
வாழ்நாள் முழுவதும், கம்பராமாயணத்தின் இலக்கிய நயத்தை ஊரரிய உலகறிய பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தவர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல்.
அதற்கு மாறாக, தன் இறுதி மூச்சுவரை கம்பராமாயணத்தை முழுமூச்சாக எதிர்த்து அதில் காணப்படும் கருத்துக்களை கடுமையாக விமர்சித்து வந்தவர் தந்தை பெரியார்.
தென்துருவமாகவும், வடதுருவமாகவும் செயல்பட்ட இவர்கள் இருவருக்குமிடையே அப்படி என்ன ஒரு தொடர்பு இருக்க முடியும் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?
தந்தை பெரியார் மீது நீதிபதி இஸ்மாயீல் கொண்டிருந்த அபிப்பிராயம் எத்தகையது என்பதனை கீழ்க்கண்ட அவரது சொற்பொழிவை படித்தாலே நன்கு விளங்கும். (30-5-79 அன்று சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற “பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை” திறப்பு விழாவில் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் ஆற்றிய உரை இது)
நண்பர் திரு. வீரமணி அவர்களது பேச்சுக்குப்பின்னர் நான் என்னுடைய பேச்சினை ஒரு வழியிலே மாற்றிக் கொள்ள வேண்டியவனாக இருக்கின்றேன். அவர்கள் சில வார்த்தைகள் கூறி இருக்காவிட்டால் நான் வேறுவிதமாக என்னுடைய பேச்சினை அமைத்துக் கொண்டு இருந்திருப்பேன்
ஆனால், அவர்கள் சொன்ன சிலவற்றின் காரணமாகத் தான் ஒரு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஒருவிதத்தில் பார்க்கப்போனால் இந்தக் கூட்டத்தில் பங்கு கொள்வதற்கு என்னைப்போல் லாயக்கு இல்லாதவன் வேறு யாருமே இருக்க முடியாது! அதே சமயத்தில் இந்தக் கூட்டத்தில் பங்கு கொள்ள என்னைப் போலத் தகுதி உள்ளவரும் வேறு யாரும் இருக்கமுடியாது! ஏதோ ஒரு புதிர் போடுவதுபோல் இருக்கின்றதே! – இந்தப் புதிரை எப்படி அவிழ்ப்பது? என்பன போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு ஏற்படுமேயானால் நானே அதனை அவிழ்த்துக் காட்டுகிறேன்.
எனது மாணவர் வீரமணி!
வீரமணி அவர்கள் ஓர் அளவுக்கு என்னைப் புகழ்ந்து பேசியதற்குக் காரணம், வீரமணி அவர்கள் சட்டக் கல்லூரியிலே ஓர் ஆண்டு என்னுடைய மாணவராக இருந்தது தான். இதுவும் ஓர் புதிராக – ஆசிரியரைப் புகழ்ந்து பேசுகின்ற மாணவர்களை இன்று காண்பது அபூர்வமாக இருக்கின்றது. ஆசிரியரைப் புகழ்ந்து பேசுகின்ற மாணவர் அழைத்து இருக்கின்றார்; இதை ஆசிரியரும் ஒப்புக்கொள்கின்றார் என்பதுவம் ஒரு புதிரே. ஆனால் உண்மை என்ன? அந்தப் புதிரை எப்படி அவிழ்ப்பேன என்று சொன்னால், உண்மை பேசுவது மூலமாகவே அவிழ்ப்பேன். பெரியார் அவர்களுடைய எந்தப் பேச்சையும் நான் கேட்டவனும் அல்ல; பெரியார் அவர்களுடைய எழுத்தையும் நான் படித்தவன் அல்ல. ஆகவே, இந்த இரண்டையும் வைத்துக் கொண்டால் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள என்னைப் போலத் தகுதி இல்லாதவன் லாயக்கு அற்றவன் யாருமே இருக்க முடியாது என்று முடிவுக்கு வர முடியும். அதே சமயத்தில், பெரியார் அவர்களுடைய எந்தப் பேச்சையும் கேட்காததன் காரணமாகவும், பெரியார் அவர்களுடைய எந்த எழுத்தையும் படிக்காததன் காரணமாகவும், விருப்பு வெறுப்பு இல்லாத நிலையிலே இந்த நிகழ்ச்சியிலே என்னைப் போலக் கலந்து கொள்ளத் தகுதி உள்ளவர்கள் வேறு யாரும் இல்லை என்று முடிவுக்கும் வரலாம்.
ஒரு மனிதரோடு பழகிவிட்டால், ஒரு மனிதர் எழுதியதையோ, பேசியதையோ படித்துவிட்டால், கேட்டுவிட்டால் நம்மை அறியாமலே நம்முடைய மனத்திலே அதைப்பற்றிய, அவரைப் பற்றிய எண்ணங்கள் உண்டாகிவிடும். இதன் காரணமாக விருப்பும் உண்டாகலாம்; வெறுப்பும் உண்டாகலாம். அதற்கு மாறாக, ஒருவருடைய பேச்சைக் கேட்காமலும் எழுத்துக்களைப் படிக்காமலும் இருந்துவிட்டால் அவரைப்பற்றி எதுவும் தெரியாத நிலையிலே – விருப்போ, வெறுப்போ உண்டாகும் வாய்ப்பும் இல்லாமல் போய்விடும். என்னுடைய பழக்கம், எது பற்றியும் முழுமையாக நான் தெரிந்து கொள்ளாதவரையில் அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்வது இல்லை. ஆகவே, பெரியார் அவர்களுடைய பேச்சைக் கேட்காததன் காரணமாகவும், பெரியார் அவர்களுடைய எழுத்துக்களைப் படிக்காததன் காரணமாகவும், என்றும் எந்த மேடையிலும் வாய்ப் பேச்சாகவோ எழுத்துக்கள் மூலமாகவோ பெரியாருடைய கருத்துக்கள் பற்றி நான் அப்பிராயம் கூறியதே கிடையாது. அப்படி இருக்கும்போது, எதற்காக நான் இந்த மேடையிலே கலந்துகொள்வது பற்றிச் சிலர் ஆச்சரியப்பட்டார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
பெரியாரை அறிந்தவன் நான்!
ஆனால், நம்முடைய நாட்டில் ஒரு சமுதாயப் பழக்கம் உண்டு. யாராவது ஒருவர் பின்னால் வால்பிடித்துக் கொண்டே இருக்கவேண்டும். அவர்களைப்பற்றி எப்போதும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களை எப்போதும் முகஸ்துதி செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் அவர்களைப்பற்றி பேசுவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பது அபிப்ராயம். அதற்கு மாறாக, அவர்களை விட்டு ஒதுங்கியும் தூரத்தில் இருந்துகொண்டும் அவர்கள் கருத்துக்களைப் பாராட்டிக் கொண்டு இருந்தால்கூட அவர்களுடைய கருத்துக்களைப் பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ, அபிப்ராயம் கூறுவதற்கோ தகுதி அற்றவர்கள் என்பது நமது நாட்டுப் பழக்கம்.
அடிக்கடி ஒருவரைப் பார்க்காவிட்டால், அடிக்கடி ஒருவரை சந்திக்காவிட்டால் அவர்களை விரோதியாகக் கருதும் பழக்கம் நமது நாட்டிலே வந்துவிட்டது. அதற்கு நேர் மாறாக, வேலை இருக்கின்றதோ, வேலை இல்லையோ, காரியம் இருக்கின்றதோ, காரியம் இல்லையோ, உங்களுடைய மனதிற்கு அவை ஒத்து இருக்கின்றதோ, இல்லையோ அவரைப் போய் அடிக்கடி பார்த்துவிட்டு, அவர் செய்தததையும், செய்யாததையும் புகழ்ந்துவிட்டு, அவரைப்போல் இந்திரன், சந்திரன் வேறு யாருமே இல்லை என்று புகழக்கூடியவர்கள் உண்டு.
அவர்களைவிட உற்ற நண்பர்கள் வேறு யாரும் இல்லை என்கின்ற ஒரு பொய்யான நிலை நாட்டிலே ஏற்பட்டு விட்டதன் காரணமாக, பெரியார் அவர்களுடைய எழுத்தையோ, கருத்தையோ, படிக்காமலோ, கேட்காமலோ இருந்து, அதன் காரணமாகவே அபிப்பிராயம் சொல்லாது இருந்த நான் இந்தக் கூட்டத்திலே கலந்து கொள்வது ஒருபுதிராகவே தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், இந்தப் புதிரை இப்போது நான் அவிழ்த்துவிட்டேன் என்று கருதுகிறேன்.
என்றாலும், வீரமணி அவர்கள் பேச்சில் இருந்து ஒன்று நன்றாகத் தெரிகின்றது. பெரியார் அவர்களுடைய எழுத்தையோ, பேச்சையோ நான் படிக்காமலும் எழுதாமலும் இருந்தது, ஒரு குறை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. காரணம் என்னவென்றால், பழைய “குடி அரசு” பத்திரிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை உங்கள் முன் திரு. வீரமணி படித்துக் காண்பித்தார். அவர் படித்துக் காண்பித்ததையே நான் மீண்டும் ஒரு முறை படித்துக் காட்டுகின்றேன். அதனை இப்போது படித்துக் காண்பிப்பேனேயானால், அவர் அதில் கூறியிருக்கும் கருத்தில் இருந்து மாறுபாடு கொண்டவர்கள் மனிதகுலத்தில் யாருமே இருக்க முடியாது என்று ஆகிவிடும். அந்த நிலை ஏற்படுமானால் பெரியாருடைய எழுத்துக்களை முன்னதாகவே படிக்கத் தவறியது, பேச்சைக் கேட்கத் தவறியது, என்னுடைய குறை என்று நான் சொல்லவேண்டும்
“குடி அரசு” வின் கொள்கை!
படிக்கின்றேன்: “குடி அரசு” வின் கொள்கையின் முதல் மலரில் முதல் தலையங்கத்தில் தெரிவித்தபடி அதாவது, மக்களுக்குச் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர்தல் வேண்டும். உயர்வு- தாழ்வு என்று இருக்கக் கூடிய உணர்ச்சியினை ஒழித்து, அனைத்துயிரும் ஒன்று என்ற உண்மை அறிவு மக்களிடம் பரவ வேண்டும். சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். இந்நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறிபற்றி இவர் எமக்கு இனியவர்; இவர் எனக்கு மாற்றார் என விருப்பு – வெறுப்பு இன்றி, நண்பனேயாயினும் ஆகுக, அவரது சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாமல் கண்டித்து ஒதுக்கப்படும்” இதில் இருந்து மாறுபட்டு இருக்கமுடியாது. எங்களுடைய சமயத்தின் அடிப்படையிலே நான் சார்ந்து உள்ள மதத்தின் அடிப்படையிலே, பிறப்பின் அடிப்படையிலே உயர்வு-தாழ்வு இல்லாதது மாத்திரம் அல்லாமல், நாங்கள் வளர்க்கின்ற பண்புகள் எங்களுடைய காரியம் பழக்கத்திலே இருக்கின்றன.
சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் என்பன எந்த அளவுக்கு முஸ்லீம்களிடையே வேரூன்றி இருக்கின்றது என்றால், யாராவது ஒருவன் முஸ்லீமாக ஆகிவிட்டால், அவன் அந்தக் காரணத்தாலேயே அதற்கு முன்னதாக அவன் எந்தச் சாதிக்காரனாக இருந்தானோ-எந்த வகுப்பினைச் சேர்ந்தவனாக இருந்தானோ அது அடியோடு மறைந்து விடுகிறது. முஸ்லீம் சமுதாயம் என்கின்ற பெருங்கடலில் அவன் சேர்ந்து விடுகின்றான்.
அந்தக்காரணத்தாலேயே அவனுக்கு சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகள் தாமாகவே வந்து விடுகின்றன. இன்றும் கூட கிருஸ்தவத்தைப் பார்க்கும்போது, முன்னால் இந்துக்களாக இருந்தவர்கள் கிருத்தவர்களாக ஆகிவிட்ட பிறகும்கூட இன்றும் வழக்கத்தில் ஒன்றைக் காணுகின்றோம். நாடார் கிருத்தவர்கள், பிள்ளைக் கிருத்தவர்கள் என்று அவர்கள் கூறிக் கொள்வதைக் காண்கின்றோம். அவர்களும் நாடார் மரபு வழியினையும் வேளாளர் மரபு வழியினையும் பின்பற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட வரையிலே அவர் முன்னதாக நாடாராக இருந்தாலும் சரி, அவர் அந்தணராக இருந்தாலும் சரி, அவர் என்று இஸ்லாத்திற்கு வந்துவிட்டாரோ அந்தக் கணமே நாடார், பிள்ளை, அந்தணர் என்கின்ற அனைத்தும் மறைந்து போய்விடும் – அழிந்து போய்விடும்.
