RSS

நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்

10 Jul

(மீள்பதிவு என்றாலும் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு)

நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்

இசையுலகிற்கு நாகூர் வழங்கிய இசைவாணர்களில் இரண்டு ஆளுமைகள் அதிகமாகப் பேசப்படுபவர்கள். ஒருவர் ‘இசை முரசு’ நாகூர் இ.எம்.ஹனிபா. மற்றொருவர் நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர். வித்வானுக்கு உள்ளூரில் இன்னொரு பெயர் “பவுன் வீட்டு தம்பி”.
ஆம். பவுனு பவுனுதான்.

இவர் பிறந்தது 1923 டிசம்பர் மாதம். இசைமுரசு பிறந்ததும் அதே டிசம்பர் மாதம்தான். டிசம்பர் மாதத்திற்கும் இசைக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. சென்னையில் டிசம்பர் மாதத்தில்தான் இசைக்கச்சேரி களைகட்டுகிறது.

25.8.1952 -ல் இவருக்கு ‘நாகூர் தர்கா வித்துவான்’ என்ற சிறப்புப் பதவி அளித்து கெளரவித்தார்கள். இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவும் இவருடைய திறமையை மதித்து மிகுந்த மரியாதை இவருக்கு செலுத்தி வந்தார். .

எஸ்.எம்.ஏ காதரைக் குறித்து சொல்லும்போது “இசையார்வம் அவரை பணக்காரர் ஆக்கியது” என்பார்கள். ஆம். அதற்கு முன்பு அவர் அதைவிட பணக்காரராக இருந்தார். இசையால் அவர் சம்பாதித்ததை விட இழந்தது அதிகம் என்பதற்காக இப்படி வேடிக்கையாகச் சொல்வார்கள். நாகூர்க்காரர்களின் குசும்புக்கு குறைச்சலா என்ன?

எஸ்.எம்.ஏ. காதர் அவர்களின் குரு யாரென்றால் வாய்ப்பாட்டு வித்தகரும் ஹார்மோனியம் கலைஞருமான நாகூர் தர்கா வித்வான் தாவூத் மியான் கான். .(இறப்பு: 1940). இவர் ஹிந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையில் கரை கண்டவர்.

எஸ்.எம்.ஏ.காதரைப் பற்றி நாம் அறிய முற்படுகையில் அவரது குருநாதர் தாவூத் மியான் கான் பற்றியும் அவரது இசைக் குடும்பத்தின் பின்னணி பற்றியும் அறிந்துக் கொள்வது அவசியம். இவரிடத்தில்தான் வித்வான் குருகுல கல்வி முறையில் இசை பயின்றார்.

“யாரிந்த தாவூத் மியான் கான்?” என்று கேட்டால் புகழ்ப் பெற்ற இசைக்கலைஞர் நன்னு மியானுடைய பேரர்.

அது சரிங்க. “யாரு இந்த நன்னு மியான்?” என்று கேட்டால் நன்னு மியானும் அவரது சகோதரர் சோட்டு மியானும் புதுக்கோட்டை சமஸ்தானத்து ஆஸ்தான கலைஞர்களாக விளங்கியவர்கள். இருவரும் நாகூர்க்காரர்கள். அந்தக் காலத்தில் ஹிந்துஸ்தானி இசையில் புகழ்ப் பெற்றிருந்த இசைவாணர்களை ‘உஸ்தாத்’ என்று அடை மொழியிட்டு அழைப்பது வழக்கம்.

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் உஸ்தாத் நன்னு மியான் & உஸ்தாத் சோட்டு மியான் இவ்விருவரும் உஸ்தாத் தாவுத் மியானின் பெரிய தாத்தா, சின்ன தாத்தா. என்ன தலை சுத்துதா? இன்னும் இருக்கு.

நன்னு மியான் & சோட்டுமியான் – இவ்விருவரும் புகழின் உச்சியில் இருந்த காலத்தில்தான் தமிழகத்தில் ஆர்மோனியம் என்ற மேனாட்டு இசைக் கருவியைக் கர்நாடக இசை அரங்குகளில் பக்க வாத்தியமாக வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்.
சோட்டு மியான் “தர்பார் கானடா” என்ற ராகத்தை லாவகமாக பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவருக்கு இன்னொரு சிறப்புப் பெயர் ‘தர்பார் கானடா சோட்டுமியான்’ என்பதாகும்.

நன்னுமியான் என்பவர் சோட்டு மியானின் சின்ன தம்பி. “டோலக்” வாத்தியத்தில் வித்தை காட்டுபவர். அக்காலத்தில் இவரைப் போல் “டோலக்” வாசிப்பவர் எவருமில்லை என்பார்களாம். இதனாலேயே இவரை “டோலக்கு நன்னு மியான்” என்று அடைமொழியிட்டு மக்கள் அழைத்தனர்.
அதுமட்டுமல்ல, மத்தளத்திலும் இவர் வித்தகர். மத்தளம் வாசிப்பதில் நிகரற்ற கலைத்தெய்வம் நந்தீசுவரர் என்ற ஐதீகம் உண்டு. இவரும் தாளக்கட்டையில் நிகரற்று விளங்கியதால் இவரை “நந்தீசுவர நன்னுமியான்” என்று பாராட்டி மகிழ்ந்தனர். இவரது இசை குருநாதர் வேறு யாருமல்ல, இவருடைய அண்ணன் சகல கலா வல்லவர் சோட்டு மியானேதான்.

இவர் அனைத்து தோல்கருவிகளை வாசிப்பதிலும் திறன் பெற்றிருந்தார். பன்னிரண்டு சுரத்தாளங்களுக்கும் பன்னிரண்டு கற்களை வரிசையாக வைத்து ஜலதரங்கம்போல் ஒருமுறை இவர் வாசித்துக் கண்பித்தபோது புதுக்கோட்டை சமஸ்தானத்து அரசர் அப்படியே பிரமித்துப் போய் நின்றாராம்.
சோட்டு மியானுக்கு இன்னொரு மகனாரும் உண்டு. அவரும் மிகப் பெரிய இசைக் கலைஞர். அவர் பெயர் கவுசு மியான். (தயவு செய்து இவர்கள் எல்லோருக்கும் உஸ்தாத் என்ற அடைமொழி சேர்த்துக் கொள்ளுங்கள். கை வலிப்பதால் ஒவ்வொரு முறையும் ‘உஸ்தாத்’ தட்டச்சு செய்ய என்னால் முடியவில்லை) இவரும் “நாகூர் தர்கா வித்வான்” என்ற கெளரவப் பதவி ஏற்று வாழ்ந்தவர்.

கர்நாடக இசையரங்கில் ஆர்மோனியத்தை பக்க வாத்தியமாக அறிமுகம் செய்தவர் கவுசு மியான்தான் என்கிறார்கள். ஒருமுறை மேடையில் சோட்டு மியான் வாய்ப்பாட்டு பாட, கவுசுமியான் ஆர்மோனியம் வாசிக்க, திருப்தி அடையாத சோட்டு மியான் செம கடுப்பாகி ‘கமகம் இல்லாத வாத்தியம்; நிறுத்திவிடு’ என்று தன் மகனிடம் கூற அதன் பிறகு அதைக் கமகத்துடன் வாசிக்கப் பழகிக் கொண்டாராம். அதன் பிறகு இசைக்கச்சேரிகள் ‘கமகம’ என்று மணக்கத் தொடங்கியது.
தாவூத் மியான் கானுடைய மாணவர் எஸ்.எம்.ஏ.காதர் என்று சொன்னோம் அல்லவா?. அவருடைய இன்னொரு மாணவர் யாரென்றால் கிட்டப்பா. (இதனால் தெரிவித்துக் கொள்வது யாதெனில், இந்த கிட்டப்பாவுக்கும் ‘பாகுபலி’யில் வரும் கட்டப்பாவுக்கும் யாதொரு சம்பந்தமும் கிஞ்சித்தும் கிடையாது)
“யாரிந்த கிட்டப்பா?” என்றுதானே கேட்கின்றீர்கள். பாரதிராஜாவின் “16 வயதினிலே” படத்தில் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்று தொடங்கும் பாட்டை நாமெல்லொரும் கேட்டு ரசித்திருப்போம்.

//கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரிலெ பார்த்தேன்,
கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா//

என்ற பாடல் வரிகள் நமக்கு நினைவிருக்கும் .

“ஆண்பாவம்” என்ற படத்திலும் “காதல் கசக்குதய்யா” என்று தொடங்கும் பாடலில் “கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே” என்ற வரிகள் வரும். சாட்சாத் அந்த கிட்டப்பாதான் இந்த கிட்டப்பா. நாம் சொல்லும் இந்த கிட்டப்பாதான் அந்த கிட்டப்பா. அடேங்கப்பா !

செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கங்காதர ஐயர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் அதாவது காசி ஐயர் & கிட்டப்பா, இந்த இரண்டு பேர்களையும் யாருக்கிட்ட இசை பயில அனுப்புறாரு என்று சொன்னால் நம்ம நாகூர் தர்கா வித்வான் உஸ்தாத் தாவுத் மியான் கானிடம்.

நாடகத்துறையிலும், இசைத்துறையிலும் முடிசூடா மன்னராக கோலோச்சியவர் எஸ்.ஜி.கிட்டப்பா (1906–1933) என்பது ஊரறிந்த விஷயம்.

இன்னொரு கொசுறு செய்தி என்னவென்றால் இளம் வயதிலேயே மரணமுற்ற இந்த கிட்டப்பாவின் மனைவிதான் கே.பி.சுந்தரம்பாள். இந்த கே.பி.சுந்தரம்பாள் யாரென்று சொன்னால்…. என்று நான் ஆரம்பித்தால் நீங்கள் என்னை அடிக்க வருவீர்கள். ஏனென்றால் கே.பி.எஸ். அவர்களைத் தெரியாதவர்கள் யாருமே இங்கே இருக்க முடியாது. அந்த காலத்துலேயே “பக்த நந்தனார்” படத்திலே நடிப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கியவர் என்றால் சும்மாவா?. இப்ப இது ரஜினிகாந்த் வாங்குற படச்சம்பளத்தைக் காட்டிலும் அதிகம்.

கிட்டப்பாவின் பாடல்களில் சில சமயம் இந்துஸ்தானி சாயல் காணப்பட்டதாக அந்த காலத்து ‘சுப்புடுகள்’ விமர்சனம் செய்ததுண்டு. அதற்கு காரணம் எஸ்.எம்.ஏ.காதரின் உஸ்தாத் தாவுத் மியான் கானிடம் கிட்டப்பா பெற்ற இசைப்பயிற்சியின் தாக்கம்தான் என்பார்கள். மதுரை சோமு பாடும்போதுகூட சில சமயம் படே குலாம் அலிகான் பாடுவது போல இருக்குமாம். பலே.. பலே.

ஆக கிட்டப்பாவுக்கும், எஸ்.எம்.ஏ.காதருக்கும் குரு ஒருவரேதான். அவர் தாவூத் மியான் கான். ஒரு கொடியில் இரு மலர்கள்.

தாவுத் மியான் கான் ‘மால்கோஸ்’ ராகம் பாடி நாகூர் ஆண்டகையிடம் பிரார்த்தனை செய்ததால் இவருடைய தீராத கால் வியாதி குணமானது என்பார்கள்.

இப்ப இன்னொரு கொசுறு செய்தி. நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதருக்கு இன்னொரு பிரபல சிஷ்யரும் உண்டு. அவர் பெயர் ‘இசைமணி’ எம்.எம்.யூசுப். இவரும் நாகூர்க்காரர்தான். இசைமணி எம்.எம்.யூசுப்பிற்கு சென்னை அண்ணாமலை மன்றத்தில் ‘இசை மணி’ என்ற பட்டம் தந்து கெளரவித்தார்கள். அச்சமயம் இவருடன் அதே மேடையில் ‘இசைமணி’ பட்டம் பெற்றவர்களில் சீர்காழி கோவிந்தராசனும் ஒருவர். நேசமணி யாரென்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த இசைமணியைத் தெரிய வாய்ப்பில்லை.

