நாகூர் – எத்தனையோ இசைக்கலைஞர்களை ஈன்றெடுத்த ஊர். எத்தனையோ இசைக் கலைஞர்களுக்கு புகலிடம் தந்த ஊர். எத்தனையோ இசைக்கலைஞர்களை கைத்தூக்கி விட்ட ஊர். அதனால்தான் ஆஸ்தான பாடகர்களும் ஆஸ்கார் நாயகர்களும் இவ்வூரை வலம் வருகிறார்கள்.
தமிழகத்தின் மிகச் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவர் கே.அம்பி சுவாமிநாதன். இவர் தபேலா வாசிப்பதில் வல்லவர். இவர் செய்யும் தனிஆவர்த்தனம் மற்றும் ‘ஜுகல் பந்தி’ மணிக்கணக்கில் இரசிக்கக்கூடியவை.
இவருக்கு இசையுலகில் அறிமுகம் தேடித்தந்தவர் நாகூர் ஹனிபா அவர்கள்தான். தனது பதினாறாவது வயதிலிருந்து இசைமுரசு நாகூர் ஹனிபாவுக்கு இவர் தபேலா வாசித்து வந்தார். இவரைப்போன்று எத்தனையோ இசைக்கலைஞர்களை கைத்தூக்கிவிட்ட பெருமை நாகூர் ஹனிபாவைச் சாரும். இன்று தமிழகம் முழுவதும் அறியப்படுகின்ற ஒரு இசைக்குழு “கும்பகோணம் ஜேம்ஸ் பேண்டு வாத்தியக்குழு”. அதன் நிறுவனர் ஜேம்ஸ் பலகாலம் நாகூர் ஹனிபாவின் இசைக்குழுவில் கிளாரினெட் இசைத்துக் கொண்டிருந்தவர்.
அம்பியின் இசைப்பயணம் நாகூரிலிருந்து தொடங்கியபின் சென்னையில் அவருக்கு மென்மேலும் புகழைத் தேடித் தந்தது. அவருடைய அளப்பரிய திறமைக்கு ஏராளமான வாய்ப்புக்கள் கிடைத்தன. டி.எம்.செளந்தர்ராஜன் இசைக்குழுவில் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் வாசித்து வந்தவர் இவர். சீர்காழி கோவிந்தராஜன், குன்னக்குடி வைத்தியனாதன் போன்ற புகழ்மிக்க கலைஞர்களுக்கு வாசித்த பெருமை இவருக்குண்டு.
ஒருசமயம் நாகூரில் நடந்த இசைக்கச்சேரி ஒன்றில் தனிஆவர்த்தனமாய் ஏழு சுதிகளுக்கும் ஏழுவிதமான சுதிகளில் பலவிதமான தபேலாவை மெருகேற்றி வைத்துக்கொண்டு “அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெனப்பு” என்ற பாடலை தாளம் பிசகாமல் இவர் இசைப்பதை கேட்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. வெறும் தோல்கருவியிலேயே ஒரு பாடலை இசைத்து, தபேலாவை பேசவைத்த இவரது அபார திறமையைக் கண்டு அப்போது பிரமித்துப் போனேன்.
1988-ஆம் ஆண்டு பிரஞ்சு நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரஞ்சு நாட்டவர்களும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர். தனிஆவர்த்தனத்தில் நாகூர் அம்பி வெளிக்காட்டிய அபரிதமான பன்முகத்திறமையைக் கண்டு அவர்கள் பெரிதும் வியந்தனர்.
அம்பி சுவாமிநாதன், இசை பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது தந்தை கல்யாணம் பழம்பெரும் இசையமைப்பாளர். ஆரம்பக் கால கட்டங்களில் புலவர் ஆபிதீன் எழுதி நாகூர் ஹனிபா பாடிய பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மற்றும் எண்ணற்ற இஸ்லாமிய, கத்தோலிக்க கிறிஸ்த்துவ பாடல்களுக்கும், இந்துமத பக்தி பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.
1953-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த “ஜெனோவா” படத்திற்கு இசையமைப்பாளர்களாக பணியாற்றியவர்கள் டி.ஏ.கல்யாணம் மற்றும் ஞானமணி, இப்படத்தில் மூன்றாவது இசையமைப்பாளராக வந்து இணைந்தவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இந்த கல்யாணமும் நாகூர் ஹனிபாவின் பாடல்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த கல்யாணமும் ஒருவர்தான் அல்லது வெவ்வேறு நபர்களா என்ற விவரம் எனக்கு சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்.
