கண்ணியத்தை கருணையினை நெஞ்சில் தேக்கி
கள்ளமில்லா புன்சிரிப்பை உதட்டில் கூட்டி
விண்ணவனின் அருள்மறையை தூதர்வாழ்வை
வியத்தக்க முறையினிலே வாழ்ந்துகாட்டி
எண்ணரிய இஸ்லாத்தின் மாந்தர்தம்மின்
எழில்நலத்தைப் பேணுதற்காய் ‘லீக்’கையாத்து
கண்ணிமையாய் சமுதாய நலத்தைக்காத்த
காயிதே மில்லத்தைக் காணப்போமோ..?
அருமகரை பெருமகரை ஆற்றல்வேந்தை
அன்பொளிரும் திருவுருவை அருளின்ஊற்றை
பொறுமையினைத் தன்வாழ்வில் அணியாய்பூண்ட
புனிதமனப் பெம்மானை பொற்வின்கோவை
எவர்வரினும் தம்கருத்தைத் துணிவாய்க் கூறும்
எழுச்சிமிகு தளபதியை உணர்ச்சிக்காவை
கப்ருக்குள் கண்ணுறங்கும் கனிவுத்தேனை
காயிதே மில்லத்தைக் காணப்போமோ…?
தமிழாய்ந்த தமிழ்மகனை முதல்வனாக்க
தன்கரத்தைத் துணைகரமாய் தந்தஏந்தல்..!
அமுதூறும் தமிழ்மொழியை என்றும் எந்தன்
அன்னைமொழி எனப்பகர்ந்து இந்தியாவின்
பொதுமொழியாய் இருப்பதற்கு தகுதிவாய்ந்த
பொதுமைமொழி தமிழேதான் என்றுசொன்ன
தமிழ்மகன்ஓர் கல்லறைக்குள் உறங்குகின்றார்
தமிழன்னை இனிஅவரைக் காணப்போமோ..?
(“உரிமைக்குரல்” பத்திரிக்கையில் நாகூர் கவிஞர் இஜட்..ஜபருல்லாஹ் எழுதிய கவிதை)
இன்று ஜீன் 5. காயிதேமில்லத் பெருமகனாரின் பிறந்தநாள்