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டி அவர்களை புத்தி பேதலிக்க வைத்தவர்கள் இந்த நான்கு குஞ்சாலி மரைக்காயர்கள்.

மூன்றாவது குஞ்சாலி மரைக்காயர்

மூன்றாவது குஞ்சாலி மரைக்காயர்

கோழிக்கோட்டை ஆண்டுவந்த சாமுத்திரி (Zamorin) இந்து மன்னரின் கப்பற்படைத் தளபதிகள்தான் இந்த குஞ்சாலி மரைக்காயர்கள். கப்பற்படை வியூகம் அமைப்பதில் தலைச்சிறந்தவர்கள். போர்முறைகளில் அபாரமான தேர்ச்சி பெற்றவர்கள். பருவக்காற்று, கடற்பயணம், கப்பல் செலுத்தும் முறை ஆகிய நுணுக்கங்கள் நன்கு அறிந்தவர்கள். குஞ்சாலி மரைக்காயர்கள் கடற்போர் வழிமுறைகளில் புதுப்புது யுக்திகளைக் கையாண்டார்கள்.. கொரில்லா தாக்குதல் முறையை அறிமுகப்படுத்தி எதிரிகளை நிலைகுலையச் செய்தார்கள்.

குஞ்சாலி மரைக்காயருக்கு மேலைநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? The Pirates. அதாவது கடற்கொள்ளையன்.. அவர்களின் பார்வையில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழிபறிக் கொள்ளைக்காரன். பகத்சிங் தீவிரவாதி. பகதூர்ஷா ஜாபர் தேசத்துரோகி. அப்படித்தானே எழுதி வைத்திருக்கிறார்கள்?

15823718._UY470_SS470_

போர்த்துகீசிய படைகளுக்கு பெரும் சவாலாக விளங்கிய மராத்திய கப்பற்படைத் தளபதி ‘சார்க்கெல்’ கனோஜி ஆங்கரே போன்றவர்கள் குஞ்சாலி மரைக்காயர்களுக்குப் பிறகு வந்தவர்களே. தமிழில் சாண்டில்யன் எழுதிய “ஜலதீபம்”, “கடல் புறா” என்ற வரலாற்றுப் புதினங்களில் கனோஜி ஆங்கரே ஒரு முக்கிய கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருப்பது நம்மில் பலருக்கும் நினைவிருக்கலாம்.

இந்திய விடுதலைக்காக, காலனி ஆதிக்கத்தை எதிர்த்து, இறுதி வரைப் போராடி, அவர்களுக்குப் பல சேதங்களை ஏற்படுத்தி, பாரதத்திற்கு வெற்றிகள் பல தேடித் தந்த தலைசிறந்த மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் என்ற வரலாற்றை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. முதலாம் குஞ்சாலி மரைக்காயர் 11 கப்பலுடன் இலங்கைவரை சென்று போரிட்டு அங்கு வீரமரணம் அடைந்தவர்.  இரண்டாவது குஞ்சாலி மரைக்காயர் கண்ணனூர் கடற்பகுதியில் புகுந்த போர்த்துக்கீயர் தாக்கியபோது பொன்னானியில் கோட்டை கட்டியிருந்த அவர்அங்கேயே மரணமடைந்தார்.

கேரளத்து மரைக்காயர்மார்கள் தொடக்கத்தில் கொச்சியில்தான் இருந்தார்கள். போர்த்துகீசியர்களின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு பொன்னானி என்ற பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள். பொன்னானிக்கு நாகூர் ஆண்டகை சென்று வந்ததற்கான சரித்திர ஆதாரங்கள் உண்டு என்பதை பலரும் அறிவர்.

போர்த்துகீசியர்களை எதிர்த்து போரிடுவதற்கு இந்த மரைக்காயர்மார்கள் தங்களின் உடல் வலிமையை மாத்திரம் உவந்தளிக்கவில்லை, மேலும், படை பலத்தையும், தங்களின் செல்வங்களையும் ஏராளமாக கொடுத்து துணைபுரிந்தார்கள். இதன் காரணமாகவே கோழிக்கோடு சாமுத்திரி அரசர்கள் இவர்களை கப்பற்படைத் தளபதியாக்கி அவர்களுக்கு பெரிதும் முக்கியத்துவம் தந்தனர்.

