RSS

Category Archives: கலைஞர் கருணாநிதி

Image

கருணாநிதியின் முதலாளி


karunanidhi

 

குசும்பு + அறிவுக்கூர்மை = கலைஞர்


111

கலைஞர் மு. கருணாநிதி அவர்களை அரசியல் ரீதியாக சில விஷயங்களில் எனக்கு அவரை பிடிக்காது என்றாலும் அருந்தமிழ் ஆர்வலராக எனக்கு அவரை நிரம்பவே பிடிக்கும்.

நகைச்சுவை உணர்வு, சமயோசித புத்தி, சிலேடைப் பேச்சு, வார்த்தை விளையாட்டு, சொற்சிலம்பம்  இவற்றில் அவரை மிஞ்ச ஆளே இல்லை. இதனை பாரபட்சமின்றி எதிரணியினரும் ஆமோதிப்பார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

எனக்கு மஞ்சள் துண்டு அணிவதற்கு முன்பிருந்த கலைஞரை மிகவும் பிடிக்கும். ‘பராசக்தி’, ‘பூம்புகார்’ படங்களுக்கு வசனங்கள் எழுதிய  வசனகர்த்தாவின் மீது எனக்கு அளப்பரிய காதல் உண்டு. “காகித ஓடம் கடலை மீது” என்ற  பாடலை  எழுதிய  பாடலாசிரியர் என்னைக் கவர்ந்த பேர்வழி. குறளோவியம் வரைந்த தமிழறிஞர் மேல் எனக்கு தனியொரு மரியாதை.

“எனக்கொரு மகன் பிறப்பான்” என்று ஒருவர் பாட “அவன் என்னைப்போலவே இருப்பான்” என்று மற்றவர்  பாட, இதுபோன்ற  குசும்பு செய்த இரட்டைப் புலவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.  சிலேடைப் பேச்சில் கைதேர்ந்தவர்களான கி.வா.ஜ.,, வாரியார், அண்ணா, கலைஞர் இவர்களுடைய பேச்சுக்களை நேரில் நாம் கேட்கக்கூடிய வாய்ப்பு கிட்டியதுண்டு. (கி.வா.ஜ.வின் சிலேடைப் பேச்சுக்கள்… அப்பப்பா.!. பிரமிக்க வைக்கும்). என்னைப்போலவே கலைஞரைப் பிடிக்காதவர்களும் கலைஞரைப் பிடித்துப் போனதற்கு அவருடைய தமிழாற்றால் ஒரு மிகமுக்கிய காரணம்.

ஒருமுறை கலைஞருக்கு ஆளுயர மால அணிவிக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்ட கலைஞர் “ஆளூயர மாலை நீங்கள் அணிவித்திருக்கிறீர்கள் ” என்று இரண்டு முறை சொன்னார். “ஆள் உயர சைஸில் நீங்கள் மாலை அணிவித்திருக்கிறீர்கள் என்றும், ஆள் உயர்வதற்காக (வாழ்க்கையில்) நீங்கள் மாலை அணிவித்திருக்கிறீர்கள் என்றும் இருபொருள்படும்.

கலைஞர் உடல் நலக்கோளாறால் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது டாக்டர் கூறுகிறார்.

“மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க” (கலைஞர் மூச்சை இழுத்துப் பிடிக்கிறார்)

“இப்போ மூச்சை விடுங்க”

“மூச்சை விடக்கூடதுன்னுதான் டாக்டர் நான் மருத்துவமனைக்கே வந்திருக்கேன்”

பதிலைக் கேட்டு டாக்டர் மூர்ச்சை ஆனாரோ என்னவோ எனக்குத் தெரியாது.

ஹாக்கிப் போட்டி ஒன்றிற்கு கலைஞர் பரிசளிக்க வந்திருக்கிறார். இரண்டு அணிகளும் சமமான கோல். டாஸ் போடப்படுகிறது. “தலை” கேட்ட அணி தோற்று,  “பூ” கேட்ட அணி ஜெயிக்கிறது.

