RSS

Tag Archives: நாகூர் ஒரு வேடிக்கை உலகம்

சங்கு பாவா


கைலி உடுத்தும் நம்மூர்க்காரர்களுக்கு சங்கு என்றால் இரண்டு சங்கு ஞாபகத்திற்கு வரும். ஒன்று பாளையகாட் சங்கு. இன்னொன்று அபுபக்கர் சங்கு. மூன்றாவது சங்கு ஒன்று உண்டு. அது சங்குபாவா வைத்திருக்கும் சங்கு.

பாரதிதாசன் “சங்கே முழங்கு!” என்று பாடலெழுதியதை சீரியஸாக எடுத்துக் கொண்டு சங்கு துணைகொண்டு குறி சொன்ன நம்மூர் சங்கு பாவாவை  மறக்கத்தான் முடியுமோ? நாகூரின் விநோதமான கேரக்டர்களின் வரிசையில் இவரும் நிலை பெற்று விட்டவர்.

‘சங்கு சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்’ என்று பாடும் பாட்டு இவருக்குத்தான் பொருந்தும். விவேக் ஒரு படத்தில் திருஷ்டிக்காக தொங்கவிடப்பட்டிருக்கும் சங்கைப் பார்த்து டயலாக் பேசுவார். “பொறந்தாலும் சங்கை எடுத்து பால் ஊத்துறீங்க. செத்தாலும் சங்கை எடுத்து ஊதுறீங்க. இந்த இடைப்பட்ட Gap-லேயாவது சங்குக்கு கொஞ்சம் ரெஸ்ட் விடக் கூடாதா?” என்று கேட்பார். இந்த வசனம் நம்ம சங்கு பாவாவை வைத்து எழுதப்பட்ட வசனம் போலவே இருக்கும்.

அல்லாஹ்வுடன் தொடர்பு கொண்டு பேச நேரடி டெலிபோன் நம்பர் உண்டு என்பார் நண்பர் ஹாரீஸ். அந்த நம்பரையும் கூறினார். 24434 என்ற நம்பர்தானாம் அது. தொழுகையின் மூலம் இறைவனிடம் உரையாடலாம் என்று கூறும்போது, ஐந்துவேளை தொழுகை ரக்காத்து முறையே சுபுஹூ2 + லுஹர்4+ அஸர்4+ மக்ரிப்3+ இஷா4 – இதுதானே இறைவனை தொடர்பு கொள்ளக்கூடிய நம்பர் என்பார். அவருடைய ஹஸ்ரத் கண்டுபிடித்த சூட்சமமாம் இது. இந்த லாஜிக் எனக்கு பிடித்திருந்தது.

சங்கு பாவா ஆண்டவனிடம் பேச தேர்ந்தெடுத்த கருவிதான் இந்த சங்கு. அவரை நாடி வரும் பக்தகோடிகளின் துயரைத் தீர்ப்பதற்கு இந்த சங்கை எடுத்து காதில் வைத்து, யாகாவாமுனிவர் பேசும் பறவை பாஷைபோல் ஏதோ ஒரு சங்கேத மொழியில் ஆகாயத்தைப் பார்த்து உரையாடி, பின்னர் பக்தர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்.

எந்த சாட்டிலைட்டுக்கும் பணம் கட்டாமல் நம்ம சங்குபாவா பேசும் நெட்வொர்க் எதுவென்று கண்டுபிடித்து இந்த ஏர்செல். ஏர்டெல், வோடாஃபோன்காரர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தால் தமிழகத்தில் இலவச போன்கால் அமுலுக்கு வந்துவிடும்

என் வீட்டிற்கு எதிரே பெட்டிக்கடை வத்திருந்த சவுரி அண்ணன்தான் ஷேக் அலாவுத்தீன் என்றாகி, பின்னர் சங்கு பாவா ஆனார் என்று பிற்பாடுதான் தெரிந்துக் கொண்டேன்.

ஒருமுறை என் நண்பர் ஒருவர் நேராக சங்குபாவாவிடம் சென்று “பாவா! உங்களுக்காக டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகாரர்கள் பெரிய தொகையில் ஒரு பில் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்” என்று சொல்ல, அவர் அலறியடித்துக் கொண்டு “எங்க வூட்லே டெலிபோன் கனெக்ஷனே கிடையாதே! வேறு எதுக்கு எனக்கு பில் அனுப்புறாங்க?” என்று அப்பாவித்தனமாகக் கேட்க “அது வேறு ஒண்ணுமில்லே! டெலிபோன் எக்ஸ்சேஞ்சுலே நீங்க ஆண்டவன்கூட அடிக்கடி சங்கு வச்சு பேசுற கால் கிராஸ்டாக் ஆவுதாம். அதனாலே அந்த பில் எல்லாத்தையும் உங்களுக்குத்தான் அனுப்பப் போறதா பேசிக்கிறாங்க!” என்று மிரட்ட, “வாப்பா! நான் 5-க்கும் 10-க்கும் என் பொழைப்பை இந்த சங்கை வச்சு ஓட்டிக்கிட்டு இருக்குறேன். என் பொழப்புலே மண்ணை வாரிப் போட்டுடாதீங்க வாப்பா” என்று உண்மையை ஒத்துக் கொள்ள அவருக்கே இரக்கம் வந்து மேலும் 10 ரூபாய் கொடுத்துட்டு வந்திருக்கார்.

 

Tags: , , ,

உண்டிமே நியாஸ் டாலோ


நாகூர் தர்காவிற்கு வருகைதரும் பக்தகோடிகளின் காதுகளில் “காணிக்கை உண்டியல்லே போடுங்க” என்ற ‘கணீர்’ நாதம் விழாமல் இருக்க வாய்ப்பில்லை.

வெளி மாநிலக்காரர்களைக் கண்டுவிட்டால் “உண்டிமே நியாஸ் டாலோ” என்ற மொழிபெயர்ப்பு வாசகம் இன்னும் சற்று உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும்.

ஹூ….ம். அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு. லட்சக்கணக்கில் முதலீடு செய்துவிட்டு எதிர்பார்த்த வசூல் கிடைக்காவிட்டால் உண்டியல் காண்ட்ராக்ட் எடுத்தவரின் நிலைமை என்னாவது?

ரிகார்ட்டிங் முடிந்த கையோடு, ஏ.ஆர்.ரகுமான் , கேசட் வடிவிலான தங்க பிஸ்கட்டினை தர்கா உண்டியலில், நெரிசல் குறைந்த நேரத்தில்,  நைஸாக வந்து போட்டுவிட்டு, நல்ல பிள்ளையாக போய்விடுவாராம். உண்டியல் காண்ட்ராக்ட் எடுத்தவர் அன்று நரிமுகத்தில் (தபேலாக்காரர் அல்ல) முழித்திருப்பார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். [ஆஸ்கார் அவார்ட் வாங்குவதற்கு முன் ஆஸ்கார் சிலை வடிவிலான தங்கச்சிலையை உண்டியலில் போட்டுவிட்டுப் போயிருப்பாரோ?]

கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை திருப்பதி சென்றிருந்தபோது திருமலையான் உண்டியலில் இக்கவிதையை எழுதி சேர்ப்பித்தாராம்

“எங்கடனைத் தீர்ப்பாய் இறைவா திருமலைவாழ்
வெங்கடேசு ரப்பெருமாள் வேந்தனே – மங்காத
செல்வம் எனக்கள்ளித் தினமும் தருவாயேல்
நல்வழியில் வாழ்ந்திருப்பேன் நான்!”

திருப்பதி உண்டியல் காண்ட்ராக்ட்காரர் உண்டியலை திறந்து பார்த்தபோது நொந்து நூடுல்ஸாகி இருப்பார்.

காணிக்கையாக காசோ, நகையோ போட்டிருந்தாலாவது தேவலாம். அட்லீஸ்ட் தெலுங்கில் ஒரு கவிதை எழுதியிருந்தாலாவது அவருக்கு புரிந்திருக்கும். வெறும் துண்டு காகிதத்தை வைத்துக்கோண்டு என்ன செய்வார். பாவம் காண்ட்ராக்ட்காரர்!

ஒருவேளை கண்ணதாசன் நாகூருக்கு விசிட் அடித்திருந்தால் “உண்டிமே நியாஸ் டாலோ” என்ற பொன்மொழிக்கான உண்மையான அர்த்தம் அவருக்கு புரிந்திருக்குமோ..?

“தர்ஹா உள்ளே
காணிக்கை எல்லாம்
உண்டியல் போட
கட்டளைக் குரல்கள்..! “
–  என்ற கவிஞர் ஜபருல்லா அவர்களின் வசனகவிதை என் நினைவுக்கு வந்தது.

 

Tags: , ,