சாமுத்திரிகள் மற்றும் போர்த்துகீசியர்களுடனான போர் 16-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது. வீரத்தால் இவர்களை வெல்ல முடியாது, வெறும் சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும் என்ற முடிவுக்கு வந்தனர் போர்த்துகீசியர். , அதற்கான சதித்திட்டத்தையும் தீட்டினர்.

நான்காம் குஞ்சாலி மரைக்காயர் சாமுத்திரிகளின் அரசை கைப்பற்ற திட்டம் தீட்டுகிறார் என்ற வதந்தியை பரப்பி, அம்மன்னரையும் நம்ப வைத்தனர். அது வேலை செய்தது. இறுதியில் போர்த்துகீசியர்களும் சாமுத்திரிகளும் கைக்கோர்த்து நான்காம் குஞ்சாலி மரைக்காயரை போரிட்டு வீழ்த்தி 1600-ல் அவரை மாய்த்தனர்.

குஞ்சாலி பயன்படுத்திய வாள்

குஞ்சாலி மரைக்காயர் பயன்படுத்திய வீரவாள் இன்னும் வடகரை மாவட்டதிலுள்ள கோட்டக்கல் பள்ளிவாயிலில் பாதுக்கக்கப்பட்டு வருகிறது

கொச்சினில் உள்ள பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு துறைக்கு ‘குஞ்சாலி மரைக்காயர் ஸ்கூல் ஆஃப் மரைன் எஞ்சினியரிங்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

images

மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் ஒரு பிரிவுக்கு ‘ஐ.என்.எஸ். இரண்டாம் குஞ்சாலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

kunjali

மூன்று ரூபாய்க்கான கலர் ஸ்டாம்ப் ஒன்று கடந்த 2000 டிசம்பர் 17-ம் தேதி குஞ்சாலியின் கடல் படையை நினைவூட்டும் விதமாக வெளியிடப்பட்டது.

கோழிக்கோட்டில் அவர் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு வீட்டை குஞ்சாலி நினைவகமாக அரசு வைத்துள்ளது. அதில் அவர் பயன்படுத்திய வாள்கள், போர்க்கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Kunjali Maraicar

நாகூராரின் ஆன்மீக சிந்தனையில் கவரப்பட்ட ஒரு குஞ்சாலி மரைக்காயர் அவர்களை நாடி வந்து நாகூரிலேயே வசித்தார் என்பது சரித்திரம். நாகூரில் பெயர் பெற்று விளங்கும் “குஞ்சாலி மரைக்காயர் தெரு” அந்த சுதந்திர போராட்ட மாவீரரின் நினைவாகவே சூட்டப்பட்டுள்ளது.

முஸ்லீம்கள் மீது பகைமை ஏற்படக் காரணம்

போர்த்துகீசியர்களுக்கு முஸ்லீம்கள் மீது ஏனிந்த பகைமை உணர்ச்சி எற்பட்டது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். தென்னிந்திய கடற்கரையோரங்களில் அரேபியர்களுக்குப் போட்டியாக போர்த்துகீசியர்கள் வணிகம் புரிவதற்கு இங்குள்ள முஸ்லீம்கள்தான் தடைக்கற்களாக இருக்கிறார்கள் என்று நம்பினார்கள்.

அக்காலத்தில் சாமுத்திரி அரசர்களிடம் அரேபியர்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது உண்மை. காரணம், என்னவெனில் தென்னிந்தியாவிற்கும் அரேபியர்களுக்கும் இடையேயான நெருக்கமான உறவு மற்றும் வணிகத்தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலங்காலமாக நீடித்து வரும் பந்தம் இது. நபிகள் நாயகம் காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட தொடர்பு அல்ல. அதற்கு முன்பே ஏற்பட்ட தொடர்பு.

கேரளத்தில் சாமுத்திரி அரசர்கள் வியாபரத்திற்கு அனுமதி வழங்காததால் அவர்களின் ஆட்சியை குலைப்பதற்கு போர்த்துகீசியர்கள் சகல வித்தைகளையும் கையாண்டனர். இதற்கு முட்டுக்கட்டையாக இருந்த முஸ்லீம்கள் மீது பகைமை வளர்ந்தது; குறிப்பாக குஞ்சாலி மரைக்காயர்கள் மீது.. இந்த பகைமை நாளடைவில் பெரிதாகி முஸ்லீம்கள் என்றாலே அவர்கள் மீது போர்த்துகீசியர்களுக்கு ஒரு விதமான வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது.

கடல் வாணிபம்

.”The Kunhali Marakkar or Kunjali Marakkar was the title given to the Muslim naval chief of the Zamorin (Samoothiri)” என்று விக்கிபீடியா குறிப்பிடுகின்றது. குஞ்சாலி மரைக்காயரை Naval Chief என்று வருணித்திருப்பதால் இந்த Navy என்ற வார்த்தையின் ஆதிமூலத்தை எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

“Navy” என்ற ஆங்கில வார்த்தையே “நாவாய்” என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பிறந்ததுதான்

நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
– (புறநானூறு – பாடல் 66)

என்று கரிகால்வளவனைப் பாடுகிறார் வெண்ணிகுயத்தியார் எனும் பெண்புலவர். வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!” என்று பொருள்.

(கரிகால் வளவனின் காலம் இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகட்கு முன்பு என்பதைக் கருத்தில் கொள்க. பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஹப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞன் என்று மேலைநாட்டவர்கள் கருதுகிறார்கள். பாய்மரக்கப்பல் செலுத்திய கரிகால்வளவனின் காலம் அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முந்தைய காலம்.

சுலைமான் நபி (King Solomon) காலத்திலிருந்தே, தமிழ்நாடு/ கேரள நாட்டிற்கும் அரபிகளுக்கும் இடையே வர்த்தக உறவு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதில் மிளகு ஒரு முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முந்திய காலத்தில் எழுதப்பட்ட அரபுக் கவிஞர் உம்ருல் கைஸின் கவிதையொன்று இதற்கு சான்று பகர்கிறது.

கவிஞர் தன் காதலியின் நினைவாக பாடுகிறார். அவள் வீட்டு முற்றத்தில் புறாக்கள் எச்சம் இடுகின்றன. அந்த எச்சம் எப்படி இருக்கிறதென்றால் இந்திய மிளகு போன்று இருக்கிறதாம். தொன்றுதொட்டே இந்த இந்தியப் பண்டம் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கின்றது என்பது புலனாகிறது.

ஒரு அரபுக்கவிஞன் தன் காதற்கவிதையில் காட்டுகின்ற ஒப்பீட்டில் ஒரு சரித்திர உண்மையையே வெளிக்காட்டி விடுகிறது.

அரேபியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.

“நீரில் வந்த நிமர்பரிப்புரவியும்”

என்று பட்டினப்பாலை வருணிக்கிறது. குதிரைகளுக்கு பதிலாக மிளகு போன்ற பண்டங்கள் இங்கிருந்து ஏற்றுமதி ஆயின. சங்ககால இலக்கியமான அகநானூறு இதனை எடுத்துக் காட்டுகிறது. இலவங்கப்பட்டை, காசியா, ஏலக்காய், இஞ்சி, மிளகு, மற்றும் மஞ்சள் வகைகள் இந்த வணிகத்தில் முதலிடம் பெற்றன. புளியை அரபி மொழியில் “தமருல் ஹிந்த்” என்றே அழைக்கின்றனர். இதற்கு “இந்தியாவின் பேரீத்தம்” என்று பொருள். இந்த வார்த்தைதான் மருவி ஆங்கிலத்தில் TAMARIND என்று ஆகியது.

250px-Pasai

சமுத்திரா அல்லது பசை (சுமத்திராவின் வடக்கு கடலோரம்) என்று அழைக்கப்படும் நாட்டின் மன்னர் (ஐந்தாம்) சுல்தான் அஹ்மது 1512-ஆம் ஆண்டில் போர்த்துகீசிய மன்னனுக்கு அரபி மொழியில் எழுதிய கடிதம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதில் நாகூர் பகுதிகளில் மரைக்காயர்மார்கள் அரிசி எற்றுமதி தொழிலில் கொடிகட்டிப் பறந்தார்கள் என்ற விவரம் காணப்படுகின்றது.

நாகூர் இறைநேசரை பொறுத்தவரை அவர்களுக்கு சமய அறிவு மட்டுமல்லாது பொது அறிவும், நாட்டு நடப்பும், உலக நடப்பும் அத்தனையும் அறிந்து வைத்திருந்தார்கள். அதற்கு காரணம் பரந்து விரிந்த இவ்வுலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள் பயணம் சென்று வந்ததால் என்று கூறலாம். அவர்கள் பயணம் சென்று வந்த நாடுகளை பட்டியலிட்டால் வியந்து போவீர்கள். தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பலூசிஸ்தான், பாராசீகம் (ஈ:ரான்), ஈராக், ஏமன், ரோம், சிரியா, சிலோன் மாலத்தீவு, லட்சத்தீவு, பர்மாவிலுள்ள மோல்மீன் பகுதி ஏனைய நாடுகளுக்கு சென்று வந்திருக்க்கும் தகவலை மூத்த பதிரிக்கையாளர் ஜே.எம்.சாலி தருகிறார்.

