RSS

கம்பன் அவன் காதலன் (முதல் பாகம்)

16 May

பிறப்பு : பிப்ரவரி 8, 1921
மறைவு : ஜனவரி 17, 2005

(மாண்புமிகு நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வுகள்)

By அப்துல் கையூம்

இளமைப் பருவம்

“நீங்க யார் யாரையோ பாராட்டி எழுதுறீங்களே! உங்களுர்க்காரர் காலஞ்சென்ற நீதிபதி மு.மு.இஸ்மாயீலைப் பற்றி எழுத வேண்டியதுதானே?” என்று எனது சகவலைப்பதிவாளர்
நண்பர் முஹம்மது அலி சூடுபட கேட்ட பின்புதான் இப்படியொரு எண்ணமே என் மரமண்டையில் உதித்தது.

ஆக்ராவில் இருந்துக் கொண்டு தாஜ்மஹாலைக் காணத் தவறியதைப் போல ஒரு குற்ற உணர்வு என் மனதை கறையானாய் அரித்தது. கையிலே வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தேனோ? புதையல் மூட்டையில் அமர்ந்துக் கொண்டே புதையலைத் தேடினேனோ?

அந்த மண்ணின் மைந்தனின் மகத்தான மாண்புகளை மலராகத் தொடுக்கும் போதே மனதுக்குள் மத்தாப்பு. வண்டியில் துண்டுபோட்டு இடம்பிடிப்பதைபோன்று முண்டியடித்து மனதுக்குள் இடம்பிடித்துக் கொண்டன வண்ணமயமான எண்ணங்கள். அமுதசுரபியாய் ஆர்த்தெழும் வார்த்தைகளை பக்கங்களில் அடைப்பதற்குள் சிக்கித் தவித்து சக்கையாகிப் போனேன். ஆழ்கடலை சிமிழுக்குள் அடைப்பதா? அவரது அருமை பெருமைகள் அளவிடற்கரியது.

எனது கன்னி முயற்சிக்கு மனவியல் நிபுணர் பாவ்லா ரிச்மேன் என்ற அமெரிக்கப் பெண்மணி எழுதி, ஆக்ஸ்ஃபோர்ட் பதிப்பகம் வெளியிட்ட, “Questioning of Ramayanas” என்ற ஆய்வுநூல் பெரிதும் துணை புரிந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நூல். ராமாயண நூலின் நம்பகத்தன்மையை வினா எழுப்பும் வகையிலும், இந்து சமயத்தவரின் மனதை புண்படுத்தும் வகையிலும், சில தகவல்கள் இதில் அடங்கி இருக்கின்றதென்ற குற்றச்சாட்டு எழுந்து, இந்நூலை தடை செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதில் நமக்கு வேண்டிய நல்ல பல அரிய தகவல்களும் காணக் கிடைத்தன. இந்நூலில் இடம்பெற்றிருந்த “The Ramayana and its Muslim Interpreters” என்ற ஆய்வுக்கட்டுரையில், அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக் கழகத்தின் சமய விரிவாளராக பணியாற்றும் பேராசிரியை வாசுதா நாராயணன், நீதிபதி இஸ்மாயீலைப் பற்றி எழுதியுள்ள – நாம் பெறத் தவறிய – அபூர்வமான குறிப்புகள் சில கிடைக்கப் பெற்று சிலையாகிப் போனேன். திருக்குறளின் மேன்மையை எடுத்துச் சொல்ல கானடாவில் பிறந்த ஒரு ஜி.யு.போப் தேவைப்பட்டதைப் போன்று, நாகூர்க்காரரின் மகிமையை எடுத்துச் சொல்ல நமக்கொரு அமெரிக்கா பேராசிரியை தேவைப்படுகிறது.

எனது பள்ளிப் பருவத்திலிருந்தே இந்த மாமனிதரைப் பற்றி உள்ளத்தில் உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தேன். பசுந்தமிழ் பாவலராகவும் பண்பான நீதிபதியாகவும் அவர் வாகை சூடி
வலம் வந்த காலம். அவர் நாகூருக்கு வருகை புரிந்த உவகை செய்தியறிந்து, எனது சிறிய தகப்பனார் அப்துல் ரஹீமுடன், அஜீஸ் நானா வீடு என்றழைக்கப்படும் வண்ணமயமான
அவ்வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தேன். படிப்படியாய் உயரவேண்டும் என்பதை நினைவுறுத்தவோ என்னவோ நிறைய படிகள். எனக்கு அப்போது கால்சட்டைப் பருவம்.
இருந்தாலும் கைலிதான் அணியவேண்டும் அது சம்பிராதாயம். அவரைப் பற்றிய காதுவழி செய்திகள் மட்டுமே அறிந்திருந்த நான் அன்றுதான் முதன்முறையாக அவரை காணப்
போகின்றேன்.

“கெளரவம்” படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் ‘கெட்-அப்’பில் வரும் சிவாஜியைப் போன்று, வெள்ளிநரை நெற்றியில் ஊஞ்சலாட, வாயில் ‘பைப்’ சகிதம் ஸ்டைலாக, நம்மை
எதிர்கொள்வார் என்று கற்பனை செய்திருந்த எனக்கு, தொப்பியும் கைலியும், பத்தோடு பதினொன்றாய், நாகூர் மரைக்காயராய் அந்த நாயகன் காட்சி தந்தது, பெருத்த ஏமாற்றத்தை
ஏற்படுத்தியது.

அவர் முகத்தில் காணப்பட்ட ‘தேஜஸ்’, அவர் மீது நான் கொண்டிருந்த மதிப்பையும், மரியாதையும் மேலும் பன்மடங்காக்கியது. இன்னாருடைய மகன் என்று தெரிந்துக் கொண்டு
என்னை முதுகில் செல்லமாக தட்டிக் கொடுத்தார். நிறைவானவர்கள் குறைவாகத்தான் பேசுவார்களோ? “சபாஷ்” என்ற மூன்றெழுத்துக்கு அந்த ஒரு ‘பாசத் தட்டு’ பிட்மன்
சுருக்கெழுத்து என்பதை கற்பூரமாய் புரிந்துக் கொண்டேன்.

இஸ்மாயீல் அவர்களின் உறவுக்காரப் பிள்ளைகள் அவரை “ஜட்ஜப்பா” என்றுதான் பாசத்துடன் அழைப்பார்கள். “உங்களுக்கு ஜட்ஜப்பா பிடிக்கும். அவருக்கோ (கம்பனின்) விருத்தப்பா பிடிக்கும்” என்று நான் வேடிக்கையாக அவர் உறவினர் ஒருவரிடம் கூறுவதுண்டு.

‘தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று’

என்ற வள்ளுவர் வாக்குக்கேற்ப புகழோடு தோன்றி, புகழோடு மறைந்து, பிறந்த மண்ணிற்கும், பிறந்த சமூகத்திற்கும் பெருமை சேர்த்த பெருந்தகை இலக்கியச் செல்வர் நீதிபதி எம்.எம்.இஸ்மாயீல் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது.

நாகூரில் பூத்த நறுமலர் :

நாகூர் – வங்கக் கடல் தாலாட்டும்; வரலாற்றுச் சிறப்பு கூறும்; வண்ணத் தமிழ் சீராட்டும்; வந்தாரை வாழ வைக்கும், வரிசைமிகு ஊர்.

வான் முட்டும் கோபுரங்கள்; வட்டமிட்டு வரவேற்கும் புறாக்கள்; வாழ்வாதாரம் தேடி வருவோரின் வளமிகு சரணாலயம் அது.

அது புண்ணிய பூமியா? புலவர்கள் பூமியா? புகலிடம் தேடிவருவோரின் சொர்க்கபுரியா? புலப்படாத புதிர்.

வறியோர்கள் வயிறு நிறைந்து வாழ்த்தும் பூமி அது. கடற்கரை காற்று பூமியை குளிர வைக்கிறதோ இல்லையோ “சாமி!” என்று கையேந்தும் வறியோரின் வயிற்றை பனிக்கூழாய்
குளிர வைக்கிறது அந்த பூமி.

இருளும் இங்கு வந்து எட்டிப் பார்த்து எளிதில் தோற்கும். உலகமே உறங்கும்போது இவ்வூர் மட்டும் ‘கொட்டக் கொட்ட’ விழித்திருக்கும். ஆம். அது ஒரு 24×7 அலைவரிசை. நட்டநடு
நிசியிலும் சட்டுவங்களின் நட்டுவாங்க நர்த்தன ஓசை நளினமாய் காற்றில் மிதந்து வரும். இங்குள்ள சில உணவகங்களின் அடுப்புக்கள் அணையா ஒலிம்பிக் ஜோதி.

எத்தனைக் கவிஞர்கள் இதில் பிறந்தார்; எத்தனைக் கலைஞர்கள் இதில் சிறந்தார்; என்ற எண்ணிக்கை எவரிடத்திலும் இல்லை. ஏன்? நடமாடும் நாகூர் களஞ்சியம் சொல்லரசு ஜாபர்
மொய்தீனுக்கே சொல்லத் தெரிந்திருக்காது.

