RSS

Tag Archives: by Abdul Qaiyum

நான் மரணிக்கிறேன்….


death

 

நான் மரணிக்கிறேன்….

கைகளை அசைக்க எத்தனிக்கிறேன்
கால்களை நகர்த்த முயற்சிக்கிறேன்

இத்தனைக் காலம் …
என்னோடு பழகிய உறுப்புக்கள்
என் பேச்சையே செவிமடுக்க
ஏன் மறுக்கின்றன..?

வாய்கிழிய பேசும் எனக்கு
வார்த்தைகளே வெளிவர மாட்டேன்கிறதே?

யாரங்கே..?
காரிருளை என் கண்களுக்குள்
களமிறக்குவது யார்?

திறந்துமூடும் என் இமைகளை
திணறடிப்பது யார் வேலை?

நாடித் துடிப்புகளை
நாசுக்காய் குறைப்பது யார்?

பழகிப்போன மூச்சுகூட
பழுதாகிப் போகின்றதே!

உள்ளங்காலில் தொடங்கும் கடுப்பு
ஒவ்வொரு அங்குலமாய்
உச்சந்தலைவரை ஏறுகிறதே..!

நினைவுவந்த நாள் முதலாய்
எனக்கும் என் உடம்புக்குமிருந்த
இறுக்கமான அன்னியோன்யத்தை
யார் பிரித்துப் பார்ப்பது ?

எதோ ஒரு இழுபறி
எனக்குள் நடப்பது
எனக்கே புரிகின்றது!

போதும் போதும்…
யாராவது நிறுத்துங்களேன்!!

இப்படியொரு வேதனையை
இதுவரையில் நான்
எதிர்கொண்டதே இல்லையே..?

வீறாப்பாய் விறைத்தும் முறைத்தும்
வெட்டி கெளரவம் பார்த்த என்தேகம்
விரைவாய் விறைக்கின்றதே?

மணக்க மணக்க
திரவியம்பூசும் என்மேனி
கனத்துப்போய் நாறுமோ இனி?

“மரணத்தை தழுவினான்”
என்று எழுதுகிறார்களே!
தழுவுவது சுகமல்லவா? – இது
தண்டனை போலல்லவா இருக்கிறது.?

ஊசி முனை ஓட்டையில்
ஒட்டகத்தை இழுப்பது
இலகுவான காரியமா என்ன..??

அப்துல் கையூம்

(பி.கு.: இக்கவிதை யாருடைய மனதிலாவது மரணபயத்தை உண்டாக்கி அவர்களை நல்வழிப்படுத்தாதா என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டது)

 

 

Tags:

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 15


FotorCreated

ராஜ ராஜன்…….

“வெரை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்?” என்பார்கள். வலுவான அஸ்திவாரத்துடன் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் கதை-வசனகர்த்தா ரவீந்தர்.

வடிவேலு ஒரு படத்தில் “பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்” என்பார்.   ரவீந்தரைப் பொறுத்தவரை அவரது பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங்காக இருந்தது. அதனால் பில்டிங்கும் ஸ்ட்ராங்காக இருந்தது.

“நேற்று  பெய்த மழையில் இன்று பூத்த காளானாய்” அதிர்ஷ்டக் காற்றடித்து களம் புகுந்தவரல்ல ரவீந்தர். சரியான குருவிடம், முறையான பயிற்சி பெற்று, வசனக்கலையில் வளமான தேர்ச்சி பெற்றவர்

யார் அந்த ரவீந்தரின் குரு? அறிஞர் அண்ணாவா? கலைஞர் மு,கருணாநிதியா.? யார் அவர்?

திரைப்படத்துறையில் ரவீந்தருக்கு குருவாக வாய்த்த அந்த மனித சாதாரண மனிதரல்ல. “வசனகர்த்தாக்களின் பிதாமகன்” என்றழைக்க தகுதி படைத்தவர்.

வெறும் பாடல்களின் தொகுப்பாக இருந்த தமிழ்ப்படங்களுக்கு வசன மழை பொழிவித்த வசீகர படைப்பாளி.

செந்தமிழ் இலக்கியத்தை திரையுலகில் திறம்பட புகுத்திய சீர்த்திருத்தவாதி.

கம்பன் மகன் “அம்பிகாவதி” துன்பவியல் கதைக்கு கன்னித்தமிழல் உரையாடல் எழுதிய கலைஞானி..

ஐம்பெரும் தமிழிலக்கியங்களையும் ஐயமறக் கற்று திரைவானில் வார்த்தை விளையாட்டு ஆடிய வசனவேந்தன். அதனால்தான் சிலப்பதிகாரத்தையும், குண்டலகேசியையும் அதன் சுவை சற்றும் குன்றாது அவரால் வெள்ளித்திரையில் வார்த்தெடுக்க முடிந்தது.

அவர் பெயர் இளங்கோவன். ரவீந்தரைப் போன்று சினிமா உலகம் மறந்துபோன முன்னோடிகளில் அவரும் ஒருவர். செங்கல்பட்டு இவரது சொந்த ஊர்.

Ilangovan

இளங்கோவன் இளமையிலும் முதுமையிலும்

“படைப்பாற்றலால் தமிழ்மொழிக்குப் பங்காற்றியவர்களுள் திரைப்படத் துறையில் எனக்குப் பிடித்த ஒரே எழுத்தாளர் இளங்கோவன்தான்”

என்று “தனது கலையுலக அனுபவங்கள்’ தொடரில்  எழுத்துலக மேதை ஜெயகாந்தன் இவரைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.

சிலப்பதிகாரம் காவியம் வடித்த இளங்கோவடிகள் மீது கொண்ட அதீத காதலால் தணிகாசலம் என்ற தன் பெயரை இளங்கோவன் என்று மாற்றிக்கொண்டவர்.

“பூம்புகார்” வடித்த கலைஞர் மு.கருணாநிதியை இன்று நாம் சிலாகித்துப் பேசுகிறோம். கலைஞரின் எழுத்துக்கு உந்துதலாகவும், முன்மாதிரியாகவும் இருந்தவர் இளங்கோவன். இதைக் கலைஞரே ஒருமுறை பிரகடனப்படுத்தியுள்ளார்.

1942-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் சோமுவும் , மொகிதீனும் “ஜுபிடர் பிக்சர்ஸ்” பெயரில் தயாரித்து வெளியிட்ட “கண்ணகி” படத்திற்கு வீர வசனம் எழுதியது இளங்கோவன்தான். இந்தப் படத்தில், கண்ணகியாகவே மாறிவிட்டிருந்தார் கண்ணாம்பா. திரையரங்கில்  ஒவ்வொரு வசன முடிவிலும் கரகோஷம் வானைப் பிளந்தது.

மெளனப் படங்கள், பேசும் படங்களாக பரிணாமம் பெற்ற போது பெரும்பாலும் புராணப் படங்களாகவே தயாரிக்கப்பட்டன. அதில் பாடல்கள்தான் நிறைந்திருக்கும். குறைந்த பட்சம் இருபத்தைந்து பாடல்களாவது இடம்பெற்றுவிடும். இளங்கோவனின் வருகைக்குப்பிறகுதான் வசனங்கள் மகத்துவம் பெற்றன. வசனகர்த்தாக்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப்பெற்றது.

இலக்கியத்தில் பெரும் பாண்டித்தியம் பெற்றிருந்த இளங்கோவனிடம் உதவியாளராக பணியாற்றியபோது ரவீந்தர் கற்றுக் கொண்டது ஏராளம்; ஏராளம். இளங்கோவனின் கைவண்ணத்தில் அனல் தெறிக்கும். அடுக்குமொழி வசனங்கள் அரங்கத்தை அதிர வைக்கும். உதவியாளராக இருந்த ரவீந்தரிடமும் அதன் பாதிப்பு வெளிப்பட்டது. பசுந்தமிழில் பக்குவம் பெற இளங்கோவனின் பாசறை அவருக்கு பெரிதும் வழிவகுத்தது. தமிழ்மொழியில் தனித்துவம் கண்ட தணிகாசலத்தின் குருகுலத்தில் ரவீந்தர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார்.

தமிழில் எந்த அளவுக்கு புலமை பெற்றிருந்தாரோ அதே அளவு ஆங்கிலத்திலும் இளங்கோவன் புலமை வாய்ந்தவர். ஷேக்ஸ்பியரின் “ரோமியோ ஜூலியட்”  காவியத்தின் சுவையை பருகிய அவர் அதே பாணியில் காதல் ரசம் சொட்டும் வசனங்களை “அம்பிகாவதி”யில் வடித்திருந்தார்.

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” என்பார்கள். வசனகர்த்தாக்களின் பிதாமகனாக விளங்கிய இளங்கோவனிடம் “ராஜ ராஜன்” படத்தில் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் ரவீந்தரின் எழுத்துக்களுக்கு உரமூட்டியது. புடம்போட்ட தங்கமாய் அவரது எழுத்தாற்றல் இன்னும் பெருகேறியது..

1958-ல் வெளிவந்த “நாடோடி மன்னன்” திரைப்படம்தான் ரவீந்தர் பெயரை முதன்முதலாக வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியது என்று பலரும் எழுதுகிறார்கள். அது உண்மையல்ல. அதற்கு ஓராண்டுக்கு முன்பே “ராஜ ராஜன்” (1957) படத்தில் ரவீந்தருடைய பெயர் பட டைட்டிலில் காட்டப்பட்டது.

rajarajan collage

எம்.ஜி.ஆரின் மேடை நாடகங்களுக்கு கதை-வசனம் எழுதிக் கொண்டிருந்த ரவீந்தர் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய முதற்படம் “குலேபகவாலி” (1956). “இந்தப் படத்துலே நான்தாங்கனி புலி கூட சண்டை போடுற காட்சியிலே எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு நடிச்சேன்” என்று பெருமையாக எங்க ஊரு சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் நாகூர் எஸ்..பரீது பெருமையாகச் சொல்வதை செவியுற்றிருக்கிறேன். “குலேபகவாலி” படத்தில் அப்பொழுது பிரபலமாக இருந்த தஞ்சை ராமையாஸ் பெயர்தான் காட்டப்பட்டது.

அதன்பிறகு ரவீந்தர் வசனம் எழுதிய “மகாதேவி” (1957) படத்திலும் திரைக்கதை வசனம் : கண்ணதாசன் என்று காட்டப்பட்டது.

“ராஜராஜன்” திரைப்படம் வெகு நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆர், பத்மினி, லலிதா, எஸ்.சி.சுப்புலக்ஷ்மி, ஜி.சகுந்தலா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார்  எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் நடித்திருந்தனர்.

“ராஜ ராஜன்” படத்தில் கே.வி.மஹாதேவன் இசையில் உருவான அத்தனைப் பாடல்களும் முத்தான பாடல்கள்.

எழுபதுகளில் சிலோன் ரேடியோவைத் திறந்தாலே இந்தப் பாடல்தான் அடிக்கடி ஒலிக்கும்.

“நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே”

“யமன் கல்யாணி” ராகத்தில் இசையமைக்கப்பட்டு, சீர்காழி கோவிந்தர்ராஜனும்  ஏ.பி.கோமளாவும் பாடிய காலத்தால் அழியாத இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதே படம் பின்னர் 1963-ஆம் ஆண்டு “ராஜாதி ராஜூ கதா” என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்து தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது.

இளங்கோவனுக்கும் ரவீந்தருக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. திரையுலகில் சிறந்த வசனகர்த்தாக்களாக பெயர் பெற்றிருந்தும்கூட இருவரும் இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியில் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.

இருவரும் தமிழ்த் திரையுலகிற்கு தங்கள் திறமையினால் அபார பங்களிப்பை வழங்கியவர்கள். இருவரும் தமிழக அரசின் “கலைமாமணி” பட்டம் பெற்றவர்கள்.

இருவரும் திரையுலகம் மறந்துப்போன  முன்னோடிகள். ஊடகங்களால் கண்டும் காணாமலும் நிராகரிக்கப்பட்டவர்கள்

பிறமொழி நாவல்களை இறக்குமதி செய்து, தமிழ்மொழிக்கு ஏற்றவாறு வசனங்களை மாற்றியமைத்து இருவரும் திரையுலகிற்கு புதுமை சேர்த்தார்கள்.

Victor Hugo எழுதிய  “Les Mis’erables”  என்ற பிரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு 1950-ல் உருவாக்கப்பட்ட படம் “ஏழை படும் பாடு”  இளங்கோவனின் கைவண்ணத்தில் உருவான படம் இது.

அதேபோன்று Antony Hope எழுதிய “The Prisoner of Zenda” மற்றும்  Justin Huntly Mccarthy  எழுதிய  “If I were King” ஆங்கில நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “நாடோடி மன்னன்” ரவீந்தரின் வசனத்தில் உருவான படம்.

இருவரும் திராவிடக் கட்சி எழுத்தாளர்களின் அரசியல் பின்புல ஆளுமையினால் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள்.

–  அப்துல் கையூம்

– தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  9

எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11

எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 14

 

 

 

 

 

 

Tags: , , , ,

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் 14


Arasa kattalai poster

“அரச கட்டளை” படத்தில் ரவீந்தரின் பங்களிப்பு திட்டமிட்டு மறைக்கப்பட்டது என்பது மறுக்கப்படாத உண்மை.  வேண்டுமென்றே அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

பாடுபடுபவன் ஒருவன். புகழ் தேடிக் கொள்பவன் மற்றொருவன். மாடாய் உழைப்பவன் ஒருத்தன். மார்தட்டிக் கொள்பவன் இன்னொருத்தன். உடல் உழைப்பு செய்பவன் ஒருத்தன். மெடல் குத்திக் கொள்பவன் இன்னொருத்தன். மரம் வைத்தவன் ஒருவன். பலனை அனுபவித்தவன் வேறொருவன். “அரச கட்டளை” படத்தில் இக்கூற்று ரவீந்தருக்கு நன்கு பொருந்தும்.

“நாடோடி மன்னன்” படம் வெளிவந்தபோது ரவீந்தர் புதியவராக இருந்தார். அதனால் அவருடைய பெயர் கண்ணதாசன் பெயரோடு இணைத்து காட்டப்பட்டது என்றார்கள். போகட்டும் என்று விட்டு விடலாம்.

10690323_787541447950751_1365779854726549063_n

ஆனால் “அரச கட்டளை” படம் வெளிவந்தபோது ரவீந்தர் எத்தனையோ படங்களுக்கு கதாசிரியராக, வசனகர்த்தாவாக பணியாற்றி அனுபவ முதிர்ச்சி பெற்றிருந்தார். அப்படியிருந்தும் அவர் பெயரை இருட்டடிப்புச் செய்தார்கள்.

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவரவிருந்த “சிரிக்கும் சிலை” என்ற படத்தில் கூட இதே நிலைமைதான் ரவீந்தருக்கு ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்தப்படம் வெளிவரவில்லை. இரவு பகல் பாராது கண்துஞ்சாது கஷ்டப்பட்டு அந்தப் படத்திற்கு ரவீந்தர் கதை வசனம் எழுதினார். அந்தப் படம் ஓடவேண்டுமென்றால் நிச்சயமாக “Face Value” மிகுந்த பிரபலம் தேவை என்ற கண்ணோட்டத்தில்  “திரைக்கதை – வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரம் செய்யப்பட்டு ‘ஒப்புக்குச் சப்பாணியாக’ ரவீந்தர் பெயரையும் இணைத்துக் காண்பித்தார்கள்.