ஷேக் சதக் இப்ராஹிம் மரைக்காயர்

நாகூர் இறை நேசர் தஞ்சை மாநிலம் வந்தபோது அவருடன் வந்த சிஷ்யக்கோடிகளின் எண்ணிக்கை 404 பேர்கள். துறவறம் பூண்ட அவர்களை பக்கீர்மார்கள் என்று அழைத்தனர். செய்யதுனா ஷேக் சதக் மரைக்காயர் (1512-1599) என்பவர் அந்த பக்கீர்மார்களில் ஒருவர். இறைநேசரின் முதன்மைச் சீடராக (கலீஃபாவாக) விளங்கியவர். இவர் காயல்பட்டினத்தை சேர்ந்தவர். பொதுநலத்தொண்டில் சிறந்து விளங்கியவர். பிற்காலத்தில் பக்கீர் கூட்டத்திலிருந்து ஷேக் சதக் இப்ராஹிம் மரைக்காயரை நாகூர் நாயகர் விலகச் செய்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட கட்டளையிட்டார். இவர்களின் வழியில் ஆன்மீக நேசர்கள் பிறக்கட்டும் என்றும் ஆசீர்வாதித்தார்.. கீழக்கரையின் புகழ்பெற்ற இறைநேசர் சதக்கத்துல்லாஹ் அப்பா இவரது பேரர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

போர்த்துகீசிய கவர்னர் மானுவல் டிசூஸா (Manuel de Souza ) என்பவன் 1515 முதல் 1536 -வரை போர்த்துகீசிய கவர்னராக பொறுப்பெற்றிருந்தான். இவன் Alfonso Albuquerque வுக்கு பிறகு பொறுப்பேற்றவன். ஷேக் சதக் இப்ராஹிம் மரைக்காயர் வீரமிகு இளைஞர். திடக்காத்திரமான உடல்வாகு பெற்றவர். கொரில்லா தாக்குதல் முறையில், ஒருநாள் துணிச்சலாக கடலுக்குச் சென்று போர்த்துகீசிய கப்பலுக்குள்ளேயே நுழைந்தார். அந்த போர்க்கப்பலில் இருந்துக்கொண்டுதான் மானுவல் டிசூஸா உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். டிசூஸாவுடன் நேருக்கு நேர்மோதி அவனைப் பிடித்து கடலில் தள்ளினார் ஷேக் சதக்.. இந்த நிகழ்வு ரமலான் மாதத்தில் மூன்றாம் பிறையன்று (ஹிஜ்ரி 943) 1536-ஆம் ஆண்டு நடந்ததாக டாக்டர் ஷுஐபு ஆலிம் எழுதியிருக்கிறார். (ஆதாரம்: Arabic, Arwi and Persian in Serandib and Tamil Nadu by Afdalul Ulama Dr.Tayka Shu’ayb A’lim)

போர்த்துகீசிய வரலாற்று ஆவணங்களில் இதே பெயருடைய மற்றொரு மானுவல் டிசூஸாவின் நிகழ்வுகளும் காணப்படுகிறது, அவர் துறவியாகவும் எழுத்தாளராகவும் இருந்தவர். இந்த இரண்டு பேர்களையும் பலரும் குழப்பிக் கொள்கிறார்கள்,
நாகூர் – நாகை

நாகூர், நாகப்பட்டினம் இவையிரண்டும் தொன்றுதொட்டு இரட்டை நகரமென பெயர்பெற்ற ஹைதராபாத், செகந்திராபாத் போன்றே ஓர் அங்கமென செயல்பட்டன. ஓர் ஊரின் இரண்டு பகுதிகள் மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் என்றழைக்கப்பட்டதைப் போல் நாகூரும், நாகப்பட்டினமும் ஓர் ஊரின் இருகூறாகக் கருதத்தக்கவை என்று இக்கூற்றுக்கு வலுசேர்க்கிரார் இரா.பி.சேதுப்பிள்ளை.(ப:36,தமிழகம் ஊரும்பேரும்)

போர்த்துக்கீசியர்களின் பதிவேடுகள் நாகூரை ‘நாகூரு’ என்றும் நாகப்பட்டினத்தின் முஸ்லீம்களின் குடியிருப்புப் பகுதி என்றும் குறிக்கின்றன. பின்னர் ஆற்காடு நவாப்கள் இதனை “காதர் நகர்” என்று அழைத்தனர். பண்டு “புலவர் கோட்டை” என்ற மற்றொரு சிறப்புப் பெயரும் உண்டு

கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் ஆண்டகை நாகூருக்கு வருவதற்கு முன்னரே முஸ்லீம்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வணிகத்தில் சிறந்து விளங்கினர். இப்பகுதி ஏற்றுமதி இறக்குமதி கேந்திரமாக திகழ்ந்து வந்தது

போர்த்துகீசியர்களின் அத்து மீறல்கள் தலைவிரித்தாடிய போதெல்லாம் பாதுகாப்புக்கு வேண்டி கேரளக் கடலோரம் சூழ்ந்திருந்த அடர்ந்த காடுகளில் சென்று பதுக்கிக் கொள்வார்கள். ஆனால் பரந்து விரிந்த தமிழக கடற்கரைகளில் இதுபோன்ற வசதிகள் இல்லை. பிடிப்பட்ட முஸ்லீம்கள் போர்த்துகீசியரின் வன்கொடுமைக்கு ஆளானார்கள். இதுபோன்ற சித்திரவதைகளுக்கு பயந்தே உயிரை மாய்க்கவும் தயங்காமல் போரிட்டு ஏராளமான முஸ்லீம் வீரர்கள் வீரமரணம் எய்தினார்கள்.

போர்த்துக்கீசியர்கள் அட்டகாசம் மேலோங்கி இருந்த காலத்தில் கடற்கரையோரம் வாழ்ந்த முஸ்லீம்கள் தங்கள் பெயரை தமிழ் சார்ந்த பெயர்களாக மாற்றிக் கொண்டார்கள். அதேசமயம் தங்களின் இறை நம்பிக்கைக்கு குந்தகம் விளையா வண்ணம், இந்துமத கடவுள்களின் பெயர்கள் கலக்காமல் பார்த்துக் கொண்டார்கள். பிச்சை தம்பி, சீனி முத்து, குப்பை தம்பி. முத்து தம்பி, சீனி கனி, முத்து கனி, தம்பி பிள்ளை, செல்லக்கனி, செல்லத்தங்கம், முத்துதங்கம்.சீனி அப்பா, சக்கரைத்தம்பி, சின்னப் பொண்ணு, மல்லிகா, சீனியம்மா, செவத்தம்மா, செல்ல துரை, தம்பி துரை, இதுபோன்ற பெயர்கள் முஸ்லீம்களிடையே புழக்கத்திற்கு வந்தது போர்த்துகீசியர்கள் காலத்தில்தான்.

வேதாளை (Vedalai) மற்றும் சிலாபத்தில் (Chilaw) நடந்த போர்

போர்த்துகீசியர்களுக்கும் குஞ்சாலிகளுக்கும் நடந்த போர் பல ஆண்டுகள் நீடித்தது. குஞ்சாலி மரைக்காயர் என்ற பெயரில் பல குஞ்சாலி மரைக்காயர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே முன்னரே பார்த்தோம். இதில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் பெரும் புகழும் பெற்றுத் திகழ்ந்தவர். அனைத்து குஞ்சாலி மரைக்காயர்களும் போர்த்துகீசியர்களுடன் எதிர்த்து போரிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீதாவக்கை ( Sitawaka), இராஜ்ஜியத்தின் மன்னனாக மாயாதுன்னே (1501-1581) என்பவன் 60 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுடைய பெரும்பான்மையான வாழ்நாள் போர்த்துகீசியர்களை எதிர்த்து போரிட்டதிலேயே காலம் கழிந்தது.

சீதாவக்கை அரசின் தலைநகரான சீதாவக்கபுரி (இன்றைய அவிசாவளை) அக்காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆண்ட போர்த்துகீசியரால் அழித்தொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வரசு இல்லாமற் போனது.

