பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய ‘தூயவன்’, ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர். ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ உள்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர்.
திரை உலகில் புகுந்த எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தோல்வியைத்தான் தழுவினர். வெற்றி பெற்ற சில எழுத்தாளர்களில் ஒருவர் ‘தூயவன். ‘இவர் நாகூரைச் சேர்ந்தவர். இயற்பெயர் எம்.எஸ்.அக்பர். இவருடைய தந்தை ஷாகு ஒலியுல்லா, அந்தக் காலத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் ‘பி.ஏ’ பட்டம் பெற்று, தஞ்சையில் ரிஜிஸ்திரார் ஆகப் பணியாற்றியவர். தாயார் பெயர் ஜொகரான்.
ஐந்து பெண்களுக்கு மத்தியில் பிறந்த ஒரே ஆண் வாரிசு என்ற முறையில், தூயவன் மீது பெற்றோர் மிகுந்த அன்பு செலுத்தினர்.
தூயவன், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால், படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார், தூயவன். நாகப்பட்டினம், இலக்கியவாதிகள் நிறைந்த ஊர். அப்துல் வகாப் சாப் என்ற ஆன்மீக இலக்கியவாதியின் தொடர்பு கிடைத்ததால், தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடிந்தது.
‘தினத்தந்தி’, ‘ராணி’, ‘ஆனந்தவிகடன்’, ‘தினமணி கதிர்’ உள்பட பல பத்திரிகைகளில் தூயவனின் கதைகள் பிரசுரமாகி வந்தன.
1967-ம் ஆண்டில், ‘ஆனந்த விகடன்’ அதன் முத்திரைக் கதைகளுக்கு வழங்கி வந்த நூறு ரூபாய் பரிசுத்தொகையை, 500 ரூபாயாக உயர்த்தியது.
‘தூயவன்’ எழுதிய ‘உயர்ந்த பீடம்’ என்ற கதை, 500 ரூபாய் பரிசு பெற்ற முதல் முத்திரைக் கதையாகும். இதனால், தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற எழுத்தாளரானார்.
அது, டெலிவிஷன் இல்லாத காலம். மேடை நாடகங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தன. மேஜர் சுந்தரராஜன் மேடையிலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கினார்.
தூயவன் சென்னை சென்று, மேஜர் சுந்தரராஜனை சந்தித்தார். தன்னை ஒரு எழுத்தாளர் என்று மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டு, கதை-வசனம் எழுதும் வாய்ப்பு கேட்டார்.
உடனே மேஜர், ‘நீங்கள் எல்லாம் என்னப்பா எழுதுகிறீர்கள்! ஆனந்த விகடனில் தூயவன் என்ற எழுத்தாளர் முத்திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை என்றால் அப்படி எழுதவேண்டும்! என்ன நடை… என்ன எழுத்து!’ என்றார்.
அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த தூயவன், ‘நீங்கள் பாராட்டுகிற அந்தக் கதையை எழுதிய தூயவன் நான்தான்!’ என்று நிதானமாகக் கூறினார்.
மலைத்துப்போய் விட்டார், மேஜர். பிறகு தூயவனை உள்ளே அழைத்துச் சென்று, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தார். மேடை நாடகம் எழுதும் வாய்ப்பை அளித்தார்.
மேஜருக்காக ‘தீர்ப்பு’ என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார், தூயவன்.
இதே சமயத்தில் ஏவி.எம்.ராஜனும் தூயவனுடன் தொடர்பு கொண்டு நாடகம் கேட்டார். அவருக்காக தூயவன் எழுதிய நாடகம் ‘பால்குடம்.’ இந்த நாடகம்தான் முதலில் அரங்கேறியது.
‘தீர்ப்பு’ நாடகத்தின் 100-வது நாள் விழாவுக்கு, எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.
‘நாடகம் மிகச்சிறப்பாக உள்ளது. இந்து சமய கோட்பாடுகளில் எவ்வித பிழையும் நேரிடாமல், மிகவும் நுட்பமாக ஆராய்ந்து நாடகத்தை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் என்பது, ஆச்சரியமான விஷயம்’ என்று எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, தூயவனுக்கு கெடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
‘பால்குடம்’ நாடகமும், அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. அப்போதுதான் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் இந்த நாடகத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு தூயவனுக்கு பரிசு வழங்கினார்.
