RSS

நாகூர் புலவர்கள்

25 Sep

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் நல்லடியார் பதிவு செய்திருக்கும் நாகூர்ப் புலவர்களைப் பற்றிய அரிய தகவல்களை இங்கு மீள்பதிவு செய்திருக்கிறேன். நற்றமிழ் வளர்ச்சியில் நாகூரார்களின் சிறப்பான இலக்கியப் பணியையும் நமது பாரம்பரிய வரலாற்றியும்  இன்றைய  இளைஞர் சமுதாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் மிக மிக அவசியம் :

 

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு

 

‘சங்கத் தமிழுக்குத் தலைநகர்’ மதுரை என்றால் முஸ்லிம்களின் ‘தங்கத் தமிழுக்குத் தலைநகர்’ தஞ்சைத் தரணியைக் குறிப்பிடலாம். கி.பி.பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாகூர் தமிழ் முஸ்லிம் புலவர்கள் பிறந்தார்கள்; புலமையில் சிறந்தார்கள். தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு பொற்காலம் அமைத்திட புதிய அத்தியாயம் துவங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் நாகூர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இது இலக்கியவாதிகளுக்கு இனிக்கும் செய்தி. இனி எழுதப்படும் தமிழ் வரலாற்று நூல்களில் இடம் பெற வேண்டிய குறிப்பு .

“இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!!”  என்று இசை முரசு கொட்டிய நாகூர் E.M. ஹனீபாவை அறிந்த அளவுக்கு, அவர் பாடிய பெரும்பாலான பாடல் வரிகளை எழுதியக் கவிஞர் பெருமக்கள் அறியப்படவில்லை. (நாகூர் ஹனீபாவின் சில பாடல்வரிகள் இஸ்லாத்திற்குப் புறம்பான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்ற விவாதத்திற்குள் நுழையாமல் இத்தொடரின் கருவான தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பை மட்டும் பார்ப்போம்.)

நாகூர் ஹனீபா பாடிய பெரும்பாலான பாடல்களை இயற்றியவர் நாகூர் புலவர் ஆபிதீன் ஆவார். திருவை அப்துல் ரஹ்மான் (M.A. ரஹ்மான்) அவர்கள், “ஞானத்தின் திறவு கோல் நாயகம் அல்லவா”  உட்பட சில பாடல்களை எழுதிக் கொடுத்தவர். உத்தம பாளையம் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கவிமணி கா.அப்துல் கபூர் அவர்களின் சில பாடல்களும் நாகூர் ஹனீபா அவர்களால் பாடப் பட்டுள்ளன.

தமிழிலக்கிய வளர்ச்சியில் நாகூர் தந்த தமிழ்ச் செல்வர்களைப் பற்றிய தகவல்கள் மலைக்க வைக்கின்றன. 17-18 ஆம் நூற்றாண்டுகளில் சம காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களில் சிலர் மொழிப் புலமையும், சமய அறிவும் ஒரு சேரப் பெற்றிருந்தனர். வேறு சிலர் தமிழோடு பிறமொழி ஞானம் பெற்று பன்மொழிப் புலவர்களாக உலா வந்துள்ளனர். மற்றும் சிலர் இறைமறை வெளிப்படுத்தப்பட்ட மொழியான அரபியில் ஆழ்ந்த அறிவும் ஆன்மீகத் துறையில் தேர்ந்த பக்குவமும் பெற்று திகழ்ந்திருக்கிறார்கள்.

இவர்களுள் வணிகம் புரிந்து பொருள் குவித்த வித்தகர்களும் உண்டு. மொத்தத்தில் நாகூர் தந்த நற்றமிழ் புலவர்களின் அறிவு, ஆற்றல், படைப்புத் திறன், கற்பனை வளம், மற்றவர்களை மிஞ்சக் கூடியதாகவும் விஞ்சக் கூடியதாகவும் இருந்த உண்மையை மெய்ப்பிக்க – அவர்கள் விட்டுச் சென்ற – இன்றும் நம்மிடையே உள்ள இலக்கியச் செல்வங்கள் போதியனவாகும். அவர்களின் இலக்கியப் பணி ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் எண்ணி மகிழத்தக்கவை! ஏற்றம் பெற்ற நிலையினை எடுத்துரைப்பவை!

நாகூர் தமிழ் முஸ்லிம் புலவர்கள் பற்றிப் பேச முற்பட்டால் அல்லது எழுதிடத் தொடங்கினால் அறிஞர் வட்டத்தினரின் நினைவுக்கு வருபவர், நெஞ்சில் நிழலாடுபவர் வா. குலாம் காதிறு நாவலரே ஆவார். அவரை முன்னிறுத்தியே பேசவும் எழுதவும் செய்கிறோம் . அவர் பற்றி அறிந்து வைத்துள்ள அளவு , அவருடைய சம காலத்திலே வாழ்ந்த மற்ற புலவர்களை நாம் அறிந்து வைக்கவில்லை . அவருடைய படைப்பு இலக்கியங்கள் கிடைக்கும் அளவில் மற்றவர்களின் படைப்பு இலக்கியங்கள் கிடைப்பதுமில்லை.