1525, 1527, 1536, 1539 ஆகிய காலங்களில் சாமுத்திரி (Zamorin) முஸ்லிம் படைவீரர்கள் குறிப்பாக சோனகர்கள், சேரந்தீவுக்குச் சென்று மாயதுன்னே அரசனுக்கு ஒத்தாசையாக போர்த்துகீசிய படைகளை எதிர்த்து போரிடுவதற்கு பெரிதும் துணை புரிந்தனர்.

வேதாளை அடுத்துள்ள கடல்பகுதிதான் போர்த்துகீசியர்களுடன் நடந்த யுத்தத்திற்கு களம் ஆனது. 1525- ஆண்டு முதல் இந்தப் போர் நடை பெற்றது.

கேரளப் பகுதியில் கொச்சி, பொன்னானி, பர்கூர், செதுவாய் ஆகிய இடங்களிலும் பெரும் போர்கள் நடந்தன. போர்ச்சுக்கீசியருக்குப் பெரும் அவமானமும், தோல்வியும், சேதமும் ஏற்பட்டது.

வேதாளை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும் . கீழக்கரைக்கும் இராமேஸ்வரத்திற்கு இடையே உள்ள இந்த கடற்பகுதியில்தான் கடற்படை தாக்குதல் நடைபெற்றது.

இவ்வூரின் வடக்கே பாக் நீரிணையும், தெற்கே மன்னார் வளைகுடாவும் கடல் எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்கே சுந்தரமுடையான் கிராமமும் கிழக்கே மரைக்காயர்பட்டினமும் வீற்றுள்ளது. சுமார் 20 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இவ்வூர் தெற்கே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் முசல் தீவு காணப்படுகிறது. இப்பகுதி அரிய கடல் உயிரினங்களை கொண்டுள்ளது ஆகவே மத்திய அரசால் இப்பகுதி கண்காணிக்கப்படுகிறது.

இவ்வூர் இப்னு பதூதா என்னும் அறிஞரால் ”பதலா” எனும் பெயருடன் அறியப்பட்டுள்ளது. வேத அலை என்னும் பெயர் மருவி ”வேதாளை” ஆனது எனவும் கூறுகின்றனர்..

ஆரம்ப காலத்தில் இருந்தே இப்பகுதியில் கடல் வழி வாணிபமும் ,மீன்பிடி தொழிலும் முக்கியத்துவம் பெற்றவை. இலங்கைக்கு இங்கிருந்து பல குடும்பங்கள் வாணிபம் மூலமாக இடம்பெயர்ந்தும், இங்கே குடியேறியும் உள்ளன.
சிலாபம் (Chilaw)

சிலாபம் (Chilaw) புத்தளம் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற மீன் சந்தையைக் கொண்ட ஓர் பெரிய நகர். இது

1927-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இந்த இடத்திற்கு வருகை புரிந்தார். சிலோன் என்று அப்பொழுது அழைக்கப்பட்ட இலங்கைக்கு ஒரே ஒரு முறைதான் மகாத்மா காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
வேதாளையில் காணப்படும் கல்லறை நினைவுக்கற்கள் போர்த்துகீசியர்களுடன் போரிட்டு மடிந்த முஸ்லீம் பெருமகனார்களைப் பற்றிய விவரங்களைக் கூற போதுமானது.

குஞ்சாலி மரைக்காயர்களில் ஒருவரின் கல்லறை சிலாபத்தில் உள்ளது. சிலாபம் என்ற இடத்தை 1304 முதல் 1377 வரை உலகம் சுற்றிவந்த இப்னு பதூதா “பந்தர் சலாவத்” என்று இப்பகுதியைக் குறிப்பிடுகிறார்.

பந்தர் என்றால் துறைமுகம் என்று பொருள். பரங்கிப்பேட்டைக்கு “பந்தர்” என்ற மற்றொரு அடைமொழியும் உண்டு என்பதை காண்க. இன்றளவும் சிலாபத்தில் போர்த்துகீசியர்களுடன் போரிட்டு வீரமணம் எய்திய பலரது கல்லறை காணப்படுகிறது. இதுவரை எந்த ஆய்வாளர்களும் இதனை ஆராய்ந்து போதுமான தகவல்கள் வெளிக்கொணரவில்லை என்பது மிகுந்த ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

– அப்துல் கையூம்

தொடர்புடைய சுட்டி :

ஆசியாநெட்டில் குஞ்சாலி மரைக்கார்

குஞ்சாலி மரைக்காயர்கள்

நான்தான் அந்த நாகூரி

 

 

 

Tags: ,