RSS

சாரு நிவேதிதாவுக்கு ஊர்ப்பாசம் கீர்ப்பாசம் உண்டு

24 Sep

“எனக்குப் பெரிதாக ஊர்ப்பாசம் கீர்ப்பாசமெல்லாம் கிடையாது. இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்து பொறுக்கிய இடங்களைப் பற்றிப் படிக்கும் போது தவிர்க்க முடியாமல் ஒரு ‘ நாஸ்டால்ஜிக்‘ உணர்வு வந்து குந்திக் கொள்கிறது”

என்று முன்பொருமுறை எழுதிய ரவி அண்ணன் (சாரு நிவேதிதா) அவர்களைப் பற்றி என் வலைப்பதிவில் கடுமையாக சாடியிருந்தேன். நாகூரைப் பிறப்பிடமாகக் கொண்டவனோ அல்லது அவ்வூரில் வளர்ந்தவனோ அவ்வளவு எளிதில் அவ்வூரை தன் நினைவை விட்டு தூக்கி எறிந்து விட முடியாது. நாகூருக்கு அப்படி ஒரு மவுசு.

நாகூர் மக்களின் நட்புறவு, வேடிக்கைப் பேச்சு, தினமும் விழாக்கோலம் காணும் காட்சிகள், பிரத்தியேகமான தின்பண்டங்கள், மிளகாயைத் தின்று வந்தது போன்று  “ஹா..ஹா” என்ற “வந்தாஹா… போனாஹா” என்ற வித்தியாசமான பேச்சுவழக்கு, இந்து-முஸ்லீம்கள் ஒற்றுமை, இவைகள் பசுமரத்தாணிபோல் பிஞ்சு மனதில் பதிந்து விடும்.

கடந்து வந்த காலச்சுவடுகளை எண்ணி அசைபோடும் ஒவ்வொருவனுக்கும் அந்த நினைவுகள் நினைத்தாலே இனிக்கும். என்னதான் சாரு நிவேதிதா அவர்கள் மலையாள இலக்கிய ஆர்வலர்களுக்கு ஹீரோவாகத் திகழ்ந்தாலும் அவர் நாகூரின் மண்வாசனையை இன்னும் முகர்ந்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கானடாவில் அமர்ந்துக் கொண்டு தன் இளமைப் பிராயத்துக் கலர் கலர் கனவுகளை சிலாகித்துப் பேசும் மிஸ்டர் கல்யாணம் முதல் ஆம்பூர் பிரியாணியை சுவைத்துக் கொண்டிருக்கும் நாகூர் ரூமி வரை அவரவர் தங்கள் நினைவுகளை அவ்வப்போது பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

இன்று எழுத்துத் துறையில் புகழின் உச்சாணியில் இருக்கும் சாரு நிவேதிதா  இதற்கு விதிவிலக்கல்ல.

– அப்துல் கையூம்


”யார் கட்டினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நாகூரில் கிட்டத்தட்ட ஐம்பது குளங்களுக்கு மேல் இருக்கும். நான் வசித்த தெருவைச் சுற்றியே ஒரு டஜன் குளங்களுக்கு மேல் இருந்தன. நான் படித்த நேஷனல் ஹை ஸ்கூலின் விளையாட்டு மைதானத்தின் பெயர் ஈச்சந்தோட்டம். மைதானத்தைச் சுற்றிலும் ஈச்ச மரங்கள். அதனால், ஏற்பட்ட காரணப் பெயர். ஸ்கூலில் இருந்து கிளம்பி பெருமாள் கோயில் கீழ வீதியையும் மாப்பிள்ளைத் தெருவையும் தாண்டி வந்தால் ஈச்சந்தோட்டம். ஈச்சந்தோட்டத்தை ஒட்டி ஈச்சங்குளம். என் சிறுவயதில் அந்த ஈச்சங்குளத்தில்தான் குளித்து வளர்ந்தேன். நாகூரில் அப்போது வீட்டுக்கு வீடு குழாய்த் தண்ணீர் வசதிக் கிடையாது. ஒவ்வொரு தெருவின் முனையிலும் இருக்கும் பொதுக் குழாயில்தான் தண்ணீர் பிடிக்க வேண்டும். அதற்காக, முதல்நாள் இரவே குழாயின் அருகில் பானைகளை வைத்துவிடுவார்கள். அப்போது பிளாஸ்டிக் குடங்கள் புழக்கத்தில் வரவில்லை. காலையில் அந்தக் குழாயடியில் பெண்கள் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு உருண்டு புரள்வார்கள், ஒரு குடம் தண்ணீர் பிடிக்க.

ஈச்சந்தோட்டத்தில்தான் நாகூரின் பிரபலமான கால்பந்தாட்டப் போட்டிகள் நடக்கும். முக்கியமான போட்டி என்பது, நாகூர் நேஷனல் ஹை ஸ்கூலுக்கும் மன்னார்குடி நேஷனல் ஹை ஸ்கூலுக்கும்தான். நாகூரின் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதாலோ என்னவோ அங்கே கால்பந்தாட்டம்தான் பிரதான விளையாட்டாக இருந்தது. ஆனால், எங்களுக்கு ட்ரில் மாஸ்டராக இருந்த கண்ணையன் சார் வாலிபாலையும் முன்னணிக்குக்கொண்டுவந்தார். அப்போது அந்த மாவட்டத்தில் வாலிபாலில் ஹீரோவாக இருந்தவர் வடுவூர் ராமமூர்த்தி. அவரைத் தெரியாதவர்களே தஞ்சாவூர் மாவட்டத்தில் கிடையாது. எனக்கு வடுவூர் துரைசாமி ஐயங்காரைவிட வடுவூர் ராமமூர்த்தியைத்தான் நன்றாகத் தெரியும். கண்ணையன் சாரும் வடுவூர் ராமமூர்த்தியும் வாலிபால் ஆடினால் மைதானத்தில் பொறி பறக்கும். வாலிபால் கோர்ட் மட்டும் ஸ்கூலை ஒட்டி உள்ள சிறிய மைதானத்தில் இருந்தது. ஆனால், நான் ஒல்லிப்பிச்சானாக இருந்ததால் எந்த விளையாட்டிலும் சேர மாட்டேன். ம்ஹும்… அப்படியும் சொல்ல முடியாது. தாயம், பல்லாங்குழி, பாண்டி என்று எங்கள் தெருப் பெண்களோடு விளையாடுவேன். இப்போதுகூட தாயம் விளையாட்டில் நான் ஒரு எக்ஸ்பர்ட் என்றே சொல்லிக்கொள்ளலாம். விளையாடித்தான் பல ஆண்டுகள் ஆகின்றன.

நாகூரில் கண்ணையன் சாரைத் தவிர மற்றும் பல ஹீரோக்கள் இருந்தார்கள். தமிழாசிரியர் சீனி.சண்முகம் சாரை மறக்கவே முடியாது. அவர் வகுப்பு எடுத்தால் வகுப்பறை அமளிதுமளிப்படும். பட்டிமன்றப் பேச்சாளராகவும் விளங்கினார். ஆரம்பத்தில் அவர் தமிழாசிரியாக இல்லை. மாறாக, நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தார். பின்னர், மூன்றாம் வகுப்பு மாறியபோது மூன்றாம் வகுப்பின் ஆசிரியர். பிறகு, நான்காம் வகுப்பிலும்… பிறகுதான் புலவர் படிப்பு முடித்து நான் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புக்குப் போனபோது தமிழாசிரியராக ஆனார். இன்னொரு ஹீரோ, பி.ஏ. காக்கா. காக்கா என்றால் எங்கள் ஊரில் அண்ணன் என்று அர்த்தம். ஊரில் முதல்முதலாக பி.ஏ. டிகிரி முடித்ததால் அவரை எல்லோரும் பி.ஏ. காக்கா என்று அழைத்தார்கள்.

ஃபரீது காக்கா குத்துச் சண்டை வீரர். நடிகர் ரவிச்சந்திரனின் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் அவர்தான். இப்படி ஊரில் பல பிரபலங்கள் உண்டு. எல்லோரையும் விடப் பிரபலமாக விளங்கியவர் தமிழர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த பாடகர் நாகூர் ஈ.எம்.அனீபா. நாஸ்டால்ஜியாவினால் சொல்லவில்லை; ஹனபாவின் குரலைப் போன்ற unique ஆன குரல் மிகவும் அரிது என்று சொல்லலாம்.

