







“நாகூர் ஹனிபாவுக்கு கலைஞர் கொடுத்த அல்வா” என்று இக்கட்டுரைக்கு தலைப்பு கொடுத்ததற்கு பதிலாக “பிழைக்கத் தெரியாத நாகூர் ஹனிபா” என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமே என்று என் நண்பர்கள் சிலர் கருத்து தெரிவித்தார்கள். இதற்கு காரணம் நாகூர் ஹனிபா மீது அவர்களுக்கிருந்த கோபமா? அல்லது கலைஞர் மீது அவர்கள் வைத்திருந்த அளப்பரிய அன்பா என்று கண்டறிய நான் முயற்சி ஏதும் எடுக்கவில்லை.
அவர்களுடைய கண்ணோட்டத்திலிருந்து சிந்தித்துப் பார்த்தால் நாகூர் ஹனிபா தனக்கிருந்த அரசியல் செல்வாக்கையும், கட்சித் தலைமையோடு அவருக்கிருந்த நெருக்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டாரோ என்ற சந்தேகமும் நம் மனதில் எழுந்து தொலைகின்றது.
கலைஞர் அவர்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்து “ஏன் நீங்கள் நாகூர் ஹனிபாவுக்கு உரிய பதவி கொடுக்கவில்லை?” என்று கேட்பதற்கு பதிலாக நாகூர் ஹனிபாவிடமே “நீங்கள் ஏன் பதவியை கேட்டுப் பெறவில்லை?” என்று ஏன் நாம் கேட்கக் கூடாது?
நாகூர் ஹனிபா அவர்கள் “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற மனப்பக்குவத்துடன் பெருந்தன்மையோடு நடந்துக் கொண்டாரா? அல்லது கூச்ச சுபாவம் காரணமாக வந்த வாய்ப்புக்களை எல்லாம் விரால் மீனாக நழுவ விட்டாரா? அல்லது இஸ்லாமியப் பாடகராக கச்சேரிகள் மூலமாக வரும் வருமானம் இதனால் கெட்டுப் போய்விடுமே என்ற காரணத்தினால் அரசியல் பதவியை தவிர்த்து விட்டாரா? என்று தெரியவில்லை.
இசைத்துறையில் தனக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அரசியலில் கிடைக்காது என்ற காரணத்தினால்கூட இருக்கலாம் அல்லவா?
இந்த வாதத்தை நாம் முன் வைப்பதால் கலைஞர் – நாகூர் ஹனிபா இருவருக்கும் இடையிலான நட்புறவில் கலைஞர் அவர்கள் நியாயமாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியாது. இதோ அந்த நிகழ்வு நாம் சொல்லவரும் கருத்துக்கு நல்லதோர் உதாரணம்.
இசைமுரசு அவர்கள் தனக்குச் சொந்தமான “அனிபா லாட்ஜ்” கட்டிடத்தை கட்டி முடித்து, அதன் திறப்பு விழாவுக்கு கலைஞர் அவர்களை அழைத்தபோது, வருவதாக வாக்களித்திருந்த கலைஞர் அவர்கள் வேண்டுமென்றே வரவில்லை. அதற்கு காரணம் அதையொட்டி நடைபெறவிருந்த தேர்தல்.
பெருமளவில் கூட்டத்தைக் கூட்டி கட்சியின் வலிமையைக் காட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்தார் கலைஞர். இதுபோன்ற சிறிய நிகழ்ச்சியில் வந்து கலந்துக் கொண்டு பெருந்திரளான கூட்டத்தை திரட்டத் தவறினால் எங்கே தன்னுடைய ‘இமேஜ்’ பாதிக்கப்பட்டு விடுமோ என்று தயங்கிய கலைஞர் நாகூர் வருவதை ரத்து செய்து விட்டார். கடைசியில் சாதிக் பாட்சா, ஆ.கா.அப்துல் சமது, மதுரை ஆதீனம் போன்றவர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தி முடித்தார் ஹனிபா.
நட்புதான் பெரிது என்று கலைஞர் மனதார நினைத்திருந்தால் தஞ்சாவூர் வரை வந்த தானைத்தலைவர் தாராளமாக ‘இமேஜ்’ எதையும் பார்க்காமல் நண்பரின் அழைப்புக்கு இணங்கியிருக்கலாம். நாகூர் ஹனிபாவுக்கும் அது பெருமையாக இருந்திருக்கும்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் தொடக்க கால வாழ்க்கையில் அவரை கைத்தூக்கி விட்டவர்கள், அவருடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமகனார்கள், பெரும்பாலும் இஸ்லாமியச் சகோதரர்களாகவே இருந்தார்கள் என்பதை இந்தப் பதிவின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருந்தேன். இவர்கள் அனைவரும் எழுத்துலகிலும் பத்திரிக்கைத் துறையிலும் கைதேர்ந்த தமிழார்வலர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வுப் பொருத்தமா அல்லது கலைஞர் அவர்கள் இஸ்லாமிய அன்பர்களுடன் நட்புறவு கொள்வதை மிகவும் விரும்பினாரா என்பது ஆராய வேண்டிய விஷயம். கலைஞர் அவர்களுக்கு இஸ்லாமியச் சமூகத்தினர் மீது ஒரு தனிப்பட்ட பிரியம் இருந்ததை நாம் மறுக்கவோ மறக்கவோ இயலாது. இன்றளவும் நாகூர் ஹனிபாவைப் போன்று எத்தனையோ இஸ்லாமியச் சகோதரர்கள் கலைஞரின் Diehard விசுவாசிகளாக இருக்கிறாகள் என்பது கண்கூடு. தன்னுடைய அரசியல் லாபத்திற்காக முஸ்லீம் லீகை பிளவு படுத்தினார் என்பது உண்மையாக இருந்தபோதிலும், கலைஞர் செய்தது ஒருவகையில் நன்மையாகவே முடிந்தது என்று சிலர் கருதுகிறார்கள்.
கூட்டணிக் குடையின் கீழ் ஆட்சியின் பீடத்திலிருந்து அவர்கள் சாதிக்க முடியாத பல விஷயங்களை எதிர் அணியில் இருந்துக் கொண்டு சமுதாயப் பிரச்சினைக்கு வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கும் ஒன்றிணைந்து செயலாற்றும் இத்தனை இஸ்லாமிய அமைப்புகளை நினைத்தால் நமக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.
“முஸ்லீம் லீக்” என்ற கட்சி உட்பூசலின் காரணமாக பெரிதாக எந்த ஒரு சமுதாய சீர்திருத்தத்தையோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காக களமிறங்கி போராடியோ சாதனை படைக்கவில்லை என்ற ஒரு அபிப்பிராயம் பரவலாக நிலவுகிறது. இதனை என்னால் மறுக்க முடியவில்லை என்பதும் உண்மை.
கலைஞர் அவர்களுடைய பொதுவாழ்க்கையில் அவருக்கு தோளோடு தோள் நின்று, அவருடைய இன்ப துன்பங்களில் பங்கு பெற்று, பொருளாதார உதவியும், தொழில் ரீதியான முறையில் உதவிகளும் புரிந்து, கலைஞர் அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த பெருமை அவர் தொடர்பு வைத்திருந்த திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருந்த முஸ்லீம் அன்பர்கள் பலரைச் சாரும்.
கமால் பிரதர்ஸ், கவி.கா.மு.ஷெரீப், கருணை ஜமால், சாரணபாஸ்கரன், கலைமாமணி காரை எஸ்.எம்.உமர், நாகூர் ஹனிபா, நாவலர் ஏ.எம்யூசுப், ஆ.கா.அ.அப்துல் சமது என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இக்கட்டுரையின் மையக்கருத்தை விட்டு சற்றே விலகி கலைஞர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த இந்த இஸ்லாமிய நண்பர்கள் பத்திரிக்கைத் துறையில் எவ்வாறு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினார்கள் என்பதை சற்று விரிவாகக் காண்போம்.
நாகூர் ஹனிபாவுக்கும் பத்திரிக்கைத் துறைக்கும் சம்பந்தம் ஏதும் இல்லாத போதிலும் அவருடன் நெருங்கிப் பழகிய நாகை, திருவாரூர், காரைக்கால் வட்டார இஸ்லாமிய நண்பர்கள் பலர் பத்திரிக்கைத் துறையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் அவர்கள் பத்திரிக்கைத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு அறிஞர் தாவுத்ஷா அவர்கள் ஒரு முன்மாதிரியாகத் (as a Role Model) திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையாகாது.
“அந்தக் காலத்தில் நான் பள்ளியில் பயிலும் போது ஒரு கையிலே குடி அரசு ஏடு, இன்னொரு கையிலே “தாருல் இஸ்லாம்” என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரசாரம் செய்கிற நாளேடு – இவைகள்தான் எங்கள் கைகளை அலங்கரிக்கும்”
என்று டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் சொன்னதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையின் ஆசிரியர்தான் தாவூத் ஷா.

Dawood Shah
1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “தாருல் இஸ்லாம்” என்ற மாத இதழ், அக்காலத்தில் பத்திரிக்கை உலகில் ஒரு முன்னோடி இதழாகத் திகழ்ந்தது.
கலைஞர் அவர்கள் தனியாக பத்திரிக்கை தொடங்குவதற்கு “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கை ஒரு உந்து சக்தியாக அமைந்தது என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.
64 பக்கங்களுடன் வெளிவந்த அந்த இதழானது, தலையங்கம், அரிமாநோக்கு, கண்ணோட்டம், அரசியல், ஆன்மீகம், அறிவியல், சட்ட, மருத்துவக் கட்டுரைகள், கவிதை, கதை, தொடர்கதை, ‘கேள்வி-பதில்’ பகுதி, வாசகர் கடிதம், துணுக்குகள் என்று அத்தனை பல்சுவை அம்சங்களுடன் அவ்விதழ் மக்களைக் கவர்ந்தது. ‘தத்துவ இஸ்லாம்’, ‘முஸ்லிம் சங்கக் கமலம்’, ‘தேவ சேவகம்’, ‘ரஞ்சித மஞ்சரி’ போன்ற பல இதழ்கள் நடத்திய அனுபவம் அவருக்குண்டு.
தினத்தந்தியில் சிந்துபாத் கதை வாசகர்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றிருந்ததை நாமெல்லோரும் அறிவோம். முதன் முதலாக ஆயிரத்தொரு இரவுகள் அரபுக் கதைகளை மொழி பெயர்த்து தமிழுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் தாவூத் ஷா. அதற்குப்பின்னால் அரேபியக் கதைகளின் Fantasy அம்சங்களை திரைப்படங்களில் குலேபகவாலி, நாடோடி மன்னன், பாக்தாத் பேரழகி போன்ற படங்களில் புகுத்திய பெருமை திரைப்பட வசனகர்த்தா நாகூர் ரவீந்தரைச் சேரும்
“பத்திரிகையில் எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டு பிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு” என்று அறிவித்ததும், தம் பத்திரிகையில் புரூப் திருத்துவதற்கென்றே புலவர் செல்வராஜ் என்ற தமிழ்ப் புலவரையே நியமித்து வைத்திருந்ததும் தாவுத்ஷா அவர்களின் பத்திரிக்கை தர்மத்தையும் அவரது தொழில் பக்தியையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றது.
அக்காலத்தில் பிராமணச் சமூகத்திற்கு இணையாக, பத்திரிக்கைத் துறையில் இஸ்லாமியர்கள் காலூன்றி தடம் பதித்திருந்தார்கள் என்ற கருத்தை வலியுறுத்த பல உதாரணங்களை இங்கே கோடிட்டுக் காட்ட முடியும்.
[19-ஆம் நூற்றாண்டிலேயே (1880-களில்) நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள் ‘வித்தியா விசாரிணி’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கி கவிதை, உரைநடை, இலக்கியம், மொழி பெயர்ப்பு, இதழியல் என இலக்கியத்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார்.]
கீழை நாடுகள் மற்றும் பிரஞ்சு நாட்டில் வியாபாரத் தொடர்பை வளர்த்துக் கொண்ட இஸ்லாமியர்கள் இங்கு சொந்தமாக அச்சகங்கள் துவங்கியதால் அவர்களுக்கு இது எளிதான காரியமாக இருந்தது. [நாகூரைச் சேர்ந்த தளவாய் சின்னவாப்பா மரைக்காயர் ‘ரபீக்குல் இஸ்லாம்’ (இஸ்லாமிய நண்பன் என்று பொருள்) என்ற வார இதழை 1905-ஆண்டு சிங்கப்பூரில் நடத்தி வந்தார் என்பது மற்றொரு கொசுறு செய்தி]
காரைக்காலிலிருந்து 1944-ஆம் ஆண்டு முதல் “பால்யன்” என்ற வார இதழ் வெளிவந்துக் கொண்டிருந்தது. இதன் ஆசிரியர் உ.அபூஹனிபா என்பவராவார். “மணிச்சுடர்” ஆ.கா.அப்துல் சமது, நாவலர் “மறுமலர்ச்சி” யூசுப், “சாந்தி விகடன்” அ. மு. அலி, எஸ்.எம்.உமர், வடகரை எம்.எம்.பக்கர், ஓவியர் காரை பக்கர் போன்றவர்கள் இவ்விதழை வளர்ப்பதில் இலவசமாக தமது சேவையினை வழங்கியுள்ளனர். இம்மூவரையும் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது பால்யன் இதழே.
காரைக்காலில் 1940-களில் நடத்தப்பட்ட “கதம்பம்:, “இளம்பிறை” , “முஸ்லீம் லீக்” போன்ற இதழ்களிலும் ஆ.கா.அ. அப்துல் சமது எழுதி வந்தார்.
“பால்யன்” இதழை முதலில் தொடங்கியவர் காரை அ.மு.அலி அவர்கள் . இவர், தான் ஆரம்பித்த இதழை உ.அபூஹனிபாவிடம் ஒப்படைத்துவிட்டு சிங்கப்பூர் சென்று விட்டார். “பால்யன்” இதழ் ஒரு தரமான இலக்கிய இதழாக தமிழ்ச் சேவை ஆற்றி வந்தது.
அதன் பின்னர், ஆனந்த விகடன் போன்றே ஜனரஞ்சகமான இஸ்லாமிய சஞ்சிகை ஒன்று “சாந்தி விகடன்” என்ற பெயரில் காரைக்காலிலிருந்து காரை அ.மு.அலி வெளியிட்டார். 1960 முதல் 1963 வரை வெளிவந்த இந்த இதழ் 1963-ஆண்டில் வரலாறு மலர் ஒன்றை வெளியிட்டதுடன் நின்றுபோனது. இவ்விதழ் அரசியலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தது. கருத்துப்படங்களும் விகடனைப் போன்றே கேலியும் கிண்டலும் நிறைந்து காணப்பட்டது.
காரை அ.மு.அலி வேறு யாருமல்ல. கலைஞர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ‘கலைமாமணி’ உமர் அவர்களின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்.
