இனிக்கும் இராஜ நாயகம் – பாகம் 2
வண்ணக் களஞ்சியப் புலவரின் “இராஜநாயகம்” என்ற காப்பியத்தை “இனிக்கும் இராஜ நாயகம்” என்ற பெயரில் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் அனுபவித்து ஆராய்ந்த ஆய்வுநூலை அலசுவதற்கு முன்பாக, வண்ணக் களஞ்சியப் புலவரின் தமிழ்ப்புலமையை சற்றே அறிந்து வைப்பது இப்பதிவின் புரிதலுக்கு கூடுதல் சுவைகூட்டுமென நினைக்கிறேன்.
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை “புலவர்கோட்டை” என்றழைக்கப்படும் நாகூரிலேயே கழித்தவர் வண்ணக் களஞ்சியப் புலவர். தமிழறிந்த கற்றோர்கள் சபையில், தன் புலமையை கொண்டாடும் தமிழார்வலர்களுக்கு மத்தியில், தன் புலமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் வாழ்வதைவிட ஒரு புலவனுக்கு வேறென்ன ஆனந்தம் இருக்க முடியும்?
இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் சுவாசிக்கும் ஊர் நாகூர். சங்கத்தமிழ் வார்த்தைகளை அன்றாட வழக்குமொழிகளில் சுவைக்கும் ஊர் அது. திரும்பும் இடங்களிலெல்லாம் இசையை காற்றில் பறக்கவிட்டு செவிகளுக்கு விருந்தூட்டும் ஊர் அது. மீசலில் பிறந்தபோதும் வாசம் செய்ய வசமான இடமென நாகூரை அவர் தேர்ந்தெடுத்ததன் காரணம் நமக்கு விளங்குகிறது.
எத்தனையோ இஸ்லாமியப் புலவர்கள் இருக்க உமறுப்புலவரையும், வண்ணக் களஞ்சியப் புலவரையும் மட்டும் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் போற்றிப் புகழ்வதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்?
அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வரலாறு சம்பந்தப்பட்ட காப்பியங்களை ஆராய்வதில் நீதிபதிக்கு பேரார்வம் இருந்தது. இரண்டாவது, இவ்விரு புலவர்களின் அபார தமிழாற்றலில் அவர் தன் மனதை பறிகொடுத்திருந்தார்.
வண்ணக்களஞ்சியப் புலவரின் பெருமையை நாம் பேசுகையில் அறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்று என் ஞாபகத்திற்கு வருகின்றது.
இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது வண்ணக்களஞ்சியப் புலவரின் பெயரையும் இணைத்து நினைவுத்தூண் அமைக்க இஸ்லாமியப் பெரியோர்கள் ஒன்றுகூடி சேர்ந்து எடுத்த முயற்சி பலனற்றுப் போனது.
1967-ல் அண்ணா அவர்களின் தலைமையில் திமுக ஆட்சி பீடம் ஏறியபிறகு, 1968-ஆம் ஆண்டு சென்னை மாநகரில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் புகழ்ப்பெற்ற தமிழ்ப் புலவர்கள் யாவருக்கும் சிலைகள் எழுப்ப முடிவானது.
கே.பி. செய்குத்தம்பி முதலான இஸ்லாமியப் பெரியோர்களெல்லாம் ஒன்று கூடி மேயர் ஹபீபுல்லா தலைமையில், வெளியூரில் இருந்த அறிஞர் அண்ணாவைச் சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தனர். இஸ்லாத்தில் சிலை வைக்க அனுமதி இல்லாததால் உமறுப்புலவர், புலவர் நாயகம், வண்ணக்களஞ்சியப் புலவர் போன்ற புலவர் பெருமக்களின் பெயர்களையும் அவர்களைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளைப் பொறித்து நினைவுத்தூண் ஒன்றை நிறுவலாம் என்ற ஆலோசனையை முன்வைத்தனர். அதற்கானச் செலவுகளை இஸ்லாமியச் சமுதாயமே ஏற்றுக் கொள்ளும் என்ற தீர்மானத்தையும் தந்தனர்.
இதனைச் செவிமடுத்த அறிஞர் அண்ணா அவர்களோ மனமுவந்து “சென்னைக்குச் சென்று நாவலர் நெடுஞ்செழியனிடம் பேசுங்கள். அவர் இதற்கான ஏற்பாட்டைச் செய்வார்” என்று அறிவுறுத்தினார். நாவலரைச் சந்தித்து, கோரிக்கையை முன்வைத்த போது, “இதை நான் அனுமதிக்கவே மாட்டேன். மெரினாவை சமாதி கட்டும் கல்லறையாக மாற்ற நான் ஒருக்காலும் உடன்பட மாட்டேன்!” என்று முகத்தில் அறைந்தார் போல் பதில் சொல்லி அனுப்பிவிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், அப்படிச் சொன்ன நாவலரே அதற்கடுத்த ஆண்டில் (அவர் தற்காலிக முதலமைச்சராக இருக்கும்போது) ஒரு சமாதியையும், மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே பகுதியில் மற்றொரு சமாதியையும் அமைக்க அவர் கையாலேயே உத்தரவு பிறப்பிக்கும் படியும் ஆயிற்று.
வண்ணக்களஞ்சியப் புலவருக்கு மற்ற பெரும் புலவர்களுக்கு கிடைத்த பேறினைப் போன்று உரிய அங்கீகாரத்தை தமிழ்க்கூறும் நல்லுலகம் அவருக்கு வழங்கவில்லை என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை.
மகத்தான ஆற்றல்கள் பல பெற்றிருந்த பேரரசரான சுலைமான் நபியைப் பற்றிய வண்ணக் களஞ்சியப் புலவர் எழுதிய “இராஜநாயகம்” என்ற வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் திறனாய்வு நூல்தான் நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்கள் எழுதிய “இனிக்கும் இராஜநாயகம்” என்ற நூல். இது ஓர் அருமையான ஆய்வுக்கோவை. ஆழ்ந்த சிந்தனையோடு அதில் காணும் இலக்கிய ரசனையை சிலாகித்து எழுதியிருப்பார். அதில் காணும் கற்பனை வளமும், கன்னித்தமிழ்ச் சுவையும், கவிநடையும் சிந்தையள்ளும் அற்புதம்.
நீதிபதி மு,மு.இஸ்மாயீல் அவர்கள் எழுதிய “இனிக்கும் இராஜ நாயகம்” நூலை ஏ.வி.எம்.ஜாபர்தீன் – நூர்ஜஹான் அறக்கட்டளை வாயிலாக பதிப்பித்து ஆவணப்படுத்திய பெருமை தொழிலதிபரும் தமிழார்வலருமான மதிபிற்குரிய ஏ.வி.எம்.ஜாபர்தீன் அவர்களைச் சாரும்.

நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்கு நினைவு பரிசை வழங்குகிறார் ஏ.வி.எம்.ஜாபர்தீன். அருகில் நிற்பவர்கள் எழுத்தாளர் ஹசன், பேராசிரியர் சே.மு.மு.
இராஜநாயகம் காப்பியத்தில் எறும்புகளுக்கும் சுலைமான் நபிக்கும் உள்ள தொடர்பினை ஆராய்வோம் என கடந்த அத்தியாயத்தில் நான் கூறி இருந்தேன். இத்தருணத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் கனிவான வரிகள் நம் மனக்கண்முன் வந்து நிழலாடுகின்றன.
எறும்புகள் பேசுமா? ஆம் பேசும். எறும்புகளுக்கென்று மொழி ஏதேனும் உண்டா? ஆம் உண்டு. எறும்புகள் தங்களுக்குள் கருத்து பரிமாற்றம் செய்துக் கொள்கின்றனவா? ஆம் செய்கின்றன. இது ஒன்றும் வெறும் கற்பனை அல்ல, இன்றைய உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் வெளியாகியிருக்கும் உண்மை இது.
எறும்புகளே! எறும்புகளே!!
உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே1
பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே!உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே!