இஸ்லாத்தில் சேர்ந்தவுடன் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் முதலியன தாமாகவே வந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட மார்க்கத்தைச் சேர்ந்த நான், எப்படி இந்தக் கொள்கைகளுக்கு மாறுபட்டவனாக இருக்கமுடியும் என்று சிந்தித்துப்பார்க்கும்போது, நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கண்டு சிலர் ஆச்சரியத்தைத் தெரிவித்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
அனைத்துயிரையும் ஒன்றாய் எண்ணும் கொள்கை!
இன்னொருமுறையும் படிக்கின்றேன்: “இந்நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றி, இவர் எமக்கு இனியவர்; இவர் எமக்கு மாற்றார் என்ற விருப்பு – வெறுப்பு இன்றி, நண்பனேயாயினும் ஆகு, அவரவரது சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்து ஒதுக்கப்படும்.”
இதில் வற்புறுத்தப்படுவது இரண்டு. ஒன்று உண்மை நெறி பற்றி வாழ்வது; இரண்டாவது, நடுநிலைமை; அவர் இன்னாதாராக இருக்கட்டும்; அல்லது இனியவராக இருக்கட்டும்; நண்பராக இருக்கட்டும்; அல்லாதாராக இருக்கட்டும் அவர்களிடத்தில் இருந்து நாம் எதிர்பார்ப்பது – அவரைத் தராசில் வைத்து நிறுப்பது, அவரை எடைபோடுவதற்கு அடிப்படையாக இருக்கின்றது. அவரை நிதானப்படுத்துவதற்கு உரைகல்லாக இருப்பது-அவர் செய்கைகள் அல்லவா என்பது தான். இதனை யார் ஆட்சேபிக்க முடியும்? உண்மையாகச் சொல்கிறேன் – எதையாவது தங்களுடைய வாழ்க்கை நெறிக்கு எல்லா வகைக்கும் பொருத்தமாக இல்லை என்று மனத்துக்குள்ளே எண்ணினாலும் வெளியே தைரியமாக்க் கூறமாட்டார்கள். இன்னும் ஒன்றைச் சொல்லுகின்றேன்; இந்த “குடி அரசு” பத்திரிகையின் தலையங்கத்திற்கு மேலாக சில வரிகள் செய்யுள் வடிவில் அமைந்து இருக்கின்றன. இந்தச் செய்யுள் வடிவிலே அமைந்துள்ள இந்த வரிகளின் கருத்துக்கள்தாம் இந்த “குடி அரசு” ஏட்டின் த்த்துவமாக அமைந்திருக்கின்றன.
அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்தினுள் பேதா பேதம்
வஞ்சகம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பா யாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ?
உனக்கு இது உறுதியான
உபதேசம் ஆகும் தானே?
இதைப்படித்துப் பார்த்தால், யாரோ பெரியார் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பாடினார்கள் என்று தோன்றாது. எங்கோ வைதீக சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள், பிரசங்கம் செய்கின்றவர்கள் கதாகாலட்சேபம் செய்கின்றவர்கள் பாடி வைத்திருப்பதாகத் தான் எண்ணத் தோன்றும்.
காரணம் என்னவென்றால், நாம் ஏமாந்து விடுகின்றோம். எந்த இயக்கத்திற்கும், எந்தச் சமயத்திற்கும் இரண்டு அம்சங்கள் உண்டு. அதாவது, உதாரணத்திற்கு மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மரத்துக்கு இருக்கக்கூடிய இரண்டு அம்சம் – ஒன்று அடியிலே இருக்கின்ற ஆணிவேர் – மற்றொன்று வெளியிலே இருக்கின்ற படர்ந்த கிளைகள், இலைகள். இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு.
இந்த ஆணிவேர் அழியாத நிலையில், இவைகளை எவ்வளவு வெட்டினாலும் கூட, கிளைகளும் இலைகளும் குறைந்தாலும் கூட, மரம் உயிரோடே இருக்கும். இவை மறுபடியும் வளர்ந்துவிடும். ஆக, சமுதாய ஏற்றத்திற்குச் சமுதாயச் சீர்திருத்தத்தில் ஈடுபடுகிறவர்கள், கிளையிலே சாதி வேறுபாடு தோன்றுமாயின் களைகளை வெட்டிவிட வேண்டும். ஆணிவேர் நோயுற்றால், ஆணிவேர் பழுதுற்றால் மரம் அழிந்துவிடும். ஆணிவேர் அழுத்தமாக இருக்குமாயின் மேலே இருக்கின்ற மரத்தையும், கிளைகளையும் வெட்டி விட்டு மறுபடியும் துளிர்க்கச் செய்து கொள்ளலாம்.
புரட்சியும் புரட்டும்!
இந்தப் பணியை மேற்கொள்ளும்போது சிற்சில சமயங்களில் தவறுதலாக ஆணிவேரை வெட்டி விடுவதும் உண்டு. வேரோடு மரத்தை வெட்டிவிடுவதுதான் உலகில் எல்லாப் புரட்சிக்கும் அடிப்படையாக இருப்பது. ஆனால், அதில் முக்கியம் மனப் புரட்சி; உள்ளப் புரட்சிதான், எப்போது மனமும், உள்ளமும் தூய்மைப்படுகின்றதோ, எங்கே உண்மை நெறிப்பற்றி, இவர் எமக்கு இனியவர்; இவர் எமக்கு இன்னார் என்கின்ற வேறுபாடு இன்றி யார் இருக்கின்றார்களோ அங்கேதான் சமத்துவ நெறி துளிர்விட்டு வளரும். புரட்சி என்பது, புரட்டுதல் என்ற சொல்லிருந்து வந்தது, மேலிருக்கும் அழுக்குகளைப் போக்கி, விடுவதற்காக மண்ணையோ, மனத்தையோ புரட்டுவதுதான் புரட்சி!
நமக்குப் பழகிப்போய்விட்டது. சாக்கடையிலே முங்கி முங்கி சாக்கடை நாற்றம் தெரியாமல் போய் விட்டோம். சாக்கடையிலிருந்து வெளியே வந்து, தாராளமாகக் குளித்துவிட்டு வெளியிலே உள்ள தூய காற்றினை சுவாசிக்கும் பொழுது, “அப்பாடா, இந்தக்காற்று எங்கிருந்து வந்ததோ” என்று எண்ணம் தோன்றும்.
பாரதி சொல்லியிருக்கிறார்: “தவறாக வேதம் ஓதும் அந்தணனை விட நன்றாகச் சவரம் செய்கின்ற அம்பட்டவன் மேலானவன்” என்று.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாச் செய்தொழில் வேற்றுமையான்” என்பது தொழிலினுடைய சிறப்பை பற்றியதேயாகும். ஒரு கக்கூஸ் கழுவக்கூடிய பெண்ணானவள் அவளுடைய வேலையினைச் சிரத்தையுடன் செவ்வனே செய்வாளேயானால், நீதிபதியாக இருக்கின்ற நான் என்னுடைய வேலையினைச் சரியாகச் செய்யாமல் இருந்து விடுவேனேயானால், என்னைவிட மேலானவள் அவள்.
ஆக, இங்கு உயர்வு-தாழ்வு என்பது நான் எந்த வேலையினை பபார்க்கிறேன் என்பது பற்றி அல்ல; எனக்கு இடப்பட்ட- நான் ஏற்றுக்கொண்ட பணியை நான் எப்படிச்செய்கின்றேன் என்பது பற்றியேயாகும். ஆகவே, கக்கூஸ் கழுவுபவள் தன்னுடைய வேலையினை மனப்பூர்வமாக ஈடுபாட்டுடன் செவ்வனே செய்வாளேயானால், அவள் கொண்ட பிரமாணத்துக்கு விரோதமாக என்னுடைய உள்ள உணர்ச்சிக்கும் உண்மைக்கும் மாறாகத் தவறு செய்வேனேயானால், நான் தாழ்ந்தவன்; கேவலமானவன்.
இது சாதாரண உண்மை. நாம் இன்று என்ன பார்க்கின்றோம்? மிகமிக உயர்ந்த பதவியில் இருக்கின்றவர்கள் செய்கின்ற தவறுகள் வெளிவருவது இல்லை. ஆனால் தாழ்ந்த பதவியில் இருக்கின்றவர்கள் செய்கின்ற சிறிய தவறுகள் கூட வெளிவந்து விடுகின்றன. எனவே, தாழ்ந்த பதவியில் இருக்கின்றவர்கள் என்றும் தவறு செய்து கொண்டிருப்பது போலவும், மேலான பதவியில் உள்ளவர்கள் தவறு செய்யாதது போலவும் தவறான தோற்றம் நாட்டில் உலவுகின்றது.