சிரிக்கும் சிலை

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராத “சிரிக்கும் சிலை” திரைப்படம்

அந்தக் கால கட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கு,  குறிப்பாக திராவிட இயக்க வசனகர்த்தாக்களுக்கு அதீத மவுசு கூடியிருந்தது.     கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதி பிரபலமடைந்த  மந்திரிகுமாரி (1950), பராசக்தி (1952), திரும்பிப்பார் (1953), மனோகரா (1954),  போன்ற படங்களுக்குப் பிறகு அரசியல் பின்னணி கொண்ட வசனகர்த்தாக்களுக்கு தனியொரு நட்சத்திர அந்தஸ்து ஏற்பட்டிருந்தது. ஏ,வி,பி,.ஆசைத்தம்பி முதற்கொண்டு முரசொலி சொர்ணம் உட்பட  திரைப்பட வசனகர்த்தாக்களாக மாறி இருந்தனர். முரசொலி மாறன் “மறக்க முடியுமா (1966)” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதானித்திருந்தார்.  அதற்கு முன்பே நல்லதம்பி (1949), வேலைக்காரி படத்தின் மூலம் சி.என்.அண்ணாத்துரை பிரபலமாகியிருந்த செய்தி அனைவரும் அறிவர்.

ரவீந்தர் ஏன்  தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டார்? எதற்காக அவருடைய திறமை மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை? என்ன காரணத்திற்காக அவர் ஒவ்வொரு படத்திலும் ஓரங்கட்டப்பட்டார்? ஏன் அவர் மீது மட்டும் இந்த ஓர வஞ்சனை?

அவர் அரசியல் பின்புலம் இல்லாத மனிதர் என்ற ஒரே காரணத்தினாலா? இந்தக் கேள்விக்கு இதுவரை பதிலில்லை.

உண்மையைக் கூற வேண்டுமென்றால் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரின் பெயர் முதற்கொண்டு அவரது கார் ஓட்டுனர் பெயர்வரை எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அனைத்தும் அத்துப்படியாக இருந்தது.

ஆனால் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவராக, எப்போதும் அவர் கூடவே இருந்த காஜா மெய்தீன் என்கின்ற ரவீந்தரின் பெயர் மட்டும் யாருக்குமே தெரியாது. ‘யாருக்குமே தெரியாது’ என்று சொல்வதை விட யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் நாட்டாமை செய்து வந்தவர்கள் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்தார்கள் என்று கூறுவதே சாலப்பொருத்தம்.

“யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை”

என தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனே கூறுகின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

அதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால், உலக நடப்புகளை விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ரூமி உட்பட ரவீந்தரின் மறைவுச் செய்தியை அறிந்து வைத்திருக்கவில்லை என்பது எதர்த்தமான உண்மை.

ரவீந்தர் உயிரோடிருந்த போதும். அவர் நோய் வாடப்பட்டு இருந்தபோதும், அவர் மறைந்தபோதும் கூட அனைத்து ஊடகங்களும் சினிமாத்துறையினரும் பாராமுகமாகவே இருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

“அரச கட்டளை” படத்தின்  ஸ்டில்கள் காண்பிக்கையில் அதன் திரைக்கதையை வடிவமைத்தது “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா” என்று காண்பிப்பார்கள்.

Arasa kattalai-1

அரச கட்டளை படத்தின் Screenshot

“எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்பதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. அதற்கும் கீழே R.M.வீரப்பன், வித்வான் வே.லட்சுமணன், S.K.T.சாமி என்று மூன்று பேர்களுடைய பெயர்களை மட்டும் காண்பித்து ரவீந்தரின் பெயரை இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

இப்பொழுது இயற்கையாகவே நம் மனதில் ஒரு கேள்வி பிறக்கிறது. “அரச கட்டளை” படத்தில் உண்மையிலேயே ரவீந்தரின் பங்களிப்புதான் என்ன?

ஆர்.எம்.வீ. ஒரு மாபெரிய கதாசிரியர், பிரமாண்டமான படத்தயாரிப்பாளர்,  சிறந்த நிர்வாகி, தமிழார்வலர், கம்பராமாயணச் சிற்பி என்பது போன்ற ஒரு மாயையை மக்கள் மத்தியில் அவரே உருவாக்கியிருந்தார். அவருடைய உண்மையான முகம் என்னவென்று சினிமா உலகில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாகவே தெரியும். எழுத்து நாகரிகம் கருதியும், சில பேருக்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணக்கூடாது என்று நல்லெண்ணத்தாலும் அவரது வஞ்சகச் சூழ்ச்சி அனைத்தையும் இங்கு என்னால் வடிக்க இயலவில்லை.

“அரச கட்டளை” படத்தின் கதை எப்படி பிறந்தது என்பதற்கு சின்னதாக ஒரு “FLASHBACK”  தேவைப்படுகின்றது. அதை ரவீந்தர் வாயிலாகவே அறிந்துக் கொள்வோம். இப்படத்தில் ரவீந்தரின் பங்கு என்ன என்பது அப்போது விளங்கும்.

1962 ம் ஆண்டு , தேர்தல் சமயம்.

தி மு க வினர் அன்றைய முதல்வர் காமராஜரை மிக மோசமாக, தரம் தாழ்ந்து விமர்சித்து வந்தக் காலக் கட்டம். ஆனால் மக்கள் திலகமோ காமராஜரை மரியாதைக் குறைவாக விமர்சிக்க மறுத்தார்.

MGR_With_Kamaraj

காமராஜரும் எம்.ஜி.ஆரும்

அப்பொழுது நடந்த நிகழ்வு …

தேர்தல் பிரசாரத்துக்காக போகிறோம். கும்மிடிப் பூண்டி ரயில் நிலையம் பிரதான சாலையில் ஒரு ரயில்வே கேட் அப்பொழுது பிரசித்தம் . மூடினால் சீக்கிரம் திறக்க மாட்டார்கள். சில துரித ரயில்கள் போனப் பின்னர் தான் திறப்பார்கள்.

அங்கு மக்கள் திலகத்தின் வண்டி நின்றது. அந்தக் காரின் எண் எல்லோருக்கும் தெரியும் .  கூட்டம் கூடிவிட்டது. மக்கள் திலகத்தின் காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்றுக் கொண்டிருந்தது. மக்கள் திலகம் அவரது உதவியாளர் சபாபதியிடம் சொல்கிறார் …

” அது யார் கார் ? காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, சபாபதி போய் பார்த்து வா… ”

சபாபதி போய் பார்த்து விட்டு வந்து “ஆமா அவுங்க தான்” என்று சொல்ல , உடனே மக்கள் திலகம் தன் காரை விட்டு இறங்கிப் போய் அவருக்கு வணக்கம் சொன்னார்.

காமராஜர் கீழே இறங்க எத்தனிக்க, மக்கள் திலகம் தடுத்து விட்டார் .

“இதென்ன தனியே செக்கியூரிட்டி இல்லையா? ” என்று கேட்டார் மக்கள் திலகம். அப்பொழுது காமராஜர் முதல்வர் .

“என்னை யார் என்ன செஞ்சிடப் போறாங்க எனக்கு பாடி கார்டு வைச்சுக்க ” என்றார் காமராஜர் .

இருவரும் கொஞ்ச நேரம் குசலம் விசாரித்தப் பின் வந்து அமர்ந்தார்கள்.  ரயில் போனதும் கார் புறப்பட்டது .

மக்கள் திலகம் என்னைப் பார்த்துச் சொன்னார் “ரவீந்திரன், அடுத்த படத்துக்கு , ஐடியா கிடைச்சிட்டது , நம்ம காமராஜர் ஐயா தான் ஹீரோ. ஒரு நாட்டுக்கு உண்மையான அரசன் யாருன்னா கத்தியில்லாம, தனக்கு சவால் இல்லாம யார் மக்கள் மத்தியிலே பவனி வருகிறானோ அவன் தான்.  இதை வச்சு கதை எழுதணும், நானல்ல டைரக்டர் என் அண்ணனை செய்யச் சொல்லப் போறேன் ” என்றார் …

அப்படி உருவானப் படம் தான் “அரசக் கட்டளை” .

இது ரவீந்தரே பொம்மை இதழில் எழுதியது. தான் ஏற்கனவே பலமுறை மாற்றியமைத்து எழுதிய “இணைந்த கைகள்” படத்தின் ஒரு சில பகுதியை மையமாக வைத்தும், எம்.ஜி.ஆர். சொன்ன குறிப்புகளை வைத்தும் ரவீந்தர் தீட்டிய திரைக்கதைதான் “அரச கட்டளை”.

இந்தக் காட்சியை இப்படி வைக்கலாம், அப்படி வைக்கலாம் என்று ஏதாவது ஆலோசனை கூறிவிட்டு, ரவீந்தரின் மூளையை கசக்கிப் பிழிய வைத்து விட்டு, கஷ்டப்படாமல் பெயரைத் தட்டிக் கொண்டு போவது ஆர்.எம்,வீரப்பனின் வழக்கமாக இருந்தது. திரைக்கதை என்று பெயர் போடுகையில் ஆர்.எம்.வீரப்பன் பெயர்தான் முதலாவதாக இடம்பெறும்.

கதை எழுதும் கலையையும், வசனம் எழுதும் கலையையும் கற்று வைத்திருந்த ரவீந்தர் ஒரே ஒரு கலையைக் கற்க தவறியாதால்தான் அவரால் முன்னுக்கு வர முடியாத நிலை.ஆம். ஜால்ரா அடிக்கும் கலை ரவீந்தருக்கு வரவேயில்லை.

AraSAKATTALAI 2

அரச கட்டளை படத்தின் SCREENSHOT

.சரி.. திரைக்கதையில்தான் ரவீந்தர் பெயர் இடம்பெறவில்லை. விழுந்து விழுந்து “அரச கட்டளை” படத்திற்கு வசனம் எழுதிய அவருடைய பெயர் “உரையாடல்” என்ற தலைப்பிலாவது காட்டப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. அதற்கும் அரசியல் செல்வாக்கு வேண்டுமே. முரசொலி சொர்ணத்தின் பெயர் காட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர். தனது அண்ணன் குடும்பத்திற்காக ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமென விரும்பினார். எம்.ஜி.ஆர்.  தனது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் பிள்ளைகள் எம்.சி.ராமமூர்த்தி மற்றும் மூத்த மகள் சத்யபாமா இவர்களுக்காக “சத்யராஜா பிக்சர்ஸ்” என்ற  பட நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க வைத்து தன் அண்ணனையே டைரக்ட் செய்ய வைத்த படம்தான் “அரசகட்டளை”.

சத்யபாமா

தன் அண்ணன் மகள் சத்யபாமாவுடன் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி. ஆருடன் ஜெயலலிதாவும், சரோஜாதேவியும், சந்திரகாந்தாவும், “அரச கட்டளை” படத்தில் நடித்திருந்தனர்.

எம்.ஜி.ஆர். சுடப்பட்டபோது, தயாரிப்பில் இருந்த படங்கள் இரண்டு. ஒன்று சத்யராஜா பிக்சர்ஸ் “அரச கட்டளை”. மற்றொன்று சத்யா மூவிஸ் “காவல்காரன்” ஆகியவை.

படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில்  “எடிட்டிங்”, “ரீ ரிக்கார்டிங்” போன்ற ஒரு சில வேலைகளே மிச்சமிருந்தது.  அந்தப் பணிகள் முடிந்து படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது,.

இப்படத்தில் வாலி, முத்துகூத்தன் மற்றும் ஆலங்குடி சோமு எழுதிய பாடல்கள் அமர்க்களமாக இருந்தன. இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக கவிஞர் வாலி அவர்கள்

“ஆண்டவன் கட்டளைக்கு முன்னாலே – உன்

அரசகட்டளை  என்னாகும்”

என்ற பல்லவியை எழுதிக்கொடுக்க முகம் சிவந்த எம்.ஜி.ஆர்.  வாலியை கடிந்துக் கொண்டார். காரணம் “ஆண்டவன் கட்டளை” சிவாஜி நடித்த படம். “அரச கட்டளை” அச்சமயம் தயாரிப்பில் இருந்த எம்.ஜி.ஆர். படம்.   எம்.ஜி.ஆர். இதனை சுட்டிக்காட்டிய போது வாலிக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது. இப்படியொரு பொருள்படும் என்ற கோணத்தில் அவர் சிந்திக்கவேயில்லை. இப்பாடல் வரிகளில் திருப்தி அடையாத எம்.ஜி.ஆர். கவிஞர் முத்துக்கூத்தனை வைத்து வேறொரு பாடலை எழுத வைத்தார்.

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை”  – என்று தொகையறாவாகத் தொடங்கி “ஆடி வா ! ஆடி வா! ஆடி வா!  ….. ஆளப் பிறந்தவனே! ஆடிவா!” என்ற பாடல்தான் அந்த மாற்றுப் பாடல்.

இந்த சம்பவத்தைச் சொன்னவர் ரவீந்தர். இதை உறுதிப்படுத்தும் வகையில் இதே சம்பவத்தை கவிஞர் வாலி அவர்கள் விலாவாரியாக “எனக்குள் எம்.ஜி.ஆர்”. என்ற தன் நூலில் எழுதியுள்ளார்.

கவிஞர் கண்ணதாசன் தன் சொந்த அனுபவங்களை, எண்ணங்களை, மனத்தாங்கல்களை எத்தனையோ பாடல்களில் கொட்டித் தீர்த்திருக்கின்றார். “அண்ணன் என்னடா, தம்பி என்னடா, அவசரமான உலகத்திலே” போன்ற பாடல்கள் இதற்கு நல்ல உதாரணம்.

“நான் எப்பவுமே சொந்த வாழ்க்கை அனுபவங்களை பாடல்களாக வடித்ததே இல்லை.  ஆனால் அரசகட்டளை படத்துக்கு பாடல் எழுதும் போது என் மன உணர்வை வெளிக்காட்டும் விதமாக எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு பாடல் எழுதினேன்.”

என்று கவிஞர் வாலி, பொதிகைத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“என்னைப் பாடவைத்தவன் ஒருவன். என் பாட்டுக்கு அவன் தான் தலைவன்” என்ற பாடல், வாலிக்கு வாய்ப்பு வழங்கி அவருடைய வாழ்வில் ஒளியேற்றிய எம்.ஜி.ஆருக்கு நன்றிக்கடன் செய்யும் வகையில் எழுதப்பட்ட பாடல்.

இப்படத்தில், கே.வி.மகாதேவன் இசையில் உருவான அத்தனைப் பாடல்களும் மனங்கவர் பாடல்களாக அமைந்திருந்தன.

”அரசகட்டளை”யில் ஜெயலலிதாவும் எம்ஜிஆரும்  இடம்பெறும் ஒரு காட்சி. சொர்ணத்தின் உரையாடல் என்று நம்பப்படும் ரவீந்தரின் வசனங்கள்  இன்றைய அரசியல் நாடகங்களுக்கு அப்பட்டமாக பொருந்தும் வகையில் உள்ளன.

”எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அந்தப் பாவிகளின் நாக்கை துண்டுத்துண்டாக வெட்டி..”

