கலைஞர் என்ற முறையில் சிலருக்கு மு.கருணாநிதியைப் பிடிக்கும். எனக்கு எங்க ஊரு ஹாஜா பாஷாவைப் பிடிக்கும். ஏனெனில் இவரும் ஒரு நல்ல கலைஞர். அவர் குறளோவியம் வரைந்தவர். இவர் நகஓவியம் வரைந்தவர்.
நகம் நமக்கு வாய்த்திருப்பது கோபம் வரும்போது அதை பல்லால் கடித்துக் குதறி துப்புவதற்காகத்தான் என்று நாம் தப்புக்கணக்கு போட்டு வைத்திருக்கிறோம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். இவருக்கு நகம்தான் ஆயுதம். ஆம்.. நகம்தான் இவருக்கு சோறு போட்டது.
பழைய சினிமா படங்களில் பார்த்தோமானால் கதாநாயகிகளின் கண்கள் பேசும். குறிப்பாக சரோஜாதேவியின் கண்கள். “லவ் லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ், தக்கத் திமி தா” என்று பாடும்போது, அந்த பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல் கண் இமைகள் துடிக்கும், விழிகள் இடது கோடிக்கும் வலது கோடிக்கும் அலைபாயும். அது கண்கள் பேசும் கலை.
ஹாஜா பாஷாவின் நகக் கண்கள் பேசும்; உரையாடும்; கவிதை வடிக்கும். நகம்தான் அவருக்கு தூரிகை.
உருவத்தை பார்த்த மாத்திரத்தில் நொடிப்பொழுதில் தத்ரூபமாக வரைந்து விடுவார். இவரை ‘அபூர்வக் கலைஞர்’ என்று ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ் பத்திரிக்கைகள் புகழ்மாலை சூட்டியிருந்ததை அந்தக் காலத்தில் படித்து மனமகிழ்ந்திருக்கிறேன்.
மாநிலக் கண்காட்சி, சென்னை மெரீனா பீச், தஞ்சை பொருட்காட்சி, என்று எங்கு சென்றாலும் இந்தக் கலைஞனை பார்க்கலாம். “இவரு எங்க ஊர்க்காரரு” என்று நண்பர்களிடம் பெருமையடித்திருக்கிறேன்.
முன்பொரு நாள் நாகூரில், ஒரு வீட்டு கல்யாண வைபவத்தில் கச்சேரி நடந்தது. “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்தது. “நானொரு விகடகவி. இன்று நான் ஒரு கதை சொல்வேன்” என்று தொடர்ந்து கிளிகளைப்போல கத்தி, தவளைகள் போல ஒலியெழுப்பி, யானைகள் போல பிளிறி, மான்களைப்போல மந்திரம் பாடிக்கொண்டிருந்தார் ஒரு மேடைப் பாடகர். அருகில் சென்று பார்த்தால்; “அட! நம்ம ஹாஜா பாஷா!!”
கெளரவமாக நடிக்க வேண்டுமென்ற ஆசையில் திரைப்படத்துறையில் அலைந்து திரிந்து கெளரவ நடிகர் ஆனவர் இவர். “நான்” (என்ற ஞாபகம்) படம் வெளிவந்தபோது அதை ஒன்றுக்கு பலமுறை பார்த்தேன். காரணம் மொட்டை பாஸ் ஆக வரும் அசோகனுக்குத் துணையாக ஹாஜா பாஷா ஒரு சில வினாடிகள் திரையில் தோன்றுவார். “ஹய்யா.. ஹாஜா பாஷா!” என்று திரையரங்கில் என்னையறியாமலேயே கூச்சல் போட்டிருக்கிறேன்.
அமிதாப் பச்சன் நடித்த “ஆக்ரி ராஸ்தா” இந்திப் படத்தில் ஒரு அரசு அலுவலகத்தில் பழைய லெட்ஜரிலிருந்து ஏதோ ஒரு ஆவணத்தை எடுத்துக் கொடுப்பார். அவர் ஆவண நடிகராக நடித்ததைக் கண்டு ஆணவப்பட்டேன். “அடடே! நம்ம ஊருக்காரரு அகில இந்திய லெவலுக்கு பிரகாசிக்கத் தொடங்கி விட்டாரே” என்று பூரித்தேன்.