இலக்கியம் என்ற பெயரில் சாக்கடை நீரை அள்ளித் தெளிக்கும் சாருநிவேதிதாவை பெற்றெடுத்ததும், இலக்கிய உலகில் இணையற்ற சுடராக ஒளிவிட்ட இஸ்மாயீலைப்
பெற்றெடுத்ததும் இவ்வூர்தான்.

“சார்! சாருவின் மேல் அப்படியென்ன உங்களுக்கு தீராத கோபம்?” என்ற கேள்வி எழலாம். காசுக்காக எழுதுபவர்களுக்கும், கண்ணியமாய் எழுதுபவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. காசுக்காக எழுதுவது தப்பில்லை. ஆனால் வெறும் “Controversy”க்காகவே எழுதுபவர்களை எந்தச் சிலுவையில் அறைவது?

“எனக்குப் பெரிதாக ஊர்ப்பாசம், கீர்ப்பாசமெல்லாம் கிடையாது. இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்து பொறுக்கிய இடங்களைப் பற்றிப் படிக்கும் போது தவிர்க்க முடியாமல் ஒரு ‘நாஸ்டால்ஜிக்‘ உணர்வு வந்து குந்திக் கொள்கிறது” என்று பிதற்றும் சாரு நிவேதிதா எங்கே?

“நான் சென்னை வாசி என்று ரொம்ப பேர் எண்ணுகிறார்கள்… நான் எப்போதும் சொல்வது… நான் நாகூர்வாசி தான்…” என்று விசுவாசம் பொங்கக் கூறிய நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் எங்கே?

வேரை மறந்தவனிடம் விசுவாசத்தை காண முடியுமோ? தாய்மண்ணை மறந்தவன் தகைசால் மாந்தனாய் ஆகவும் முடியுமோ? ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பவனை எப்படி போற்றுவது?

“தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அதற்கோர் குணமுண்டு” என்று சூளுரைத்தான் ஒரு கவிஞன். “நாகூர் என்றொரு நகர் உண்டு; நானிலம் போற்றும் சிறப்புண்டு” என்று
நம்மையும் பாடத் தூண்டும்.

நகருக்குரிய பொலிவும், கிராமத்திற்குரிய பரிவும் ஒருங்கேறிய ஊர் அது.

எங்களூர் பெரியவர் ஒருவரிடம் இஸ்மாயீல் அவர்களைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ளலாமே என ஆர்வத்துடன் வினவியபோது “ஓஹோ, அவரா? பூணுல் போடாத பார்ப்பான் ஆச்சே அந்த மனுஷன்” என்பதுதான் பதிலாக வந்தது.

விக்கல் எடுத்த காளமேகப்புலவனுக்கே நக்கல் செய்த நாகைப்பதியினரின் நாவு, நையாண்டி மேளம் முழக்கும் என்ற உண்மை, நாடறிந்த ஒன்றுதானே?

நாகூர் நகரின் வடக்கே வீற்றிருந்தது மீயான் தெரு. அதிக சந்தடியில்லா அத்தெருவில் அமைந்திருந்தது நாகூர் முனிசிபல் முகம்மதிய ஆண்கள் ஆரம்பநிலைப் பள்ளி. அங்கேதான்
ஒரு வித்து விருட்சமானது. விலைமதிப்பில்லா ஆணிமுத்தொன்று அங்கேதான் அகப்பட்டது.

களையான முகம், கள்ளமிலாச் சிரிப்பு, துறுதுறு கண்கள், துள்ளிக் குதிக்கும் தேகம், படிப்பிலே பேரார்வம், பண்பட்ட மனிதனுக்குரிய பக்குவம் – சிறுவன் இஸ்மாயீலின் சீரான குணங்கள் அவனை தனித்துக் காட்டியது.

சிறுவன் இஸ்மாயீல் அப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம் அது. தமிழ்நாடு மாநிலம் “மெட்ராஸ் பிரஸிடென்ஸி” என்று அழைக்கப்பட்ட காலம். ஒரு காலைப்
பொழுதில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், வீதியில் பலத்த ஆரவாரம் ஒலித்தது. வாகனங்களின் அணிவகுப்பு சீராக வந்துக் கொண்டிருந்தது. பாடத்தை நிறுத்தி
விட்டு, ஆசிரியர்களும் மாணவர்களை வேடிக்கை பார்ப்பதற்கு வெளியே அழைத்துச் சென்றனர். திண்ணை மீதிருந்தும், சுற்றுச் சுவர் மீது ஏறி நின்றும், அந்த கண்கொள்ளாக்
காட்சியை கண்டு களித்தனர் மாணவர்கள்.