தவறு யார் செய்தாலும் ஒன்றுதான். உண்மை நெறியில் இருந்து யார் தவறினாலும் அது தவறுதான். யார் சுயமரியாதையினையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், தம்முடைய வாழ்க்கை நெறிகளாகக் கொண்டு யார் தங்களுடைய வாழ்க்கையில் அவற்றை அனுஷ்டிக்கின்றார்களோ அவர்கள் சிறந்தவர்கள். இந்த அடிப்படையில் பார்ப்பீர்களேயானால்,
அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்தினுள் பேதா பேதம்
வஞ்சகம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பா யாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ?
என்பதனுடைய உயர்வு விளங்கும். இதில் “தவம்” என்ற வார்த்தையும் இருக்கின்றது – பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, தவம் என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால், தவம் என்ற சொல் இங்கு இடம் பெற்றிருக்கிறது.
“செய்தவம் வேறொன் றுண்டோ?
உனக்கு இது உறுதியான
உபதேசம் ஆகும் தானே?”
என்று பாட்டோடு இதனைச் சேர்த்துப்பார்க்கும்போது, இதனுடைய உண்மையினை சரியாக கையாண்டால் இதில் இருக்கின்ற இலைகளையும் கிளைகளையும் வெட்டிவிட்டு, ஆணிவேரைப் பற்றிக் கொண்டால் இதில் யாருக்கும் எந்த விதமான வேற்றுமையும் இருக்கமுடியாது; மனக்குறையும் இருக்க முடியாது என்று நான் சொன்னால் இப்போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். நான் இங்கு வந்துள்ளதின் பொருத்தத்தை!
எனது பேச்சு சிலருக்கு முரண்பாடு!
ஒருபுறம் என்னுடைய இலக்கியப் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் பார்த்துவிட்டு, அதே மாதிரி பெரியார் அவர்களுடைய எழுத்துக்களையும் பார்த்துவிட்டு, இரண்டையும் படித்தவர்கள் அவைகளுக்குமுரண்பாடு இருப்பதாக கற்பனை செய்துகொண்டு அதன் காரணமாக நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவது என்பது ஆச்சரியமாகச் சிலருக்குத் தோன்றக் கூடும். பாதை வேறு, முறை வேறாக இருக்கலாம். ஆனால், அடிப்படை வேறு அல்ல, எல்லோரும் உண்மைநெறி வாழ வேண்டும்; உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருத வேண்டும்; எந்த உயிர் பசியில் வாடினாலும் தான்வாடுவதாகத்தான் கொள்ள வேண்டும். இதில் மாறுபாடு இருக்கமுடியாது.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும். அதனிடையே வருகின்ற சிறப்பும், சிறப்பு இல்லாமையும் அவர்கள் தத்தம் காரியங்களைச் செய்கின்ற மனப்போக்கில் தான்-சிரத்தையில் தான்- ஈடுபாட்டில் தான் என்பதை உணர்ந்து கொண்டால் எந்த விதமான ஆச்சரியத்திற்கும், எந்த விதமான கசப்பிற்கும், எந்த விதமான சண்டைக்கும் இடமில்லை என்பது மிகத் தெளிவாக விளங்கும் என்பதைச்சொல்லிக்கொண்டு, அந்தப்பொருத்தத்தோடுதான் நான் இங்கே வந்து இருக்கின்றேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னை இங்கு இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தவர் வீரமணி அவர்கள்தான். நான் இன்ன காரணத்திற்காக வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான்; அதாவது, பணியின் தன்மை, அதில் பொறுப்பேற்று இருக்கிறவர்களுடைய பாடு ஆகியவற்றுக்காகத் தான் நான் இங்கே வந்திருக்கிறேன். எப்படி இன்னர் -இனியவர் என்று பார்க்காமல், நண்பர்-அல்லாதார் என்று பார்க்காமல் அவர்கள் செய்கின்ற காரியத்தின் பலனைப் பார்க்கவேண்டுமோ அதனைக் கருதியே நான் இங்கு வந்தேன். எனவே, வந்தவருடைய ஈடுபாட்டைப் பார்த்து, அவர் செய்கின்ற காரியத்தின் பலனைப் பார்த்து ஒத்துக் கொண்டேன்.