ஒருமுறை பிரசாத் ஸ்டூடியோவுக்கு போயிருந்தபோது ஹாஜா பாஷாவை தற்செயலாக அங்கு சந்திக்க நேர்ந்தது. அடுத்த ப்ளோரில் இளையராஜாவின் பாடலுக்கு ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது. “வாங்க.. வாங்க..” என்று வாயார வரவேற்று, உங்களை ஒரு வி.ஐ.பி.யோடு அறிமுகப் படுத்துகிறேன் என்று கூறி “இவர்தான் டி.ஏ.மதுரத்துடைய சகோதரர்” என்று ஒரு நபரை அறிமுகப்படுத்தினார். நானும் கை குலுக்கினேன், (என்.எஸ்.கிருஷ்ணனையே திரையுலகம் மறந்திருந்த காலம் அது)
சிகப்பு, மஞ்சள், பச்சை நிறத்தில் கலர் கலராக பேண்ட் போட்டு ராமராஜன் படங்களில் நடிப்பார். அந்த Dress sense இவரைப் பார்த்துதான் ஏற்பட்டது என்று நினைக்கிறேன். எந்த ஒரு கும்பலிலும் ஹாஜா பாஷாவை சுலபமாக அடையாளம் கண்டு பிடித்து விடலாம். ஈஸ்ட்மென் கலரில் காட்சியளிப்பார்.
சிவப்பு நிறத் தொப்பி, சிவப்பு நிற Scarf, சிவப்பு நிற சட்டை, சிவப்பு நிற பேண்ட், சிவப்பு நிற பெல்ட், சிவப்பு நிற சாக்ஸ், சிவப்பு நிற ஷூ என்று உடையணிந்து தூரப்பார்வை உள்ளவர்களுக்குகூட தொலைதூரத்தில் துல்லியமாகத் தெரிவார்.
உள்ளூர் David Copperfield இவர். Showman – ஆகவே வாழ்க்கையை ஓட்ட வேண்டியதிருந்ததால், தன் ஓவியத் தொழிலுக்கு மெருகூட்டும் வகையில் மேஜிக் கலையையும் கற்று வைத்திருந்தார். ரோஜா பிரியருக்கு அடுத்தபடியாக குழந்தைகளைக் கவரும் பரமரகசியம் இந்த ஹாஜா பாஷாவுக்குத்தான் அத்துப்படி.
Polyglot – க்கு உதாரணம் கேட்டால் இவர் பெயரைச் சட்டென்று சொல்லி விடலாம். எத்தனை மொழி இவருக்குத் தெரியும் என்ற கணக்கு இவருக்கே தெரியாது. கலைத் தொழில் நிமித்தம் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை வட்டமடித்துக் கொண்டிருந்ததால் எல்லா பாஷையும் பேசுவார். அந்தந்த ஊர் accent – ல் பேசுவது இவரது தனித் திறமை.
மலேசியா பயணம் சென்றிருந்தபோது மலாய் மொழி கற்றுக் கொண்டு மேடை நிகழ்ச்சிகளில் மலாய் மொழியில் பேசி அசத்தினார். தாய்லாந்து நாட்டில் பத்தாயா பீச்சில் இவரது கலைத்திறன் நிகழ்ச்சி நடந்தது. “இப்பொழுது இந்தியாவிலிருந்து வருகை புரிந்திருக்கும் இந்த மிமிக்ரி கலைஞர் நம் நாட்டு அரசியல் தலைவர் சொம்சாக் போல் பேசிக்காட்டுவார்” என்று ஒருவர் தாய்பாஷையில் அறிமுகம் செய்ய, ஹாஜா பாஷா மேடைக்கு வந்து சொம்சாக் போல, அதே குரலில்; அதே பாணியில்; அதே தொனியில் பேசி பலத்த கைத்தட்டலை பெற்றுக் கொண்டார்.