அம்பியின் அறிமுகத்தை இப்படி சொன்னால் எல்லோருக்கும் எளிதாகப் புரியும். பிரபல திரைப்படப் பாடகி எஸ்.சரளாவின் கணவர் இவர். சரளா நாகூர் ஹனிபாவுடன் இணைந்து இஸ்லாமியப் பாடல்கள் பாடியிருக்கிறார். இலங்கையின் புகழ்மிக்க இஸ்லாமியப் பாடகர் மெய்தீன் பேக் அவருடன் 70-களில் இணைந்து பாடியிருக்கிறார். மெய்தீன் பேக் அவர்களின் ஏராளமான பாடல்கள் நாகூர் புலவர் ஆபிதீன் அவர்கள் இயற்றியது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. அதுமட்டுமின்றி ஏனைய இஸ்லாமியப் பாடகர்கள் தாலிப். வாஹித் போன்றவர்களுடனும் சரளா இணைந்து பாடியிருக்கிறார்.
இவர் பாடகர் தாலிபுடன் இணைந்து பாடிய
அல்லாஹ்வின் தூதே! அருள் தீபமே!
எங்கள் யா நபி! எங்கள் யா நபி!
எல்லோரும் போற்றும் எழில் ரூபமே
எங்கள் யா ஹபீப்! எங்கள் யா ஹபீப்!
என்ற பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
கவிஞர் நாகூர் சலீம் இயற்றிய எண்ணற்ற இஸ்லாமியப் பாடல்கள் சரளாவின் தனிக்குரலில் இசைத்தட்டுக்களாக வெளிவந்துள்ளன.
“பேசும் தெய்வம்” படத்தில் கே.வி.மஹாதேவன் இசையில் சூலமங்கலம் ராஜலட்சுமியிடன் சரளா இணைந்து பாடிய
“நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடியில்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே”
என்ற பாடல் சரித்திரச் சாதனை கண்டது. கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள், அறுபதாம் கல்யாணம் என்று எந்தவொரு சடங்கு சம்பிரதாயங்களில் இப்பாடல் ஒலிபெருக்கியில் ஒலிக்காத நிகழ்ச்சியே கிடையாது என உறுதியாகக் கூறலாம்.
“சிந்தனையில் மேடைகட்டி
கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து
எந்தனையே பாட வைத்தான்”
என்ற பாடல் சரளா சீர்காழி கோவிந்தர்ராஜனுடன் இணைந்து பாடியது.
“வருவாயா வேல் முருகா – என்
மாளிகை வாசலிலே”
மேற்கூறிய இந்த இரண்டு பாடல்களும் முருகன் பக்தி பாடல்கள் வரிசையில் முதலிடம் பெற்றவை.
திரைப்படங்களில் இவர் சீர்காழி கோவிந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், சூலமங்கலம் ராஜலட்சுமி, எல்.ஆர்.ஈஸ்வரி போன்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
பாடகி சரளா பற்றிய மேலும் விவரங்கள் சிலவற்றை என் நண்பர் நாகூர் ரூமியின் வலைப்பதிவில் “குரலுக்கு வயதில்லை” என்ற தலைப்பில் படித்து மகிழலாம்.
தபேலா அம்பியின் முழுப்பெயர் கே.அம்பி சுவாமிநாதன். இவர் பெயரை நாகூர் அம்பியுடன் குழப்பிக் கொள்வோர் உண்டு. அவரது முழுப்பெயர் நாகூர் எஸ்.அம்பி ஐயர். இவரது குடும்பத்தார் சிலர் நாகூரில் கல்வித்துறையில் பணியாற்றியவர்கள். நாகூர் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள்
ஏழிசை மன்னர் எம்.கே,தியாகராஜ பாகவதருக்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தவர் இந்த நாகூர் அம்பி ஐயர். .
அந்நாட்களில் தியாகராஜ பாகவதருக்கு வாசித்து மிகப் பிரபலமாக திகழ்ந்த பக்க வாத்தியக்காரர்களில் வயலின் சேதுராமைய்யா, மைசூர் குருராஜப்பா, கோவிந்த சாமி நாயக்கர், திருச்சி பால சுப்பராயலு, மதராஸ் ஏ.கண்ணன், குத்தாலம் சிவ வடிவேலுப்பிள்ளை, மீசை முருகேஷ், டி.வி.திரவியம், மன்னார்குடி நடேசப்பிள்ளை மற்றும் நாகூர் அம்பி ஐயர் – இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
1981-82 -க்கான கலைமாமணி விருது தமிழக அரசால் மிருதங்கக் கலைஞர் நாகூர் எஸ்.அம்பி அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நாகூரில் தொடரும் இசைப் பாரம்பரியம் வரலாற்று பெருமைமிக்கது. கத்துக்குட்டி இசைவாணர்களுக்கெல்லாம் கலிமாமணி விருது வழங்கி கெளரவித்த தமிழக அரசு கர்னாடக சங்கீதத்தில் ஜம்பவனாக விளங்கிய நாகூர் தர்கா வித்துவான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களை கண்டுக்கொள்ளாமல் இருந்தது பெரும் வருத்தத்தை அளிக்கிறது.