– சாரு நிவேதிதா
“கலை இலக்கியத் துறையில் யாரைப் பார்த்தாலும் மதுரை , திருநெல்வேலி என்றுதான் சொல்கிறார்களே தவிர நாகூர் , நாகப்பட்டினம் , காரைக்கால் என்று ஒரு ஆளைக்கூட காணோமே ?” என்று வசந்த பாலன் , அமீர் போன்ற நண்பர்களிடம் கூட ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டிருப்பேன். ஏனென்றால் , அவர்கள் மதுரைப் பக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
‘ ஏன் , நாகூர் அனீஃபா இருக்கிறாரே ?” என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறார். ஆனால் எந்த வித அங்கீகாரமும் இல்லாமல் ஏதோ ஒரு தெருப் பாடகன் என்ற அளவில்தானே இருக்கிறார் ? அவரைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட குரல் வளம் அவருடையது. நாகூர் அனீஃபாவுக்கு இணையாக வேறு யாரையுமே சொல்ல முடியாது. அவர் ஒரு unique ஆன பாடகர். அவருக்கு முன்னும் பின்னும் அவரைப் போன்று பாடக் கூடிய ஒரு கலைஞன் இல்லை. அவரைப் பற்றி நான் தனியாகவே எழுத இருப்பதால் இப்போது வேண்டாம்.
எனக்குப் பெரிதாக ஊர்ப்பாசம் கீர்ப்பாசமெல்லாம் கிடையாது. இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்து பொறுக்கிய இடங்களைப் பற்றிப் படிக்கும் போது தவிர்க்க முடியாமல் ஒரு ‘ நாஸ்டால்ஜிக் ‘ உணர்வு வந்து குந்திக் கொள்கிறது. வேலி முட்டி பற்றி என்னுடைய ‘ எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் ‘ நாவலில் எழுதியிருக்கிறேன். அதற்குப் பிறகு இப்போதுதான் 25 ஆண்டுகளுக்குப் பிறகு படிக்கிறேன். வேலி முட்டி என்பது எங்கள் ஊர்ப்பக்கத்தில் கிடைக்கும் ஒருவித சாராயம். அது ஒரு காரணப் பெயரும் கூட. அதைக் குடிப்பவர்கள் வேலிப் பக்கத்தில் போய் முட்டிக் கொண்டு கிடப்பார்கள். இப்போதும் வேலி முட்டி கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
இதை முடிக்கும் முன் கென்னின் அத்தனை எழுத்தையும் படித்து விட்டேன். இப்போது எவ்விதத் தயக்கமும் இன்றி கென்- ஐ என்னுடைய மூன்றாவது வாரிசாக அறிவிக்கிறேன்.