‘இசைமணி’ யூசுப் அநாயாசமாகத் மேல் தட்டு ஸ்வரங்களைத் தொட்டு உச்ச ஸ்தாயியில் பாடுவதில் வல்லவர். தார ஸ்தாயி, அதி தாரஸ்தாயி என்று பல இடங்களிலும் சர்வ லகுவாக சஞ்சாரம் பண்ணுவதில் பயங்கர கில்லாடி. கவிஞர் சாரண பாஸ்கரனார் எழுதி, இசைமணி எம்.எம்.யூசுப் பாடிய

//மண்ணகத்தின் இழிவு மாற்றி,
விண்ணகத்தின் உயர்வு சாற்றி
பொன்னகத்தில் அண்ணல் நபி வந்தார்; – அவர்
தன்னகத்தில் சாந்தியின்பம் தந்தார்//

என்ற பாடலை கேட்கையில் மனம் குளிர்ந்து போகும்.

“நாகூர் ஹனிபாவுக்கு ‘இசைமுரசு’ என்றும், எம்.எம்.யூசுப்பிற்கு ‘இசைமணி’ என்றும் பொருத்தமாகத்தான் பட்டம் கொடுத்திருக்கிறார்கள் என்று என்னிடம் ஒருமுறை கவிஞர் இஜட் ஜபருல்லாஹ் சொன்னார்.

“ஏன் நானா இப்படி சொல்றீங்க?” என்று நான் கேட்டதற்கு “ஓய்! மணியில் நாதம் இருக்கும் அதனால்தான் ‘இசைமணி’ பட்டம். முரசு சப்தம் அதிர வைக்கும். ஆனால் நாதம் இருக்காது. அதனால்தான் ‘இசைமுரசு’ பட்டம் ” என்று கோனார் நோட்ஸ் போட்டு விளக்கினார். “நமக்கு வேண்டாம்பா இந்த வம்பு” என்று அங்கிருந்து நான் ஜூட் விட்டேன்.

எஸ்.எம்.ஏ.காதர் அவர்களின் குருநாதர் தாவூத் மியான் வாய்ப்பாட்டில் மட்டுமல்ல, ஆர்மோனியத்திலும் வல்லவர் அதுபோல திருச்சி உறையூர் டி.எம்.காதர் பாட்சாவும் ஆர்மோனியத்தில் வல்லவர். இருவருக்குமிடையே மேடையில் ஆர்மோனிய வாத்தியத்தில் ‘ஜுகல்பந்தி’ போட்டிகள் நடைபெற்றதுண்டாம்.

ஒருசில மேடைகளில் தாவூத் மியான் வாய்ப்பாட்டு பாட, ஆர்மோனியச் சக்கரவர்த்தி உறையூர் டி.எம்.காதர்பாட்சா ஆர்மோனியம் வாசித்ததும் உண்டு.

“ சுரவோட்டத்திற்கு தாவூத் மியான், கரவொட்டத்திற்கு காதர் பாட்சா” என்று அக்காலத்தில் பழமொழி சொல்வார்கள். கரவோட்டம் என்றால் KEYBOARD FINGERING. அத்னான் சாமி எப்படி பியானோ கீ போர்ட் துரிதமாக வாசிப்பதில் உலகச் சாதனை படைத்தாரோ அதுபோல ஆர்மோனியக் கட்டைகளில் காதர்பாட்சாவின் விரல் வித்தை ஜாலம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும்.

ஜோகூர் சுல்தான் அரசவையிலும், இரங்கூன் நகரம் மற்றும் இலங்கை நாட்டிலும் இவரது நிகழ்ச்சிகள் நடந்துள்ளன, ஜோகூர் சுல்தான் மலேசிய நகரின் ராஜவீதிகளில் கோச்சு வண்டியில் இவரை அமரவைத்து பவனி வரச் செய்து தங்கப்பதக்கங்கள் அளித்து கெளரவித்தாராம். தியாகராஜ பாகவதர் முதற்கொண்டு கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள் வரை இவர் மீது மிகுந்த பக்தியும் , மரியாதையும் வைத்திருந்தனர்.

காரைக்காலில் நடந்த ஓர் இசையரங்கில் தாவூது மியானிடம் காதர்பாட்சா தோற்றுப் போனதாகக் கூறுவர். ‘அல்லாஹு’ என்ற பாடலைத் தாவூது மியான் சிறப்பாகப் பாடுவாராம். அதனால் அவருக்கு ‘அல்லாஹு தாவூதுமியான்’என்ற பட்டப் பெயரும் உண்டு.

நாகூர் பிரபலங்களில் ஒருவரான நீதியரசர் எம்.எம்.இஸ்மாயீல் அவர்கள் இலக்கியப் பிரியர் மட்டுமல்ல கர்நாடக சங்கீதப் பிரியரும்கூட. 1990-ஆம் ஆண்டு, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி கம்பராமாயணப் பாடல்களை இசைத்தட்டில் பதிவு செய்ய எண்ணியபோது அதற்கான முழு ஆலோசனையும் பெற்றது இவரிடத்தில்தான்.

இப்ப மறுபடியும் ஊரெங்கும் சுற்றி மறுபடியும் நம்ம தலைப்பிற்கு வருவோம் அதாவது எஸ்.எம்.ஏ.காதர் அவர்களைப் பற்றி பேசுவோம்
எஸ்.எம்.ஏ.காதருக்கு குன்னக்குடி வைத்தியநாதன் பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ‘காரண நபியே’ என்ற ‘அம்சத்வனி’ ராகத்தில் அமைந்த பாடலுக்கு வயலின் வாசித்தது சாட்சாத் நம்ம பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்யநாதன் அவர்களேதான். “வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர்” என்று இவரது சிறப்பைக் கூறுவார்கள்.

எஸ்.எம்.ஏ.காதர் பாடிய ‘வாரரோ வாராரோ ஞானக் கிளியே’ என்ற கும்மி பாடல் கொலம்பியா இசைத்தட்டில் பெரும் சாதனை படைத்தது.
பைரவி ராகத்தில் ஆதி தாளத்தில் இவர் பாடிய “சேது சாரா” என்ற பாடல் ஓர் இஸ்லாமிய இசைக்கலைஞர் பாடிப் பதிவு செய்த தியாகராசர் கீர்த்தனை என்ற பெருமையைத் தட்டிச் சென்றது.

பாகேசீரி, மோகனம், சஹானா, மால்கோஸ், சுபபந்துவராளி இந்த ஐந்து ராகங்களையும் ஒரே பாடலில் கலந்து பாடி பாராட்டைப் பெற்ற இசை ஞானி இவர்..
குணங்குடி மஸ்தான் , ஆரிபு நாவலர், புலவர் ஆபிதீன், பண்டிட் உசேன், வண்ணக் களஞ்சிய ஹமீதுப் புலவர், கவிஞர் சலீம், காசிம் புலவர், உமறுப் புலவர் போன்ற எண்ணற்ற புலவர்களின் பாடல்களை பாடிய சிறப்பு இவருக்குண்டு.

கலீபா உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய வரலாற்றுச் சுருக்கம் ஆரிபு நாவலரால் இயற்றப்பட்டது. இதனை இராகதாள மாலிகையில் இவர் பாடியுள்ள இசைத்தட்டு மிகவும் பிரபலம். இசுலாமியப் பாடல்களுடன் பாபனாசம் சிவன் போன்றோரின் இந்துமதத் தமிழ்ப் பாடல்களும் ஏராளமாக உள்ளன. கும்மிப்பாட்டு, குறவைப் பாட்டு, ஞானப் பாட்டு, சாஸ்திரிய கானங்கள், இஸ்லாமிய கானங்கள் என இவர் இசைத்தட்டுகளில் பாடிய பாடல்கள் ஏராளம் ஏராளம்.
முனைவர் இரா. திருமுருகன், பேராசிரியர் முரளி அரூபன், முனைவர் நாகூர் ரூமி, எழுத்தாளர் சாரு நிவேதிதா இன்னும் பலர் நாகூர் இசைக் கலைஞர்களைப் பற்றி ஆராய்ந்து நிறைய எழுதியுள்ளனர்.

பொதுவாகவே இஸ்லாமியர்களுக்கும் கர்நாடக இசைக்கும் யாதொரு சம்பந்தமில்லை என்ற பொதுவான அபிப்பிராயம் நிலவுகிறது.

இசை வேந்தர் கும்பகோணம் எஸ்.டி.சுல்தான், இசையருவி குமரி அபுபக்கர் நாகர் கோவிலைச் சேர்ந்த ஹுசைன் பாகவதர், மதுரை ஹுசைனுத்தீன், தமிழிசை ஆய்வாளர் நா.மம்மது, ‘மயில் ஏறும் ராவுத்தர்’ ஷேக் சாகுல் ஹமீது எனும் ராஜா முகம்மது இவர்களின் பெயர்கள் கர்நாடக இசையுலகில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயர்கள்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் எஸ்.எம்.ஏ. காதிர் அவர்களது சங்கீத மேன்மையைக் கேள்விப்பட்டு அவரைக் காண அவரது இல்லம் தேடி வந்திருக்கிறார். உலகமே போற்றி வியக்கும் ஆஸ்கார் நாயகனை நடுக்கட்டில் அமர வைத்துவிட்டு தந்தையை அழைப்பதற்காக உள்ளே சென்றிருக்கிறார் அவரது புதல்வன், என்னுடைய நண்பர் நூர் சாதிக் :

“ஏ.ஆர்.ரஹ்மான் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்காஹா வாப்பா” என்று மகன் சொல்ல, கசங்கிப்போன கைலியும், கிழிந்துப்போன முண்டா பனியனும் அணிந்திருந்த சங்கீத மேதை, அவரை சந்திப்பதற்காக அப்படியே கிளம்பியிருக்கிறார்.

“வாப்பா! பனியன் கிழிஞ்சிருக்கு வேற உடுப்பு போட்டுக்கிட்டு போங்க” என்று மகன் அன்புக்கட்டளை இட வித்வானுக்கு வந்ததே கோவம்.

“ஓய் அவரு என்னை பார்க்க வந்திருக்காரா? இல்லே என் சட்டையை பார்க்க வந்திருக்காரா?” என்று எரிந்து விழ, மீறி வற்புறுத்தினால் எங்கே முரண்டு பிடித்து ஏ.ஆர்.ரஹ்மானை பார்க்க மறுத்து விடுவாரோ என்று மகன் அமைதியாகி விட்டார்.

இவரிடம் என் நண்பர் நாகூர் ரூமியும் கொஞ்ச காலம் இசை பயின்றார். நல்ல வேளை, யார் செய்த புண்ணியமோ ஆறு மாதத்திற்குள்ளேயே அவர் பாதியில் விட்டு விட்டார். இல்லையென்றால் அவரையும் பாகவதராக்கி, தம்பூரா வாசித்துக்கொண்டே அவர் பாடும் கர்நாடகப் பாடலை இந்த இசையுலகம் கஷ்டத்துடன் கேட்டு இம்சை அனுபவித்திருக்கும்.

HMV மற்றும் கொலம்பிய இசைத்தட்டு நிறுவனங்களில் இவருக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. நாகூர் இசைமுரசு இ.எம்.ஹனிபா அவர்களை HMV இசைத்தட்டு நிறுவனத்தில் இவர்தான் அறிமுகம் செய்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

சங்கீத மேதை எஸ்.எம்.ஏ.காதர் அவர்களின் இறப்புக்கு சிறிது காலம் முன்பு 19.08.2009 அன்று நாகூர் தர்கா வளாகத்தில் நாகூர் தமிழ் சங்கம் அவருக்கு “வாழ்நாள் விருது” அளித்து கெளரவித்தது. கலைமாமணி இ.குல்முகம்மது இறைவணக்கப் பாடல் பாட கூட்டம் இனிதே தொடங்கியது. ஆன்றோர் சூழ்ந்திருந்த அச்சபையில் கவிஞர் இஜட் ஜபருல்லாஹ், கவிஞர் நாகூர் சலீம், கவிஞர் காதர் ஒலி. கவிஞர் இதய தாசன் போன்றோர் வித்வானைப் புகழ்ந்து கவிமழை பொழிந்தனர். அடியேனும் ஒரு கவிதை பாடினேன்.

