RSS

Tag Archives: நாகூர் மண் வாசனை

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் 14


Arasa kattalai poster

“அரச கட்டளை” படத்தில் ரவீந்தரின் பங்களிப்பு திட்டமிட்டு மறைக்கப்பட்டது என்பது மறுக்கப்படாத உண்மை.  வேண்டுமென்றே அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

பாடுபடுபவன் ஒருவன். புகழ் தேடிக் கொள்பவன் மற்றொருவன். மாடாய் உழைப்பவன் ஒருத்தன். மார்தட்டிக் கொள்பவன் இன்னொருத்தன். உடல் உழைப்பு செய்பவன் ஒருத்தன். மெடல் குத்திக் கொள்பவன் இன்னொருத்தன். மரம் வைத்தவன் ஒருவன். பலனை அனுபவித்தவன் வேறொருவன். “அரச கட்டளை” படத்தில் இக்கூற்று ரவீந்தருக்கு நன்கு பொருந்தும்.

“நாடோடி மன்னன்” படம் வெளிவந்தபோது ரவீந்தர் புதியவராக இருந்தார். அதனால் அவருடைய பெயர் கண்ணதாசன் பெயரோடு இணைத்து காட்டப்பட்டது என்றார்கள். போகட்டும் என்று விட்டு விடலாம்.

10690323_787541447950751_1365779854726549063_n

ஆனால் “அரச கட்டளை” படம் வெளிவந்தபோது ரவீந்தர் எத்தனையோ படங்களுக்கு கதாசிரியராக, வசனகர்த்தாவாக பணியாற்றி அனுபவ முதிர்ச்சி பெற்றிருந்தார். அப்படியிருந்தும் அவர் பெயரை இருட்டடிப்புச் செய்தார்கள்.

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவரவிருந்த “சிரிக்கும் சிலை” என்ற படத்தில் கூட இதே நிலைமைதான் ரவீந்தருக்கு ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்தப்படம் வெளிவரவில்லை. இரவு பகல் பாராது கண்துஞ்சாது கஷ்டப்பட்டு அந்தப் படத்திற்கு ரவீந்தர் கதை வசனம் எழுதினார். அந்தப் படம் ஓடவேண்டுமென்றால் நிச்சயமாக “Face Value” மிகுந்த பிரபலம் தேவை என்ற கண்ணோட்டத்தில்  “திரைக்கதை – வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரம் செய்யப்பட்டு ‘ஒப்புக்குச் சப்பாணியாக’ ரவீந்தர் பெயரையும் இணைத்துக் காண்பித்தார்கள்.

சிரிக்கும் சிலை

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராத “சிரிக்கும் சிலை” திரைப்படம்

அந்தக் கால கட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கு,  குறிப்பாக திராவிட இயக்க வசனகர்த்தாக்களுக்கு அதீத மவுசு கூடியிருந்தது.     கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதி பிரபலமடைந்த  மந்திரிகுமாரி (1950), பராசக்தி (1952), திரும்பிப்பார் (1953), மனோகரா (1954),  போன்ற படங்களுக்குப் பிறகு அரசியல் பின்னணி கொண்ட வசனகர்த்தாக்களுக்கு தனியொரு நட்சத்திர அந்தஸ்து ஏற்பட்டிருந்தது. ஏ,வி,பி,.ஆசைத்தம்பி முதற்கொண்டு முரசொலி சொர்ணம் உட்பட  திரைப்பட வசனகர்த்தாக்களாக மாறி இருந்தனர். முரசொலி மாறன் “மறக்க முடியுமா (1966)” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதானித்திருந்தார்.  அதற்கு முன்பே நல்லதம்பி (1949), வேலைக்காரி படத்தின் மூலம் சி.என்.அண்ணாத்துரை பிரபலமாகியிருந்த செய்தி அனைவரும் அறிவர்.

ரவீந்தர் ஏன்  தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டார்? எதற்காக அவருடைய திறமை மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை? என்ன காரணத்திற்காக அவர் ஒவ்வொரு படத்திலும் ஓரங்கட்டப்பட்டார்? ஏன் அவர் மீது மட்டும் இந்த ஓர வஞ்சனை?

அவர் அரசியல் பின்புலம் இல்லாத மனிதர் என்ற ஒரே காரணத்தினாலா? இந்தக் கேள்விக்கு இதுவரை பதிலில்லை.

உண்மையைக் கூற வேண்டுமென்றால் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரின் பெயர் முதற்கொண்டு அவரது கார் ஓட்டுனர் பெயர்வரை எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அனைத்தும் அத்துப்படியாக இருந்தது.

ஆனால் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவராக, எப்போதும் அவர் கூடவே இருந்த காஜா மெய்தீன் என்கின்ற ரவீந்தரின் பெயர் மட்டும் யாருக்குமே தெரியாது. ‘யாருக்குமே தெரியாது’ என்று சொல்வதை விட யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் நாட்டாமை செய்து வந்தவர்கள் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்தார்கள் என்று கூறுவதே சாலப்பொருத்தம்.

“யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை”

என தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனே கூறுகின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

அதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால், உலக நடப்புகளை விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ரூமி உட்பட ரவீந்தரின் மறைவுச் செய்தியை அறிந்து வைத்திருக்கவில்லை என்பது எதர்த்தமான உண்மை.

ரவீந்தர் உயிரோடிருந்த போதும். அவர் நோய் வாடப்பட்டு இருந்தபோதும், அவர் மறைந்தபோதும் கூட அனைத்து ஊடகங்களும் சினிமாத்துறையினரும் பாராமுகமாகவே இருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

“அரச கட்டளை” படத்தின்  ஸ்டில்கள் காண்பிக்கையில் அதன் திரைக்கதையை வடிவமைத்தது “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா” என்று காண்பிப்பார்கள்.

Arasa kattalai-1

அரச கட்டளை படத்தின் Screenshot

“எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்பதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. அதற்கும் கீழே R.M.வீரப்பன், வித்வான் வே.லட்சுமணன், S.K.T.சாமி என்று மூன்று பேர்களுடைய பெயர்களை மட்டும் காண்பித்து ரவீந்தரின் பெயரை இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

இப்பொழுது இயற்கையாகவே நம் மனதில் ஒரு கேள்வி பிறக்கிறது. “அரச கட்டளை” படத்தில் உண்மையிலேயே ரவீந்தரின் பங்களிப்புதான் என்ன?

ஆர்.எம்.வீ. ஒரு மாபெரிய கதாசிரியர், பிரமாண்டமான படத்தயாரிப்பாளர்,  சிறந்த நிர்வாகி, தமிழார்வலர், கம்பராமாயணச் சிற்பி என்பது போன்ற ஒரு மாயையை மக்கள் மத்தியில் அவரே உருவாக்கியிருந்தார். அவருடைய உண்மையான முகம் என்னவென்று சினிமா உலகில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாகவே தெரியும். எழுத்து நாகரிகம் கருதியும், சில பேருக்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணக்கூடாது என்று நல்லெண்ணத்தாலும் அவரது வஞ்சகச் சூழ்ச்சி அனைத்தையும் இங்கு என்னால் வடிக்க இயலவில்லை.

“அரச கட்டளை” படத்தின் கதை எப்படி பிறந்தது என்பதற்கு சின்னதாக ஒரு “FLASHBACK”  தேவைப்படுகின்றது. அதை ரவீந்தர் வாயிலாகவே அறிந்துக் கொள்வோம். இப்படத்தில் ரவீந்தரின் பங்கு என்ன என்பது அப்போது விளங்கும்.

1962 ம் ஆண்டு , தேர்தல் சமயம்.

தி மு க வினர் அன்றைய முதல்வர் காமராஜரை மிக மோசமாக, தரம் தாழ்ந்து விமர்சித்து வந்தக் காலக் கட்டம். ஆனால் மக்கள் திலகமோ காமராஜரை மரியாதைக் குறைவாக விமர்சிக்க மறுத்தார்.

MGR_With_Kamaraj

காமராஜரும் எம்.ஜி.ஆரும்

அப்பொழுது நடந்த நிகழ்வு …

தேர்தல் பிரசாரத்துக்காக போகிறோம். கும்மிடிப் பூண்டி ரயில் நிலையம் பிரதான சாலையில் ஒரு ரயில்வே கேட் அப்பொழுது பிரசித்தம் . மூடினால் சீக்கிரம் திறக்க மாட்டார்கள். சில துரித ரயில்கள் போனப் பின்னர் தான் திறப்பார்கள்.

அங்கு மக்கள் திலகத்தின் வண்டி நின்றது. அந்தக் காரின் எண் எல்லோருக்கும் தெரியும் .  கூட்டம் கூடிவிட்டது. மக்கள் திலகத்தின் காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்றுக் கொண்டிருந்தது. மக்கள் திலகம் அவரது உதவியாளர் சபாபதியிடம் சொல்கிறார் …

” அது யார் கார் ? காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, சபாபதி போய் பார்த்து வா… ”

சபாபதி போய் பார்த்து விட்டு வந்து “ஆமா அவுங்க தான்” என்று சொல்ல , உடனே மக்கள் திலகம் தன் காரை விட்டு இறங்கிப் போய் அவருக்கு வணக்கம் சொன்னார்.

காமராஜர் கீழே இறங்க எத்தனிக்க, மக்கள் திலகம் தடுத்து விட்டார் .

“இதென்ன தனியே செக்கியூரிட்டி இல்லையா? ” என்று கேட்டார் மக்கள் திலகம். அப்பொழுது காமராஜர் முதல்வர் .

“என்னை யார் என்ன செஞ்சிடப் போறாங்க எனக்கு பாடி கார்டு வைச்சுக்க ” என்றார் காமராஜர் .

இருவரும் கொஞ்ச நேரம் குசலம் விசாரித்தப் பின் வந்து அமர்ந்தார்கள்.  ரயில் போனதும் கார் புறப்பட்டது .

மக்கள் திலகம் என்னைப் பார்த்துச் சொன்னார் “ரவீந்திரன், அடுத்த படத்துக்கு , ஐடியா கிடைச்சிட்டது , நம்ம காமராஜர் ஐயா தான் ஹீரோ. ஒரு நாட்டுக்கு உண்மையான அரசன் யாருன்னா கத்தியில்லாம, தனக்கு சவால் இல்லாம யார் மக்கள் மத்தியிலே பவனி வருகிறானோ அவன் தான்.  இதை வச்சு கதை எழுதணும், நானல்ல டைரக்டர் என் அண்ணனை செய்யச் சொல்லப் போறேன் ” என்றார் …

அப்படி உருவானப் படம் தான் “அரசக் கட்டளை” .

இது ரவீந்தரே பொம்மை இதழில் எழுதியது. தான் ஏற்கனவே பலமுறை மாற்றியமைத்து எழுதிய “இணைந்த கைகள்” படத்தின் ஒரு சில பகுதியை மையமாக வைத்தும், எம்.ஜி.ஆர். சொன்ன குறிப்புகளை வைத்தும் ரவீந்தர் தீட்டிய திரைக்கதைதான் “அரச கட்டளை”.

இந்தக் காட்சியை இப்படி வைக்கலாம், அப்படி வைக்கலாம் என்று ஏதாவது ஆலோசனை கூறிவிட்டு, ரவீந்தரின் மூளையை கசக்கிப் பிழிய வைத்து விட்டு, கஷ்டப்படாமல் பெயரைத் தட்டிக் கொண்டு போவது ஆர்.எம்,வீரப்பனின் வழக்கமாக இருந்தது. திரைக்கதை என்று பெயர் போடுகையில் ஆர்.எம்.வீரப்பன் பெயர்தான் முதலாவதாக இடம்பெறும்.

கதை எழுதும் கலையையும், வசனம் எழுதும் கலையையும் கற்று வைத்திருந்த ரவீந்தர் ஒரே ஒரு கலையைக் கற்க தவறியாதால்தான் அவரால் முன்னுக்கு வர முடியாத நிலை.ஆம். ஜால்ரா அடிக்கும் கலை ரவீந்தருக்கு வரவேயில்லை.

AraSAKATTALAI 2

அரச கட்டளை படத்தின் SCREENSHOT

.சரி.. திரைக்கதையில்தான் ரவீந்தர் பெயர் இடம்பெறவில்லை. விழுந்து விழுந்து “அரச கட்டளை” படத்திற்கு வசனம் எழுதிய அவருடைய பெயர் “உரையாடல்” என்ற தலைப்பிலாவது காட்டப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. அதற்கும் அரசியல் செல்வாக்கு வேண்டுமே. முரசொலி சொர்ணத்தின் பெயர் காட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர். தனது அண்ணன் குடும்பத்திற்காக ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமென விரும்பினார். எம்.ஜி.ஆர்.  தனது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் பிள்ளைகள் எம்.சி.ராமமூர்த்தி மற்றும் மூத்த மகள் சத்யபாமா இவர்களுக்காக “சத்யராஜா பிக்சர்ஸ்” என்ற  பட நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க வைத்து தன் அண்ணனையே டைரக்ட் செய்ய வைத்த படம்தான் “அரசகட்டளை”.

சத்யபாமா

தன் அண்ணன் மகள் சத்யபாமாவுடன் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி. ஆருடன் ஜெயலலிதாவும், சரோஜாதேவியும், சந்திரகாந்தாவும், “அரச கட்டளை” படத்தில் நடித்திருந்தனர்.

எம்.ஜி.ஆர். சுடப்பட்டபோது, தயாரிப்பில் இருந்த படங்கள் இரண்டு. ஒன்று சத்யராஜா பிக்சர்ஸ் “அரச கட்டளை”. மற்றொன்று சத்யா மூவிஸ் “காவல்காரன்” ஆகியவை.

படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில்  “எடிட்டிங்”, “ரீ ரிக்கார்டிங்” போன்ற ஒரு சில வேலைகளே மிச்சமிருந்தது.  அந்தப் பணிகள் முடிந்து படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது,.

இப்படத்தில் வாலி, முத்துகூத்தன் மற்றும் ஆலங்குடி சோமு எழுதிய பாடல்கள் அமர்க்களமாக இருந்தன. இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக கவிஞர் வாலி அவர்கள்

“ஆண்டவன் கட்டளைக்கு முன்னாலே – உன்

அரசகட்டளை  என்னாகும்”

என்ற பல்லவியை எழுதிக்கொடுக்க முகம் சிவந்த எம்.ஜி.ஆர்.  வாலியை கடிந்துக் கொண்டார். காரணம் “ஆண்டவன் கட்டளை” சிவாஜி நடித்த படம். “அரச கட்டளை” அச்சமயம் தயாரிப்பில் இருந்த எம்.ஜி.ஆர். படம்.   எம்.ஜி.ஆர். இதனை சுட்டிக்காட்டிய போது வாலிக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது. இப்படியொரு பொருள்படும் என்ற கோணத்தில் அவர் சிந்திக்கவேயில்லை. இப்பாடல் வரிகளில் திருப்தி அடையாத எம்.ஜி.ஆர். கவிஞர் முத்துக்கூத்தனை வைத்து வேறொரு பாடலை எழுத வைத்தார்.

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை”  – என்று தொகையறாவாகத் தொடங்கி “ஆடி வா ! ஆடி வா! ஆடி வா!  ….. ஆளப் பிறந்தவனே! ஆடிவா!” என்ற பாடல்தான் அந்த மாற்றுப் பாடல்.

இந்த சம்பவத்தைச் சொன்னவர் ரவீந்தர். இதை உறுதிப்படுத்தும் வகையில் இதே சம்பவத்தை கவிஞர் வாலி அவர்கள் விலாவாரியாக “எனக்குள் எம்.ஜி.ஆர்”. என்ற தன் நூலில் எழுதியுள்ளார்.

கவிஞர் கண்ணதாசன் தன் சொந்த அனுபவங்களை, எண்ணங்களை, மனத்தாங்கல்களை எத்தனையோ பாடல்களில் கொட்டித் தீர்த்திருக்கின்றார். “அண்ணன் என்னடா, தம்பி என்னடா, அவசரமான உலகத்திலே” போன்ற பாடல்கள் இதற்கு நல்ல உதாரணம்.

“நான் எப்பவுமே சொந்த வாழ்க்கை அனுபவங்களை பாடல்களாக வடித்ததே இல்லை.  ஆனால் அரசகட்டளை படத்துக்கு பாடல் எழுதும் போது என் மன உணர்வை வெளிக்காட்டும் விதமாக எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு பாடல் எழுதினேன்.”

என்று கவிஞர் வாலி, பொதிகைத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“என்னைப் பாடவைத்தவன் ஒருவன். என் பாட்டுக்கு அவன் தான் தலைவன்” என்ற பாடல், வாலிக்கு வாய்ப்பு வழங்கி அவருடைய வாழ்வில் ஒளியேற்றிய எம்.ஜி.ஆருக்கு நன்றிக்கடன் செய்யும் வகையில் எழுதப்பட்ட பாடல்.

இப்படத்தில், கே.வி.மகாதேவன் இசையில் உருவான அத்தனைப் பாடல்களும் மனங்கவர் பாடல்களாக அமைந்திருந்தன.

”அரசகட்டளை”யில் ஜெயலலிதாவும் எம்ஜிஆரும்  இடம்பெறும் ஒரு காட்சி. சொர்ணத்தின் உரையாடல் என்று நம்பப்படும் ரவீந்தரின் வசனங்கள்  இன்றைய அரசியல் நாடகங்களுக்கு அப்பட்டமாக பொருந்தும் வகையில் உள்ளன.

”எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அந்தப் பாவிகளின் நாக்கை துண்டுத்துண்டாக வெட்டி..”

”அதனால்தான் அதிகாரம் உன் கையில் இல்லை. மதனா.. கல்லடியும் சொல்லடியும் கடமைவாதிகள் சந்திக்க வேண்டிய முதல்படி, அரசியல் அகராதிப்படி”

“அப்படியா, இப்படி இன்னும் எத்தனைப் படிகளோ, உருப்படியாய் ஓடிவிடுவோம் வாருங்கள்”

”ஓடு ஓடு என்று யார் சொன்னாலும் நாடு நாடு என்றுதான் முழங்கிக்கொண்டிருப்பேன் என் லட்சியம் நிறைவேறும்வரை”

”ஆபத்து இருந்தாலும் (ஆட்சி) எவ்வளவு சுகமாக இருக்கிறது”

” இந்த சுகத்திலேதான் பதவி வெறியே பிறக்கிறது மதனா..இதில் மயங்கித்தான் ஆட்சியிலே இருந்தவர்கள் மக்களை மறந்தார்கள்..துன்பத்தை விதைத்தார்கள். துயரத்தை வளர்த்தார்கள்.”

“உன் உயிரைப் பறிப்பேன்” என்று உடைவாளை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைத் தாக்க வரும் நம்பியார் கூற “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்…” என்று சொல்லும் எம்.ஜி.ஆர். சற்று இடைவெளி விட்டு புன்னகை சிந்த “.நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். நறுக்குத் தெறித்தார்போல் காணப்பட்ட இதுபோன்ற வசனங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன.

புகழ் யாவும் சொர்ணத்திற்கு அர்ப்பணமாயின. ரவீந்தருக்கு வழக்கப்படி பிஸ்கோத்து, “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற மலைக்கள்ளன் படத்தில் இடம்பெற்ற எம்.ஜி.ஆரின்  பாடல்தான் என் நினைவில் நிழலாடியது.

கதாசிரியர்கள் நட்சத்திர அந்தஸ்து பெற்று அமோகமான பேரும் புகழும் பெற்றிருந்த காலத்தில் ரவீந்தர் எழுதிக் கொண்டிருந்தபோதும் கூட அவரால் ஒளிவிட்டு பிரகாசிக்க முடியவில்லை; அவரது பெயர் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது என்பது வருத்தத்திற்குரிய விடயம்.

– அப்துல் கையூம்

…………தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  9

எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11

எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13

 

Tags: , , ,

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 6


ரவீந்தர் காப்பியடித்தாரா?

ரவீந்தர்

ரவீந்தர் இளமையிலும் முதுமையிலும்

“ரவீந்தர் சுட்டாரா?” என்றுதான் இப்பதிவுக்கு தலைப்பு கொடுக்கலாம் என்றிருந்தேன். “இது என்ன புதுக்கதையாக இருக்கிறது? எம்.ஆர்.ராதாதானே சுட்டார்? என்று வாசகர்கள் கூறுவார்களே என்று பயந்து நான் தலைப்பை மாற்றிவிட்டேன்.

“இந்தப் பதிவில், உள்ளதை உள்ளபடி எழுதப்போகிறேன்” என்று என் நண்பரிடம் மனம் திறந்தபோது  “தேவையா இது? ஏன் ஊர்வம்பை விலைக்கு வாங்குறீங்க?” இப்ப உங்க பேச்சு என்ன எடுபடவா போவுது” என்று முன்னெச்சரிக்கை வேறு விடுத்தார்.

“இதனால் சிலருடைய மனவருத்தத்திற்கு நான் ஆளாகக் கூடும்” என்று இதயத்தின் மூலையில் ‘பட்சி’ அமர்ந்து குறி சொன்னாலும், “CALL  A SPADE A SPADE” என்று என் மனசாட்சி தைரியமூட்டியது.

நண்பர் ஆபிதீனின் கதையைச் ‘சுட்டு’ பெரிய ஆளாகி விட்ட சாரு நிவேதிதா போல, சித்தி ஜுனைதா பேகத்தின் கதையைச் ‘சுட்டு’ பெரிய ஆளாகி விட்டாரே ரவீந்தர் என்று அவர்மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

தீவிரமாக ஆராய்ந்து பார்த்ததில் அது “தவறான புரிதல்” என்ற உண்மை தெரிய வந்தது.