உங்களோடு பேசவேண்டும்
சிறிதுநேரம் செவி சாய்ப்பீரா?நின்று பேசி நேரம் கழிக்க
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை
எது கேட்பதாயினும்
எம்மோடு ஊர்ந்து வாரும்ஒரு செண்டி மீட்டரில்
ஊற்றி வைத்த உலகமே!
அற்ப உயிரென்று
அவலப் பட்டதுண்டா?பேதை மனிதரே!
மில்லிமீட்டர் அளவிலும்
எம்மினத்தில் உயிருண்டு
தன் எடைபோல ஐம்பது
மடங்கு எறும்பு சுமக்கும்
நீர் சுமப்பீரா?உங்கள் பொழுது போக்கு?
வாழ்வே பொழுது போக்கு
தேடலே விளையாட்டு
ஊர்தலே ஓய்வுஆறுமுதல் பத்து வாரம்
ஆயுள் கொண்ட வாழ்வு
இதில் ஓய்வென்ன ஓய்வு
தலை சாய்வென்ன – சாய்வுஇந்த ஆயுளுக்கா
இத்தனை பாடு?உம்மைப் போல் எமக்கு
ஒற்றை வயிறல்ல
இரட்டை வயிறு
நெரிக்க ஒன்று
சேமிக்க ஒன்றுசெரிக்கும் வயிறு எமக்கு
சேமிக்கும் வயிறு
இன்னோர் எறும்புக்கு
இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு.இனப் பெருமை பற்றிச்
சிறு குறிப்பு வரைக!சிந்து சமவெளிக்கு முற்பட்டது
எங்கள் பொந்து நாகரிகம்ராணிக்கென்று அந்தப்புரம்
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை
இறந்த எறும்பை அடக்கம் செய்ய
இடிபாடில்லாத இடுகாடுமாரிகால சேமிப்புக் கிடங்கு
எல்லாம் அமைந்தது எங்கள்
ராஜாங்கம்எங்கள் வாழ்க்கையின்
நீளமான நகல்கள்தான் நீங்கள்!உங்களையே நீங்கள்
வியந்து கொள்வது எப்போது?மயிலிறகால் அடித்தாலே
மாய்ந்துவிடும் எங்கள் ஜாதி
மதயானைக்குள் புகுந்து
மாய்த்துவிடும்போது.நீங்கள் வெறுப்பது எது?
நேசிப்பது எது?வெறுப்பது வாசல் தெளிக்கையிலே
வந்து விழும் கடல்களை
நேசிப்பது அரிசிமா
கோலமிடும் அண்ணபூரணிகளைசேமிக்கும் தானியங்கள்
முளை கொண்டால் எது செய்வீர்?கவரும்போதே தானியங்களுக்கு
கருத்தடை செய்து விடுகிறோம்
முளை களைந்த மணிகள்
முளைப்பதில்லை மனிதா!உங்களால் மறக்க முடியாதது?
உங்கள் அகிம்சைப் போராட்ட
ஊர்வலத்தில் எங்கள் நான்காயிரம்
முன்னோர்கள் நசுங்கிச் செத்தது.எதிர்வரும் எறும்புகளை
மூக்கோடு மூக்குரசும் காரணம்?எங்கள் காலணி எறும்புதானா
வென மோப்பம் பிடிக்கும் முயற்சி
எம்மவர் என்றால் வழி விடுவோம்
அந்நியர் என்றால் தலையிடுவோம்சிறிய மூர்த்திகளே
உங்கள் பெரிய கீர்த்தி எது?அமேசான் காட்டு ராணுவ
எறும்புகள் யானை வழியில்
இறந்து கிடந்தால் முழு
யானையைத் தின்றே முன்னேறும்
மறவாதீர் எறும்புகளின்
வயிறுகள் யானைகளின்
கல்லறைகள்.சாத்வீகம்தானே உங்கள்
வாழ்க்கை முறை?இல்லை எங்களுக்குள்ளும்
வழிப்பறி உண்டு
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டுஅபாயம் அறிவிக்க
சத்தம் எழுப்பி
சைகை செய்வதுண்டுஎறும்புகளின் சத்தமா?
இதுவரை கேட்டதில்லையே!மனிதர்கள் செவிடாயிருந்தால்
எறும்புகள்
என்ன செய்யும்?நன்றி எறும்பே நன்றி!
நாங்கள் சொல்ல வேண்டும்
நன்றி உமக்கு
ஏன்? எதற்கு?“காணாத காமதேனுவைப் பற்றி..
இல்லாத ஆதிசேஷன் பற்றி..
பொய்யில் நனைந்த புராணம்
வளர்க்கும் நீங்கள்
இருக்கும் எங்களைப் பற்றி
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே
அதற்கு!”
என வினாக்கணைகளால் எறும்புகளைத் துருவும் கவிஞர் வைரமுத்துவின் கருத்தாழமுள்ள கவிதைத்துளிகள் நம் ஆய்வுக்கு மெருகூட்டுகின்றது. எறும்புகளோடு உரையாட நேர்ந்தால், எப்படியெல்லாம் அவர் கேள்விகளால் வேள்விகள் நிகழ்த்தி இருப்பார் என்ற கவிஞரின் கற்பனை ரசிக்கத்தக்கதாய் இருந்தது. இதனை வாசிக்கையில் நாமும் எறும்புகளின் வாழ்வுநெறியின் அதிசயங்களில் முழுவதுமாய் மூழ்கி மூச்சற்று போகிறோம்.
உண்மையிலேயே பிற உயிரினங்களோடு உரையாடக்கூடிய உன்னத சக்தியை உலகாளும் இறைவன் நமக்கு அளித்திருப்பானேயானால் நம் வாழ்க்கைமுறை எவ்வளவு சுவராஸ்யமாக இருந்திருக்கும்? நினைத்தாலே கற்கண்டாய் இனிக்கிறது. நெஞ்சம் குளிர்கிறது.
கவிஞர் வைரமுத்து வண்ணக்களஞ்சியப் புலவரின் காப்பியத்தை கற்றறிந்திருப்பாரோ? அல்லது நம் நீதிபதி அவர்களின் “இனிக்கும் இராஜநாயகம்” என்ற நூலை படித்திருப்பாரோ? அல்லது திருக்குர்ஆனிலும், பைபிளிலும் சொல்லப்படும் இச்சங்கதிகளை எங்காவது செவியுற்றிருப்பாரோ? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. பொதுஅறிவும், நூலறிவும் இல்லாதவன் நிச்சயமாக வாகைசூடும் கவிஞனாக ஆக முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. கவிஞர் வைரமுத்து அதற்கோர் நல்லுதாரணம்.
இன்று நம் கண்முன்னே நடக்கும் இன அழிப்புகளையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கல்மனது படைத்தவனாக மனிதன் இருந்திருப்பானா? அனைத்து ஜீவராசிகளையும் கருணைக் கண்கொண்டு பார்க்கும் ‘கல்பி’னனாக அல்லவா அவன் மாறியிருப்பான். சிற்றுயிர்களின் வேதனைகளையும், கஷ்டங்களையும் கூட புரிந்துக் கொள்ளும் பக்குவத்தை அடைந்துவிடும் அவன் எவ்வளவு இளகிய மனம் படைத்தவனாக உருமாறி இருப்பான்? படுகொலை பாதகங்கள் கடுகளவேனும் நடக்குமா என்ன? இந்த புவனமே சுவனமாக அல்லவா மாறியிருக்கும்?
எல்லாம் வல்ல ஆற்றல் மிக்க இறைவன் அந்த பாக்கியத்தை அவனது உயரிய படைப்பான மனிதனுக்கு ஈந்து அருள்பாலித்திருக்க முடியும். ஏன் இச்சிற்றுயிர்களின் மொழிகளை இறைவன் ஆறறிவு படைத்த மனிதர்களான நமக்கு கற்றுத் தரவில்லை? அது அவன் மட்டுமே அறிந்த இரகசியம்..
அப்படிப்பட்ட ஓர் அற்புத ஆற்றலை இறைவன் சுலைமான் நபி (King Solomon) அவர்களுக்களித்து அருள் புரிந்திருக்கின்றான். ஆம். ஊர்வன, பறப்பன இவைகளின் பரிபாஷைகளை புரிந்துக் கொள்ளும் அபூர்வசக்தி அவர்களுக்கு இருந்தது. அதுமட்டுமன்றி காற்றையும், ஜின்களையும் அவர்களுக்கு இறைவன் வசப்படுத்திக் கொடுத்திருந்தான்.
“பின்னர், சுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும். (அல்குர்ஆன்: 27:16)
இதோ மீண்டும் எறும்புகள் கதை கூறும் “இராஜநாயகம்” காப்பியத்திற்கு வருவோம். திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் இந்த வாசகத்தை கூர்ந்து கவனியுங்கள்.
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)” என்று கூறிற்று. ( குர்ஆன் 27:18)
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, சுலைமான் நபி அவர்கள் புன்னகைத்து புரிந்தார்கள். மேலும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
எறும்புகள் ஒன்றொடொன்று பேசிக்கொள்கின்றன. தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்கின்றன. உண்மையில் இதுவெல்லாம் சாத்தியமா என்றெல்லாம் ஐயம் நமக்குள் எழலாம்.
எறும்புகளின் வாழ்க்கைமுறையை ஆராய்ச்சி செய்வதற்குப் பெயர் எறும்பியல் (Myrmecology) என்பது. ஆகஸ்டே ஃபோரெல், வில்லியம் மார்ட்டன் வீலர், ஈ.ஓ.வில்சன் போன்ற எறும்பியல் நிபுணர்கள் அதிசயத்தக்க ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளனர். “One of the most unusual things about ants is their ability to communicate. Signaling each other with distinctive hormones” என்று அவர் கூறுகிறார்.
சுலைமான் நபி (அலை) அவர்களுடைய படைகள் தங்களை மிதித்து விடக்கூடும் என்று எறும்புகள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டதாகக் கூறும் குர்ஆன் வசனங்களை பார்த்து, ‘எறும்புகள் எவ்வாறு பேசிக்கொள்ளும்?’ என கேலி செய்தவர்கள் தங்கள் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்படும் அளவுக்கு எறும்புகளின் குணாதிசயங்கள் மனித சமுதாயத்தின் குணாதிசயங்களோடு ஒத்திருக்கின்றன. இதனை இன்றைய ஆராய்ச்சிகளும் உறுதிபடுத்தி இருக்கின்றன.
சுலைமான் நபியும் அவரது படையினரும் வருவதை எறும்புகள் அறிந்து கொண்டன. பெரிய படைகள் படைகளுக்கே உரிய அதிர்வுகளை எழுப்பித்தான் நடைபோடுவார்கள். அவர்களுடன் உள்ள யானை மற்றும் குதிரைப்படைகளாலும் நிலத்தில் மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படும். இப்படி நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வுகளையும் அந்த அதிர்வுகள் எந்தத் திசை நோக்கி நகர்கின்றது என்பதையும் மிக விரைவாக அறிந்து கொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு என்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு எறும்புகளுக்கு இது சாத்தியம் என்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கின்றது.
தித்திக்கும் திருமறையில் 27-வது அத்தியாயமாக ‘சூரத்துந் நம்லி’ [எறும்புகள்] எனும் ஓர் அத்தியாயத்தையே இறைவன் உருவாக்கியுள்ளான்.
பூமியில் இருக்கும் அத்தனை படைப்புகளும் நம்மை போன்ற சமூகமாக வாழ்வதாக திருமறை சொல்கிறது. திருக்குர்ஆனில் எறும்புகளின் வாழ்க்கைமுறை அழகான ரீதியில் சித்தரிக்கப்படுகிறது. பறவைகளும் விலங்கினங்களும் மனிதர்களைப் போன்ற சமுதாயங்களே என்று தெளிவாக்கப்படுள்ளது.
அதைத்தான் இன்றய நவீன விஞ்ஞானமும் பறைசாற்றுகின்றது. மனித சமுதாயத்தைப் போலவே எறும்புகளுக்கும் மன்னர், அமைச்சர், இராணுவ வீரர்கள், பணியாட்கள், அடிமைகள் இருப்பதாக அந்த ஆய்வுகள் தெளிவு படுத்துகின்றன. அவைகள் தங்களுக்குள் உணவு பண்டங்களை பண்டமாற்றம் செய்வதற்கென சந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
எறும்புகள் மிகுந்த அறிவும் சிறந்த பண்பும் அதிசயிக்கத்தக்க குணாதிசயமும் கொண்டவை. அதன் ஆற்றல் ஒவ்வொன்றையும் படிக்கும்போது ஆச்சரியத்தில் நாம் மூழ்கிப் போகிறோம். உதாரணமாக, பூமியதிர்ச்சி ஏற்படப் போவதை எறும்புகள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் இயல்புடைய உயிரினம் என ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக உயிர் அறிவியல் துறை ஆய்வாளர் கேப்ரியல் பார்பெரிக் தலைமையிலான குழுவொன்று நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலைக்கு திரும்பி விடுகின்றன. பூகம்ப நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக, எறும்புகள் வெளியேறுகின்றனநிரூபித்துள்ளது.
எறும்புகள், புவி வெப்பமயமாதலை தடுத்து, புவியை குளிர வைப்பதாக அமெரிக்காவில் அரிசோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எறும்புகள், மண்ணில் உள்ள கால்சியம், மக்னீசியம் சார்ந்த மணற்சத்துகளை சிதைக்கின்றன. இதனால், காற்றில் கலந்துள்ள கார்பன் டைஆக்சைடு படிப்படியாக குறைகிறது. இதன்மூலம், புவி வெப்பமயமாதல் குறைந்து, புவி குளிரும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
எறும்புகள் தங்களின் உடல் எடையைவிட ஏழு மடங்கு அதிக எடையை தூக்கவல்லது. இரையைச் சுமக்கும் போதும் இதே முறையைத்தான் எறும்புகள் கையாளுகின்றன. இதுதொடர்பாக, ஆய்வாளர்கள் கூறுகையில், எறும்பு களின் கழுத்து இணைப்பின் மூலம் மிக எளிதாக தனது சுமைகளை கோணம் மாற்றி வைத்துக் கொண்டு எளிதாக பயணம் செய்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.
தாவூத் நபிவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது தனது மகன் சுலைமான் நபியவர்களை அழைத்து நற்போதனைகள் வழங்குகிறார்கள். தேனினும் இனிய தீந்தமிழ்ப் பாக்களில் இந்த அறிவுரைகளை அருந்தமிழில் அமுதவாக்காய் அள்ளிப் பருகிட தருகிறார் வண்ணக்களஞ்சியப் புலவர்.
“பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டுவிடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும்” (அல்குர்ஆன்: 6:38).
1400 ஆண்டுகட்கு முன்னரே அறிவியல் அறிந்திராத விடயங்கள அலசி ஆராயும் திருக்குர்ஆன் மனிதனால் இயற்றப்பட்டதல்ல. அது இறைவனின் வேதம் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேறென்ன வேண்டும்?
இராஜ நாயகம் நூலில் இடம்பெற்றிருக்கும் கவிச்சுவையை நாம் அடுத்த பதிவில் (இனிக்கும் இராஜ நாயகம் -பாகம் 3)-ல் அலசுவோம்.
– தொடரும்
கம்பன் அவன் காதலன் – 9-ஆம் பாகம்
கம்பன் அவன் காதலன் – 8-ஆம் பாகம்
கம்பன் அவன் காதலன் – 6-ஆம் பாகம்
கம்பன் அவன் காதலன் – 5-ஆம் பாகம்
கம்பன் அவன் காதலன் – 4-ஆம் பாகம்
கம்பன் அவன் காதலன் – 3-ஆம் பாகம்
கம்பன் அவன் காதலன் – 2-ஆம் பாகம்
கம்பன் அவன் காதலன் – 1-ஆம் பாகம்
டாக்டர் சுதா சேஷய்யன் பார்வையில்