கலைஞர் இப்போது பேசுகிறார்.

“இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. “தலை” கேட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். ஏனென்றால் “தலை” கேட்பது வன்முறை அல்லவா?” என்கிறார் நம்ம தல.

கலைஞரின் சிலேடை பேச்சுக்களை வரிசைப்படுத்த தொடங்கினால் அது அனுமான் வால் என நீண்டுக்கொண்டே போகும்.

கலைஞர் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கேலி செய்து பேசினாலும் அவ்வப்போது அவர் காட்டும் உதாரணங்கள் புராணங்களைச் சார்ந்தே இருக்கும்.

திமுக தொண்டர்கள் தோல்வியால் சோர்வடைந்துப் போயிருந்த நேரம் அது. எதிர்க்கட்சிகள் திமுக தொண்டர்களை ‘கும்பகர்ணர்கள்’ என்று  கேலி செய்தனர்.

என் தம்பிகள்

தூங்கினால்

கும்பகர்ணன்;

எழுந்தால்

இந்திரஜித் 

என்று கலைஞர் கவிதை வரிகளாலேயே  ஆச்சி மசாலா  காரமுடன் அவர்களுக்கு பதில் தருகிறார்..

சமயத்தில் எக்குத்தப்பாக பேசி விமர்சனங்களுக்கு ஆளான தருணங்களும் நிறையவே உண்டு. “அவருக்கு நாக்கிலே சனி” என்று அவருடைய விசுவாசிகளே  விமர்சனம் செய்யக் கேட்டிருக்கிறேன்.

“ராமர் பாலம்” தொடர்பாக பிரச்சினை எழுந்தபோது “ராமன் எந்த இன்ஞினியரிங் காலேஜில் படித்தான்?” என்று கேள்வி கேட்டு இந்து மத உணர்வாளர்களின் கோபத்திற்கு ஆளானார். கலைஞரின் பாணியிலேயே அவர்களும் கேள்வி கேட்டார்கள் “மணிமேகலை எந்த பாத்திரக்கடையில் அட்சயபாத்திரம் வாங்கினார் என்று முதலில் சொல்லுங்க தலைவா..?” என்று.

கவியரங்கம் ஒன்றில் புலவர் புலமைப் பித்தன் ஈழத்தைப் பற்றி ஒரு கவிதை பாடுகிறார். “கலைஞரே எனக்கொரு துப்பாக்கி தாருங்கள்!”“ என்று ஆவேசத்துடன் முடிக்கிறார். கலைஞர் வசம்தான் அப்போது காவல் துறை இருக்கிறது.  “புலவேரே! வேறு ஏதாவது  ‘பாக்கி’ இருந்தால் கேளுங்கள். துப்”பாக்கி”  மட்டும் என்னால் தர இயலாது”

மனுஷனுக்கு உடம்பெல்லாம் மூளை என்பார்களே..! அது இந்த மனிதருக்குத்தான் பொருந்தும்.

ஒருமுறை செல்வி ஜெயலலிதா  “நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்வேன்” என்று கூறியபோது “அம்மையார் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்கு செய்யும் பெரிய நன்மைதான்” என்றார்.

சைக்கிள் கேப்புலே ஆட்டோவை நுழைக்கும் லாவகம் தெரிந்தவர் நம்ம ஆளு.

சோதனையான நேரத்திலும், தோல்விகளை சந்தித்த நேரத்திலும் அவருடைய நகைச்சுவை உணர்வு சற்றும் குறையவில்லை என்பதை நாம் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்தபோது கூட அவருக்கு குறும்புத்தனம் போகவில்லையே..?

கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது கலைஞர் அவரிடம் கேட்கிறார்.

“இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப் போகிறீர்கள்..?

” எந்த தொகுதி கேட்டாலும் ஏதாவதொரு காரணத்தைச்  சொல்லி மறுத்து விடுகிறீர்கள்.  நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை. பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன்..!”

சிரித்தபடி தனக்கே உரித்தான பாணியில் கவிஞருக்கு இருக்கும் மதுப்பழக்கத்தை மனதில் கொண்டு …

” பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!”

கலைஞருக்கு தொடக்கத்திலிருந்தே இந்த நகைச்சுவை உணர்வு மேலிட்டதற்கு காரணம் அவரை உருவாக்கிய பாசறை. சமயோசித யுக்திக்கு பேர் போனவர் அறிஞர் அண்ணா என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய நகைச்சுவை உணர்வுகளையும் இங்கே பகிர்வதென்றால் பக்கங்கள் காணாது.

அண்ணாவிடமிருந்து அந்த ‘சிலேடை சொல்லாடலை’ அப்படியே தனக்குள் இறக்குமதி செய்து  தக்க வைத்துக்கொண்ட  தனித்திறமை கலைஞருக்கும் மட்டுமே இருந்தது. அண்ணாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், மதியழகன், என்,வி.நடராஜன் இவர்கள் யாருக்கும்  நகைச்சுவை உணர்வு   இத்தனை சதவிகிதம் இல்லை. கலைஞர் இந்த “ஐம்பெருந்தலைவர்களை” எளிதாக “ஓவர்டேக்” செய்ய முடிந்ததற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.

கலைஞரை புகழ நினைத்த  கவிஞர்களும் – கவிக்கோ, கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் –  இதே “ஃபார்முலாவைத்தான்” கையாண்டார்கள்.

அருமை தலைவா !

ஆண்டு 2007-ல்

எமனிடம் இருந்து நீ

என்னை மீட்டாய் !

அதற்கு முன்

ஆண்டு 2006-ல் – ஓர்

‘உமனிடம்’ இருந்து

தமிழ் மண்ணை மீட்டாய் !

இது வாலி வைத்த ஐஸ்கட்டிகளின் ஒன்று.

முதல் முதல்

தேர்தல் குளத்தில்

குளிக்க நீ தொடங்கிய ஊர்தான்

குளித்தலை !

குளித்தலைக்கு பிறகு

இதுவரை .. ..

குனியா தலை

உன் தலை !”

வாலிக்கு இப்படி எழுதுவது கைவந்தக் கலை..

நிஜம் சொன்னால்

ரஜினியை விட

நீயொரு வசீகரமான ‘பிகர்’ !

நாவினிக்க நாவினிக்க

உன்னை பாடியே

என் உடம்பில்

ஏறிப்போனது சுகர் !”

வயதாகியும் வாலிபக் கவிஞர் என்று பெயர் வாங்கியவரல்லவா அவர்…   ?

உயரிய தலைவா

உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு

வாயை திறந்தால் தான்

என் வாய்க்கும்

கவிதை வாய்க்கும்.

வாலியின் வார்த்தை விளையாட்டிற்கு இதுபோன்ற வரிகள் நல்லதொரு எடுத்துக்காட்டு.

சட்டமன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிலும் கலைஞர் சிலேடையாக உரைத்த பதில்கள் யாவையும் ஒரு நகைச்சுவை நூலாகவே தொகுக்கலாம். சாவியின் “வாஷிங்டனில் திருமணம்” ரேஞ்சுக்கு சிரிப்பு வரும்.

ஒருமுறை டி.என். அனந்தநாயகி  “என்னை அரசு சி.ஐ.டி.  வைத்து வேவு பார்க்கிறது. சிஐடி போலீசார் என்னைத்  தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டியபோது முதல்வராக இருந்த கலைஞர் “உங்களுக்குத் தெரியும்படி உங்களைக் கண்காணிப்பவர்கள் எப்படி சிஐடி போலீஸாக இருக்க முடியும்?”

என்று எதிர்கேள்வி கேட்டு அவரது வாயை அடைத்தார்.

அப்போது எம்.ஜிஆர். முதலமைச்சராகவும் நாஞ்சில் மனோகரன் அவை முன்னவராகவும் இருந்த நேரம். அன்றைய தினம் உடல்நலமின்மையால் எம்.ஜி.ஆர். அவைக்கு வரவில்லை.

கலைஞர்: முதல்வர் ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை?

நாஞ்சில்:  முதல்வருக்கு உடல் நலமில்லை. அவர் சபைக்கு திங்கட்கிழமை வந்து அறிக்கை தாக்கல் செய்வார்

(திங்கட்கிழமையும் வந்தது. எம்.ஜி.ஆரும் வரவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.)

கலைஞர்:  ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை..?

நாஞ்சில்: நாளை செவ்வாய்க்கிழமை.  நிச்சயம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

கலைஞர்: செவ்வாய் வெறும் வாய் ஆகிவிடக்கூடாது…

நாஞ்சில்: மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரை நான் ஒருமையில் அழைப்பதற்காக வருத்தப்படக் கூடாது. செவ்வாயில் நீ வெல்வாய்…

கலைஞர்: அடிக்கடி நீ இப்படித்தான் சொல்வாய்..!

அதன்பிறகு அவையில் வெடித்த சிரிப்பொலியைக் கூறவும் வேண்டுமோ..?

இன்னொரு நிகழ்வு:

அப்துல் லத்தீப்: கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் முதலைகள் விடுவது பற்றி அரசு ஆலோசிக்குமா?’

கலைஞர்:: ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ‘முதலை’ கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது.

மற்றுமொரு நிகழ்வு:

நூர்முகம்மது: கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல்வருடைய கருணை கொண்ட கடைக்கண் பார்வை குமரியின் மீது திருப்பப்பட்டு, அம் மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலையை அமைக்க, முதல்வர் முன் வருவாரா?’

கலைஞர்: குமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது!

இதோ இன்னொரு நகைச்சுவைப் பேச்சு:

குமரி அனந்தன்: நான் தொலைபேசியில் பேசியபோது, டிராக் நம்பர் செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு ஐயப்பாடு…

கலைஞர்: குமரி அனந்தனுக்கு அப்படியயொரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள்கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம். அதையும் முயற்சித்துப் பாருங்கள்.

ஒரு அரசு விழாவின் போது நடந்த நிகழ்வு இது.

ஒலிபெருக்கியில் கட்சிக்காரர்: அடுத்து மீன்வளத்துறை அமைச்சர் பேசுவார் (பேச எழுந்த அமைச்சரின் காதில் கலைஞர் கிசுகிசுக்கிறார்.”அயிரை மீன் அளவுக்குப் பேசு, அதிகமாய் பேசாதே!” இதனை ஒரு நிகழ்ச்சியின்போது கவிஞர் வைரமுத்து சொன்னது.

தானெழுதிய  “கிறுக்கல்கள்” நூலை கொடுத்து பிறகு, இன்னொருநாள் என் கிறுக்கல்களை படித்தீர்களா..?” என்று நடிகர் பார்த்திபன் கேட்டிருக்கிறார்.. அதற்கு கலைஞர் சொன்ன பதில் “உன் கவிதைகளைப் படித்தேன்; ஒவ்வொன்றும் படி- தேன்”

இதைபோன்று நகைச்சுவையை நாம் மேலும் மேலும் பருகுவதற்காக அவர் இன்னும் நீண்டநாள் வாழவேண்டும்.

—— அப்துல் கையூம்

( பி.கு:    கலைஞரிடமிருந்து இந்த நகைச்சுவை உணர்வை திறமையாக வசீகரித்து                             தனக்குள் இறக்குமதி செய்துக்கொண்டிருப்பவர் துரைமுருகன்)

 

Tags: