RSS

கம்பன் அவன் காதலன் (ஐந்தாம் பாகம்)

20 Jun

கம்ப ராமாயணமும் கன்னித்தமிழ் முஸ்லீம்களும்


நீதியரசரைப்பற்றி நான் எழுதத் தொடங்கியதிலிருந்து எனக்கு ஏகப்பட்ட கண்டனக் கடிதங்கள், விமர்சனங்கள்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் இஸ்லாத்திற்கென்று இதுவரை எதுவுமே செய்ததில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் வைக்கிறார்கள்.

“காலம் முழுதும் இந்துக்களின் தெய்வமான ராமனையே இவர் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினார்”, என்று நாத்திக அன்பர்களும், “இவர் இஸ்லாத்திற்காக என்ன செய்து விட்டார்?” என்று இஸ்லாமியச் சகோதரர்களும் பலவிதமான கேள்விக்கணைகளை
தொடுத்துள்ளார்கள்.

உள்ளூர் அன்பர் ஒருவர் “இவர் நாகூருக்காக என்ன செய்தார் என்று உங்களால் கூற முடியுமா?” என்ற வினா வேறு விடுத்துள்ளார்.

அவர்களுக்கான என் விளக்கம் இதோ:

எல்லா ஊருக்கும் ஏதாவதொரு வகையில் சிறப்புண்டு. ஒவ்வொரு ஊருக்கும் பெருமை தேடித் தந்த ஆன்றோர் பெருமக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காலப்போக்கில் அவர்கள் ஆற்றிய அரும்பணிகள் வருங்காலச் சந்ததியினருக்குத் தெரியாமலே கரைந்து போய்விடுகின்றன. அதேபோன்றுதான் நாகூரில் பிறந்த எண்ணற்ற இலக்கியவாதிகள், இசை விற்பன்னர்கள் இவர்களின் மகிமை மற்றும் மகத்துவம் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் போயிருக்கின்றது.

இந்த நோக்கத்தில்தான் “நாகூர் மண்வாசனை” என்று பெயரிடப்பட்ட எனது வலைப்பக்கத்தில் நாகூரில் பிறந்த நன்மக்களின் நற்பணிகளை இனிவரும் சமுதாயம் எளிதில் அறியும் வண்ணம் என்னால் இயன்றதை பதிவு செய்து வருகிறேன்.

“இவர் நாகூருக்காக என்ன செய்தார்?” என்ற கேள்வியானது, ஊருலகம் போற்றும் ஓர் உத்தமனை ஒரு சின்ன வட்டத்துக்கள் அடைப்பதாக எனக்குத் தெரிகிறது. குன்றிலிட்ட விளக்கை குடத்திலிட்டு அடைத்தல் முறையாகுமா?

அவர் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிய மனிதரல்ல. ஆமாம், தன் உன்னத பணியால் உலகை வலம்வந்த வாஸ்கோடா காமா, இந்த ஜஸ்டிஸ் மாமா.

2000-ஆம் ஆண்டு தினமணி பத்திரிக்கை ‘தலைசிறந்த 100 தமிழர்கள்’ என்ற பட்டியலில் இந்த மாமேதையின் பெயரையும் வெளியிட்டு கெளரவித்தது.

இந்த ‘தலைசிறந்த மனித’னால் நாகூர் மண்ணுக்கு பெருமையில்லை என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

அமெரிக்க ஆய்வாளர்கள் பவ்லா ரிச்மேன், வாசுதா நாராயண் போன்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர்கள் பாராட்டும் ஓர் அறிஞனை “நாகூர்” என்ற குறுகிய வட்டத்தினுள் வைத்துப் பார்ப்பதிலே எனக்கு உடன்பாடில்லை.

ஓர் உள்ளூர் M.L.A.வைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து போற்றப்படும் இவர் மீது பாய்ச்சுதல் நியாயமா என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். திருக்குவளைகாரர்கள் கலைஞரை பார்த்துக் கேட்டாலும் ஒரு நியாயம்
இருக்கிறது.

அரசு ஊதியம் பெற்றுக்கொண்டு வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் பணிபுரிந்து, தன் சொந்தக் காசை செலவுசெய்து காலம் முழுதும் இலக்கியப்பணி செய்து வந்த இவரைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்பது எந்த வகையில் நியாயம்?

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பவர்கள், முதலில், அவர்கள் ஊருக்காகச் என்ன நற்காரியம் செய்தார்கள் என்று மனசாட்சி அறிய தங்களை தாங்களே கேட்டுக் கொள்ளட்டும்.

இவர் அரசாங்கத்திடமிருந்து “தொகுதி மேம்பாட்டு நிதி” என்று ஏதாவது வாங்கிகொண்டு எதுவுமே செய்யாமல் போய்விட்டாரா? இறுதிவரை நீதி, நியாயம், நேர்மை, சட்டம், ஒழுங்கு என்று வாழ்ந்தவரைப் பார்த்துக் கேட்கும் கேள்வியா இது?

நாகூர் ஹனிபா உள்ளுரில் “ஹனிபா லாட்ஜ்” கட்டியதுபோல் இவரும் “இஸ்மாயீல் லாட்ஜ்” என்று கட்டியிருந்தால் திருப்தி அடைந்திருப்பார்களோ?

“வெளியூர்க்காரரான ஏ.ஆர்.ரகுமான் ரோடு போட்டுக் கொடுத்தார். இவர் ஊருக்காக என்ன செய்தார்?” என்று அந்த நண்பர் கேட்ட கேள்வி எனக்கு சிரிப்பை வரவழைக்கின்றது. நீதிபதி, தன் சொந்தக் காசில் தர்கா குளமருகே கழிப்பிடம் கட்டித் தந்திருக்கவேண்டும் என்று அவர்
எதிர்பார்க்கிறாரா?

ஒருவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை எழுதும்போது அது நிறைவுற்றபின்தான், அவரது செயல் போற்றத்தக்கதா இல்லையா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமே தவிர அவசரப்பட்டு அரைகுறையாக விமர்சனங்கள் புரிவது அறிவுடமை ஆகாது.

ஒருவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தை படிக்கையில் அதிலிருக்கும் நல்ல படிப்பினைகளை மாத்திரம் ஏற்றுக்கொண்டு நமக்கு ஒவ்வாததை ஏன் களையக் கூடாது?

“இஸ்லாத்துக்காக இவர் என்ன செய்தார்?” என்ற கேள்விக்கு, இனிவரும் பதிவுகளில் நான் எழுதவிருக்கும் இவராற்றிய இஸ்லாமிய இலக்கிய பணிகள் உரிய சான்று பகரும் என்று நம்புகிறேன்.

கம்பராமாயணத்தை ஆய்வுச் செய்த காரணத்தை வைத்துக்கொண்டு அவர் தன் மார்க்கத்திற்கு துரோகம் இழைத்து விட்டார் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தல்ல.

அவர் ஒரு சைவப்பிரியராக இருந்தார், பிராமணச் சமூகத்தாருடன் நெருங்கிப் பழகினார் என்ற ஒரே காரணத்தினால் அவரை “பூணூல் போடாத பிராமணர்”, “வழிதவறிய வெள்ளாடு” என்று விமர்சிப்பது முறையாகுமா?

“நாட்டை நேசி; அது ஈமானின் ஒரு பாதி” என்பது நபிகளாரின் கூற்று. அதேபோன்று ஒருவன் மொழியை நேசிப்பதும் தன் நம்பிக்கையின் ஒரு பாதிதானே?

“கம்பராமாயணம், மதங்கள் கடந்த, தமிழர் கொண்டாட வேண்டிய செவ்வியல் இலக்கியத்தின் வடிவம்” என்று நீதிபதி இஸ்மாயீல் அடிக்கடி உரைப்பார்.

கம்பராமாயணத்தை ஒரு இந்து மத காப்பியம் என முத்திரையிட்டு அதனை பிற மதத்தினரோ, நாத்திகர்களோ ஒதுக்கித் தள்ளுவது முறையாகாது.

கம்பனின் காவியம் ஒரு கற்பனைச் சுரங்கம். சந்தங்களின் சமுத்திரம். உவமைகளின் ஊற்று, கதா பாத்திரங்களை நாடகத் தன்மையுடன் உலவவிடும் கவித்துவம் நிறைந்த தனித்துவக் காவியம்.

வள்ளுவன், இளங்கோ, கம்பன் – இம்மூவரையும் இன்பத்தமிழிலிருந்து எக்காலத்திலும் பிரித்தெடுக்க இயலாது. இலக்கியத்தை நுகர நாத்திகமோ, ஆத்திகமோ, மதமோ, அரசியலோ தடையில்லை. அக்காப்பியம் அழகுத்தமிழுக்கு ஓர் அற்புத பொக்கிஷம்.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் ஒருவரை உதாரணம் காட்டவேண்டுமெனில் முதலில் நம் நினைவில் வருவது நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் பெயர்தான்.

இஸ்லாமிய இலக்கியகர்த்தாக்கள் கம்பராமாயணத்தை ஒரு தெய்வீக படைப்பாக காணவில்லை, அதிலிருந்த தெள்ளுதமிழ்ச் சுவையை தேனாகச் சுவைத்தார்கள்.

கம்பனைக் காதலித்த இஸ்லாமியர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் ஒருவர் மட்டுமா? அல்லவே அல்ல. கம்பராமாயணத்தின் உந்துதலால் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் கம்பனைக் காதலித்த முதல் இஸ்லாமியர் என்று உதாரணம் காட்டலாம்.

[கம்ப ராமாயணத்திலும், சீறாப்புராணத்திலும் உண்மைக்கு மாறான எத்தனையோ விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அதை நாம் இப்போது ஆராயப் போவதில்லை]

கம்பனின் மேல் நீதியரசருக்கு ஏற்பட்ட காதல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை அடைவதற்கு முன்பிருந்தே ஏற்பட்ட மோகமிது.

தமிழ் முஸ்லீம் இலக்கியவாதிகளிடம் காணப்படும் குணங்களில் ஒன்று – தங்களுடைய மதத்தின்பால் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த அதே வேளையில், அவர்கள் தங்கள் தாய்மொழியின் சிறப்பையும் உணரத் தவறியதே இல்லை.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு அயோத்தி ராமர் கோவில் விவகாரம் உருவெடுத்து வட இந்தியா முழுதும் கொழுந்து விட்டெரிந்த வேளையிலெல்லாம் தமிழகத்தில் இந்து-முஸ்லீம் சகோதரர்கள் தம்மில் பரஸ்பரத்துடன் நட்பு பாராட்டியது நீதிபதி இஸ்மாயீல் போன்ற இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் கொண்டிருந்த மதசகிப்புத்தன்மை மற்றும் அணுகுமுறை இவைகளினால்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

நீதிபதி இஸ்மாயீல் போன்றவர்களின் இழப்பு நீதித்துறைக்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல அதையும் தாண்டி இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கும்தான். இந்த சகோதரப் பாசம்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, முஸ்லீம்கள் மனமுடைந்து போயிருந்தபோது, கவிப்பேரரசு வைரமுத்து போன்றவர்களை இதுபோன்று எழுத வைத்தது:

அந்த கட்டடத்தின் மீது எப்போது
கடப்பாரை வீழ்ந்ததோ
அப்போது முதல்
சரயூ நதி
உப்புகரித்துக் கொண்டே
ஓடுகிறது .. .. ..

சீதை சிறைப்பட்டபின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

என்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடுநிலை தவறாது கவிதை வடித்தார் அவர்.

எப்பொழுதும் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் “சோ” கூட, “தனது மத நம்பிக்கைக்கு எந்த சிறு பழுதும் இல்லாமல், கம்ப ராமாயணத்தை பெரும் இலக்கியமாக மதித்து, அதில் அவர் காட்டிய புலமை பிரமிக்கத்தக்கது” என்று நீதிபதி இஸ்மாயீல் அவர்களை வானளாவ புகழ்ந்துள்ளார். (துக்ளக், 2.2.2005)

செய்குத் தம்பி பாவலர் (1874 – 1950)

கம்ப ராமாயண ஆய்வில் நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சதாவதானி செய்குத் தம்பி பாவலர் அவர்கள். கம்பனுக்கு மணிமண்டபம் கட்டிய அதே எம்.ஜி.ஆர்.தான் தான் முதல்வராக இருந்தபோது செய்குத் தம்பிப் பாவலருக்கும் நினைவு மண்டபம் கட்டி, அவரே திறந்தும் வைத்து, நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாடினார்.

வள்ளலார் எழுதிய “அருட்பா”வை மறுத்து, அது அருட்பாவன்று; மருட்பா எனக்கூறி இலங்கை யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர், “இராமலிங்க சுவாமிகள் பாடலாபாசத் தருப்பனம் அல்லது மருட்பா மறுப்பு” என்று நூலொன்று எழுதினார்.

நம் செய்குத் தம்பிப் பாவலரோ ஆறுமுக நாவலருடன் விவாதம் செய்து வென்று, ‘அருட்பா-அருட்பாவே, மருட்பாவன்று’ என நிலை நாட்டினார். அவரை யானை மேல் ஏற்றி, ஊர்வலமாய்க் கொண்டு வந்த சைவர்கள், காஞ்சிபுரம் கோயிலில் பூரண கும்ப மரியாதை
கொடுத்து வரவேற்றனர். தமிழ் மொழிக்காக சமய வேற்றுமை பாராது போராடிய தமிழறிஞர் என்று செய்குத் தம்பிப் பாவலரை பாராட்டுகின்றனர்.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு அரும்பாடுபட்ட இவரைப் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு முஸ்லீம்களின் மீது நச்சுக்கருத்துக்களை பரப்பி, அவர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்துவரும் வரும் சங்பரிவார் அமைப்புகளுக்கு தெரிய நியாயமில்லை.

பா.தாவூத் ஷா (1885-1969)

‘கம்பராமாயண சாயபு’ என அழைக்கப்பட்ட தாவூத் ஷா அவர்கள் நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்கு கம்பனின் மேல் காதல் ஏற்பட கிரியாவூக்கியாக இருந்தவர்களில் ஒருவர். (உலகப் புகழ்பெற்ற கணித மேதை இராமனுஜரும், தாவூத் ஷாவும் ஒரே வகுப்புத் தோழர்கள்)

நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாக்களில் பல ஊர்களில் பல மேடைகளில் பேசி வந்த அதேசமயம் கம்ப ராமாயணத்தின் சிறப்பையும், அதில் காணப்பட்ட நல்ல விஷயங்களையும் பிறருக்கு எடுத்துச் சொல்ல அவர் தயங்கியதில்லை. மனித நேய மாண்பிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் அடிப்படையான பண்பு இந்த மதசகிப்புத்தன்மை. இன்று பொதுவாகவே இந்த நற்பண்பு சிறுகச் சிறுக குறைந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது.

கிராமமொன்றில் ஒருமுறை சீதா கல்யாண உபன்யாச நிகழ்ச்சியில் இரவு 2 மணி வரை கம்ப ராமாயண விளக்கவுரையை ஆற்றினார் பா.தாவூத் ஷா. அவரது இலக்கிய ரசனையை அறிந்து வியந்து, கூட்டத்தின் இறுதியில் இந்து சமய அன்பர்கள் ‘கம்ப ராமாயண சாஹிபு
வாழ்க’ என உற்சாக கோஷம் எழுப்பினர்.

சிறு வயதில் கம்ப ராமாயண சாஹிபின் பேச்சை மயிலாப்பூரில் பல முறை கேட்டு மகிழ்ந்ததாக நினைவு கூர்ந்துள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜாஜியின் புதல்வர், நரசிம்மன்.

கம்பராமயாணத்தைப் பற்றிப் மேடையில் உரையாற்றுகையில் உணர்ச்சிப் பெருக்கால் கண்களில் கண்ணீர் மல்க, லயித்துப்போய் ஆவேசத்துடன் சொற்பொழிவாற்றுவார் கிறிஸ்துவரான பேராசிரியர் ஜேசுதாசன். கம்ப ராமாணத்தை மிகவும் உயர்த்திப் பேசும் சாலமன் பாப்பையாவும் ஒரு கிறித்துவர்தான்.

‘பில்கிரிம்ஸ் புரோகிரஸ்’ என்ற பெயரில் ஜான் பன்யன் எழுதிய நூலை “இரட்சண்ய யாத்திரிகம்” என்ற பெயரில் காப்பியமாக வடித்தார் எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை. இவரது இயற்பெயர் ஹென்றி ஆல்பர்ட். அவரை “கிறிஸ்துவக் கம்பன்” என்று அடைமொழியிட்டு அழைத்தனர் அறிஞர் பெருமக்கள்.

பெ.நா. அப்புஸ்வாமி என்பவர் பழுத்த நாத்திகர். ஆனாலும் கம்பராமாயணத்தின் மீதும் சங்க இலக்கியங்களின் மீதும் அவருக்கிருந்த அபரிதமான மதிப்பையும் புலமையையும் விவரிக்க இயலாது.

“கம்பரசம்” என்ற நூலை எழுதி அதில் காணப்படும் “காமரசத்தை” சுட்டிக்காட்டி, கடுமையாக விமர்சித்து வந்தவர் அறிஞர் அண்ணா என்பது எல்லோரும் அறிந்ததே. “கம்பனின் கலைத்திறமை – கவிதையழகு இவை பற்றி அல்ல நாம் குறை கூறுவது, எடுத்தாண்ட கதை அக்கதையின் விளைவு” என்று “கம்பரசம்” நூலின் தொடக்கத்தில் அண்ணா எழுதுகிறார். அவரது தலைமையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் கம்பனுக்குத் தரவேண்டிய உரிய இடத்தை அளித்ததுடன், சென்னை கடற்கரையில் சிலையும் வைத்து அந்தக் கவிச்சக்ரவர்த்தியின் புகழ்பாடத் தவறவில்லை.

பெரியார் வழியில் வந்தவர்கள், அண்ணா வழியில் வந்தவர்கள் என்று தங்களை தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள் நாளடைவில் எப்படி பச்சோந்திகளாய் நிறம் மாறிப் போனார்கள் என்பதை பின்னர் பார்ப்போம்.

கவிஞர் சாரண பாஸ்கரன் (1923-1986)

  கம்பனை போற்றிப் புகழ்ந்த இஸ்லாமிய எழுத்தாளர்களுள் இவரும் முக்கியமானவர். “தமிழோடு நிலைத்திருக்க பிறந்தவன் இக் கவிஞன்” என புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் புகழப்பட்டவர். “கூத்தாநல்லூர் பாரதிதாசன்” என பலராலும் போற்றப்பட்டவர்.

9.4.1960-ல் காரைக்குடி கம்பன் விழா கலையரங்கில் பெராசிரியர் அ.சீனிவாசராகவனார் தலைமையில் ‘கம்பன் காணும் சமயக் கருத்துக்கள்’ என்னும் தலைப்பில் சைவம், வைணவம், சமணம், பெளத்தம், கிருஸ்துவம், இஸ்லாம், வேதாந்தம், சமரசம் முதலியவைப் பற்றிப் பலரும் கவிதை பாடினர். “கம்பன் கண்ட இஸ்லாம்” என்ற தலைப்பில் கவிஞர் சாரண பாஸ்கரன் கவிதை பாடி அவையோரை சிந்தனையில் ஆழ்த்தினார்.

கம்பன் கண்ட இஸ்லாம்

கலையரங்கின் தலையரங்காம் கவியரங்கின்
…..அருந்தலைவ, கவிவா ணர்காள்!
விலைமிகுந்த கலையனைத்தும் வியந்தேற்றும்
…..கம்பன்புகழ் விளக்கும் சான்றோய்!
உலகனைத்தும் நிலைபடுத்தி உயிரனைத்தும்
…..நெறிபடுத்தி உவந்து காக்கும்
தலைவனுக்கே தலைவணங்கும் கம்பன்கண்ட
…..சமயநெறி இஸ்லாம் தானே!

ஆக்குதற்கு ஒருதெய்வம், காக்குதற்கு
…..மறுதெய்வம், அநீதி தோன்றில்
நீக்குதற்கு ஒருதெய்வம், என்றுபல
…..தெய்வங்கள் நிறுவிப் பேதம்
ஊக்குவித்த மாந்தரிடை இகபரத்தை
…..இனிதாள்வோன் ஒருவன் என்றே
நோக்குவித்த இஸ்லாத்தின் அறநோக்கைக்
…..கம்பனிலே நோக்கக் கூடும்!

கோவேந்தர் கொலுவினிலே கோலேந்தும் தமிழரசி
சாவேந்தச் செய்யாமல் தழைக்கவைத்த கம்பனையே
சைவத்தை சார்ந்தவனாய், வைணவத்தைச் சேர்ந்தவனாய்,
சமணத்தில் திளைத்தவனாய்ச் சாற்றினரே முக்கவிஞர்!

நிலையற்ற வாழ்வென்று நிகழ்த்துகின்ற பெளத்தத்தை
நிலைபெற்ற வாழ்வுற்ற நிகரற்ற ராமகதை
காட்டுதற்கே இங்குவந்த ‘கலைமகளின் காதலன்’சொல்
கேட்டுவந்தீர், பகைக்கிரங்கும் கிருஸ்து வத்தைத்
தீட்டியதாய் கம்பனது திறனாய்ந்தார் ஒருகவிஞர்!
பாட்டினிலே உங்கள்மனம் ஆட்டிவைத்தார் என்மூத்தோர்!

விளக்கம்:
(கலைமகளின் காதலன்’: கி.வா.ஜ வைக் குறிப்பது)

இத்தனைக்கும் இறுதியென – இத்தரைக்கே இறுதியெனும்
கத்தனருள் இஸ்லாத்தைக் கம்பனிலே காட்டுதற்கு
உத்தமனாம் ‘கணேச’னெனை ஓடிவரச் செய்துவிட்டான்,
சத்தியத்தை நாட்டுதற்குத் ‘தலைவன்துணை’ எனக்குண்டே!

விளக்கம்:
(‘கணேசன்’ – கம்பனடிப்பொடி சா.கணேசனைக் குறிப்பது
‘தலைவன்துணை’ – அரங்கத் தலைவர் சீனிவாச ராகவனாரை மட்டுமன்றி, இறைவனையும் குறிப்பது)

இறைதவத்து முனிவருக்கும் இமையவர்க்கும்
…..அரக்கர்தரும் இன்னல் நீக்க
மறையொழுகித் தரையாளும் தசரதனின்
…..அருந்தவத்து மகனைக் கேட்கும்
நிறைதவத்து கோசிகனின் வேள்வியினை
…..காத்துநெறி நிலைக்கச் செய்தே
கறைதுடைத்த ராமகதை காட்டுகின்ற
…..இஸ்லாத்தின் கருத்தைக் கேளீர்

ஆளுகின்ற வாய்ப்படைந்த காரணத்தால்
…..கடவுளுக்கும் அஞ்சேன் என்று
சூளுரைத்துத் தோளுயர்த்தும் அரக்ககுண
…..அரசியலார் சூழும் நாளில்
வாளுயர்த்தி வேலுயர்த்தி இறைபகைவர்
….வரும்போது வணங்கி டாமல்
தோளுயர்த்திப் போராடச் சொன்னநபி
…..வழிமுறையைச் சொன்னான் கம்பன்!

தரைமுழுதும் ஆளவந்த சூரியனின்
…..குலராமன் தந்தை வாக்கால்
துறவுகண்ட பெருங்காதை சொல்லவந்த
…..கவிமன்னன் தொடுத்த பாவில்
இறைவனது ஆணையினால் தம்நாட்டைத்
…..துறந்துபிற நாட்டை ஏற்ற
குறைஷிகுலத் திருமணியாம் நபிமணியின்
…..நெறிமுறையைக் குறிக்கக் காண்போம்!

விளக்கம்:
(‘துறந்து பிற நாட்டை’ – நபிகள் பெருமான், பிறந்த நாட்டைத் துறந்து மதீனாவிக்கு ஹிஜ்ரத் செய்ததைக் குறிப்பது)

மாதவத்தின் அருட்பிழம்பாய் மாநிலத்தின்
…..பெருங்கொடையாய் மக்கா தோன்றிப்
பேதமற்ற சமுதாயம் பேணிடவே
…..மக்களினம் பிணைந்து வாழ
வாதமற்ற வாழ்வுநெறி வகுத்தளித்த
…..வள்ளல்நபி வாழ்வில் காணும்
ஈதலறம் போதமுறை கம்பனிலே
…..இணைந்திருக்க இனிதே காண்போம்!

பொய்மையற்ற மெய்யுலகை, வறுமையற்ற
…..வளஉலகை, போரொ ழித்துத்
துய்மைபெற்ற நட்புலகை, கைம்மயற்ற
…..பெண்ணுலகைத் தோற்று வித்தே;
தெய்வநெறி வாழ்வுடனே சேர்ந்தொளிரத்
…..தாழ்வுயர்வு சிதைக்கும் திட்டம்
செய்தளித்த எங்கள்நபி திருவழியை
…..கோசலத்தில் செய்தான் கம்பன்!

‘வறுமையிலை’ என்பதனால் ‘வண்மையிலை’
…..என்றுரைத்தான், வஞ்ச மிக்கச்
‘செறுநரிலை’ என்பதினால் ‘திண்மையிலை’
…..என்றுரைத்தான், தீமை சேர்க்கும்
‘ஒருபொய்யிலை’ என்பதனால் ‘உண்மையிலை’
…..என்றுரைத்தே உயர்ந்த கம்பன்,
சிறுமையிலாக் கோசலத்தை இஸ்லாத்தின்
…..செயல்முறையால் செழிக்க வைத்தான்!

கோதையரை அவர்விருப்பம் கோராமல்
…..கற்பழிக்கும் கொடுமை செய்து
பேதையராய் நசுக்கிவந்த ஆடவரின்
…..பேதமையைப் பெயர்த் தெறிந்து
மாதருக்கும் கல்வியிலும் சொத்தினிலும்
…..உரிமையென வகுத்த இஸ்லாம்
போதனையைக் கோசலத்தின் பூவையர்க்கும்
…..கவிமன்னன் புகுத்தல் கேளீர்!

(வேறு)

‘பெருந்தடங்கண் பிறைநுத லார்க்கெல்லாம்
பொருந்தும் செல்வமும் கல்வியும் பூத்த’தாம்
‘பொருந்தும் மகளிரை வதுவையில் பொருந்துவர்
இருந்தனர் கோசலம்’ என்கிறான் கம்பனே!

விளக்கம்:
(இஸ்லாத்தின் இலட்சியச் சின்னமாகிய இளம்பிறை போன்ற நெற்றியுடைய கோசலத்துப் பெண்கள், சொத்துரிமை, கல்வியுரிமை பெற்றிருந்ததோடு, அங்குள்ள ஆடவர்கள் சம்மதிக்கும் மாதரை, களவியல், காந்தர்வ முறையிலன்றி மனச்சடங்கின் மூலமே
மணப்பார்களாம். இதுதான் இஸ்லாமிய நெறிமுறை)

இத்தனை இருப்பினும் தசரதன் இல்லறம்
புத்திரர் இன்றியே பொலிவை இழந்தது!
இல்லறம் நடத்திநன் மக்களை ஈன்றிடில்
நல்லறம் என்பதை நம்பிய தசரதன்
பல்லறம் விலைத்தனன், பரம்பொருள் அருள்பெறச்
சொல்லற முனிவரால் வேள்வியைத் தொடங்கினன்!

‘தனுவன்றித் துணையிலான் தருமத்தின் கவசத்தான்!
மனுஎன்ற நீதியான்..’ மக்களைப் பெற்றனன்.
விளைந்திடாப் பாலையாய் விளங்கிய மனைவியர்!
விளைநில மாயினர், வீரரை ஈன்றனர்!

(வேறு)

‘மனைவியரை கனிகள்விளை நிலமே’ என்னும்
…..மாசற்ற இஸ்லாத்தின் குர்ஆன் வார்த்தை
தினையளவும் பொய்க்காது என்ப தற்கே
…..சீர்மன்னன் தசரதனே சான்று ஆவான்!
மனையறத்தில் நன்மக்கள் பெற்ற ளித்தல்
…..மாண்புமிகும் பணியாகும்-கடமை யாகும்
மனைவியரை வரண்டநில மாக்கி டாமல்
…..வளப்படுத்திச் சிசுக்கனிகள் பறித்தான் மன்னன்!

‘இறைவிருப்பம் எப்படியோ அப்படியே
…..கருவடையும்’ என்னும் இஸ்லாம்
மறைமொழியை மெய்ப்பிக்கும் உவமையென
…..அயோத்திநகர் மன்னன் வாழ்வை
வரைந்தளித்த கம்பன்புகழ் வாழ்த்துகின்ற
…..இந்நாளில் வளமே பெற்றுச்
சிறந்தொளிரும் மனைவியரை வரண்டநிலம்
…..ஆக்காமல் செழிக்கச் செய்தான்!

தந்தைபட்ட கடன்நீக்கி எஞ்சியதே
…..தனயன்பெறத் தகுந்த தாக்கி
எந்தநிலை வரும்போதும் வாக்குறுதி
…..காத்திடலே இஸ்லாமாகும்
இந்தநெறி ராமனிடம் – தசரதனின்
…..உறுதியிடம் இணைத்துக் காட்டும்
எந்தமிழின் கவிவேந்தன் கம்பனது
…..பெருந்தகைமை இயம்பப் போமோ?

மென்மைமிகு பூவையரின் கற்பினையும்
…..பொற்பினையும் வெகுவாய் போற்றும்
உண்மைமிகும் இஸ்லாத்தின் ‘திருக்குர்ஆன்’
…..உரைக்குமொழி யொன்றால் கம்பன்
‘பெண்கள்சதி மிகப்பெரிது’ என்பதற்குக்
…..கூனியையும் பேரா சைக்குக்
கண்ணிழந்த கைகேயியையும் இலக்கணமாய்ச்
…..செய்துநம்முன் காட்டி விட்டான்.

(வேறு)

“ஒன்றுனக்கு உந்தை, மைந்த
…..உரைப்பதோர் உரையுண் டென்”று
‘கொன்றுழல் கூற்றம்’ ஒத்த
…..கைகேயி கூறக் கேட்டே
என்னுடை தந்தை ஏவல்
…..இயம்பினீர் நீரே என்றால்
‘மண்ணிடை உய்ந்தேன்’ என்று
…..மகிழ்வொடு உரைத்தான் ராமன்.

பெற்றவர் விருப்பை ஏற்றல்
…..பிள்ளையின் கடமை என்னும்
நற்றவ இஸ்லாம் சாற்றும்
…..நன்னெறி ஏற்றான் ராமன்!
கொற்றமே தம்பி ஆளக்
…..குறித்தவள் பதினான் காண்டு
சுற்றமே பிரிந்து கானில்
…..துறவறம் நடத்தச் சொன்னாள்!

‘மன்னவன் பணியன் றாகில்
…..நும்பணி மறுப்ப னோ?என்
பின்னவன் பெற்ற செல்வம்
…..அடியனே பெற்ற தன்றோ?’
என்றிடும் ராமன் வாக்கில்
…..எங்களின் நபிகள் நாதர்
நன்றெனச் சொன்ன சொல்லை
…..நவின்றிட வைத்தான் கம்பன்!

(வேறு)

கவியரங்கின் நாயகரே, கம்பன்குலக்
…..கவிஞர்களே, கற்றுத் தேர்ந்து
புவிசிறக்கும் நாவலரே, புகழ்சிறக்கும்
…..பாவலரே, புலமை போற்ற
அவைநிறைந்த பொதுமக்காள், தமிழ்பயிலும்
…..அடியேனை அரங்கில் ஏற்றிச்
சுவைநிறைந்த காவியத்தில் கம்பன்கண்ட
…..இஸ்லாத்தை சொல்லச் சொன்னாய்!

மற்றவரின் எழுத்துக்களை பெயர்த்தெழுதித்
…..தம்மெழுத்தாய் மாற்றிச் சொல்வோர்,
மற்றவரின் கருத்துக்களைக் களவெடுத்து
…..தம்கருத்தாய் வழங்கி நிற்போர்,
குற்றம்புரி இழிவழியே கம்பனுடை
…..உடைமைகளைக் கொள்ளை கொண்டு
முற்றினிலும் இஸ்லாத்தின் உடைமையென
…..விற்பதற்கு முனைந்தே னில்லை!

வானூறும் மாரியென எங்கள்மறை
…..எங்கள்நபி வழங்கும் உண்மை
‘நானூறு ஆண்டினுக்கும்’ முன்னிந்த
…..நாட்டினரே ஏற்றார்! அஃதைத்
தேனூறும் தமிழ்க்கவியில் காப்பியத்தின்
கருப்பொருளில் திரட்டிச் சேர்த்தே
ஊனூற உணர்வூற கம்பனெடுத்
….தாண்டசில உரைத்தே னிங்கு!

விளக்கம்:
(‘நானூறு ஆண்டினுக்கும்’ – நம் நாட்டில் இஸ்லாம் பரவி நானூறு ஆண்டுகளுக்குப் பின்னரே கம்பன் வாழ்ந்திருக்கிறான். அவன் காலம்  12-ஆம் நூற்றாண்டென்றும், 9-ஆம் நூற்றாண்டென்றும் வரலாற்றாசிரியர் குறிப்பிடுகின்றனர்.)

புவியரசர் புகழரசர் வியந்தேற்றும்
…..இஸ்லாத்தின் பொதுக் கருத்து
கவியரசன் கம்பனையும் கவர்ந்ததனை
…..கலைஞரிடை விளக்கஞ் செய்தே
சுவையறிந்து நீவீரெலாம் இஸ்லாத்தின்
…..அறநெறியைப் பயிலச் சொல்லி
அவையிருந்து அகலுகின்றேன் அனைவருக்கும்
…..என்நன்றி அரங்கி னோரே!

“கூத்தாநல்லூர் பாரதி தாசன்” அன்று அழைக்கப்பட்ட கவிஞர் சாரண பாஸ்கரன் கம்பன் மேல் கொண்டிருந்த உயர்ந்த அபிமானத்தை எடுத்துக்காட்ட இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமோ?

கவிக்கோ அப்துல் ரகுமான்

கம்பன் கழக மேடைகளில் இதுநாள்வரை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் ஆற்றி வரும் சொற்பொழிவுகளும், கவிதைகளும்,  கம்பன் மேல் அவர் கொண்டிருக்கும் காதலை திரை போட்டு மறைக்காமல் பறைசாற்றுகிறது.

ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில் கவிக்கோ அவர்களின் பார்வை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கிறது..

இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான்
என்ன செய்வேன்?

என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாக புனைந்த கவிதை அவரை பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பித்தது.

இமயத்தில்
கொடியேற்றி
இறுமாந்து
நின்றவன்

சமயக்கொடியேற்றி
சகதியிலே
விழுந்துவிட்டான்

என்ற வரிகளில் “சமயம்” என்ற வேறுபாட்டைக் காட்டி நாம் பிரிந்து நிற்கும் அவலத்தை ஆதங்கத்துடன் எடுத்துரைக்கிறார் கவிக்கோ.

பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை

என்ற வரிகளில் தலையணை மொத்தத்திலிருந்த சிலப்பதிகாரத்தின் சாராம்சத்தை யாவும் ஒருசில வார்த்தைகளில் வடித்து விடுகிறார்.

இதைப்போலவே கம்பன் கழகத்தில் நடந்த ஒரு கவியரங்கில் கைகேயிக்காக கவிதை பாடினார் கவிக்கோ.

கூனி இவளை வளைக்க
வரங்களுக்காக
நாணை இழுத்தாள்.
அது
அவள் மங்கள நாணையே
வாங்கிக்கொண்டது

இந்த சொல் விளையாட்டு கவிக்கோவிற்கு மட்டுமே கைவந்தக் கலை.

முனைவர் பர்வீன் சுல்தானா

“கம்பராமாயணத்தை, பாரதியை, சிலம்பை, சீறாப் புராணத்தை, மணிமேகலையை, தேவார திருவாசகத்தை, சங்கப் பாடல்களை வாசிக்கும்போது அவை ஏதோ ஒன்றைச் சொல்கின்றன. அதனை எழுதியவர்கள் வெறும் எழுத்தை மட்டும் வீசிவிட்டுப் போகவில்லை. அவை மந்திரச் சொற்கள். அதன் உண்மையைக் கண்டறிவதற்காகவே நான் வாசிக்கிறேன். மேலும் வாசித்துக் கொண்டே இருக்கிறேன்” என்று தன் தமிழ் வேட்கையை தெளிவுப் படுத்துகிறார் முனைவர் பர்வீன் சுல்தானா.

“கம்பனைப் பொறுத்தவரை அவர் எனக்கு ஒரு வழிகாட்டி. அவருடைய வாரிசு என்று சொல்லப்படும் அந்தத் தகுதியை நான் முழுமையாகப் பெற வேண்டும்” என்று தனது மானசீக குருவான நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்கு புகழ் மாலை சூட்டுகிறார் முனைவர்
பர்வீன் சுல்தானா.

“இஸ்லாம் எங்கள் மொழி; இன்பத்தமிழ் எங்கள் மொழி” என்ற முழக்கத்துடன் இஸ்லாமியப் பெருமக்கள் மதக்காழ்ப்புணர்ச்சி காட்டாமல் கம்பராமாயணத்தை ரசனை பாராட்டியது மெச்சத்தக்கது.

கம்பனை புகழ்ந்து போற்றிய தமிழார்வளர்கள் சதாவதானி, பா,தாவுத் ஷா, கவிஞர் சாரண பாஸ்கரன், கவிக்கோ, முனைவர் பர்வீன் சுல்தானா மாத்திரமல்ல. கவி கா.மு.ஷெரீப், யாழ்பாணத்து அறிஞர் ம.மு.உவேஸ், கலைமாமணி அப்துல் காதர், மு.மேத்தா, இன்குலாப்
(சாகுல் ஹமீது), அபி, மனுஷ்ய புத்திரன், “மதுக்கூர் கம்பன்” டி.ஏ.கே.முகம்மது யாகூப் மரைக்காயர், ரவூப் ஹக்கீம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இனிவரும் பதிவுகளில் நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் புரிந்த தமிழ்த்தொண்டினை விவரமாகக் காண்போம்.

– அப்துல் கையூம்

Advertisements
 

Tags: ,

One response to “கம்பன் அவன் காதலன் (ஐந்தாம் பாகம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: