RSS

புன்னகை தொலைந்த தினம்

18 Dec

Peshawar killing

டிசம்பர் 16

முதுகில் புத்தகத்தை சுமந்த பிஞ்சுகள்
நெஞ்சில் குண்டுகளை சுமந்த நாள்

நாங்கள்
புன்னகையைத் தொலைத்த நாளும்கூட

சின்னச் சின்ன சவப்பெட்டிகளை
கனமான இதயங்கள் தூக்கிச் சென்றன
பெஷாவர் வீதிகளில்

இக்கொலைகளைக் கண்ட
எனதருமைத் தாய்மார்களின்
ஈரக்குலைகள் எப்படி
துடிதுடித்துப் போயிருக்கும்?

அன்பைத்
தருதலையும், பெறுதலையும்தான்
அண்ணாலாரின் போதனை என்பதனை – அந்த
தறுதலைகள் அறிந்திருக்கவில்லை

இரக்க சிந்தனையில்லாதவர்கள் இவர்கள் – பிறரை
இறக்க வைக்கப் பிறந்தவர்கள்

ஒலி அண்டவெளியையும் தாண்டி
அதிக தூரம் கடந்துச் சென்றது
அன்றாகத்தான் இருக்கும்.
மாதாக்களின் மரண ஓலம்
அர்ஷையையே அதிர வைத்திருக்கும் அல்லவா?

எத்தனையோ பூகம்பத்தை
எதிர்கொண்ட பாகிஸ்தான்
அதிகமான ரிக்டர் அளவுகோளில்
ஆடிப்போனது அன்றுதான் போலும்.

எத்தனை பெற்றோர்களின் கனவுகள்
தூள் தூளாகியிருக்கும்?
எத்தனை உள்ளங்கள்
உடைந்து போயிருக்கும்.?
எத்தனை குழந்தைகளின் எதிர்காலம்
இடிந்து போயிருக்கும்?
ஆம்..
அந்த தேசம்
அதிகமான ரிக்டர் அளவுகோளில்
ஆடிப்போனது அன்றுதான்.

அன்று இறந்துபோனது
பள்ளிக் குழந்தைகள் மட்டுமல்ல
பாதகம் புரிந்தவர்களின் மனிதாபினமும்தான்.

அன்றைய தினம்
அந்த பிஞ்சுக் குழந்தைகள்
அம்மாக்களிடம் கொடுத்த வாக்கை
காப்பாற்றவேயில்லை. – பள்ளிக்கு
“போய் வருகிறேன் அம்மா” என்றவர்கள்
போய் வரவேயில்லை
போய் திரும்பியே வரமுடியாத இடத்திற்கு
போயிருந்தார்கள்.

அநியாயமாக ஓருயிரைப் பறித்தால்
ஒட்டுமொத்த மனித இனத்தையே
ஒழித்துக்கட்டிய பாவம் என்கிறது
உலகாளும் இறை தந்த உன்னத மறை

இறைவா! நீ
மாண்புடையோன்
மன்னிப்பாளன்
அருளாளன்
அன்புடையோன்
இந்த மாபாதகம் புரிந்தவர்களைமட்டும்
தயவுசெய்து மன்னித்து விடாதே!

கவிஞர் அப்துல் கையூம்

 

2 responses to “புன்னகை தொலைந்த தினம்

  1. desinghjothi

    April 24, 2015 at 2:17 am

    மனதை வருடி வாட்டியதே
    மாகவியின் இக்கவிதை!

     

Leave a comment