நண்பர் வீரமணியின் ஈடுபாட்டைப்பற்றி, அவர் செய்கின்ற காரியத்தின் பலனைப்பற்றி யாரும் சந்தேகப்பட மாட்டீர்கள். ஆகவே, நான் வீரமணி அவர்களின் ஈடுபாட்டை, தொடங்க இருக்கிற காரியத்தின் பலனை நன்கு உணர்ந்துகொண்டு இங்கு நான் வந்திருக்கின்றேன். ஒரு இலவச மருத்துவமனையினைத் துவங்குகின்றார்கள் என்றால் அது யார் பெயரில் துவங்கினாலும் மனிதத் தன்மையின் அடிப்படையிலே துவங்கப்படுகின்ற சமுதாய காரியம் என்ற காரணத்தினாலே இந்த விழாவில் என்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்வதிலும் ஆச்சரியம் இல்லை. இந்த இரண்டு அடிப்படையிலும் வந்திருக்கின்ற நான் இதனுடைய பொருத்ததினை மேலும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
உடல்நலமே மனநலம்!
ஆயுட்காலம் முழுவதும் மனதிலே இருக்கின்று மாசினை ஒழிக்கப் பாடுபட்ட ஒருவரது அறக்கட்டளையின் பெயராலே இந்த மருத்துவமனை துவங்கப்படுகின்றது. மக்களது அறிவு நன்றாக வளர வேண்டுமானால், அதற்கு அடிப்படையான உடலநலம் நன்கு சிறந்து விளங்கவேண்டும். நன்றாக உடல்நலம் வளர்ச்சியுற்றால்தான் அறிவு வளர்ச்சியும் ஏற்படும்.
ஒருவன் என்றும் வியாதியாளனாக இருப்பானேயானால்-அவன் என்றும் நோயினாலே வருந்திக் கொண்டே இருப்பானேயானால், அந்த நோயைப்பற்றி சிந்திக்கத்தான் அவன் மனம் இடம் கொடுக்குமே தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்க இடம் கொடுக்காது.
ஆக, அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையானது சுகாதாரம். அந்தச் சுகாதாரத்தை மக்களிடையே பரப்புவதற்காக ஓர் இலவச மருத்துவமனை பெரியார் அறக்கட்டளையின் சார்பில் துவங்கப்படுகிறது. இது விரிவாக வளரும் என்று எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சிறிதாக துவங்கப்பட்டதுதான் விரிவடையும்.
இதற்கு நம் நாட்டு நதிகளையே உதாரணமாகக் கூறலாம். நம் நாட்டில் ஓடிக்கொண்டு இருக்கின்ற காவிரியாக இருக்கட்டும்; பிரம்மபுத்திரா, கோதாவரியாக இருக்கட்டும்; அல்லது கங்கையாக இருக்கட்டும்; அவைகள் ஆரம்ப இடத்தில் சிறிய வாய்க்கால்கள் போல் ஊற்றாக, சுனையாகத் தோன்றிப் பிறகு சிற்றாறுகளாக உருவெடுத்துப் பின்னர் பற்பல கிளைகள் அதில் ஒன்று சேர்ந்து பெரிய ஆறுகளாக காட்சி அளிக்கின்றன. அதுபோல, சிறியதாக துவங்குகின்ற இந்த மருத்துவமனை போகப்போக அதனோடு சம்பந்தப் பட்டிருக்கிறவர்களுடைய மனத் தூய்மையின் காரணமாக, ‘இந்த மருத்துவ மனைக்குச் சென்றால் நம்மை மனிதன் என்று மதித்து அவர்கள் நிச்சயமாக நமக்கு உதவுவார்கள்’ என்றுபொதுமக்கள் கொள்கின்ற நம்பிக்கையின் காரணமாக இந்த மருத்துவமனை ஆல்போல் தழைத்து வளர்ந்து, இந்தச் சென்னை நகரத்திலேயே ஒரு தலைசிறந்த மருத்துவமனையாக அமையும் என்று வாழ்த்தி, அப்படி அமைவதற்கு நீங்கள் அனைவரும் உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, வாய்ப்பு அளித்தமைக்கு நன்றியினை மீண்டும் தெரிவித்துக அமைகின்றேன்….
நன்றி : தந்தை பெரியார் ஈ.வே.ரா.
10.812780
79.839100