கலைஞர் அவர்கள் தன் பழைய நண்பர்களை அறவே மறந்து விட்டிருந்தார் என்று கூற முடியாது. அவர்களை நெஞ்சில் நினைவிறுத்தி கவி கா.மு.ஷெரீப், நாகூர் ஹனிபா, காரை எஸ்,எம்.உமர் போன்றவர்களை கெளரவித்து “கலைமாமணி” பட்டம் வழங்கினார். (கலைமாமணி பட்டம் “Tom. Tick & Harry” என்று கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்து அந்த விருதுக்கே மதிப்பில்லாமல் போனது வேறு கதை)
‘கலைமாமணி’ எஸ். எம். உமர், நாகூர் ஹனிபா, கலைஞர் கருணாநிதி – இம்மூவரும் ஏறக்குறைய சமவயதினர். எழுத்தாளராகவும் திரைப்படத்தயாரிப்பாளராகவும் இருந்த உமர் கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட இந்தியப் படங்களை வியட்நாம் மொழியில் மொழிமாற்றம் செய்தவர். “இளம்பிறை” (1944), “குரல்” (1949), “உமர்கய்யாம்” (1978) போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர். “ஞானசௌந்தரி”, “லைலா மஜ்னு”, “அமரகவி”, “குடும்ப விளக்கு”, “ஜெனோவா” போன்ற படங்களின் தயாரிப்பில் பங்கு பெற்றவர்.
1968-ல் காரை எஸ்.எம்.உமர் “வசந்த சேனா’ என்ற வண்ணப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரித்தார். இப்படத்தில் பின்னணியில் முகவுரை பேசியவர் நாவலர் ஏ.எம்.யூசுப். 1948-ல் ஏ.எம்யூசுப், அ.மு.அலி, ஜே.எம்.சாலி மற்றும் தோழர்கள் இணைந்து “இழந்த காதல்” என்ற சமூக சீர்த்திருத்த நாடகத்தை நடத்தினார்கள். அந்த நாடகத்தில் “ஜெகதீஷ்” என்ற வில்லன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்களைக் கவர்ந்தவர் ‘மறுமலர்ச்சி; ஏ.எம்.யூசுப் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத் துறையில் இவர் செய்த சாதனைக்காக, 1997-ல் கலைஞர் கருணாநிதி இவருக்கு “கலைமாமணி’ விருது அளித்து கெளரவித்தார்.
அடுத்து கலைஞர் அவர்களுக்கும் கமால் பிரதஸுக்கும் இருந்த நட்பின் நெருக்கத்தை ஆராய்வோம்.
தளபதி ஸ்டாலினிடம் சென்று “உங்கள் தந்தையாரின் கோபாலபுரம் வீட்டை வாங்கித் தந்தவர் கமால் சகோதரர்கள் என்று சொல்லுகிறார்களே. இது உண்மையா?” என்று கேட்டால் “யார் சொன்னது? இது என் தந்தையார், அவரே சம்பாதித்து வாங்கியது” என்பார்.

“கோபாலபுரம் வீடும், திருவாரூர் அருகே காட்டூரில் அஞ்சுகம் அம்மாள் கல்லறை அமைந்துள்ள இடமும் நான் சம்பாதித்த சொத்துகள்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார் கலைஞர்.
“கோடியென வந்த சம்பளத்தையும்- குடியிருந்த வீட்டையும்-தமிழுக்காகவும், ஏழை எளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் – தன் அறிவையும் ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன் – உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துக்கள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறான்” என தன் பிறந்தநாள் வாழ்த்து அறிக்கையில் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
‘சில பேருக்கு கோபாலபுரமே சினிமா உலகமாக ஆகி விடுமோ என்று சொல்லத் தோன்றியுள்ளது. ஆமாம். சினிமா உலகம் தான். சினிமா உலகத்திலேயிருந்து வந்தவர்கள் தான் பல பேர் இன்றைக்கு கோபாலபுரத்திலிருந்து தங்களுடைய புகழ்க் கொடியை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அதற்காக வெட்கப்படவில்லை. மருமகன் படம் எடுத்து படத்தயாரிப்பாளர், மகன் படத்தயாரிப்பாளர், பேரன் படத்தயாரிப்பாளர் என்றெல்லாம் இன்றைக்கு சில பேர் அரசியல் ரீதியாக கேலி பேசுகிறார்கள், கிண்டல் பேசுகிறார்கள். ஆமாம், என் பேரன் பட தயாரிப்பாளர் தான். இன்னும் கொஞ்ச நாளைக்கு பிறகு என்னுடைய கொள்ளுப்பேரன் கூட படத்தயாரிப்பாளராக ஆனால், அதிலே எந்தவிதமான ஆச்சரியப்படவும் தேவையில்லை. படத்தயாரிப்பு என்பது ஒன்றும் தவறான காரியமல்ல. படத்தயாரிப்பு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தொழில் தான்.’