ஒரு சில நாட்களுக்குள், கேட்டறிந்து; பயிற்சி செய்து; உள்ளுர் பிரமுகர் போல் பேசியது இவரது திறமைக்கு ஒரு சான்று. கூர்ந்து கவனிக்கும் தன்மை, எதையும் உடனே கிரகித்துக் கொள்ளக் கூடிய திறமை இருப்பவரால்தான் இது சாத்தியம்
இந்த தடவை ஊர் சென்றிருந்தபோது செய்யது பள்ளியிலிருந்து இனிமையான குரலில் பாங்கு சப்தம் ஒலித்தது. “இந்தக் குரல் யாருடையது தெரியுமா?” என்று என் தாயார் புதிர் போட்டார். நான் உதட்டைப் பிதுக்கினேன். “உனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர்தான்” என்றார். விசாரித்துப் பார்த்ததில் அது ஹாஜா பாஷாவின் குரல் என்று தெரிய வந்தது.
கலா ரசிகராக இருந்தவர் இப்போது பிலால் ரசிகராகி விட்டார். வாழ்க்கையின் சாராம்சத்தைப் புரிந்துக் கொண்டால் வாழ்க்கையின் வழிமுறையும் மாறி விடும் என்பது எவ்வளவு உண்மை? “எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்” என்று விவேக் நெகட்டிவ் தொனியில் பேசும் பஞ்ச் டயலாக் இவருக்கு பாஸிடிவ் தொனியில் அமைந்து விட்டது. மார்க்கம் இவர் மார்க்கத்தை திருப்பி விட்டிருந்தது. “ஹிதாயத்” என்று சொல்வார்களே அது இதுதான் போலிருக்கிறது.
அவருடன் பேசிப் பார்த்ததில் அவரது மனதுக்குள் ஒரு மகத்தான ஆசை நெடுநாட்களாக புதைந்திருப்பது தெரிய வந்தது. புனித குர்ஆனை முழுவதுமாக உலோகத் தகட்டில் நகத்தாலேயே எழுதி முடிக்கவேண்டும் என்பதுதான் அது. இறைவன் அவரது ஆசையை நிறைவேற்றி வைப்பானாக. ஆமீன்.
nagoorumi
November 6, 2009 at 6:30 pm
ஹாஜா பாஷாவை முழுமையாகப் புரிந்து கொள்ள உங்கள் கட்டுரை உதவியது. மிகத் திறமையான கலைஞரை நாம் சரியாக கௌரவிக்காமல் விட்டுவிட்டோம். (வழக்கப்படி). கலா ரசிகராக இருந்தவர் பிலால் ரசிகராகிவிட்டார் என்பது எனக்குப் புரியவில்லை. என் நண்பர் பிலாலில் ரசிகராக அவர் எப்போது ஆனார்? மார்க்கத்துக்கு பிலால் என்று ஒரு பெயர் உள்ளதா என்ன?
அகத்தின் அழகு நகத்தில் தெரியும் ஹாஜா பாஷா நீண்ட நாள் வாழ எல்லாம் வல்லவனைப் பிராத்திக்கிறேன்.
நாகூர் ரூமி
Abdul Qaiyum
November 7, 2009 at 12:19 am
இப்பொழுது அடிக்கடி செய்யது பள்ளியில் இவருடைய பாங்கு சப்தம் ஒலிக்கிறது. கலாரசிகராக (சசிகலா அல்ல) இருந்தவர், (ஹஸ்ரத்) பிலால் ரசிகராக மாறிவிட்டார்.
மாறியது நெஞ்சம். மாற்றியது யாரோ?
ஆபிதீன்
November 7, 2009 at 11:40 am
நன்றி கையும். ஹாஜாபாஷா அவர்களைப் பற்றி ஒரு பதிவு போடவேண்டுமென்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். முந்திக்கொண்டீர்கள்.
கருப்பு அட்டையில் இவர் கத்தரிக்கோல் புகுந்து விளையாடும். (பக்கவாட்டு) உருவத்திற்கு பரிமாணம் கொடுக்கத்தான் இவர் தன் நகங்களை உபயோகிப்பதைப் பார்த்திருக்கிறேன். தன் பேச்சுத் திறமையால், ‘நீங்கள்தான் இது’ என்று யாரையும் நம்ப வைத்திடுவார். அந்த ‘மேஜிக்’ எனக்கு ரொம்பவும் பிடிக்கும்!. இவர் வரைந்த ஓவியமாக நான் பார்த்து – சின்ன வயதில் – அசந்தது ஒரு பென்சில் ஸ்கெட்ச். மவுத்தான தன் பாட்டனாரை (?) வரைந்திருந்தார் அதில். ரொம்பநாள் சின்னமரைக்கார் ஹல்வா கடையில் இருந்தது அந்த ஓவியம். நம்மைப்போல் அல்லாமல், காசு கொடுத்து பலரும் ஹல்வா வாங்க அந்த ஓவியம்தான் காரணம்!
Abdul Qaiyum
November 7, 2009 at 2:52 pm
உண்மைதான். நகத்தால் மட்டுமின்றி வாயால் பிரஷ் பிடித்து வரைவார். கால் விரல்களால் பிரஷ் பிடித்து வரைவார்.
kabeer
November 9, 2009 at 4:27 pm
I know brother Abedheen also good artist. Why not he publise his painting in his web.site.?
Najumudeen
January 30, 2010 at 6:44 am
One more artist like abudeen at nagore, his name is Abdul Azees , he is working in cine filed under Ubald. if know him kindly response
JALAL
February 8, 2010 at 7:42 pm
ME AND HAJA BASHA IS WE KNOW EACH OTHERS, BUT REALLY I DONT KNOW ABOUT HIM. ANYWAY MU BEST REGARDS AND CONGRATS TO HAJA BASHA HERE AND HEREAFTER. THANKS TO WROTE ABT HAJA BASAH
JALALU
PUDUMANAI STREET
NAGORE
Mohamed Iqbal
October 23, 2014 at 7:30 pm
கடந்த ஆகஸ்டில் நான் ஊருக்கு சென்றிருந்தபோது ஒரு கல்யாணத்திற்காக நாகூர் சென்றிருந்தேன்.! நிக்காஹ் மஜ்லிஸில் அமர்ந்திருந்தபோது மருதாணி தடவிய தாடியுடன் வித்தியாசமான கெட் அப்பில் ஒரு மனிதர் வந்தமர்ந்தார்.! என்னுடன் அமர்ந்திருந்த நாகூர் ஹாஜா (இவர் வேறொருவர்) என்ன மச்சான் சவுக்கியமா? என்று கேட்க, நான் அவரிடம் யாரிவர் என்று கேட்டேன்.! அதற்கவர் தெரியவில்லையா ? நைல் ஆர்ட்டிஸ்ட் என்று கூறினார்.!
பின்னர் நிக்காஹ் முடிந்ததும் அருகிலுள்ளவர்களிடம் பேசிவிட்டு திரும்புவதற்குள், ஹாஜா பாஷாவே என்னிடம் வந்து பேசினார்.! எனது தாடியும் மருதாணி தடவப்பட்டிருந்ததால், மருதாணி பேமிலி என்றவகையில் கருத்துப் பரிமாற்றம் செய்துக்கொண்டோம்.!
என் சிறுவயதில் காரைக்கால் கந்தூரி வைபவத்தில் ஹாஜா பாஷா நகத்தால் வரைந்து கொடுத்ததை நினைவு கூர்ந்து பேசிக்கொண்டோம்.! நான் அவருடன் போட்டோவும் எடுத்துக் கொண்டேன்.!
அடுத்த இரு தினங்களில் நாகூரிலேயே ஒரு வலிமா விருந்தில் சந்தித்தேன்.! தனது பிள்ளைகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.! லேட் மேரேஜ் என்று கூறினார்.! அதன் பின்னர் சந்திப்பு ஏற்படவில்லை.! நானும் பயண அலம்பல்களில் சிக்கி புறப்பட்டு வந்து விட்டேன்.!