”அதனால்தான் அதிகாரம் உன் கையில் இல்லை. மதனா.. கல்லடியும் சொல்லடியும் கடமைவாதிகள் சந்திக்க வேண்டிய முதல்படி, அரசியல் அகராதிப்படி”

“அப்படியா, இப்படி இன்னும் எத்தனைப் படிகளோ, உருப்படியாய் ஓடிவிடுவோம் வாருங்கள்”

”ஓடு ஓடு என்று யார் சொன்னாலும் நாடு நாடு என்றுதான் முழங்கிக்கொண்டிருப்பேன் என் லட்சியம் நிறைவேறும்வரை”

”ஆபத்து இருந்தாலும் (ஆட்சி) எவ்வளவு சுகமாக இருக்கிறது”

” இந்த சுகத்திலேதான் பதவி வெறியே பிறக்கிறது மதனா..இதில் மயங்கித்தான் ஆட்சியிலே இருந்தவர்கள் மக்களை மறந்தார்கள்..துன்பத்தை விதைத்தார்கள். துயரத்தை வளர்த்தார்கள்.”

“உன் உயிரைப் பறிப்பேன்” என்று உடைவாளை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைத் தாக்க வரும் நம்பியார் கூற “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்…” என்று சொல்லும் எம்.ஜி.ஆர். சற்று இடைவெளி விட்டு புன்னகை சிந்த “.நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். நறுக்குத் தெறித்தார்போல் காணப்பட்ட இதுபோன்ற வசனங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன.

புகழ் யாவும் சொர்ணத்திற்கு அர்ப்பணமாயின. ரவீந்தருக்கு வழக்கப்படி பிஸ்கோத்து, “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற மலைக்கள்ளன் படத்தில் இடம்பெற்ற எம்.ஜி.ஆரின்  பாடல்தான் என் நினைவில் நிழலாடியது.

கதாசிரியர்கள் நட்சத்திர அந்தஸ்து பெற்று அமோகமான பேரும் புகழும் பெற்றிருந்த காலத்தில் ரவீந்தர் எழுதிக் கொண்டிருந்தபோதும் கூட அவரால் ஒளிவிட்டு பிரகாசிக்க முடியவில்லை; அவரது பெயர் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது என்பது வருத்தத்திற்குரிய விடயம்.

– அப்துல் கையூம்

…………தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  9

எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11

எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13

 

Tags: , , ,

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)


 நாகூர் ரவீந்தர்

1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் வெற்றிப் படங்களில் ஒன்றான  “குலேபகவாலி” வெளிவந்தது.  அரேபிய மண்ணின் வாசனையோடு படமாக்கப்பட்ட இச்சித்திரத்தில் வசனம் தஞ்சையா ராமதாஸ் என்று படத்தின் தொடக்கத்தில்   ‘டைட்டில்’போட்டுக் காண்பிப்பார்கள்.

1957-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நடித்த “மகாதேவி” படம் வெளியானது.  அந்த படத்தில் வசனங்கள் அபாரமாக இருந்தது. ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தின் கூரையைப் பிய்த்தது.  கதை-வசனம்  கண்ணதாசன் என்று கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். ஆனால் வசனம் எழுதியது அவரல்ல.

1958-ஆம் ஆண்டு வெளிவந்த “நாடோடி மன்னன்”  படத்திற்கு வசனம் யார் என்று பார்த்தால் “வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரப் படுத்தியிருப்பார்கள். அத்தனை சுவரொட்டிகளிலும்  “கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அந்த கதை இலாகாவிற்குப் பின்னால் யாருடைய கைவண்ணம் இருந்ததென்று மக்களுக்குத் தெரியாமலே போனது. உண்மையில் அப்படத்தின் வசனத்தை எழுதியது யாரென்று மக்களுக்குத் தெரியப்படுத்தவே இல்லை.

1960-ஆம் “பாக்தாத் திருடன்” படம் வெளிவந்தது. பாராசீக மண்ணின் வாசனை தமிழ்த் திரையுலகத்திற்கு புதுமை சேர்த்தது. திரைக்கதை-வசனம் இரண்டடையுமே எழுதியது எஸ்.எஸ்.முத்து என்று  காண்பிப்பார்கள். அதுவும் கடைந்தெடுத்த பொய்.

1966-ஆம் ஆண்டு “சந்திரோதயம்”  படத்திற்கு கதை வசனம் எழுதியது ஏ.கே.வில்வம் என்றுதான் இதுவரை  எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதிலிருந்த வில்லங்கம் யாருக்குமே தெரியாது.

1967-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் இயக்கத்தில் “அரசகட்டளை” படம் வெளிவந்தது. உண்மையில் இப்படத்தின் வசனத்தை எழுதியது யார் என்பதை மூடி மறைத்தார்கள். அரசகட்டளை உருவான கதையை பின்வரும் தொடரில் விலக்குகிறேன்.

1968-ஆம் ஆண்டு வெளிவந்த “அடிமைப் பெண்”  படத்திற்கு கதை எழுதியது எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும்  டைட்டிலில் காண்பிக்கப்படும்.

அதே 1968-ஆம் ஆண்டு “கணவன்” படம் வெளிவந்தது. எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதை எழுதியிருக்கிறார் என்று அத்தனை பத்திரிக்கைகளும் பாராட்டுக்களைக் குவித்தன.  எம்.ஜி.ஆருக்கு பின்னாலிருந்த அந்த Ghost Writer யார் என்று யாருக்குமே தெரியாமல் போனது.

1976-ஆம் ஆண்டு, கோவை செழியன் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த “உழைக்கும் கரங்கள்” படத்தில்  கதை-வசனம் எழுதியது நாஞ்சில் மனோகரனாம். நம் காதில் நன்றாக பூ சுற்றுவார்கள்.  ‘கேட்பவன் கேணயனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது’ என்பார்களே அதுபோலத்தான் இதுவும். இதுதான் சினிமா உலகத்தின் குரூரமான மறுபக்கம். இரவு, பகலாக விழித்திருந்து காதிதக் குவியலுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு பக்கம் பக்கமாக வசனத்தை எழுதி தள்ளியது வேறொருவர்.

1973-ஆம் ஆண்டு “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்தது. கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும் விளம்பரப்படுத்தினார்கள். உண்மையில் இதன் திரைக்கதையை அமைத்தது யார் என்ற உண்மையை  ரசிகர்களுக்கு வெளிப்படுத்தவேயில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை படங்களுக்கும் வசனம் எழுதியது நாகூரைச் சேர்ந்த ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன் என்பவர்தான். கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது அல்லவா?

இதில் பெரும்பான்மையான  படங்களுக்கு வசனம் மாத்திரம் அல்ல மூலக்கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்துக் கொடுத்ததும் இந்த வாயில்லா பூச்சிதான்.

எழுதியது இவர். ஆனால் பேரையும் புகழையும் குவித்ததோ வேறொருவர். என்ன இது அநியாயமாக இருக்கிறது என்கிறீர்களா?  சந்தேகமேயின்றி இது பெரிய அநியாயமேதான். This is just a tip of the iceberg. இப்படி வெளிவராத உண்மைகள் எத்தனை எத்தனையோ..!!

‘காத்திருந்தவன் பொண்டாடியை நேத்து வந்தவன் தூக்கிட்டுப்போன கதை’ என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. அதுதான்  இது.

‘முழுபூசணிக்காயை சோற்றில் வைத்து மறைப்பது’  போன்று அவரது புகழை வெளியுலகத்திற்கு தெரியாதவாறு மறைத்தார்கள்’. கேட்டால் ‘சினிமா உலகில் இதெல்லாம் சகஜமப்பா’ என்பார்கள். மரம் வைத்தவன் ஒருவன் அதன் பலனை அனுபவிப்பது வேறொருவன் என்ற கதை.

 படைப்பாளிகளை செதுக்கிய நாகூர்

இந்த காஜா மொய்தீன்தான் ரவீந்தர் என்ற புனைப்பெயரில் திரைப்பட உலகில் மகத்தான புரட்சி செய்தவர். அமைதியே உருவாக நின்று, கலைத்துறையில் அரிய பல சாதனைகள் புரிந்தவர். எந்தக் காலத்திலும் புகழுக்கு ஆசைப்படாத மனிதரிவர். தானுண்டு தன் பணியுண்டு என்ற சுபாவம்.  “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என கிடைத்ததைக் கொண்டு திருப்தியுற்றவர். வேறொரு கோணத்தில் இவரை விமர்சிக்க வேண்டுமென்றால் “பிழைக்கத் தெரியாதவர்” என்று நாம் பட்டம் சூட்டிக் கொள்ளலாம்.

அல்வாவுக்கு பிரசித்தப்பெற்ற ஊர் நாகூர். நாகூர்க்காரரான இவருக்கு அல்வாவை அள்ளி அள்ளித் தந்தார்கள் சினிமாக்காரரர்கள். ‘குண்டுச் சட்டிக்குள் மட்டும் குதிரை ஓட்டினால் போதும்’ என்ற வித்தையை இவருக்கு கற்றுத் தந்தது சினிமா உலகம். “வாங்குகிற சம்பளத்துக்கு வக்கனையாக வேலை பார்த்தால் போதும், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற பாடத்தை இவருக்கு போதித்தார்கள்.

நாகூரிலிருந்து திரையுலகை ஒரு கலக்கு கலக்க இரண்டு சூறாவளிகள் புறப்பட்டன. ஒன்று காஜா மொய்தீன் என்கிற “ரவீந்தர்”, மற்றொன்று  அக்பர் என்கிற “தூயவன்”.  (தூயவனைப் பற்றி பிற்பாடு விவரமான பதிவுகள் எழுத நினைக்கிறேன் – இன்ஷாஅல்லாஹ்)

நாகூர் தேசிய உயர்நிலை பள்ளி   –  இது எத்தனையோ படைப்பாளிகளை உருவாக்கிய கலாகேந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை பள்ளிக்கூடம் அதே தோற்றத்தில்தான்  இருக்கிறதே தவிர பலபேருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய பள்ளி இது. நாகூரில் பிறந்த பெரும்பாலான பிரபலங்கள் இங்குதான் தங்களை செதுக்கிக் கொண்டார்கள். காஜா மொய்தீனுக்கு சிறுவயது முதலே எழுத்தாளன் ஆக வேண்டுமென்ற ஒரு பேரார்வம் மனதுக்குள் பொதிந்திருந்தது. அவருக்கு படிப்பில் இருந்த நாட்டத்தை விட கதை கட்டுரை, நாடகம் இதுபோன்ற இலக்கியத்துறையில்தான் ஆர்வம் மேலிட்டிருந்தது.

இன்பத்தமிழ் மணம் கமழும் இவ்வூரில் சுனாமி அலைகளைப்போன்று எளிதில் இளைஞர்கள் இலக்கியத் தாக்கத்திற்கு ஆளாகி விடுவார்கள் . ஏனெனில். இயல், இசை, நாடகம் இவை மூன்றும் பின்னிப் பிணைந்த ஊர் இது. ஆக்கமும் ஊக்கமும் அளிக்க அன்பர்கள் ஆர்வத்தோடு முன்வருவார்கள்.

1947-ஆம் ஆண்டு நாகூரில் இருந்துக்கொண்டே `பூ ஒளி` என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை நடத்துகிறார் ரவீந்தர்.  அவருடைய வீட்டில்  இதற்கு கடும் எதிர்ப்பு இருந்த போதிலும் நண்பர்கள் அவரை  மென்மேலும் ஊக்குவிக்கின்றனர். “இது தேவையில்லாத வேலை. உருப்படுவதற்குள்ள வேலயைப் பார்” என்று வீட்டார் அறிவுறுத்துகிறார்கள். அவருடைய எழுத்தாற்றலுக்கு நண்பர்களிடம் கிடைத்த பாராட்டுக்களில் திக்குமுக்காடிப் போன அவர் வாழ்க்கையில் ஏதெனும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு தள்ளப்படுகிறார். எழுத்தார்வத்தால் தடைபட்டுப்போன தனது பள்ளிப்படிப்பை முடிக்க பிற்பாடு விடாமுயற்சியால் லண்டன் மெட்ரிக் பரிட்சை எழுதி தேர்ச்சியும் பெறுகிறார்.

“சமீபத்தில் நாடோடி மன்னன் படம் பார்த்து கொண்டிருந்த போது அதில் வசனம் என்று கவிஞர் கண்ணதாசனுடன் ரவீந்தர் என்ற பெயரைப் பார்த்தேன். யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை” என்று மனம் புழுங்குகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

நாடறிந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கே இந்த ஆச்சரியமென்றால் சராசரி பாமர மனிதன் ரவீந்தரை எங்கே தெரிந்து வைத்திருக்கப் போகிறான்?

“சொர்ணம்”, போன்றவர்களை அறிந்து வைத்திருக்கின்ற சினிமா ஆர்வலர்கள் ரவீந்தர் பெயரை அறிந்து வைத்திருக்கவில்லை, அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் திராவிட இயக்கத்தின் பிரபலங்களுக்கு தனியொரு முக்கியத்துவம் இருந்தது. மற்றவர்களுக்கு எத்தனை திறமை இருந்த போதிலும் அவர்களை இருட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள்.

எம்.ஜி.ஆருடைய படங்களுக்கு, திராவிட இயக்கத்தின் பிரபலங்கள் கிட்டத்தட்ட 11 பேர் கதை-வசனம் எழுதினார்கள். அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், இராம.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு, கே.சொர்ணம் ,ஏ.கே.விஸ்வம், முரசொலிமாறன், கே. காளிமுத்து, நாஞ்சில் கி.மனோகரன் முதலானோர். இவர்களுடைய பெயர்கள் பெரிதாக சுவரொட்டிகளிலும் பத்திரிக்கை விளம்பரங்களிலும் அலங்கரிக்கும். இந்த அதிர்ஷ்டம் ரவீந்தர் போன்ற படைப்பாளிகளுக்கு கிடைக்கவில்லை.

என் சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு நண்பரிடம்  “திரைப்படத்துறையில் ரவீந்தர் யார் என்று தெரியுமா?” என்று கேட்டுப்பார்த்தேன்.  “இதுகூடத் தெரியாதா.. என்ன? ‘ஒருதலை ராகம்’ படத்தில் நடித்தாரே!” என்று ஒரு போடு போட்டார். நான் நொந்தே போனேன். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. சினிமா ஊடகங்கள் அவரை நினைத்தும் பார்க்கவில்லை. நினைவிலும் வைக்கவில்லை. அவர் மறைந்தபோதும் கூட ஊடகங்கள் அவரைக் கண்டுக்கொள்ளவில்லை.

பாடுபட்டு எழுதுவது ஒருவர். பெயரையும் புகழையும் தட்டிப் பறித்துக் கொண்டு போவது வேறொருவர். யார் இந்த கொடுமையை  தட்டிக் கேட்பது? தயாரிப்பாளர்கள் தங்கள் படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக இது போன்ற Publicity Gimmicks கையாண்ட வண்ணம் இருந்தார்கள்.  பிரபலமானவர்களின் பெயர்கள் சுவரொட்டிகளில் இருந்தால் மட்டுமே படம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்ற எண்ணம் சினிமாக்காரர்களிடம் நிலை கொண்டிருந்தது. அதிகாரத்திற்கு முன்பு கலைத்திறமை கைகட்டி வேடிக்கை பார்த்தது என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்.

முப்பத்திரண்டு திரைப்படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியவர் இந்த எழுத்துலக வேந்தர். ஆனால் இவர் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது சில படங்களுக்கு மாத்திரமே. பணத்தையும் பொருளையும் கொள்ளையடிப்பதை விட மிகக் கொடுமையானது பிறரின் திறமையை சூறையாடி அதில் ஆதாயம் தேடுவது. ரவீந்தர் இந்த சூழ்ச்சியில் பலிகடா ஆனது வருந்தத்தக்கது.

இப்பொழுதுதான் கதை வசனகர்த்தாவுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. ஆனால் அன்றிருந்த சூழ்நிலை வேறு.  அக்காலத்தில்  வசனகர்த்தாக்களுக்கு இருந்த மரியாதையே தனி. படம் பார்க்க விழைபவர்கள் முதலில் வசனம் எழுதியது யார் என்றுதான் பார்ப்பார்கள்.. கதாநாயகனின் பெயரை டைட்டிலில் காண்பிப்பதற்கு முன்பாகவே மூலக்கதை அல்லது கதை-வசனம் எழுதியவரின் பெயரை பெரிய எழுத்தில் காண்பிப்பார்கள். வசனகர்த்தாக்களாக வந்து முதலமைச்சர் ஆனவர்களைப் பற்றி நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.

கலைஞரின் பராசக்தி வசனம் காலத்தால் அழியாத ஒன்று.  அதில் இடம்பெற்ற வசனத்திற்காகவே படம் வெற்றிகரமாக ஓடியது. அறிஞர் அண்ணாவின் கைவண்ணத்தில் மிளிர்ந்த  “வேலைக்காரி”, மாபெரும் வெற்றிச்சித்திரமாக அமைந்தது. கே.ஆர்.ராமசாமி வக்கீலாக வந்து, “சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு” எமறு சொன்ன வசனம் நிலைபெற்று விட்டது.

ரவீந்தருக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகம் எப்படிக் கிடைத்தது? அது ஒரு பெரிய கதை

டணால் தங்கவேலுவும் ரவீந்தரும்.

எம்.கே. ராதாவின் தந்தை கந்தசாமி முதலியாரின்  மதுரை  ட்ராமாட்டிக் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் ‘பதி பக்தி’போன்ற நாடகத்தில் 1935-ஆம் ஆண்டு முதலே எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர். , என்.எஸ். கிருஷ்ணன், , எம்.ஜி.சக்ரபாணி, வீர்ராகவன் இவர்களோடு ஒன்றாக இணைந்து நடித்து வந்தவர் கே.ஏ.தங்கவேலு.

கலைஞர் கருணாநிதியை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரிடம் அறிமுகம் செய்த கா.மு.ஷெரீப்பை போன்று, எம்.ஜி.ஆரிடம் காஜா மொய்தீனை அறிமுகம் செய்து, அவருடைய எழுத்துலக வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர் சிரிப்பு நடிகர் டணால் கே.ஏ.தங்கவேலு.  இது நடந்தது 1952 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்.

நாகூர் காஜா மொய்தீனுக்கு நோபல் பரிசுபெற்ற ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனை ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் எதார்த்தமாக சொல்லப்போக “ரவீந்தர்” என்ற அந்த பெயரையே அவருக்கு சூட்டி விட்டார். இந்த புனைப்பெயரே அவருக்கு இறுதிவரை நிலைத்தும் விட்டது. ரவீந்தருக்கு எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட அறிமுகம் ஒரு எதிர்பாராத நிகழ்வுதான்.

டணால்’ தங்கவேலுவின் சொந்த ஊர்  நாகூரை அடுத்த திருமலைராயன்பட்டினம். தங்கவேலுவுக்கும் ரவீந்தருக்குமிடையே நாடக ரீதியாகத்தான் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவர்களுக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது,

டணால் கே.ஏ.தங்கவேலு சினிமா உலகில் நுழைந்து சிரிப்பு நடிகராக முத்திரை பதித்த நேரம் அது. “சிங்காரி”, “அமரகவி”, “கலியுகம்” , “பணம்” , “அன்பு” , “திரும்பிப்பார்”  போன்ற படங்களில் நடித்து பிரபல்யமாகியிருந்தார், “சிங்காரி” படத்தில் ‘டணால்’ ‘டணால்’ என்று கூறி நடித்ததினால் இவர் பெயர் ‘டணால் தங்கவேலு’ என்ற பெயர் ஏற்பட்டது.  சொந்த நாடகக்குழுவொன்றை ஏற்படுத்தி “மனைவியின் மாங்கல்யம்”, “விமலா”, “பம்பாய் மெயில்”, “லட்சுமிகாந்தன்” உள்பட பல நாடகங்களில் நடித்தார்.

ரவீந்தரின் திறமை எடுத்த எடுப்பிலேயே புரிந்துக் கொண்ட தங்கவேலு அவரை பயன் படுத்திக் கொண்டார். தன்னுடய நாடகத்திற்கு கதை-வசனம் எழுதும் பொறுப்பை அவருக்களித்தார். ரவீந்தரும் தன் பங்கைச் சரியாக செய்தார்..

தங்கவேலுவும்,  ‘நாம் இருவர்  படத்தின் மூலம் புகழ்ப்பெற்ற  சி.ஆர்..ஜெயலட்சுமியும்  இணைந்து  நடிக்க “மானேஜர்” என்ற மேடை நாடகம் அரங்கேறியது. கதை வசனம் யாவற்றிற்கும் ரவீந்தரே பொறுப்பேற்றிருந்தார்.  நாடகமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரவீந்தரின் எழுத்தாற்றலில் மனதைப் பறிகொடுத்திருந்த தங்கவேலு அவரது திறமைக்கு தீனி போடும் வகையில் “உன்னை கொண்டுபோய்ச் சேர்க்கும் இடத்தில் நான் போய்ச் சேர்த்து விடுகிறேன்” என்று உறுதிபூண்டு எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் சென்று அவரை அறிமுகம் செய்தார்.

ரவீந்தருக்கு எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் கிடைத்தது இப்படித்தான்.

எம்.ஜி.ஆர். சினிமாத் துறையில் பெரிய அளவில் பிரபலமாகாத காலமது. அவர் தன்னை கலைத்துறையில் நிலைநாட்டிக் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்த நேரம். சொந்தமாக நாடகக் குழு அமைத்து நாடகங்கள் போட திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ‘கும்பிடப்போன தெயவம் குறுக்கே வந்தது போல’ ரவீந்தரின் எழுத்துத்திறமையை தங்கவேலு மூலம் தெரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர். பூரித்துப் போனார். ரவீந்தரை முறையாக பயன்படுத்தி கொண்டார்.

இவர் எம்.ஜி.ஆரோடு இணைந்த பிறகுதான் “எம்.ஜி.ஆர். நாடக மன்ற”மே உருவாகியது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்திற்கு பொறுப்பாளராக ஆர்.எம்.வீரப்பன் வந்துச் சேர்ந்தார். ரவீந்தரை முன்னுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டதில் ஆர்.எம்.வீரப்பனுக்கு கணிசமான பங்கு உண்டு.  எம்.ஜி.ஆரிடம் தன்னைத் தவிர வேறு யாரும் நெருக்கமாகி விடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். ரவீந்தரின் தலையில் யாரெல்லாம் மிளகாய் அரைத்தார்கள்; யாரெல்லாம் அவர் மீது குதிரைச் சவாரி செய்தார்கள்; அவரை எப்படி ஒப்புக்குச் சப்பாணியாக சேர்த்துக் கொண்டார்கள்;  எப்படியெல்லாம் அவர் ஓரம் கட்டப் பட்டார்;  என்பதை நாம் பின்னர் தெரிந்துக் கொள்ளலாம்.

பஞ்ச் டயலாக்

இப்போது வெளிவரும் படங்கள் அது ரஜினி படம் அல்லது  விஜய் படம் எதுவுமே ஆனாலும் அதில்  அதிரடி வசனங்கள் இருக்கவேண்டுமென ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். சண்டைக்காட்சிகள் இருக்குதோ இல்லையோ கண்டிப்பாக சூப்பர் ஹீரோக்களின் படங்களில் ‘பஞ்ச் டயலாக்’ இருந்தே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக ஆகிவிட்டது.

இந்த பஞ்ச் டயலாக் Trend-யை சினிமாவுக்கு கொண்டு வந்த வசனகர்த்தாக்களில் ரவீந்தர் முன்னோடி வரிசையில் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் வில்லன் நடிப்பில் முத்திரை பதித்து ரசிகர்களிடயே பெருத்த வரவேற்பை பெற்றவர்  பி.எஸ்.வீரப்பா. இப்போதுகூட யாராவது அட்டகாசமாகச் சிரித்தால் பி.எஸ்.வீரப்பாவின் நினைவுதான் சட்டென்று எல்லோருக்கும் வரும். ஒரு குரூரச் சிரிப்பைக்கூட ரசனையாக மாற்றியவர் அவர். காமெடிச் சிரிப்பால் வேண்டுமானால் குமரிமுத்து நம்மை கவர்ந்திருக்கலாம். அப்படியொரு வில்லத்தனமான சிரிப்பால் பி.எஸ்.வீரப்பாவிற்குப் பிறகுஎந்தவொரு வில்லனும் இதுவரை நம் மனதில் முத்திரை பதிக்கவில்லை,

1958-ஆம் ஆண்டு வெளிவந்த “வஞ்சிக்கோட்டை வாலிபன்” படத்தில் பி.எஸ்.வீரப்பா பேசிய அந்த ஒரு வசனம் இன்றுவரை பரபரப்பாக பேசப்படுகிறது.  “சபாஷ்.. சரியான போட்டி” என்ற அவரது கணீர்க் குரல், ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்ற பாடலுக்கிடையே ஒலிக்கும். இப்படம் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரித்த படம். ஆதலால் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால், “வஞ்சிக்கோட்டை வாலிபன்” படம்  வெளிவருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே 1957-ஆம் வருடம்  “மகாதேவி” படம் வெளிவந்தது. மகாதேவியாக சாவித்திரியும், கதாநாயகனாக எம்.ஜி.ஆரும் நடித்திருப்பார்கள்.  பி.எஸ்.வீரப்பா அட்டகாச தொனியில் பேசிய “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என்ற வசனம் திரைப்பட உலகில் ஒரு பிரளயத்தையே உண்டுபண்ணியது.  படம் வந்த புதிதில் எல்லோருடைய உதடுகளிலும் இந்த வசனம்தான் முணுமுணுக்கப்பட்டது. இன்றளவும் இது காலத்தால் அழியாத வசனமாக திரைப்பட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விட்டது.

குறிப்பாக, காதல் வயப்பட்டு காதலியை கைப்பிடிக்க நினைக்கும் அத்தனை வாலிபர்களுக்கும் இந்த வசனம்தான் கைகொடுக்கும். பெரும்பாலோரின் தாரகமந்திரம். காதலர்களின் தேசிய கீதம். இப்படத்தில் இடம்பெறும் “வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய் சொல் இந்த வார்த்தையை ” என்ற வசனமும் மிகவும் பிரபலம் ஆனது.

 “மாப்பு..வச்சிட்டான்யா ஆப்பு” , 

“ஆணியைப் புடுங்க வேணாம்”, 

“என்னை வச்சு எதுவும் காமெடி கீமெடி பண்ணலியே?”,  

“சரோஜா சாமான் நிக்காலோ !…”,

 ‘கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்களா தான் வரும்‘…

போன்ற இன்றைய வசனகர்த்தாக்கள் எழுதும் பஞ்ச் டயலாக்கையும், ரவீந்தர் அவர்கள் அன்று எழுதிய பஞ்ச் டயலாக்கையும் ஒருசேர ஒப்பிட்டு நோக்கினால் உண்மையான தரம் நமக்கு விளங்கவரும்..

ரவீந்தரின் கலைத்துறை வாழ்க்கையில் அவருக்கு  ஏற்பட்ட திருப்பங்கள், அவர் எப்படியெல்லாம் திரையுலகில் ஓரம் கட்டப்பட்டார் என்பதை இனிவரும் தொடர்களில் விவரமாகக் காண்போம்.

– நாகூர் அப்துல் கையூம்

(ரவீந்தர் அவர்களின் இளமைக்கால புகைப்படத்தை மிகுந்த பிரயாசத்துடன் அவரது குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தந்த முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுத்தீன் அவர்களுக்கு நன்றி)

– தொடரும்

 

Tags: , , ,

நாகூர் ஹனீபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (5-ஆம் பாகம்)


 
“நாகூர் ஹனிபாவுக்கு கலைஞர் கொடுத்த அல்வா” என்று இக்கட்டுரைக்கு தலைப்பு கொடுத்ததற்கு பதிலாக “பிழைக்கத் தெரியாத நாகூர் ஹனிபா” என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமே என்று என் நண்பர்கள் சிலர் கருத்து தெரிவித்தார்கள். இதற்கு காரணம் நாகூர்  ஹனிபா மீது அவர்களுக்கிருந்த கோபமா? அல்லது கலைஞர் மீது அவர்கள் வைத்திருந்த அளப்பரிய அன்பா என்று கண்டறிய நான் முயற்சி ஏதும் எடுக்கவில்லை.

அவர்களுடைய கண்ணோட்டத்திலிருந்து சிந்தித்துப் பார்த்தால் நாகூர் ஹனிபா தனக்கிருந்த அரசியல் செல்வாக்கையும், கட்சித் தலைமையோடு அவருக்கிருந்த நெருக்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டாரோ என்ற சந்தேகமும் நம் மனதில் எழுந்து தொலைகின்றது.

கலைஞர் அவர்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்து “ஏன் நீங்கள் நாகூர் ஹனிபாவுக்கு உரிய பதவி கொடுக்கவில்லை?” என்று கேட்பதற்கு பதிலாக நாகூர் ஹனிபாவிடமே “நீங்கள் ஏன் பதவியை கேட்டுப் பெறவில்லை?” என்று ஏன் நாம் கேட்கக் கூடாது?

நாகூர் ஹனிபா அவர்கள் “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற மனப்பக்குவத்துடன் பெருந்தன்மையோடு நடந்துக் கொண்டாரா? அல்லது கூச்ச சுபாவம் காரணமாக வந்த வாய்ப்புக்களை எல்லாம் விரால் மீனாக நழுவ விட்டாரா? அல்லது இஸ்லாமியப் பாடகராக கச்சேரிகள் மூலமாக வரும் வருமானம் இதனால் கெட்டுப் போய்விடுமே என்ற காரணத்தினால் அரசியல் பதவியை தவிர்த்து விட்டாரா? என்று தெரியவில்லை.

இசைத்துறையில் தனக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அரசியலில் கிடைக்காது என்ற காரணத்தினால்கூட இருக்கலாம் அல்லவா?

இந்த வாதத்தை நாம் முன் வைப்பதால் கலைஞர் – நாகூர் ஹனிபா இருவருக்கும் இடையிலான நட்புறவில் கலைஞர் அவர்கள் நியாயமாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியாது. இதோ அந்த நிகழ்வு நாம் சொல்லவரும் கருத்துக்கு நல்லதோர் உதாரணம்.

இசைமுரசு அவர்கள் தனக்குச் சொந்தமான “அனிபா லாட்ஜ்” கட்டிடத்தை கட்டி முடித்து, அதன் திறப்பு விழாவுக்கு கலைஞர் அவர்களை அழைத்தபோது, வருவதாக வாக்களித்திருந்த கலைஞர் அவர்கள் வேண்டுமென்றே வரவில்லை. அதற்கு காரணம் அதையொட்டி நடைபெறவிருந்த தேர்தல்.

பெருமளவில் கூட்டத்தைக் கூட்டி கட்சியின் வலிமையைக் காட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்தார் கலைஞர். இதுபோன்ற சிறிய நிகழ்ச்சியில் வந்து கலந்துக் கொண்டு பெருந்திரளான கூட்டத்தை திரட்டத் தவறினால் எங்கே தன்னுடைய ‘இமேஜ்’ பாதிக்கப்பட்டு விடுமோ என்று தயங்கிய கலைஞர் நாகூர் வருவதை ரத்து செய்து விட்டார். கடைசியில் சாதிக் பாட்சா, ஆ.கா.அப்துல் சமது, மதுரை ஆதீனம் போன்றவர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தி முடித்தார் ஹனிபா.

நட்புதான் பெரிது என்று கலைஞர் மனதார நினைத்திருந்தால் தஞ்சாவூர் வரை வந்த தானைத்தலைவர் தாராளமாக ‘இமேஜ்’ எதையும் பார்க்காமல் நண்பரின் அழைப்புக்கு இணங்கியிருக்கலாம். நாகூர் ஹனிபாவுக்கும் அது பெருமையாக இருந்திருக்கும்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் தொடக்க கால வாழ்க்கையில் அவரை கைத்தூக்கி விட்டவர்கள், அவருடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமகனார்கள், பெரும்பாலும் இஸ்லாமியச் சகோதரர்களாகவே இருந்தார்கள் என்பதை இந்தப் பதிவின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருந்தேன். இவர்கள் அனைவரும் எழுத்துலகிலும் பத்திரிக்கைத் துறையிலும் கைதேர்ந்த தமிழார்வலர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வுப் பொருத்தமா அல்லது கலைஞர் அவர்கள் இஸ்லாமிய அன்பர்களுடன் நட்புறவு கொள்வதை மிகவும் விரும்பினாரா என்பது ஆராய வேண்டிய விஷயம். கலைஞர் அவர்களுக்கு இஸ்லாமியச் சமூகத்தினர் மீது ஒரு தனிப்பட்ட பிரியம் இருந்ததை நாம் மறுக்கவோ மறக்கவோ இயலாது. இன்றளவும் நாகூர் ஹனிபாவைப் போன்று எத்தனையோ இஸ்லாமியச் சகோதரர்கள் கலைஞரின்  Diehard விசுவாசிகளாக இருக்கிறாகள் என்பது கண்கூடு. தன்னுடைய அரசியல் லாபத்திற்காக முஸ்லீம் லீகை பிளவு படுத்தினார் என்பது உண்மையாக இருந்தபோதிலும், கலைஞர் செய்தது ஒருவகையில் நன்மையாகவே முடிந்தது என்று சிலர் கருதுகிறார்கள்.

கூட்டணிக் குடையின் கீழ் ஆட்சியின் பீடத்திலிருந்து அவர்கள் சாதிக்க முடியாத பல விஷயங்களை எதிர் அணியில் இருந்துக் கொண்டு சமுதாயப் பிரச்சினைக்கு வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கும் ஒன்றிணைந்து செயலாற்றும் இத்தனை இஸ்லாமிய அமைப்புகளை நினைத்தால் நமக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.

“முஸ்லீம் லீக்” என்ற கட்சி உட்பூசலின் காரணமாக பெரிதாக எந்த ஒரு சமுதாய சீர்திருத்தத்தையோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காக களமிறங்கி போராடியோ சாதனை படைக்கவில்லை என்ற ஒரு அபிப்பிராயம் பரவலாக நிலவுகிறது. இதனை என்னால் மறுக்க முடியவில்லை என்பதும் உண்மை.

கலைஞர் அவர்களுடைய பொதுவாழ்க்கையில் அவருக்கு தோளோடு தோள் நின்று, அவருடைய இன்ப துன்பங்களில் பங்கு பெற்று, பொருளாதார உதவியும், தொழில் ரீதியான முறையில் உதவிகளும் புரிந்து, கலைஞர் அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த பெருமை அவர் தொடர்பு வைத்திருந்த திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருந்த முஸ்லீம் அன்பர்கள் பலரைச் சாரும்.

கமால் பிரதர்ஸ், கவி.கா.மு.ஷெரீப், கருணை ஜமால், சாரணபாஸ்கரன், கலைமாமணி காரை எஸ்.எம்.உமர், நாகூர் ஹனிபா, நாவலர் ஏ.எம்யூசுப், ஆ.கா.அ.அப்துல் சமது என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இக்கட்டுரையின் மையக்கருத்தை விட்டு சற்றே விலகி கலைஞர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த இந்த இஸ்லாமிய நண்பர்கள் பத்திரிக்கைத் துறையில் எவ்வாறு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினார்கள் என்பதை சற்று விரிவாகக் காண்போம்.

நாகூர் ஹனிபாவுக்கும் பத்திரிக்கைத் துறைக்கும் சம்பந்தம் ஏதும் இல்லாத போதிலும் அவருடன் நெருங்கிப் பழகிய நாகை, திருவாரூர், காரைக்கால் வட்டார இஸ்லாமிய நண்பர்கள் பலர் பத்திரிக்கைத் துறையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் அவர்கள் பத்திரிக்கைத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு அறிஞர் தாவுத்ஷா அவர்கள் ஒரு முன்மாதிரியாகத் (as a Role Model) திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

“அந்தக் காலத்தில் நான் பள்ளியில் பயிலும் போது ஒரு கையிலே குடி அரசு ஏடு, இன்னொரு கையிலே “தாருல் இஸ்லாம்” என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரசாரம் செய்கிற நாளேடு – இவைகள்தான் எங்கள் கைகளை அலங்கரிக்கும்”

என்று டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் சொன்னதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையின் ஆசிரியர்தான் தாவூத் ஷா.

Dawood Shah

1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “தாருல் இஸ்லாம்” என்ற மாத இதழ், அக்காலத்தில் பத்திரிக்கை உலகில் ஒரு முன்னோடி இதழாகத் திகழ்ந்தது.

கலைஞர் அவர்கள் தனியாக பத்திரிக்கை தொடங்குவதற்கு “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கை ஒரு உந்து சக்தியாக அமைந்தது என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.

64 பக்கங்களுடன் வெளிவந்த அந்த இதழானது, தலையங்கம், அரிமாநோக்கு, கண்ணோட்டம், அரசியல், ஆன்மீகம், அறிவியல், சட்ட, மருத்துவக் கட்டுரைகள், கவிதை, கதை, தொடர்கதை, ‘கேள்வி-பதில்’ பகுதி, வாசகர் கடிதம், துணுக்குகள் என்று அத்தனை பல்சுவை அம்சங்களுடன் அவ்விதழ் மக்களைக் கவர்ந்தது. ‘தத்துவ இஸ்லாம்’, ‘முஸ்லிம் சங்கக் கமலம்’, ‘தேவ சேவகம்’, ‘ரஞ்சித மஞ்சரி’ போன்ற பல இதழ்கள் நடத்திய அனுபவம் அவருக்குண்டு.

தினத்தந்தியில் சிந்துபாத் கதை வாசகர்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றிருந்ததை நாமெல்லோரும் அறிவோம். முதன் முதலாக ஆயிரத்தொரு இரவுகள் அரபுக் கதைகளை மொழி பெயர்த்து தமிழுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் தாவூத் ஷா. அதற்குப்பின்னால் அரேபியக் கதைகளின் Fantasy அம்சங்களை திரைப்படங்களில் குலேபகவாலி, நாடோடி மன்னன், பாக்தாத் பேரழகி போன்ற படங்களில் புகுத்திய பெருமை திரைப்பட வசனகர்த்தா நாகூர் ரவீந்தரைச் சேரும்

“பத்திரிகையில் எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டு பிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு” என்று அறிவித்ததும், தம் பத்திரிகையில் புரூப் திருத்துவதற்கென்றே புலவர் செல்வராஜ் என்ற தமிழ்ப் புலவரையே நியமித்து வைத்திருந்ததும் தாவுத்ஷா அவர்களின் பத்திரிக்கை தர்மத்தையும் அவரது தொழில் பக்தியையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றது.

அக்காலத்தில் பிராமணச் சமூகத்திற்கு இணையாக, பத்திரிக்கைத் துறையில் இஸ்லாமியர்கள் காலூன்றி தடம் பதித்திருந்தார்கள் என்ற கருத்தை வலியுறுத்த பல உதாரணங்களை இங்கே கோடிட்டுக் காட்ட முடியும்.

[19-ஆம் நூற்றாண்டிலேயே (1880-களில்) நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள் ‘வித்தியா விசாரிணி’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கி கவிதை, உரைநடை, இலக்கியம், மொழி பெயர்ப்பு, இதழியல் என இலக்கியத்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார்.]

கீழை நாடுகள் மற்றும் பிரஞ்சு நாட்டில் வியாபாரத் தொடர்பை வளர்த்துக் கொண்ட இஸ்லாமியர்கள் இங்கு சொந்தமாக அச்சகங்கள் துவங்கியதால் அவர்களுக்கு இது எளிதான காரியமாக இருந்தது. [நாகூரைச் சேர்ந்த தளவாய் சின்னவாப்பா மரைக்காயர் ‘ரபீக்குல் இஸ்லாம்’ (இஸ்லாமிய நண்பன் என்று பொருள்) என்ற வார இதழை 1905-ஆண்டு சிங்கப்பூரில் நடத்தி வந்தார் என்பது மற்றொரு கொசுறு செய்தி]

காரைக்காலிலிருந்து 1944-ஆம் ஆண்டு முதல் “பால்யன்” என்ற வார இதழ் வெளிவந்துக் கொண்டிருந்தது. இதன் ஆசிரியர் உ.அபூஹனிபா என்பவராவார். “மணிச்சுடர்” ஆ.கா.அப்துல் சமது, நாவலர் “மறுமலர்ச்சி” யூசுப், “சாந்தி விகடன்” அ. மு. அலி, எஸ்.எம்.உமர், வடகரை எம்.எம்.பக்கர், ஓவியர் காரை பக்கர் போன்றவர்கள் இவ்விதழை வளர்ப்பதில் இலவசமாக தமது சேவையினை வழங்கியுள்ளனர். இம்மூவரையும் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது பால்யன் இதழே.

காரைக்காலில் 1940-களில் நடத்தப்பட்ட “கதம்பம்:, “இளம்பிறை” , “முஸ்லீம் லீக்” போன்ற இதழ்களிலும் ஆ.கா.அ. அப்துல் சமது எழுதி வந்தார்.

“பால்யன்” இதழை முதலில் தொடங்கியவர் காரை அ.மு.அலி அவர்கள் . இவர், தான் ஆரம்பித்த இதழை உ.அபூஹனிபாவிடம் ஒப்படைத்துவிட்டு சிங்கப்பூர் சென்று விட்டார். “பால்யன்” இதழ் ஒரு தரமான இலக்கிய இதழாக தமிழ்ச் சேவை ஆற்றி வந்தது.

அதன் பின்னர், ஆனந்த விகடன் போன்றே ஜனரஞ்சகமான இஸ்லாமிய சஞ்சிகை ஒன்று “சாந்தி விகடன்” என்ற பெயரில் காரைக்காலிலிருந்து காரை அ.மு.அலி வெளியிட்டார். 1960 முதல் 1963 வரை வெளிவந்த இந்த இதழ் 1963-ஆண்டில் வரலாறு மலர் ஒன்றை வெளியிட்டதுடன் நின்றுபோனது. இவ்விதழ் அரசியலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தது. கருத்துப்படங்களும் விகடனைப் போன்றே கேலியும் கிண்டலும் நிறைந்து காணப்பட்டது.

காரை அ.மு.அலி வேறு யாருமல்ல. கலைஞர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ‘கலைமாமணி’ உமர் அவர்களின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்.

கலைஞர் அவர்கள் தன் பழைய நண்பர்களை அறவே மறந்து விட்டிருந்தார் என்று கூற முடியாது. அவர்களை நெஞ்சில் நினைவிறுத்தி கவி கா.மு.ஷெரீப், நாகூர் ஹனிபா, காரை எஸ்,எம்.உமர் போன்றவர்களை கெளரவித்து “கலைமாமணி” பட்டம் வழங்கினார். (கலைமாமணி பட்டம் “Tom. Tick & Harry” என்று கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்து அந்த விருதுக்கே மதிப்பில்லாமல் போனது வேறு கதை)

‘கலைமாமணி’ எஸ். எம். உமர், நாகூர் ஹனிபா, கலைஞர் கருணாநிதி – இம்மூவரும் ஏறக்குறைய சமவயதினர். எழுத்தாளராகவும் திரைப்படத்தயாரிப்பாளராகவும் இருந்த உமர் கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட இந்தியப் படங்களை வியட்நாம் மொழியில் மொழிமாற்றம் செய்தவர். “இளம்பிறை” (1944), “குரல்” (1949), “உமர்கய்யாம்” (1978) போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர். “ஞானசௌந்தரி”, “லைலா மஜ்னு”, “அமரகவி”, “குடும்ப விளக்கு”, “ஜெனோவா” போன்ற படங்களின் தயாரிப்பில் பங்கு பெற்றவர்.

1968-ல் காரை எஸ்.எம்.உமர் “வசந்த சேனா’ என்ற வண்ணப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரித்தார். இப்படத்தில் பின்னணியில் முகவுரை பேசியவர் நாவலர் ஏ.எம்.யூசுப்.   1948-ல் ஏ.எம்யூசுப், அ.மு.அலி, ஜே.எம்.சாலி மற்றும் தோழர்கள் இணைந்து “இழந்த காதல்” என்ற சமூக சீர்த்திருத்த நாடகத்தை நடத்தினார்கள். அந்த நாடகத்தில் “ஜெகதீஷ்” என்ற வில்லன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்களைக் கவர்ந்தவர் ‘மறுமலர்ச்சி; ஏ.எம்.யூசுப் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத் துறையில் இவர் செய்த சாதனைக்காக, 1997-ல் கலைஞர் கருணாநிதி இவருக்கு “கலைமாமணி’ விருது அளித்து கெளரவித்தார்.

அடுத்து கலைஞர் அவர்களுக்கும் கமால் பிரதஸுக்கும் இருந்த நட்பின் நெருக்கத்தை ஆராய்வோம்.

தளபதி ஸ்டாலினிடம் சென்று “உங்கள் தந்தையாரின் கோபாலபுரம் வீட்டை வாங்கித் தந்தவர் கமால் சகோதரர்கள் என்று சொல்லுகிறார்களே. இது உண்மையா?” என்று கேட்டால் “யார் சொன்னது? இது என் தந்தையார், அவரே சம்பாதித்து வாங்கியது” என்பார்.

“கோபாலபுரம் வீடும், திருவாரூர் அருகே காட்டூரில் அஞ்சுகம் அம்மாள் கல்லறை அமைந்துள்ள இடமும் நான் சம்பாதித்த சொத்துகள்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார் கலைஞர்.