பிரபல எழுத்தாளர்கள் உட்பட ஏகப்பட்ட இணையதள நண்பர்களும் ரவீந்தரை தவறான கண்ணோட்டத்தில்தான் இதுவரை பார்த்து வருகிறார்கள் என்பது மட்டும் அப்பட்டமாக விளங்குகிறது.  “ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம். ஆனால் அநியாயமாக ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது” என்று சொல்வார்கள். செய்யாத ஒரு குற்றத்திற்காக ரவீந்தரை குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து பழி சுமத்துவதை என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.

ரவீந்தர் மற்றும் சித்தி ஜுனைதா – இருவரும் நாகூரைச் சேர்ந்தவர்கள். கெளரவமான குடும்பத்தில் பிறந்தவர்கள். பண்பட்ட பாரம்பரியம் கொண்டவர்கள்.  தங்கள் எழுத்துக்கள் மூலம் பிறந்த ஊருக்கு பெருமைத் தேடி தந்தவர்கள். தமிழ் எழுத்துலகில் ஆளுமை கொண்டவர்கள். நல்ல படைப்பாளிகள். கற்பனைத் திறன் கொண்டவர்கள். சான்றோர்களின் பாராட்டுதல்களைப் பெற்றவர்கள். ஊர்க்காரன் என்ற முறையில் இவர்களிருவரும் என் இருகண்களைப் போன்றவர்கள். இதில் யாரை நான் குறை கூறுவது?

ரவீந்தருக்கு வக்காலத்து வாங்குவதோ அல்லது சித்தி ஜுனைதாவை குறைத்து மதிப்பிடுவதோ என் பதிவின் நோக்கமல்ல.

ரவீந்தர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இதுதான்:

“சித்தி ஜுனைதா பேகம் எழுதிய “காதலா? கடமையா?” என்ற நாவலை காப்பியடித்து “நாடோடி மன்னன்” படத்திற்கு ரவீந்தர் பயன்படுத்திக் கொண்டார்” என்பதுதான் குற்றச்சாட்டு.

இது உண்மையா? எத்தனையோ கதைகள், நூல்கள்,  நாடகங்கள் ரவீந்தர் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்களே. இன்னொருவரின் கதையை காப்பியடித்து பெயர் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் அவருக்கு என்ன வந்தது? இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் ஆயிற்றே? அப்படிச் செய்தால் ஒருநாள் இந்த உண்மை வெளிவராமலா போகும்? அப்படி தெரியவந்தால் அவருடைய பெயருக்கு அது களங்கமல்லவா? என்றெல்லாம் வினாக்கணைகள் நம் மனதில் சுனாமி அலைகளாய் பாய்கின்றன.

இந்த குற்றச்சாட்டு எப்போது எழுந்தது?  எப்போது இது விஸ்வரூபம் எடுத்து பரவியது என்பதை சற்று நிதானமாக அலசிப் பார்த்தால் “கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாய்” பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.

திரையுலகில் அரிய சாதனை படைத்த ரவீந்தர் என்ற ஒரு மாமனிதர் உயிருடன் இருக்கிறார். தேனாம்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார் என்ற விஷயமே 2002-ஆம் ஆண்டில்தான் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. அதுவரையில் அந்த பெரியவர் ஊடகங்களால் கண்டுக்கொள்ளப் படாத ஒரு மனிதராகத்தான் தன் இறுதிநாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார்.

ரவீந்தரின் இருப்பிடத்தைக் கேள்வியுற்று இரண்டு இஸ்லாமிய எழுத்தாளர்கள் அவரை பேட்டி காணச் செல்கிறார்கள். அதில் ஒருவர் முன்னாள் புதுக்கல்லூரி பேராசிரியர் முனைவர் ஹ.மு.நத்தர்சா. மற்றொருவர் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது. இருவருமே நாடறிந்த நல்லவர்கள், சமுதாயக் காவலர்கள்.

முனைவர் ஹ.மு.நத்தர்சா 2002-ஆம் ஆண்டு ‘தினமணி’ ஈகைத்திருநாள் மலரில் கட்டுரை வரைகிறார். அது ரவீந்தரைப் பற்றியது. அதே 2002-ஆம் ஆண்டு ‘தினகரன்’ இதழில் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது கட்டுரை வரைகிறார். அது  சித்தி ஜுனைதாவைப் பற்றியது.

முனைவர் ஹ.மு.நத்தர்சா தனது கட்டுரையில் ”1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் “நாடோடி மன்னன்தான் முதன் முதலில் ரவீந்தரின் பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது” என்ற விவரத்தை அச்சில் பதிக்கிறார்.

ஆனால் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது அவர்களோ

“நாடோடி மன்னனுக்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவர் ரவீந்தர் (இயற்பெயர் : ஹாஜா முஹைதீன்). இவரும் நாகூரைச் சேர்ந்தவர். 74 வயதான இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் நேரில் சென்று ‘காதலா கடமையா’ நாவல் தாங்கள் வசனம் எழுதிய நாடோடி மன்னன் படக்கதையுடன் ஒத்துள்ளதே என்று கேட்டேன். அதை அவர் ஒப்புக் கொண்டார்”

என்று வாக்கு மூலம் அளிக்கிறார். இந்த வரிகள் சர்ச்சைகளுக்கு “பிள்ளையார் சுழி” இடுகின்றன.

ரவீந்தர் அப்போதிருந்த தள்ளாத நிலையை முனைவர் ஹ.மு.நத்தர்சாவின் கட்டுரை சித்தரித்துக் காண்பிக்கின்றது. அவருடைய வரிகளை அப்படியே இங்கே தருகிறேன்.

“நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.”

நோயின் கடுமையான தாக்குதலால் அவதியுற்றிருந்த ரவீந்தர் தெளிவாக பேசக்கூடிய நிலையில் இல்லை என்பதை ஹ.மு.நத்தர்சாவுடைய வருணனையிலிருந்து நம்மால் நன்கு அறிய முடிகின்றது .வார்த்தைகள் ரவீந்தருக்கு தடுமாறுகின்றன. நினைத்ததை அவரால் பேச முடியவில்லை என்பது புரிகிறது.

“ஒப்புக்கொண்டார்” என்று உறுதியாகக் கூறும் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது ரவீந்தரிடம் அவர் கேட்ட கேள்விக்கு “ஆமாம்” என்று தலையாட்டினாரா அல்லது சைகை மூலம் ஒப்புதல் காண்பித்தாரா என்ற விவரம் அக்கட்டுரையில் தென்படவில்லை.

முனைவர் ஹ.மு.நத்தர்சா எழுதிய கட்டுரையில் “அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார்” என்று எழுதுகிறார்.

அதே 2002-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி சித்தி ஜுனைதாவின் உறவினரான நாகூர் ரூமி “ஆச்சிமா ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் கீழ்க்கண்ட தகவலை தன் கட்டுரையில் வடிக்கிறார்.

“இந்த நாவல் (காதலா? கடமையா?) ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. திரைப்படத்துறையில் நாகூரைச் சேர்ந்த வசனகர்த்தா ரவீந்தர் என்று ஒருவர் இருந்தார். இவரும் மாமா தூயவனிடம் இணைந்து பணியாற்றியவர்தான். எம்ஜியாரின் மகாதேவி படத்துக்கு வசனமெழுதியவர் இவர்தான். “மணந்தால் மகாதேவி இல்லையென்றால் மரணதேவி” என்ற புகழ்பெற்ற வசனம் இவருடையதுதான். எம்ஜியாரின் “நாடோடி மன்னன்” படத்தில் ஒவ்வொரு சீக்வென்சும் அப்படியே “காதலா? கடமையா?” நாவலில் உள்ளதுதான் என்று சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் நண்பர் என்னிடம் சொன்னார். படத்தை மறுபடி சிடியில் பார்த்ததில் அது உண்மை என்று தெரிந்தது. ரவிந்தர் ஆச்சிமாவின் நாவலிலிருந்து “சுட்டு”விட்டார் என அவர் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. படம் அப்படித்தான் உள்ளது. அதுதான் உண்மை என்று சொல்ல முடியாவிட்டாலும் நாவல் ஏற்படுத்திய தாக்கத்திற்கு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.”

இப்படியாக எழுதுகிறார் நாகூர் ரூமி. “பேராசிரியர் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்றும் “அதுதான் உண்மை என்று சொல்ல முடியாவிட்டாலும்” என்று அவர் இழுக்கும்போது ஒரு யூகமாகத்தான் அவர் இதைச் சொல்லுகிறார் என்பதை தெளிவாக உணர முடிகிறது.

ஆனால் அழுத்தமாக ரவீந்தர் மீது எந்த குற்றச்சாட்டையும் அவர் வைக்கவில்லை.  வார்த்தைகளை கவனமாக கையாண்டிருக்கிறார். “உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது” என்று சொன்னால் “அது ஒருக்கால் பொய்யாகவும் இருக்கக்கூடும்” என்று அர்த்தமாகிறது அல்லவா?

அதே 2002-ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த நா.கண்ணன் என்பவர் ஷார்ஜா தமிழ் மன்றத்தில் பேசச் சென்ற போது சடையன் சாபு வாயிலாக சித்தி ஜுனைதாவின் நூலைப்பற்றி கேள்வியுற்று அதை முதுசொம் கூடத்தில் ஆவணப்படுத்த வேண்டி இலத்திரன் பதிவுகளாக்கி கணினி சார்ந்த மின் உலகில் சாசுவதமாக்க நாகூர் பயணமாகிறார். சொல்லரசு ஜாபர் முஹ்யித்தீன் துணைகொண்டு சித்தி ஜுனைதாவை சந்தித்து தகவல் திரட்டுகிறார்.  சித்தி ஜுனைதாவின் எழுத்தாற்றல் பரவலாகத் தெரிய வருகிறது.  நா.கண்ணனின் பதிவேட்டில் “நாடோடி மன்னன்” விவகாரம் எதுவும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

நாகூர் ரூமி எழுதுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது 1999-ஆம் ஆண்டு முஸ்லிம் முரசு பொன்விழா மலருக்காக சித்தி ஜுனைதாவைச் சந்தித்து அட்டகாசமான ஒரு பேட்டி ஒன்றை சொல்லரசு ஜாபர் முஹ்யித்தீன் அச்சிலேற்றுகிறார். அதிலும் “நாடோடி மன்னன்” விவகாரம் பற்றிய ஆதாரமற்ற தகவல்கள் எதுவும் கிடையாது.

2002-ல் எழுப்பபட்ட  “ரவீந்தர் காப்பியடித்தார்” என்ற  ஊர்ஜிதமற்ற செய்தி ‘எபோலா’ தீநுண்ம நோய் போன்று மெல்ல மெல்ல பரவி வருகிறது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறும் ரவீந்தர் இதற்கெல்லாம் மறுப்பு தெரிவிக்கும் ஆரோக்கிய நிலையில் இல்லை. இப்படிப்பட்ட சர்ச்சைகள் அவரைச் சுற்றி நடந்துக்கொண்டு இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு 4.11.2004 அன்று ரவீந்தருடைய உயிர் பிரிகிறது.

இணைய தளத்தில் பதியப்படும் ஆவணங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் “பூமராங்”காக திரும்பத் திரும்ப நம்மைச் சுற்றி வரும் என்பது நாமெல்லோரும் அறிந்ததே.   சுவற்றில் அடித்த பந்தாய் நம் பார்வைக்கே ஒருநாள் திரும்ப வரும்.

 2007-ஆம் ஆண்டு அ.வெண்ணிலா என்பவர்  “உயிர் எழுத்தில்”

“கற்பனையை மையமாகக் கொண்ட இச்சரித்திரக் கதையே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் என்பதும் சுவாரசியமான தகவல்.” என்றெழுதி வாசகர்களின் சந்தேகப் பயிருக்கு யூரியா உரமேற்றுகிறார். 

மறுபடியும் 13.11.2011 தேதியன்று “தினமலர்” பத்திரிக்கையில் “தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்” என்ற தலைப்பில் சித்தி ஜுனைதாவைப் புகழ்ந்து பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஜே.எம்.சாலி கட்டுரை தீட்டுகையில் டாக்டர் கம்பம் சாஹீல் ஹமீது தந்த கீழ்கண்ட தகவலையும் சேர்த்துக் கொள்கிறார்.

“இந்த நாவலின் கதைச் சுருக்கமே எம்.ஜி.ஆர்., நடித்த, “நாடோடி மன்னன்’ திரைப்படத்திற்கு மூலக் கதையாக அமைந்தது என்று கூறப்பட்டது. அதற்கு கதை, வசனம் எழுதிய ரவீந்தர் இதை ஒப்புக் கொண்டார். நாகூரைச் சேர்ந்த ரவீந்தரின் இயற் பெயர் காஜா முகைதீன்”.

கட்டுரையை வெளியிட்ட ‘தினமலர்’ பத்திரிக்கை தன்னை “உண்மையின் உரைகல்” என்று வேறு பிரகடனப் படுத்திக் கொள்கிறது. கட்டுரை தீட்டிய ஜே.எம்.சாலி  எத்தனையோ படைப்பாளிகளை தமிழுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். சமுதாயத்தின் நன்மதிப்பை பெற்றவர். நம்பகரமான மூத்த பத்திரிக்கையாளர் வேறு.

மறுபடியும் இந்த காப்பியடித்த விவகாரம் “விஸ்வரூபம் -2” ஆகி அலாவுத்தீன் பூதமாக வெளிக்கிளம்புகிறது ‘வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால்’ சொல்லவும் வேண்டுமோ? குழுமங்களிலும், வலைத்தளங்களிலும், வலைப்பூக்களிலும்  சூடு பறக்கும் விவாதப் பொருளாக இது மாறுகிறது.

திரும்ப திரும்பச் சொன்னால் பொய்க்கூட உண்மையாகி விடும் என்பது ‘கோயபல்ஸ் தியரி’. நாமே உண்மைக்கும் புறம்பான ஒரு விஷயத்தை யாரிடமாவது பரப்பி விட்டிருப்போம். அதே செய்தி சுற்றிச் சுற்றி நம்மிடம் பிறிதொரு நாள் நம் காதில் விழும் போது நாமே குழம்பிப் போய் விடுவோம். “நெருப்பில்லாமல் புகையாதே! ஒருக்கால் இது உண்மையாகவே இருக்குமோ?” என்று நம்மையே சந்தேகிக்க வைத்து விடும். அதுவும் செய்தியைச் சொன்னவர் நம்பகரமான ஆளாக இருந்து விட்டால் போதும். நாம் கேள்விப்பட்டது உண்மைதான் என்ற அசையா முடிவுக்கு வந்துவிடுவோம்.

ரவீந்தர் விஷயத்தில் இதுதான் நடந்துள்ளது. பிரச்சினை இதோடு முற்றுப் பெறவில்லை.

அதற்கு அடுத்த ஆண்டு 9.1.2012 அன்று கீரனூர் ஜாகிர் ராஜா தனது  வலைப்பதிவில் சித்தி ஜுனைதாவைப் பற்றி ஒரு கட்டுரை பதிவிடுகிறார். இவரும் நாடறிந்த எழுத்தாளர். ‘கருத்த ராவுத்தர்’ என்ற குறுநாவல் எழுதி வாசகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான்

இப்படியாக ஆளாளுக்கு யூகத்தின் அடிப்படையிலேயே கிரகித்து எழுதி, எழுதி ரவீந்தரை ஒருவழியாக “எழுத்துலகத் திருடனாக” உருவகப் படுத்தி விடுகிறார்கள்.

ஆனால் ஒரே ஒருவர் மட்டும்தான் இதிலுள்ள சூட்சமத்தை லேசாக கோடிட்டுக் காட்டுகிறார். அவர் வேறு யாருமல்ல “வலைப்பூ தாத்தா” நாகூர் ஆபிதீன். ( இவரை நான் “தாத்தா” என்று அழைப்பது இவருடைய வயதினால் மட்டுமல்ல. ‘கல்தோன்றா மண்தோன்றா காலத்திலிருந்தே’ வலைப்பூ தொடங்கி தினத்தந்தி கன்னித்தீவில் வரும் ‘உள்ளதை உள்ளபடி காட்டும்  மாயக்கண்ணாடி’ போல எதையும் பட்டவர்த்தனமாக கூறி எதிரிகளை எளிதில் சம்பாதித்துக் கொள்பவர் என்பதால்.)

“ஒரு ரகஸ்யம், இஸ்லாமிய இலக்கியவாதிகளிடம் சொல்லிவிட வேண்டாம், ‘காதலா கடமையா?’ ஒரு ஆங்கில நாவலின் தழுவல்தான் என்பார் புதுமைப்பித்தன்!” என்று இந்த சர்ச்சைகளுக்கு எதிர்மறை கருத்தை முன்வைக்கிறார்.

“கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற கூற்றுக்கிணங்க ஒருவர் கூட  இது ஆதாரபூர்வமான செய்திதானா? இதைச் சொன்னது யார்? எதனை அடிப்படையாகக் கொண்டு கூறுகிறார்கள்? என்று சற்றும் ஆராய்ந்துப் பார்க்கவில்லை. ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்ற ரீதியில் பேசினார்கள்.

பிரச்சினை இப்பொழுதாவது முற்றுபெற்றதா என்று கேட்டால் இனிமேல்தான் அது நாகையில் கிளம்பி ஆந்திராவை நோக்கிச் செல்லும் புயல் போல இன்னும் வலுவாகிப் போகிறது.

“அறியப்படாத தமிழுலகம்” என்ற பெயரில் பா இளமாறன், ஐ சிவகுமார், கோ கணேஷ் ஆகிய மூவர் நூலொன்றை எழுதுகிறார்கள் அதில் கீழ்க்கண்ட தகவல்களை அச்சில் ஏற்றுகிறார்கள்.

‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதைப்போல “நாடோடி மன்னன்” தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையை கிரகித்துக் கொள்ள முடிகிறது.

என்ற ‘ஹிரோஷிமா’ குண்டை ஊரறிய போடுகிறார்கள்.

“நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத்தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன”

என்பது அவர்களின் கொலம்பஸ் கண்டுபிடிப்பாக இருக்கிறது.  “ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கிய கதை” நம் ஞாபகத்திற்கு வருகிறது. இதற்குப்பிறகு அம்மூவர் இன்னொரு கேள்விக்குறியை  நம்முன் நாட்டுகின்றனர்.

“பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில் ஒரு பெண்ணாக இருந்து அந்தக் கால கட்டத்தில் எதிர்கொள்ளவேண்டிய சங்கடங்கள் பிரச்சனைகள் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம்”

என்று முடிவுக்கு அவர்களே வந்துவிடுகிறார்கள். ‘கேள்வியும் நானே! பதிலும் நானே!” என்ற பாணியில் அவர்களே வினா தொடுத்து அதற்கு அவர்களே பதிலும் உரைத்து விமோசனம் அடைந்து விடுகிறார்கள்

“நாடோடி மன்னன்” படம் வெளிவந்த ஆண்டு 1958. சித்தி ஜுனைதா நம்மை விட்டு மறைந்த ஆண்டு 1998. ஆச்சிமாவின் கதையைத் திருடி ரவீந்தர் “நாடோடி மன்ன”னில் பயன்படுத்தி இருந்தால் இந்த 40 ஆண்டு கால இடைவெளியில் இந்த விவரம் அவர்களின் கவனத்துக்கு வராமலா இருந்திருக்கும்? தன் இறுதிக்காலம்வரை பத்திரிக்கையும் கையுமாக இருந்து உலக நடப்பை அறிந்து வந்த ஒரு முற்போக்கு பெண்மணிக்கு இதுகூட தெரியமலா இருந்திருக்கும்? தன் கதையை இன்னொருத்தர் திருடிவிட்டார் என்று தெரிந்தால் அவரிடமிருந்து எதிர்வினை இல்லாமலா போகும்?

இத்தனை காலம் அவர்களுக்கு வேண்டிய ஒருத்தரிடமாவது தன்னுடைய ஆதங்கத்தை பகிர்ந்திடாமலா இருந்திருப்பார்கள்? இந்த நாற்பாதாண்டு கால இடைவெளியில் ரவீந்தர் காப்பியடித்த இந்த விவகாரம் எப்படியாவது கசிந்திருக்குமல்லவா?

நாகூர் என்ற ஊர் இருந்தது தமிழ்நாட்டில்தானே? செவ்வாய் கிரகத்தில் அல்லவே?

தன்னுடைய “காதலா? கடமையா?”  நாவலை காப்பியடித்து ரவீந்தர் “நாடோடி மன்ன”னில் பயன்படுத்திக் கொண்டார் என்று தன் வாழ்நாளில் ஒருமுறைகூட யாரிடமும் அந்த மங்கையர்க்கரசி சொல்லவில்லையே?

அதேபோன்று ரவீ’ந்தர் தன் வாழ்நாளில் ஒருவரிடம் கூட” சித்தி ஜுனைதாவின் நாவலைத் தழுவியதுதான் ‘நாடோடிமன்னன்’ கதை” என்று ஒருபோதும் பிரகடனப் படுத்தியது கிடையாதே?.

பிறகு ஏன் இந்த ஆதாரமற்ற அவதூறு? வெறும் யூகத்தை மட்டும் அடிப்படையாக வைத்து ஏன் ரவீந்தர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும்?

“அறியப்படாத தமிழுலகம்” நூலை  எழுதிய அம்மூவர் மேலும் மேலும் கேள்விகள் கேட்டு அவர்களுடைய கருத்தை நம்மிடம்  வலுக்கட்டாயமாக திணித்து  நம்மை நம்ப வைக்க முயலுகிறார்கள். இதோ படியுங்கள் அவர்களின் கூற்றை:

“மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற ரவீந்தர் நாகூரை சேர்ந்தவர் என்பதும் ஜுனைதா பேகம் இது விஷயத்தில் மெளனம் காத்ததற்கான காரணம் என்றும் ஊகிக்க முடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத புதிராக நீடிக்கிறது”

என்று ராம்ஜெத்மாலானியின் வாதத்தைப்போன்று கிறுக்கு கேள்விகள் மன்னிக்கவும் குறுக்கு கேள்விகள் கேட்டு நம்மை திக்குமுக்காடவைத்து நம்மை நம்பச் சொல்கிறார்கள்.  கதையைத் திருடியவர் ஒரே ஊர்க்காரராக இருந்து விட்டால் எழுதியவர் தன் தார்மீக உரிமையை விட்டுக் கொடுத்து விடுவார் என்ற ‘லாஜிக்’ பொருந்தவில்லையே?