படோபகரமான வாகன அணிவகுப்புக்கிடையே ஒரு ‘மெர்ஸிடீஸ்’ படகுக்கார் பவனி வந்துக் கொண்டிருந்த்தது. அதில் அட்டகாசமான தோரணையில் ஆங்கிலேய கவர்னர் கம்பீரமாக
வீற்றிருந்தார். ஊர்வலம் பள்ளியின் வழியாக கடந்து சென்றுக் கொண்டிருந்தது. சிறுவன் இஸ்மாயீலின் கண்களில் இனம்புரியாத ஒரு பிரகாசம் ஒளிவிட்டிருந்தது. உற்சாகம் மேலிட,
வாகனங்கள் சென்ற வழியே, வைத்த பார்வை தீராது, வழிமேல் விழி வைத்து; கண்சிமிட்டாது நோக்கிக் கொண்டிருந்தான் அவன்.

இஸ்மாயீல் மீது பேரபிமானம் வைத்திருந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஐயர் “டேய் பசங்களா! நம்ம இஸ்மாயீலும் ஒருநாள் இந்த மாதிரி கவர்னர் ஆகி அட்டகாசமாக ஊர்வலம் வருவான். பார்த்துக்கொண்டே இருங்க!” என்று விளையாட்டாகச் சொன்னது அந்தச் சிறுவனின் காதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்பிற்குரிய ஆசிரியர் அகமகிழ்ந்து அளித்த நல்வாக்கு, ஒருநாள் உண்மையிலேயே பலிக்கும் என்று யாரும் ஊகித்திருக்க மாட்டார்கள்.

பின்பொருநாள், அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், தற்காலிக கவர்னராகவும் பதவி வகித்த வேளையில் அதே பள்ளிக்கூடம் வழியே அணிவகுப்பு புடைசூழ பவனி வர
வேண்டிய தருணம் அமைந்தது. அச்சமயம் அந்த மாமனிதரின் மனதில் தோன்றிய மலரும் நினைவுகளை எழுத்தில் வடிக்கவும் முடியுமோ?

பழுதடைந்து போன அந்த பள்ளி, செதிலடைந்துப் போன திண்ணை, சின்னாபின்னமான அந்த குட்டிச்சுவருக்கிடையே ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் உருவம் மின்னலென மனக்கண்ணில் தோன்றி மாயமாய் மறைந்தது. அதோ அந்த மரத்தடிக்கு கீழேதான் இந்த மாண்புமிகு உரமேறியது. அன்று அவர் சொன்ன வார்த்தை அசரீரியாய் காதுகளில் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. அவரது நிறைவான வாக்கு இன்று நிஜமாகவே பலித்துப்போனதை எண்ணி நெஞ்சம் குளிர்ந்து ஆனந்தக் கண்ணீர் ஆறென பெருக்கெடுத்தோடியது.

நீதிபதியின் கண்களில் நீர்க்கோர்த்திருந்ததன் நிஜமான காரணம் உடன் வந்த அவருடைய சீருடை பாதுகாவலர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த
நீதிபதி தன்னிலைக்கு மீண்டுவர தாமதம் பிடித்தது.

நினைவு கூறத்தக்க மற்றொரு நிகழ்வு. சிறுவன் இஸ்மாயீலுக்கு அப்போது வெறும் ஒன்பது வயது. நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் பொருட்டு நாகூரில் தடபுடலாக
ஒரு மீலாது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாமர்த்தியமும், மிடுக்குத்தனமும், பேச்சுத்திறனும் வாய்ந்த சிறுவன் இஸ்மாயீலுக்கு அந்த விழாவில் சொற்பொழிவாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டது. மடை திறந்த வெள்ளமென பேசி கேட்போரை வியப்பில் ஆழ்த்தினான். கூட்டத்தினரின் கைத்தட்டல் ஓசை வானைப் பிளந்தது. “விளையும் பயிர் முளையில் தெரியும்” என்பார்களே, அது இதுதானோ?

பிற்காலத்தில் கவிக்கம்பனை கொம்பனாக்கியது இந்த சிம்பிள் சிகாமணிதானோ?