என்று கலைஞர் அவர்கள் அண்மையில் உணர்ச்சி பொங்க ஒரு விழாவில் பேசினார்.
ஆம் கோபாலபுரத்திற்கும் சினிமா உலகத்திற்கும் அப்படி ஓர் ஒற்றுமை. திரைப்படத் தயாரிப்பளர்களான கமால் பிரதர்ஸ் வங்கித் தந்த வீடுதான் கோபாலபுரம் வீடு. திரைப்படத்துறைக்காக அடகு வைக்கப்பட்ட விடுதான் அந்த வீடு. அதே திரைப்படத்தால் மீட்கப்பட்ட வீடுதான் அந்த கோபாலபுரம் வீடு, கலைஞர் அவர்கள் தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி”யில் சொன்னது போல் திரைப்படத்தில் வசனம் எழுதி வாங்கிய வீடு என்ற கூற்றில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
கூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும் “கமால் பிரதர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். இவர்களின் குடும்பத்திற்கு வியட்நாம் நாட்டில் சைகோன் (Saigon) நகரத்தில் வணிகத்தொழில் இருந்து வந்தது. 1957-ல் வியட்நாம் போரின்போது சைகோன் நகரம் பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. ஆதலால் வியாபாரம் நஷ்டத்திற்கு உள்ளானது. தமிழ்நாட்டில் இவர்கள் தொடங்கிய “கமால் பிரதர்ஸ்” என்ற படநிறுவனமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
கமால் சகோதரர்கள் கலைஞர் கருணாநிதிக்கு பலவிதத்தில் பணஉதவி புரிந்திருக்கிறார்கள். கோபாலபுரம் வீட்டை 45,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கிக் கொடுத்தவர்களும் அவர்களே. இன்று கமால் சகோதரர்கள் வாங்கித் தந்த வீட்டை மக்களுக்கு தானம் கொடுத்து விட்டதாக கலைஞர் அறிவிக்கிறார். இந்த வீட்டை ஒரு காலத்தில் தனது “மேகலா பிக்சர்ஸ்” நிறுவனத்திற்காக அடகு வைத்து ஏலத்திற்கு வந்தபோது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வெறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு “எங்கள் தங்கம்” படத்தில் நடித்துக் கொடுத்து அந்த வீட்டை மீட்டுக் கொடுத்தார்கள் என்கின்ற செய்தியை நடிகர் ராதா ரவி தெரிவிக்கிறார்.
திரைப்படத்தயாரிப்பில் இறங்கி நொடித்துப் போன அவர்கள் வறுமையில் வாடி வதங்கியபோது, அவர்களின் பொருளாதார நிலைமையை யாரோ முதலமைச்சர் கலைஞரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒருகாலத்தில் நம்மிடம் உதவியை எதிர்பார்த்து நின்றவரிடம் நாம் போய் உதவி கேட்பதா?’ என்று தன்மானம் கருதி அவர்கள் கலைஞரைச் சந்திக்க மறுத்து விட்டனர். இந்தச் செய்தியை நான் அறிந்தபோது கலைஞர் தன் பழைய உறவுகளை நினைத்துப் பார்க்க மனமில்லாத கல்நெஞ்சம் கொண்ட மனிதரல்ல என்பதை உணர்ந்தேன்.
கமால் சகோதரர்கள் கலைஞரைச் சந்தித்திருந்தால் இவர்களுக்கு பொருளுதவி செய்திருக்கக் கூடும். வாய்ப்பினை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதைப் போன்று நாகூர் ஹனிபாவும் பதவியை கேட்டுப் பெற்று பயன் அடைந்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.

கலைஞர் அவர்களை மாடர்ன் தியேட்டர்ஸில் அறிமுகம் செய்து வைத்தது கவி கா.மு.ஷெரீப் என்பதை நாம் முன்பே ஆராய்ந்தோம். அவர் வசனம் எழுதிய ஒரு படத்திற்கு – அப்போது அவர் பிரபல வசனகர்த்தாவாக இல்லாமல் போன காரணத்தால் – படம் வெளிவந்தபோது அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்யப் பட்டிருந்தது. பிறகு கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்திற்கு வசனம் எழுதியபோதும் அவருடைய பெயர் இருட்டடிக்கப்பட்டு ஏ.எஸ்.எ.சாமியின் பெயரை வெளியிட்டார்கள். இத்தனை பெரிய அவமானம் அவர் சந்திக்க வேண்டிவரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. மனம் நொந்துப்போன கலைஞர் அவர்கள் மீண்டும் சேலத்திலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் மனைவி பத்மாவதியை அழைத்துக்கொண்டு திருவாரூருக்கு பயணமாகி வந்து சேர்ந்தார்.
“குடி அரசு” பத்திரிக்கையில் கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக எழுதி வந்த படைப்புகள் மக்களை எழுச்சிக் கொள்ள வைத்தன. இதற்கிடையில் கலைஞர் கதை வசனம் எழுதித் தந்த “மந்திரிகுமாரி” படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத்தின் அழைப்பு மீண்டும் வந்தது. கலைஞரை மறுபடியும் சேலம் வரச் சொல்லி அவருடைய எதிர்காலத்தின் மீது மிகவும் அக்கறை காட்டியவர் கவி.கா.மு.ஷெரீப். கலைஞர் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்வார் என்ற நம்பிக்கை ஷெரீப்புக்கு இருந்தது. கலைஞர் அவர்களின் வசீகரப் பேச்சுத்திறனையும் கனல் தெறிக்கும் எழுத்தாற்றாலையும் நன்கறிந்திருந்தார் அவர்.
அப்போது கலைஞரின் மனைவி பத்மாவதி கர்ப்பமாக (மு.க.முத்து) வேறு இருந்தார் பணத்திற்காக கலைஞர் அவர்கள் மிகவும் அல்லாடிக் கொண்டிருந்த நேரம் அது. கலைஞர் அவர்களின் எதிர்காலமே ஒரு கேள்விக்குறியாக இருந்தது. ஒருபுறம் பணக்கஷ்டம். இன்னொருபுறம் குறிக்கோள் எந்தி வாழ்க்கையின் ஏறுமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கலைஞர் அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார்.
பத்மாவதிக்கு குழந்தை பிறந்தது. தனது தந்தை முத்துவேல் அவர்களின் ஞாபகர்த்தமாக முத்து என்ற பெயரை வைத்தார். இவர்தான் பிற்காலத்தில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக(?) திரைப்படத்தில் இறக்கிவிடப்பட்ட மு.க.முத்து. இவர் பிறந்த சிறிது காலத்திற்குள் பத்மாவதியும் இறந்து போனார்.
இச்சமயத்தில் கலைஞர் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் கருணை ஜமால். இவர் மிகச் சிறந்த எழுத்தாளர். தமிழார்வலர். திருவாரூக்காரர்.
ஏற்கனவே ஈரோட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக இருந்த அனுபவம் கலைஞர் அவர்களுக்கு பெரிதும் கைகொடுத்தது.
துவக்கத்தில் துண்டு பிரச்சார ஏடாகவே முரசொலியானது கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் கலைஞர் அவர்கள் தனது 18-வது வயதில் (10-08-1942) பத்திரிக்கையாக வெளிக்கொணர்ந்தார். இம்முயற்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. பொருளுதவி மற்றும் சொந்த அச்சகம் இல்லாத காரணத்தினால் இது தடைபட்டுப் போனது. கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பரான கருணை ஜமால் அவர்களின் முயற்சியால் 14-01-1948 அன்று திருவாரூரிலிருந்து முரசொலி மீண்டும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1954-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து வார இதழாக வெளிவந்த முரசொலி 17-09-1960 முதல் நாளிதழாக வெளிவரத் துவங்கியது.
நின்று போயிருந்த முரசொலி பத்திரிகையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் திருவாரூரில் கலைஞர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தன் மனைவியிடமிருந்த நகைகள் யாவையும் அடகு வைத்து முரசொலி பத்திரிக்கையை மீண்டும் தொடங்கினார் அவர். இருந்தபோதிலும் பத்திரிக்கை நடத்துவதென்பது அவர் நினத்ததுபோல் அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமாக இருக்கவில்லை. நிறைய முதலீடும், சொந்தமான அச்சகமும் தேவைப்பட்டது.
கலைஞர் தனது எண்ணத்தை கருணை ஜமாலிடம் தெரிவித்தபோது கொஞ்சமும் தயங்காமல் கலைஞருக்கு உதவி செய்ய முன்வந்தார். கருணாநிதி எழுத்தாற்றல் மீது பெருத்த நம்பிக்கை கொண்டிருந்தார் கருணை ஜமால். கருணை ஜமால் அவர்களை கலைஞர் நினைத்துப் பார்க்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கலைஞர் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக கருணை ஜமால் இருந்தார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் யாரும் கலைஞருக்கும் உதவ முன்வராத காலத்தில் கருணை ஜமால்தான் கலைஞரின் வாழ்க்கையில் ஒளிவிளக்காக திகழ்ந்திருக்கிறார்.
முரசொலி பத்திரிக்கையின் பிரதிகளை கருணை ஜமால் அவர்களே தன் சொந்த அச்சகத்தில் அச்சடித்துக் கொடுத்து, விற்பனையாளர்களுக்கு அனுப்பி, அதன்பின் தனக்குச் சேர வேண்டிய செலவுத் தொகையை பெற்று, கலைஞர் அவர்களுக்கு தன்னால் ஆன உதவியைச் செய்தார். காலத்தினால் செய்த இந்த உதவியானது கலைஞர் அவர்களின் முன்னேற்றத்திற்கும், வாழ்க்கைப் பயணத்திற்கும் பெரிதும் துணை புரிந்தது.
கலைஞர் அவர்களின் உடல் உழைப்பும் அறிவுத்திறனும் முரசொலி பத்திரிக்கை வெற்றி பெற வழி வகுத்தது. முரசொலியில் எழுச்சிக் கட்டுரைகள் எழுதுவதோடு நிற்காமல் அவரே பிரதிகளைச் சுமந்துக் கொண்டு திருவாரூர் மற்றும் இதர இடங்களுக்குச் சென்று வினியோகம் செய்வார். அவருக்கு உதவியாக முரசொலியின் மேலாளர் கனகசுந்தரமும் முரசொலிக் கட்டுகளை சுமப்பது வழக்கம்.
திராவிட இயக்கத்தின் சார்பாக “குடி அரசு”, “விடுதலை”, “திராவிட நாடு” போன்ற ஏடுகள் மக்களிடையே பிரபலமாக இருந்த போதிலும், கருணை ஜமால் உதவியோடு கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் குறுகிய காலத்தில் “முரசொலி” இதழானது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது
10.812780
79.839100