தஞ்சை மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத முஸ்லிம் தமிழறிஞர்களின் பட்டியல் கீழ்க்கண்டவாறு நீள்கிறது:

1. ஆயுர்வேத பண்டிதர் வாப்பு மகன் மகா வித்வான் வா.குலாம் காதிறு நாவலர்,
2. பிச்சை நயினார் மகன் பாவகை வல்ல கல்விக்களஞ்சியம் முகம்மதுப் புலவர்,
3. நெ.மதாறு சாகிபு நகுதா மகன் பெரும்புலவர் நெயினா மரைக்காயர்,
4. கி.அப்துல் காதிர் சாகிபு மரைக்காயர் மகன் மதுரகவி வாருதி செவத்த மரைக்காயர்,
5. இபுறாகிம் லெப்பை மரைக்காயர் மகன் இ.கிதுறு முகம்மது மரைக்காயர்,
6. மீறா லெவ்வை மரைக்காயர் மகன் அல்லி மரைக்காயர்,
7. முகம்மது உசேன் சாகிபு மரைக்காயர் மகன் மு. செவத்த மரைக்காயர்,
8. முஆக்கின் சாகிபு நகுதா மகன் முகியுத்தீன் அப்துல் காதிறுப் புலவர்,
9. செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முகம்மது சாகிபு மரைக்காயர்,
10.அ.தம்பி சாகிபு மரைக்காயர் மகன் சீரியர் செவத்த மரைக்காயர்,
11. பகீர் முகியித்தீன் மகன் வாஞ்சூர் பகீர்,
12. யூ.சின்னத் தம்பி மரைக்காயர் மகன் யூ. சி.பக்கீர் மஸ்தான்,
13. ப.கலீபா சாகிபு மகன் பகீர் முகியித்தீன்,
14. முகம்மது நயினா ராவுத்தர் மகன் ‘தரகு’ நாகூர்க் கனி ராவுத்தர்,
15. ஆதம் சாகிபு மகன் முகம்மது முகியுத்தீன் சாகிபு,
16. தம்பி மாமா மரைக்காயர் மகன் முகம்மது அலி மரைக்காயர்,
17. சி.யூசுபு மகன் வாஞ்சூர் பகீர்,
18. ச.அப்துல் காதிர் நயினா மரைக்காயர் மகன் முகம்மது முஹிய்யித்தீன் மரைக்காயர்,
19. மீ. செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முஹம்மது சாகிபு மரைக்காயர்,
20. முகம்மது அலி மரைக்காயர் மகன் முகம்மது இமாம் கஸ்ஸாலி மரைக்காயர்,
21. கோ.மு. முகம்மது நைனா மரைக்காயர் மகன் (காரைக்கால்) கோசா மரைக்காயர்,
22. சு.பகீர் முகியித்தீன்,
23. செ.கமீது மஸ்தான்,
24. ம.முகம்மது மீறா சாகிப் புலவர்,
25. தளவாய் ம. சின்னவாப்பு மரைக்காயர்,
26. கா. பெரிய தம்பி நகுதா,
27. க.காதிறு முகியித்தீன் சாகிபு,
28. இ.செய்யது அகமது,
29. மு.சுல்தான் மரைக்காயர்,
30. வா.முகம்மது ஹுஸைன் சாஹிபு மகன் மு. ஜெய்னுல் ஆபிதீன் (புலவர் ஆபிதீன்),
31. பண்டிட் எம்.கே. எம் ஹுஸைன்,
32. வா.கு. முஹம்மது ஆரிபு புலவர்,
3. வா.கு. மு. குலாம் ஹுஸைன் நாவலர்.

இவர்களுள் காலத்தால் முந்தியவர் முதன் முதலில் இலக்கியம் படைத்தவர் பிச்சை நயினார் மகன் முகம்மதுப் புலவர். ஆனால் அதிக எண்ணிக்கையிலான பல்வேறு வகைப்பட்ட இலக்கியங்கள் படைத்தளித்தவர் வா .குலாம் காதிறு நாவலரே ஆவார். அவருடைய ஆக்கங்களில் செய்யுள்களானவையும் உள ; உரை நடைகளிலானவையும் உள. கூடவே மொழிபெயர்ப்பு நூல்களும் உள. அந்த வகையில் நாகூர் முஸ்லீம் தமிழ்ப் புலவர்களில் அவரை தலைமைப் புலவராகக் கொள்வதும் கொண்டாடி மகிழ்வதும் மிகச் சரியான செயலாகும். ‘தண்டமிழுக்குத் தாயா’கிய நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நக்கீரர் அல்லவா அவர்!

நம் கவனத்தில் வந்த மேற்கண்ட தமிழரிஞர்களின் படைப்புகள் வெகுசனங்களை ஈர்க்காமல் போனதற்கு அவர்களில் பெரும்பாலோர் இஸ்லாத்தைப் பற்றி மட்டுமே எழுதியதால் பிறமத இலக்கியவாதிகளின் கவனத்தைப் பெறவில்லை. மேலும், முஸ்லிம்களைப் பற்றி எழுதியவையும் இஸ்லாமிய நெறிகளுக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருந்ததால் முஸ்லிம்களிடமும் முக்கியத்துவம் பெறவில்லை என்பதே முக்கியக் காரணமாகும் எனக் கருதுகிறேன்.

முத்தமிழில் முதலாவதான இயற்றமிழ் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த தமிழ் முஸ்லிம்களில் சிலரைப் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இனி, நாகூர் தமிழ் புலவர்களின் இலக்கியப் படைப்புகள் பற்றியும் பார்ப்போம் .

வா. குலாம் காதிறு நாவலரின் படைப்பு இலக்கியங்களின் பட்டியல் இப்படி விரிகிறது:

1. பிரபந்தத் திரட்டு – சச்சிதானந்தன் பதிகம், இரட்டை மணிமாலை , முனாஜாத்து, திருநாகை யமகபதிற்றந்தாதி, நாகைப் பதிகம், முனாஜாத்து ஆகியவை அடங்கிய அழகிய கவிதைகளின் கோவை ஹிஜ்ரி 1292ஆம் ஆண்டு காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது .

2. ‘நாகூர்க்கலம்பகம்’ நாகூர் ஆண்டகை ஹலரத் மீரான் சாஹிபு அவர்கள் சிறப்பு விவரிப்பது. கி.பி. 1878ல் வெளிவந்தது.

3.’முகாசபா மாலை’ நாகூர் நாயகம் அவர்களின் கனவில் நிகழ்ந்த( தாகச் சொல்லப்படும்) விண்ணேற்ற நிகழ்ச்சிகள் குறித்த குறுங்காவியம். 13 படலங்கள் 300 பாடல்கள் கொண்டது. முதற்பதிப்பு 1899 ஆம் ஆண்டு காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1883 ஆம் ஆண்டு இலக்கியச் செல்வர் எம்.செய்யது முஹம்மது ‘ஹஸன் ‘ அவர்களால் சென்னை, மில்லத் பிரிண்டர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது.

4. ‘குவாலியர்க் கலம்பகம்’ ஹலரத் முகம்மது கௌது குவாலீரீ அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு 101 பாடல்களாய் 1882ல் அச்சில் வந்தது.

5. ‘திருமக்காத் திரிபந்தாதி’ மக்க நகரின் சிறப்பு கூறும் 100 பாடல்கள் கொண்டது. 1895ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வச்சிரயந்திர சாலையில் அச்சிடப்பட்டது.

6. ‘நாகூர்ப் புராணம்’ ஹஜரத் சாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வாழ்வின் சிறப்பைக் கூறுவது . மலடு தீர்த்த படலம், சித்திரக் கவித் திரட்டு உட்பட 30 படலங்கள் 1359 விருத்தங்கள் கொண்டது. 1893ஆம் ஆண்டு ம. முகம்மது நயினா மரைக்காயர் பதிப்பு.

7. ஹலரத் செய்யிது அஹமது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்களின் வரலாறு; நூறுல் அஹ்மதிய்யா என்னும் அறபி நூலின் தழுவல். 2 காண்டங்கள் 43 படலங்கள் 2373 விருத்தங்கள். 1896ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பெயர்: ‘ஆரிபு நாயகம்’.

8. ‘பகுதாதுக் கலம்பகம்’ ஹலரத் கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் அடங்கியுள்ள பகுதாது நகரின் சிறப்பைக் கூறும் 101 பாடல்கள். 1894ஆம் ஆண்டு சென்னை ஆறுமுக விலாச அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது.

9. ‘பதாயிகுக் கலம்பகம்’ ஹலரத் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்கள் அடங்கியுள்ள பதாயிகு நகர் சிறப்பு உரைக்கும் 101 பாடல்கள் கொண்டது. 1900ல் அச்சில் வந்தது. 1901 ஆம் ஆண்டு மதுரையில் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கத்தின் பெருமைகள் உரைக்கும் நூல்.

10. மதுரைத்தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப் படை. இதன் முதற்பதிப்பு 1903 ஆம் ஆண்டு. மறுபதிப்பு 1968ல் வெளிவந்தது. பதிப்பித்தவர் இலக்கியச் செம்மல் கலாநிதி.ம.மு. உவைஸ்(இலங்கை). நாகூர் தறுகா ஷரீப் சிறப்புகளை 100 பாடல்களில் விவரிப்பது.

11. ‘தறுகா மாலை’ நாவலர் குலாம் காதிறு மகன் வா. கு. முஹம்மது ஆரிபு நாவலர் 1928ஆம் ஆண்டில் மூன்றாம் பதிப்பை வெளியிட்டுள்ளார் . முதல் மற்றும் இரண்டாம் பதிப்புகள் வெளிவந்த காலங்கள் குறிப்பிடப் படவில்லை. (கஃபா – மக்கா, மஸ்ஜுதுன் நபவி – மதீனா , பைத்துல் முகத்தஸ் – பாலஸ்தீன் ஆகிய மூன்று புனித இறையில்லங்கள் தவிர்த்து மற்றவை குறித்த மிகையான புகழ்ச்சிகளில் எனக்கு உடன்பாடில்லை – நல்லடியார்)

12. ‘மும்மணிக் கோவை’

13. ‘மக்காக் கோவை’

14. ‘மதினாக் கலம்பகம்’

15. ‘பகுதாதுய மக அந்தாதி’

16. ‘சச்சிதானந்த மாலை’

17. ‘சமுத்திர மாலை’

18. ‘மதுரைக் கோவை’

19. ‘குரு ஸ்தோத்திர மாலை’

20. ‘பத்துஹுல் மிஸிர் பஹனஷாப் புராணம்’

21. நாகூராரின் வரலாற்றை அழகிய தமிழ் உரை நடை நூல் ‘கன்ஜூல் கறாமத்து’ எனும் பெயரில் அச்சில் வந்தது. காலம் 1902.

22. ‘சீறாப்புராண வசனம்’

23. ‘திருவணி மாலை வசனம்’

24. ‘ஆரிபு நாயகம் வசனம்’

25. ‘சீறா நபியவதாரப் படல உரை’

26. ‘சீறாநபியவதாரப் படல உரை கடிலக நிராகரணம்’

27. ‘நன்னூல் விளக்கம்’

28. ‘பொருத்த விளக்கம்’

29. ‘இசை நுணுக்க இன்பம்’

30. ‘அறபித்தமிழ் அகராதி’

31. ‘மதுரைத் தமிழ்ச் சங்க மான்மியம்’

32. அதிரை நவரத்தின கவி காதிறு முஹ்யித்தீன் அண்ணாவியரின் ‘பிக்ஹு மாலை உரை’ முதற் பதிப்பு 1890ம் ஆண்டில் வெளி வந்தது. அந்நூலின் இரண்டாம் பதிப்பை 1990 ஆம் ஆண்டு புலவர் அ.முஹம்மது பஷீர் வெளிக் கொணர்ந்தார் .

33. நாகூர் பெரியார் முஹ்யித்தீன் பக்கீர் சாஹிபு காமில் என்கிற செய்யது அப்துல் வஹ்ஹாப் ஆலிம் அவர்களின் ‘தறீக்குல் ஜன்னா’ (ஹி 1335). மேலும் ,

34. இலக்கணக் கோடாரி பேராசிரியர் திருச்சி கா. பிச்சை இபுறாஹிம் புலவரின் ‘திருமதினத்தந்தாதி உரை’ (1893).

35. இவை தவிர ரைனால்ட்ஸ் என்பார் ஆங்கிலத்தில் எழுதிய ‘உமறு’ என்னும் புதினத்தைத் தமிழாக்கி வெளியிட்டார் நாவலர். நான்கு பாகங்களிலான அந்நூலின் பெயர் ‘ உமறு பாஷாவின் யுத்த சரித்திரம்’.

நாகூர் தமிழ் புலவர்களின் தலைமைப் புலவர் வா. குலாம் காதிறு நாவலர் மலேயா (இன்றைய மலேசியா) திருநாட்டின் அழகு நகர் பினாங்கில் இதழாசிரியராக புகழ் குவித்தார். ‘வித்தியா விசாரிணி’ என்னும் பெயரில் இதழ் நடத்திய காலம் 1888 ஆம் ஆண்டு. தொட்ட துறை அனைத்திலும் துலங்கிய திறன், ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடு மெச்சத்தக்க வகையில் இருந்தமையால் குலாம் காதிறு புகழ் முகட்டில் வாழ்ந்து 28.1.1908ல் மரணித்தது தமிழ் கூறு நல்லுலகு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்க, ஏற்றமிகு புலவர் பிச்சை நயினார் மகன் பாவகை வல்ல கல்விக் களஞ்சியம் முகம்மதுப் புலவர். இவர் இலக்கிய உலகில் ‘ஊஞ்சல் பாட்டு’ புகழ் புலவராக பேசப்படுபவர். அவருடைய பிற ஆக்கங்களாகக் குறித்து வைத்துள்ள விவரப்படி

(1) ‘கேசாதி பாத மாலை’
(2) ‘முகியித்தீன் புராணம் ‘ ஆகிய இரண்டு நூல்கள் மட்டும். ஆனால், முகம்மதுப் புலவரின் இலக்கியப் பணி அத்துடன் நின்றிடவில்லை. அவர் ஆற்றிய பணி விரிவானது. அழகும் ஆழமும் கொண்டது. அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று.

(3) புதூகுச்சாம்மென்னும் வசன காவியம். 1879 ஆம் ஆண்டு காரை முஹம்மது மைதானி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. மற்றொன்று

(4) நாகூர் கலறத் மீரான் சாகிபு ஆண்டவர்கள் பேரில் ‘பிள்ளைத் தமிழ்’ ஹிஜ்ரி 1291 அச்சில் வந்தது. நாகூரார் பேரில் வந்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்களின் எண்ணிக்கை இதனைச் சேர்த்து எட்டு. இனிக்கும் தமிழ் இலக்கியங்களில் இது ஒன்று.

நாகூர் புலவர்களுள் சிறப்புக்குரிய மற்றொருவர் கி. அவு.செவத்த மரைக்காயர். இவருடைய ஆக்கங்களில் (1) ‘மும்மணிக் கோவை’ (2) ‘உயிர் வருக்கக் கோவை’ ஆகிய நூல்கள் ஹிஜ்ரி ஆண்டு 1311ல் காரைக்கால் இந்தியக் காவலன் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்டவை. ‘வருக்கக் கோவை ‘ காரைக்காலில் அடங்கியுள்ள இறைநேசச் செல்வர், ஆரிபுல்லா காமில், ஹலரத் மஸ்தான் சாஹிபு அவர்கள் பெயரால் அமைந்த பாடல்கள் நிரம்பியது.

மற்ற நூல்களில் பார்வையை கூர்மையாக்கும் வகையில் அமைந்த ‘பயணக் கவிதை’ நூல் அதுவும் கடல் கடந்த நாட்டில் அச்சிட்ட நூல் ‘மலாக்காப் பிரதேசத் திரட்டு’. இன்றைய மலேஷியவின் பெருநகர்களில் ஒன்றான ‘மலாக்கா’வை அடுத்துள்ள ‘புலாவ் பெஸார்’ தீவில் அடங்கியுள்ள இறைநேசச் செல்வர், ஹலரத் செய்குணா, செய்கு இஸ்மாயில் அவர்களின் ‘ஜியாரத்’ முடித்து வந்த பயணம் பற்றிய நூல்.

ஹலரத் செய்கு இஸ்மாயீல் வலியுல்லா அவர்களின் அருட்சிறப்பு விரவி உள்ளது. அத்துடன் புலவர் பாடிய ‘இரத பந்தம்’ ‘அட்டநாக பந்தம்’ ‘ இரட்டை நாக பந்தம்’, ‘கமல பந்தம்’ ,’சித்திரக் கவி’ ஆகியவை இடம் பெற்றுள்ளது.

நாகப்பட்டினம் கஞ்சஸவாய் பிரஸில் ஹிஜ்ரி 1321 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ‘ கந்தூரி திருவலங்காரச் சிந்து அலங்காரக் கும்மி’ என்னும் நூலும் கி.அவு. செவத்த மரைக்காயர் ஆக்கமேயாகும். நாகப்பட்டினத்திற்கும், வேளாங்கண்ணிக்கும் இடையிலுள்ள பாப்பாவூரில் அடங்கியுள்ள இறைநேசச் செல்வர், ஹலரத் ஸையிதினா ஹாஜா செய்யிது அலாவுத்தீன் அவர்களின் பேரில் திருவிழா திருவலங்காரச் சிந்து, நாகப்பட்டினத்தில் அடங்கியுள்ள ஹலரத் ஸையிதினா சைய்யிது இபுனு மஸ்ஊத் அவர்களின் பேரில் இன்னிசை ஆகியவை உள்ளடங்கிய அழகிய படைப்பு.

அவரது மற்றொரு நூல் சென்னை திருவல்லிக்கேணியில் அடங்கியுள்ள ஹலறத் செய்குனா செய்குல் மஷாயிகு செய்கு அப்துல் காதிறு சாகிபு ஆரிபு அவர்கள் பேரில் சரமாசிரிய விருத்தம். கலித்துறை இன்னிசை பதங்கள் கொண்ட நூல் ‘பதங்கள்’ என்னும் நூலுருவில் வெளிவந்தது. கரைக்கால் முகம்மது சமதானி அச்சகத்தில் 1896 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

ஒரே காலத்தில் மூன்று புலவர்கள் செவத்த மரைக்காயர் என்ற பெயருடன் வாழ்ந்திருக்கின்றார்கள். மூவரும் புலவை மிக்க மும்மணிகளாகத் திகழ்ந்திருக்கின்றார்கள். அவர்களுள் அ .தம்பி சாகிபு மரைக்காயர் மகன் த.செவத்த மரைக்காயர் சீரியர். இவர் நூலாசிரியர் இதழாசிரியர் ஆக இனிய இலக்கியப் பணி புரிந்தவர். அவர் வெளிக் கொணர்ந்த இதழ் ‘சீரிய சூரியன்’. நாகூர் புலவர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகளை வெளி உலகுக்கு எடுத்துக் கூறும் வகையில் இதன் பணி தொடர்ந்தது. முன்னோடி இதழ்களில் இது ஒன்று.

த. செவத்த மரைக்காயர் சீரியரின் புலமைக்குச் சான்று கூறும் அவரது ‘திருமக்காக் கோவை, மக்கா நகரின் சிறப்பு, மாநபி நாதர்(ஸல்) அவர்களின் மாண்பு விரித்துரைக்கும் அகப் பொருள் பாடல் 437 கொண்டது. அவருடைய தலையாய இலக்கியப் பணியாக இதனைக் குறிப்பிட வேண்டும்.

திருமக்காக் கோவையின் உள்பக்கத்தில் காணப்படும் குறிப்பை அவரது மற்ற நூல்கள் பற்றிய விவரமாக எடுத்துக் கொள்ளலாம். அவை

(1) ‘தர்காக் கோவை’

(2)’ஜைலான் மும்மணிக் கோவை’

(3)’பகுதாதுக் கலம்பகம்’

(4)’ ஆரிபு பிள்ளைத் தமிழ்

(5) ‘ பார்ப்பாரூர் யமக நூற்றந்தாதி’

(6) ‘ தந்தையந்தாதி’

(7) ‘மாணிக்கபூர் மாணிக்க மாலை’

(8) ‘கீர்த்தனாச் சாரம்’

9) ‘குருமணி மாலை’

(10) ‘திருப்பா’

(11) பதஉரை , பொழிப்புரை விரிவுரையுடன் கூடிய ‘குத்பு நாயகம்’

(12) ‘மெஞ்ஞானத் தீர்மானம்’ ஆகிய பனிரெண்டு. இவற்றுள் ‘பகுதாதுக் கலம்பகம்’ அச்சிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்பட்டியலில் குறிப்பிடாத ஒன்றான ‘திருமணிமாலை வசனம் பார்க்க்க விசனம் ‘ என்னும் சிறுநூலும் வெளிவந்துள்ளது. (மற்றவை அனைத்தும் அச்சில் வந்தனவா என்பதுவும் அப்படி அச்சிடப்பட்டிருந்தால் எப்போது வந்தது என்பதும் தெரியவில்லை. அத்தனையும் அச்சில் வந்திருப்பின் நாகூர்ப் புலவர்களில் குலாம் காதிறு நாவலருக்கு அடுத்த நிலையில் வருபவர் த . செவத்த மரைக்காயர் ஆவார்.)

முஸ்லீம் தமிழ்ப் புலவர்களில் முத்தமிழ் வித்தகர் நெ.மதாறு சாகிபு மகன் பெரும்புலவர் முகம்மது நயினா மரைக்காயர் எனலாம். அவருக்குப் புகழ் சேர்த்த இலக்கியப் படைப்புகள்

(1) ‘தேவார மஞ்சரி’

(2) ‘புகழ்ப்பா மஞ்சரி’

(3) ‘ கீர்த்தன மஞ்சரி’ ஆகியவை.

அவரது ஆழ்ந்த தமிழறிவுக்கும், புலமை செறிவுக்கும் இசைஞானத்திற்கும் பதச் சோறாக ‘லால் கௌஹர் ‘ நாடகத்தைக் கூறலாம். இவ்வட்டாரப் பேரூர்களில் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுச் சிறப்பு சேர்த்தது. நாடக நூலினை வா.குலாம் காதிறு நாவலர் பதிப்பித்தார். முதற்பதிப்பு காரைக்கால் முகம்மது சமதானி அச்சகத்திலும் இரண்டாம் பதிப்பு 1901ல் சென்னை இட்டா பார்த்தசாரதி அச்சுக் கூடத்திலும் அச்சிடப்பட்டது.

1990 டிசம்பர் திங்கள் கீழக்கரையில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை ஒட்டி ‘லால் கௌஹர்’ நாடகம் மூன்றாம் ப்திப்பு வெளியிடப்பட்டது. பதிப்பித்தவர் பேராசிரியர் டாக்டர் சே.மு .முஹம்மது அலீ. வெளியீடு சென்னை சுலைமான் ஆலிம் அறக் கட்டளை.

பெரும்புலவர் முகம்மது நயினா மரைக்காயர் வண்ணம், இன்னிசை, சித்திரக் கவிகள் பாடியுள்ளார் . அத்துடன் அன்றைய வணிகர்களுக்குப் பயன்தரக்கூடிய வாணிப குறியீட்டு நூலாக ‘நெயினாஸ் கோட்’ வழங்கி அன்றைய தேவையை நிறைவேற்றியுள்ளார் . குலாம் காதிறு நாவலர் படைப்புகளில் ஒன்றான ‘சமுத்திர மாலை’ முகம்மது நெயினா மரைக்காயரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாகும். சிலேடையிலான பாடல்கள் நிறைந்தது.