அதுமட்டுமல்ல, இஸ்மாயீலுக்கு இஸ்லாமிய மார்க்க அறிவு சிறுவயது முதலே நன்றாகவே இருந்தது. மிகச் சிறுவயதில் அரபி மதரசா சென்று அரபி மொழியில் பயிற்சி பெற்று முறையாக முதிர்ச்சி பெற்றவன் அவன்.. தமிழ்மொழியில் அபார பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், இந்த மார்க்கக் கல்வி பிற்காலத்தில் அவர் “அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்” போன்ற இஸ்லாமிய நூல்கள் எழுதுவதற்கு ஏதுவாக இருந்தது.

தொடக்க வயதில் அரபி மதரஸாவில் அடிப்படை மார்க்கக் கல்வி பயின்ற காரணத்தால் அதன்பின் ஆரம்பப் பள்ளியில் அடியெடுத்து வைத்த காலத்தில் அவரோடு படித்த மாணவர்களில் இவர்தான் வயதில் மூத்தவர். இவரது வயதையொத்த பிற மாணவர்கள் மேல்வகுப்பில் இருந்ததைப் பார்த்து இவருக்குள் ஒரு ஏக்கம். வாழ்க்கையில் ஏனோ பின்தங்கி
விட்டதைப் போன்ற பிரமை. உள்ளுணர்வு இவரை வாட்டி எடுத்தது. அதிகப்படியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகம், தன் வயதையொத்த மாணவர்களுடன் தானும்
சேர்ந்து படிக்க வேண்டும் என்ற உந்துதல், கல்வியில் இவர் காட்டிய பேரார்வம், இவரது பள்ளி ஆசிரியர்களை பெரிதும் கவர்ந்தது.

இஸ்மாயீலின் இளமைக் காலத்து வாழ்க்கைப் பாதையில் பூக்கள் விரித்திருக்கப் படவில்லை. அவன் கரடு முரடான முட்பாதையைக் கடக்க வேண்டியிருந்தது.  பி.முஹம்மது காசிம் மரைக்காயர், ருகையா பீவி இருவருக்கும் செல்வப்புதல்வானாய் வந்து பிறந்தவர்தான் நம் நாகூர் நாயகன். உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். ஒருவரின் பெயர் ஜக்கரியா மரைக்காயர். (இவர் எழுத்தாளராகவும் வலைப்பதிவாளராகவும் புகழ் பெற்று வரும் ஆபிதீனின் மாமனார்) இன்னொருவர் உம்மு ஹனிமா என்றழைக்கப்படும் சகோதரி ஆவார். (நாகூரில் லுக்மான் ஆலிம் சாயபு என்பவரின் வாழ்க்கைத் துணைவியார்)

ஒன்பதாவது வயதில் பெற்ற தாயையும், பதிமூன்றாவது வயதில் தந்தையையும் பறிகொடுத்த சிறுவன் இஸ்மாயீலுக்கு உலகமே இருண்டு போனது. ஆறுதல் தேடும் வயதில்,
ஆதரவு வேண்டும் பருவத்தில், அனாதையாய் ஆகிவிடுவது அளப்பரிய கொடுமை. இருந்த போதிலும் அவரது உறவினர்கள் அவரை கைவிடவில்லை.

“யார் அனாதைகளைப் பராமரிக்கிறாரோ அவரும் நானும் இப்படி இருப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு கூறும் போது தனது ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்துக் காட்டினார்கள்” – அல் ஹதீஸ்

அதற்கேற்ப சிறுவன் இஸ்மாயீலை உறவினர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார்கள். உழைப்பதற்கு அவன் சற்றும் தயக்கம் காட்டியதில்லை. வீட்டு வேலைகள்
எதுவாக இருந்தாலும் அவன் வியர்வை சிந்தி செய்வதற்கு வெட்கப்பட்டதில்லை. சில கடுமையான வீட்டு வேலைகளையும் அவன் மேற்கொள்ள வேண்டியிருந்தது. கிணற்றில் நீர்
இறைத்து மாடுகளை குளிப்பாட்ட வேண்டும், மாட்டுக் கொட்டிலை துப்புரவு செய்ய வேண்டும்; பால் கறக்க வேண்டும்; கடைதெருவிற்கு சென்று காய்கறிகள் வாங்கி வர வேண்டும். கிடைத்த மிச்ச மீதி நேரத்தில் தெருவிளக்கு ஒளியில் படித்துத் தேர்ந்து சிறந்தது அந்த மணிவிளக்கு.

“நான் ஆண்டவனால் வளர்க்கப்பட்ட குழந்தை தெரியுமா?” என்று அவர் தன் நண்பர்களிடயே அடிக்கடி கூறி தம்பட்டம் அடித்ததுண்டு. தன்னைத்தானே புடம்போட்ட தங்கமாய் உருவாக்கிக் கொண்டது அந்த பிஞ்சுள்ளம்.

நாகூரில் அப்போதிருந்த சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் தொடக்கப்பள்ளி வரையில் படித்திருந்தாலே போதுமானது என்று நினைத்திருந்த காலம். ஒளவையாரின் மீது அளப்பரிய அன்பு வைத்திருப்பவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள் போலும். அரும்பு மீசை துளிர் விடத் தொடங்கினாலே போதும், ஆண்கள் ஒளவைப் பாட்டியின் கனவை நனவாக்க புறப்பட்டு விடுவார்கள். ஆம். சிங்கப்பூர், மலேசியா, சியாம் என்று “திரை கடலோடி திரவியம் தேட” ஆயத்தமாகி விடுவார்கள்.

(சாருநிவேதிதா போன்றே ஒளவையாரின் மீதும் எனக்கு அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. அதியமானுடன் சரிசமமாக அமர்ந்து எப்போது இந்த அம்மா
தண்ணியடிச்சது என்று கேள்விப்பட்டேனோ அன்றிலிருந்து நான் இப்படி ஆகிவிட்டேன்)

‘சபராளிகள்’ என்று செல்பவர்கள் சஃபாரியில் வந்து இறங்குவார்கள். சிறுவயதில் எஸ்.எஸ்.ரஜுலாவிலும், எம்.வி.சிதம்பரம் கப்பலிலும் நாகை துறைமுகத்திலிருந்து செல்பவர்களை ‘டாட்டா’ காட்டி வழியனுப்பிவைத்த நினைவுகள் இன்னும் நீங்காதிருக்கிறது.

கப்பலுக்கு போன மச்சான், நாலு வார்த்தை கடிதம் எழுதினால், அதைப் புரிந்துகொள்ளக்கூடிய கல்வியறிவு வந்து விட்டாலே போதுமானது என்று முடிவு கட்டி விடுவார்கள். ஆனால் ஆண்கள், பெண்களும் அவசியம் மதரஸாவில் சென்று ஆரம்ப அரபி பாடம் கற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

மதரஸாவில் குர்ஆன் சம்பிராதாயத்திற்காக கடகடவென்று வாசிக்க மட்டுமே கற்றுக் கொடுத்தார்களே தவிர அதன் அர்த்தங்களையோ விளக்கங்களையோ அவர்கள் தெளிவுற
சொல்லிக் கொடுத்ததில்லை. மதரஸாவில் வெள்ளை பலகையை தோள்பட்டையில் சுமந்துச்சென்று, அங்கு “அலிஜர ஆ, அலி ஜர ஈ, அலி பேஷ ஊ” என்று கோஷ்டியாக ராகம் பாடி
வந்த இளம்பிராய அனுபவம் எனக்கும் உண்டு.

பெண்கள் தமிழ்ப்பாடம் படிப்பதற்கு வசதியாக அருகிலேயே மகளிர் கோஷா ஸ்கூல் இருந்தது. அங்கு உருதுப் பாடமும் போதிக்கப்பட்டது. வெறும் மூன்றாம் வகுப்பே படித்திருந்த சித்தி ஜுனைதா பேகம், முதல் இஸ்லாமிய தமிழ் நாவலாசியை என்ற பெருமையை தட்டிச் சென்றதிலிருந்து இந்த பெண்களை நன்றாக படிக்க வைத்திருந்த்தால் எத்தனைக் கவிஞர்கள் துளிர் விட்டிருப்பார்கள் என்ற ஆதங்கம் என்னை கசக்கிப் பிழிந்தது. எத்தனை சல்மா? எத்தனை பர்வீன் சுல்தானா? எத்தனை பாத்திமுத்து சித்தீக்?, எத்தனை ஜெய்புன்னிஸா? எத்தனை முபீன் சாதிக்கா? எத்தனை யெத்தனை சித்தி ஜுனைதாக்கள் – பூவையர்கள் புயலாய் புறப்பட்டிருப்பார்களோ தெரியாது.

அக்காலத்தில், முனிசிபல் முகம்மதிய ஆண்கள் பள்ளி, மகளிர் கோஷா பள்ளி, இவைகளைத் தவிர நாகூர் ஹனிபா போன்றவர்கள் கல்வி பயின்ற செட்டியார் தொடக்கப் பள்ளியும், தேசிய உயர்நிலைப்பள்ளி போன்றவைகளும் சிறப்பாக செயல்பட்டு வந்தது. .

சிறுவன் இஸ்மாயீல் படிப்பில் காட்டிய ஆர்வம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. வீட்டு வேலைகள் ஆயிரமிருந்தும், படிப்பில் அவனது கவனம் சற்றும் சிதறவில்லை. கடின
உழைப்பாலும், கடும் முயற்சியாலும் அடுத்தடுத்து கிடைத்த இரட்டை தேர்ச்சியில் மூன்றாம் வகுப்பிலிருந்து நேராக ஐந்தாம் வகுப்பிற்கு தாவிய சிறுவன் இஸ்மாயீலின் முதற்கட்ட கனவு நனவாகி இருந்தது.

வாழ்க்கையில், தான் பின்தங்கி விட்டிருந்தோம் என்ற தாழ்வு மனப்பான்மை நீங்கி, விடாமுயற்சியினால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அன்றே சிறுவன்
இஸ்மாயீலின் உள்ளத்தில் பசுமரத்தாணியாய் ஆழப் பதிந்தது. பிற்காலத்தில் தன் வாழ்க்கைப் பாதையில் சந்திக்க நேர்ந்த தடைக்கற்கள் ஒவ்வொன்றையும் ஒன்று விடாமல் புரட்டிப்போட்டு, வாழ்க்கையின் சிகரத்தை எட்டிப்பிடித்து, இமாலயச் சாதனை புரிய, அவனது இந்த பள்ளி அனுபவங்கள் ஏணிப்படிகளாய் துணை புரிந்தன.

இஸ்மாயீல் படித்த இடைநிலைப்பள்ளியில் உருது ஆசிரியரைத்தவிர மற்ற எல்லோரும் பிராமணச் சமூகத்து வைஷ்ணவப் பிரிவைச் சார்ந்தவர்கள். மாணவப் பருவத்திலும்,
அதற்குப்பின் சட்டத்துறையில் பணியாற்றிய போதும், அவர் உறவு கொண்டாடிய, நட்பு பாராட்டிய நண்பர்கள், பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தனர். ஆகையால்தான்
அவருடைய நடை, உடை, பாவனை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள் அனைத்திலும் அவர் ஒரு பூணுல் இடாத ஐயராகவே காட்சி தந்தார்.

சிறுவன் இஸ்மாயீலுக்கு தமிழ்மொழி மீது ஒரு அபார ஈர்ப்பு ஏற்பட்டது நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான். அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களின் அளித்த
தமிழார்வத்தின் பேரில் இஸ்மாயீலுக்கு தமிழ்மொழி மீது ஒரு தணியாத தாகம் பெருக்கெடுத்தது. ஆசிரியர் என்.ஆராவமுதன் ஐயங்கார் அவனுக்கு அளித்த உற்சாகமும்
ஊக்குவிப்பும் ஒரு முக்கியக் காரணம். பிராமணரல்லாத மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் குறியாக இருந்தார். அதற்கு காரணம் இருந்தது.
ஆசிரியரும் பள்ளி முதல்வர் இருவருமே ஐயங்காராக இருப்பதால், வேற்றுச் சமூக மாணவர்களுக்கு வேண்டுமென்றே குறைவான மதிப்பெண்கள் இட்டு பாரபட்சம் காட்டுகிறார்கள் என்ற பழிசொல் வந்துவிடக் கூடாதே என்பதில் அவர் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டார். தன் மாணவர்கள் நன்றாக மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருந்தார்.

இஸ்மாயீலை அழைத்து “டேய் தம்பி! நீ எப்படியாவாது வகுப்பிலே முதல் மாணவனாய் வந்து, என்பெயரைக் காப்பாற்ற வேண்டும்” அன்று உபதேசம் செய்தார்.

மற்ற மாணவர்களைக் காட்டிலும் ஒரு தனித்தன்மையை அவர் சிறுவன் இஸ்மாயீலிடம் காண முடிந்தது. அவனிடம் காணப்பட்ட அபார நினைவுத்திறன், எதையும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய புத்தி கூர்மை, விரைவில் மனனம் செய்யும் தன்மை, கடின உழைப்பு, விடா முயற்சி, இக்குணங்கள் ஆசிரியர் ஆரவமுதனை வெகுவாகக் கவர்ந்தது.

ஆசிரியரின் எதிர்ப்பார்ப்பும், அவர் அளித்த கடும் பயிற்சியும் வீண் போகவில்லை. இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியது. வகுப்பிலேயே முதல் மாணாக்கணாய் மதிப்பெண்
பெற்றிருந்தது வேறு யாருமல்ல நம் இஸ்மாயீல்தான். அக்கணம் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. வானுக்கும், மண்ணுக்கும் துள்ளிக் குதித்தான். உற்சாகம் மேலிட இந்த நற்செய்தியை எடுத்துக்கூற ஆசிரியரைத் தேடினான். அவர் கும்பகோணத்தில் இருந்தார். 40 கி.மீ. பயணம் மேற்கொண்டு கோவில் நகரத்தை அடைந்தான்.

அவனது அபிமானத்திற்குரிய ஆசானின் வீடு கோவிலுக்கு அருகாமையில் அக்ரஹாரத்தில் அமைந்திருந்தது. ஆசார அனுஷ்டானங்களில் ஊறித் திளைத்தவர் அவர் ஆசான். வீட்டுத்
திண்ணையில் அமர்ந்திருந்த ஆசிரியருக்கு எதிரே ஆனந்தப் பெருக்கெடுத்து ஓடிவரும் இஸ்மாயீலைக் கண்டதும் விவரம் புரிந்துப்போனது. இவரும் ஓடிச்சென்று அவனை
அன்பொழுக ஆரத்தழுவிக் கொள்கிறார். பிராமணன் அல்லாத ஒருவனை இங்ஙனம் ஆலிங்கனம் செய்வதை அச்சமூகம் சற்றும் ஏற்காத நேரமது. அக்கம் பக்கம் இருந்து, அக்காட்சியைக் கண்டவர்களின் முகங்கள், அஷ்டகோணங்களாகியதை ஆசான் நோட்டமிட்டாலும், அதைப்பற்றி அவர் இஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை.

இந்த ஆரவமுதன் வேறு யாருமல்ல. ஒரு காலத்தில் மேடைக் கச்சேரியில் மெல்லிசை பாடகராகவும், சன் டி.வி. தொலைக்காட்சியில் “சப்த ஸ்வரங்கள்” இசை நிகழ்ச்சி
தொகுப்பாளராகவும், வெற்றி உலா வந்த ஏ.வி.ரமணனை (ஆரவமுதன் வெங்கட ரமணன்) அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்த ஏ.வி.ரமணனின் தகப்பனார்தான் ஆராவதன்
ஐயங்கார். எஸ்.எஸ்.எல்.சி. வரை இஸ்மாயீலின் அன்பிற்குரிய ஆசிரியராக இருந்தவர்.

இஸ்மாயீல் அந்த மேல்நிலைப்பள்ளி இறுதி வகுப்பை எட்டியபோது தமிழிலக்கியத்தை மென்மேலும் அறியக் கூடிய அரிய வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. சங்க இலக்கியத்தில்
பெருந்திறன் வாய்ந்த சந்தானன் ஐயர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் போன்றவர்களிடம் கல்வி கற்கும் வாய்ப்பு அவருக்கு அதிர்ஷ்டமாய் வாய்த்தது.

பிற்காலத்தில் தமிழில் பாண்டித்தியம் பெற்று விளங்கியதன் காரணம் அவரது தமிழறிவுக்கான அஸ்திவாரம் பலமாக இருந்ததினால்தான் என்பதில் ஐயமில்லை. இஸ்மாயீல் அவர்கள், கன்னித் தமிழ்க் காவலனாக, கம்பனின் காதலானாக, எழுதுகோல் வீரனாக, இலக்கியச் சுடராக ஒளிவிட்டு பிரகாசித்த விவரங்களை பின்வரும் பதிவில் ஆராய்வோம்.

(இன்னும் வரும்….)

(எனது கட்டுரைக்கான சில தகவல்களையும், புகைப்படத்தையும் வழங்கிய நீதிபதியின் உறவினர், சிங்கையில் வசிக்கும் முகம்மது இஸ்மாயீலுக்கு என் மனமார்ந்த்த நன்றி)


 

4 responses to “கம்பன் அவன் காதலன் (முதல் பாகம்)

  1. abedheen

    May 16, 2012 at 3:50 pm

    அன்பின் கய்யூம், அருமையாக உழைத்திருக்கிறீர்கள். ஆனால் , மன்னிக்கவும், ரவியண்ணனை இதில் நுழைத்தது சரியில்லை என்பது என் அபிப்ராயம்.

     
  2. Abdul Qaiyum

    May 16, 2012 at 10:45 pm

    ஆபிதீன் அண்ணா, உங்களைப் போன்று “எதையும் தாங்கும் இதயம்” எனக்கும் இல்லாமல் போய்விட்டதே!~ என்ன செய்வது?

     
  3. batcha

    May 17, 2012 at 9:50 am

    ஆமாமா, நீங்க சொல்றது ரொம்பச்சரி; தாங்குறதுக்கும் ஒரு அளவு வேணும்

     

Leave a comment