RSS

டாக்டர் ஹ.மு.நத்தர்சா

19 Oct

nathersa2.jpg 

 

அறிமுக உரை

மனதை மயக்கும் வெளிச்சப் புன்னகை !

நாகூர் – எங்கள் சம்பந்தக்குடி! பெண் கொடுத்தவர்கள், எடுத்தவர்கள்! சுகதுக்கங்களின் சரிபாதி சொந்தக்காரர்கள், நாங்கள்!

காரைக்கால் பிரஞ்சு யூனியன் பிரதேசமாக இருந்தபோது நாகூர் மாப்பிள்ளைமார்கள் கையில் கடவுச்சீட்டைப் பத்திரமாக வைத்திருந்து ஒவ்வொரு முறையும் பலத்த சோதனைக்குப் பிறகு நாடுவிட்டு நாடு பெயர்ந்து இல்லற வாழ்க்கை நடத்தியது, தனிக்கதை!

எப்போது நாகூர் கந்தூரி வந்தாலும் கொடியேற்றம் தொடங்கி பீரோட்டம் முடிய மச்சானின் பங்களா வீட்டில் கூடாரமிட்டு கும்மாளமிட்ட அந்த இனிய நாட்கள் அற்புதமானவை!

ஒவ்வொருவர் மனதிலும் புதைந்துக் கிடந்த ஈரநினைவுகளை ஒரு வெளிச்சப் புன்னகையாய் அள்ளி வந்துள்ளது கவிஞர் அப்துல் கையூமின் அந்த நாள் ஞாபகம்.

வாழ்வாதாரம் தேடி வளைகுடா ஓரம் ஒதுங்கினாலும் பாழும் மனது இறக்கை கட்டிப் பறந்து சொந்த ஊரின் சந்து பொந்துக்களில் நுழைந்து சுகம் அனுபவித்து தன்னிடம் இரகசியமாய் மொழிந்த அதிசயங்களை இந்நூல்வழி பகிரங்கப்படுத்தி மகிழ்கிறார், கவிஞர் நாகூர் அப்துல் கையூம்.

நபிகள் நாயகம் பிறந்த நன்னாளை ஊர் அழைத்து விருந்து வைத்து கொண்டாடி மகிழும் ஊர் நாகூர்!  நா விருந்தளிக்கும் நாகூரின் பெருமையை பாவிருந்தளித்துப் பரிமாறும் கவிஞரின் இதயவாசலில் வாழ்த்துப் பன்னீர்ச் செம்புடன் நான்!

முதலிரவு அறையின் மல்லிகை பூச்சரமும், ஊதுபத்தி மணமும் மட்டுமல்ல; வாழ்க்கைப் பாதையில் வழிநெடுக சந்தித்த அத்தனை அனுபவங்களும் அற்புதமானவை எனச் சத்திய வாக்குமூலம் அளிக்கின்றன, இவரது கவிச்சித்திரங்கள்!

ஒரு சின்னஞ்சிறிய அற்புத விளக்கில் எப்படி பூதத்தை அடைத்து வைத்தான் அலாவுதீன்? என்ற வினா இன்றுவரை என் மனதில் எழும்பிக் கொண்டு இருந்தது!  ஒரு கையடக்க புத்தகத்தில் ஒட்டுமொத்த நாகூரின் பாரம்பர்ய சிறப்புகளை பட்டியலிட்டுக் காட்டியுள்ள கவிஞர் அப்துல் கையூமின் கைவண்ணத்தைக் கண்ட பிறகு அலாவுதீனை நினைத்து இப்போது ஆச்சர்ய அலைகள் எழுவதில்லை!

அழகான பெண்ணொருத்தி சிரிக்கும்போது அவள் கன்னக்கதுப்பில் தோன்றும் ஒய்யாரக் குழியில் மனம் ஒட்டிக் கொள்வதைப் போன்று, சுனாமிகளால் சூறையாட முடியாத நாகூரின் பேரழகை காட்சிப்படுத்திக் காட்டும் ஒவ்வொரு வரியிலும் சிக்கிச் சிறைப்பட்டு நகர்ந்து வர முடியாமல் தவிக்கிறது இரசனை மிக்க உள்ளம்!

புலவர்க் கோட்டையெனப் போற்றப்படும் நாகூரின் பெருமையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த எழுதப்பட்டுள்ள மெய்ப்புச் சான்றிதழ் – இந்நூல்!

நாகூர் தர்காவுக்கு உண்டு அலங்கார வாசல்! ஒட்டுமொத்த நாகூரின் பேரழகை எழுத்துப் பூக்களால் சித்தரித்துக் காட்டும் இவரது பேனாவின் உயரம் கண்டு பிரமித்துப் போய் நிற்கிறது நாகூர் மனாரா!

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணின் அழகைத்தான் புலவர்கள் இதுவரை வருணித்துள்ளனர். எல்லாத் திசைகளிலும் நிலைக் கண்ணாடிகள் வைத்து ஒரு மண்ணின் அழகைக் காட்சிப்படுத்திக் காட்டியுள்ள இந்தப் புதுக்கவிஞரின் ஆறாவது விரலை அலங்கரிக்க காத்திருக்கின்றன ஏராளமான கணையாழிகள்!
நல்வாழ்த்துக்களுடன்
ஹ.மு.நத்தர்சா

தமிழ்த்துறை,
புதுக்கல்லூரி
சென்னை – 14

(ஹ.மு. நத்தர்சா அவர்கள் புதுக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர். படைப்பிலக்கியவாதி. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வழங்கியுள்ளார். புதுவையரசின் 1996- ஆம் ஆண்டிற்கான கம்பன் புகழ்ப்பரிசு பெற்றவர். வரலாற்று ஆய்வுநூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வுக் கோவைகளில் இக்கால்  இலக்கியம், நாட்டுப்புற

இலக்கியம் குறித்து ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இஸ்லாமிய சிறுகதைகள் குறித்து ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்திய இலக்கியச் சிற்பிகளை அடையாளம் வண்ணம் சாகித்திய அகாதெமி வெளியீட்டு நூல்கள் வரிசையில் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்களை பற்றிய இவர் எழுதிய படைப்பும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.)

 

Leave a comment