மூவர் வினா -விடை முறையில் பேசுவது போல் அமைந்த, இறை புகழ்ப்பாக்கள் நிறைந்த நூல் ஒன்று உண்டு. அதன் பெயர் ‘மூவர் அம்மானை’. நூலாசிரியர் பெயர் மீறா லெப்பை மரைக்காயர் மகன் அல்லி மரைக்காயர். ‘மூவர் அம்மானை’ 1873ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 1876 ஆம் ஆண்டிலும் முன்றாம் பதிப்பு 1878ஆம் ஆண்டிலும் வெளிவந்துள்ளது . அந்நாளில் மூன்று பதிப்புகள் வெளியிடப்பட்ட நூல் இது ஒன்றே. அதற்கு மக்களிடையே இருந்த வரவேற்பை உணர்த்துகிறது.

மீ.அல்லி மரைக்காயர் இயற்றிய மற்ற நூல்கள் வருமாறு.

(1) ‘ பிரபந்தக் கொத்து’

(2) முகைதீன் அப்துல் காதிர் ஆண்டவர் பேரில் ‘பதிற்றுப்பத்தந்தாதி’

(3) ‘முனாஜாத்து’

(4) ‘ நெஞ்சறிவுத்தல்’

(5) ‘அன்னம் விடு தூது ‘

(6) வண்டு விடு தூது .

பெரும்பாலும் நூல்கள் பதினொன்று பாடல்கள் கொண்டது. அனைத்தும் கட்டளைக் கலித்துறை பாடல்களாக அமைந்தவை . இவற்றை 1878ல் நாவலர் குலாம் காதிறு பதிப்பித்துள்ளார். நூல்கள் கலாரத்னாகர அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டவை. ‘நெஞ்சறிவுத்தல்’ மார்க்க அறிவுரை கூறும் ஐந்து பாடல்களைக் கொண்டது.

செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முகம்மது சாகிபு மரைக்காயர்

(1) ‘ஹக்குப் பேரிற் பதிகம்’

(2) ‘நபியுல்லா பேரிற்பதிகம்’, ‘இமாம் ஹுசைன், இமாம் ஹஸன், முஹ்யித்தீன் ஆண்டகைகள் ஆகியோர் பேரிற் பதிகம்’ பாடியுள்ளார். அவை

(3) ‘துதிப்பாத் திரட்டு ‘ என்னும் பெயரில் நூலுறு பெற்று 1876ஆம் ஆண்டு வெளிவந்தது. க.பகீர் முகியித்தீன் நாகூர் ஆண்டகை அவர்களின் சிறப்பையும் தர்காஷரீபின் சீரையும் 44 பாடல்களின் வடித்துள்ளார். 1876ஆம் ஆண்டு பதிக்கப்பட்ட அந்நூலின் பெயர் ‘நான்மணி மாலை’. இபுறாஹிம் லெப்பை மரைக்காயர் மகன் இ.கிதுறு முகம்மது மரைக்காயர் ‘குதுபு’ சதகம் பாடியுள்ளார் . இது 1893ல் அச்சிடப்பட்டது. ப. கலிபா சாகிபு மகன் பகீர் முகியித்தீனின் ‘கீர்த்தனா மாலிகை’ 1886ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

1895ஆம் ஆண்டு மலேஷியா ‘பினாங்கு’ நகர் கிம் சேய்க் ஹியான் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்ட நூல் ‘ பினாங்கு உற்சவ திருவலங்காரச்சிந்து’. நூலாசிரியர் நாகூர் கோ. முகம்மது நைனா மரைக்காயர் மகன் கோசா மரைக்காயர். இவர் இயற்றிய நூல்கள் எட்டு. இவற்றுள் நாடகங்கள் நான்கு. முறையே

(1) சதானந்த மாலை

(2) மனோரஞ்சித சஞ்சீவி என்னுமோர் அற்புத கிஸ்ஸா

(3) திருக்காரைத் திருவிழாச் சிந்து

(4) வைத்திய மகுடம்

(5) சராரே இஷ்க் நாடகம்

(6) ஷிரீன் பரஹாத் நாடகம்

(7) ஜூஹுரா முஸ்திரி நாடகம்

(8) லைலா மஜ்னூன் நாடகம். (இவை அச்சில் வந்த காலம், பதிக்கப்பட்ட அச்சகம் பற்றிய விவரம் தெரியவில்லை.)

முத்தமிழ் வித்தகர் நெயினா மரைக்காயரின் ‘லால் கௌஹர்’ நாடக நூலை அடுத்து வந்ததும் , அடுத்த நிலையில் வைத்து எண்ணத் தக்கதுமான நூல் ‘அப்பாசு நாடகம்’ ஆகும். நாகூர் , நாகப்பட்டினம், பினாங்கு, சிங்கப்பூர் , சிங்கப்பூர் ஆகிய ஊர்களில் வழங்கிய வர்ண மெட்டுப் பாட்டுக்களின் இராகங்களில் அமைந்த நாடகத்தை இயற்றியவர் பகீர் முகியித்தீன் மகன் வாஞ்சூர் பகீர்.அப்பாசு நாடகம் 1892ல் அச்சேறியது. ஆங்காங்கே நடிக்கப்பட்டு பரவலான புகழ் ஈட்டியது.