நம்ம சங்கீத வித்வானைப் புகழ்ந்து கவிஞர் இஜட் ஜபருல்லாஹ் இப்படிப் பாடினார்:
இவர்

இரும்புப் பெட்டியை தூரப் போட்டுவிட்டு
கிராமபோஃன் பெட்டியை
பக்கத்தில் வைத்துக்கொண்டவர்.

இவர் வீட்டில்
வெள்ளித் தட்டுகள்
உணவு மேசையில்
சாதாரணமாய் கிடக்கும்..!
இசைத்தட்டுகள் மட்டும்
பூட்டிய அலமாரிக்குள்
பத்திரமாக இருக்கும்..!

நான் கவிதை பாடுகையில் இப்படியாகப் பாடினேன் :

சரீரம் தளர்ந்தாலும்
சாரீரம் தளராத
வீரியமிக்க
ஆரிய வாசம் வீசும்
ஸ்வரம் இவர் வசம் – இது
இறைவன் கொடுத்த வரம் !

மரபிசைக்கு ஒரு ICON
இந்த மேதகு மரைக்கான்

இவருக்கிருந்த செல்வத்தில்
மாளிகைகள் கட்டி இருக்கலாம்
ஆனால் ..
மாளிகைகள் ஒருநாளில்
மண்ணோடு மண்ணாக இடிந்து விடும்.
இவரிழைத்த
– ராகமாலிகை
– தாளமாலிகை
என்றென்றும்
எங்கள் காதுகளில்
தேனாய் இனிக்கும்.

பணக்கட்டுகளை காட்டிலும்
தாளக்கட்டுகளை கூடுதலாய் நேசித்தவர்.
பாட்டென்றாலே
பலபேர் கத்துவான் – இந்த
பாட்டுடைத் தலைவன்
எல்லோருக்கும் வித்துவான்

இவருக்கு மணியான சீடர்கள்
many many – அதில்
தலையாய சீடர்தான்
இந்த “இசைமணி”

இவர் மட்டும்
ஐயர்வாளாய் இருந்திருந்தால்
இந்நேரம்
ஐநா வரை இவர் குரல்
எட்டியிருக்கும்

நாகூரில் பிறந்ததினால்
நாற்சுவரில் இவர் புகழ்
அடங்கிப் போனது.

இவர் கலப்படக்காரர் ..

செய்ததோ முறையான கலப்படம்
கலப்படத்தில் அதுவென்ன
முறையான கலப்படம்?

இந்துஸ்தானியையும்
கர்னாடகத்தையும்
கலப்படம் செய்தது
நிரூபணம்

தலைக்கனமில்லா இவருக்கு
ஆரோகணம் முதல்
அவரோகணம் வரை
அத்தனையும் அத்துப்படி

தாளம் அறிந்த இவரை
ஞாலம் கண்டு கொள்ளாதது
காலத்தின் கோலம்

ஆம். சங்கீத உலகில் சாதனை படைத்த இவருக்கு ஒரு “கலைமாமணி” பட்டம் கூட தமிழக அரசு கொடுத்து கெளரவிக்காதது வேதனையிலும் வேதனை. அனுஷ்கா, தமன்னா, யோகி பாபு இவர்களுக்கு கூட “கலைமாமணி” பட்டம் கொடுத்து கெளரவித்து இருக்காங்களாம். என்னமோ போங்க.

அப்துல்கையூம்

(படம் 1 சங்கீத மேதை நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்.
படம் 2 : வாழ்நாள் சாதனை விருது வழங்கும் விழாவில் (இடமிருந்து வலம்) விதவான் எஸ்.எம்.ஏ.காதர், இசைமணி எம்.எம்.யூசுப், அடியேன் அப்துல் கையூம், கவிஞர் இதயதாசன்)

 

One response to “நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்

  1. rathnavelnatarajan

    April 21, 2022 at 10:11 am

    நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் – விரிவான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி நாகூர் மண்வாசனை
    THE AROMA OF NAGORE SOIL

     

Leave a comment