இந்த சமயத்தில் தூயவனுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். தனக்கு மனைவியாக வரும் பெண், இலக்கியத் துறையைச் சேர்ந்தவளாக – எழுத்தாளராக இருக்க வேண்டும் என்று தூயவன் விரும்பினார்.
‘தினமணி கதிர்’ வார இதழின் ஆசிரியராக ‘சாவி’ இருந்த நேரம் அது. ‘தூயவன்’ எழுதிய ‘சிவப்பு ரோஜா’ என்ற கதை, பரிசுக் கதையாக அதில் பிரசுரமாகியிருந்தது. அதே இதழில், ‘செல்வி’ என்ற பெண் எழுத்தாளர் எழுதிய கதையும் பிரசுரமாகியிருந்தது.
‘செல்வி’ என்ற புனைப்பெயரில் அந்தக் கதையை எழுதியவர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதும், பெயர் கே.ஜெய்புன்னிசா என்பதும் தூயவனுக்குத் தெரிந்தது.
உடனே தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். தூயவனின் தாயார், பெரியம்மா, அக்கா, மாமா ஆகியோர் கோவைக்குச் சென்று, பெண்ணைப் பார்த்தார்கள்.
இரு தரப்பினருக்கும் பிடித்துப்போகவே, தூயவன் என்கிற எம்.எஸ்.அக்பருக்கும், ஜெய்புன்னிசாவுக்கும் 27-9-1968-ல் கோவையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு ஏவி.எம்.ராஜன் – புஷ்பலதா, மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.
திருமணம் நடந்தவேளை, பட வாய்ப்புகள் தூயவனைத் தேடி வந்தன
ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, “அன்புள்ள ரஜினிகாந்த்”, “வைதேகி காத்திருந்தாள்” உள்பட சில படங்களை தயாரித்தார்.
தூயவனுக்கு கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, இரண்டு பெரிய படக் கம்பெனிகள் அவரை அணுகி, “பால்குடம்” கதையை படமாக்கும் உரிமையைக் கேட்டன. பெரிய தொகை தரவும் முன்வந்தன.
அதே சமயம், “பால்குடம்” கதையை படமாக்க வேண்டும் என்ற எண்ணம், அதை நாடகமாக நடத்தி வந்த ஏவி.எம்.ராஜனுக்கும் இருந்தது. எனவே, பெரிய தொகைகளுக்கு ஆசைப்படாமல், தன் கதையை நாடகமாக அரங்கேற்றிய நன்றிக்கு அறிகுறியாக, படமாக்கும் உரிமையை ஏவி.எம்.ராஜனுக்கே தூயவன் தந்தார்.
பால்குடத்தை ஏவி.எம்.ராஜன் படமாகத் தயாரித்தபோது, வசனம் எழுதும் வாய்ப்பை தூயவனுக்கே வழங்கினார். படத்தில் ஏவி.எம்.ராஜனும், புஷ்பலதாவும் நடித்தனர். இந்தப்படம் 50 நாட்கள் ஓடியது.
தூயவன் கதை எழுதுவதில் மட்டும் அல்ல, வசனம் எழுதுவதிலும் கெட்டிக்காரர் என்பதை பட உலகத்தினர் தெரிந்து கொண்டனர். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஜெய்சங்கர் – ஜெயபாரதி நடித்த “புதிய வாழ்க்கை”, சிவாஜிகணேசன் நடித்த “மனிதருள் மாணிக்கம்”, “ஜெயலலிதா- முத்துராமன் நடித்த “திக்குத் தெரியாத காட்டில்” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.
அந்தக் காலக்கட்டத்தில், ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் பலவற்றில் ஜெய்சங்கர் நடித்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் படங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். “முடிசூடா மன்னன்”, “கல்யாணமாம் கல்யாணம்”, “எங்களுக்கும் காலம் வரும்”, “கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன” ஆகியவை, அவற்றில் சில.
தன் படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதுமாறு தூயவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவர் அழைப்பு அனுப்பினார்.
அதைத்தொடர்ந்து “கோமாதா என் குலமாதா”, “மாணவன்”, “ஆட்டுக்கார அலமேலு”, “அன்புக்கு நான் அடிமை”, கமலஹாசன் நடித்த “தாயில்லாமல் நான் இல்லை”, ரஜினிகாந்த் நடித்த “தாய் மீது சத்தியம்”, “தாய்வீடு”, “அன்னை ஓர் ஆலயம்” முதலான படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். இந்தப் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடின.
முக்தா பிலிம்ஸ், மறைந்த வேணு செட்டியாரின் ஆனந்தி பிலிம்ஸ் ஆகியவற்றுக்காக பல படங்களுக்கு வசனம் எழுதினார். முக்தா சீனிவாசன் டைரக்ஷனில் சிவாஜிகணேசன் நடித்த “தவப்புதல்வன்” படம் 100 நாட்கள் ஓடி வசன கர்த்தா தூயவனுக்கு புகழ் தேடித்தந்தது. ரஜினிகாந்த் நடித்த “பொல்லாதவன்” படத்துக்கும் தூயவன் வசனம் எழுதினார்.
ஜாவர் சீதாராமன் எழுதிய “பணம், பெண், பாசம்” என்ற கதையை நடிகர் முத்துராமன் படமாகத் தயாரித்தார். அந்தப் படத்துக்கு தூயவன் வசனம் எழுதினார்.
நடிகர் முத்துராமன், தூயவனின் நெருங்கிய நண்பர். அவர், படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மரணம் அடைந்தார்.
இதேபோல், தூயவனுக்கு ஆதரவு அளித்து வந்த சின்னப்பா தேவரும் திடீர் என்று காலமானார். இந்த இரு மரணங்களும், தூயவனை வெகுவாக பாதித்தன.
இதன் பிறகு, வசனம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு, படத்தயாரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
நண்பர் சக்திவேலுடன் இணைந்து “எஸ்.டி.கம்பைன்ஸ்” என்ற பட நிறுவனத்தை தொடங்கி, “விடியும் வரை காத்திரு” என்ற படத்தை தயாரித்தார். இதன் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கே.பாக்யராஜ் ஏற்றதுடன் கதாநாயகனாகவும்
நடித்தார்.நகைச்சுவை கலந்த கதாநாயகனாக பாக்யராஜ் முத்திரை பதித்து வந்த காலக்கட்டத்தில், “ஆன்டி ஹீரோ”வாக – அதாவது வில்லன் மாதிரியான கதாபாத்திரத்தில் “விடியும் வரை காத்திரு” படத்தில் நடித்தார். அதை ரசிகர்கள் ஏற்காததால், படம் சுமாராகவே ஓடியது.கார்த்திக் கதாநாயகனாக நடிக்க “கேள்வியும் நானே பதிலும் நானே” படத்தை தூயவன் தயாரித்தார். இந்தப்படம் சரியாக ஓடவில்லை.
எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவருக்காகவே ஒரு கதையைத் தயாரித்து வைத்திருந்தார், தூயவன். அந்தக் கதை எம்.ஜி.ஆருக்கும் பிடித்திருந்தது. அவர் தேர்தலில் வென்று முதல்-அமைச்சர் ஆகிவிட்டதால், அதன் பிறகு நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்.
அந்தக் கதையை, ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்து அவரிடம் சொன்னார் தூயவன். கதை அவருக்கு பிடித்துப்போயிற்று. “படம் எடுங்கள். நான் கால்ஷீட் தருகிறேன்” என்றார்.
அந்தப்படம்தான் “அன்புள்ள ரஜினிகாந்த்.” எஸ்.டி.கம்பைன்ஸ் பேனரில் தூயவனும், துர்க்கா தமிழ்மணியும் தயாரித்தனர். தூயவன் வசனம் எழுதினார். நட்ராஜ் டைரக்ட் செய்தார்.
1984 ஆகஸ்டு 2-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இதுகுறித்து, தூயவன் மனைவி ஜெய்புன்னிசா கூறியதாவது:-
“ரஜினி சார் நடித்த “தாய்வீடு”, “அன்னை ஓர் ஆலயம்”, “அன்புக்கு நான் அடிமை”, “ரங்கா” முதலிய படங்களுக்கு என் கணவர் வசனம் எழுதினார். அப்போது இருவரும் நட்புடன் பழகினர். என் கணவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒரு படம் பண்ணிக்கொடுக்க சூப்பர் ஸ்டார் சம்மதித்தார். அப்போது என் கணவர் சொன்ன கதைதான் “அன்புள்ள ரஜினிகாந்த்.”
கதை ரஜினிக்கு பிடித்து விட்டது. பண விஷயம் பற்றி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் உடனே கால்ஷீட் கொடுத்தார்.
படம் தயாரிக்க பணம் வேண்டுமே என்ற கேள்வி எழுந்தபோது, ஜி.வி.சி.ஆர்.நடராஜன் என்ற பைனான்சியரிடம் என் கணவரை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.
உடனடியாக நடராஜன், பட உரிமையை வாங்கிக்கொண்டு ரூ.25 லட்சம் கொடுத்தார். “கணபதி வேல் முருகன் கம்பைன்ஸ்” என்ற பேனரில், “அன்புள்ள ரஜினிகாந்த்” தயாராகியது. ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோருடன், குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்தார். இப்படம் நூறு நாட்கள் ஓடியது.
சூப்பர் ஸ்டார் ரஜினி சார் செய்த உதவியை எங்கள் குடும்பம் என்றும் மறவாது.”
இவ்வாறு ஜெய்புன்னிசா கூறினார்.
ஆர்.சுந்தரராஜன் டைரக்ஷனில் தூயவன் தயாரித்த “வைதேகி காத்திருந்தாள்” அற்புதமான படம். இதில், அடிதடி இல்லாத குணச்சித்திர வேடத்தில் விஜயகாந்த் வாழ்ந்து காட்டினார். விதவைப் பெண்ணாக நடித்த ரேவதி, “அழகு மலராட…” நடனக் காட்சியில் மெய்சிலிர்க்கச் செய்தார்.
1984 அக்டோபர் 23-ந்தேதி வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
விஜயகாந்த் – ராதிகா நடித்த “நானே ராஜா நானே மந்திரி”, கவுண்டமணி கதாநாயகனாக நடித்த “தலையாட்டி பொம்மைகள்” ஆகிய படங்களும் தூயவன் தயாரித்தவை.
தூயவன் கடைசியாகத் தயாரித்த படம் “உள்ளம் கவர்ந்த கள்வன்.” இந்தியில் வெளியான “சிட்சோர்” படத்தின் உரிமையைப் பெற்று, அக்கதையை தமிழில் தயாரித்தார்.
படம் முடிவடையும் தருணத்தில், நாகப்பட்டினத்துக்கு சென்றிருந்தபோது, 1987 ஜுலை 11-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு, திடீரெனக் காலமானார்.
அப்போது அவருக்கு வயது 41 தான்.
தூயவன்-ஜெய்புன்னிசா தம்பதிகளுக்கு பாபு தூயவன் (இக்பால்) என்ற மகனும், யாஸ்மின் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாபு தூயவன் “பி.காம்” படித்தபின் திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.
டெலிவிஷன் சீரியல்களை தயாரிப்பதில் புகழ் பெற்றவர். “அபர்ணா” அவர் உருவாக்கிய டெலிவிஷன் சீரியல்களில் ஒன்று.
ஜெய்புன்னிசா தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார்.
தூயவனும் “அழகன்” தமிழ்மணியும்
“அன்புள்ள எம்.ஜி.ஆர்” என்ற பெயரில் தயாராக இருந்த படம், பிறகு “அன்புள்ள ரஜினிகாந்த்” என்ற பெயரில் தயாராகி வெளிவந்தது.
இந்தப் படத்தை கதை-வசன ஆசிரியர் தூயவனும், “அழகன்” தமிழ்மணியும் சேர்ந்து தயாரித்தனர்.
தூயவன், புகழின் உச்சியில் இருந்தபோதே எதிர்பாராதவிதமாக காலமானார்.
தமிழ்மணி, பின்னர் “தர்மபத்தினி”, “சோலைக்குயில்”, “சித்திரைப்பூக்கள்”, “அன்பே உன் வாசம்” ஆகிய படங்களைத் தயாரித்தார். இப்போது, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளராக இருக்கிறார்.
படம் உருவான கதை
“அன்புள்ள ரஜினிகாந்த்” படம் உருவானபோது நடந்த ருசிகர நிகழ்ச்சிகளை அழகன் தமிழ்மணி வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:-
“25 ஆண்டுகளுக்கு முன், நான் பத்திரிகையாளராக இருந்தேன். நிருபராக பணிபுரிந்ததால், திரை உலகத்தினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது, சில நண்பர்களுடன் சேர்ந்து, “மலையூர் மம்பட்டியான்” படத்தைத் தயாரித்தேன். இதில் தியாகராஜன் (பிரசாந்த்தின் தந்தை), சரிதா ஆகியோர் நடித்தனர். ராஜசேகர் டைரக்ட் செய்தார். இளையராஜா இசை அமைத்தார்.
இது 200 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றிப்படம்.
இந்தப்படம் வெளியான பிறகு, பங்குதாரர்கள் தனித்தனியே பிரிந்தோம்.
பட விழா
இந்தக் காலக்கட்டத்தில், நானும், பிரபல கதை – வசன கர்த்தாவாக விளங்கிய தூயவனும் நெருங்கிய நண்பர்களானோம்.
டெல்லியில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு நாங்கள் சென்றோம். அங்கு ஒரு திரை அரங்கில் “டச் ஆப் லவ்” (அன்பின் ஸ்பரிசம்) என்ற படத்தை திரையிட்டார்கள். எங்கள் இரண்டு பேரைத் தவிர, மேலும் 3 பேர்தான் அந்தப் படத்தை பார்க்க வந்திருந்தார்கள்!
ஊனமுற்ற குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. எங்களைத் தவிர, மற்ற மூன்று பேரும் நடுவிலேயே தூங்கி விட்டார்கள்! நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் படத்தைப் பார்த்தோம்.
இந்தப் படத்தின் கதாநாயகனாக எல்விஸ் பிரஸ்லி என்ற பாப் பாடகர் நடித்திருந்தார். படத்தின் தொடக்கத்தில், அவர் தோன்றமாட்டார். டெலிபோனில் பேசுவது, கடிதங்கள் எழுதுவது போன்ற காட்சிகளில்தான் (முகத்தை காட்டாமல்) வருவார். உச்சகட்ட காட்சியில்தான் நேரடியாகத் தோன்றுவார்.
படத்தைப் பார்த்தபோது சில காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டோம். அந்த அளவுக்கு படம் உருக்கமாக இருந்தது.
“இந்தக் கதையை அடிப்படையாக வைத்து, தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும். அது நமது லட்சியப்படமாக அமையவேண்டும்” என்று நானும், தூயவனும் முடிவு செய்தோம்.
சென்னை திரும்பியவுடன், ஒரு மாத காலத்தில் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி முடித்தோம். ஒரு பிரபல நடிகரை கவுரவ வேடத்தில் நடிக்கச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.
எம்.ஜி.ஆர். அப்போது, எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார். அவரை சந்தித்து, கதை முழுவதையும் சொன்னோம். உருக்கமான கட்டங்களை சொன்னபோது, அவர் கண் கலங்கினார். “இந்தப் படத்தில் தாங்கள் கவுரவ வேடத்தில் தோன்றவேண்டும்” என்று கேட்டுக்கொண்டோம்.
“அரசாங்க அலுவல்கள் பல இருந்தாலும், கவுரவ வேடத்தில் தோன்றுகிறேன். இதுபற்றி, மேற்கொண்டு அமைச்சர் அரங்கநாயகத்திடம் சென்று பேசுங்கள்” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
அதன்படி, அரங்கநாயகத்தை சந்தித்தோம். “படத்தின் பெயர் என்ன?” என்று அவர் கேட்டார். நான் சட்டென்று “அன்புள்ள எம்.ஜி.ஆர்” என்று கூறினேன். உண்மையில், படத்தின் பெயர் அதுவரை முடிவாகவில்லை. ஏதோ என் மனதில் தோன்றியது; சொன்னேன்.
கதை முழுவதையும் கூறும்படி அரங்கநாயகம் கேட்டார். தூயவன் முழுக்கதையையும் சொன்னார். அரங்கநாயகத்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. “கதை, திரைக்கதை, வசனத்துக்காக ஒரு நல்ல தொகை கொடுக்கிறேன். படமாக்கும் உரிமையை எனக்குக் கொடுத்துவிடுங்கள்” என்றார்.
யோசித்துச் சொல்வதாக கூறிவிட்டுத் திரும்பினோம்.
இதை எங்கள் லட்சியப் படமாகத் தயாரிக்க நாங்கள் முடிவு செய்திருந்ததால், உரிமையை யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை. “பிச்சை எடுத்தாவது, நாமே இந்த படத்தைத் தயாரிப்போம்” என்றார், தூயவன். நாங்கள் ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருந்த காலம் அது.
ரஜினியிடம் தூது
தேவர் பிலிம்சில் உதவி டைரக்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ரஜினியின் நண்பர் கே.நட்ராஜை சந்தித்தோம். “எங்களிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. அதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும். உங்களை டைரக்டராகப் போடுகிறோம். நீங்கள் ரஜினியை சந்தித்து, அவரிடம் தூயவன் கதை சொல்ல, நேரம் கேளுங்கள்” என்று கூறினேன்.
அதேபோல் நட்ராஜ், ரஜினியிடம் சென்று நேரம் கேட்டு வந்தார். குறிப்பிட்ட நாளில், ரஜினியை தூயவன் சந்தித்து கதையை விரிவாகச் சொன்னார். கதை ரஜினிக்குப் பிடித்து விட்டது. கவுரவ வேடத்தில் நடிக்க சம்மதித்தார். ஆறு நாட்கள் கால்ஷீட் தருவதாகக் கூறினார்.
படத்தின் பெயர் என்ன என்பதை நாங்கள் அவரிடம் கூறவில்லை.
பணம் திரட்டினோம்
அந்த நேரத்தில் என்னிடமும், தூயவனிடமும் பணமே கிடையாது. தெரிந்தவர்களிடம் கொஞ்சம், கொஞ்சமாக வாங்கி, ரூ.15 ஆயிரம் திரட்டினோம்.
ரஜினியுடன் நடிக்க அம்பிகா, ஒய்.ஜி.மகேந்திரன், ராஜ்குமார் ஆகியோரை ஒப்பந்தம் செய்தோம். பேபி மீனா, பேபி சோனியா, மாஸ்டர் டிங்கு ஆகியோரை குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகம் செய்தோம்.
1983 மார்ச் 31-ந்தேதி ஏவி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கியது. அன்றைய தினம்தான், “தினத்தந்தி”யில் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில் “அன்புள்ள ரஜினிகாந்த்” என்ற பெயரைக் குறிப்பிட்டோம். ரஜினிக்கும் அன்றுதான் படத்தின் பெயர் தெரியும்!
படப்பிடிப்பு முழுவதும் சென்னை சாந்தோமில் உள்ள உயர்நிலைப்பள்ளியில், 300 மாணவ-மாணவிகளை வைத்து நடந்தது.
ரஜினி உதவி
இந்தப் படத்துக்காக ரஜினிகாந்த் அளித்த ஒத்துழைப்பை என் வாழ்நாளில் மறக்க முடியாது. படம் முழுவதும், 15 “செட்” உடைகளை மட்டும் பயன்படுத்தி நடித்தார். தனக்கென தனி ஒப்பனையாளர், “டச்சப்” உதவியாளர் என்று யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. எங்களுக்கு செலவு வராமல் பார்த்துக்கொண்டார்.
ஆரம்பத்தில் 6 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருந்த ரஜினி, படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக மேற்கொண்டு 10 நாட்கள் ஒதுக்கி, பத்து பைசாகூட வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.
ரஜினி வீட்டில் படப்பிடிப்பு
ரஜினிகாந்தை அவர் வீட்டில் மீனா சந்திப்பது போல் ஒரு காட்சி வருகிறது. அதைச் சொன்னதும், “இந்தக் காட்சியை வேறு எங்கும் போய் எடுக்க வேண்டாம். என் வீட்டிலேயே படமாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினார். அது மட்டுமல்ல; தன் மனைவி லதாவையே டிபன் பரிமாறும்படி கூறி, எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தார்.
படத்தில் வரும் “கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே” என்ற பாடலை லதா ரஜினிகாந்த் பாடினார். திரைப்படத்துக்காக அவர் பாடியது இதுவே முதல் தடவை.
டைரக்டர் கே.பாக்யராஜ் மிகவும் `பிசி’யாக இருந்த நேரம் அது. அவருடன் ரஜினியே பேசி, கவுரவ வேடத்தில் நடிக்கச் செய்தார். அந்த காமெடி ஓரங்க நாடகம் (கிருஷ்ண தேவராயர் – தெனாலிராமன்) இன்றளவும் ரசிகர்களால் பேசப்படுகிறது.
படம் நன்றாக அமைந்ததால், என்னையும், தூயவனையும் அழைத்து ரஜினி பாராட்டிய சொற்கள், இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன.
லாபம்
அந்தக் காலக்கட்டத்தில், எங்களுக்கு வசதி அதிகம் கிடையாது. 24 பிரதிகள் எடுத்து, ரூ.24 லட்சத்துக்கு விற்றோம். எனக்கும், தூயவனுக்கும் ஆளுக்கு 1 லட்சம் லாபமாகக் கிடைத்தது.
எனினும், படம் பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதை பெரிய லாபமாகக் கருதினோம்.
கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளித்த ஒத்துழைப்பினால்தான் இந்தப் படத்தை எங்களால் உருவாக்க முடிந்தது. இதற்காக வாழ்நாள் முழுவதும், நானும், தூயவன் குடும்பத்தினரும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்.”
இவ்வாறு அழகன் தமிழ்மணி கூறினார்.
தூயவன் எழுதிய “தீர்ப்பு” நாடகத்தில் ‘வெண்ணிறஆடை’ மூர்த்திக்கு கிடைத்த எம்.ஜி.ஆரின் பாராட்டு
சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற ஏக்கம் ‘வெண்ணிறஆடை’ மூர்த்திக்கு இருந்தது. எம்.ஜி.ஆர். நடித்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் அப்படியொரு வாய்ப்பும் வந்தது. ஆனால் துரதிருஷ்டம்! கதையுடன் ஒட்டவில்லை என்று கூறி வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த காமெடிக் காட்சிகளையே நீக்கி விட்டார்கள்!
இதுபற்றி மூர்த்தி கூறியதாவது:-
‘எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டேன். ஆனாலும் செட்டில் அவர் நடித்த நாட்களில் எனக்கு ஷூட்டிங் இருக்காது. எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்து 2 நாட்களுக்குப் பிறகே என்னை அழைத்தார்கள். டி.எஸ்.பாலையா, ஜெயலலிதா நடித்த காட்சியில் நானும் நடித்தேன். நான் நடித்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்பது படம் ரிலீசான பிறகே எனக்குத் தெரியும்.
அவர் படத்தில் நான் இல்லையே தவிர, நான் நடித்த நாடகம் ஒன்றில் என் நடிப்பை மனதார பாராட்டிய வள்ளல் அவர். மேஜர் சுந்தர்ராஜன் நடத்திய ‘தீர்ப்பு’ என்ற நாடகம் நூறாவது நாள் கண்டது. நூறாவது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர். வந்திருந்தார். முழு நாடகத்தையும் பார்த்து ரசித்தார். அவர் பேசும்போது, ‘மேஜர் சுந்தர்ராஜன் நன்றாக நடிப்பார் என்பது எனக்குத் தெரியும். இந்த நாடகத்தில் `ராமு’ என்ற கேரக்டரில் நடித்தவரின் நடிப்பை நான் இதுவரை பார்த்ததில்லை. அருமையாக நடிக்கிறார். என் தாயின் ஆசியோடு சொல்கிறேன். அவர் நல்லா வருவார்’ என்றார்.
நாடகத்தில் `ராமு’வாக நடித்தது நான்தான். அவரின் மனப்பூர்வ பாராட்டு எனக்கு `ஆசி’யாக அமைந்தது. நடிப்பில் எனக்கு வளர்ச்சியாகவும் அமைந்தது.
தொடர்புடைய சுட்டி:
தூயவன் கதை – 2