நான் முன்பே சொன்னது போன்று 1958 முதல் 1998 வரை ‘நாடோடி மன்னன்’ என்ற திரைப்படக்கதை  அவருடையதுதான்  என்ற விவரத்தை யாருமே சித்தி ஜுனைதாவின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என்ற வாதம் நம்பும்படியாக இல்லை. ‘கேப்பையிலே நெய் வடியுது’ என்றால் கேட்கின்ற நாம் யோசிக்க வேண்டாமா?

விக்கிபீடியாவில் சித்தி ஜுனைதாவைப்பற்றிய விவரங்களை பதிவேற்றிய சந்திரவதனா என்ற பெண்மணி “சித்தி ஜுனைதாவும் நாடோடி மன்னன்களும்” என்ற தலைப்பில் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது புனைந்த சுட்டியை வெளி இணைப்பாகச் சேர்க்க, அது எல்லோர் பார்வையிலும் படும்படியான நிரந்தர ஆவணமாக இணையதளத்தில் பதிவாகி விட்டது. யூகங்களின் அடிப்படையில் தரப்பட்ட விவகாரங்கள் நாளடைவில் எப்படி ஓர் அத்தாட்சி பிரமாணமாக ஆகிவிடுகிறது என்பதற்கு இது ஒன்றே நல்ல எடுத்துக்காட்டு. 

ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. பன்மொழியாளர்கள் பனிரெண்டு பேர்கள் ஒன்றுகூடி  சோதனை ஒன்றை நடத்தினார்கள். வட்டமாக அமர்ந்துக்கொண்டு ஒரு காகிதத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட சொற்றொடரை அடுத்தவர் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கவேண்டும் அதனையடுத்து அச்சொற்றொடரை ஸ்பானீஷ், ஜெர்மன், என்று ஒவ்வொரு மொழியாக மொழிபெயர்த்தபின் கடைசியாக உட்கார்ந்திருப்பவர் அதை மீண்டும் ஆங்கில மொழியிலேயே மொழியாக்கம் செய்ய வேண்டும். இறுதியில் அந்த காகிதத்தை வாங்கிப் பார்த்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் முதலில் ஆங்கிலத்தில்  எழுதப்பட்ட வாசகத்திற்கும் இறுதியாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட வாசகத்திற்கும் இம்மியளவும் தொடர்பில்லை. அதற்கு எதிர்மறையான கருத்து எழுதப்பட்டிருந்தது.

ரவீந்தர் விஷயத்திலும் இதுதான் நடந்துள்ளது. செய்யாத குற்றத்திற்காக அவர் ‘சிலுவை’யில் அறையப்பட்டிருக்கிறார். அனுமானத்தின் அடிப்படையிலேயே ஆளாளுக்கு அவரை விமர்சித்துள்ளார்கள். வெறும் யூகங்களை வைத்தே அவர் மீது பழிசுமத்தி இருக்கிறார்கள். உண்மை எது, பொய் எது, என்று ஆராயாமலேயே அவர் பெயருக்கு களங்கம் சுமத்திருக்கிறார்கள். “தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆகி” தனிமனிதன் ஒருவனின் தன்மானத்திற்கும் கெளரவத்திற்கும் பங்கம் விளைவித்திருக்கிறார்கள். இது அவருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.

டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது அவர்களை குறை கூறுவதற்காக நான் இதனை இங்கே எழுதவில்லை. அவர் “தினகரன்”  இதழில் “காதலா? கடமையா?” நாவல் மற்றும் “நாடோடி மன்னன்” படக்கதை  இவையிரண்டிற்கும் குமுதத்தில் வரும் “ஆறு வித்தியாசங்களை கண்டு பிடி” என்ற ரீதியில் செய்த ஒப்பீடு இந்த யூக யாகத்திற்கு சாம்பிராணியை அள்ளி வீசி இருக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

“இந்த நாவலை (காதலா? கடமையா?”)  படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1958-ல் தயாரித்து இயக்கி நடித்த “நாடோடி மன்னன்” திரைப்படக் கதை “காதலா? கடமையா?”  நாவலின் கதையோடு ஒத்திருந்ததுதான்”

‘காதலா கடமையா?’ நாவலின் இந்தக் கதைச் சுருக்கம்தான் நாடோடி மன்னனுக்கு அடிப்படைக் கதையாக அமைந்திருந்ததை காண முடிந்தது

என்றெல்லாம் சந்தேகத்தைக் கிளப்புகிறார் அந்த எழுத்தாளர். தன் வாதத்திற்கு பக்கபலமாக சில ஒப்பீடுகளை  டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது நடத்துகிறார்   ‘தினகரன்’ பத்திரிக்கையில் அவர் செய்த ஒப்பீடு இதோ உங்கள் கனிவான கவனத்திற்கு :

‘காதலா கடமையா?’ நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் :

1.  18 வயது முதல் 45 வயதுக்குள் புத்தகப் பயிற்சி அளித்து கல்வியில் ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.
2. வைத்திய வசதிகள்
3. பயிர்த்தொழில், குடிசைத் தொழில் பெருக்குதல்
4. பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல். உயர் கல்விச்சாலையும் அமைத்தல். அனாதை விடுதி, தனி மருத்துவமனை அமைத்தல்.
5. ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க வசதி.
6. ஏழை பணக்காரர் வேற்றுமையை நீக்குதல்

இதே கருத்துக்கள்  நாடோடி மன்னன் திரைப்படத்தில்  இளவரசனாக நடிப்பவன் போடும் சட்டமாகும்.

1. ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்குதல்
2. பயிர்த்தொழில் செய்தல்
3. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்களைக் கட்டுதல்
5. கல்வி வைத்திய வசதி ஏற்படுத்துதல்
6. வாழ்விழந்த பெண்களுக்காக செலவிடுதல், மருத்துவமனை அமைத்தல்
7. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி ஏழை பணக்காரர் வேறுபாடு நீக்குதல்
8. வயோதிகர், கூன், குருடு, முடம் போன்றோர்க்கு உதவி செய்தல்
9. கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புச் சலுகை
10. உழுபவனுக்கே நிலம் சொந்தம்
11. கற்பழித்தால் தூக்கு தண்டனை
…. என்று இடம் பெற்றுள்ளன.

இந்த ஒப்பீட்டை பட்டியலிட்ட அவர்  “காதலா கடமையா?’ நாவலின் சமுதாய கருத்துக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த காரணத்தால் நாடோடி மன்னனில் அதே கருத்துக்களுடன் சில புதிய சிந்தனைகளையும் சேர்த்து ரவீந்தர் வசனமாக எழுதியுள்ளார்” என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை  அள்ளி வீசுகிறார்.

“நாவலில் இடம்பெறும் திட்டங்களும் படத்தில் இடம்பெறும் திட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதைக் காணலாம்” என்று நாட்டாமையாக மாறி தீர்ப்பும் வழங்கி விடுகிறார்.

உதாரணத்திற்கு மோடி அரசாங்கம் அறிவித்துள்ள நலத்திட்டங்களில் சில இந்திராகாந்தியின் இருபது அம்சத்திட்டங்களோடு ஒத்துப் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்காக அவர்  இந்திராகாந்தியின் திட்டங்களை அப்படியே காப்பியடித்து விட்டார் என்று வாதிடுவது முறையாகுமா?

இந்த லாஜிக்படி பார்த்தால் அர்ஜுன் நடித்த “முதல்வன்” படமும்கூட  “காதலா? கடமையா?” நாவலின் “கள்ளக்காப்பி” அல்லது “ஈயடிச்சான் காப்பி” என்றுதான்  சொல்ல வேண்டும்.

டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீதின் மற்றுமொரு வாதம் எனக்கு சிரிப்பை வரவழைத்தது இதோ அவருடைய வார்த்தைகளில்:

“நாடோடி மன்னனில் இளவரசனாக நடிப்பவனிடம் அவன் காதலி ,’அத்தான் நாம் காதலோடு பிறப்பதில்லை. கடமையோடுதான் பிறக்கிறோம். உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டால் நாடு நலம் பெறும்’ என்று குறிப்பிடுகிறாள். ‘காதலா கடமையா?’ என்ற நாவலின் தலைப்பு நாடோடி மன்னன் திரைப்பட வசனத்திலும் அப்படியே வந்துள்ளது. இது வசனகர்த்தா ரவீந்தரிடம் நாவலின் தலைப்பு ஏற்படுத்திய ஆழமான தாக்கமாகக் கருதலாம்”

“நாடோடி மன்னன்” படத்தில் வரும் வசனத்தில் “காதல்” என்ற வார்த்தையும் வருகிறதாம். “கடமை” என்ற  வார்த்தையும் வருகிறதாம். அதனால் நாவலின் தலைப்பு ரவீந்தருக்கு ஒரு ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணியதாம். “என்ன இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு?” என்ற வடிவேலுவின் காமெடி வசனம்தான் பட்டென்று என் நினைவுக்கு வந்தது.

1981-ஆம் ஆண்டு பாக்கியராஜ் “இன்று போய் நாளை வா!” என்று ஒரு படமெடுத்தார். அதற்காக இப்படம் இராமயணத்தின் தழுவல் என்று சொல்லி விடுவதா?

1939-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் “மாயா மச்சீந்தரா” என்ற படத்தில் சிறிய வேடமேற்று நடித்தார். “இந்தியன்” படத்தில் “மாயா மச்சீந்திரா” என்ற வார்த்தைகளோடு ஒரு பாடல் இடம் பெறுகிறது. அதற்காக இவையிரண்டிற்கும் தொடர்பு உள்ளது என்று கூறிவிட முடியுமா?

மேலும் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது மூன்று ஆதாரங்களை (?) நமக்கு சமர்ப்பிக்கின்றார். அவை பின்வருமாறு :

 1. ‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசன்  சிறை வைக்கப்பட்டு இருக்கும் தீவு மாளிகையும், இளவரசனாக நடிப்பவன் சண்டையிட்டு மீட்கும் காட்சியும் “நாடோடி மன்னன்” திரைப்படத்திலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.
 2. இதைப்போல “நாடோடி மன்னன்” திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் ‘காதலா கடமையா?’ நாவலில் வரும் காட்சிகளைப் பின்பற்றி அமைத்து இருக்கின்றன.
 3. ‘காதலா கடமையா?’ நாவல் நாடோடி மன்னன் திரைப்படம் முழுவடிவம் பெறுவதற்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் அமைந்துள்ளது

மொத்தத்தில் சித்தி ஜுனைதாவின் நாவலை ரவீந்தர் காப்பியடித்தார் என்பதை அவரது கற்பனை ஆதாரங்களுடன் வாசகர்களின் மனதில் பதிய வைத்து விட்டார். வெறும் யூகங்களின் அடிப்படையில் தொடங்கிய அவரது வாதம்  “கோயபல்ஸ் தியரியாய்” ரவீந்தர் மீது களங்கம் சுமத்தி கட்டுரையை முடித்து விடுகிறார்.

“காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாய்”, “பிள்ளையார் பிடிக்க குரங்காய் ஆன கதையாய்” தெரிந்தோ தெரியாமலோ ஒரு சர்ச்சைக்கு வித்திட்டு ரவீந்தரை தீராத பழிக்கு ஆளாக்கி விடுகிறார் அந்த சீரிய எழுத்தாளர்.

நாணயத்தின் மறுபக்கம்

ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இதுவரை நான் பாடிய புராணம் நாணயத்தின் ஒரு பக்கம்தான், நாணயத்தின் மறுபக்கத்தையும் இப்போது பார்ப்போம்.

“நாடோடி மன்னன்” படத்தின் கதை ரவீந்தர் திருடி விட்டார் என்று பெரும் பெரும் எழுத்தாளர்கள் முதற்கொண்டு இணையத்தில் வலம்வரும் நண்டு சுண்டுகள் வரை குற்றம் சொல்கிறார்களே உண்மையிலேயே “நாடோடி மன்னன்” கதையை எழுதியது ரவீந்தர்தானா?

இப்பொழுதுதான் நமக்கு பேரதிர்ச்சியே காத்துக் கிடக்கிறது.

உண்மையில் “நாடோடி மன்னன்” கதையை எழுதியது ரவீந்தரே கிடையாது, இந்த ஒரு பதிலிலேயே அத்தனை குற்றச்சாட்டுகளும் தவிடு பொடியாகி விடுகின்றன.  குற்றச்சாட்டு வீசிய அத்தனை பேர்களுடைய முகத்திலும் கரியை பூசி விடுகிறது. வேறு யார்தான் இதை எழுதினார்கள் என்கிறீர்களா? சற்றே பொறுமை காக்க வேண்டுகிறேன்.

அப்படியென்றால் செய்யாத ஒரு குற்றத்திற்காகத்தான் ரவீந்தர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு இவ்வளவு காலம் பழிச்சொல்லுக்கு ஆளாக்கப்பட்டாரா? ‘பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்’ என்பார்களே, அது இதுதான் போலிருக்கிறது.

‘நாடோடி மன்னன்’ படக்கதை எப்படி உருவாகியது என்பதற்கு அப்படத்தை தயாரித்து இயக்கிய எம்.ஜி.ஆரே தெளிவாக வாக்குமூலம் அளித்துள்ளார். படம் உருவான கதையை ஒரு நூலாகவே வெளியிட்டார்.

1937-38 ம் ஆண்டுகளில் எம்,ஜி,ஆர் கல்கத்தாவில் “மாயா? மச்சீந்திரா? ” படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம்.

Justin-McCarthys-play-If-I-Were-King1 220px-If-I-Were-King-poster-1938

ஒருநாள் அவர் நண்பர்கள் சிலருடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போகிறார். ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த  IF I WERE KING படம் அது….அதில் ஒரு காட்சியில் “நான் மன்னனானால்?” என்று தொடங்கி கதாநாயகன் வசனம் பேசுகிறான்.. ஆங்கிலம் சரளமாகத் தெரியாத எம்,ஜி,ஆரால் வசனங்கள் முழுவதையும்  புரியமுடியாமல் போனாலும் வசனத்தின் சாரம்சத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது. அந்தக் கருத்து அவர் மனதில் ஆழப்பதிந்து அடிக்கடி  ‘நான் மன்னனானால்?’ என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறார். “நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே என் மனதில் தோன்றிவிட்டது” என்று பெருமையுடன் எம்.ஜி.ஆர். தன் புத்தகத்தில் எழுதுகிறார்.

1894-ல்  ஆண்டனி ஹோப் எழுதிய “THE PRISONER OF ZENDA” என்ற நாவல், 1901-ல் ஜஸ்டின் ஹண்ட்லி மேக்கர்த்தி யின் நாடகமான “IF I WERE KING”  மற்றும்   “VIVA ZAPATA” என்ற ஆங்கிலப்படம் இவை மூன்றின் ‘கிச்சடி’ கலவைதான் “நாடோடி மன்னன்” படக்கதை. நான் மேற்கூறிய நாவலும், நாடகமும் பிறகு படமாக வெளிவந்தன.

200px-Hope_Prisoner_of_Zenda_coverThe_Prisoner_of_Zenda_1952_poster

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் கதை இலாகாவில் பங்கு வகித்த ஆர்.எம்.வீரப்பன், வித்வான் கே.லக்‌ஷ்மணன், எஸ்.கே.டி.சாமி இம்மூவரையும் எம்.ஜி.ஆர். இந்த மூன்று படங்களையும் பார்க்க வைக்கிறார்.  கதையின் போக்கு எப்படி வரவேண்டும் என்பதை  எம்.ஜி.ஆரே  கோடிட்டும் காட்டுகிறார். இம்மூவரும் இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை தமிழ் மண்ணுக்கு ஏற்றவகையில் உருவாக்குகின்றனர். தானே அதில் இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தையும் அவர்களிடம் வெளிக்காட்டுகிறார். நாடோடி மன்னனின் படக்கதை இப்படியாகத்தான் உருபெற்றிருக்கிறது.

“IF I WERE KING” என்ற நாடகத்தை அடிப்படையாக வைத்து “THE VAGABOND KING”  என்ற ஹாலிவுட் படம் 1930-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இதில் டென்ன்ஸ் கிங் கதாநாயகனாக நடித்திருந்தார். பல விருதுகளை அள்ளிச் சென்றது.

vagabond (1)the-vagabond-king-1930-dvd-jeanette-macdonald-dennis-ef80220px-VagabondKing1930

“IF I WERE KING”  நாடகமும் பலமுறை மேடையில் அரங்கேறி பெருத்த வரவேற்பை பெற்றிருந்தது. 1938-ஆம் ஆண்டு ரோனால்ட் கோல்மேன் நடிக்க இதுவும் திரைப்படமானது. “THE PRISONER OF ZENDA”  நாவலும் 1937-ல் திரைப்படமானது.

(இப்படம் வெளிவந்ததும், சித்தி ஜுனைதா எழுதிய நாவல் வெளிவந்ததும் ஒரே வருடம்)

ஆங்கிலப் படத்தை தழுவி தமிழ்ப்படம் எடுப்பது தமிழ்த்திரையுலத்திற்கு ஒன்றும் புதிதல்ல. எம்.ஜி.ஆர் முதல் கமலஹாசன் வரை இதனைச் செய்திருக்கிறார்கள். இதைத் தவறு என்று நான் குற்றம் கூற மாட்டேன். “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்று பாரதி கண்ட கனவை இவர்கள் நனவாக்குகிறார்கள் என்று திருப்திகொள்ள வேண்டியதுதான்.

“VAGABOND KING” என்ற படத்தலைப்பையே   தமிழில் அப்பட்டமாக மொழிபெயர்த்து “நாடோடி மன்னன்” என்ற தலைப்பைக் கொடுத்து பத்திரிக்கைகளிலும் எம்.ஜி.ஆர். விளம்பரம் கொடுத்து விடுகிறார்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பரணி பிக்சர்ஸ் சார்பில்  “THE PRISONER OF ZENDA” ஆங்கிலப்படத்தின் தழுவலாக ஒரு தமிழ்ப்படத்தை தயாரிப்பதற்கான ஏற்பாடு நடிகை பி,பானுமதி செய்து வருகிறார் என்ற செய்தி எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு எட்ட அவருக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிடுகிறது.

இப்படி ஒரு முட்டுக்கட்டை வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை, இப்பொழுது என்ன செய்வது? எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் முதல் கன்னி முயற்சி இது. அறிவிப்பிலிருந்து பின்வாங்கினால்  எம்.ஜி.ஆர். பெயர் கெட்டுவிடும், இப்பொழுது இது அவருக்கு ஒரு கெளரவப் பிரச்சினையாக ஆகி விடுகிறது..

பி.பானுமதியை சந்தித்து அவருடைய படத்தயாரிப்பை வாபஸ் வாங்கி கொள்ளுமாறு கோரிக்கை விடுக்க அவர் சற்றும் மசியவில்லை. பானுமதி தயாரிக்கும் படம் “THE PRISONER OF ZENDA” படத்தின் நேரடி தழுவலாக இருந்தால் தனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை என்றும், தான் எடுக்கப்போகும் படம் மூன்று படங்களின் தழுவல் என்றும் எம்.ஜி.ஆர் தன் கருத்தை பானுமதிக்கு புரிய வைக்கிறார்.

ஆரம்பத்தில் இசைந்து கொடுக்காத பானுமதி  ஒருவழியாக தன் எண்ணத்தை கைவிட்டு படத்தை நிறுத்திவிடுவதாக பெருந்தன்மையோடு ஒப்புக் கொள்கிறார். அதற்கு பரிகாரமாக பி.பானுமதியையே இப்படத்தில் கதாநாயகியாக எம்.ஜி.ஆர். நடிக்க வைக்கிறார்.

படப்பிடிப்பு தொடங்கிய காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கும் பானுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பானுமதி கதாநாயகியாக நடித்த “ரத்னகுமார்’, “ராஜமுக்தி’ போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். சிறு வேடங்களில் நடித்தவர். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். பிற்காலத்தில் முன்னணி நடிகராக, வசூல் நாயகனாக முன்னேறினார். இருப்பினும் “EGO’ காரணமாக, படப்பிடிப்பில் பானுமதி சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று திரைப்பட உலகைச் சார்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் எம்.ஜி.ஆர்., படத்தின் கதையில் மாற்றம் செய்கிறார். படத்தின் முதல் பாதி வரை கதாநாயகியாக நடித்த பானுமதியை இடைவேளைக்குப் பிறகு புகைப்படத்தில் மட்டுமே காட்டுகிறார். பி.சரோஜாதேவியை இன்னொரு கதாநாயகியாக அறிமுகப்படுத்தி அதற்கேற்ற வகையில் கதையிலும் மாற்றம் செய்கிறார்.

இத்தனை இடியாப்ப சிக்கல் நிறைந்து மாற்றம் செய்த கதையைத்தான்  சித்தி ஜுனைதாவின் நாவலிலிருந்து ரவீந்தர் சிரமப்படாமல் அப்படியே ‘அபேஸ்’ செய்துவிட்டார் என்று வாய்க்கூசாமல் சொல்லுகிறார்கள்.

“ஒரு நாட்டின் இளவரசனுக்கு முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. சதிகாரர்கள் இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்கிறார்கள். தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்கிறார்கள். இந்நேரத்தில் இளவரசனைப் போல் உருவ ஒற்றுமையுடைய ஒருவன் வெளியூரிலிருந்து தற்செயலாக அங்கு வருகிறான். அவனைச் சந்தித்த இளவரசனின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்றே நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறான்”.

இதுதான் 1938-ஆம் ஆண்டு சித்தி ஜுனைதா எழுதிய  “காதலா? கடமையா?” என்ற நாவலின் கதை. அதே 1938-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் பார்த்த “IF I WERE KING” ஏறக்குறைய இதே கதைதான்.

 “நாடோடி மன்னன் கதை விவாதத்தின்போது  எம்.ஜி.ஆர் அவர்கள் ரவீந்தரிடம் பாதிக்கதை வரையில் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது  மீதிக்கதையை ரவீந்தர் சொல்லி முடித்தார். இதைக் கேட்டு வியந்த எம்.ஜி.ஆரிடம் ‘காதலா கடமையா?’ என்ற நாவலில் படித்த கதைதான் இது என்று ரவீந்தர் தெரிவித்தார்”

என்று டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது தன் கட்டுரையில் எழுதுகிறார். தெளிவாக பேச முடியாத நிலையிலிருந்த ரவீந்தர் அப்படியே இவரிடம் கூறியிருந்தாலும் இதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எம்.ஜி.ஆர். பார்த்த ஆங்கிலப் படத்தின் கதையும், சித்தி ஜுனைதா எழுதிய “காதலா? கடமையா?” கதையும் ஒத்துப் போகிறது என்றுதானே இதற்கு அர்த்தம்?

இதை படித்தபோது என் மனதின் மூலையில் அமர்ந்திருந்த பட்சி மீண்டும் “BRO கொஞ்சம் மாத்தி யோசி” என்றது. “IF I WERE KING” அல்லது “THE VAGABOND KING” அல்லது  “THE PRISONER OF ZENDA” அல்லது “VIVA ZAPATA” நாவல் அல்லது படத்திலிருந்து கருவை ஏன் சித்தி ஜுனைதா கடன் வாங்கியிருக்கக்கூடாது? (என் வார்த்தைகளின் பிரயோகத்தை தயவு செய்து கவனிக்கவும்). அசோகமித்திரனின் கூற்றும் நினைவுக்கு வந்தது.

வெறும் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த  சித்தி ஜுனைதாவுக்கு இந்த ஆங்கில மொழியில் வந்த நாவல், நாடகம், திரைப்படம்  பற்றிய அறிவு எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி இப்பொழுது எழலாம். இஸ்லாமிய பெண்களிடையே கல்வியறிவு அவ்வளவாக இல்லாத காலத்தில், தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரில் வாழ்ந்து வந்த ஒரு பெண்மணிக்கு இவையெல்லாம் தெரிந்து வைத்திருப்பது சாத்தியம்தானா?  என்று நீங்கள் கேட்கக்கூடும். நியாயமான கேள்விதான்.

ஏன் சாத்தியமில்லை? என்பதுதான் என் கேள்வி.

The night has a thousand eyes,
And the day but one;
The mind has a thousand eyes
And the heart but one:

என்ற பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோன் (Francis William Bourdillon) ஆங்கிலக் கவிஞனின் அமுதவரிகளை அழகுத்தமிழில்

இரவுக்கு ஆயிரம் கண்கள்,

பகலுக்கு ஒன்றே ஒன்று

அறிவுக்கு ஆயிரம் கண்கள்,

உறவுக்கு ஒன்றே ஒன்று

என்று பாடலெழுதிய கண்ணதாசன் வெறும் எட்டாவது வரை மட்டும் படித்தவர்தானே?

 “ஜுனைதா பேகம் மிகக்குறைந்த அளவே படித்தவர். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அதுவும் 1894இல் வெளியான ஓர் ஆங்கில நாவல் ஜுனைதா பேகத்திடம் எப்படிப் போய்ச் சேர்ந்தது, அதை அவருக்கு யார் படித்துக் காண்பித்தார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும்.”

என பிரபல எழுத்தாளர்  பத்ரி சேஷாத்ரி ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறார். என்னதான் கட்டுப்பாடான ஒரு இறுக்கமான சமுதாய கட்டுக்கோப்பில் அவர் வளர்ந்தாலும்கூட  எல்லோரும் நினைப்பதைப் போன்று அவரொன்றும் ‘கிணற்றுத் தவளை’யாக இருக்கவில்லை

இதற்கு பதில் தெரிய வேண்டுமென்றால் சித்தி ஜுனைதாவின் குடும்பப் பின்னணியை பற்றி சற்று தெரிந்துக் கொள்வது மிக அவசியம். சித்தி ஜுனைதா பள்ளிப்படிப்பை சமுதாய சூழ்நிலையால் தொடரவில்லை என்றாலும்கூட அவர் தமிழறிவையும், எழுத்தாற்றலையும் – கேட்டும், தெரிந்தும், பயிற்சியினாலும் வீட்டிலிருந்தபடியே தெரிந்துக் கொண்டார். ஏட்டறிவை விட கேள்வி ஞானம் சிறந்தது என்பதில் ஐயமில்லை.

சித்தி ஜுனைதாவின் தந்தையார்  எம்.ஷெரீப் பெய்க் ஆங்கில பாடம் படித்த பட்டதாரி இல்லையென்றாலும் ஆங்கிலம் நன்றாக அறிந்தவர். ஆங்கிலேயக் கப்பலொன்றில் கேப்டனாக பணி புரிந்தவர். அந்தக் காலத்திலேயே “நெல்சன்ஸ் என்சைக்ளோபீடியா” வைத்து படித்துக் கொண்டிருந்தவர் என்றால் உலக விஷயங்களில் அவர் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

சித்தி ஜுனைதா தன் தந்தையாரிமிருந்து நாட்டு நடப்பை கேட்டறிய சாத்தியமில்லையா?

அறிஞர் அண்ணாவால் பாராட்டுப் பெற்ற முனவ்வர் பெய்க் சித்தி ஜுனைதாவின் இளைய சகோதரர், ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றவர். அஞ்சலகத் தலைவராக பணியாற்றியவர். “நானும் என் சகோதரும்தான் ஒன்றாக அமர்ந்து படிப்போம் எழுதுவோம்” என்று 1999-ஆம் ஆண்டு முஸ்லிம் முரசு பொன்விழா மலரில்  சொல்லரசு, மு.ஜாபர் முஹ்யித்தீன் பதிப்பித்த நேர்காணலிலிருந்து நாம் அறிய முடிகின்றது.

சித்தி ஜுனைதா தன் தம்பியிடமிருந்து இந்த ஆங்கில படங்களின் கதைகள் ஏதாவதொன்றை கேட்டறிந்து அதனை தன்  மனதில் பசுமரத்தாணிபோல் பதிய வைத்து அந்த தாக்கத்தின் விளைவால் அந்த நாவலை புனைந்திருக்க வாய்ப்பு இல்லையா?

இன்னொரு சகோதரர் முஜீன் பெய்க். நாட்டு நடப்பு அறிந்தவர். காரைக்காலிலிருந்து வெளிவந்த “பால்யன்” பத்திரிக்கையை பலகாலம் வெற்றிகரமாக நடத்தியவர். ஆங்கில ஞானம் உடையவர். வீட்டில் உலகச் செய்திகளை தாங்கிவரும் அப்பத்திரிக்கைகள் குவிந்திருக்கும். அவரிடமிருந்து நாடு நடப்பை கேட்டறிய சாத்தியமில்லையா?

சித்தி ஜுனைதா டயரி எழுதும் பழக்கமுள்ளவராக இருந்திருக்கிறார். மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்த அவருடைய டயரியில் தெள்ளத் தெளிவான தமிழ் எழுத்துக்களில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் எழுதி வைத்திருக்கிறார்.

என் இளம்பிராயத்தில் சித்தி ஜுனைதாவின் மருமகன் ஆஸாத் அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிங்கப்பூரில் கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றி, நேர்மையான மனிதர் என்று பெயரெடுத்தவர். தமிழ்ப்பற்றின் காரணமாக தன் மகனுக்கு செல்வமணி என்ற தமிழ்ப்பெயர் வைத்தவர். அரைக்கால்சட்டையும், காலுறை, காலணி அணிந்து “கெளரவம்”  சிவாஜி போன்று வாயில் ‘பைப்’ வைத்து  ‘வாக்கிங் ஸ்டிக்’கைச் சுழற்றியபடி அவர் நடந்துபோகும் அழகே அழகு.  நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்.

இதுபோன்ற ஆங்கில பாண்டித்தியம் பெற்ற மனிதர்களுக்கிடையே வாழ்ந்த அவர் ஆங்கில நாவல்களின் கதையை அறிந்து வைத்திருக்க ஏன் சாத்தியமில்லை?

டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது 2002-ல் எழுதிய கட்டுரைக்குப் பிறகுதான் இதுபோன்ற ஹேஸ்யங்கள் தொடர்ந்தன என்பது என் தாழ்மையான அபிபிராயம்.

“நாடோடி மன்னன்” படத்தின் வசனத்தை ரவீந்தர் எழுதினார். இதற்காக அவர் இரவு பகல் என பாராது உழைத்தார். ஒருசில வசனங்கள் எழுதிய கண்ணதாசன் பெயர்தான் இப்படத்தில் பிரதானமாக விளம்பரப்படுத்தப்பட்டது.  தன் சொத்துக்கள அனைத்தையும் முடக்கி இப்படத்திற்காக முதலீடு செய்த எம்.ஜி.ஆர்.  “இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். தோல்வியடைந்தால் நாடோடி” என்று கூறினார்.

பிரபலமான கண்ணதாசனின் பெயர் விளம்பரத்தில்இடம்பெற்றால்தான் படத்தின் வெற்றிக்கு துணைபுரியும் என்றெண்ணி ரவீந்தரை ஓரங்கட்டியிருக்கலாம்.

mgr-nadodi-3

நாடோடி மன்னன் பட சுவரொட்டியில் கண்ணதாசன் பெயர்

நாடோடி மன்னன் பட  டைட்டிலில் “வசனம்” என்ற இடத்தில் கண்ணதாசனின் பெயரோடு இணைத்து ரவீந்தரின் பெயர் காண்பிக்கப்படும். ஆனால் பெரும்பாலான விளம்பரங்களில் அவருடைய பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும். (மேலேயுள்ள சுவரொட்டியைக் காண்க)

“நாடோடி மன்னன்” படத்தின் வெற்றி விழா மதுரை முத்துவின் மேற்பார்வையில் மதுரையில்  தடபுடலாக ஏற்பாடாகியது. நான்கு குதிரைகள் பூட்டிய அலங்கார ரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது 110 பவுனில் தயாரிக்கப்பட்ட தங்க வாள் மின்னியது. ஊர்வலத்தின் இறுதியில் தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான வெற்றி விழாவில் ‘பளபள’வென்று மின்னிக் கொண்டிருந்த வீரவாளை நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருக்கு பரிசளித்தார்.

நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி போன்றோர் விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள். படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று அல்லும் பகலும் பாடுபட்ட ரவீந்தரை யாருமே கண்டுக் கொள்ளவேயில்லை.

அப்படிப்பட்ட இந்த மனிதருக்குத்தான் வேறு ஒருவருடைய கதையைத்திருடி “நாடோடி மன்னன்” படத்திற்கு பயன்படுத்திக் கொண்டார் என்ற அவப்பெயர்.

1987 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தார். அவர் உயிரோடிருக்கும்போது இந்த நாடோடி மன்னன் கதை விவகாரத்தை கிளப்பியிருந்தால் பத்திரிக்கையாளர்கள் யாராவது அவருடைய கவனத்திற்கு கொண்டு போயிருப்பார்கள். அவரே இதற்கான பதிலை அளித்து, உண்மையை உலகுக்குரைத்து ரவீந்தரின் மீது விழுந்த அபாண்டமான பழியைத் துடைத்தெறிந்திருப்பார்.

எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் உருவான விதத்தை ஒரு நூலாக எழுதினார் என்று சொன்னேன் அல்லவா? அதில் இப்படி எஅவர் எழுதுகிறார்:

“நாடோடி மன்னனைப் பொறுத்த வரையில் வசனகர்த்தாவில் ஒருவரான திரு.கண்ணதாசன் அவர்களுக்கும் எனக்கும் கொள்கைப் பிடிப்பும் குறிக்கோளும் ஒன்றாகவே இருந்ததனால் மேலே சொன்ன குழப்பம் நேரவே இடமில்லாமற் போய்விட்டது. இன்னொரு வசனகர்த்தாவான திரு.ரவீந்திரன் என்னுடைய கொள்கையை நன்கு புரிந்த, தொடர்ந்து என்னுடன் பணியாற்றி வருபவராதலால் நான் அமைத்த பாத்திரங்களின் குணத்தையோ தரத்தையோ மாற்றக்கூடிய எதையும் அவர் செய்யவில்லை”

இதில் கடைசி வரியை கவனித்து பார்த்தால் உண்மை நமக்கு விளங்கவரும். “நான் அமைத்த பாத்திரங்கள் குணத்தையோ தரத்தையோ” என்று எம்.ஜி.ஆர் தெளிவாக குறிப்பிடுகிறார். பாத்திரப்படப்புகள் ரவீந்தர் உருவாக்கியத்தல்ல என்பது நமக்கு புரிகிறது.  இதில் ரவீந்தர் செய்த திருட்டு எங்கே இருக்கிறது?

“எழுத்துலகத் திருட்டு” எந்த அளவு கண்டிக்கத்தக்கதோ அதைவிட மோசமானது இப்படி ஒருவர் மீது ஆதாரமற்ற அபாண்டமான குற்றச்சாட்டை அள்ளி வீசுவது. தெரிந்தோ தெரியாமலோ இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து எழுத்தாளர்களும் ரவீந்தருக்கு இழைத்திருக்கும் துரோகம் மன்னிக்க முடியாதது. தீர விசாரிக்காமல் குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்குள்ளான கோவலனுக்காக எழுதப்பட்ட சிலப்பதிகாரம் போல காவியம் எழுத நான் சொல்லவில்லை. அநீதி இழைக்கப்பட்ட கண்ணகி மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி போல எதையும் செய்ய நான் சொல்லவில்லை.

இதுதான் உண்மை. மற்ற புரளியெல்லாம் ரவீந்தர் மீது இட்டுக்கட்டப்பட்ட கதையென்று ஊரறிய, உலகறிய இப்பதிவை பலபேர்களுக்கு பகிர்ந்தாலே போதும். அந்த மனிதருள் மாணிக்கத்திற்கு நாம் செய்யும் உபகாரம் இதைவிட வேறெதுவும் இருக்க முடியாது.

நாகூர் அப்துல் கையூம்

நாகூர் மண்வாசனை

– தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 5

 

Tags: , , ,

சீர்காழிக்கும் நாகூருக்கும் ஓர் இனிப்பான பந்தம்


SIVA CHIDAMBARAM 3

மேடையில் சிவசிதம்பரத்துடன் எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், மா.பொ.சி. அரிய புகைப்படம்

ரவீந்தரைப்பற்றி எனது வலைத்தளத்தில் தொடர் எழுது வருகிற எனக்கு  “இன்பக்கனவு” நாடகம் சீர்காழியில் அரங்கேறியபோது அது எந்த இடத்தில் நடைபெற்றது என்ற துல்லியமான விவரம் தேவைப்பட்டது. காரணம் எம்.ஜி.ஆருக்கு கால்முறிவு ஏற்பட்டது சீர்காழியில் நாடகம் நடந்தபோதுதான். பதிவு செய்யப்படவேண்டிய முக்கியமான நிகழ்வு அது. அதைபற்றி அங்குள்ள ‘பெருசு’களிடம் விசாரிப்பதற்கு எனது நண்பர் சீர்காழி கவிஞர் தாஜ் அவர்களைத்தான் தொடர்பு கொண்டேன். அவரும் அதற்குரிய விவரங்களை உடனேயே சேகரித்துத் தந்தார். என் நண்பர் எழுத்தாளர் ஆபிதீனுக்கும் அப்படித்தான். தாஜ் என்றால் அப்படியொரு இஷ்டம். அவருடைய வலைத்தளமே அதற்கு சான்று பகரும்.

சீர்காழிக்கும் நாகூருக்கும் அப்படியென்ன ஒரு நெருக்கமான பந்தம் என்று புரியவில்லை.

சீர்காழி கோவிந்தராஜனுக்கும், நாகூர் ‘இசைமணி’ யூசுப்பிற்கும் “இசைமணி” என்ற பட்டம், சென்னை அண்ணாமலை மன்றத்தில், தமிழிசை சங்கம் ஒரே மேடையில் வைத்து வழங்கியது. அப்போது சீர்காழி கோவிந்தராஜனுக்கு வெறும் 16 வயதுதான்.

அது போகட்டும். அதைவிட ஒரு மிக நெருங்கிய தொடர்பு ஒன்றுண்டு.

‘கணீர்’ என்ற வெண்கலக்குரலுக்கு சொந்தமானவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு நாகூர் பூர்வீகமாக கட்டாயம் இருக்கும் போல.

சிம்மக்குரலோன் நாகூர் ஹனிபாவைப் போன்று சீர்காழி கோவிந்தராஜனின் பூர்வீகமும் நாகூர்தான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?

சீர்காழி கோவிந்தராஜனின் பெற்றோர் சிவசிதம்பரம் மற்றும் அவையாம்பாள். இவர்களது பூர்வீகம் நாகூரிலிருந்துதான் தொடங்குகிறது. தந்தையாரின் அதே பெயரைத்தான் தன் மகனுக்கும் சிவசிதம்பரம் என பெயர் சூட்டினார் சீர்காழி கோவிந்தராஜன்.

கம்பராமாயணத்தை பாமரரும் கேட்டுப் பரவசப்படும் வகையில் இசைப் பாடல்காளாக கீர்த்தனைகளாகப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.. இதற்காக அவர் தகுந்த ஆலோசனை பெற்றது நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் அவர்களிடமிருந்துதான்.

சீர்காழி கோவிந்தராஜனின் இசை வாரிசாக நாடெங்கும் புகழ் பரப்பி வரும் அவரது மகன் டாக்டர் சிவசிதம்பரம் கூறியதை அப்படியே இங்கே தந்திருக்கிறேன்.

“எங்களுடைய முன்னோர் நாகூரில் வாழ்ந்தவர்கள். மிட்டாய் வியாபாரம். வியாபாரத்தைப் பெருக்க நகரங்களை நோக்கிச் சென்றார்கள். அப்படி நாங்கள் வந்தடைந்த இடம் சீர்காழி. நாகேஸ்வரா கோயில் அருகில் இந்தப் பகுதியில் முதல் மிட்டாய்க் கடை திறந்தவர்கள் நாங்கள்தான்.”

சீர்காழிக்கும் நாகூருக்குமிடயே நிலவும் இந்த இனிப்பான பந்தம் இன்னும் தொடரட்டும்.

– நாகூர் அப்துல் கையூம்

 

Tags: , ,

நாகூர் ஹனீபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (5-ஆம் பாகம்)


 
“நாகூர் ஹனிபாவுக்கு கலைஞர் கொடுத்த அல்வா” என்று இக்கட்டுரைக்கு தலைப்பு கொடுத்ததற்கு பதிலாக “பிழைக்கத் தெரியாத நாகூர் ஹனிபா” என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமே என்று என் நண்பர்கள் சிலர் கருத்து தெரிவித்தார்கள். இதற்கு காரணம் நாகூர்  ஹனிபா மீது அவர்களுக்கிருந்த கோபமா? அல்லது கலைஞர் மீது அவர்கள் வைத்திருந்த அளப்பரிய அன்பா என்று கண்டறிய நான் முயற்சி ஏதும் எடுக்கவில்லை.

அவர்களுடைய கண்ணோட்டத்திலிருந்து சிந்தித்துப் பார்த்தால் நாகூர் ஹனிபா தனக்கிருந்த அரசியல் செல்வாக்கையும், கட்சித் தலைமையோடு அவருக்கிருந்த நெருக்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டாரோ என்ற சந்தேகமும் நம் மனதில் எழுந்து தொலைகின்றது.

கலைஞர் அவர்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்து “ஏன் நீங்கள் நாகூர் ஹனிபாவுக்கு உரிய பதவி கொடுக்கவில்லை?” என்று கேட்பதற்கு பதிலாக நாகூர் ஹனிபாவிடமே “நீங்கள் ஏன் பதவியை கேட்டுப் பெறவில்லை?” என்று ஏன் நாம் கேட்கக் கூடாது?

நாகூர் ஹனிபா அவர்கள் “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற மனப்பக்குவத்துடன் பெருந்தன்மையோடு நடந்துக் கொண்டாரா? அல்லது கூச்ச சுபாவம் காரணமாக வந்த வாய்ப்புக்களை எல்லாம் விரால் மீனாக நழுவ விட்டாரா? அல்லது இஸ்லாமியப் பாடகராக கச்சேரிகள் மூலமாக வரும் வருமானம் இதனால் கெட்டுப் போய்விடுமே என்ற காரணத்தினால் அரசியல் பதவியை தவிர்த்து விட்டாரா? என்று தெரியவில்லை.

இசைத்துறையில் தனக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அரசியலில் கிடைக்காது என்ற காரணத்தினால்கூட இருக்கலாம் அல்லவா?

இந்த வாதத்தை நாம் முன் வைப்பதால் கலைஞர் – நாகூர் ஹனிபா இருவருக்கும் இடையிலான நட்புறவில் கலைஞர் அவர்கள் நியாயமாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியாது. இதோ அந்த நிகழ்வு நாம் சொல்லவரும் கருத்துக்கு நல்லதோர் உதாரணம்.

இசைமுரசு அவர்கள் தனக்குச் சொந்தமான “அனிபா லாட்ஜ்” கட்டிடத்தை கட்டி முடித்து, அதன் திறப்பு விழாவுக்கு கலைஞர் அவர்களை அழைத்தபோது, வருவதாக வாக்களித்திருந்த கலைஞர் அவர்கள் வேண்டுமென்றே வரவில்லை. அதற்கு காரணம் அதையொட்டி நடைபெறவிருந்த தேர்தல்.

பெருமளவில் கூட்டத்தைக் கூட்டி கட்சியின் வலிமையைக் காட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்தார் கலைஞர். இதுபோன்ற சிறிய நிகழ்ச்சியில் வந்து கலந்துக் கொண்டு பெருந்திரளான கூட்டத்தை திரட்டத் தவறினால் எங்கே தன்னுடைய ‘இமேஜ்’ பாதிக்கப்பட்டு விடுமோ என்று தயங்கிய கலைஞர் நாகூர் வருவதை ரத்து செய்து விட்டார். கடைசியில் சாதிக் பாட்சா, ஆ.கா.அப்துல் சமது, மதுரை ஆதீனம் போன்றவர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தி முடித்தார் ஹனிபா.

நட்புதான் பெரிது என்று கலைஞர் மனதார நினைத்திருந்தால் தஞ்சாவூர் வரை வந்த தானைத்தலைவர் தாராளமாக ‘இமேஜ்’ எதையும் பார்க்காமல் நண்பரின் அழைப்புக்கு இணங்கியிருக்கலாம். நாகூர் ஹனிபாவுக்கும் அது பெருமையாக இருந்திருக்கும்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் தொடக்க கால வாழ்க்கையில் அவரை கைத்தூக்கி விட்டவர்கள், அவருடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமகனார்கள், பெரும்பாலும் இஸ்லாமியச் சகோதரர்களாகவே இருந்தார்கள் என்பதை இந்தப் பதிவின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருந்தேன். இவர்கள் அனைவரும் எழுத்துலகிலும் பத்திரிக்கைத் துறையிலும் கைதேர்ந்த தமிழார்வலர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வுப் பொருத்தமா அல்லது கலைஞர் அவர்கள் இஸ்லாமிய அன்பர்களுடன் நட்புறவு கொள்வதை மிகவும் விரும்பினாரா என்பது ஆராய வேண்டிய விஷயம். கலைஞர் அவர்களுக்கு இஸ்லாமியச் சமூகத்தினர் மீது ஒரு தனிப்பட்ட பிரியம் இருந்ததை நாம் மறுக்கவோ மறக்கவோ இயலாது. இன்றளவும் நாகூர் ஹனிபாவைப் போன்று எத்தனையோ இஸ்லாமியச் சகோதரர்கள் கலைஞரின்  Diehard விசுவாசிகளாக இருக்கிறாகள் என்பது கண்கூடு. தன்னுடைய அரசியல் லாபத்திற்காக முஸ்லீம் லீகை பிளவு படுத்தினார் என்பது உண்மையாக இருந்தபோதிலும், கலைஞர் செய்தது ஒருவகையில் நன்மையாகவே முடிந்தது என்று சிலர் கருதுகிறார்கள்.

கூட்டணிக் குடையின் கீழ் ஆட்சியின் பீடத்திலிருந்து அவர்கள் சாதிக்க முடியாத பல விஷயங்களை எதிர் அணியில் இருந்துக் கொண்டு சமுதாயப் பிரச்சினைக்கு வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கும் ஒன்றிணைந்து செயலாற்றும் இத்தனை இஸ்லாமிய அமைப்புகளை நினைத்தால் நமக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.

“முஸ்லீம் லீக்” என்ற கட்சி உட்பூசலின் காரணமாக பெரிதாக எந்த ஒரு சமுதாய சீர்திருத்தத்தையோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காக களமிறங்கி போராடியோ சாதனை படைக்கவில்லை என்ற ஒரு அபிப்பிராயம் பரவலாக நிலவுகிறது. இதனை என்னால் மறுக்க முடியவில்லை என்பதும் உண்மை.

கலைஞர் அவர்களுடைய பொதுவாழ்க்கையில் அவருக்கு தோளோடு தோள் நின்று, அவருடைய இன்ப துன்பங்களில் பங்கு பெற்று, பொருளாதார உதவியும், தொழில் ரீதியான முறையில் உதவிகளும் புரிந்து, கலைஞர் அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த பெருமை அவர் தொடர்பு வைத்திருந்த திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருந்த முஸ்லீம் அன்பர்கள் பலரைச் சாரும்.

கமால் பிரதர்ஸ், கவி.கா.மு.ஷெரீப், கருணை ஜமால், சாரணபாஸ்கரன், கலைமாமணி காரை எஸ்.எம்.உமர், நாகூர் ஹனிபா, நாவலர் ஏ.எம்யூசுப், ஆ.கா.அ.அப்துல் சமது என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இக்கட்டுரையின் மையக்கருத்தை விட்டு சற்றே விலகி கலைஞர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த இந்த இஸ்லாமிய நண்பர்கள் பத்திரிக்கைத் துறையில் எவ்வாறு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினார்கள் என்பதை சற்று விரிவாகக் காண்போம்.

நாகூர் ஹனிபாவுக்கும் பத்திரிக்கைத் துறைக்கும் சம்பந்தம் ஏதும் இல்லாத போதிலும் அவருடன் நெருங்கிப் பழகிய நாகை, திருவாரூர், காரைக்கால் வட்டார இஸ்லாமிய நண்பர்கள் பலர் பத்திரிக்கைத் துறையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் அவர்கள் பத்திரிக்கைத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு அறிஞர் தாவுத்ஷா அவர்கள் ஒரு முன்மாதிரியாகத் (as a Role Model) திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

“அந்தக் காலத்தில் நான் பள்ளியில் பயிலும் போது ஒரு கையிலே குடி அரசு ஏடு, இன்னொரு கையிலே “தாருல் இஸ்லாம்” என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரசாரம் செய்கிற நாளேடு – இவைகள்தான் எங்கள் கைகளை அலங்கரிக்கும்”

என்று டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் சொன்னதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையின் ஆசிரியர்தான் தாவூத் ஷா.

Dawood Shah

1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “தாருல் இஸ்லாம்” என்ற மாத இதழ், அக்காலத்தில் பத்திரிக்கை உலகில் ஒரு முன்னோடி இதழாகத் திகழ்ந்தது.

கலைஞர் அவர்கள் தனியாக பத்திரிக்கை தொடங்குவதற்கு “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கை ஒரு உந்து சக்தியாக அமைந்தது என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.

64 பக்கங்களுடன் வெளிவந்த அந்த இதழானது, தலையங்கம், அரிமாநோக்கு, கண்ணோட்டம், அரசியல், ஆன்மீகம், அறிவியல், சட்ட, மருத்துவக் கட்டுரைகள், கவிதை, கதை, தொடர்கதை, ‘கேள்வி-பதில்’ பகுதி, வாசகர் கடிதம், துணுக்குகள் என்று அத்தனை பல்சுவை அம்சங்களுடன் அவ்விதழ் மக்களைக் கவர்ந்தது. ‘தத்துவ இஸ்லாம்’, ‘முஸ்லிம் சங்கக் கமலம்’, ‘தேவ சேவகம்’, ‘ரஞ்சித மஞ்சரி’ போன்ற பல இதழ்கள் நடத்திய அனுபவம் அவருக்குண்டு.

தினத்தந்தியில் சிந்துபாத் கதை வாசகர்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றிருந்ததை நாமெல்லோரும் அறிவோம். முதன் முதலாக ஆயிரத்தொரு இரவுகள் அரபுக் கதைகளை மொழி பெயர்த்து தமிழுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் தாவூத் ஷா. அதற்குப்பின்னால் அரேபியக் கதைகளின் Fantasy அம்சங்களை திரைப்படங்களில் குலேபகவாலி, நாடோடி மன்னன், பாக்தாத் பேரழகி போன்ற படங்களில் புகுத்திய பெருமை திரைப்பட வசனகர்த்தா நாகூர் ரவீந்தரைச் சேரும்

“பத்திரிகையில் எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டு பிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு” என்று அறிவித்ததும், தம் பத்திரிகையில் புரூப் திருத்துவதற்கென்றே புலவர் செல்வராஜ் என்ற தமிழ்ப் புலவரையே நியமித்து வைத்திருந்ததும் தாவுத்ஷா அவர்களின் பத்திரிக்கை தர்மத்தையும் அவரது தொழில் பக்தியையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றது.

அக்காலத்தில் பிராமணச் சமூகத்திற்கு இணையாக, பத்திரிக்கைத் துறையில் இஸ்லாமியர்கள் காலூன்றி தடம் பதித்திருந்தார்கள் என்ற கருத்தை வலியுறுத்த பல உதாரணங்களை இங்கே கோடிட்டுக் காட்ட முடியும்.

[19-ஆம் நூற்றாண்டிலேயே (1880-களில்) நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள் ‘வித்தியா விசாரிணி’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கி கவிதை, உரைநடை, இலக்கியம், மொழி பெயர்ப்பு, இதழியல் என இலக்கியத்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார்.]

கீழை நாடுகள் மற்றும் பிரஞ்சு நாட்டில் வியாபாரத் தொடர்பை வளர்த்துக் கொண்ட இஸ்லாமியர்கள் இங்கு சொந்தமாக அச்சகங்கள் துவங்கியதால் அவர்களுக்கு இது எளிதான காரியமாக இருந்தது. [நாகூரைச் சேர்ந்த தளவாய் சின்னவாப்பா மரைக்காயர் ‘ரபீக்குல் இஸ்லாம்’ (இஸ்லாமிய நண்பன் என்று பொருள்) என்ற வார இதழை 1905-ஆண்டு சிங்கப்பூரில் நடத்தி வந்தார் என்பது மற்றொரு கொசுறு செய்தி]

காரைக்காலிலிருந்து 1944-ஆம் ஆண்டு முதல் “பால்யன்” என்ற வார இதழ் வெளிவந்துக் கொண்டிருந்தது. இதன் ஆசிரியர் உ.அபூஹனிபா என்பவராவார். “மணிச்சுடர்” ஆ.கா.அப்துல் சமது, நாவலர் “மறுமலர்ச்சி” யூசுப், “சாந்தி விகடன்” அ. மு. அலி, எஸ்.எம்.உமர், வடகரை எம்.எம்.பக்கர், ஓவியர் காரை பக்கர் போன்றவர்கள் இவ்விதழை வளர்ப்பதில் இலவசமாக தமது சேவையினை வழங்கியுள்ளனர். இம்மூவரையும் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது பால்யன் இதழே.

காரைக்காலில் 1940-களில் நடத்தப்பட்ட “கதம்பம்:, “இளம்பிறை” , “முஸ்லீம் லீக்” போன்ற இதழ்களிலும் ஆ.கா.அ. அப்துல் சமது எழுதி வந்தார்.

“பால்யன்” இதழை முதலில் தொடங்கியவர் காரை அ.மு.அலி அவர்கள் . இவர், தான் ஆரம்பித்த இதழை உ.அபூஹனிபாவிடம் ஒப்படைத்துவிட்டு சிங்கப்பூர் சென்று விட்டார். “பால்யன்” இதழ் ஒரு தரமான இலக்கிய இதழாக தமிழ்ச் சேவை ஆற்றி வந்தது.

அதன் பின்னர், ஆனந்த விகடன் போன்றே ஜனரஞ்சகமான இஸ்லாமிய சஞ்சிகை ஒன்று “சாந்தி விகடன்” என்ற பெயரில் காரைக்காலிலிருந்து காரை அ.மு.அலி வெளியிட்டார். 1960 முதல் 1963 வரை வெளிவந்த இந்த இதழ் 1963-ஆண்டில் வரலாறு மலர் ஒன்றை வெளியிட்டதுடன் நின்றுபோனது. இவ்விதழ் அரசியலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தது. கருத்துப்படங்களும் விகடனைப் போன்றே கேலியும் கிண்டலும் நிறைந்து காணப்பட்டது.

காரை அ.மு.அலி வேறு யாருமல்ல. கலைஞர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ‘கலைமாமணி’ உமர் அவர்களின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்.

கலைஞர் அவர்கள் தன் பழைய நண்பர்களை அறவே மறந்து விட்டிருந்தார் என்று கூற முடியாது. அவர்களை நெஞ்சில் நினைவிறுத்தி கவி கா.மு.ஷெரீப், நாகூர் ஹனிபா, காரை எஸ்,எம்.உமர் போன்றவர்களை கெளரவித்து “கலைமாமணி” பட்டம் வழங்கினார். (கலைமாமணி பட்டம் “Tom. Tick & Harry” என்று கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்து அந்த விருதுக்கே மதிப்பில்லாமல் போனது வேறு கதை)

‘கலைமாமணி’ எஸ். எம். உமர், நாகூர் ஹனிபா, கலைஞர் கருணாநிதி – இம்மூவரும் ஏறக்குறைய சமவயதினர். எழுத்தாளராகவும் திரைப்படத்தயாரிப்பாளராகவும் இருந்த உமர் கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட இந்தியப் படங்களை வியட்நாம் மொழியில் மொழிமாற்றம் செய்தவர். “இளம்பிறை” (1944), “குரல்” (1949), “உமர்கய்யாம்” (1978) போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர். “ஞானசௌந்தரி”, “லைலா மஜ்னு”, “அமரகவி”, “குடும்ப விளக்கு”, “ஜெனோவா” போன்ற படங்களின் தயாரிப்பில் பங்கு பெற்றவர்.

1968-ல் காரை எஸ்.எம்.உமர் “வசந்த சேனா’ என்ற வண்ணப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரித்தார். இப்படத்தில் பின்னணியில் முகவுரை பேசியவர் நாவலர் ஏ.எம்.யூசுப்.   1948-ல் ஏ.எம்யூசுப், அ.மு.அலி, ஜே.எம்.சாலி மற்றும் தோழர்கள் இணைந்து “இழந்த காதல்” என்ற சமூக சீர்த்திருத்த நாடகத்தை நடத்தினார்கள். அந்த நாடகத்தில் “ஜெகதீஷ்” என்ற வில்லன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்களைக் கவர்ந்தவர் ‘மறுமலர்ச்சி; ஏ.எம்.யூசுப் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத் துறையில் இவர் செய்த சாதனைக்காக, 1997-ல் கலைஞர் கருணாநிதி இவருக்கு “கலைமாமணி’ விருது அளித்து கெளரவித்தார்.

அடுத்து கலைஞர் அவர்களுக்கும் கமால் பிரதஸுக்கும் இருந்த நட்பின் நெருக்கத்தை ஆராய்வோம்.

தளபதி ஸ்டாலினிடம் சென்று “உங்கள் தந்தையாரின் கோபாலபுரம் வீட்டை வாங்கித் தந்தவர் கமால் சகோதரர்கள் என்று சொல்லுகிறார்களே. இது உண்மையா?” என்று கேட்டால் “யார் சொன்னது? இது என் தந்தையார், அவரே சம்பாதித்து வாங்கியது” என்பார்.

“கோபாலபுரம் வீடும், திருவாரூர் அருகே காட்டூரில் அஞ்சுகம் அம்மாள் கல்லறை அமைந்துள்ள இடமும் நான் சம்பாதித்த சொத்துகள்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார் கலைஞர்.

“கோடியென வந்த சம்பளத்தையும்- குடியிருந்த வீட்டையும்-தமிழுக்காகவும், ஏழை எளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் – தன் அறிவையும் ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன் – உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துக்கள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறான்” என தன் பிறந்தநாள் வாழ்த்து அறிக்கையில் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

‘சில பேருக்கு கோபாலபுரமே சினிமா உலகமாக ஆகி விடுமோ என்று சொல்லத் தோன்றியுள்ளது. ஆமாம். சினிமா உலகம் தான். சினிமா உலகத்திலேயிருந்து வந்தவர்கள் தான் பல பேர் இன்றைக்கு கோபாலபுரத்திலிருந்து தங்களுடைய புகழ்க் கொடியை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அதற்காக வெட்கப்படவில்லை. மருமகன் படம் எடுத்து படத்தயாரிப்பாளர், மகன் படத்தயாரிப்பாளர், பேரன் படத்தயாரிப்பாளர் என்றெல்லாம் இன்றைக்கு சில பேர் அரசியல் ரீதியாக கேலி பேசுகிறார்கள், கிண்டல் பேசுகிறார்கள். ஆமாம், என் பேரன் பட தயாரிப்பாளர் தான். இன்னும் கொஞ்ச நாளைக்கு பிறகு என்னுடைய கொள்ளுப்பேரன் கூட படத்தயாரிப்பாளராக ஆனால், அதிலே எந்தவிதமான ஆச்சரியப்படவும் தேவையில்லை. படத்தயாரிப்பு என்பது ஒன்றும் தவறான காரியமல்ல. படத்தயாரிப்பு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தொழில் தான்.’

என்று கலைஞர் அவர்கள் அண்மையில் உணர்ச்சி பொங்க ஒரு விழாவில் பேசினார்.

ஆம் கோபாலபுரத்திற்கும் சினிமா உலகத்திற்கும் அப்படி ஓர் ஒற்றுமை. திரைப்படத் தயாரிப்பளர்களான கமால் பிரதர்ஸ் வங்கித் தந்த வீடுதான் கோபாலபுரம் வீடு. திரைப்படத்துறைக்காக அடகு வைக்கப்பட்ட விடுதான் அந்த வீடு. அதே திரைப்படத்தால் மீட்கப்பட்ட வீடுதான் அந்த கோபாலபுரம் வீடு, கலைஞர் அவர்கள் தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி”யில் சொன்னது போல் திரைப்படத்தில் வசனம் எழுதி வாங்கிய வீடு என்ற கூற்றில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

கூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும் “கமால் பிரதர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். இவர்களின் குடும்பத்திற்கு வியட்நாம் நாட்டில் சைகோன் (Saigon) நகரத்தில் வணிகத்தொழில் இருந்து வந்தது. 1957-ல் வியட்நாம் போரின்போது சைகோன் நகரம் பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. ஆதலால் வியாபாரம் நஷ்டத்திற்கு உள்ளானது. தமிழ்நாட்டில் இவர்கள் தொடங்கிய “கமால் பிரதர்ஸ்” என்ற படநிறுவனமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

கமால் சகோதரர்கள் கலைஞர் கருணாநிதிக்கு பலவிதத்தில் பணஉதவி புரிந்திருக்கிறார்கள். கோபாலபுரம் வீட்டை 45,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கிக் கொடுத்தவர்களும் அவர்களே. இன்று கமால் சகோதரர்கள் வாங்கித் தந்த வீட்டை மக்களுக்கு தானம் கொடுத்து விட்டதாக கலைஞர் அறிவிக்கிறார். இந்த வீட்டை ஒரு காலத்தில் தனது “மேகலா பிக்சர்ஸ்” நிறுவனத்திற்காக அடகு வைத்து ஏலத்திற்கு வந்தபோது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வெறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு “எங்கள் தங்கம்” படத்தில் நடித்துக் கொடுத்து அந்த வீட்டை மீட்டுக் கொடுத்தார்கள் என்கின்ற செய்தியை நடிகர் ராதா ரவி தெரிவிக்கிறார்.

திரைப்படத்தயாரிப்பில் இறங்கி நொடித்துப் போன அவர்கள் வறுமையில் வாடி வதங்கியபோது, அவர்களின் பொருளாதார நிலைமையை யாரோ முதலமைச்சர் கலைஞரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒருகாலத்தில் நம்மிடம் உதவியை எதிர்பார்த்து நின்றவரிடம் நாம் போய் உதவி கேட்பதா?’ என்று தன்மானம் கருதி அவர்கள் கலைஞரைச் சந்திக்க மறுத்து விட்டனர். இந்தச் செய்தியை நான் அறிந்தபோது கலைஞர் தன் பழைய உறவுகளை நினைத்துப் பார்க்க மனமில்லாத கல்நெஞ்சம் கொண்ட மனிதரல்ல என்பதை உணர்ந்தேன்.

கமால் சகோதரர்கள் கலைஞரைச் சந்தித்திருந்தால் இவர்களுக்கு பொருளுதவி செய்திருக்கக் கூடும். வாய்ப்பினை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதைப் போன்று நாகூர் ஹனிபாவும் பதவியை கேட்டுப் பெற்று பயன் அடைந்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.

கலைஞர் அவர்களை மாடர்ன் தியேட்டர்ஸில் அறிமுகம் செய்து வைத்தது கவி கா.மு.ஷெரீப் என்பதை நாம் முன்பே ஆராய்ந்தோம். அவர் வசனம் எழுதிய ஒரு படத்திற்கு – அப்போது அவர் பிரபல வசனகர்த்தாவாக இல்லாமல் போன காரணத்தால் – படம் வெளிவந்தபோது அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்யப் பட்டிருந்தது. பிறகு கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்திற்கு வசனம் எழுதியபோதும் அவருடைய பெயர் இருட்டடிக்கப்பட்டு ஏ.எஸ்.எ.சாமியின் பெயரை வெளியிட்டார்கள். இத்தனை பெரிய அவமானம் அவர் சந்திக்க வேண்டிவரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. மனம் நொந்துப்போன கலைஞர் அவர்கள் மீண்டும் சேலத்திலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் மனைவி பத்மாவதியை அழைத்துக்கொண்டு திருவாரூருக்கு பயணமாகி வந்து சேர்ந்தார்.

“குடி அரசு” பத்திரிக்கையில் கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக எழுதி வந்த படைப்புகள் மக்களை எழுச்சிக் கொள்ள வைத்தன. இதற்கிடையில் கலைஞர் கதை வசனம் எழுதித் தந்த “மந்திரிகுமாரி” படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத்தின் அழைப்பு மீண்டும் வந்தது. கலைஞரை மறுபடியும் சேலம் வரச் சொல்லி அவருடைய எதிர்காலத்தின் மீது மிகவும் அக்கறை காட்டியவர் கவி.கா.மு.ஷெரீப். கலைஞர் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்வார் என்ற நம்பிக்கை ஷெரீப்புக்கு இருந்தது. கலைஞர் அவர்களின் வசீகரப் பேச்சுத்திறனையும் கனல் தெறிக்கும் எழுத்தாற்றாலையும் நன்கறிந்திருந்தார் அவர்.

அப்போது கலைஞரின் மனைவி பத்மாவதி கர்ப்பமாக (மு.க.முத்து) வேறு இருந்தார் பணத்திற்காக கலைஞர் அவர்கள் மிகவும் அல்லாடிக் கொண்டிருந்த நேரம் அது. கலைஞர் அவர்களின் எதிர்காலமே ஒரு கேள்விக்குறியாக இருந்தது. ஒருபுறம் பணக்கஷ்டம். இன்னொருபுறம் குறிக்கோள் எந்தி வாழ்க்கையின் ஏறுமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கலைஞர் அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார்.

பத்மாவதிக்கு குழந்தை பிறந்தது. தனது தந்தை முத்துவேல் அவர்களின் ஞாபகர்த்தமாக முத்து என்ற பெயரை வைத்தார். இவர்தான் பிற்காலத்தில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக(?) திரைப்படத்தில் இறக்கிவிடப்பட்ட மு.க.முத்து. இவர் பிறந்த சிறிது காலத்திற்குள் பத்மாவதியும் இறந்து போனார்.

இச்சமயத்தில் கலைஞர் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் கருணை ஜமால். இவர் மிகச் சிறந்த எழுத்தாளர். தமிழார்வலர். திருவாரூக்காரர்.

ஏற்கனவே ஈரோட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக இருந்த அனுபவம் கலைஞர் அவர்களுக்கு பெரிதும் கைகொடுத்தது.

துவக்கத்தில் துண்டு பிரச்சார ஏடாகவே முரசொலியானது கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் கலைஞர் அவர்கள் தனது 18-வது வயதில் (10-08-1942) பத்திரிக்கையாக வெளிக்கொணர்ந்தார். இம்முயற்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. பொருளுதவி மற்றும் சொந்த அச்சகம் இல்லாத காரணத்தினால் இது தடைபட்டுப் போனது. கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பரான கருணை ஜமால் அவர்களின் முயற்சியால் 14-01-1948 அன்று திருவாரூரிலிருந்து முரசொலி மீண்டும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1954-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து வார இதழாக வெளிவந்த முரசொலி 17-09-1960 முதல் நாளிதழாக வெளிவரத் துவங்கியது.

நின்று போயிருந்த முரசொலி பத்திரிகையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் திருவாரூரில் கலைஞர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  தன் மனைவியிடமிருந்த நகைகள் யாவையும் அடகு வைத்து முரசொலி பத்திரிக்கையை மீண்டும் தொடங்கினார் அவர். இருந்தபோதிலும் பத்திரிக்கை நடத்துவதென்பது அவர் நினத்ததுபோல் அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமாக இருக்கவில்லை. நிறைய முதலீடும், சொந்தமான அச்சகமும் தேவைப்பட்டது.

கலைஞர் தனது எண்ணத்தை கருணை ஜமாலிடம் தெரிவித்தபோது கொஞ்சமும் தயங்காமல் கலைஞருக்கு உதவி செய்ய முன்வந்தார். கருணாநிதி எழுத்தாற்றல் மீது பெருத்த நம்பிக்கை கொண்டிருந்தார் கருணை ஜமால்.  கருணை ஜமால் அவர்களை கலைஞர் நினைத்துப் பார்க்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கலைஞர் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக கருணை ஜமால் இருந்தார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் யாரும் கலைஞருக்கும் உதவ முன்வராத காலத்தில் கருணை ஜமால்தான் கலைஞரின் வாழ்க்கையில் ஒளிவிளக்காக திகழ்ந்திருக்கிறார்.

முரசொலி பத்திரிக்கையின் பிரதிகளை கருணை ஜமால் அவர்களே தன் சொந்த அச்சகத்தில் அச்சடித்துக் கொடுத்து, விற்பனையாளர்களுக்கு அனுப்பி, அதன்பின் தனக்குச் சேர வேண்டிய செலவுத் தொகையை பெற்று, கலைஞர் அவர்களுக்கு தன்னால் ஆன உதவியைச் செய்தார். காலத்தினால் செய்த இந்த உதவியானது கலைஞர் அவர்களின் முன்னேற்றத்திற்கும், வாழ்க்கைப் பயணத்திற்கும்  பெரிதும் துணை புரிந்தது.

கலைஞர் அவர்களின் உடல் உழைப்பும் அறிவுத்திறனும் முரசொலி பத்திரிக்கை வெற்றி பெற வழி வகுத்தது. முரசொலியில் எழுச்சிக் கட்டுரைகள் எழுதுவதோடு நிற்காமல் அவரே பிரதிகளைச் சுமந்துக் கொண்டு திருவாரூர் மற்றும் இதர இடங்களுக்குச் சென்று வினியோகம் செய்வார். அவருக்கு உதவியாக முரசொலியின் மேலாளர் கனகசுந்தரமும் முரசொலிக் கட்டுகளை சுமப்பது வழக்கம்.

திராவிட இயக்கத்தின் சார்பாக “குடி அரசு”, “விடுதலை”, “திராவிட நாடு” போன்ற ஏடுகள் மக்களிடையே பிரபலமாக இருந்த போதிலும், கருணை ஜமால் உதவியோடு கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் குறுகிய காலத்தில் “முரசொலி” இதழானது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது

 

Tags: , , , , ,

நாகூர் ஹனிபாவுக்கு பாராட்டுவிழாக்கள்


காயிதேமில்லத் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது

மதுரை பல்கலைக்கழகம் பாராட்டு விழாவின்போது

தமிழ் செம்மல் விருது பெற்றபோது

மலேசியா நாட்டில் விருது பெற்றபோது

 

Tags: , , ,

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம்-2)


“கண்ணான கருணாநிதி”
“புகழ் பூக்கும் கருணாநிதி”
“தமிழ் காக்கும் கருணாநிதி”
“ஈடில்லா கருணாநிதி”
“இதயத்தில் கருணாநிதி”
“அதிமேதை கருணாநிதி”
“இளஞ்சிங்கம் கருணாநிதி
“பார்புகழும் கருணாநிதி”

இன்னும் என்னென்ன அடைமொழிகள் சேர்க்க முடியுமோ அத்தனை அடைமொழிகளையும் Superlative degree-யில் கலைஞரை போற்றிப் பாடியே, ஓடம்போக்கி ஆற்றோரத்தில் துவக்கிய ஹனிபாவின் அரசியல் துவக்கம் அவரது வாழ்க்கை முழுவதும் ஓடமாய் இருந்து கட்சியை கரைசேர்ப்பதிலும் கலைஞரை கலசமாய் கோபுரத்தில் தூக்கி வைப்பதிலுமே காலம் கடந்து விட்டது.

ஹனிபா ஒரு பாடகனாக இல்லாமல் பேச்சாளனாக கட்சி வாழ்க்கையைத் தொடங்கி இருந்தால் ஒருவேளை அவர் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவராக கருதப் பட்டிருப்பாரோ என்னவோ தெரியாது.

பேசிப்பேசி கட்சியை வளர்ப்பவனுக்கும், பாடிப் பாடி கட்சியை வளர்ப்பவனுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை நிர்ணயித்து வைத்திருக்கின்றது நம் தமிழகத்து அரசியல் களம்.

ஆம் பாட்டுப்பாடி கட்சியை வளர்ப்பவனுக்குப் பெயர் கூத்தாடி. பேசிப் பேசி கட்சி வளர்ப்பவனுக்குப் பெயர் பேச்சாளன்.

பாடகியாக திமுகவில் அறிமுகமாகிய விஜயா தாயன்பன் இன்று மாநில மகளிர் அணி துணைத் தலைவர் என்ற பதவிக்கு சொந்தக்காரர். கனிமொழியிடம் நெருக்கத்தை உண்டாக்கிக் கொண்டதால் அவருக்கு இந்த ஒய்யாரமான பதவி. கட்சி விவகாரங்களில் குஷ்புவுக்கு கொடுக்கப்பட்ட ஓர் அந்தஸ்துகூட ஹனிபாவுக்கு அளிக்கப்படவில்லை என்பதுதான் மிகுந்த வேதனை.

ஹனிபா அவர்கள் “கூஜாதூக்குவது” “முகஸ்துதி செய்வது” “அடிவருடி பிழைப்பது” போன்ற கலைகளில் தேர்ச்சி பெறாமல் போனதும் அவருடைய அரசியல் பின்னடைவுக்கு அதிமுக்கிய காரணம் என்று அடித்துச் சொல்லலாம். நாகூர் ஹனிபா உண்மையிலேயே ஒரு நல்ல நடிகர். ஆம் மேடையில்தான். 1950-ஆம் ஆண்டிலேயே திருச்சி தேவர் ஹாலில் அறிஞர் அண்ணா தலைமை தாங்க, புலவர் நாகூர் ஆபிதீன் எழுதிய “பணம்” என்னும் சமூக நாடகத்தில் கவிஞராக நடித்தார் நாகூர் ஹனிபா. அவரது நடிப்பைக் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள் “அந்த பாத்திரத்திற்கு அனிபாவென்றே பெயர் வைத்திருக்கலாம். அவ்வளவு சிறப்பாக அனிபா இதில் நடித்தார்” என்று புகழ்மாலை சூட்டினார்.

மேடையில் நடிக்கத் தெரிந்த நாகூர் ஹனிபாவுக்கு நிஜவாழ்க்கையில் நடிக்கத் தெரியாமல்போனது துரதிர்ஷ்டம்தான். அந்தக் கலையை இவர் மட்டும் நாசுக்காக கற்று வைத்திருந்தால் இந்நேரம் அரசியலில் புகழின் உச்சாணிக்கொம்பை எட்டியிருப்பார்.

“கூத்தாடி” எனப்படும் ஒரு நடிகனை அறிவுஜீவியாக ஏற்றுக் கொள்ளும் சமூகம் ஒரு பாடகனை அறிவுஜீவியாக ஏற்க மறுப்பது ஏனென்றுத் தெரியவில்லை.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தை ஆண்ட/ஆளும் முதல்வர்களுள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., வி,எம்.ஜானகி அம்மையார், செல்வி ஜெயலலிதா – இவர்கள் அனைவரும் ‘கூத்தாடி’யாக இருந்து அரசியல் பிரம்மாக்களாக ஆனவர்கள்தான். வருங்காலத்தில் விஜயகாந்தோ அல்லது ரஜினிகாந்தோ முதலமைச்சர் ஆனால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

நாகூர் ஹனிபா தன் கணீர் என்ற வெண்கலக் குரலால் எல்லோரையும் கவரும் வண்ணம் பேசக் கூடியவர். அவருக்கிருந்த இசையார்வத்தால் ஒரு பாடகனாகவே மக்களிடம் அறிமுகம் செய்யப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் அழகுத்தமிழை அட்சர சுத்தமாய், அழுத்தம் திருத்தமாய் அவர் உச்சரிப்பதைப்போல் வேறு யாராலும் அவ்வளவு தெள்ளத் தெளிவாய் உச்சரிக்க முடியாது. நிச்சயமாக குமரி முத்துவைக் காட்டிலும், குஷ்புவைக் காட்டிலும் செந்தமிழில் சீரான முறையில் சொற்பொழிவாற்றும் திறமை படைத்தவர்.

பார்த்த மாத்திரத்தில் எல்லோரையும் கவரக்கூடிய கம்பீரமான உருவம் ஹனிபாவுடையது. நேரிய பார்வை, நிமிர்ந்த நன்னடை அவருடையது. சிங்கத்து கர்ஜனையை அவரது பேச்சில் காணலாம்.

இவரை விருப்பப்பட்டு வேறு முகாமுக்கு அழைத்த போதெல்லாம் கட்சி மீதிருந்த அபார கொள்கைப் பற்றால் வந்த வாய்ப்புகளை எல்லாம் உதறித் தள்ளினார் நாகூர் ஹனிபா. காயிதே மில்லத் முதல் மக்கள் திலகம் வரை இவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்து பார்த்தார்கள். மனுஷர் மசிய வேண்டுமே. ஊ….ஹும்.

ஆரம்ப காலத்தில் தி.மு.க, நாத்திகக் கொள்கைகளில் ஊறித் திளைத்தபோது, நாகூர் ஹனிபா சந்தித்த விமர்சனங்கள், அவர் மீது பாய்ந்த சொற்கணைகள், அவர் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நாகூர் ஹனிபாவின் மதப்பற்றையே சந்தேகித்தார்கள். இவை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு தன் கொள்கைப் பிடிப்பில் தளராமல் இருந்தவர் அவர்.

நாகூரில் எல்லோரும் பச்சைக்கொடி ஏந்தி வலம் வந்த காலத்தில், இவர் மட்டும் கறுப்புச்சட்டை அணிந்து பவனி வந்த போது இவரை ஏதோ வேற்றுக்கிரக மனிதரைப்போல் பார்த்தது சமூகம்.

21.6.2008 அன்று சென்னைத் தீவுத் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை இது:

“என்னுடைய இதயம் கனத்துப் போகிறது. ஏனென்றால் நம்முடைய அருமை நண்பர் நாகூர் அனீபா அவர்கள் இங்கே பாடும்போது எனக்கு பல நினைவுகள். அவரும் நானும் ஏறத்தாழ சம வயதினர். ஒன்றிரண்டு வயது ஏற்றத் தாழ்வு இருக்கலாம். அந்தக் காலத்தில் நீதிக் கட்சி தொடர்பு கொண்டு நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாடுகளில் – பிறைக் கொடி பறந்த அந்த மாநாடுகளில் – நம்முடைய வீரமணி அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல் – பிறைக் கொடியைப் பிடித்த கை இந்தக் கை, சிறுவனாக இருந்து பிறைக் கொடியை ஏந்திய கை இந்தக் கை. அந்தப் பிறைக் கொடியைப் பற்றி பாடியவர், அன்றைய மாணவராக, இளைஞராக இருந்த நம்முடைய நாகூர் அனீபா அவர்கள். அந்த இசை முரசின் நாதம் இதுவரையிலே அதே தொனியிலே ஒலித்துக் கொண்டிருக்கின்ற காட்சியினை நீங்கள் காண்கிறீர்கள். சிறு களைப்பு ஏற்பட்டாலும்கூட அந்தக் குரல்வளம் கொஞ்சமும் குறையவில்லை. எப்படி நாகூர் அனீபாவின் குரல்வளம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறதோ அதைப் போலத்தான் முஸ்லிம் லீக்கின் பலமும் குறையாமல் இருக்கிறது என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.”

“கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடலை சாரணபாஸ்கரன் எழுத கருணாநிதியின் புகழை உச்சிக்கு கொண்டுச் சென்றார் நாகூர் ஹனிபா. கல்லக்குடி கொண்ட கருணாநிதி எப்பொழுது “கள்ளைக் குடி” என்று சொன்னாரோ அப்பொழுதுதான் காயிதே மில்லத் அவர்கள் கலைஞரின் தொடர்பை அறுத்தெரிய முனைந்தார்.

16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலம் வந்த முஸ்லீம் லீக் எனும் பாரம்பரியமிக்க கட்சிக்கு 3 இடங்களே போதும் என்ற நிலைக்குத் தள்ளி, தன் சொந்த அரசியல் லாபத்திற்காக அந்த கட்சியையே துண்டு துண்டாக உடைத்து சின்னாபின்னமாக்கி இப்போது மூஸ்லீம் லீக் என்ற கட்சியை காணாமல் செய்த பெருமை நம் மாண்புமிகு கலைஞரைத்தான் சாரும்.

ஏணி சின்னம் என்ற ஒரு அதிகாரபூர்வமான தேர்தல் சின்னம் முஸ்லீம் லீக் கட்சிக்கு இருந்தபோதும் அக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்து, அதையும் டெல்லிக்கு கணக்கு காண்பித்து தன்பங்குக்கு அமைச்சர் பதவிகளை தன் சொந்த பந்தங்களுக்கு வாங்கித் தந்த பெருமையும் நம் மாண்புமிகு கலைஞருக்குத்தான் உண்டு.

ஒரு நல்ல கண்ணையும், ஒரு நொள்ளைக் கண்ணையும் இணைத்து

நாட்டின் இரு கண்கள்
நல்லவர்கள் போற்றும்
வல்லவர்கள் இவர்கள்
நாட்டின் இரு கண்கள்

என்று பாடிய நாகூர் ஹனிபாவின் அப்பாவித்தனத்தை யாரிடம் சென்று முறையிடுவது?

பாசமலர் படத்தில் இப்படி ஒரு காட்சி இடம்பெறும். தன் அருமைத் தங்கையை மணமுடித்துக் கொடுக்கையில் ஜெமினி கணேசனை பார்த்து சிவாஜி கணேசன் இந்த வசனத்தை பேசுவார்.

“ஆனந்தா! நான் என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கறேன்
அதுல ஆனந்த கண்ணீர தான் நான் எப்பவும் பாக்கனும்”

இந்த வசனம் கலைஞர் கருணாநிதி அவர்களின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

1972-ஆம் ஆண்டு காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்களின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கு நன்றி கூறும் விதத்தில், இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்று சொன்னாராம். இந்த வசனத்தை இதுநாள்வரை பலமுறை மேடைகளில் கலைஞர் அவர்கள் தொடர்ந்து பறைசாற்றி வருகிறார். இப்போது காயிதேமில்லத் அவர்களிடம் யாரும் கேட்க முடியாது என்ற தைரியத்தினால்கூட இருக்கலாம்.

கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களுக்கு இஸ்லாமிய சமுகத்தை வழிநடத்த மாண்புமிகு கலைஞர் அவர்களைத் தவிர வேறு ஆளே கிடைக்கவில்லையா என்ற கேள்வி நம் மண்டையைக் குடைகின்றது. காயிதே மில்லத் அப்படி சொல்லியிருப்பாரா?

காயிதே மில்லத் அவர்கள் மரணிக்கும் தறுவாயில் அவரோடு உடன் இருந்த அ.கா.அப்துல் சமத் போன்றவர்களிடம் “கலைஞர் சொல்வது உண்மையா?” என்ற கேள்வியை முன்வைத்த போது “இது பச்சைப் பொய்” என்று உறுதி படுத்தினார்கள்.

ஒருவர் மரணிக்கும் தறுவாயில் அவரை சந்தித்ததை வைத்து தனக்கு சாதகமான இப்படியொரு வசனத்தை வசனகர்த்தா கலைஞர் அவர்கள் எழுதி வைத்துக் கொண்டாரே என்பதை நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது.

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் மரணித்தபோது (5-4-1972) அத்தனைத் தலைவர்களும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில்தான் அவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. காயிதேமில்லத் மரணித்த செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகி தள்ளாடி தள்ளாடி வந்தார் தந்தை பெரியார். அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தவர் நாகூர் ஹனிபாதான். கண்ணீர் மல்க, நா தழுதழுக்க “இந்த சமுதாய மக்களை இனி யார் காப்பாற்றுவார்கள்?” என்று கவலை பொங்க கூறினார் தந்தை பெரியார். இதுதான் நடந்த நிகழ்ச்சி. சிறந்த வசனகர்த்தாவான மாண்புமிகு கலைஞர் அவர்கள் பெரியார் அவர்களின் கேள்விக்கு பதிலுரைக்கும் வண்ணமாக கற்பனை வளத்துடன் “இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்று கண்ணியமிகு காயிதேமில்லத் கலைஞர் அவர்களிடம் சொன்னதாக ஒவ்வொரு மேடையிலும் முழங்கி வந்தார்.

இன்றைய சூழலில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் 1400-க்கு மேல் ஆகிவிட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மூன்றே மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன. 1) இந்திய தேசிய காங்கிரஸ், 2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அவ்வளவே. முஸ்லீம் லீக் என்ற பாரம்பரியமிக்க கட்சியை துண்டு துண்டாக உடைத்த பெருமை மஞ்சள் துண்டு அணிந்த கலைஞர் அவர்களையேச் சாரும்.

கலைஞர் அவர்கள் காயிதே மில்லத்திற்கும், முஸ்லீம் லீகிற்கும் செய்த பச்சைத்துரோகம் இஸ்லாமியர்களின் மனதில் இருந்து அவ்வளவு எளிதில் அழிந்துவிடப் போவதில்லை என்பதுமட்டும் திண்ணம்.

“முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்று வேறொரு மீலாத் மாநாட்டின்போது வீர வசனம் பேசினார் கலைஞர்.

“கலாம்” என்றால் கலகம் என்று விமர்சித்தவர் கலைஞர். ஆனால் ஹனிபா என்றால் “கழகம்” என்றுதான் பொருள் என்பது கலைஞருக்கே நன்றாகத் தெரியும். காலம் முழுதும் கழகத்தைக் கட்டிக்கொண்டு அழுத ஹனிபாவுக்கு கழகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. காரணம் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்தவர் அவர்.

ஹனிபா தான் கட்டிய இல்லத்திற்கு மட்டும் “கலைஞர்” பெயரை சூட்டவில்லை. தன் உள்ளத்திற்கும் சூட்டிக் கொண்டு, காலம் முழுதும் அந்த மனிதரின் புகழைப் பாடிகொண்டு, விசுவாசம் காட்டி தன் வாழ்நாளை பாழாக்கிக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டார்.

கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்று பாடிய ஹனிபாவின் இதயத்திற்குள் அந்த கருணாநிதிதான் இதுநாள்வரை குடி கொண்டு இருக்கிறார்.

“அண்ணாவை அன்றைய தி.மு.க. தொண்டன் தனது நாடி நரம்புகளில் எல்லாம் ரத்த ஓட்டம் போல ஓடச் செய்துகொண்டதற்கு ஒரு வலிமையான உந்து சக்தியாக இருந்தது ஹனிஃபாவின் குரலும்தான். தான்பட்ட நன்றிக் கடனாக தி.மு. க. ஹனிஃபா அவர்களுக்குத் தமிழக சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினர் பதவியை ஒருமுறை வழங்கியதாக ஞாபகம். ஆனால் அதற்கு மேலும் உயர்ந்த பதவிகளைத் தி. மு.க. விடமிருந்து பெறுவதற்கான உரிமை அவருக்கு உண்டு. நாகூர் ஹனிபாவின் கட்சியின் சேவைக்கும், அவரது அரசியல் அனுபவத்திற்கும் அவருக்கு கொடுக்கப்பட்ட பதவிகள் மிகவும் அற்பம் என்ற அபிப்பிராயம் ஏமாற்றமாய் எல்லோர் மனதிலும் குடிகொண்டுள்ளது”

என்று திண்ணை இதழில் எழுதுகிறார் மலர் மன்னன்.

ஆ.ராசாவைப் பற்றி இப்பதிவில் குறிப்பெழுதியபோது இந்த நிகழ்வும் ஏனோ ஞாபகத்திற்கு வந்து விட்டது.

கலைஞர் அவர்களின் அன்புக்கு பாத்திரமாக உள்ள அவரது நெருக்கங்கள் அரசியல் என்ற ஆயுதமேந்தி கொள்ளையடித்தார்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள். அது உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. கொள்ளையடிப்பதே ஒரு கலை என்று வசனம் எழுதியவர்தான் நம் கலைஞர். அது படத்தில் பேசும் ஒரு பாத்திரத்திற்காக எழுதப்பட்டது என்று வாசகர்கள் வாதாடாலாம். எது எப்படியோ. சில நிகழ்வுகள் நடக்கையில் பழைய விஷயங்களும் நம் நினைவில் வந்து நிழலாடுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

மந்திரிகுமாரியில் கலைஞர் அவர்கள் எழுதிய வசனம் இது. நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறுகிறது இந்த உரையாடல்:

“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”

“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”

“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”

“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.”

கலைஞர் அவர்களின் எழுத்துக்களின் மீது எனக்கு எப்பொழுதுமே ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.

“வாழ முடியாதவர்கள்” என்ற தலைப்பில் கலைஞர் அவர்கள் ஒரு கதை எழுதியிருந்தார். சமுதாயம் சிரழிந்து போவதற்கு வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். கலைஞர் அவர்களின் கதையை படிக்கச் சொன்னாலே போதும், தானே சீரழிந்துப் போய்விடும். வறுமையில் வாடும் மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன், தான் பெற்ற மகளையே மனைவியாக ஆக்கிக் கொள்வதுதான் கதையின் கரு. கேட்கும்போதே குமட்டிக் கொண்டு வருகிறது அல்லவா? ‘குமரிக்கோட்டம்’, ‘ரோமாபுரி ராணிகள்’, ‘கபோதிபுரக் காதல்’ போன்ற நூல்களும் அப்படித்தான். பலபேர்களிடம் கெட்டுப்போன ஒருத்தியைப்பற்றிய வருணனைகளை விரசமாகவும் ஆபாசமாகவும் வருணித்திருப்பார் நம் கலைஞர்.

“பண்பாடு அற்றவர்கள் எனக் கருதப்படும் வெளிநாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்துக் கதையெழும்போது, பண்பாட்டோடு எழுதினார்கள். ஆனால், மகளைக் கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் முற்போக்குக்’ கதாசிரியர்” என்று மனம் புழுங்குகிறார் கவிஞர் கண்ணதாசன்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், தான் பெண்களுடன் படுக்கையில் புரண்ட அனுபவங்களையெல்லாம் வெட்கமில்லாமல் எழுதும் ஒரு மனிதரே தன் நண்பன் எடுத்துக் கொண்ட கதையின் கருவை கேவலமாக எழுதுகிறார் என்றால் கலைஞர் அவர்களுடைய எழுத்தின் தரத்தை நாமே முடிவு செய்துக் கொள்ளலாம்.

சமுதாயத்தை வழிநடத்தும் தலைவரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் நாகரிகமான முறையிலும் இருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற பண்பாடற்ற விதத்தில் அமைந்திருப்பது அவரவர் குணநலன்களையே எடுத்துக் காட்டுகிறது.

அறிஞர் அண்ணா எழுதிய “கம்பரசம்” நூலே அதில் மிஞ்சியிருந்த காமரசத்திற்காகவே அதிக அளவில் விற்பனையானது என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.

பா.ஜ.க – ஆட்சி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகும் முடிவுக்கு வந்ததற்கு ஒரே நீண்ட தொலை நோக்கு காரணம் எது என்பது எல்லோர்க்கும் தெரியும். தன் குடும்பம் சேராத, திரு.டி.ஆர்.பாலு முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாதே என்ற மூன்றாம் தர சுயநல நிலைப்பாட்டை திரு.கருணாநிதி குடும்பம் கொண்டதால் தான் இந்த முடிவு. கலைஞர் குடும்பத்தார்கள் தங்கள் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் கட்சியின் அதிகார மையத்திற்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

கலைஞர் அவர்கள் நாகூர் ஹனிபாவை மட்டுமல்ல. ஆரம்ப காலத்தில் அவருடைய அனைத்து இன்ப துன்பங்களிலும் பங்குபெற்று துணைபுரிந்த எந்த ஒரு நண்பரையும் ஆதரித்து கைகொடுத்து தூக்கவில்லை என்பதுதான் பரவலான ஓர் என்ணம். தன் குடும்பம், பிள்ளைகள், சொந்தங்கள், பந்தங்கள் இவர்களது முன்னேற்றத்திலேயே அவர் முழுமூச்சாக இருந்தார் என்பதை கண்கூடாக நாம் கண்டுவருகிறோம்.

எந்த ஒரு ஜாதியை எதிர்த்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தாரோ அதே ஜாதியைச் சேர்ந்த கவிஞர் வாலியை அழைத்து தன் மகன் மு.க.முத்துவுக்காக “மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ!” என்று பாட்டெழுத வைத்து மன மகிழ்ந்தார் நம் மாண்புமிகு தலைவர்

“நல்ல மனதில் குடியிருக்கு நாகூர் ஆண்டவா” என்று தன் மகனை பாடவைத்து ஒட்டு மொத்த அனைத்து முஸ்லீம்களின் மனதிலும் இடம்பிடித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டார் அவர். கலைஞரின் சுயசரிதை “நெஞ்சுக்கு நீதி”. அந்த பெயரில் ஒரு படமும் எடுத்தார். அதற்கும் கவிஞர் வாலி அவர்களே பாடல் எழுதினார்.

ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ மதத்தையோ அடிப்படையாக வைத்து அவர்களை ஒட்டுமொத்தமாக தாழ்த்தியும் இழிவுபடுத்தியும் அரசியல் கருதி இந்தத் தலைவர்கள் ஆடிய ஆட்டத்தை ஒருக்காலும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

பிராமணர்களின் அறிவுரைப்படியும், அவர்களது ஆலோசனையின் பேரிலும் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் இன்றுவரை வளர்த்து வருகிறார் நம் தமிழினத் தலைவர்.

 1. தயாளு அம்மாவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான்.
 2. அன்றுதொட்டு இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி.
 3. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.
 4. கடந்த, 1996-ல், 2006-ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ். அவர்கள்
 5. 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்.,
 6. உள்துறைச் செயலாளராக (Home Secretary) செயல்பட்டவர் மாலதி ஐ.ஏ.எஸ்.,
 7. மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட நியமிக்கப்பட்டவர் கவிஞர் வாலி,
 8. குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்,
 9. தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி
 10. திரு.இராஜாஜி என்ற பார்ப்பனரால் முதன்முதலில் முதல்வராகி, பின்னர் ‘சோ’ என்ற பார்ப்பனராலும் மற்றும் லதா எனும் பார்ப்பனப் பெண்ணின் கணவர் திரு.ரஜினிகாந்த் தந்த வாய்ப்பில் தான் திரு.கருணாநிதி அவர்கள் மீண்டும் முதல்வர் ஆனார் என்பதையும் நாம் பார்த்தோம்.

என்று கலைஞர் அவர்களின் அத்தனை தேவைகளுக்கும் பிராமணர்களின் பட்டியல் தொடர்ந்துக்கொண்டே போகிறது.

இந்த இரட்டை வேடம்  இஸ்லாமியச் சமூகத்தோடு மட்டுமின்றி பிராமணச் சமூகத்தோடும் இன்றுவரை சிறப்பாக ஆடி வருகிறார் டாக்டர் கலைஞர் அவர்கள்.

 

Tags: , , , , , ,

இஸ்லாத்தில் கவிதை – நாகூர் ரூமி


(“கவிதையா? ஊ..ஹூம். மூச்.. கூடாது” என்று சில முல்லாக்களும், “வேண்டாம்பா.. அது தரித்திரம்” என்று என் பெற்றோர்களும், “கவிதை இஸ்லாத்திற்கு எதிரானது” என்று சில தவ்ஹீத் நண்பர்களும் எனக்கு அறிவுறுத்த, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நான் முழி பிதுங்க, என் நண்பன் நாகூர் ரூமியின் கட்டுரை எனக்கு நிம்மதி பெருமூச்சை வரவழைத்தது. எனக்கு ஆபத்து வந்த தக்க சமயத்தில் என்னை இழிச்சொல்லிலிருந்து காப்பாற்றிய நண்பனைப் பார்த்து “A friend in need is a friend indeed” என்று பாராட்டத் தோன்றுகிறது – அப்துல் கையூம்)

மனிதனையும் படைத்து
அவனுக்கு திருக்குர்னையும் அருளி
அதில் “கவிஞர்கள்” ( சூரத்துஸ் ஷ¤அரா) என்று
ஒரு அத்தியாயத்தையும் (26) இறக்கி வைத்து
கவிஞர்களை கண்ணியப் படுத்திய
பிரபஞ்ச மகா கவியாகிய
இறைவனுக்கே புகழனைத்தும்.

இன்றைக்கு நம்மிடையே கவிஞர்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஒரு கம்பன், காளிதாசன், மெளலானா ரூமி, உமர் கய்யாம், ஹகீம் சனாய், அல்லாமா இக்பால், காலிப், தாகூர் என்று சொல்ல முடியாவிட்டாலும் நம்மில் பலர் இன்று புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

அதில் பலர் நாடறியப் பட்டவர்களாக, ஏன் உலக அளவில் அறியப்பட்டவர்களாகக்கூட இருக்கின்றனர். அறியப்பட வேண்டிய பலர் அறியப்படாமல் கிடப்பதும் வேறு சிலர் தேவைக்கு அதிகமான புகழையும் விமர்சனத்தையும்கூட சம்பாதித்துக் கொண்டவர்களாக இருப்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் கவிதை என்றாலே இஸ்லாத்துக்கு ஒவ்வாத ஒன்று என்று ஒரு கருத்து இருப்பதை பலருடன் பேசியதிலிருந்து நான் அறிந்து கொண்டேன்.

கவிதைகள் என்று சொல்லப்படுபவைகளை அவ்வப்போது எழுதுகின்ற பழக்கம் கொண்டவனாக நானும் இருப்பதால் எனக்கு அது ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. உண்மையிலே இஸ்லாம் கவிதைகளை தரிக்கவில்லையா? தரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எதிர்க்காமலாவது இருக்கிறதா என்ற கேள்விகள் என் மனத்தில் எழுந்தன.

திருக்குர்-ஆனும் ஹதீதும் கவிதைகளை எதிர்ப்பதாக சொல்லப்பட்ட தகவல்கள் என்னை பயமுறுத்தின. எனவே நான் அது பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளப் புறப்பட்டேன். என் பயணத்தில் நான் கண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

திருக்குர்ஆனும் ஹதீதுகளும் கவிதைகளை எதிர்க்கின்றனவா? முதலில் இந்தக் கேள்விக்கு பதிலை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

திருக்குர்னிலே கவிஞர்கள் என்ற 26வது அத்தியாயத்தின் வசனங்கள் 224 முதல் 226 வரை கவிஞர்களுக்கு எதிராகப் பேசுகின்றன :

224 : கவிஞர்கள் – அவர்களை வழி கெட்டவர்கள்தான் பின்பற்றுகிறார்கள்.

225 : நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் ( மனம்போன போக்கில்) திரிகிறார்கள் என்பதை நீர் பார்க்கவில்லையா?

226 : இன்னும் நிச்சயமாக அவர்கள் (சொல்வன்மையினால்) தாங்கள் செய்யாதவற்றை (செய்ததாக) கூறுகின்றனர்.

மேற்காணும் மூன்று வசனங்களும் கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் எதிரானதாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ‘கவிதைக்குப் பொய் அழகு’ என்பதை எழுதாத விதியாகக் கொண்ட கவிதைகளுக்குத்தான் இது பொருந்தும்.

ஏனென்றால் இந்த வசனங்கள் மக்காவில் அருளப்பட்டபோது என்னைப்போலவே பயந்தும் குழம்பியும் போன மக்காவின் தலைச் சிறந்த முஸ்லிம் கவிஞர்களாக இருந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, க’அப் இப்னு ஜுஹைர், ஹஸ்ஸான் இப்னு தாபித் கியோர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று விளக்கம் கேட்டனர்.

பெருமானர், அவர்களைத் தேற்றி இவ்வசனங்கள் அவர்களைப் போன்ற உன்னதமான கவிஞர்களுக்குப் பொருந்தாது என்றும் பொய்யை அழகாகப் புனைந்து கூறுபவர்களையும் இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்தவர்களையும்தான் இவ்வசனங்கள் சாடுகின்றன என்றும் நல்ல கவிஞர்களுக்கு விதிவிலக்கு உள்ளது என்றும் சொல்லி அடுத்த வசனத்தையும் ஆதாரம் காட்டி ஆறுதல் சொல்கின்றனர் :

227 : ஆனால் ஈமான் கொண்டு நற்காரியங்களைச் செய்து, அல்லாஹ்வை அதிகமாக நினைந்து, தாங்கள் அநியாயம் செய்யப்பட்ட பின் பழிவாங்கினார்களே அத்தகையோர்களைத் தவிர ( மற்றவர்கள் குற்றவாளிகள் ).

எனவே இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் நாம் பெருமூச்சு விட்டுக்கொண்டே கவிதைக்கு எதிரான ஹதீதுகளையும் அணுகவேண்டும். அதோடு, பெருமானர் ஒரு தீர்க்க தரிசியே அன்றி ஒரு கவிஞரல்ல என்ற வசனத்தையும் (சூரா ஹக் 69:41) ஒரு கவிஞன் என்பவன் தீர்க்கதரிசியைப் போல இறையருள் பாலிக்கப்பட்டவன் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

நிற்க, கவிதைக்கு தரவாக இஸ்லாமிய வரலாற்றில் ஏதாவது உள்ளதா என்று பார்க்கப் புகுந்தால் அங்கே வியப்பூட்டும் தாரங்களும் நிகழ்வுகளும் கொட்டிக்கிடக்கின்றன !

யார் மகா கவி?

ஒரு முறை நான் என் பள்ளிக்கூட தமிழாசிரியரிடம் மகாகவி என்றால் யார்? ஏன் கம்பன், பாரதியார் இவர்களை மட்டும் மகாகவி என்று சொல்கிறோம் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார்.

மகாகவி என்று சொல்லப்பட்டவர்கள் யோசித்து கவிதை எழுதிக்- கொண்டிருக்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்களிடமிருந்து கவிதை கொட்டியது. அருவிபோல பெருக்கெடுத்து ஓடியது.

ஒரு குழந்தை கீழே விழுந்துவிட்டால் நாமாக இருந்தால் ஓடிப்போய் தூக்குவோம். ஆனால் பாரதி அதுமட்டும் செய்ய மாட்டான். ” ஓடி விளையாடு பாப்பா” என்று உடனே பாட்டும் பாடிவிடுவான்.

வீட்டுக்கு சமைக்க கஷ்டப்பட்டு வாங்கி வரும் அரிசியை காக்கைக்கும் குருவிகளுக்கும் போட்டுவிட்டு உடனே “காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடுவான்.

அதனால்தான் அவன் மகாகவி என்றார். அந்த விளக்கம் எனக்கு சரியானதாகவே பட்டது.

உண்மைதான். ஒரு கவிதை எழுத நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்?!

இஸ்லாமிய வரலாற்றின் மகாகவிகள் இஸ்லாத்தில் கவிதையின் இடத்தைப் பார்க்கப் புகுவோமானால் அதன் வரலாற்றில் நமக்கு பல ஆச்சர்யங்கள் காத்துக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று அங்கே மகா கவிகள் மலிந்து கிடந்தார்கள் என்பது !

ஆம், என் ஆசிரியர் மாகாகவிக்கு சொன்ன வரையறையை வைத்துப் பார்த்தால் அப்படித்தான் சொல்ல முடிகிறது !

ஒரு சின்ன உதாரணம் குஸா குலத்தைச் சேர்ந்த இப்னு சலீம் என்பவர் பெருமானாரிடம் வருகிறார். தமது குலத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளையெல்லாம் சொல்லிக்காட்டி பெருமானாரின் பாதுகாப்பைத் தேடுவதே அவரது நோக்கம்.

பெருமானாரை அவர்களது பள்ளிவாசலில் சந்திக்கும் அவர், மனதை உருக்கும் விதமாக தங்களது நிலையை விளக்கி ஒரு கவிதை பாடுகிறார் !

எனக்கு இந்த நிகழ்ச்சி மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது. துயர உணர்ச்சிகளின் உச்சத்தில் ஒரு மனிதன் இருக்கும்போது அவனால் அழவோ புலம்பவோ மெளனமாக இருக்கவோதான் முடியும் என்று நான் அறிவேன்.

ஆனால் வரலாற்றில் இங்கே, கல்வியறிவு இல்லாத ஒரு மனிதன் அந்த மாதிரியான கட்டத்தில் கவிதை பாடியுள்ளான் ! கவிதை புனையக்கூட இல்லை ! அப்படியென்றால் என் தமிழாசிரியரின் வரையறைப்படி அரேபியர் அனைவருமே மகாகவிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதானே உண்மை !

அரேபிய நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்த அன்றாட அற்புதங்களில் இதுவும் ஒன்று ! ஒரு வகையில் அரேபிய நாட்டின் வரலாறு கவிதையின் வரலாறாகவே உள்ளது.

வீரர்களை விட கவிஞர்களுக்கே மக்கள் அதிக மதிப்பு கொடுத்தனர். அரேபியர்களின் கலாச்சாரத்தில் இருந்து கவிதை பிரிக்க முடியாத ஒரு அடிப்படையான கூறாக உள்ளது. கவிதை அந்த காட்டரபிகளின் கூடப் பிறந்தது. அதன் காரணம் அரபி மொழியின் கவிதைத் தன்மையா அல்லது வேறு காரணங்களும் உள்ளனவா என்பது இப்போது நமது ஆராய்ச்சிக்கு உரிய விஷயமல்ல.

பொய்யான கவிதைகளைச் சாடும்போதுகூட இறைவன், “அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும்..” என்று ஓர் அழகான கவிதையை அல்லவா சொல்கிறான் !

கவிதையை அரேபியர்கள் “அனுமதிக்கப்பட்ட மாந்திரீகம்” (ஸிஹ்ர் ஹலால்) என்றே வர்ணித்தனர். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு தலைச்சிறந்த ஊடகமாக கவிதையை அரபிகள் கண்டனர்.

கவிஞன் என்பவன் ஜின் அல்லது ஷைத்தானால் தூண்டப்பட்டே எழுதுகிறான் என்று அவர்கள் நம்பினர். ஒரு முழுமையான மனிதனுக்குரிய அடையாளமாக மூன்று விஷயங்கள் இஸ்லாத்தின் வரலாற்று ரீதியான வருகைக்கு முந்திய அறியாமைக் காலத்தில் அறியப்பட்டன.

அவை: கவிதை, அம்பெய்தல், குதிரை ஏற்றம் ஆகியவையே என்று அரேபியர்களின் வரலாறு என்ற நூலில் (The History of the Arabs) அதன் ஆசிரியர் ·பிலிப் கே ஹிட்டி கூறுகிறார்.

அரேபிய இலக்கியமே கஸீதா என்று பொதுவாக அறியப்பட்ட, அழைக்கப்பட்ட கவிதையிலிருந்து ஊற்றெடுத்துப் பிறந்ததுதான். அரபிகளின் கலாச்சார சொத்தாக இருந்தது கவிதை. கவிஞர்கள் தங்கள் புகழையும் கீர்த்தியையும் நிர்மாணித்துக் கொள்வதற்கும் பரப்புவதற்கும் ஆண்டு தோறும் துல்காயிதா மாதத்தில் கூடும் உக்காஸ் என்று சொல்லப்பட்ட சந்தையைப் பயன் படுத்திக்கொண்டனர்.

அப்போது நடைபெறும் கவிப்- போட்டிகளில் ஒவ்வொரு குலத்தின் கவிஞரும் தமது வீரம், ஈகை, மற்றும் மூதாதையர்கள் பற்றி பெருமையாகவும் விபரமாகவும் கூறுவர்.

போர்க்களத்தில்கூட வீரர்களின் வாட்களின் கூர்மைக்கு எந்த விதத்திலும் குறைந்ததாக கவிஞர்களின் நாக்கு இருக்கவில்லை. அந்தக்கால அரபிகள் மனிதர்களின் அறிவை அவர்களின் கவிதையை வைத்தே அளந்தனர். தனது சமுதாயத்தின் வரலாற்று சிரியனாகவும் விஞ்ஞானியாகவும் அவர்கள் கவிஞனையே கண்டனர். அரேபியா “கவிஞர்களின் தேச” மாகவே இருந்தது.

ஆறு வகையான கவிஞர்கள்

வரலாற்று அறிஞர்கள் அரேபிய கவிஞர்களை ஆறு பிரிவுகளில் வகைப்படுத்துகின்றனர்.

1. அல் ஜாஹிலிய்யூன்.

இஸ்லாத்திற்கு முந்திய அறியாமைக் காலத்து கவிஞர்கள். ஜுபைர், தரா·பா, இம்ரவுல் கய்ஸ், அம்ரிப்னு குல்சும், அல் ஹாரிது, அந்தாரா போன்ற மூத்த கவிஞர்கள்.

2. அல்முஹ்ஜரமூன்.

அறியாமைக் காலத்தில் பிறந்து பின்பு இஸ்லாத்தைத் தழுவிய கவிஞர்கள். லபீத், போன்றவர்கள். இவர்களைப் பற்றி பல ஹதீதுகளிலும் கூறப்பட்டுள்ளது.

3. அல்முதகத்திமூன்.

இஸ்லாத்துக்கு வந்தபெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள். ஜரீர், ·ப்ரஸ்தக் போன்றவர்கள்.

4. அல்முவல்லதூன்.

முஸ்லிம்களாகப் பிறந்தவர்களுக்குப் பிறந்தவர்கள். பஷார் போன்றவர்கள்.

5. அல் முஹ்திசூன்.

மூன்றாவது தலைமுறையின் முஸ்லிம் கவிஞர்கள். அபூ தம்மாம், புஹ்தரி போன்றவர்கள்.

6. அல் முத’ஆஹிரூன்.

ஐந்துக்குப் பிறகு வரும் எல்லாக் கவிஞர்களும்.

மூன்று நான்கு ஐந்தாவது பிரிவில் உள்ளவர்களை முறையே சஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் தப’அத் தாபியீன்கள் காலத்தோடு பொருத்திப் பார்க்க இயலும்.

முஅல்லகாத் என்பது என்ன?

அந்தக்கால அரேபியாவில் ஒரு வழக்கமிருந்தது. ஏழு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை க’அபதுல்லாஹ்வின் சுவர்களில் தொங்கவிடுவார்கள். அதற்குத்தான் முஅல்லகாத் என்று பெயர். அதுவும் சாதாரணமாக அல்ல. தங்கத்தில் எழுதி ! இப்படி எழுதி தொங்கவிடப்பட்ட தங்கக் கவிதைகளுக்கு முஸக்கபாத் என்ற பெயரும் வழங்கப்பட்டது.

ஏழு பேருடைய கவிதைகள் இந்த அந்தஸ்தைப் பெற்றன.

மேற்குறிப்பிடப்பட்ட ஆறு பிரிவில் முதல் இரண்டு பிரிவில் உள்ள கவிஞர்கள்தான் அவர்கள். அதில் லபீத் மட்டும் இஸ்லாத்தில் இணைகின்ற பாக்கியம் பெற்றார்.

அவருடைய இறைவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக்கூடிய அசத்தியமே என்ற பொருள்படும் அலா குல்ல ஷையின் மா ஹலல்லாஹ¤ பாதில என்ற கஸீதா க’அபதுல்லாஹ்வில் தொங்கவிடப்பட்டது மட்டுமல்ல அது பின்னால் பெருமானாரிடம் “உண்மையைச் சொன்ன கவிஞர்களிலேயே லபீத் மிகச்சிறந்தவர்” என்ற புகழுரையையும் சம்பாதித்துக் கொண்டது.

கவிதையின் வலிமை இஸ்லாம் மெல்ல பரவிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அதன் எதிரிகள் வன்முறையிலும் வாள், அம்புகளைக் கொண்டு மட்டும் எதிர்க்கவில்லை. கவிதைகளைக் கொண்டும் கடுமையாக எதிர்த்தார்கள்.

மதினாவில் அவ்ஸ் கோத்திரத்தாரில் பெருமானாரை எதிர்ப்பவர்களில் ஒருவரான மர்வான் என்பவருக்கு அஸ்மா என்ற ஒரு மகள் இருந்தாள். அவள் கவிதைகள் புனைவதில் கெட்டிக்காரி. அன்சாரிகள் அறிவு கெட்டு அந்நியர் ஒருவரின் பேச்சில் மயங்கி தங்கள் மக்களை பத்ரு போரில் காவு கொடுத்து விட்டார்கள் என்ற பொருள்படும் கவிதை பாடினாள்.

அந்த கவிதையை மக்கள் பலரும் பாடக்கேட்ட ஒரு முஸ்லிம் ஆத்திரமடைந்து அஸ்மாவைக் கொலையே செய்துவிட்டார் !

ஆரம்ப காலத்தில் இப்படிப்பட்ட கவிதைகளையும் கவிஞர்களையும் பெருமானார் வெறுத்ததற்கு இதுவே முக்கியமான காரணம்.

” கவிதையால் நிரம்பிய வயிறைவிட கெட்டுப்போன உணவால் நிரம்பிய வயிறே பரவாயில்லை.” என்று பெருமானார் சொன்னதையெல்லாம் எதிர்ப்பான காலகட்டத்தின் ஒளியில் வைத்தே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

க’அப் இப்னு ஜுஹைர் என்ற கவிஞரைக் கண்டவுடன் கொல்லும்படி பெருமானார் உத்தரவிட்டிருந்தார்கள் என்றால் கவிதை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வல்லதாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது போதுமானது.

பின்னாளில் இதே ஜுஹைர்தான் பானத் சுத் என்ற புகழ் பெற்ற புகழ்ப்பாடலான முதல் புர்தாஷரீ·பை பெருமானார்மீது பாடி அவர்களின் போர்வையையும் பரிசாகப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதினாவின் க’அப் இப்னு அஷ்ர·ப் என்ற புகழ் பெற்ற கவிஞன் மக்கா சென்று பாடிய முஸ்லிம் விரோத கவிதைகளுக்கு எதிராக எதிர்ப்பாட்டு புனையுமாறு பெருமானார் ஹஸ்ஸானுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

ஒரு முறை மதினாவில் பெருமானாருக்கும் பனூ தமீம் கூட்டத்தாருக்கும் நாவன்மை, கவித்திறமை இவைகளில் போட்டி நடந்தது. பனூ தமீம் சார்பாக அல் ஜிப்ரிகான் இப்ன் பத்ரு என்பவர் தம் பாட்டுத்திறமையைக் காட்டினார். பெருமானார் சொன்னதன் பேரில், ஹஸ்ஸான் முஸ்லிம்கள் சார்பாக எதிர்ப்பாட்டுக்கள் பாடி பதிலளித்து வென்றார்.

ஹஸ்ஸான் கவிதை பாடுவதற்கென பெருமானரின் பள்ளிவாசலில் தனி மேடையே அமைக்கப்பட்டிருந்தது என்றால் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் !

அவருடைய கவிதைகளுக்கு ரூஹ¤ல் அமீன் ஜிப்ரீல் (அலை)அவர்களைக் கொண்டு உதவி புரியுமாறு பெருமானார் இறைவனிடம் துஆ செய்துள்ளார்கள் !

இந்த மாதிரியான காலகட்டங்களில்தான் ” கவிதை நல்லதெனில் நல்லது கெட்டதெனில் கெட்டது” என்றும் ” சில கவிதைகளில் ஞானம் உள்ளது” என்றெல்லாம் பெருமானார் சொல்லியுள்ளார்கள்.

போர்க்களங்களில் கவிதை

கவிதை போர்க்குணம் கொண்டதாக இருப்பதாலோ என்னவோ இஸ்லாமிய வரலாற்றில் பல போர்க்களங்களோடு அது தன்னை சம்பந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவாக போர்க்களங்களில் வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக வட்டப்பறையடித்து பாடல்கள் பாடும் பெண்களையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கமாயிருந்தது.

பத்ரு யுத்தத்திற்காக அபூஜஹ்ல் திரட்டிக் கொண்டு வந்த படையினருக்கு உற்சாகமூட்ட இத்தகைய பெண்கள் சிலரும் உடன் கிளம்பினர். உஹதுப் போரில் அபூசு·ப்யானின் மனைவி ஹிந்தாவின் தலைமையில் வந்திருந்த பெண்கள் தம்பூர் என்ற இசைக்கருவி இசைத்து, வட்டப்பறை முழக்கி டிப்பாடி வீரர்களுக்கு உற்சாகமூட்டினர்.

அகழ்ப்போரில் அகழ் தோண்டும்போது களைப்பு மறக்க முஸ்லிம்கள் இறைவனின் புகழ்பாடி அருள்வேண்டும் பண்களை இசைத்தவர்களாய் அனைவரும் பணியைத் தொடங்கினர். கைபர் சண்டையின் போது படையினருக்கு உற்சாகமூட்டும் போர்ப்பரணி ஒன்றை புனையுமாறு மிர் இப்னு அல்கமா என்பவரை பெருமானார் பணித்தார்கள்.

ஹ¤னைன் போரில் கிடைத்த பங்குப் பொருள்களில் திருப்தியுறாத அப்பாஸ் இப்னு மிர்தாஸ் என்ற கவிஞர் பெருமானார் மீது குறைப்பட்டு ஒரு கஸீதா பாடினார். அவர் நாக்கைத் துண்டிக்குமாறு பெருமானார் உத்தரவிட, அதன் உட்பொருளை உணர்ந்த அலியார் அவர்கள் அவருக்கு மேலும் 60 ஒட்டகங்களை கொடுத்து அவரை சமாதானப் படுத்தினார்கள். நூறு ஒட்டகங்கள் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பத்ருப் போருக்குப் பிந்தைய மக்காவின் இரவுகள் யாவும் மர்ஸிய்யா (எனப் பட்ட இரங்கற்பா) க்களால் நிரம்பியிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

பெருமானாரின் கவிதை ஒரு யுத்தத்தில் காயம் பட்ட தன் கால் விரலைப் பார்த்து பெருமானார்

ஹல் அன் தி இல்லா இஸ்ப’உன் தமீத்தி
வ ·பீ சபீலில்லாஹி மா லகீத்தி

ரத்தம் வரும் நீயோ ஒரு விரல்தான் ஆனால்
இது அல்லாஹ்வுக்காக நீ கொடுத்த குரல்தான்

(தோராயமான தமிழாக்கம் எனது ) என்று பாடினார்கள்.

இந்த வரிகள் சல்மா இப்னு அம்ரல் அன்சாரியின் கவிதை என்பதாக புகாரி ஷரீ·பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் Dictionary of Islam தொகுத்த தாமஸ் பாட்ரிக் ஹ்யூஸ் யாருடைய கவிதை என்று சொல்லாமலே விட்டுவிட்டார்.

படிப்பவர்களுக்கு அது பெருமானாரே புனைந்த கவிதை போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. எனினும் கவிதை புனைவது பெருமானாரின் ஆளுமைக்கு ஏற்புடையதல்ல என்பதை திருக்குர்’ஆனிலிருந்தும் ஹதீதுகளிலிருந்தும் நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம் அல்லாதவர்களால் எழுதப்பட்ட நூல்களில் எழுதியவர்களின் அறியாமை அல்லது உள்நோக்கம் இவற்றை நாம் உணர்ந்து கொள்ளாமல் படித்துவிடக்கூடாது என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

ஏன், பெருமானார் ஒரு கவிஞராக இருந்தால் என்ன கேவலமா என்று கேட்கக்கூடாது. காரணம் ஒரு தீர்க்க தரிசியின் அந்தஸ்தும் இலக்கும் மிக உயர்ந்தது. அந்த இலக்கை அடைய கவிஞர்களின் திறமையையும் உண்மையையும் அவர்கள் பயன் படுத்திக்கொண்டார்களே தவிர அவர்களே கவிஞராக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை.

இறை விருப்பப்படி. பெருமானார் குடும்பத்தாரின் கவிதைகள் பெருமானாருக்கு அன்பும் ஆதரவும் கொடுத்து வந்த அபூதாலிப் அவர்களிடம் குறைஷிகள் வந்து பெருமானாரைப் பற்றி முறையீடு செய்து எச்சரித்துவிட்டுச் சென்றபோது, அபூதாலிப் அவர்கள் ஹரம் ஷரீ·பின் சிறப்பு, வம்ச மேன்மை, பெருமானாரின் சத்தியம், சற்குணம் இவை பற்றி கவிதை பாடுகிறார்கள் !

கவிதையின் முடிவில் ” நாம் ஈமான் கொள்ளவில்லை எனினும் உயிர் மூச்சுள்ளவரை அவரை தரிப்போம்” என்று கவிதையை முடிக்கின்றார்கள்! ”

எங்கள் மனைவி மக்களை மறந்து, முஹம்மதுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுப்போம் “ என்பது அவர்களின் இன்னொரு கஸீதா !

அபூபக்கர் சித்தீக் அவர்கள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தபோது, கவிதை இயற்றுவதிலும் சிறந்து விளங்கிய அன்னை ஆயிஷா அவர்கள் ஒரு ஈரடிப்பாடலை தம் தந்தையாரைப் புகழ்ந்து பாடுகிறார்கள். அதைக் கேட்டு கண் திறந்த அபூபக்கர் அவர்கள் ” இவ்வளவு புகழ்ச்சி பெருமானாருக்கு மட்டுமே உரியது” என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

இருள் சூழ்ந்த இரவிலும் ஒளி விளக்கைப் போல மின்னுகிறது அண்ணலாரின் நெற்றி என்ற பொருள்படும் கஸீதாவை பெருமானாரின் மறைவுக்குப் பிறகு பாடியுள்ளார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்.

இந்த ரீதியில் அன்னை ச·பிய்யாவும் கவிதைகள் புனைந்துள்ளனர். ச·பிய்யா என்ற பெயருடைய பெருமானாரின் அத்தை ஒருவரும் மர்ஸிய்யா பாடல்களை எழுதியுள்ளார்கள். “இந்த உலகமே இருளடைந்து விட்டது” என்று தொடங்கும் இரங்கற்பாவை உமர்(ரலி) அவர்களும் உதுமான்(ரலி) அவர்களும் பாடியுள்ளனர். ”

அழு என் கண்களே” என்று தொடங்கும் கவிதையை ஹம்ஸா, அபூபக்கர், அப்பாஸ் போன்றோர் பாடியுள்ளனர். ”

துன்பத்தின் அளவுக்கு கண்ணீர் வருமானால் மேகத்தின் மழையை அது மிஞ்சிவிடும்” என்பதாக அலி அவர்கள் கவிதை பாடினர்.

” மிம்பக்தி மெளதில் முஸ்த·பா” என்று தொடங்கும் ஈரடிப்பாடலையும் அலியார் இயற்றியுள்ளனர்.

அஹ்மதுவின் கல்லறையின் நறுமணம் நுகர்வோருக்கு வேறு மணம் தேவையில்லை இவ்வாழ்வில் என்றும் பகலெல்லாம் இரவாகிவிடும் ( முஹம்மதுவைப் பிரிந்த என் ) வேதனைகளை பகல்மீது பொழிந்தால் என்றும் அன்னை ·பாத்திமா அவர்கள் பெருமானார் மீது கவிதை பாடியுள்ளார்கள்.

இவையெல்லாம் பெருமானார் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற பின் சொல்லப்பட்ட இரங்கற் பாக்கள்.

துன்பத்தின் உச்சியிலும் வேதனைகளின் விளிம்பில் கூட அவர்களுக்குக் கவிதை வந்திருக்கிறது. அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக இன்னுயிரை விட்ட தியாகியாவார்கள். அவர்கள் உயிர் பிரிந்து கொண்டிருந்த சமயம் கடைசிவரை கவிதைகள் பாடிக்கொண்டே இருந்தார்கள்!

குபைப் இப்னு அதீ (ரலி) என்று ஒரு நபித்தோழர். இஸ்லாத்திற்காக எதிரிகளால் தூக்கில் போடப்பட்ட முதல் முஸ்லிம். தன் இறுதிசையாக தொழ அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அனுமதித்தவுடன் ஒளுச்செய்துவிட்டு சுருக்கமாக தொழுகையை முடித்துக்கொண்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு, ” நான் வெகு நேரம் தொழ விரும்பினாலும், மரணத்திற்கு பயந்து இறுதி நபியின் தோழர் வெகு நேரம் தொழுதார் என்று குற்றச்சாட்டு வரக்கூடாது அல்லவா” என்றார்களாம்.

இவர்களும் உயிர் பிரியும் தருவாயில் கவிதை பாடிக்கொண்டிருந்தார்கள் !

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் யஸீதுக்குப் பிறகு கலீ·பாவாக இருந்தவர்கள். அபூபக்கர் சித்தீக் அவர்களின் பேரர் ஜுபைரின் மகன். ஹஜ்ஜாஜோடு ஹரம் ஷரீ·பில் நடந்த சண்டையின் போது அவர்கள் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தபோது கவிதை பாடினார்கள் !

மு’வியா(ரலி) அவர்கள் கலீ·பாவாக இருந்த காலத்தில் உடம்புக்கு முடியாமல் இருந்தபோது கண்ணுக்கு சுர்மாவும் எண்ணெயும் இட்டுக் கொண்டு ரோக்கியமாக இருப்பதைப் போன்ற தோற்றத்தில்தான் மக்களைச் சந்திப்பார்களாம்.

அப்போது அந்த சூழ்நிலை பற்றி கவிதை பாடுவார்களாம்! அதோடு அவர்களின் உடலைக் கழுவிக்கொள்ள உதவி செய்யும் தன் மகள்களைப் பற்றியும் கவிதை பாடுவார்களாம் !

ஹஸ்ரத் அலி(ரலி) அவர்கள் தாம் கொலை செய்யப்படுவோம் என்பதை முன்னரே அறிந்து வைத்திருந்தார்கள். பள்ளி வாசலுக்குச் செல்வதற்காக கஷ்டப்பட்டு எழுந்தபோது மரணம் பற்றியும் அதை துணிச்சலாக சந்திப்பதைப் பற்றியும் கஸீதா பாடினார்கள் !

இமாம் ஷா·பி’ஈ அவர்களை சித்ரவதை செய்தபோது, லுன் நபிய்யி தரிய்யத்தி, வ ஹ¤ம் இலய்ய வஸீலத்தீ எனது சேமிப்பெல்லாம் அருமை நபியின் வழித்தோன்றல்கள்தான் என்னும் பொருள்படும் கவிதையினைப் பாடினார்கள் !

இமாம் நஸீமி (ரஹ்) அவர்களை தலை கீழாகத் தொங்கவிடப்பட்டு அவர்கள் தோலை உரித்துக் கொன்றனர் பாவிகள். அப்போது ஏகத்துவ ஞானம் பற்றிய 500 பாடல்களைப் பாடி அவர்கள் உயிர் துறந்தார்கள் !

சூ·பி அபூபக்கர் ஷிப்லி அவர்கள் ” நீ வாழும் வீட்டில் ஒளியேற்ற மெழுகுவர்த்தி தேவையில்லை” என்று கவிதை பாடிக்கொண்டே உயிரை விட்டார்கள் !

இமாம் ஜா·பர் சாதிக் (ரலி), முஹ்யித்தீன் அப்துல் காதிரி ஜெய்லானி (ரலி), ராபியதுல் பஸரியா போன்ற அனேக இறை நேசர்கள் கஸீதாக்களில் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். அதாவது கவிஞர்கள் அல்லாதவர்கள் !

முடிவுரை

இஸ்லாமிய வரலாறு கவிதைகளால் நிரம்பியுள்ளது. கவிஞர்கள் புகழும் செல்வாக்கும் செல்வமும் கொண்டவர்களாக அரசர்களைப் போல வாழ்ந்திருக்கிறார்கள்.

மக்காவில் வாழ்ந்த உமர் இப்னு அபீ ராபியா என்ற காதல் கவிதைகள் எழுதுவதில் புகழ்பெற்ற கவிஞருக்கு 70 அடிமைகள் இருந்தனராம் ! சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும் என்ற கூற்று இஸ்லாமிய வரலாற்றைப் பொறுத்தவரை பொய்யாகிப் போனது !

அரேபிய இஸ்லாமிய வரலாற்றில் அநேகம் பேர் கவிதைகள் பாட முடிந்தவர்களாகவோ, அதாவது மகாகவிகளாகவோ, அல்லது குறைந்த பட்சம் கவிதைகளை கேட்பதில், உற்சாகப் படுத்துவதில் நாட்டம் கொண்டவர்களாகவோ இருந்துள்ளனர்.

கொடுங்கோலன் என்ற பெயரை வாங்கிக்கொண்டுவிட்ட யஸீது கூட கவிதைகள் இயற்றுவதில் சிறந்து விளங்கினார் ! பல லட்சம் பேரை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு வெஜிடேரியன் என்பதுபோல ! ஆனாலும் உண்மை !

பெருமானரின் காலத்தை கவிதைகளுக்கும் பொற்காலம் என்றே வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதிலே எஞ்சிய பொற்துகள்கள் உலகமுடிவு நாள் வரை பல திசைகளில் இருந்தும் பல மொழிகளிலும் நம்பிக்கையின் மற்றும் மனிதாபிமானத்தின் கடைசி பருக்கை இருக்கும் வரை மின்னிக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதற்கும் பிரபஞ்ச மகா கவியாகிய எல்லாம் வல்ல இறைவன் உதவுவானாக !
இஸ்லாம் கவிதையை நிராகரிக்கின்றதா?

கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை – 24

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை – 15

கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை – 20

 

Tags: , , , , ,