“கோடியென வந்த சம்பளத்தையும்- குடியிருந்த வீட்டையும்-தமிழுக்காகவும், ஏழை எளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் – தன் அறிவையும் ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன் – உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துக்கள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறான்” என தன் பிறந்தநாள் வாழ்த்து அறிக்கையில் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

‘சில பேருக்கு கோபாலபுரமே சினிமா உலகமாக ஆகி விடுமோ என்று சொல்லத் தோன்றியுள்ளது. ஆமாம். சினிமா உலகம் தான். சினிமா உலகத்திலேயிருந்து வந்தவர்கள் தான் பல பேர் இன்றைக்கு கோபாலபுரத்திலிருந்து தங்களுடைய புகழ்க் கொடியை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அதற்காக வெட்கப்படவில்லை. மருமகன் படம் எடுத்து படத்தயாரிப்பாளர், மகன் படத்தயாரிப்பாளர், பேரன் படத்தயாரிப்பாளர் என்றெல்லாம் இன்றைக்கு சில பேர் அரசியல் ரீதியாக கேலி பேசுகிறார்கள், கிண்டல் பேசுகிறார்கள். ஆமாம், என் பேரன் பட தயாரிப்பாளர் தான். இன்னும் கொஞ்ச நாளைக்கு பிறகு என்னுடைய கொள்ளுப்பேரன் கூட படத்தயாரிப்பாளராக ஆனால், அதிலே எந்தவிதமான ஆச்சரியப்படவும் தேவையில்லை. படத்தயாரிப்பு என்பது ஒன்றும் தவறான காரியமல்ல. படத்தயாரிப்பு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தொழில் தான்.’

என்று கலைஞர் அவர்கள் அண்மையில் உணர்ச்சி பொங்க ஒரு விழாவில் பேசினார்.

ஆம் கோபாலபுரத்திற்கும் சினிமா உலகத்திற்கும் அப்படி ஓர் ஒற்றுமை. திரைப்படத் தயாரிப்பளர்களான கமால் பிரதர்ஸ் வங்கித் தந்த வீடுதான் கோபாலபுரம் வீடு. திரைப்படத்துறைக்காக அடகு வைக்கப்பட்ட விடுதான் அந்த வீடு. அதே திரைப்படத்தால் மீட்கப்பட்ட வீடுதான் அந்த கோபாலபுரம் வீடு, கலைஞர் அவர்கள் தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி”யில் சொன்னது போல் திரைப்படத்தில் வசனம் எழுதி வாங்கிய வீடு என்ற கூற்றில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

கூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும் “கமால் பிரதர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். இவர்களின் குடும்பத்திற்கு வியட்நாம் நாட்டில் சைகோன் (Saigon) நகரத்தில் வணிகத்தொழில் இருந்து வந்தது. 1957-ல் வியட்நாம் போரின்போது சைகோன் நகரம் பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. ஆதலால் வியாபாரம் நஷ்டத்திற்கு உள்ளானது. தமிழ்நாட்டில் இவர்கள் தொடங்கிய “கமால் பிரதர்ஸ்” என்ற படநிறுவனமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

கமால் சகோதரர்கள் கலைஞர் கருணாநிதிக்கு பலவிதத்தில் பணஉதவி புரிந்திருக்கிறார்கள். கோபாலபுரம் வீட்டை 45,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கிக் கொடுத்தவர்களும் அவர்களே. இன்று கமால் சகோதரர்கள் வாங்கித் தந்த வீட்டை மக்களுக்கு தானம் கொடுத்து விட்டதாக கலைஞர் அறிவிக்கிறார். இந்த வீட்டை ஒரு காலத்தில் தனது “மேகலா பிக்சர்ஸ்” நிறுவனத்திற்காக அடகு வைத்து ஏலத்திற்கு வந்தபோது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வெறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு “எங்கள் தங்கம்” படத்தில் நடித்துக் கொடுத்து அந்த வீட்டை மீட்டுக் கொடுத்தார்கள் என்கின்ற செய்தியை நடிகர் ராதா ரவி தெரிவிக்கிறார்.

திரைப்படத்தயாரிப்பில் இறங்கி நொடித்துப் போன அவர்கள் வறுமையில் வாடி வதங்கியபோது, அவர்களின் பொருளாதார நிலைமையை யாரோ முதலமைச்சர் கலைஞரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒருகாலத்தில் நம்மிடம் உதவியை எதிர்பார்த்து நின்றவரிடம் நாம் போய் உதவி கேட்பதா?’ என்று தன்மானம் கருதி அவர்கள் கலைஞரைச் சந்திக்க மறுத்து விட்டனர். இந்தச் செய்தியை நான் அறிந்தபோது கலைஞர் தன் பழைய உறவுகளை நினைத்துப் பார்க்க மனமில்லாத கல்நெஞ்சம் கொண்ட மனிதரல்ல என்பதை உணர்ந்தேன்.

கமால் சகோதரர்கள் கலைஞரைச் சந்தித்திருந்தால் இவர்களுக்கு பொருளுதவி செய்திருக்கக் கூடும். வாய்ப்பினை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதைப் போன்று நாகூர் ஹனிபாவும் பதவியை கேட்டுப் பெற்று பயன் அடைந்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.

கலைஞர் அவர்களை மாடர்ன் தியேட்டர்ஸில் அறிமுகம் செய்து வைத்தது கவி கா.மு.ஷெரீப் என்பதை நாம் முன்பே ஆராய்ந்தோம். அவர் வசனம் எழுதிய ஒரு படத்திற்கு – அப்போது அவர் பிரபல வசனகர்த்தாவாக இல்லாமல் போன காரணத்தால் – படம் வெளிவந்தபோது அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்யப் பட்டிருந்தது. பிறகு கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்திற்கு வசனம் எழுதியபோதும் அவருடைய பெயர் இருட்டடிக்கப்பட்டு ஏ.எஸ்.எ.சாமியின் பெயரை வெளியிட்டார்கள். இத்தனை பெரிய அவமானம் அவர் சந்திக்க வேண்டிவரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. மனம் நொந்துப்போன கலைஞர் அவர்கள் மீண்டும் சேலத்திலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் மனைவி பத்மாவதியை அழைத்துக்கொண்டு திருவாரூருக்கு பயணமாகி வந்து சேர்ந்தார்.

“குடி அரசு” பத்திரிக்கையில் கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக எழுதி வந்த படைப்புகள் மக்களை எழுச்சிக் கொள்ள வைத்தன. இதற்கிடையில் கலைஞர் கதை வசனம் எழுதித் தந்த “மந்திரிகுமாரி” படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத்தின் அழைப்பு மீண்டும் வந்தது. கலைஞரை மறுபடியும் சேலம் வரச் சொல்லி அவருடைய எதிர்காலத்தின் மீது மிகவும் அக்கறை காட்டியவர் கவி.கா.மு.ஷெரீப். கலைஞர் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்வார் என்ற நம்பிக்கை ஷெரீப்புக்கு இருந்தது. கலைஞர் அவர்களின் வசீகரப் பேச்சுத்திறனையும் கனல் தெறிக்கும் எழுத்தாற்றாலையும் நன்கறிந்திருந்தார் அவர்.

அப்போது கலைஞரின் மனைவி பத்மாவதி கர்ப்பமாக (மு.க.முத்து) வேறு இருந்தார் பணத்திற்காக கலைஞர் அவர்கள் மிகவும் அல்லாடிக் கொண்டிருந்த நேரம் அது. கலைஞர் அவர்களின் எதிர்காலமே ஒரு கேள்விக்குறியாக இருந்தது. ஒருபுறம் பணக்கஷ்டம். இன்னொருபுறம் குறிக்கோள் எந்தி வாழ்க்கையின் ஏறுமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கலைஞர் அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார்.

பத்மாவதிக்கு குழந்தை பிறந்தது. தனது தந்தை முத்துவேல் அவர்களின் ஞாபகர்த்தமாக முத்து என்ற பெயரை வைத்தார். இவர்தான் பிற்காலத்தில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக(?) திரைப்படத்தில் இறக்கிவிடப்பட்ட மு.க.முத்து. இவர் பிறந்த சிறிது காலத்திற்குள் பத்மாவதியும் இறந்து போனார்.

இச்சமயத்தில் கலைஞர் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் கருணை ஜமால். இவர் மிகச் சிறந்த எழுத்தாளர். தமிழார்வலர். திருவாரூக்காரர்.

ஏற்கனவே ஈரோட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக இருந்த அனுபவம் கலைஞர் அவர்களுக்கு பெரிதும் கைகொடுத்தது.

துவக்கத்தில் துண்டு பிரச்சார ஏடாகவே முரசொலியானது கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் கலைஞர் அவர்கள் தனது 18-வது வயதில் (10-08-1942) பத்திரிக்கையாக வெளிக்கொணர்ந்தார். இம்முயற்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. பொருளுதவி மற்றும் சொந்த அச்சகம் இல்லாத காரணத்தினால் இது தடைபட்டுப் போனது. கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பரான கருணை ஜமால் அவர்களின் முயற்சியால் 14-01-1948 அன்று திருவாரூரிலிருந்து முரசொலி மீண்டும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1954-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து வார இதழாக வெளிவந்த முரசொலி 17-09-1960 முதல் நாளிதழாக வெளிவரத் துவங்கியது.

நின்று போயிருந்த முரசொலி பத்திரிகையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் திருவாரூரில் கலைஞர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  தன் மனைவியிடமிருந்த நகைகள் யாவையும் அடகு வைத்து முரசொலி பத்திரிக்கையை மீண்டும் தொடங்கினார் அவர். இருந்தபோதிலும் பத்திரிக்கை நடத்துவதென்பது அவர் நினத்ததுபோல் அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமாக இருக்கவில்லை. நிறைய முதலீடும், சொந்தமான அச்சகமும் தேவைப்பட்டது.

கலைஞர் தனது எண்ணத்தை கருணை ஜமாலிடம் தெரிவித்தபோது கொஞ்சமும் தயங்காமல் கலைஞருக்கு உதவி செய்ய முன்வந்தார். கருணாநிதி எழுத்தாற்றல் மீது பெருத்த நம்பிக்கை கொண்டிருந்தார் கருணை ஜமால்.  கருணை ஜமால் அவர்களை கலைஞர் நினைத்துப் பார்க்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கலைஞர் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக கருணை ஜமால் இருந்தார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் யாரும் கலைஞருக்கும் உதவ முன்வராத காலத்தில் கருணை ஜமால்தான் கலைஞரின் வாழ்க்கையில் ஒளிவிளக்காக திகழ்ந்திருக்கிறார்.

முரசொலி பத்திரிக்கையின் பிரதிகளை கருணை ஜமால் அவர்களே தன் சொந்த அச்சகத்தில் அச்சடித்துக் கொடுத்து, விற்பனையாளர்களுக்கு அனுப்பி, அதன்பின் தனக்குச் சேர வேண்டிய செலவுத் தொகையை பெற்று, கலைஞர் அவர்களுக்கு தன்னால் ஆன உதவியைச் செய்தார். காலத்தினால் செய்த இந்த உதவியானது கலைஞர் அவர்களின் முன்னேற்றத்திற்கும், வாழ்க்கைப் பயணத்திற்கும்  பெரிதும் துணை புரிந்தது.

கலைஞர் அவர்களின் உடல் உழைப்பும் அறிவுத்திறனும் முரசொலி பத்திரிக்கை வெற்றி பெற வழி வகுத்தது. முரசொலியில் எழுச்சிக் கட்டுரைகள் எழுதுவதோடு நிற்காமல் அவரே பிரதிகளைச் சுமந்துக் கொண்டு திருவாரூர் மற்றும் இதர இடங்களுக்குச் சென்று வினியோகம் செய்வார். அவருக்கு உதவியாக முரசொலியின் மேலாளர் கனகசுந்தரமும் முரசொலிக் கட்டுகளை சுமப்பது வழக்கம்.

திராவிட இயக்கத்தின் சார்பாக “குடி அரசு”, “விடுதலை”, “திராவிட நாடு” போன்ற ஏடுகள் மக்களிடையே பிரபலமாக இருந்த போதிலும், கருணை ஜமால் உதவியோடு கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் குறுகிய காலத்தில் “முரசொலி” இதழானது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது

 

Tags: , , , , ,

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (4-ஆம் பாகம்)


நாகூர் ஹனிபாவை கட்சியின் கொள்கைப் பாடல்களைப் பாடும் வெறும் ஒரு கட்சிப்பாடகராக மட்டும் கருத முடியாது. கட்சித் தலைமையுடன் அன்றிலிருந்தே அவருக்கிருந்த ஆளுமை மிகஅதிகம். கட்சித் தலைமைக்கும் அவரது அருமை பெருமை நன்றாகவே தெரியும்.

கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்த சாதிக் பாட்சாவின் மறைவுக்குப் பிறகாவது நாகூர் ஹனிபாவுக்கு உரிய பதவி அளித்து தகுந்த மரியாதை செய்திருக்கலாம். ஆனால் ஏனோ கலைஞர் அவர்களுக்கு அந்த நட்புணர்வு இல்லாமல் போனது மிகவும் ஆச்சரியம்.

கலைஞர் அவர்கள் தாராள மனது பண்ணி கட்சியில் நாகூர் ஹனிபாவுக்கு ஒரே ஒரு புரொமோஷன் கொடுத்தார். அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆமாம். அவரை பொதுக்குழு உறுப்பினர் என்ற பதவியிலிருந்து உயர்த்தி செயற்குழு உறுப்பினர் என்ற பதவியை மனமிறங்கி அளித்தார்.

சமநிலைச் சமுதாயத்தில் ஆளுர் ஷாநவாஸ் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி மிகவும் நியாயமானதாக நம் மனதுக்குப் படுகிறது.

“தி.மு.க. சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி. அண்ணா, அதன் தலைவராக இருந்தபோது, பொருளாளராக சாதிக் பாட்சா இருந்தார். சாதிக் பாட்சாவின் மறைவிற்குப் பிறகு அப்பதவி சமூகநீதி அடிப்படையில் முஸ்லீம் ஒருவருக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை.

அண்மையில் திமுகவின் துணைப் பொதுச் செயளாளர் பொறுப்பை உட்கட்சிப் பூசலின் காரணமாக பரிதி இளம்வழுதி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த இடத்திற்கு உடனடியாக வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டார். தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் பதவியை ராஜினாமா செய்யும்போது, அதே தலித் சமூகத்திலிருந்தே இன்னொருவரைத் தேர்வு செய்து சமூகநீதியை நிலைநாட்டியுள்ளது தி.மு.க. ஆனால் இந்த அளவுகோல் ஏன் கழகத்தில் உள்ள முஸ்லீம்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே நம் கேள்வி?”

என்ற வாதத்தை நம் முன் வைக்கிறார் ஆளூர் ஷாநவாஸ். மிகவும் நியாயமான கேள்வி.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சியிலிருந்த தங்களுக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி, பதவிகளை கேட்டுப் பெற்று, தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டபோது, சுயமரியாதைக்காரரான நாகூர் ஹனிபா தனக்கிருந்த அரிய வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாததாலேயே அவரை நாம் ‘பிழைக்கத் தெரியாதவர்’ என்று அழைக்க வேண்டியதுள்ளது.

ஓடி வருகிறான் உதயசூரியன்

நாகூர் ஹனிபா இதுவரை பாடியிருக்கின்ற கட்சியின் கொள்கைப் பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்றுப் பின்னணியில் பல சுவையான நிகழ்வுகள் மறைந்திருப்பதுண்டு. திமுகவின் தொடக்க காலத்தில் உதயசூரியன் சின்னத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்கு கட்சியின் தலைமைக்கு நாகூர் ஹனிபா என்ற பிரபலத்தின் காந்தக்குரல்தான் தேவைப்பட்டது.

ஆரம்ப காலத்தில் திமுகவின் ஆஸ்தான பிரச்சார பீரங்கியாய் கட்சியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு திமுகவிற்கு இரண்டு பிரபலங்கள் பக்கபலமாகத் திகழ்ந்தார்கள். ஒன்று மக்கள் கலைஞர் எம்.ஜி.ஆர். அவர்கள். மற்றொருவர் மக்கள் பாடகர் நாகூர் ஹனிபா.

“ஓடி வருகிறான் உதய சூரியன்” என்று நாகூர் ஹனிபாவின் குரல் தெருக்கோடியின் ஒலிபெருக்கியில் அதிரடியாய் ஒலிக்கையில் நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேற கட்சித்தொண்டன் மகுடி ஊதிய பாம்பாய் கட்டுண்டு படையெடுத்துப் போவான்.

இன்னொருபுறம், “உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்று படங்களில் எம்.ஜி.ஆர். வாயசைத்துப்பாடி உதயசூரியன் சின்னத்தை மார்கெட்டிங் பண்ணிக் கொண்டிருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது “வேறுதுவும் வேண்டாம். தொகுதிகளில் வெறுமனே எம்.ஜி.ஆர் தன் முகத்தை காட்டினாலே போதும். ஜெயித்து விடலாம்” என்பார் அறிஞர் அண்ணா. பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி,ஆர். பிரச்சாரத்திற்கு போக இயலாதிருந்த நேரத்தில் வெறுமனே அவரது ‘கட்-அவுட்’டை காண்பித்தே அவரை ஜெயிக்க வைத்தார்கள் திமுக தொண்டர்கள்.

அதே போன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு நாகூர் ஹனிபா நேரடியாக போக வேண்டும் என்பதில்லை. அவருடைய வெண்கலக் குரல் முழங்கும் இசைத்தட்டு அல்லது கேசட் போதும். ஆயிரமாயிரம் ஓட்டுக்களை அள்ளிக்கொண்டு வர.

அழைக்கின்றார் அண்ணா

இன்று எங்கு நோக்கினாலும் தலைவர்களின் ஆளுயர கட்-அவுட்களை வைத்து “மருத்துவர் ஐயா அழைக்கிறார்” “கேப்டன் அழைக்கிறார்” “திருமா அழைக்கிறார்” “வைகோ அழைக்கிறார்” என்ற வாசகத்தைப் பொறிக்கிறார்கள். இந்த மோகஅலை (Trend) அமோகமாக பரவுவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் நாகூர் ஹனிபா என்றால் அது மிகையாகாது.

“1955-ஆம் ஆண்டு, ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற புகழ் பெற்ற பாடலை இசைத்தட்டில் வெளியிடுமாறு HMV நிறுவனத்திடம் வேண்டினார் ஹனிபா. அதை மறுத்த அந்த நிறுவனம், ‘இஸ்லாமியப் பாடல்களையே பாடுங்கள்’ என்று சொன்னது. இந்தப் பாடலை பதிவு செய்யாவிட்டால் நான் வேறு பாடல்கள் பாட மாட்டேன்’ என்று மறுத்து, பின்னர் வென்றார் ஹனிபா. இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா? எந்தப் பாடலை வெளியிட முதலில் HMV மறுத்ததோ அந்த இசைத்தட்டுதான் அந்த வருடம் அதிகம் விற்று சாதனை படைத்தது”

என்று குமுதம் பத்திரிக்கையில் கேள்வி-பதில் பகுதியில் வாசகருக்கு அளித்த பதில் ஒன்றில் சுவையான தகவலைப் பரிமாறுகிறார் அரசு.

மற்ற பாடல்களைக் காட்டிலும் பல்வேறு சிறப்புக்கள் இந்த பாட்டுக்கு உண்டு.

“திருவாடுதுறை இராசரத்தினத்துக்குத் தோடி ராகம் போல ஹனிபாவுக்கு இந்தப் பாடல்” என்று சான்றிதழ் வழங்குகிறார் டாக்டர் கலைஞர்.

“‘அழைக்கின்றார் அண்ணா’ என்று ஹனிபாவை பாட வைத்து படமெடுத்து, அதைத் திரையிட அரசு அனுமதித்தால், திராவிட நாடு பெற்று விடுவேன்”

என அடிக்கடி குறிப்பிடுவாராம், அண்ணா என்று சமநிலைச் சமுதாயம் (ஜனவரி 2012) இதழில் குறிப்பிடுகிறார் ஆளுர் ஷாநவாஸ்.

கட்சியில் அனிபாவிற்கு இருந்த ஆளுமைக்கு இதைவிட வேறு ஒரு நற்சான்று தேவையில்லை என்று நினைக்கிறேன்.

திண்ணை இதழில் நானெழுதிய ஹனிபாவைப் பற்றிய கட்டுரை ஒன்றை படித்து விட்டு அதே இதழில் திரு. மலர் மன்னன் அவர்கள்

“அந்த நாட்களில் ஹனிஃபா தி.மு.க. மாநாடுகளில் தவறாமல் பாடும் பாடல் “அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா” என்பது. இதனைக் கட்டுரை ஆசிரியர் கையூம் மறந்து விடாமல் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்”

என்று நான் எழுத மறந்ததை குறைப்பட்டு எழுதியிருந்தார்.

திரைப்படத்தில் முதல் சீனில் கதாநாயகனை அறிமுகம் செய்ய வேண்டுமெனில் ஒரு யுக்தியை பயன் படுத்துவார் படத்தின் இயக்குனர். இந்த யுக்தி இன்று நேற்றல்ல எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து கையாளப்பட்டு வருகிறது. கதாநாயகன் ஒரு காரில் வந்து இறங்குவதாக இருந்தால் முதலில் காரின் டயரைக் காட்டுவார்கள். பிறகு காரின் கதவுகள் திறக்கப்பட்டு கதாநாயகனின் “Entry”-யை, அவரது காலணியிலிருந்து காமிரா Focus செய்யப்பட்டு கடைசியில்தான் முகம் காட்டுவார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் தியேட்டரில் கரகோஷமும் விசில் சத்தமும் கூரையைப் பிளக்கும். இதே பாணியைத்தான் திமுகவினர் கையாண்டனர்.

1960களில் அறிஞர் அண்ணா கலந்துக் கொள்ளும் பொதுக்கூட்டங்களில் பலவிதமான யுக்திகள் கையாளப்படும். விழா மண்டபத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடியிருப்பார்கள். சிறுவர் முதல் பெரியோர் மட்டுமின்றி தாய்க்குலங்களும் தத்தம் குழந்தைகளுடன் அணிஅணியாகத் திரண்டிருப்பார்கள். அலங்கார வளைவும், வரவேற்புத் தோரணங்களும், வண்ணப் பூக்கோவைகளும், வண்ண ஒளி அமைப்புக்களும், அந்த கூட்டத்திடலை விழாக்கோலம் காணச் செய்யும். மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கும் என் அறிவிக்கப்பட்டு இரவு 10-மணி வரை நேரத்தை இழுத்தடிப்பார்கள்.

கிரிக்கெட் மைதானத்தில் அறிவிக்கப்படும் கமெண்டரி போன்று “அண்ணா புறப்பட்டுவிட்டார்” “அண்ணா வருகிறார்” “அண்ணா வந்துக்கொண்டே இருக்கிறார்”. “அண்ணா இன்னும் சற்று நேரத்திற்குள் வந்து விடுவார்” “அண்ணா இதோ வந்து விட்டார்” என்று அவ்வப்போது அறிவிப்பு செய்துக் கொண்டே இருப்பார்கள்.

எதிர்பார்ப்பை அதிகம் உண்டாக்குவதற்காக வேண்டுமென்றே காலதாமதத்தை உண்டாக்குவார்கள். மாலையில் வந்து பேசவேண்டிய ஒரு கூட்டத்திற்கு மிகவும் தாமதமாக வருகிறார் அறிஞர் அண்ணா. “மாதமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை” என்று பேச்சைத் தொடங்கியதும் சோர்வடைந்திருந்த பொதுமக்களுக்கு எங்கிருந்துதான் உற்சாகம் பீறிட்டிக்கொண்டு வந்ததோ தெரியவில்லை; கைத்தட்டல் வானை முட்டியது. இதே பாணியை பின்பற்றி கூட்டத்திற்கு தாமதமாக வந்த கவிஞர் கண்ணதாசன் “சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும். எனக்கோ தாமதம் பிடிக்கும்” என்று வசனம் பேசி கைத்தட்டல் பெற்றார் என்பது நினைவில் நிற்கும் நிகழ்வு.

திமுக காரர்கள் மக்களை எதிர்ப்பார்ப்பின் நுனியில் இருக்க வைத்து அவர்களைப் பரவசப் படுத்துவதை ஒரு கலையாகவே கற்றிருந்தார்கள். ஆர்வக்களை சொட்டும் முகங்களை அதிசயிக்க வைக்கும் ஆற்றல் அவர்களுக்கு கைவந்தக் கலையாக இருந்தது.

அண்ணா வந்த பிறகும் மேடையில் உடனே ஏறி மைக்கை பிடித்து விடமாட்டார். மேடைக்குப் பின் நின்று அவர் மூக்குப்பொடி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் நாகூர் ஹனிபாவை மேடை ஏற்றுவார்கள். ஹனிபா மேடை ஏறியதுமே கூட்டம் களைகட்டத் தொடங்கிவிடும். ஹனிபாவின் ஆஜானுபாகுவான உயரம், மிடுக்கான தோற்றம், கணீரென்ற குரல் இவைகள் அவர்மீது காந்தசக்தி போன்ற ஓர் ஈர்ப்பை மக்கள் மத்தியில் உண்டுபண்ணியது.

பொதுமக்கள் ஆர்வமிகுதியால் எதிர்பார்ப்பின் உச்சகட்ட நிலைக்கு எட்டியிருப்பார்கள். இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். “அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா” என்று அந்த சிம்மக்குரலோன் ராகமெடுத்து பாடலை கர்ஜிக்கையில் மெய்மறந்து போவார்கள் கூட்டத்தினர். பாடல் முடியும் தறுவாயில் ஒரு அட்டகாசமான Entry கொடுப்பார் அறிஞர் அண்ணா. பொதுமக்கள் அடையும் பரவசநிலையை சொல்லவா வேண்டும்? காமிராக்கள் மின்னலாய் பளிச்சிட ‘கிளிக், கிளிக்‘ என்ற சப்தம் தொடர்ச்சியாய் கேட்கும். பெரும் பரபரப்புக்கிடையே ‘அண்ணா வாழ்க’ ‘அண்ணா வாழ்க’ என்ற முழக்கம் இடைவிடாது ஒலிக்கும். அதற்குப் பிறகுதான் அண்ணா பேசத் தொடங்குவார்.

“நீங்கள் பாடி முடித்தபின்தான் எங்களை மேடைக்கே அழைக்கிறார்கள்” என்று ஒருமுறை முரசொலி மாறன் அவர்கள் என்னிடம் வேடிக்கையாகக் கூறினார்” என்று நாகூர் ஹனிபாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக அன்றிலிருந்து இன்றுவரை நாகூர் ஹனிபா ஒரு பகடைக்காயாக, பலிகடாவாக, பரிசோதனை எலியாக, கறிவேப்பிலையாகவே திமுகவிற்கு பயன்பட்டு வந்தார் என்பதில் நன்றாகவே நமக்கு விளங்குகிறது.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா

19.4.1961-ல் கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி ‘தமிழ்த் தேசியக் கட்சி’-யை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு இது. கண்ணதாசனும் திமுகவிலிருந்து வெளியேறியிருந்த காலம் அது. அவர்கள் இருவரையும் சாடுவதுபோல் ஒரு பாடல் பாட வேண்டும் என்ற ஆவல் நாகூர் ஹனிபாவின் எண்ணத்தில் உதித்தது. ‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவான்’ என்பது போல மேடை நாடகங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதி வந்த உள்ளுர்க் கவிஞர் நாகூர் சலீமை அணுகி தன் எண்ணத்தை வெளியிட்டார்.

“வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற சரணத்தைக் கேட்டதுமே பரவசப்பட்டுப் போனார் நாகூர் ஹனிபா. அவர் நினைத்தைப் போலவே அப்பாடல் பெருமளவில் வரவேற்பை பெற்றது. இடம், பொருள், ஏவலுக்கு ஏற்றார்போல் அப்பாடல் பட்டி தொட்டிகளெங்கும் ஒலித்தது. அதன் பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் திமுகவை விட்டு வெளியேறிய போதும், வைகோ அவர்கள் கலைஞரை விட்டு பிரிந்தபோதும் இதே பாடல்தான் மூலை முடுக்குகள் எங்கும் ஒலித்தது. அதன் பின்னர் மாறன் சகோதரர்கள் கலைஞர் அவர்களை பகைத்துக்கொண்டு கிளம்பியபோது “கிளிக்கு ரெக்கை மொளைச்சிடுச்சு, ஆத்தை விட்டே பறந்து போயிடுச்சு” என்ற பாடல் ஒலிக்கவில்லை.

அச்சமயத்திலும் நாகூர் ஹனிபாவின் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடல்தான் கைகொடுத்தது. தற்போது வைகோவின் கட்சியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறி விட்டார். “பட்ட பாடுகளும் பதிந்த சுவடுகளும்” என்ற தொடரை குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதத் துவங்கி விட்டார். இனி சற்று காலத்திற்கு ம.தி.மு.க.வின் மேடைகளில் மறுபடியும் நாகூர் ஹனிபாவின் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடல் ஒலிப்பதை நாம் கேட்க முடியும்.

நாகூர் ஹனிபாவை வெறும் ஒரு பாடகனாக மட்டும் தராசில் வைத்து தரம் பார்க்க முடியாது. அவர் ஒரு சகாப்தம். அவருடைய இடத்தை நிரப்ப இன்னொருவர் அவ்வளவு சீக்கிரம் வருவாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கு கிண்டல்

காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அக்கட்சியை கிண்டல் செய்து ஒரு பாடலைப் பாடினார் நாகூர் ஹனிபா.

“கீழே இறங்கு..
மக்கள் குரலுக்கு இறங்கு.
ஆண்டது போதும்.
மக்கள் மாண்டது போதும்”

என்ற பாடல் வரிகள் காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்கியது. மக்களிடையே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைவிட வார்த்தைகளாலே ‘சுருக்’கென்று காங்கிரஸ்காரர்களின் நெஞ்சங்களை தைத்த பாடல் ஒன்று உண்டு.

“சோறு போடாத சோம்பேறியே!
பதவி நாற்காலி உனக்கொரு கேடா?
ஏறிய பீடத்தில் இருந்து சுவைத்திட,
இது உன் பாட்டன் வீடா?”

என்ற பாடல்தான் அது. இந்த இருபாடல்களை எழுதியதும் நாகூர் சலீம்தான். “எலிக்கறியைத் தின்னச் சொன்ன காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் ஓட்டு?” என்ற தெரு வாசகங்களும், இந்தப் பாடலும்தான் காங்கிரஸ் கட்சியை அரியாசனத்திலிருந்து கீழே இறக்க உதவிய பயங்கர ஆயுதங்களாக இருந்தன என்றால் அது மிகையாகாது.

“வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை வலிமையானது” என்றான் நெப்போலியன். ஹனிபாவின் பாடல்கள் பேனாமுனையைக் காட்டிலும் வலிமையானதாக இருந்தது.

(இன்னும் வரும்)

அப்துல் கையூம்
https://nagoori.wordpress.com

 

Tags: , , ,

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (3-ஆம் பாகம்)


கலைஞர் ஓர் ஆச்சரியம்

மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் நாகூர் ஹனிபாவுக்கு மட்டுமே ‘அல்வா’ கொடுத்தாரா அல்லது ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்திற்கே ‘அல்வா’ கொடுத்தாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. கலைஞர் அவர்களின் அபிமானத்திற்கு ஆளாகி இதுநாள் வரை கலைஞரையே துதிபாடிவரும் என் மானசீக குரு கவிக்கோ அப்துல் ரகுமானை இவ்வேளையில் இங்கு நான் குறிப்பிடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

எழுத்தாளர் சோலை, கவிக்கோ, கலைஞர்

வெற்றி பல கண்டு – நான்
விருது பெற வரும்போது
வெகுமானம் என்ன வேண்டும்
எனக் கேட்டால் – அப்துல்
ரகுமானைத் தருகவென்பேன்

என்று கவிக்கோ அப்துல் ரகுமானை வெகுவாகப் பாராட்டியவர் கலைஞர். அப்படிப்பட்ட ஒரு நட்பிறுக்கம் அவர்கள் இருவருக்குமிடையில் இன்றும் நிலவுகிறது.

என் கவிதை உனக்கு பூச்சொரியும்
ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம்.

என்று கவியரங்கம் ஒன்றில் கலைஞரை வானளாவப் புகழ்ந்து கவிதை பாடுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

கவிக்கோ அவர்களே! கலைஞரைப் பார்த்தால் உங்களுக்கு மட்டும்தான் ஆச்சரியமாக இருக்கிறதா? எங்களுக்கும்தான் பெருத்த ஆச்சரியம்.

அவருடைய தமிழ்ப்பற்று எங்கே போயிற்று?
அவருடைய பகுத்தறிவுக் கொள்கை எங்கே பறந்தது?
அவருடைய திராவிட உணர்வு என்ன ஆனது?
எப்படி இருந்த இவர் எப்படி ஆகி விட்டார்?

என்று எங்களுக்கும்தான் ஆச்சரியம் தாங்கவே முடியவில்லை.

ஆரம்பத்தில் “கடவுள் இல்லை” என்ற நாத்திகக் கொள்கையில் ஊறித்திளைத்த கலைஞர் அவர்கள். “ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்” என்ற கொள்கைக்கு மாறி, இன்று ரகசியமாக ஆன்மீகத்திற்கும் மாறி விட்டார். என்ன ஓர் ஆச்சரியம்?

திராவிட பாரம்பரியத்தில் வந்த நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி சாமி கும்பிட்டதை விமர்சித்த கலைஞர் அவர்கள், தான் தாலி கட்டிய மனைவி சாய்பாபாவுக்கும், சாமியார்களுக்கும் பக்தையாகிப் போனதைப் பற்றி எதையும் சொல்ல முடியாமல் மெளனம் சாதிக்கிறார்.

ஆமாம். கலைஞரின் போக்கைப் பார்த்த எங்களுக்கும் ஆச்சரியம்தான்.

மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிந்த திராவிட பாரம்பரியத்தில் வந்த கலைஞர் மஞ்சள் துண்டுதான் ராசி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.

புத்தபிரான் சொன்னதற்காக அவர் அதை அணிகிறாரா, ஓஷோ சொன்னதற்காக அணிகிறாரா, நண்பர் இராமதாஸ் அணிவித்த காரணத்தினால் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டாரா அல்லது ஜோஸியர் ஆலோசனையின் பேரில் அணிந்துக் கொண்டாரா என்பது “பெர்முடா முக்கோண”த்தைக் காட்டிலும் மர்மமாய் இருக்கிறது.

“மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது” – இது பூம்புகார் படத்தில் டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய பிரபலமான ‘பஞ்ச்’ டயலாக். நடந்தவைகளை வைத்து பார்க்கும்போது நம் தலைவரின் ‘மனசாட்சி’ உறங்க ஆரம்பித்து, வீல்சேரில் மனக்குரங்கு வாக்கிங் கிளம்பி விட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

சிறுபான்மைச் சமுதாயத்திற்கு தான் ஒரு காப்பாளன் என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருந்த கலைஞர் அவர்களின் மனநிலை மாறிப்போனது ஏன் என்று இதுவரை நமக்கு புரியாதப் புதிர்.

“சங்கு மார்க் கைலிகளைத்தான் நான் விரும்பி அணிவேன்” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, கோவலன் கதை எழுதிய அவரை முஸ்லீம்களின் காவலன் என்று ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன?

இப்படி எல்லா விதத்திலும் மாறிப்போன கலைஞர் அவர்களைக் காண்கையில் எங்களுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை கவிக்கோ அவர்களே!

“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற ரஜினிகாந்தின் பஞ்ச் டயலாக்கிற்கு அடுத்தபடியாக . “நான் லுங்கி அணியாத முஸ்லிம், தொப்பி போடாத இஸ்லாமியன்” என்னும் கலைஞரின் இந்த பஞ்ச் டயலாக்தான் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” – இதுவும் டாக்டர் கலைஞரின் பஞ்ச் டயலாக்கில் ஒன்று.

“முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்”என்றெல்லாம் பேசிப் பேசியே, வாய்ச்சொல்லில் வீரராக, முஸ்லீம்களின் காப்பாளனாக, காவியநாயகராக, Good Samaritan-ஆக, இஸ்லாமியர்களை தன்பால் ஈர்த்தவர் கலைஞர் கருணாநிதி.

இன்று இஸ்லாமியச் சமூகம் இத்தனைப் பிரிவாக போனதற்கு காரணம் கலைஞர் அவர்கள்தான். அன்று காயிதேமில்லத் உயிரோடு இருந்த காலத்தில் பச்சைக்கொடி ஏந்தி, கட்டுக்கோப்பாக ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்த சமூகம் இன்றும் அதுபோலவே இருந்திருந்தால் இந்நேரம் இஸ்லாமியச் சமூகத்தின் பிரதிநிதிகள் விஜயகாந்த் கட்சியை விட சட்டசபையில் அதிகம் இருந்திருப்பார்கள். நமக்குத் தேவையான அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் போராடிப் பெற்றிருப்பார்கள்.

அப்துல் லத்தீப், காதர் மொய்தீன் போன்ற அப்பாவி நபர்களை பகடைக்காயாக வைத்து அவர் ஆடிய சதுரங்க விளையாட்டை – இஸ்லாமியச் சமுதாயத்தில் கலைஞர் ஏற்படுத்திய பிரிவினையை – இந்தச் சமுதாயம் ஒருக்காலும் மன்னிக்கவே மன்னிக்காது.

இதோ பாருங்கள், கலைஞர் அவர்களுக்கு ஏற்பட்ட முதுகுவலி கவிக்கோ அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகின்றது

முதுகு வலிக்கிறது உனக்கு
வலிக்காதா…?
எத்தனை காலம்தான்
எங்களை சுமக்கிறாய்.

என்று வினா தொடுக்கிறார் கவிக்கோ.

கலைஞருக்கு மட்டுமா முதுகு வலிக்கிறது. எங்களுக்கும்தான் வலிக்கிறது. கலைஞர் எங்கள் புறமுதுகில் இப்படி குத்தி விட்டாரே என்று மனம் வெதும்பி துடிக்காத இஸ்லாமியச் சகோதரனே இருக்க முடியாது.

தன் வாழ்நாள் முழுதும் கலைஞரைப் புகழ்ந்து கவிதை வடித்துக் கொண்டிருந்த கவிக்கோ அவர்களுக்கும், தன் வாழ்நாள் முழுதும் வாழ்த்திப் பாடிக்கொண்டிருந்த இசைமுரசு இ.எம்.ஹனிபாவுக்கும் கலைஞர் செய்த கைம்மாறு ஒன்று உண்டு.

கெட்டதை எழுதும்போது நல்லதையும் சேர்த்து எழுதத்தானே வேண்டும்? இருவருக்கும் வக்ஃபு வாரியத் தலைவர் பதவியை வாரி வழங்கினார் கருணையின் வடிவமான கலைஞர் கருணாநிதி.

முஸ்லீம் சமுதாயத்தினரிடையே இருந்த ஒற்றுமையைக் குலைத்துவிட்டு, பல்வேறு பிரிவினைகளை உண்டாக்கி, ஒட்டு மொத்தமாக இஸ்லாமியச் சமூகத்திற்கு இப்படிப்பட்ட ஒரு துரோகத்தைச் செய்துவிட்டு கவிக்கோ அவர்களுக்கும் இசைமுரசு அவர்களுக்கும் இந்த பதவியை வாரி வழங்கியதால் மட்டும் கலைஞர் அவர்களின் கறை அழிந்து விடுமா என்ன?

நீ எங்கள் கிழக்கு !
உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு !

என்று கலைஞரைப்பார்த்து கவிதை பாடினார் கவிஞர் வாலி. “நீ எங்கள் கிழக்கு” என்றால் “எங்களின் விடிவுகாலம் உன்னாலேதான்” என்று பொருள். “உனக்கு என்றும் இல்லை மேற்கு” என்றால் “உன் புகழுக்கு அஸ்தமனமே கிடையாது” என்று பொருள். “நீ வடக்கு வழிபடும் தெற்கு” என்றால் “சோனியா காந்தி அம்மையார் உன் கருணையால்தான் ஆட்சி செய்துக் கொண்டு இருக்கிறார்” என்று பொருள்.

இந்த வரிகளைப் படித்ததும் எனக்கு பழைய முழக்கங்கள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது

“வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற உணர்ச்சியூட்டும் முழக்கத்தை முன்வைத்தே அண்ணா வழி வந்த கலைஞர் அவர்கள் நம் திராவிட உணர்ச்சியை தட்டி எழுப்பி நம்மை பரவசப் படுத்தினார். அதற்குப்பிறகு நடுவண் அரசோடு உறவு கொண்டு அமைச்சர் பதவிகளை பெற்ற திமுகவின் தலைவர் கருணாநிதி, “வடக்கு வழங்குகிறது, தெற்கு வாழ்கிறது” என்று சோனியாகாந்தி கலந்துகொண்ட கூட்டத்திலேயே பகிரங்கமாகப் பேசி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தார்.

வலம்புரிஜானுக்கு கொடுத்த “வார்த்தைசித்தர்” பட்டத்தை வாபஸ் பெற்று “வாழும் வள்ளுவருக்கு” கொடுத்திருக்கலாம்.

நாத்திகம் போன்ற விஷயங்கள் திமுகவிடமிருந்து எப்போதோ விடைபெற்றுக்கொண்டது. “பிராமண எதிரிப்பு?” – அது அவ்வப்போது தேவைப்படும்போது வந்து வந்து போகும். தமிழினம், தமிழுணர்வு போன்ற விஷயங்கள் இலங்கைப் பிரச்சினைக்குப் பிறகு மிகவும் கவனமாகவும் ரகசியக்குரலிலுமே முழங்கப் படுகிறது.

“பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக” திராவிட இயக்கங்களின் அடிப்படையான கொள்கைகளை “திராவிடக் கட்சிகள்” என்று பெயரளவில் செயல்படும் அனைவரும் காற்றில் பறக்கவிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது பரிதாபமான உண்மை.

கவிக்கோ சொன்னதுபோல் கலைஞர் ஓர் ஆச்சரியம். அவரது மனமாற்றங்கள் சிதம்பர ரகசியம். அவரது ஒவ்வொரு செயலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

1996-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களைப் பெற்று, வெற்றி கண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது, “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

கலைஞர் கருணாநிதி அவர்களின் தன்னிகரில்லா தமிழ்ப்பற்றை புகழாத நாவுகளே இல்லை. பாராட்டாத பத்திரிக்கைகள் இல்லை. அதே கலைஞர் கருணாநிதி, தான் தொடர்பு கொண்ட தொலைகாட்சி ஊடகங்களுக்கும், அவர்களது வாரிசு நிறுவனங்களுக்கும், தன் குடும்பத்தார்கள் தயாரிக்கும், வினியோகிக்கும் பெரும்பாலான திரைப்படங்களுக்கும் பிறமொழி பெயர்கள் வைப்பதை கண்டும் காணாததுமாய் இருந்து புரட்சி செய்தார்.

என்ன ஒரு மாற்றம் பார்த்தீர்களா? தனக்கு ஒரு சட்டம் பிறருக்கு ஒரு சட்டமா? கலைஞரின் கொள்கை நமக்கு புரியவே மாட்டேன்கிறது. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு என்றார். “சிவாஜி” என்ற பெயரெல்லாம் தமிழ் பெயராம். நம்புங்கள்.

உதயநிதி ஸ்டாலின் கதநாயகனாக நடித்த படத்திற்கு “ஒரு கல்… ஒரு கண்ணாடி” என்று பெயர் வைத்தார்கள். அதையும் சுருக்கி கச்சிதமாக “ஒ.க.. ஒ. க..” என்று வைத்தாலென்ன என்று மூளையை கசக்கினார்கள். ஏதோ தெலுங்கு பேச்சு போல அசிங்கமாக உள்ளது என்ற கருத்து தெரிவிக்கப்பட உடனே “O.K. O.K.” என்று பெயரை மாற்றி படத்தை வெளியிட்டார்கள். பெயர் மாடர்னாக இருக்கிறது, ஈர்ப்பாக இருக்கிறது என்று அச்செயலுக்கு புகழ்மாலை வேறு. இந்த கண்றாவியை எல்லாம் மவுனமாக அமர்ந்து இரசித்த நம் தலைவரின் தமிழ்ப்பற்றை எப்படி புகழ்வதென்று எனக்குத் தெரியவில்லை.

ஏன் இந்த மனமாற்றம் கலைஞருக்கு? நமக்கு சொல்லத் தெரியவில்லை.

கவிக்கோ சொன்னது போல கலைஞர் என்றாலே ஆச்சரியம். ஆமாம் எங்களுக்கும்தான்.

கடந்த 1967-க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள். இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் அவர்கள் பெரிய முதலாளிகளாக வலம் வருகிறார்கள். கலைஞர் அவர்களின் குடும்பமோ உலகப் பணக்காரர்களின் முன்னணி வரிசையில் ஒன்றாகத் திகழ்கிறது.

இதோ தன் வாழ்நாள் முழுதும் திமுகவின் உயிர்நாடியாகத் திகழ்ந்த அந்த வரலாற்று நாயகனான நாகூர் ஹனிபா, உச்ச ஸ்தாயியில் பாடிப் பாடியே இரத்த வாந்தி எடுத்து, சிறுகச் சிறுக சிமெண்டும், செங்கல்லும், இரும்புக்கம்பியுமாய் வாங்கி கட்டிய வீட்டில், தன் வயோதிக காலத்தில், தனிமையாய் அமர்ந்து கலைஞர் அவர்களோடு தனக்கிருந்த பால்ய நட்பையும் அவரது தாராள மனதையும் சிலாகித்து அசைபோட்டு, தன்னைக் காண வருவோரிடத்திலெல்லாம் கலைஞரின் புகழைப் பரப்பி வருகிறார்.

இதனால்தான் நாகூர் ஹனிபாவின் பெயரை பிழைக்கத் தெரியாதவர்களின் வரிசையில் இணைக்க வேண்டும் என்று இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன்.

– அப்துல் கையூம்
https://nagoori.wordpress.com

(இன்னும் வரும்)

 

Tags: , , , ,