ஆனால், சமீபத்தில் நாகூருக்குப் போயிருந்தபோது நான் பார்த்த சில்லடி (கடற்கரை) காணாமல் போயிருந்தது. வெறும் குப்பை கூளங்களும் முள்செடிகளுமே நிரம்பி இருந்தன. இருந்தாலும் நாகூரில், இன்றுவரை ஒரு விஷயம் மட்டும் மாறாமலே இருக்கிறது. அது கொத்துப் பரோட்டா. அப்படி ஒரு கொத்துப் பரோட்டாவை நீங்கள் மலேஷியாவில்தான் ருசிக்க முடியும். அதேபோல் நாகூர் டீ. சாதா பரோட்டாவும் ஆனமும். நாகூரில் பரோட்டா என்றால் தெரியாது. புராட்டாதான். தம்ரூட்… தம்ரூட் என்ற இனிப்புப் பண்டம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அது அல்வா சாதி; ஆனால், அல்வா இல்லை. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உலகப் பிரசித்தம். ஆனால் அதைவிட சிறப்பான,ருசியான… நாகூரைத் தவிர வேறு எங்கும் கிடைக்காத தம்ரூட் பற்றி யாருக்குமே தெரியாது. அதுதான் நாகூரின் துரதிர்ஷ்டம். யாராலும் பேசப்படாத தனித்த ஊர்.

வேலூர் இட்லி மிகவும் விசேஷமானது. வேலூரில் இட்லியுடன் வடகறியும் தருவார்கள். அதே போன்ற இட்லியை நாகூரில் காணலாம். அதிலும் சேதுராமைய்யர் ஹோட்டல் டிபனுக்கு ஈடு இணை கிடையாது.

இதெல்லாம் 40, 50 ஆண்டுகளுக்கு முந்திய கதை. விளையாட்டுக்கு அடுத்தபடியாக அப்போதைய சிறுவர்களின் ஒரே கேளிக்கை, சினிமா. ஆனால், நாகூரில் ஆறு மாதங்களுக்குத்தான் தியேட்டர் இருக்கும். டூரிங் டாக்கீஸ் என்பார்கள். டூவின் உச்சரிப்பு du. ரொம்ப காலத்துக்குப் பிறகுதான் எனக்கு அது touring என்று புரிந்தது. சினிமா தியேட்டர் கீற்றுக் கொட்டகையாக இருந்தால் ஆறு மாதம்தான் லைசென்ஸ் தருவார்கள். அந்த டாக்கீஸின் அதிபர் பெயர் யாருக்கும் தெரியாது என்றாலும் அவரை எல்லோரும் சிவகவி அய்யர் என்றே அழைத்தார்கள். சிவகவி படம் 1943-ல் வெளிவந்தபோது அது அந்த டாக்கீஸில் ஆறு மாதம் ஓடி இருக்கிறது. பொதுவாக எம்.ஜி.ஆர். படம் என்றால்கூட ஒரு வாரத்துக்கு மேல் ஓடாது. ஊரில் ஜனத்தொகை கம்மி. அப்படிப்பட்ட ஊரில் ஒரு படம் ஆறு மாத காலம் ஓடியிருக்கிறது என்றால், அது எப்பேர்ப்பட்ட விஷயம். அதனால், அந்த டாக்கீஸின் உரிமையாளரின் பெயரே சிவகவி அய்யர் என்று ஆகிவிட்டது. இப்போது சிவகவி அய்யரின் சந்ததியினர் எங்கே இருக்கிறார்களோ தெரியாது. அவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால் அது எனக்கு சந்தோஷத்தைத் தரும்.

ஏனென்றால், சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் என் நண்பரைப் பார்க்கச் செல்லும்போது எல்லாம் மௌனியின் கொள்ளுப் பேத்தியைப் பார்க்கிறேன். ரைஸ் மில் ஐயர் என்றும், மணி ஐயர் என்றும் சிதம்பரத்தில் அழைக்கப்பட்ட மௌனியின் பேரனும் மௌனியின் மருமகளும் அங்கே வசிக்கிறார்கள். ஒருநாள் என்னைப் பார்த்து ஹாய் சொன்ன அந்தக் குட்டிப் பெண்ணிடம் ”உன் கொள்ளுத் தாத்தாதான் என் குருநாதர்” என்று சொன்னேன். திருதிருவென்று விழித்தாள். அவளுக்குத் தன் கொள்ளுத் தாத்தா ஒரு மாபெரும் எழுத்தாளர் என்று தெரியாது.

நன்றி : ஆனந்த விகடன்

(சாரு குறிப்பிடும் பி.ஏ.காக்கா பர்மாவில் புகழ்பெற்ற தமிழார்வலாக இருந்தார். சிறுவயதில் அவருடைய பேச்சையும் அனுபவங்களையும்  கேட்டு ரசித்திருக்கிறேன். பார்ப்பதற்கு அறிஞர் அண்ணாவைப்போலவே இருப்பார். இவர் காரைக்காலில் பிரபல வக்கீலாகத் திகழ்ந்த கனி அவர்களின் தகப்பனார். நாகூர் ஃபரீத் காக்கா அவர்கள் “குமரிப்பெண்” போன்ற திரைப்படங்களுக்கு சண்டைப்பயிற்சி அளித்ததோடன்றி நல்ல ஒரு நாடக நடிகராகவும் பெயர் பெற்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பட்டிமன்ற புகழ்,  நகைச்சுவை வேந்தர் சீனி சண்முகம் இன்றளவும் நாகூர் தமிழ்சங்கத்தில் இணைந்து தமிழ்ப்பணி ஆற்றி வருகிறார்)

சாரு நிவேதிதாவின் “ராயர் கஃபேவும் கஃபே ஹஃபாவும்” என்ற பதிவிலிருந்து

முன்பெல்லாம் எப்போது பார்க் ஷெரட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாருக்குப் போகிறேனோ அப்போதெல்லாம் மதிய உணவு சாம்கோவில்தான். அருமையான பிரியாணியும், தேநீரும் கிடைக்கும். பரோட்டாவும் சால்னாவும் எங்கள் ஊர் பரோட்டாக் கடைகளை ஞாபகப் படுத்தும். கொத்துப் பரோட்டாவைக் கொத்தும் போது ஒரு லயத்தோடு வரும் சத்தத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதை சத்தம் என்று எழுதுவதற்கே கூச்சமாக இருக்கிறது. அது ஒருவித சங்கீதம். நாகூரில் மாலை ஆறு மணி ஆனால் போதும், நூற்றுக் கணக்கான புறாக்கள் தர்காவின் மினாராக்களில் உள்ள பொந்துகளில் வந்து அடையும். அதே நேரத்தில் கடைக்குக் கடை கொத்துப் பரோட்டா கொத்தும் சங்கீதமும் கேட்கும். ஆனால் நான் நாகூரில் இருந்த என்னுடைய 20 வயது வரை அந்தக் கொத்துப் பரோட்டாவைச் சாப்பிட்டுப் பார்க்க ஒருநாள் கூட கையில் காசு இருந்ததில்லை. இப்போது காசு இருக்கிறது. நாகூர் போய் வர நேரமில்லை.

சாம்கோவுக்கு வருவோம். சாம்கோவை நவீனப் படுத்துகிறோம் என்று ஒரு முழு வருடமும் பூட்டிக் கிடந்தது. ஒவ்வொரு முறை அந்தப் பக்கம் போகும் போதும் ஏக்கத்துடன் பார்ப்பேன். எங்கள் ஊர் டீயைப் போல் நான் வட இந்தியாவில் அதுவும் ஒருசில உயர்தர முஸ்லீம் ரெஸ்தொராந்துகளில் மட்டுமே சாப்பிட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட பிரத்யேகமான நாகூர் டீயின் ருசி சாம்கோ டீயில் இருக்கும். பிறகு நவீனப் படுத்தப்பட்ட சாம்கோ வந்தது. முழுக்க கண்ணாடிகளால் வடிவமைக்கப் பட்ட ஆடம்பர ஓட்டலாக மாறியதும் ஒருநாள் போனேன். பணியாளர்கள் டை கட்டியிருந்தார்கள். ஆங்கிலத்தில் பேசினார்கள். மென்யுவைப் பார்த்தால் முன்பு 40 ரூ. இருந்த பிரியாணி நாலு மடங்கு விலை உயர்த்தப்பட்டிருந்தது. சரி, அதுவாவது பரவாயில்லை. ருசி வாயில் வைக்க முடியவில்லை. அந்தப் பழைய செஃப்பையும் மாற்றி விட்டு ஆங்கிலம் தெரிந்த செஃப்பாக போட்டு விட்டார்கள் போல. நாம் என்ன, பிரியாணிக்கு பதிலாக ஆங்கிலத்தையா சாப்பிட முடியும்? அதோடு விட்டு விடாமல் மறுபடியும் மறுபடியும் சென்று பலவிதமான ஐட்டங்களை சாப்பிட்டுப் பார்த்தேன். ம்ஹும். பழைய சாம்கோ என்ற பெயர் பெயரில் மட்டுமே இருந்தது.

 

Tags: , , , ,

2 responses to “சாரு நிவேதிதாவுக்கு ஊர்ப்பாசம் கீர்ப்பாசம் உண்டு

  1. ansari

    September 24, 2012 at 11:51 am

    now eachanthottam for sale i think one flat 500ru/sqfit.

     
  2. jafar sadiq

    September 24, 2012 at 8:32 pm

    Felt very nostalgic about my home town Nagore

     

Leave a comment