மு. ஆக்கீன் சாகிபு மரைக்காயர் மகன் மு.ஆ. முகையித்தீன் அப்துல் காதிறுப் புலவர் இயற்றிய ‘நபியுல்லா பேரில் துவாதசக் கலித்துறை சந்தக் கும்மி’ நாகை ஸ்காட்டிஸ் பிராஞ்சு அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது . காலம் 1879ஆம் ஆண்டு. அவரது மற்றொரு நூல் ‘சங்கீத கீர்த்தனா மாலிகை’ சிங்கப்பூர் தீனோதய வேந்திர சாலையில் 1916 ஆம் ஆண்டு அச்சேறியது. பிறிதொரு நூல் ‘நாகூர் யூசுபிய்யா மாலை 1918ஆம் ஆண்டு நாகை நீலலோசனி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

யூ. சின்னத்தம்பி மரைக்காயரின் மகன் யூ .சி.பக்கீர் மஸ்தான் ஆக்கங்கள் மூன்று. அவை முறையே ‘திருத் தோத்திர கீர்த்தனம் ‘ 1`912ல் ரங்கூன்(பர்மா) ஸ்ரீ ராமர் அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. ‘கீர்த்தனா மஞ்சரி ‘ 1916ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நாகை நீல லோசனி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அதே ஆண்டில் வெளியிடப்பட்ட ‘திருப்புகழ்’ என்னும் தலைப்பிலான நூலில் இருப்பவை நாகூர் ஆண்டகை அவர்களின் பெயராலியற்றப்பட்ட நவீனாலங்கார ஜாவளிப்பதங்கள் சந்தக்கவிகள்.

1933ஆம் ஆண்டு சிங்கப்பூர் கலோனியல் பிரிண்டிங் பிரஸில் அச்சிடப்பட்ட ‘முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சர்வலோக சற்குருநாதர்’ , 1934ஆம் ஆண்டு சிங்கப்பூர் செயிண்ட் மேரீஸ் பிரஸில் அச்சிடப்பட்ட ‘முஹம்மத் நபி( ஸல்) அவர்கள் கடைந்தேற்றும் வள்ளல்’ , 1935ஆம் ஆண்டு நாகூர் ஆண்டவர் பிரஸில் அச்சிடப்பட்ட ‘முஹம்மத் நபி(ஸல்) ( இன்ஸான் காமில்) நிறைந்த புருசர் ‘ ஆகிய மூன்று நூல்களின் ஆசிரியர் சி. ஹாஜி சிக்கந்தர்.

சு. அஹமது இபுறாஹிம் மரைக்காயர் ஆலிம் மகன் S.A. எஹ்யா மரைக்காயர் இயற்றிய ‘அரும் பொருட்பா வைங்கவி’ 1940 ல் வெளிவந்தது. நாகூர் ஆண்டவர் பிரஸில் அச்சிடப்பட்ட இந்நூலில் முஹம்மது அலி ஜின்னாவைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

சி.சி. அப்துர் ரஜ்ஜாக்கு (காதிரி) இயற்றிய நூல் ‘நூறுல் ஹகாயிகு என்னும் அந்தரங்கச் சோதி ‘ மதுரை நூருல் ஹக் பிரஸில் 1956ஆம் ஆண்டு அச்சேறியது.

அண்மைய கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த தமிழ் முஸ்லீம் புலவர்களில் நாடறிந்த புலவர் வா.முஹம்மது ஹுசைன் சாஹிப் மகன் மு .ஜைனுல் ஆபிதீன். பின்னாளில் இவர் ‘புலவர் ஆபிதீன்’ என்றழைக்கப்பட்டு அறியப்பட்டவரானார். ஏறத்தாழ 4000 க்கு மேற்பட்ட இசைப்பாடல்கள், மரபுக்கவிதைகள் 13 நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் நமது கவனத்திற்கு வந்தவை

(1) ‘நவநீத கீதம்’ (1934),

(2) ‘தேன்கூடு (1943-இலங்கை),

(3) ‘அழகின் முன் அறிவு’ (1960-சென்னை).

அதே ஆண்டில் வெளிவந்த இரு நூல்கள் (1) ‘முஸ்லீம் லீக் பாடல்கள்’,

(2) ‘இஸ்லாமியப் பாடல்கள்’.

அவர் இயற்றிய பல பாடல்கள் இன்றும் இசைத் தட்டுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நன்றி: நல்லடியார்/ எதிரொலி ஜூலை 2006

தொடர்புடைய சுட்டி : இஸ்லாம் கல்வி

 

5 responses to “நாகூர் புலவர்கள்

  1. ஆபிதீன்

    October 7, 2009 at 9:32 am

    மதப்பற்றை ஒதுக்கிவைத்துவிட்டு இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சகோதரர் நல்லடியாரின் பணி சிறப்புக்குரியதே. ஆனால் ‘அவருடைய’ இந்தக் கட்டுரை 10 வருடங்களுக்கும் மேலாக – geocities, tripod, தற்போது googlepages-ல் – இருந்த/இருக்கிற கட்டுரை. மர்ஹூம் ‘சொல்லரசு’ மு. மு.ஜாபர் முஹ்யித்தீன் மாமா அவர்களின் கட்டுரை. ‘நாகூர் தந்த நற்றமிழ் புலவர்கள்’ என்ற தலைப்பில், இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய முதல் மாநாட்டின் (15-16 பிப்ரவரி 1992 புதுக்கோட்டை) சிறப்பு மலரில் அவர்கள் எழுதியிருந்தார்கள். அதை ‘மாங்குமாங்கு’ என்று தட்டச்சு செய்து வெளியிட்ட என்னைப் பற்றி சகோ. நல்லடியார் குறிப்பிடாததில் எவ்விதப் பிரச்சனையும் இல்லை, நிஜமாகவே. ஆனால் எங்கிருந்து அந்தக் கட்டுரையை அவர் எடுத்தார் (90%) என்று சொல்வதும் அதற்கான சுட்டி கொடுப்பதும் மிக அவசியம். மீள்பதிவு செய்யும்போது கட்டுரையின் மேலேயே அதுபற்றி தெரிவிப்பது இன்னும் நாகரீகமானது. அதுதான் இணைய நடைமுறை. நாகூர் புலவர்கள்/எழுத்தாளர்கள் பற்றி யார் எழுதினாலும் அவர்கள் என் நன்றிக்குரியவர்கள். சகோதரர் நல்லடியார் என் எதிரொலியைப் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்!

    அன்பு கையும், ஜாபர் முஹ்யித்தீன் மாமாவின் கட்டுரையை நீங்களும் அறியாதது வியப்பை அளிக்கிறது!

    பார்க்க சுட்டிகள் (Googlepages):
    நாகூர் தந்த நற்றமிழ் புலவர்கள் – சொல்லரசு , மு.ஜாபர் முஹ்யித்தீன்
    http://abedheen.googlepages.com/nagorewriters1.html

    தொடர்ச்சி (ஆங்கிலம்) :
    http://abedheen.googlepages.com/nagorewriters2.html

    **
    சுட்டிகள் (wordpress) :

    நாகூர் புலவர்கள்
    http://abedheen.wordpress.com/2007/07/28/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

    **

    நன்றி.

    ஆபிதீன்

     
  2. Abdul Qaiyum

    October 8, 2009 at 2:03 am

    அன்புசால் ஆபிதீன்,

    தங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. நல்லடியார் இதை படிப்பார் என்று நம்புவோமாக.

    எனது வலைத்தளத்தில் 2006-ஆம் ஆண்டு எதிரொலியில் வெளியான நல்லடியார் எழுதிய கட்டுரைச் சுட்டியை “தமிழ் வளர்த்த நாகூர்” என்ற தலைப்பில் ஏற்கனவே இணைப்பு கொடுத்திருந்தேன்.

    அதே போன்று சொல்லரசு மு.ஜாபர் மொய்தீன் அவர்கள் பிப்ரவரி 1992-ஆம் ஆண்டு எழுதி, தங்களது வலைத்தளத்தில் ஜூலை 28, 2007 அன்று தட்டச்சு செய்து வெளியிட்டிருந்த சுட்டியை “நாகூர் புலவர்கள்” என்ற தலைப்பில் ஏற்கனவே இணைப்பு கொடுத்திருந்தேன்.

    தங்களது கூகுள் பக்கத்தில் காணப்படும் விவரங்கள் அதற்கும் முந்தியது என்று நினைக்கிறேன். (தேதியைத் தேடினேன் கிடைக்கவில்லை)

    நாகூரைப் பற்றிய நாலு விஷயங்கள் இணையத்து எந்த மூலையில் தென்பட்டாலும் அதை அவர்கள் சம்மதம் கொடுக்காவிட்டாலும், சம்மதம் கொடுத்ததைப் போல பாவித்து, நன்றி இன்னாருக்கு என்று எழுதிவிட்டு, அதை மீள்பதிவு செய்வதில் கிடைக்கும் ஆதம திருப்தியே அலாதியானது போங்க.

     
  3. ஆபிதீன்

    October 8, 2009 at 9:08 am

    அன்பு கையும்,

    Googlepagesல் பதிவிட ஆரம்பித்து இரண்டுமூன்று வருடம்தான் இருக்கும். அதற்கும் முன்பே பல web hostingங்குகளில் அந்தக் கட்டுரை இருந்தது. கெடுவாய்ப்பாக பல தளங்களின் இலவச ‘சேவை’ முடிந்து போனது.

    ‘நாகூர் பிஸாது கிளப்’ tripodல் இயங்கிய வருடங்களுக்கு (2000?) முன்பே அதை வலையேற்றியிருந்தேன். உங்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்களும் அப்போது பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள், ‘நாகூரி’ என்ற மறைமுக பெயரில். (எனக்கு அப்போது ‘நாகூரி’ நீங்கள்தான் என்பது சத்தியமாகத் தெரியாது)

    அந்தக் கட்டுரையைப் பற்றி மேலும் : நானும் நண்பன் நாகூர் ரூமியும் ஜாஃபர்மெய்தீன் மாமாவை சந்தித்து பல விபரங்கள் சேகரித்த பிறகுதான் அதைச் செய்தோம் (ரஃபி (ரூமி) அந்தக் கட்டுரையை அப்படியே ஆங்கிலத்தில் உடனே எழுதிக் கொடுத்தார். அதைப் பின்னர் பதிய வேண்டும், பார்ப்போம்). இப்போதைய ‘பிளாக்’குகள் போல் இல்லாமல் பதிவின் தேதியையும் நேரத்தையும் manualஆக குறிப்பிட்டால்தான் அந்த சமயத்தில் உண்டு. நான் அப்போது அதைச் செய்யவில்லை. ScreenShotம் எடுத்து வைக்கவில்லை. சரி, அது போகட்டும். இன்னொருவர் எழுதிய கட்டுரையை தானாக எழுதியதுபோல் சித்தரிப்பது – எழுதியவரின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடாதது – அநாகரீகமானது இல்லையா? நல்லடியாரைப் பொறுத்தவரை அவருடைய நோக்கம் அப்படிப்பட்டதாக இருக்க முடியாது என்று நம்புகிறேன். ஆனால் இதே போன்ற போக்குகள் வலையுலகத்தில் சர்வசாதாரணமாகக் காணக் கிடைக்கிறது. அதைச் சொல்லவே ‘கமெண்ட்’ கொடுத்தேன். எப்படியிருந்தாலும் நாகூர் பெயர் வந்தால் நல்லது என்று நாம் நினைக்கலாம் . ஜாஃபர் மெய்தீன் மாமாவின் ஆத்மா அப்படி நினைக்காது!

    – ஆபிதீன் –

     
  4. Abdul Qaiyum

    October 10, 2009 at 12:36 am

    இதில் காணப்படும் உங்களுடைய நியாயமான வாதம் இணைய எழுத்தாளர்களுக்கும், வலைப்பதிவாளர்களுக்குமிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

     
  5. kabeer

    October 18, 2009 at 10:58 pm

    we appreciate your Tremendous job. This History should be Registered.It should come in many Web site. Who publish first or second is not the matter, WHOEVER work for this definetly they deserve APPRECIATION.. Many appreciation for all. Thanks.
    Kabeer

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: