RSS

காயிதேமில்லத்

04 May

123

காயிதேமில்லத் பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ள உள்ளம் விழைந்தது.

“கண்ணியமிகு” என்ற அடைமொழியுடன் யாரையாவது குறிப்பிட்டால் அது இஸ்மாயீல் சாகிப் அவர்களைத்தான் குறிக்கும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.

“கவ்மின் காவலர்” என்று அவருக்கு புகழாரம் சூட்டுவார்கள். அதென்ன கவ்மின்? எழுமின் விழிமின் உழைமின் என்பதைப் போல?

“கவ்ம்” என்றால் சமுதாயம். “கவ்மின் காவலர்” என்றால் சமுதாயக் காவலர் என்று பொருள். அவர் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டும் காவலராக இருக்கவில்லை, ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்திற்கும் மற்றும் சிறுபான்மைச் சமூகத்திற்கும் காவலராக இருந்து குரல் கொடுத்தவர்.

காயிதேமில்லத் அவர்களைக் குறிப்பிடும்போது ‘கண்ணியமிகு’ என்ற அடைமொழியைச் சேர்க்காமல் அறிஞர் அண்ணா விளித்ததே கிடையாது.

திருச்சி மற்றும் பஹ்ரைன் பொதுக்கூட்டத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் என்னை ‘கண்ணியமிகு’ என்ற அடைமொழி இணைத்து விளித்தபோது நெகிழ்ந்துப் போனேன். எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாக பூரித்தேன். திராவிட பாசறையில் பூத்த மலரல்லவா அவர்? அந்த உயர்பண்பு இருக்கத்தானே செய்யும்?

1967-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், காயிதேமில்லத் அவர்களுக்கு நாகூர் கெளதியா சங்கத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பின்போது, நான் சிறுவனாக இருந்தபோது கறுப்பு நிறத்தில் நீளமான கோட்டு அணிந்து, வெள்ளை ஷேர்வானி, உயரமான தொப்பி அணிந்த அந்த கண்ணியவானை வச்ச பார்வை தீராது ஆச்சரியத்துடன் நான் கண்ட காட்சி இன்னும் பசுமையாக நிலைத்திருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே சட்ட மன்றத்தில் இடம் பெற்று, அதற்குப் பிறகு அரசியல் நிர்ணய சபையில் பெரும் பங்காற்றிய அவரது சேவை அழிக்க முடியாத வரலாறு.

காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற்று பெருஞ்சேவை ஆற்றியவர். அவரது வாதங்களின் அடிப்படையில்தான் இந்திய அரசியல் சட்டவிதிகள் 21 முதல் 30 வரை இடம்பெற்றன. இது சிறுபான்மை சமுதாயத்தின் மொழி, கலாச்சார, மார்க்கப் பாதுகாப்புக்கு அரணாக அமைந்தன, காயிதேமில்லத் போன்றவர்களின் கர்ஜனையை தில்லி கேட்டிராவிட்டால் எப்போதோ இந்தி தேசிய மொழியாக அப்போதே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

இவரைத்தான் இந்திய சுதந்திர வரலாறைப் பற்றிய அரிச்சுவடே அறியாத எச்,ராஜா “காயிதேமில்லத் ஒரு மதவெறியர்” என ஒரு தொலைக்காட்சி உரையாடலில் திருவாய் மலர்ந்தருளினார்.

இதற்கு அவருடைய சமூகத்தைச் சார்ந்த 90 வயதைக் கடந்த, காயிதேமில்லத் வாழ்ந்த வீட்டிற்கு அண்டை வீட்டில் வசித்த திரு,கிருஷ்ணமூர்த்தி ஐயர் என்பவர் சரியான பதிலடி கொடுத்தார்,

”எங்களுக்குள் அந்த இந்து-முஸ்லிம்கிற ஃபீலிங்சே கிடையாது. நான் பிராமினா இருந்தா கூட Iam very much attached with Qaide Millath. அந்த மாதிரியே பழகிட்டேன் அவர்கிட்ட. அதனால அவர் வீட்டில எனக்கு எல்லா வகையான சுதந்திரமும் இருந்தது. So, He was very helpful எனக்கு. காயிதே மில்லத் எனக்கு உதவி செய்தது போல் வேறு யாரும் இங்கு இருக்கிறவர்கள் எனக்கு உதவி செய்யல. அதனால அவரை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. அவர் இறந்தபோது அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஒரு அன்கான்சியஸ் ஸ்டேஜுக்கே வந்துவிட்டேன்.” இது அவரது அண்டை வீட்டுக்காரரின் உள்ளத்திலிருந்து வெளிவந்த சொற்கள்.

காயிதேமில்லத்தின் நாட்டுப்பற்றை சந்தேகிப்பவர்கள் வரலாறு அறியாத மூடர்கள்.

பரங்கிமலைத் தொகுதி தேர்தலின்போது தொகுதிக்கே செல்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார் எம்.ஜி.ஆர்.. அவருடைய வெறும் கட்-அவுட்டை வைத்தே அவருக்கு பெருத்த அளவில் வெற்றியைத் தேடித் தந்தார்கள் மக்கள். இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

1954-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற மேலவைக்கு காயிதேமில்லத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நாளிலிருந்து இந்திய முழுவதும் செல்வாக்குடைய பெருந்தலைவராக காயிதேமில்லத் விளங்கினார், மஞ்சேரி என்ற தொகுதி கேரளாவில் உள்ளது, தொகுதிக்கே செல்லாமல் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒவ்வொரு முறையும் அதுவும் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து அந்தத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றது சரித்திர நிகழ்வு.

இத்தனைக்கும் அவர் பிறந்தது கேரளத்தில் அல்ல. திருநெல்வேலி பேட்டையில்.

“உங்கள் தொகுதிக்கு எட்டிப்பார்க்காத ஒருவரை எப்படி மூன்று முறை நாடளுமன்றத் தேர்தலில் அவரை தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று மஞ்சேரிக்காரர் ஒருவரை ஒரு பத்திரிக்கை நிருபர் கேட்டபோது அவர் சொன்ன பதில் ‘தொகுதிக்கு வராவிட்டால் என்ன? அவர்தான் எங்கள் இதயத்தில் வீற்றிருக்கிறாரே?”

தொடர்ந்து வாழ்நாள் முடியும்வரை சட்டப்பேரவை உறுப்பினராக அவர் இருந்து வந்தார். இப்பேர்ப்பட்ட ஒரு தலைவரை விமர்சிக்க சாரண சாரணியர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெறும் 46 வாக்குகள் மட்டுமே பெற்ற எச்.ராஜாவுக்கு தகுதி இருக்கிறதா என்பதை இதைப் படிக்கும் வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946-ஆம் ஆண்டு சென்னை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்மாயீல் சாகிப் இந்திய விடுதலைக்குப் பின் 1952-வரை சென்னை மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விளங்கினார். 1948 முதல் 1950 வரை நடுவண் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக அம்பேத்கர் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கி அந்த அரசியல் சாசனத்திலும் கையொப்பமிட்டார்.

1946-ஆம் ஆண்டு அவர் சென்னை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது முஸ்லீம் லீக் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஒன்றல்ல இரண்டல்ல 29 பேர்கள். இவர்தான் எதிர்க்கட்சித்தலைவர்.

இந்திய துணைக்கண்டம் 1947-ஆம் ஆண்டு இருகூறாக பிரிந்தது. அகில இந்திய முஸ்லீம் லீக் நிர்வாகக்குழு கறாச்சியில் ஒன்று கூடி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML), பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (PML) என்று இரண்டாகப் பிரிந்தபோது IUML-ன் அமைப்பினராக இவர் நியமிக்கப்பட்டார். அச்சமயம் பாகிஸ்தான் தலைமை அமைச்சராக இருந்த நவாப் ஜாதா லியாகத் அலிகானிடம் காயிதேமில்லத் கூறிய வார்த்தை என்ன தெரியுமா?

“எத்தகைய சூழ்நிலையிலும் இந்திய முஸ்லீம்கள் விவகாரத்தில் நீங்கள் மூக்கை நுழைக்கக் கூடாது” என்பதுதான். மேலும் “எங்களுக்கு ஏதேனும் நல்லது செய்வதாக இருந்தால் பாகிஸ்தானில் இருக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் நலனை பாதுகாக்க முயலுங்கள்” என்று துணிச்சலாக அவர் முகத்திற்கு எதிரே கூறியவர்.

1962-ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய சீனப் படையெடுப்பின்போது “என் ஒரே மகன் மியாகானை போர்க்களத்திற்கு அனுப்பத் தயார்” என்று முழங்கியது எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை.

“காஷ்மீர் முஸ்லீம்களின் தனிநாடாக வேண்டும்” என்று சிலர் பரவலாக கூறிவந்த காலத்தில் “அது இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி” என்று வாதிட்ட பெருந்தகை அவர்.

“தமிழ் மொழியே நம் நாட்டின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்” என்று ஆணித்தரமாக வாதிட்ட தமிழ் உணர்வாளர் அவர். “ஒரு மொழி இந்திய மொழியாக இருந்தால் மட்டும் போதாது அம்மொழி நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும்” என்று சூளுரைத்தவர். கல்விப்பணிக்கு காயிதேமில்லத் ஆற்றிய பங்கு இன்றிமையாதது,

காயிதேமில்லத் ஒருமுறை சிங்கப்பூர் சென்றிருந்தார். மாநாட்டை தொடங்கி வைத்தவர் அப்போதைய பிரதமர் லீ குவான் யூ. பொதுவாக அவர் இதுபோன்ற பொது நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு உடனே சென்று விடுவது வழக்கம். காயிதே மில்லத் ஏறக்குறைய ஒருமணி நேரம் ஆங்கிலத்தில் பேசிவிட்டு தமிழில் உரையாற்றினார். இருமொழிகளிலும் திறம்படப் பேசும் திறமை மிகுந்தவர் அவர். அவரது பேச்சைக் கேட்டு அசந்துப்போன லீ குவான் யூ வியந்துப் போனார். இறுதிவரை மேடையில் அமர்ந்து விட்டுச் சென்றார்.

1966-ஆம் ஆண்டு காயிதேமில்லத் அவர்கள் அண்ணா, ராஜாஜியுடன் இணைந்து அமைத்த அரசியல் வியூகம் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் கட்சியை தோல்வியைத் தழுவச் செய்தது. அண்ணாவின் ஆட்சி அமைய முக்கியக் காரணமாக இருந்தவர் காயிதேமில்லத் என்றால் மிகையாகாது.

இந்தியாவில் அனைத்துச் சமுதாய மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அவருடைய உரிமைக்குரலாக இருந்தது. சென்னையில் முதன் முதலாக நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டில் அண்ணா மற்றும் காயிதேமில்லத் அவர்கள் ஆற்றிய உரைகள் வரலாற்று ஏடுகள்.

“காயிதேமில்லத் வாழும் நாட்டில், அவர்களின் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமைப் படுகிறேன்”. இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்கள்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டபோது புது தில்லியைச் சேர்ந்த “ஹுமா” என்ற உர்து பத்திரிக்கையின் நிருபர் காயிதேமில்லத்திடம் வினா தொடுக்கிறார் “இச்சமயத்தில் உங்கள் இயக்கத்தின் செயற்பாடு எப்படி இருக்கும்?

“இந்தியா எங்கள் தாய்நாடு, நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியாவுக்கு யார் யார் எதிரிகளோ அவர்கள் இந்திய முஸ்லீம்களுக்கும் விரோதிகள்தான். அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்வோம்” என்று பதிலுரைக்கிறார்.

காயிதேமில்லத் அவர்கள் மரணித்து அவருடைய நல்லுடல் சென்னை புதுக்கல்லூரியில் பார்வைக்கு வைத்திருந்தபோது, தள்ளாத வயதில் நடந்துவந்த பெரியார் கூறிய வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்தது. “நான் போயிருக்கக்கூடாதா? அவர் இன்னும் வாழ்ந்திருக்கக்கூடாதா? என்று நா தழுதழுக்கக் கூறினார்.

“இன்று நாங்கள் அரசபீடத்தில் அமர்ந்து இருக்கின்றோம் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இவர்தான்” கலைஞர் உருக்கமாக உரைத்தார்.

“அண்ணாவின் மறைவுக்குப் பிறகு இவரே எங்களுக்குத் தமையனுக்குத் தமையனாய் விளங்கி வந்தார்” என எம்,ஜி,ஆர் புகழாரம் சூட்டினார். பிற்பாடு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கீழத்தஞ்சை வட்டாரத்தை “காயிதே மில்லத் மாவட்டம்” என்று அறிவித்ததும் எம்.ஜி,ஆர்.தான்

துக்ளக் ஆசிரியர் சோ தனது துக்ளக் பத்திரிக்கையில் இட்ட மறைவு அஞ்சலி சற்று வித்தியாசமாக இருந்தது. எல்லோரையும் அது கவர்ந்தது. காயிதேமில்லத்தின் புகைப்படத்தை கறுப்புக் கட்டத்தில் வெளியிட்டு, அவரது தோற்றம்:1896, மறைவு: 1972. அவ்வளவுதான். அவர் கொடுத்திருந்த தலைப்பு ‘இதோ ஒரு சிறந்த மனிதர்’. அதற்கு கீழே நபிகள் நாயகத்தின் பொன்மொழி :

‘அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் ஆசைபடாதவரே மனிதரில் சிறந்தவர் – நபிகள் நாயகம்.

1937-ஆம் ஆண்டிலேயே மெட்ராஸ் ராஜதானி என்று அழைக்கப்பட்ட ஒன்றுபட்ட தென்மாநில முதலமைச்சராக இருந்த மூதறிஞர் ராஜாஜியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர் காயிதேமில்லத் அவர்கள். “இன ஐக்கியத்திற்கும் நாட்டு ஒற்றுமைக்கு பாடுபட்ட நல்ல அரசியல்வாதி” என புகழஞ்சலி செலுத்தினார் ராஜாஜி.

1967 டிசம்பர் இறுதியில் சென்னை விருகம்பாக்கம் தி.மு.க. மாநாட்டில் மேடையில் மூவர் மட்டுமே எடுப்பாக வீற்றிருந்தார்கள். ராஜாஜி, அண்ணா, இஸ்மாயீல் சாகிப். அண்ணா இச்சேர்க்கையை கவிதை நயத்துடன் கூறினார். “லீக், தி.மு,க., சுதந்திரா கூட்டு என்பது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போல.

பச்சை வெற்றிலை : இஸ்மாயில் சாகிப், கறுப்புக் களிப்பாக்கு ; அண்ணா. காரமான சுண்ணாம்பு : ராஜாஜி.

சுண்ணாம்பை அளவறிந்து தடவாவிட்டால் வாய் வந்துவிடும் என்பதைத்தான் அண்ணா சூசகமாகச் சொன்னார் என பத்திரிக்கைகள் கருத்து வெளியிட்டன.

காயிதேமில்லத்தின் பெருமை நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அடுத்த மாதம் 5-ஆம் தேதி காயிதேமில்லத் அவர்களின் பிறந்தநாள். அண்ணாவின் பெயரைத் தாங்கிய இவ்வாட்சி அவரது பிறந்தநாளை நினைவு கூறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

-#அப்துல்கையூம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: